14 கோகிலாவுடன் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. சுவாரஸ்யமாகத் தொடரும், சுலபா அந்த உரையாடல் சுகத்தை அநுபவிப்பதற்காக ‘கால்ஷீட்களை’ இரத்துச் செய்திருக்கிறாள். பல்லாயிரக்கணக்கில் செலவழித்துப் போடப்பட்ட ‘செட்’களையும் யூனிட் ஏற்பாட்டையும் மறந்து படப்பிடிப்புக்குப் போகாமல் உரையாடல் சுகத்தில் ஈடுபட்டிருக்கிறாள். மனிதர்கள் அறிய ஆசைப்படும் இரகசியங் களும், விவரங்களும் தெரிந்த விரும்பத்தக்க கான்வர்சேஷனலிஸ்ட் கோகிலா ஒருத்திதான். கோகிலாவின் அந்தரங்க லைப்ரரியில் பாலியல் பற்றிய புத்தகங்கள் மட்டுமில்லை, வீடியோ டெக்கும் பாரிஸ், கோபன் ஹேகன் போன்ற நகர்களுக்குப் போனபோது இரகசியமாக வாங்கி வந்த ‘லைஃப் ஷோ’ வீடியோ கேஸட்டுகளும் கூட உண்டு. அவை படுநீலமானவை என்பது சுலபாவின் அபிப்ராயம். “இது 1986ல் தான் படுநீலம். 1987ல் 88ல் இதைத் தூக்கி அடிக்கிற படுபடு நீலம்லாம் வந்துடும் பாரு” என்பாள் கோகிலா. “அதுசரி இதெல்லாம் செய்யிறியே...? உங்களவர் ‘அப்ஜெக்ட்’ பண்ணமாட்டாரா?” “அவரே பிஸினஸ் பார்ட்னர்ஸை எண்டர் டெயின் பண்ண நாலு பேருக்குக் கிளாஸ்ல தண்ணியை ஊத்திக் குடுத்து இதெல்லாம் போட்டுக் காண்பிக்கச் சொல்றதுகூடி உண்டுடீ!” “உன் துணிச்சல் வேற யாருக்கும் வராதுடீ! கோகிலா” “நீ இப்பிடிப் புகழறே அவரானாப் பம்பாய், கல்கத்தா டில்லியிலே பெரிய பெரிய கோடீசுவர பிஸினஸ் மேகனெட் களோட மனைவிமார்கள் கத்துக்கிட்டிருக்கிற ‘டேக்டிஸ்’ல நூற்றுலே ஒரு மடங்குகூட நான் கத்துக்கலேன்னு குறைப் பட்டுக்கிறாரு, அவங்க இன்னும் மாடர்னா இன்னும் அப்டு டேட்டா இருக்காங்களாம். புருஷன் இல்லாதபோது தேடிவர்ர பிஸினஸ் பார்ட்னர்ஸுக்குக் கூட உள்ளே கூப்பிட்டு உட்கார வச்சு டிரிங்க்ஸ் ஸெர்வ் பண்றாங்களாம்.” “ஆரம்ப நாளிலே சினிமாவிலே நாங்க இப்பிடி எத் தனையே பண்ணியிருக்கோம்! ஒரு மிஷின் மாதிரிப் பணக் காரங்களை, முதலீடு செய்யிறவங்களை விநியோகஸ்தர்களைச் சந்தோஷப்படுத்தியிருக்கோம்...” “இருக்கலாம். ஆனால் அது வேற, இது வேற. இதுவே வெறும் சரீர சந்தோஷம் மட்டும் பத்தாது. இண்டெலக்சுவல், ப்ளெஷர் முக்கியம், அவங்களோட அரசியல் முதல் ‘குக்கெரி’ வரை இங்கிலீஷ்ல சரளமா உரையாடணும். ஜோக் அடிக்கணும். அவங்க ஜோக்கடிக்கிறப்ப அது சுமாரான ஜோக்கா யிருந்தாலும் பிரமாதமா ரசிச்சுச் சிரிக்கணும். அவங்க ரொம்ப ‘ஸ்மார்ட்’னு நாலுதடவை அவங்க கிட்டவே சொல்லிப் புகழணும். அவங்க நம்மைப் புகழறப்போ அதைச் சடங்கு மாதிரி ஏற்காமே முகம் சிவக்கப் புன்னகை புரிந்து வெட்கப் படறமாதிரி நடிக்கணும். ‘ஹேவ் ஸம் மோர்...’ என்று அதிகமாகப் பருகச் சொல்லி உபசரிக்கணும். நிறைய இங்கிதங்களைப் பயன்படுத்தி இங்கிதக் குறைவான காரியங்களைக் காதும் காதும் வச்சாப்ல சாதிச்சுக்கணும். ஒரு ‘கால்கேர்ளுக்கும் புரொஃபஷனல் ஹோஸ்டெஸ்ஸுக்கும் இப்படி நிறைய வித்தியாசம்லாம் இருக்குடி சுலபா!” இதைக் கேட்டுச் சுலபாவுக்குச் சுரீரென்றது, கோகிலா தன்னைக் ‘கால்கேர்ள்’ என்கிறாளோ என்று பட்டது. ஆனால் சிறிது நேரம் மேலும் பேசிப் பார்த்தபோது மனத்தில் கவடமில்லாமல் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறாள் என்று சுலபாவுக்கே புரிந்தது. கோகிலாவைப் பொறுத்தவரை அவளது திறமைகளும் அழகும் கெட்டிக்காரத்தனமும் ஆயிரம் தொழில் முறை ஹோஸ்டஸ்களுக்கும் மேலானவை என்பது சுலபாவுக்குப் புரிந்துதான் இருத்தது. இவள் கணவனின் வியாபாரம் ஒன்றிற்குப் பத்தாக லாபம் தந்து கொழிப்பதற்குக் காரணம் இவளைப்போல் தங்கக் கம்பியாக இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்கும் மனைவியாகத் தானிருக்க வேண்டும் என்று நம்பினாள் சுலபா. நடிகை சுலபா ஒரு குணசித்திரம் என்று கோகிலா எண்ணினாள். கோகிலாவே ஒரு குணசித்திரம் என்று சுலபா வுக்குத் தோன்றியது. இருவருக்குமே தனிமனித ஒழுக்கங் களில் நம்பிக்கை போயிருந்தது. இவர்களது அந்தரங்க நட்பு என்பது அந்த அடிப்படையில் உருவானது தான். இருவருக் குமே பெண்கள் நினைத்தால் - முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம் உள்ளூர இருந்தது. ‘விபசாரிக்கும்’ ‘உபசரணப் பெண்ணுக்கும்’ வித்தியாசமிருப்பதாகக் கோகிலா சொன்னாள். பச்சையான பதப் பிரயோகமும் நாசூக்கான பதப்பிரயோகமும் - தொனியில்வித்தியாசப் படலாமே ஒழிய அர்த்தத்தில் ஒரே மாதிரியான வைதான், ஒரே விளைவை உடையவைதான். ‘முட்டாள் தனமாகப் படுகிறது’ என்பதற்கும் ‘புத்திசாலித் தனமாகப் படவில்லை’- என்பதற்கும் ஒரே அர்த்தம்தான். ஆனால் ‘முட்டாள் தனமாகப்படுகிறது’ - என்பவன் யாரைப் பார்த்து அப்படிச் சொல்லுகிறானோ அவனுடைய விரோதத்தை உடனே சம்பாதித்துக் கொள்கிறான். ‘புத்திசாலித்தனமாகப் படவில்லை’ - என்பவன் கேட்பவனோடு உடனடி விரோதத்தைத் தவிர்க்க முடிகிறது. கோகிலா புத்திசாலித்தனமாக எல்லாம் செய்தாள். அவள் கணவன் டாட்டா, பிர்லா போலக் கோடீசுவரனாக உதவினாள். முதலில் இல்லா விட்டாலும் நாளடைவில் சுலபா கூடச் சில கோடிகளை இரகசியமாகக் கோகிலாவின் கணவனிடம் பினாமி பெயர்களில் முதலீடு செய்திருந்தாள். சிநேகிதமாகப் பிடித்து மெல்ல மெல்லச் சுலபாவைக் கணவனின் தொழில்களில் பணம் போட வைத்துவிட்டாள் கோகிலா. மத்திய மாநில ஆளும் கட்சிகளுக்கும் ஆட்சியைப் பிடிப்பது போல முன்வரும் கட்சிகளுக்கும் தேர்தல் நிதி ரொக்கமாகத் தரவேண்டி வரும் போதெல்லாம் கோகிலாவின் கணவருக்குச் சுலபா தான் உதவ வேண்டியிருந்தது. தேர்தல் நிதிக்குக் கணக்கில் காட்டாத ரொக்கம் வேண்டும் என்று கழுத்தறுத்தால் எங்கேயிருந்து அவ்வளவு பெரிய தொகையை ஒரே நாளில் தேடுவது? சுலபாவிடம் தான் சுலபமாக அது கிடைத்தது. சுலபாவுக்குத் தெரியாமலே அவளுக்கு நட்பு வலை விரித்துத் தன் அந்தரங்கங்களை அவளுக்குக் கூறுவது போல் அவன் அந்தரங்கங்களை ஒன்று விடாமல் அறிந்து அவசரப்பட்டு விடாமல் சில வருஷங்கள் வரை இந்தச் சிநேகிதத்தைப் பயன் கருதாத வெறும் நட்பாகவே தொடரும்படி பொறுத்துக் காத்திருந்து காலம் கனிந்தவுடன் பணமாகக் ‘கேஷ்’ பண்ணிக் கணவனுக்கு வாங்கிக் கொடுத்த சாதுரியம் கோகிலாவினுடையது. கோகிலாவின் கணவன் உலகின் தலைசிறந்த ஒரே ஒரு ராஜதந்திரியாக - டிப்ளமேட்டாக கின்னஸ் புத்தகத்தில் இடம பெற வேண்டிய அத்தனை சாமார்த்தியம் உள்ளவன், படு ஸ்மார்ட் ஆசாமி. “நீ முதலில் உன் எதிராளியின் பூட்டப்பட்ட மனக் கதவுகளைத் திறப்பதற்காக உன் சொந்த இரகசியங்களையும் அந்தரங்கங்களையும் எதிராளியிடம் தாராளமாகத் திறந்து சொல்லத் தொடங்கு. உன் செயலால் எதிராளியின் மனக் கதவுகள் பூட்டுக்கள் எல்லாம் திறக்கப்படுகிற வரை தொடர்ந்து பேசு. எதிராளியின் மனக்கதவுகள், போதுமான அளவு திறந்து விட்டதை அறிந்ததும் உடனே உன் மனக் கதவுகளைப் பத்திரமாக மூடிப் பூட்டிவிட்டு எதிரே திறக்கப்பட்ட கதவுகளுக்குள்ளே நுழைந்து என்னென்னவற்றைக் கடத்திக் கொண்டு வர முடியுமென்று பார்! டெல் மோர் ஸீக்ரெட்ஸ் இன் ஆர்டர் டு கெட் மோர் ஸீக்ரெட்ஸ் ஃப்ரம் அதர்ஸ்” - என்பதுதான் கோகிலாவின் கணவன் அடிக்கடி கூறும் ராஜதந்திர தத்துவம். மனிதர்களையும், மனங்களையும் கவர்ந்து வசப்படுத்தும் உத்திகளில் அவன் நிபுணன். அவனுடைய திறமையான ‘கோச்சிங்’கிலும் ஸ்பெஷல் கிளாஸிலும் சரிபாதிதான் கோகிலாவே தயாராகியிருந்தாள். “போறாது! யூ ஹாவ் டு லேர்ன் மோர்” - என்று அவளிடம் சொல்வான் அவன். சுலபாவை அவளது அனைத்து அந்தரங்கங்களோடும் தன் சிநேகிதியாகச் சிறைப்பிடிக்கக் கணவன் சொல்லிக் கொடுத்த வழிகளில்தான் முயன்று வெற்றி பெற்றிருந்தாள் கோகிலா. கோகிலாவின் கணவனைப் பற்றிச் சொல்லும்போது, “நத்திங் இஸ் இம்பாஸிபிள் ஃபார் மிஸ்டர் கே.வி.லிங்கம்” என்று பிஸினஸ் சர்க்கிளில் சொல்லுவார்கள். கொச்சையாகவும், பொறாமையாகவும் பேசும்போது, “வைத்திலிங்கமா? அவன் பெரிய வல்லாள கண்டனாச்சே” என்பார்கள். கே.வி.லிங்கம் என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட கே.வைத்திலிங்கத்தால் முடியாத காரியமே இல்லை. எந்த இக்கட்டான நிலையிலும் சிக்கலின் மறுநுனியைக் கண்டுபிடித்து அழகாகச் சரி செய்து சிக்கலைத் தீர்த்துக் கொடுத்துவிட அவனால் முடியும். தொழிலதிபர்களிடையே அவன் நிபுணனாகப் பெயர் பெற்றிருந்தான். ஒரு சமயம் டெல்லியில் ஒரு இண்டஸ்ட்ரியல் லைசென்ஸ் படுதாமதமாக இழுத்தடித்தது. இன்ஷ்யூரிங் அதாரிட்டி ஆபீஸர் எதிலும் வசப்படாமல் நழுவினன். தூண்டித் துளைத்து விசாரித்ததில் அந்த ஆபீஸர் ‘கஜாரண்ய சுவாமிகள்’ என்ற மெளனச் சித்தரிடம் அளவு கடந்த பக்தியுள்ளவர் என்று தெரிந்தது. கஜாரண்ய சுவாமிகள் மடத்து நிர்வாகியைப் பிடித்து அடுத்த மாசம் நடக்கிற விசேஷ பூஜைக்கு வந்து ஆசிபெற வேணும் என்று சுவாமிகளே அநுக்கிரகிப்பதாக ஒரு கடிதம் டெல்லி ஆபீசருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று. கஜாரண்யத்தில் நடந்த அந்த பூஜைக்கு டெல்லி ஆபீஸர் வந்தார். கோகிலாவும் அவள் கணவரும் கூடச் சென்றார்கள். தரிசனம் முடிந்ததும் மடத்து நிர்வாகி கோகிலாவையும் அவள் கணவரையும் டெல்லி ஆபீஸர் முன் அறிமுகம் செய்து, “நம் சுவாமிக்குப் பரமபக்தர்கள்! இந்தத் தம்பதிகள் மேல் அவருக்குக் கொள்ளை விசுவாசம்” என்றார். கோகிலாவின் கணவரது ஏற்பாடு இது. அடுத்த வாரமே நேரில் போய் லைசென்ஸ் பெற்று வர முடிந்து விட்டது. இதற்குத் திட்டமிட்டதே கோகிலாவின் கணவன்தான். மற்றொரு சமயம் ஒரு லைசைன்ஸில் கையெழுத்திட வேண்டிய ஆபீஸருக்காகத் திருத்துறைப் பூண்டிக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து ஒரு லாரி லோடு ஏட்டுச் சுவடிகளுடன் ஒரு நாடி ஜோஸியனையே டெல்லிக்கு அழைத்துப் போக வேண்டி வந்தது. அழைத்துப் போய் வேலையை முடித்துக் கொண்டு வந்தார். “டெல்லிங்கிறது ஒரு பெரிய ஹ்யூமன் மியூஸியம். எத்தனை வித மனங்களும் மன விகாரங்களும் அங்கு உண்டோ அத்தனைக்கும் பரிகாரங்கள் உண்டு” என்பான் கோகிலாவின் கணவன். “சில பேர் பாட்டில் கேட்பான். சிலபேர் அழகைக் கேட்பான். சிலபேர் ஜோஸியம் கேட்பான். இன்னம் சிலபேர் ‘ரெண்டு பாட்டில் தென்னமரக்குடி எண்ணெய் வேணுமே’ன்னு - ஏதாவது நாட்டு மருந்தாச் சொல்லி அனுப்புவான். ஸ்காட்ச் முதல் தென்னமரக்குடி எண்ணெய் வரை எல்லாமே காரியத்தைச் சாதிச்சுக் குடுக்கும். மலைக்கப்பிடாது. மிரளபடாது. துணிஞ்சு ஈஸியா எடுத்துக்கிட்டு முயற்சி பண்ணினா எல்லாமே முடியும்” என்று ஊர் திரும்பி வந்து கோகிலாவிடம் விவரித்துக் கொண்டிருப்பது அவள் கணவனின் வழக்கமான செயல்தான். “இது போருமே? மேலே மேலே வளரணும்னு ஏன் நாயா அலையணும்” என்று சில சமயம் கோகிலா அவனை நேருக்கு நேர் கேட்பாள். “எனக்கு இது போறாது கோகீ! என்னோடது மிருகப்பசி. அதாவது அனிமல் அப்பீடைட். என்னாலே முடியாததுன்னு எதுவும் இருக்கப்படாது” என்பான் அவன். அந்த வெறிதான் அந்த வெற்றி வெறிதான் முடிவாக ஒரு தொத்து வியாதிபோல அவளையும் சேர்த்துப் பீடித்து விடும், சுலபாவின் இருபத்தெட்டாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. பொதுவாக அவள் இருபத்தாறு, இருபத்தேழு, இருபத்தெட்டு என்று அடுத்தடுத்து வயது கூறியபோது கோகிலா கூட அதை நம்பவில்லை. வயதைக் குறைத்துக் கூறிக் கொள்வது நடிகைகளைப் பொறுத்தவரையில் ஒரு மரபாகவும் நாகரிகமாகவும் தகுதியாகவுமே கருதப்பட்டது. நடிகர்களில் கூடப் பலர் அப்படித்தான் செய்தார்கள். அதில் “மார்க்கெட் ரகசியம்” இணைந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தரங்கமான இரண்டொருவரைத் தவிர யாரும் நடிகைகள் தங்கள் பிறந்த நாள் பற்றிச் சொல்லுவதே இல்லை. அதுவும் உண்மையைச் சொல்லுவதே இல்லை. நடிகையைப் பெற்ற தாயால் கூட அவளது சரியான பிறந்த தேதியைச் சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறி தான் - என்று கூட வேடிக்கையாக ஒரு வசனம் சினிமா உலகில் உண்டு. உயிர்த்தோழி கோகிலா சுலபாவிடம் எத்தனையோ உரிமைகளை எடுத்துக் கொண்டும் துணிந்து ஒருநாள் கூட “ஏண்டி சுலபா! எனக்குத் தெரிந்தால் என்ன? உன் உண்மை யான வயதே இருபத்தெட்டுத்தானா?” - என்று வினவக் கூட முயன்றதில்லை. ஒரு சினிமா நடிகையிடம் வயது விசாரிப் பது என்பது தயங்கி ஒதுங்க வேண்டிய ‘சென்ஸிடிவ் இஷ்யூ’ வாகக் கருதப்பட்டது. ‘எனக்கு என்றும் பதினெட்டுத்தான்’ என்பது போலவே பல நடிகைகள் நடந்துகொண்டார்கள். ஒரு நடிகை கற்பை இழப்பதை விட இளமையை இழப்பதையோ இழப்பாகக் காட்டிக் கொள்வதையோதான் அதிகம் வெறுத்தாள். அதாவது தமக்கு வயதானதாகக் காட்ட மனம் ஒப்பவில்லை. சுலபாவின் வயது பற்றிக் கோகிலாவுக்கு மட்டுமின்றிக் கவிதாவுக்கும் கூடச் சந்தேகங்கள் உண்டு. இருவரும் எவ்வளவோ முயன்றும் சுலபாவின் உண்மை வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரபூர்வமாகச் சுலபாவே அறிவித்த இருபத்தேழுதான் நம்பப்பட வேண்டியிருந்தது, இருபத்தெட்டு இப்போது வந்து கொண்டிருந்தது. பள்ளிச் சான்றிதழ்களை வைத்துத் துப்புத் துலக்க முடியாது. அவள் மழைக்குக் கூடப் பள்ளிகளில் ஒதுங்கியதில்லை, அதனால் சர்டிபிகேட்டுகளில் ‘டேட் ஆஃப் பெர்த்’ பார்க்க வழியில்லை. சுலபாவின் தாய் என்று அறிமுகப்படுத்தப்பட்ட நரசம்மாவுக்கும் வயது பற்றி எல்லாம் மூச்சு விடக் கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தது போலும். ஏனெனில் வயது பற்றி யாராவது பேச்சை ஆரம்பித்தாலே நரசம்மா விதிர்விதிர்த்து நடுங்கினாள். இதனால் நம்பும்படியாக இல்லாவிட்டாலும் சுலபாவே அதிகாரபூர்வமாகச் சொல்லியிருந்த தேதியை வைத்துக் கணித்து அவளுடைய 28-வது பிறந்தநாள் இன்னும் சில வாரங்களில் வர இருப்பதைக் கோகிலா அநுமானித்தாள். ஆனால் நடிகை சுலபாவின் கற்பனைப் பிறந்த நாட்கள் கூட இரகசியமானவை. கோகிலாவுக்கு மட்டுமே தெரிந்தவை. ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒரு புதிய மகிழ்ச்சியும் அநுபவம் கிடைக்கிற மாதிரி எப்படிக் கொண்டாடுவது என்பதையே கோகிலாதான் திட்டமிடுவாள், பெரும்பாலும் அது சுலபாவுக்குப் பிடித்த மாதிரியே இருக்கும். கோகிலாவும் சுலபாவுமே அதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். இது கூட இரண்டு மூன்று வருடங்களாகத்தான். அதற்கு முன்போ கொண்டாட்டமே கிடையாது. இருபத்து ஆறாவது பிறந்தநாளை மேற்கு மலைத் தொடரில் நடுக்காட்டில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்கி விநோதமாகக் கொண்டாடினார்கள் அவர்கள். இருபத்து ஏழாவது பிறந்த நாளைக் காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரியின் நீர்ப்பரப்பில் மிதக்கும் ஒரு படகு வீட்டில் கொண்டாடினர்கள். அந்த ஷிகாரா (படகுவீடு) ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் வசதிகள் உள்ளதாயிருந்தது. கோகிலா மட்டுமே கூடப் புறப்பட்டுப் போயிருந்தாள். வரப்போகும் 28-வது (அதிகாரப் பூர்வமான) பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று ஞாயிறன்று சுலபாவின் வீட்டில் டின்னருக்குப் போகும்போது அவளிடம் சஸ்பென்ஸாய் அறிவிப்பதாக முடிவு செய்திருந்தாள் கோகிலா. சுலபா தன் வீட்டுக்கு முந்திய டின்னருக்கு வந்த போது தெரிவித்த சில ஆசைகளின் அடிப்படையில் கோகிலா அதை யோசித்து வைத்திருந்தாள். சுலபாவின் மனநிலையை தவிப்பை - நீண்டநாள் ‘காம்ப்ளெக்ஸ்’களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பக் கோகிலா சிந்தித்து வைத்திருந்தாள். சுலபாவும் அதற்கிசைவாள் என்றே கோகிலாவுக்குத் தோன்றியது. இதில் சுலபாவை அவள் நம்பினாள். சுலபாவின் வீட்டுக்கு அந்த ஞாயிறன்று கோகிலா விருந்துக்கு வந்த போதே இரவு எட்டுமணி. முன்னெச்சரிக்கையாகக் கவிதாவை வீட்டுக்கு அனுப்பியிருந்தாள் சுலபா. நரசம்மா வீட்டில் இருந்தாள். மாடியில் சுலபாவின் ஏ.சி. செய்த தனியறையில் சந்திப்பு. “கீழே டைனிங் ஹாலில் பத்து மணிக்குச் சாப்பிட வருவோம்! இன்னின்ன அயிட்டங்கள் மெனு” என்று நரசம்மாவிடமும் வேலைக்காரியிடமும் உத்தரவு போட்டாயிற்று. எந்த ஃபோன் வந்தாலும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணாதே! நீயே பேசிக்கொள். யார் தேடி வந்தாலும் நீயே சமாளித்துச் சொல்லி, அனுப்பிவிடு” என நரசம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தாள் சுலபா. தானும் கோகிலாவும் சந்திக்கிற சந்திப்புக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாதென்று திட்டமிட்டிருந்தாள் சுலபா. அவளிடம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிய பிரெஞ்சு ‘ஷாம்பைன்’ சிக்கியிருந்தது. கோகிலாவுக்குப் படுகுஷி. அன்றிருந்த உற்சாகத்தில் கோகிலா சிகரெட்டும் பிடித்தாள், அவள் எவ்வளவோ வற்புறுத்தியும் சுலபா மறுத்து விட்டாள். “இது மட்டும் என்னலே முடியாதுடீ! எனக்குச் சிகரெட்டுப் புகையின்னலே பிடிக்காது! கமட்டிக்கிட்டு வரும். அந்தக் கிராதகன் குப்பையரெட்டி என்னை ஒரு விடுதிக்கு விலைபேசி வித்துட்டு ஓடினானே, அந்த விடுதியிலே வாயில் சிகரெட் நாற்றமும். பீடிவாடையுமுள்ள வேர்வைநெடியோடப் பல தடியன்கள் வருவாங்க. காசுக்காக அவங்களைச் சகிச்சுக்கிறப்ப எல்லாம், ‘சிகரெட் குடிக்காத - புகையிலை போடாத - ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத உடம்பு பூ மாதிரி மணக்கிற ஒரு சின்ன வயசுச் சாமியாரையாவது நிம்மதியா அநுபவிச்சுட்டுச் சாகணும்’னு எனக்கு அப்பத் தோணும்டி கோகிலா.” இதில் சுலபாவின் ‘சப் கான்ஷியன்ஸ் மைண்ட்’ புரிந்தது. அவள் உள் மனத்தில் என்ன அடங்கிக் கிடக்கிறது என்பது கோகிலாவுக்கு ஏற்கெனவே ஒரு தினுசாக விளங்கியிருந்தது. இப்போது அவளே பேசியதும் அது தெளிவாகவே புரிந்தது. இவள் படித்திருந்த பிராய்ட், யுங், ஆட்வர் முதலியவர்களின் கருத்துக்களைக் கொண்டு சுலபாவின் மன நிலையை விளங்கிக் கொள்ள முடிந்தது, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மனநிலைகள், காமம் சம்பந்தமான பழிவாங்கல் உணர்ச்சிகள் மிகவும் விநோதமானவை என்று படித்தும் கேள்விப்பட்டுமிருந்தாள் கோகிலா. அவற்றில் சில நம்பமுடியாதபடி இருந்தன. ஆனால் காரண காரியங்களோடு சிந்திக்கத் தக்கவையாக இருந்தன. சுலபாவின் உள்ளடங்கிய ஆசை எங்கே எப்படி எதில் இருந்தது என்பதைக் கோகிலா மெல்ல மெல்லக் கண்டு பிடித்தாள். அநுமானித்தாள். பரிசுத்தமான கன்னிமை உடலும் அழகுத் தேவதையாகச் சினிமாவில் மின்னப் போகிறோம் என்ற ஆசையுமாகக் கிளம்பி வந்த அவளைப் பீடி வாடை குமட்டும் வாய் நாற்றமும், சிகரெட் நெடி, சாராய வாடை, வியர்வை நாற்றமும் நிறைந்த மனிதர்களின் அழுக்கடைந்த முடை நாற்றமெடுத்த மலிவான படுக்கைகளில் தள்ளிவிடக் காரணமாயிருந்த குப்பையரெட்டியை அவள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் இன்று அவள் இருக்கிற இடமே இண்டிமேட் ரெவ்லான் வாசனையில் மிதந்தது. இதற்கு அடிப்படைக் காரணமே அவள் குமட்டும் நாற்றங்களிலிருந்து மேலெழுந்து வந்தது தான். கோகிலா கேட்டாள்: “உலகின் தலைசிறந்த இங்கிதமான ஆண் வேட்கை பற்றிய கவிதையை நம்மூர் ஆண்டாள்தான் பாடியிருக்கிருள்... தெரியுமோ?” “ஆண்டாள்னா பக்தி மான்களிலே வைத்துப் பேசறது தானே வழக்கம்? நீ இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?” “தான் விரும்புகிற ஆணுக்காகத் தொடுத்து வைத்த மாலையை முதலில் தன்மேல் சூட்டி அழகு பார்ப்பதும் - தான் விரும்புகிற ஆணின் அழகிய உதடுகள் கருப்பூரவாசனை உள்ளவையாயிருக்குமா? தாமரைப்பூ வாசனையுள்ளவையாயி ருக்குமா? இனிப்பாயிருக்குமா? என்றெல்லாம் அந்த வாயில் ஊதப்பட்ட சங்கிடம் விசாரிப்பதும் - காமத்தின் இங்கிதமான வெளிப்பாடல்லவா?” “உன்னை மாதிரி - அதென்ன பிராடா - ஃபிராய்டா என்னமோ அடிக்கடி ஒரு பேரு சொல்லுவியே - அவனைப் படிச்சிருக்கிற பொம்பிளைங்கள்ளாம் ஆண்டாளைப் பத்திப் பேசறதே பாவம்டி கோகிலா...” “‘கருப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ... சொல்லாழி வெண் சங்கே’ன்னு பாடிருக்காளே ஆண்டாள் அதுக்கு வேற என்னடி அர்த்தம்?” “அர்த்தமோ, அனர்த்தமோ எல்லாம் வேண்டாம். ஆனா ரொம்ப அழகாப் பாடியிருக்காடீ! அந்த வரிகளைத் திருப்பி இப்பச் சொன்னால் கூட அதுதான் என் ஆசை டீ கோகிலா!' “என்ன ஆசை...?” “உடம்பில் பச்சைக் கருப்பூரம் மணக்கிற - வாயில் இதழ்களில் ஏலக்காய் வாசனையுள்ள சந்தன நிற மேனிச் சந்தியாசி ஒருத்தனையாவது நம் இஷ்டத்துக்கு அநுபவிச்சிட்டுச் சாகணும்.” “இதில் ஏதோ பெரிய பழிவாங்கல் உணர்வு இருக்கிறது! எல்லா அழகிய பெண்களும் சந்நியாசிகளை - யாருமே அநுபவிக்காத அழகிய இளம் சந்நியாசிகளை வெறியோடு பார்க்கிறார்கள் என்பது ஒரு சைக்காலஜிடீ சுலபா!” “ஆண்களில் எத்தனை பணக் கொழுப்பும் உடல் கொழுப்பும் உள்ளவன் யாருமே தீண்டாத புதுப்பொண்ணு - இளசா வேணும்னு பயித்தியம் பிடிச்சு அலையிறாங்க? உண்டா இல்லியா?” “யாராலும் தொடப்படாத அழகுகள் முதலில் தன்னால் அநுபவிக்கப் படவேண்டுமென்று நினைக்கிற ‘மேனியாக்’குகள் ஆண்களில் தான் உண்டு என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். பெண்களிலும் உண்டு என்று இப்போது புரிகிறதடி சுலபா...” “இருந்தால் என்ன தப்பு? அப்படிப் புதுப் புது மலராக நாடித் தேனுண்ணும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே தனியுரி மையா என்ன?” “நீ பெண்ணுரிமை இயக்கத்தில் இருக்க வேண்டியவள் சுலபா!” “எனக்கு இயக்கம் அது, இது, எல்லாம் புரியாது கோகிலா. ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுப்போமே பாதம்கீர் - அந்த நிறத்திற்குப் பளிரென்று இருக்கிற - பிறந்ததிலேயிருந்து பெண்களையே அநுபவித்திராத ஓர் இளம் சந்நியாசியை அடையும் துடிப்பு என்னுள் இடைவிடாமல் இருக்கிறது. இதைத் தவிர்க்கவோ தணிக்கவோ முடியவில்லை. இது தீயாக உள்ளே கனல்கிறது.” “அவன் உடம்பில் கர்ப்பூரம் மணக்க வேண்டும்! இதழ்களில் ஏலக்காய் சுவைக்க வேண்டும். தோள்களில் சந்தனம் கமகமக்க வேண்டும். அவன் சரீரம் தாமரைப் பூப் போல் இருக்க வேண்டும். இல்லையாடி சுலபா?” “நிச்சயமாக அப்படிச் சில இளம் சந்நியாஸிகளை நானே பார்த்து மோகித்திருக்கிறேன். முற்றிய தேங்காயின் நிறம் போல் கறையே இல்லாத தூய பல் வரிசையால் அவர்கள் சிரிக்கும் போது மோகத்தால் கிறங்கியிருக்கிறேன். ஆண்டாளைப் போல் பாட முடிந்திருந்தால் என் உள்ளுணர்வு களைப் பாட்டாகவே அவர்களுக்கு நானும் எழுதி அனுப்பி யிருக்க முடியும்! என் தாபங்களும் தாகங்களும் அப்படியே மனத்துக்குள் நிற்கின்றன. பாட்டாக வரவில்லை! வேறுவித நெருப்பாய் உள்ளே குழைகிறது.” “எந்த அழகிய துறவியிடமாவது பாதபூஜை - காணிக்கை அது இது என்ற சாக்கில் நீ நெருங்கியிக்கிறாயா? ஜாடைமாடையாகவாவது உன் அந்தரங்கத்தை நீ ஆசைப்படுகிற துறவிக்கு எட்ட விட்டிருக்கிறாயா?” “என் ஆசைகள் ஒருதலைக் காமமாகவே உள்ளடங்கி விட்டன என்பதுதான் உண்மை. கணிசமாய் விரக்தியடையும் நிலைக்கு இந்த ஆசைகள் என்னைத் தள்ளியதுதான் உண்மை.” “நீ ஒரு விநோதமான பெண்ணடீ சுலபா.” “திருடனுக்குக் கன்னக்கோலை ஒளித்து வைக்க இடமில்லாததுபோல் என்னுடைய இந்த அந்தரங்க வேட்கையை நான் யாரிடமும் இதுவரை வெளியிடக்கூட இல்லை. உன்னிடம் தான் ஏற்கெனவே ஒரு தடவை ஜாடையாய்ச் சொன்னேன். இன்று வெட்கத்தை விட்டு வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன். சில பால சந்யாசிகளின் அருகே நிற்கிற போது அவர்கள் மேனியிலிருந்து துளசியும் சந்தனமும் மணப்பது போல் உணர்வேன். திருப்பதியில் போய் வெங்கடசலபதிக்கு முன் கர்ப்பக் கிருகத்தில் தரிசனம் செய்கிற ஒவ்வொரு தடவையும் இப்படி வாசனையை உணர்ந்து என் நினைவுலகச் சந்தியாசியைத் தழுவியணைத்துக் கோவிலில் நினைக்கத் தகாததை எல்லாம் நினைத்துப் பரவசப்படுவேன். எவ்வளவோ முயன்றும் என்னால் இதைத் தவிர்க்க முடியவில்லையடி கோகிலா.” “உன்னை அடையக் கோடீசுவரன்கள் பலர் தவம் கிடக்கிறான்கள். நீயோ ஒரு சுத்தமான இதுவரை பிரம்மசரியம் கெடாத ஒரு புதுச் சாமியார் வேண்டும் என்கிறாய்!” “அது என் ஆசையா அல்லது பழிவாங்கும் வேட்கையா என்று உடனே பிராய்டில் இறங்கிவிடாதே! என்னுள் ஒரு வெறியாகவே கனன்று வரும் விஷயம் இது.” இதற்குப் பதில் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தாள் கோகிலா. சுலபாவின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள், பின்பு நிதானமாக அவளை வினவினாள். “உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்தநாள் வரு கிறதே; அதற்குப் பரிசாக அன்றைய தினம் நீ விரும்புகிற வகையிலான கறைபடாத - புத்தம் புதிய சாமியார் ஒருத்தரை உனக்கு நான் அளித்தால் நீ சந்தோஷப்படுவாயா?” “அது எப்படியடி சாத்தியம்?” “இப்படியெல்லாம் கேள்வி கேட்காதே! உன் அந்தரங்க சிநேகிதியை நம்பு. உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்த நாளில் உனக்குக் கர்ப்பூர வாசனையும், ஏலக்காய் நறுமணமும் சந்தன கமகமப்பும் கிடைக்கும்.” |