3

     கனகசபாபதி சொல்லிய யோசனையைக் கேட்டுச் சுலபா சிரித்தாள். உடன் இருந்து அடக்கமாக நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த காரியதரிசி கவிதாவுக்கு அந்தச் சிரிப்பைக் கண்டு அவநம்பிக்கை தான் ஏற்பட்டது. தன் எஜமானி அம்மாளின் ஒவ்வொரு சலனத்தையும் பதவுரை பொழிப்புரை எழுதி அர்த்தப்படுத்தி விட அவளால் முடியும். உதடு அசையாமல் - இதழ்கள் பிரியாமல் புன்னகை புரிந்தால் இன்ன அர்த்தம், வாய்விட்டுச் சிரித்தால் இன்ன அர்த்தம், முகத்தைச் சீரியஸ்ஸாக வைத்துக் கொண்டு பதில் சொல்லாமலே யோசித்தால் இன்ன அர்த்தம், “பார்க்கலாம்” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் இன்ன அர்த்தம், “அவசியம் செஞ்சுட வேண்டியதுதான்”- என்று கூறி விட்டு அமுத்தலாக இருந்தால் இன்ன அர்த்தம் என்பதை எல்லாம் கூடவே இருந்து நன்றாக ஸ்டடி பண்ணியிருந்தாள் கவிதா.

     ‘இவள் படங்களில் நடிப்பதை உணர்ச்சிக் குவியல், நடிப்பின் சிகரம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே, அதை விடப் பிரமாதமாக வாழ்வில் அல்லவா நடிக்கிறாள்? நடிக்கிற போது நடிப்பதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இவள் நடிப்பது நடிக்காத வேளைகளில்தான்’ - என்று கவிதாவுக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டிருந்தது, அதுதான் உண்மை என்பதும் அவளுக்குள் உறுதிப்பட்டிருந்தது.

     ‘இவள் மனம் இந்த வயசிலேயே ஆழம் காண முடியாத ஒரு சமுத்திரம் மாதிரி இருக்கே? அந்தச் சமுத்திரத்திலே எங்கே நல்முத்துச் சிப்பிகளும் வலம்புரிச் சங்கும் பவழமும், இருக்கின்றன, எங்கே ஆபத்தான சுறாமீன்களும், திமிங்கிலங்களும், கடற் சிலந்தியும் இருக்கின்றன என்பதை எல்லாம் பிரித்துக் கண்டு பிடிக்க முடியாமலிருந்தது. எப்போது எது கிடைக்கும் என்பதும் புதிராகவே இருந்தது.

     அதனால்தான் சுலபா சிரித்ததுமே கவிதா யோசித்தாள், சிரித்ததோடு நின்று விடாமல் சுலபாவே பதிலும் சொன்னாள்:

     “வெளி நாட்டுக்குப் போயிட்டுவான்னு நீங்க சுலபமாச் சொல்லிட்டிங்க ஆடிட்டர் சார்! கையிலே இருக்கிற ‘ஷெட்யூலை’ எல்லாம் முடிச்சுக் குடுக்காமல் நான் கிளம்பினால் இந்தப் புரொட்யூஸர்ஸ் என்னைப் போக விட்டுருவாங்கன்னா நெனைக்கிறீங்க...?”

     “அவங்க விடறாங்களா, இல்லியாங்கிறது முக்கியமில்லேம்மா! நாம போகணும்னு நினைக்கிறமா இல்லியாங்கிறதுதான் முக்கியம். புரொடக்ஷன் வேலை நடந்துக்கிட்டிருக்கிறப்பவே நடுவிலே உன் உடம்புக்குச் சுகமில்லாமப் போனா என்ன பண்ணுவே?”

     “உடம்புக்குச் சுகமில்லாமே ஒய்வு எடுத்துக்கிறேன்னு சொல்றதும் உல்லாசப் பயணம் போறேன்னு சொல்றதும் ஒண்ணாயிடுமா?”

     “நீ சொல்றது நியாயந்தான் சுலபா! உடம்புக்குச் சுகமில்லேன்னா அவங்களே மேற்கொண்டு எதுவும் கேட்காமே விட்டுடுவாங்க... ஃபாரின் ட்ரிப் போறேன்னா அப்பிடி விட மாட்டாங்க...”

     “அவனவன் கோடிக் கணக்கிலே இன்வெஸ்ட் பண்ணிட்டுக் காத்திருக்கான், என்னிக்கிடா புரொடக்ஷனை முடிச்சு, ரிலீஸ் டேட் போட்டு விளம்பரம் பண்ணலாம்னு காத்துக்கிட்டிருக்கிறப்ப நீங்க திடுதிப்னு ஃபாரின் போறேன்னான எப்பிடி இருக்கும்? முன்பணம் குடுத்திட்டு வெயிட் பண்ற, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வேற பிடுங்கித் தின்னுடுவாங்க... இதெல்லாம் நாமே கொஞ்சம் யோசனை பண்ண முடியுமே?”

     “நீ சொல்றதெல்லாம் நூத்துக்குநூறு சரிதான்! அலை ஓய்ந்து நீராட முடியாது. இத்தனைக்கும் நடுவிலே என்னவாவது சாக்குப் போக்குச் சொல்லிப் பிரயாணம் போயிட்டு வர வேண்டியதுதான். எதாவது மெடிகல் ட்ரீட்மெண்ட் அது இதுன்னு புளுக வேண்டியதுதான்.”

     “ஒரு நடிகனோ நடிகையோ எக்காரணத்தை முன்னிட்டும் பொய்யாகக் கூடத் தனக்கு நோய் வரும், தான் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது மாதிரிச் செய்திகளைப் பரப்பவே கூடாது. அது ‘ஆண்டி செண்டிமெண்ட்ஸ்’ விவகாரம். கவர்ச்சியை உடனே பாதிக்கும். தன்னுடைய அபிமான ஹீரோ அல்லது ஹீரோயின் உடல் நலம் கெட்டு மருந்து சாப்பிட நேரிடும் அல்லது சிகிச்சைக்குப் போக நேரிடும் என்பது போன்ற கற்பனையின் சாயல் கூட விசிறியின் மனத்தில் விழக் கூடாது.”

     “உன்னுடைய லெளகீக ஞானம் பிரமாதம் சுலபா! நீ சொல்றது தான் சரியான ஸைகாலஜி. உடல் நலக் குறைவுன்னு சொல்லி வெளிநாடு போக முடியாது. கூடாது.”

     “ஒரே ஒரு வழிதான் இருக்கு! இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற புரொடக்ஷன்ஸிலேயே ஏதாவது ரெண்டொண்ணுலே ஃபாரின் லொக்கேஷனை வர்ர மாதிரிப் பண்ணுங்கன்னு யோசனை சொல்லி நமக்கும் ஒரு பைசாச் செலவு இல்லாமே அவங்க காசிலேயே ஊர் சுத்திப் பார்க்கலாம்.”

     “திடீர்னு கதையை அப்பிடி மாத்த முடியுமா சுலபா?”

     “நம்ப சினிமாவில் எப்பிடி வேணும்னலும் எப்பவேணும்னாலும் மாத்த முடிஞ்ச ஒரே விஷயம் கதைதான் சார்! நம்ம இஷ்டத்துக்குப் பண்ணிக்கலாம்.”

     “அப்படீன்னா ஒரு சினிமாக் கதைங்கிறது குடுகுடுப்பைக்காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்ட துணியா ஆயிடாதா?”

     “ஏற்கெனவே சினிமாக் கதாசிரியருங்களே அப்பிடித்தான் சட்டையைத் தைச்சு எடுத்திட்டு வந்திருப்பாங்க! அதுலே இன்னும் ரெண்டு ஒட்டுக் கூடப் போடச் சொல்லி நாம சொன்னக் கேட்டுப்பாங்க...”

     “எகிறிக்கிட்டு எதிர்த்து நின்னு மாட்டேன் அது இதுன்னு அடம் பிடிக்க மாட்டாங்களா?”

     “ஊஹூம்! மாட்டவே மாட்டாங்க! ஹீரோ, ஹீரோயின், காமிராமேன், டைரக்டர் இவங்கள்ளே யாராவது அடம் பிடிச்சால்தான் எடுக்கும். கதாசிரியரும், பாட்டு எழுதறவங்களும் அடிம்பிடிச்சா அவங்களையே கழட்டி வுட்டுருவாங்க. அடுத்த படத்துக்குச் சான்ஸ் கிடைக்காது. ஃப்ளெக்ஸிபிளா இருந்தால் தான் பிழைக்கலாம். அவங்களுக்கும் அதெல்லாம் தெரியும். எத்தனையோ நடிகைங்க “வசனகர்த்தா சார்! எனக்கு ல, ள, ழ, வாயிலே நுழையாது. தயவு செய்து இந்த எழுத்துங்க மாறி மாறி வர்ரமாதிரி டயலாக் வேணும்”னு கேட்டு மாத்திக்கிட்டிருக்காங்களே...?”

     “‘என் வாளைச் சுழற்றி உன் தலையைச் சீவி எறிவேனடா பாவிப் பயலே’-என்பதில் வாள், சுழற்றி, தலை என்று மூன்று ஒலிகளும் வருகின்றன. இதை யங் சூப்பர்ஸ்டார் பிரதாப் காந்த் பேசினல் எப்படி இருக்கும் சுலபா?”

     “‘என் வாலைச் சுளற்றி உன் தளையைச் சீவி எறிவேனடா பாவிப் பயளே!’ என்றுதான் பிரதாப் காந்தால் பேச முடியும். எனவே இந்த வசனம் அப்படியே பேசப்பட்டால் பிரதாப் காந்துக்கு ‘அத்தனை நீளவால்’ எப்போது முளைத்தது என்ற சந்தேகம் கேட்கிறவர்களுக்கு உண்டாகி விடும். இதைத் தவிர்க்க ஒரே வழி வசனத்தை மாற்றுவதுதான் சார்!”

     “வசனத்தை மாற்றினால் கதை மாறாதா?”

     “அதான் முன்னேயே சொன்னேனே; சூப்பர் ஸ்டாருங்க அப்ஜெக்ட் பண்ணினா வசனம், கதை எல்லாமே மாறியாகணும். இல்லாட்டிக் கதாசிரியரையே மாத்திப் பிடுவாங்க...”

     “அப்போ கதையிலே அமெரிக்கா ஜப்பான்னு லொக்கேஷன் வர்ர மாதிரிப் பண்ணியாவது ஒரு ஃபாரின் டிரிப் அடிச்சிட்டு வரப் பாரேன்.”

     “நான் மட்டுமில்லே! எனக்கு ஒரு பெர்ஸனல் அஸிஸ்டெண்ட் வேணும்னு புரொட்யூஸரை வற்புறுத்தி அவங்க செலவிலேயே கவிதாவையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்துடலாம்.”

     “நல்ல ஐடியா! உடனே முடிவு செய்து போயிட்டு வாங்க! மனசும் தெம்பா ஃப்ரஷ்ஷா ஆகும். சலிப்பு நீங்க அதுதான் சரியான வழி.”

     “இன்னிக்கி யாராவது புரொட்யூஸ்ருங்க வருவாங்க, பேசிப் பார்க்கிறேன். அநேகமாக நான் சொன்னாத் தட்டிச் சொல்லமாட்டாங்க” - என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காரியதரிசி கவிதாவின் பக்கம் திரும்பி, “ஞாபகம் வச்சிக்கோ கவிதா! இன்னிக்கிக் கால்ஷீட் - யாராவது புரொட்யூஸர் தேடி வருவாங்க. அப்போ இதை ஞாபகப்படுத்து” - என்றாள். கவிதாவும் சரி என்று தலையை அசைத்தாள். ஆடிட்டர் கனக சபாபதி திருப்தியாக விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார். ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து கறுப்பில் வரவேண்டிய ரொக்கம் வராததால் அவருடைய தயாரிப்பில் அன்றைய கால்ஷீட்டுக்குப் போவதில்லை என முடிவு செய்து பிடிவாத மாக வீட்டிலிருந்தாள் சுலபா.

     சூட்சுமம் அவளுக்குத் தெரியும். இது ஒரு டெக்னிக். காமிரா, ஸ்டுடியோ, புரொடக்ஷன், யூனிட் எல்லாம் தயார்ப் பண்ணி நிறுத்திய பின் ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்றால் மற்ற ஏற்பாடுகள் வீனாகிவிடும். எங்கேயாவது கொள்ளை வட்டிக்குக் கைமாற்று ஏற்பாடு செய்தாவது ரொக்கத்தை எடுத்துக் கொண்டு வீடு தேடி வருவார்கள். அதற்கு முன் போய்விடக் கூடாது.

     சுலபா இப்படி நாட்களில் நரசம்மாவை டெலிஃபோன் அருகே உட்கார்த்தி வைத்து விடுவாள். அவள் டெலிஃபோனே எடுத்து, “அவங்களுக்கு உடம்பு நல்லா இல்லே! இன்னிக்கிக் ‘கால்ஷீட்’ முடியாதுன்னு சொல்லச் சொல்லிட்டாங்க” என்று கடுமையான குரலில் தமிழும் தெலுங்கும் கலந்த கொச்சையில் கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி ஒரே பதிலைச் சொல்லுவாள் நரசம்மா. எரிச்சலூட்டுகிற மாதிரிச் சொல்லுவாள்.

     சொல்லப்படுகிற அதிகாரப்பூர்வமான பதில் இதுதான் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு உண்மை புரியும். நம்பர் டூ அக்கவுண்டில் அந்த ஷெடயூலின்போது ரொக்கமாகத் தருவதாய் ஒப்புக் கொண்டிருந்த தொகையை நேரில் போய்த் தந்து விட்டால் காரியம் முடியும் எனபதை அவர்கள் பழக்கமான விதத்தில் அறிவார்கள். இந்த மாதிரி வருமானத்தைப் படம் முடிந்து ரிலீஸான பின் வாங்க முடியாது. நம்பர் ஒன் அக்கவுணட் பணத்தையாவது காண்ட்ராக்ட் அது இது எனறு ஆதாரங்களை வைத்து வழக்குத் தொடுத்து வாங்கி விடலாம். கறுப்பில் பேசியதை அவ்வப்போது கால்ஷீட்டுக்கு முன்னால் ரொக்கமாக வாங்கினால் ஒழிய ஏமாற்றி விடுவார்கள். இதை எல்லாம் தங்கமாகவும், வைரமாகவும் மாற்றி விடுவது சுலபாவின் வழக்கம். வர வர இப்படிப் பணத்தை என்ன செய்வதென்று முழிக்க வேண்டியிருந்தது. நிலமாக வாங்கிப் போட்டாயிற்று. நகைகளாக வாங்கிப் போட்டாயிற்று. பங்களாவிற்குள் பளிங்காக இழைத்தும் அழகுபடுத்தியாயிற்று. ‘இண்டீரியர் டெகரேஷன்’ என்ற பேரில படுக்கையறை பாத்ரூம், டைனிங் ஹால் வரவேற்புக் கூடங்களை அழகு செய்வதல் பல லட்சங்களை வருஷா வருஷம் செலவிட்டும் தீராமல் மேலே மேலே வந்து கொண்டே இருந்தது. அவளுடைய அலுப்புக்கு இது ஒரு காரணம். ‘இதெல்லாம் எதற் காக, யாருக்காக விட்டுவிட்டுப் போகப் போகிறோம்?’ என்ற கேள்வி அந்தரங்கமாக உள்ளே எழும்போது மனத்தை ஏதோ இறுக்கிப் பிழிந்தது. கையிலிருக்கும் படங்கள் முடிந்ததும் ஓர் அறிக்கை விட்டு விட்டு நடிப்பதையே நிறுத்தி விடலாமா என்று கூட எண்ணினாள்.

     வெறும் முப்பது வயதிற்குள் உடம்பு கொஞ்சும் இளமையைக் காட்டினாலும் மனம் எண்பது வயது முதுமையையும் கவலையையும் உணர்ந்தது. விரக்தியை அடைந்தது. ஆடிட்டரோடு கலந்து பேசி இந்தச் சொத்தை எல்லாம் ஒரு டிரஸ்ட் ஆகப் பண்ணி நல்ல காரியங்களுக்காக ஒதுக்கி விட்டு விட்டு - எங்காவது பெண்களுக்கான சேவா சிரமத்தில் சேர்ந்து விடலாமா என்று கூட அவளுக்குச் சமய சமயங்களில் தோன்றியிருக்கிறது உண்டு.

     செலவழிக்கப் பணமில்லாமல் கோடிக்கணக்கான ஏழைகள் ஒருபுறமும், கோடிக்கணக்கில் வந்து குவிந்துகொண்டே இருக்கும் பணத்தை எப்படிச் செலவழிப்பதென்று தெரியாமல் தன்னைப் போல் தவிக்கும் சிலருமாக வாழ்க்கை முரண்படுகிற எல்லைகளை அவள் சிந்தித்தாள். மனம் மேலும் குழம்பியது.

     “எஸ்.பி.எஸ். பார்க்க வந்திருக்கிறார் அம்மா! வரச் சொல்லட்டுமா?’’- கவிதாவின் குரல் சுலபாவை இந்த உலகிற்குக் கொண்டு வந்தது. எஸ்.பி.எஸ். தான் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த புரொட்யூஸர். நிச்சயம் பணத்தோடுதான் வந்திருப்பார். ஸ்டுடியோவுக்குப் புறப்பட வேண்டியிருக்கும். கவிதா சுலபாவின் காதருகே வந்து, “அந்த ‘ஃபாரின் டிரிப்’ விஷயம் ஞாபகப்படுத்தச் சொன்னிங்களே?” என்று நினைவூட்டினாள்.