7 சினிமாவில் சேர்த்து விடுவதாக சென்னைக்கு அழைத்து வந்து தன்னை விபசார விடுதியில் விற்றுவிட்டு இரவோடு இரவாகத் தலைமறைவாகிப் போனானே குப்பையரெட்டி அவன் இப்போது அகப்பட்டால் பழி வாங்கலாம். அல்லது பழியைத் தீர்த்துக் கொள்ளலாம். உலகத்தின் எந்த மூலையில் - எந்த நிலையில் எப்படி அவன் இருந்தாலும் இப்போது அவளால் பழி தீர்க்க முடியும். ஆனால் அகப்பட வேண்டுமே? அவன் அகப்பட்டால் அவளால் எதுவும் செய்ய முடியும். ‘சுலபா’வே ஒரு குணசித்திரமாகிப் போனாள். விரக்தி ஒரு புறமும், தன்னை எதிர்ப்பவர்களை வைரம் வைத்து அழிக்கும் குணம் ஒருபுறமுமாக அவள் விளங்கினாள். மனிதர்கள் மெல்ல மெல்ல அவளுக்குப் பயப்பட ஆரம்பித்தார்கள். பயம் மரியாதையைக் கொண்டு வந்தது. மரியாதை பயத்திலிருந்து விளைந்தது. பயப்படாதவர்கள், எழுந்து நிற்காதவர்கள், தன்னைப் பார்த்ததும் பீடி குடிப்பதை நிறுத்தி விட்டுப் பதறிக் கை கூப்பாதவர்கள், எல்லாரையும் ஞாபகமாக வஞ்சம் தீர்க்கிற குணம் அவளுள் வளர்ந்தது. புற எளிமை என்பது ஒரு வேஷ மாக மட்டும் இருந்தது. ஒரு வகையில் பார்த்தால் இது தாழ்வு மனப்பான்மையின் விளைவுதான். தாழ்வு மனப்பான்மைதான் மறுபுறத்தில் ஆணவமாக உருவெடுக்கும். பயமும், அவநம்பிக்கையும்தான் வன்முறையாகவும் பிடிவாதமாகவும் வெளியே தெரியும். சுலபாவிடமும் அப்படித்தான் அவை தெரிந்தன. சுலபா யாரையும் எதையும் நம்ப மறுத்தாள். எல்லார் மேலும் சந்தேகப்பட்டாள். மற்றவர்களை நம்ப மறுப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. புகழை அவள் வெறுத்தாள் என்றால் அதற்குக் காரணம் புகழுகிறவர்கள் மேலெல்லாம் அவள் சந்தேகப் பட்டாள். அவரவர்கள் எப்படி எப்படி இருப்பார்களோ அப்படி அப்படித் தான் இருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ள மறுத்து இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தானாக எதிர் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தபடி மனிதர்கள் இல்லாதபோது அவளுக்குக் கோபம் வந்தது. தான் சொல்லியது தவறாகவே இருந்தாலும் மனிதர்கள் அதைக் கேட்க வேண்டும், அதற்கு இசைந்து அதன்படி செயல்பட வேண்டும் என்று அவள் விரும்பினாள். எதிர்த்துப் பேசுபவர்கள், அவள் யோசனை சரியில்லை என்பவர்கள் மேலெல்லாம் கோபப்பட்டாள் சுலபா. இதைப் பலம் என்பதா, பலவீனம் என்பதா என்று புரியாமல் கவிதாவும் மற்றவர்களும் சிரமப்பட்டார்கள். தன்னை இலட்சியம் செய்து மதித்தவர்களைச் சுலபா மதிக்காமல் அலட்சியம் செய்தாள். தன்னை அலட்சியம் செய்த வர்களைப் பழி வாங்கத் திட்டமிட்டாள். ஒரு குளோஸப் - ஷாட்டில் மகா நிபுணரான கேமிராமேன் ஒரு கோணத்தை முடிவு செய்தபின் இவள் தன் முகத்தை அந்தக் கோணத்திலிருந்து படம் பிடித்தால் நன்றாயிராது என்றாள். “இல்லேம்மா! நான் சொல்றதைத் தயவு செய்து கேளுங்க! இது சோகக் காட்சி. இதிலே இதுதான் பிரமாதமா இருக்கும்” - என்று காமிரா நிபுணர் வாதிட்டார். இவள் நடிக்க வருவதற்கு முன்பே காமிரா நிபுணராகப் பெயரெடுத்திருந்தவர் அவர். அதற்கு ஒப்புக்கொண்டது போல் சுலபா மெளனமாயிருந்து விட்டாள். ஆனால் அன்றிரவே தயாரிப்பாளர் அவளைச் சந்தித்தபோது அவரது படத்தில் தான் மேற்கொண்டு, “நடிக்க முடியாது” என்றாள் சுலபா, “ஏன்? என்ன காரணம்... யாராவது உங்க மனசு நோகும்படி நடந்துக் கிட்டிருந்தா எங்கிட்டச் சொல்லுங்க” - என்றார் தயாரிப்பாளர். சுலபா மெளனம் சாதிக்கவே அவரது கோபம் அதிக மாயிற்று. “யார் என்ன செஞ்சாங்கன்னு சொல்லுங்கம்மா... இப்பவே அவனைக் கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பறேன்.” “என் தலை எழுத்து ஒரு காமிராமேனிட்ட நான் அவ மானப்படி வேண்டியிருக்குது.” அந்தக் காமிராமேன் ஒரு ஜென்டில்மேன் என்பது தயாரிப்பாளரின் அபிப்பிராயமாயிருந்தது. சுலபா காமிராமேனைக் குறை கூறியதும் அவர் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துப் போனார். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு. அவளோ முரண்டு பிடித்தாள். தயாரிப்பாளர் கெஞ்சினார்: “நாட்டிலே இன்னிக்கி முன்னணியிலே இருக்கிற ரெண்டு மூணு புகழ்பெற்ற காமிரா மேன்களிலே அவரும் ஒருத்தராச்சுங்களே மேடம்! நீங்கதான் கொஞ்சம் பெரியமனசு பண்ணணும்.” “அப்போ நாங்கள்ளாம் நாட்டிலே உள்ள புகழ்பெறாத ஆளுங்களா? இல்லே பத்தோடப் பதினெண்ணுங்கிற மாதிரி ஆளுங்களா? நீங்க சொல்றதைப் பார்த்தால் அதுமாதிரித் தொனிக்குதே?” “அய்யய்யோ! நான் அந்த மாதிரி அர்த்தத்திலே சொல்லலே அம்மா. ஒரு ‘ஆங்கிளை’ அவர் சரியான ‘ஆங்கிள்’னு முடிவு பண்ணியிருந்தா அது படத்துக்கு உப யோகமானதாகத்தான் இருக்கும். தப்பா எதுவும் இருக்கா தேன்னு...?” “அவரு பெரிய ஆளானா அது அவர் மட்டிலே... எனக்கு அந்த ‘ஆங்கிள்’ பிடிக்கலேன்னா அவர் ஏன் கேட்கமாட்டேங்கிறாரு?” அவள் குரலில் கடுமையும் முரண்டும் ஏறின. அவருக்குப் பயமாயிருத்தது. தனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் வீம்புக்காக அவள் தலையிடுகிறாள் என்று அவருக்குப் புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தது. ‘இவளுடைய நடிப்பு ஏதோ ஓர் இடத்தில் சரியில்லை’ என்று காமிராமேன் கூற முன் வந்தால் அதற்கு இவள் என்ன மதிப்பளிப்பாள் என்று எண்ணிப்பார்த்தார் அவர். அப்படித் தன் நடிப்பைப் பற்றி மற்றொருவர் அபிப்ராயம் சொல்ல முன்வருவதையே அவள் சகித்துக் கொள்ள மாட்டாள் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் மற்றவர்கள் விஷயத்தில் அதிக உரிமை எடுத்துக்கொண்டு தலையிட அவள் சிறிதும் தயங்கவில்லை. படிப்பறிவும் காரண காரியச் சிந்தனையுமற்ற அவளுடைய ‘ஈகோ’வின் கூர்மை பனங்கருக் குப் போல எதிர்ப்படுகிறவர்களைத் தாறுமாறாக அறுக்கக் கூடியதாயிருந்தது. இவளையும் விரோதித்துக் கொள்ள முடியாது. காமிராமேனையும் விரோதித்துக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இரண்டு பேரையுமே சமாளித்தாக வேண்டும் என்று முடிவு செய்தார் தயாரிப்பாளர். காமிராமேன் எடுத்துச் சொன்னல் கட்டுப்படுவார். கேட்டுக் கொள்வார். ஆகவே அவரிடம் இதமாகப் பேசிப் பார்த்து அவர் மூலமே இவளை வழிக்குக் கொண்டு வருவதென்று முடிவு செய்தார். காமிராமேனைச் சந்தித்தார். தம் நிலையை விளக்கினார். காமிராமேனுக்குப் புரிந்தது. “சார் இது லைக்கலாஜிகல் டிஸ்பியூட்! இதை எந்த ஆங்கிள்லே சரிப்படுத்தறதுங்கிறதை எங்கிட்டவே விட்டுடுங்க. நானே சரிப்படுத்திடறேன். வேற ஒண்ணுமில்லே! அந்தம்மா வோட ‘ஈகோ’வை நான் ஒத்துக்கிறேனா இல்லையாங்கிறது தான் அவங்க கேள்வி. அந்த ‘ஈகோ’வை நான் எதிர்த்துச் சர்ச்சை செய்ய மாட்டேன்னு அவங்க புரிஞ்சுக்கிட்டாலே என்னை விட்டுடுவாங்க.” “படிச்சவங்களோட ஈகோவாவது வெண்ணெயிலே இறங்கிற கத்திமாதிரி ஒசைப்படாமச் சிதறாமல் அறுக்கும். படிக்காதவங்க ஈகோவோ பனைமடல் மாதிரி இரத்தம் சிந்த வச்சிரும்.” “சரியாச் சொல்றீங்க! இந்தம்மாவோட வீம்புக்கும் ஈகோவுக்கும் காரணமே அவங்களோட தாழ்வு மனப்பான்மை தான். அதை நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். எங்கிட்ட விட்டுடுங்க நானே அவங்களைச் சந்தித்துப் பேசிச் சரிப்படுத் திக்கிறேன்” என்று காமிராமேன் நம்பிக்கையோடு உறுதி கூறினார். உலக அநுபவம் மிக்கவரும் சுலபாவை விட வயது மூத்தவருமான அந்தக் காமிராமேன் மறுநாளே அந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டார். பூக்கடையில் ஐந்து ரூபாய் செலவழித்துப் பாலிதின் உறையில் அழகாக அடுக்கிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைச் சந்திக்கப் போனார் அவர். அவள் உள்ளே இருந்து கொண்டே அலைக்கழித்தாள், “உடம்பு சரியில்லை. இன்னிக்கி யாரையும் பார்க்க முடியாதாம்” என்று நரசம்மா மூலம் வேண்டுமென்றே சொல்லியனுப்பினாள். அவர் அசரவில்லை. “இன்னிக்கி வெள்ளிக்கிழமை! மங்கலமான நாள். பூங்கொத்தோடு பார்க்க வந்திருக்கேன். பார்க்காமப் போக மாட்டேன்னு சொல்லுங்க” என்றார். நரசம்மா மறுபடி உள்ளே ஓடினாள். திரும்பி வந்து, “என்ன விஷயமாப் பார்க்கணும்னு கேட்கிறாங்க” என்றாள். “ஒரு விஷயமுமில்லே. அவங்களுக்கு மரியாதை செலுத்திட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான்.” அவள் உள்ளே போய்விட்டு மறுபடி திரும்பி வந்து, “ஒருமணி நேரம் ஆகும்! உங்களால அதுவரை ‘வெயிட்’ பண்ண முடியுமான்னு கேட்கிறாங்க?” என்றாள். “ஒருமணியோ, ரெண்டு மணியோ அவங்களைப் பார்த்து இந்தப் பூவைத் தராமல் நான் போகப் போறதில்லே” - அவள் தன்னைப் பதம் பார்க்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. கயவர்களை அவர்களுக்குத் தோற்பதுபோல் போக்குக் காட்டி விட்டு அப்புறம் தான் ஜெயிக்க வேண்டும் என்ற உத்தி அவருக்கு நன்றாகத் தெரியும். முதலில் சொன்னது போல் அவ்வளவு காலதாமதம் செய்துவிடாமல் மிக விரைவிலேயே அவரை உள்ளே கூப்பிட்ட னுப்பினாள் சுலபா. போனதும் பூங்கொத்தைக் கொடுத்து விட்டு அவளை இதமாகப் புகழ ஆரம்பித்தார் அவர். “இன்னிக்கி இருக்கிற ஸ்டாருங்களிலேயே காமிராவுக்கு அதிர்ஷ்டமான முகம் உங்களுது தான்.” முதலில் அவள் நம்பவில்லை. பின்பு அவள் மெல்ல மெல்ல இளகினாள். “உங்க முதல் படத்திலேருந்து நான் பரம ரசிகன்.” “ரொம்பப் புகழாதீங்க... ப்ளீஸ்.” “இந்தச் சமீபத்துக் காமிரா ஆங்கிள் பத்தின சண்டை கூட நமக்குள்ள அவசியமில்லாதது. ஏதோ என் போறாத வேளைன்னு தான் சொல்லணும். அந்த ஆங்கிளைக் கூட நீங்க நினைக்கிற படியே மாத்திடலாம்.” “வேண்டாம்! நீங்க மூத்தவர். அநுபவஸ்தர். உங்க விருப்பப்படியே விட்டுடலாம். தெரியாத்தனமா உங்களைத் தப்பாப் புரிஞ்சுக் கிட்டேன்.” “நீங்க நினைக்கிறபடியே மாத்திடலாம் மேடம். கவலைப் படாதீங்க...” “வேண்டாம்! பழையபடியே இருக்கட்டுங்க. நான் புரொட்யூஸர் கிட்டப் பேசிடறேன்.” வந்த காரியத்தை ஜெயித்தாயிற்று. அவர் மேலும் சுலபாவைப் புகழ்ந்து அவள் ஆணவத்தின் கிளர்ச்சி நிலையில் தமது காரியத்தைச் சாதித்துக் கொண்டு திரும்பினர். வெற்றி சுலபமாயிருந்தது. |