15 ஷாம்பைன் பாட்டில் காலியாயிற்று. வழக்கம்போல் சுலபாதான் அதிக ரவுண்டு வந்திருந்தாள், கோகிலாவின் கட்டுப்பாடு சுலபாவிடம் எப்போதும் இருந்ததில்லை. அவள் எதிலுமே அளவாயிருப்பாள். சுலபாவால் அது முடிவதில்லை. எதையோ மறக்க முயல்கையில் அதிகம் குடிக்க நேர்ந்தது. எதையோ பேசத் துணிவதற்கான சூடு உடம்பில் இருக்க அதிகம் குடிக்க முடிந்தது. விருந்தளிப்பவளாக இருந்தாலும், விருந்து ஏற்பவளாக இருந்தாலும் இரண்டிலும் அதிகம் பருகுகிறவள் சுலபாவாகவே இருந்தாள். கீழே படியிறங்கிச் சாப்பாட்டு மேஜைக்குப் போகவே தடுமாறும் போலிருந்தது. “சாப்பிட இன்னும் கொஞ்ச நேரமாகலாமா? உனக்கு ஒன்றும் அவசரமில்லியே? இன்னும் கொஞ்சநாழி பேசிட்டி ருக்கலாமே?” - என்றாள் சுலபா. கோகிலா சம்மதித்தாள், “எனக்கு ஒண்னும் அவசரமே இல்லை! டிரைவர் ப்ராப்ளமும் கிடையாது. நானே ஓட்டிக் கிட்டுப் போகப் போறேன். எங்க வீட்டுக்காரரும் ஊர்ல இல்லே, ஏதோ பிஸினஸ் விஷயமாகக் கல்கத்தா போயிருக் கிறார்.” “நீ சொன்னதை நினைச்சால் கொஞ்சம் பதட்டமா இருக்கே? எப்பிடிடீ முடியும்? ஒரு சாமியாரை இங்கே கூப்பிட்டா ...வருவாங்களா? நாம தேடிக்கிட்டுப் போறதும்... நல்லா இருக்காது...” “நீ இன்னும் அந்த விஷயத்திலேயே இருக்கியா சுலபா?” “ஆசையைத் தூண்டிவிட்டுட்டு இப்படிக் கேள்வி கேட்டா என்னடி அர்த்தம்? நான் கேட்கிறதுக்குப் பொறுமையாப் பதில் சொல்லு... இல்லாட்டி எனக்கு ராத்திரி எல்லாம் தூக்கம் வராது...” கோகிலா சிரித்தாள். கேட்டாள்! “உன்னை நினைச்சு எத்தனையோ ஆம்பிளைங்க ராத்திரி எல்லாம் தூக்கமில்லாமத் தவிக்கிறாங்க! உனக்கு இன்னும் முகம் தெரியாத ஆம்பிளையை நினைச்சு நீயும்தான் தூக்கமில்லாமல் ஒருநாள் தவியேன்! அதிலே என்ன தப்பு.” “என் நிலையில் நீ இருந்தால்தான் என் தவிப்பு உனக்குப் புரியும்டீ கோகிலா.” “இன்னும் சில வாரங்கள் தான் இடையிலிருக்கின்றன. உன் தாபமோ, தாகமோ, தவிப்போ - நீ எப்படி விரும்புகிறாயோ அதை எல்லாம் - ஒன்று சேர்த்து வைத்துக்கொள்! உன் இருபத்தெட்டாவது பிறந்த தினத்தன்று நீ விரும்பிய சுகத்தை உனக்குக் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு.” “பொறுப்பு இருக்கட்டும்! அதில்தான் பல சிக்கல்கள் இருக்கின்றன. இங்கே நரசம்மா கவிதா யாருக்கும் இது பற்றித் தெரியக்கூடாது. இரகசியமாக இது நடக்கணும்.” “இதெல்லாம் படிச்சுப் படிச்சு நீ சொல்லணுமாடீ சுலபா? நான் பார்த்துக்கிறேன். எங்கிட்ட விட்டுடு. எனக்கு உன் தோது தெரியும்.” தன் சிநேகிதியிடம் இந்த அந்தரங்கத்தைத் தான் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டு சொல்லியிருக்கக் கூடாதோ என்று சுலபா இப்போது இரண்டாவது எண்ணமாக யோசித்துத் தயங்கினாள்; இவள் ஒன்று கிடக்க ஒன்று செய்து அவமானமாகவோ, தலைக் குனிவாகவோ முடிந்துவிடக் கூடாதே என்று பயமாகவும் இருந்தது, அதே சமயம் கோகிலாவின் திறமையை ஒரேயடியாகக் குறைத்து மதிப்பிடவும் மனசு இடம் கொடுக்கவில்லை. வர்த்தகர்கள், சந்நியாசிகள், அரசியல்வாதிகள், எல்லாத் தரப்பிலும் கோகிலாவுக்கு நல்ல பரிச்சயம் உண்டு என்பதைச் சுலபா அறிவாள். ஏதாவது தாறுமாறாக முடிந்து வெறும்வாயை மெல்லும் பத்திரிகைகளுக்குக் கிசுகிசு அவல் கிடைத்து, “சாமியாருக்கு வலைவிரித்து நடிகை சுலபா ஏமாந்தாள்” என்று கிண்டல் செய்தி ஆகிவிடக் கூடாதே என்று தான் அவள் பயந்தாள். ஒவ்வொரு நிபந்தனையாகக் கோகிலாவிடம் கூறினாள். “அந்த சந்தியாசிக்கு நான் யாரென்றே தெரிய வேண்டிய அவசியமில்லை கோகிலா! கூடியவரை லெளகீக உலகின் தொடர்புகளே அற்ற நைஷ்டிக பிரம்மசாரியாயிருந்தால் நல்லது! என் புகழும் பழியும் அவருக்குத் தெரிய வேண்டியதில்லை.” “சினிமாவுக்கும் தியேட்டருக்கும் போகாத சந்நியாசி என்றே வைத்துக் கொண்டாலும் கூட மூலைமுடுக்கு எல்லாம் வீடியோ உள்ள இந்த நாளில் உன்னை யாரென்று தெரியாத சாமியாரா இல்லையா என்று கண்டு பிடிப்பது சிரமம்.” “தெரிந்தால் என்னை வெறுத்து ஒதுக்கி விடலாம். சே. என்று கேவலமாக நினைக்கலாம். எச்சிற்பண்டம் என ஒதுக்க நினைக்கலாம்! ஒரு சாமியாருக்கு என் அழகு மட்டும் போதாதே?” “பழங்களில் அணிற்கடித்த எச்சில் ரொம்ப விசேஷம் என்று சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள்! நீ அப்படி ருசியானவள் சுலபா.” “பழங்களுக்கு அது சரியாயிருக்கலாம். மனிதர்களுக்கு ஒத்து வராது. அணில் கடித்த பழமும் நாமும் ஒன்றாகி விட முடியாது கோகிலா” “உனக்குத் தெரியாது சுலபா சில பேருக்கு அணில் கடித்த பழங்கள் தான் ரொம்பப் பிடிக்கும்.” மீண்டும் திரும்பத் திரும்பத் தோழி கோகிலா இப்படியே ஒப்பிட்டது சுலபாவுக்குப் பிடிக்கவில்லை. குற்றமுள்ள மனசு குறுகுறுப்பது போல் உள்ளே குறுகுறுத்தாலும் தன்னைக் குத்திக் காட்டும் உள் நோக்குடன் கோகிலா பேசியிருக்க மாட்டாள் என்று சுலபா நன்றாக அறிந்திருந்தாள். எந்த ஓர் இளம் பெண்ணும் இன்னோர் இளம் பெண்ணுக்குச் செய்து தரக்கூடும் என்று கற்பனையில் கூட எதிர்பார்க்க முடியாத உதவியைத் தனக்கு வலுவில் முன் வந்து செய்யத் துணிந்திருக்கும் கோகிலாவின் செயலில் குறை காண முயலக் கூடாது என்று தன் மனத்தையே அப்போது சுலபா கடிந்து கொண்டாள். மேனியில் பொன் நிறம் ஒளிரும் சந்தனமும் பச்சைக் கருப்பூரமும் மணக்கக் கூடிய - ஊளைச் சதையில்லாத செதுக்கி எடுத்தது போல வைரம் பாய்ந்த ஒரு வசீகரமான பிரம்மசாரியை - பெண் என்றால் என்ன என்று முதல் முதலாக இவள் மூலமே அறியப் போகிற ஒரு பிரம்மசாரியை - அந்த அநுபவத்தின் எல்லா த்ரில்களுடனும், கிக்குகளுடனும் அடையப் போகிறோம் என்ற உணர்வு நினைக்கும் போதே சுலபாவைப் புல்லரிக்கச் செய்தது. கடந்த காலத்தில் அழகற்ற அருவருப்பான வியர்வையும், பீடி, சிகரெட்டும் நாறுகிற குரூரமான பல ஆண் உடம்புகளை வியாபார ரீதியாகத் தான் மகிழாமல் மிஷின்போல அவள் மகிழச் செய்திருந்தாள், அதன் விளைவு இன்று நாற்றமும், வியர்வையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. சுத்தமும் நறுமணமுமே அவளுடைய இன்றைய இலட்சியங்களாயிருந்தன. அழுக்கடைந்து கசங்கிய ரூபாய் நோட்டுக்களை வைக்க வேறு இடமின்றி ஜாக்கெட்டுக்குள்ளும் இடுப்பிலும் வாங்கிச் சொருகி மேலும் அழுக்கடையச் செய்த பழைய நாட்கள் குமட்டிய காரணத்தால் இன்று புத்தம் புதுச் சலவை நோட்டுக்களை மட்டுமே அவள் கைகளால் தீண்டினாள். பரிசுத்தத்தை அநுபவித்து அழுக்குகளைப் பழிவாங்க விரும்பினாள். நறுமணங்களை நுகர்ந்து துர்நாற்றங்களை மறக்க விரும்பினள். வீட்டில் ஏ.சி. அறைகள் மணமாக இருக்கக் கூடப் பம்பாயிலிருந்து வாசனையை இதமாக ஸ்பிரே செய்யும் ஒரு சிறிய அழகான எலெக்ட்ரிக் கைமிஷன் வாங்கி வைத்திருந்தாள். “சுலபா என்றால் சுகமான நறுமணம். சுலபா என்றால் சுத்தம். சுலபா என்றால் நறுவிசான துல்லியமான பழக்க வழக்கங்கள். சுலபா என்றால் கவர்ச்சி” என்று பேரெடுத்திருந்தாள் அவள். இதை எல்லாம் கூர்ந்து கவனித்திருந்த தயாரிப்பாளர்கள் அவளுக்கு ரொக்கம் கொண்டு வந்தால் கூட உயர்ரக செண்ட் தெளித்துப் புத்தம் புதிய நோட்டுக் கட்டுக்களாகக் கொண்டு வந்து கொடுக்கப் பழகியிருந்தனர். ஸெட்டில் காபி, குளிர்பானம், பாதாம்கீர் கொண்டு வருகிற போது - கொண்டு வருகிற பையன், அவன் உடை, கொண்டு வருகிற கிளாஸ் எல்லாமே சுத்தமாயிருக்க வேண்டும். இவளைத் திருப்திப்படுத்த என்றே எஸ்.பி.எஸ் பாலக்காட்டிலிருந்து நல்ல நிறமுள்ள சுத்தமான பழக்க வழக்கமுள்ள ஒரு நாயர்ப் பையனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். “அவங்களுக்குப் பசங்க நீட்டா ஜம்முனு இருக்கணும்ப்பா. இல்லாட்டி கிளாஸை அப்படியே மூஞ்சியிலே கிடாசிடுவாங்க” - என்று புரொடக்ஷன் மேனேஜரிடம் அடிக்கடி எஸ்.பி.எஸ். சுலபாவுக்காக அக்கறை எடுத்துக் கொண்டு பேசுவார். ஒரு தேவதையை வழிபடுவது போல் தயாரிப்பாளர்கள் அவளை வழிபட்டனர். அவளைப் பிரார்த்தித்தனர். வரம் வேண்டினர், மன்றாடினர். நைவேத்தியம் செய்தனர். அரைத்தச் சந்தன நிறம்தான் அவளுக்கு மிகவும் பிடித்த நிறம். வெளிர் நிறங்களில் தங்கமும் பாதாம் கீரின் வண்ணமும் அவளுக்கு மிக மிகப் பிடித்தமானவை. முதல் முதலாக அவளை ஏமாற்றிவிட்டு ஓடிய குப்பையரெட்டி கூட அந்த நிறம்தான். பாதாம்கீரைக் கையில் பிடித்தபடியே சுலபா அதன் நிறத்தில் என்னென்னவோ ஞாபகங்கள் வந்து அப்படியே இலயித்துப் போய் உட்கார்ந்து விடுவாள் சில சமயங்களில். பருகி முடித்து விட்டால் அந்த நிறத்தைப் பார்த்து இரசிக்க முடியாதே என்று அப்படியே இலயித்துப் போய்ப் பிரமை பிடித்தவள் போல அதை நோக்கியபடி அவள் உட்கார்ந்து விடுகிற மர்மத்தை நரசம்மாவினால் கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. “அம்மாவுக்குப் பாதாம்கீர்னா ரொம்பப் பிடிக்கும்” - என்று மட்டும் வேலையாட்கள் ஸ்டூடியோ பணி யாட்கள் அதைப் புரிந்து கொண்டிருந்தனர். கலப்படமில்லாத ஸ்வர்ணத் தாம்பாளத்தில் அங்கங்கே அடர்த்தியாக அரைக் கீரை விதையைத் தூவினாற்போல் மயிரடர்ந்த இளம் துறவி களின் பரந்த மார்பும், புஜங்களும் அவள் உள்ளத்தைக் கிறங் கச் செய்பவை. ஒருநாள் நல்ல போதையில் தன் அந்தரங்கத் தில் சிறிதும் மறைக்காமல் “அப்படித் தங்கத் தாம்பாளம் போன்ற மார்பையும் முற்றிய மூங்கிங் போல ஒளிமின்னும் புஜங்களையும் பிளேட்டில் இருக்கிற பாதாம் அல்வாவைச் சாப்பிடுவது போல் சாப்பிட வேண்டும்டி கோகிலா” என்று சுலபா வர்ணித்த அடங்காத வெறியைக் கேட்டுக் கோகிலா அவளைக் கிண்டல் கூடச் செய்திருக்கிறாள். “வர வர நீ கன்னி பால்ஸ் - மாதிரிப் பேச ஆரம்பிச்சிட்டேடீ சுலபா!” “கன்னி பால்ஸ்... அப்டின்னா என்னடி அர்த்தம் கோகிலா...” “நரமாமிச பட்சிணிகள்னு அர்த்தம்...” “நரர்கள்னா அதுலே ஆண் பொண் எல்லாமே அடங்குமே, நான் சொல்றது அழகிய சுந்தரமான தேஜஸ் நிறைந்த ஆண்களை மட்டும் தானடி!” “நீ தேர்ந்தெடுத்த நரமாமிச பட்சிணி! உனக்கு அதுவே சாய்ஸ் இருக்கு. ‘கஜாரண்ய சுவாமி’ மாதிரி யாரையும் மோகிக்கச் செய்கிற ஓர் அழகிய இளம் சாமியார் உன் போன்றவர்களிடம் தனியே சிக்கினால் என்ன ஆவாரோ? பாவம்!” மன்மதனைப் போல் அழகுள்ள கஜாரண்ய சுவாமிகளின் பெயரைக் கோகிலா சொன்னவுடன் தேஜஸ்வியான அந்த அழகரின் முகமும் பரந்த இறுகிய மார்பும் புஜங்களும் நினைவு வந்து அவள் அப்படியே சொக்கிப் போய்ச் சித்தப் பிரமை பிடித்தவள் போல அமர்ந்து விட்டாள். “சந்தேகமே இல்லை! நீ ஒரு மேனியாக் தான்.” “மேனியாக்னா...?” சுலபாவுக்கு அந்த வார்த்தையைக் கோகிலா விளக்கி விவரித்தாள். உடன் சுலபாவிடமிருந்து பதில் வந்தது. “இந்த கஜாரண்ய சுவாமிகள் மாதிரித் தேஜஸ்வியான சுந்தரபுருஷனை அநுபவிக்க முடியும்னா - அநுபவிச்சிட்டு அதுக்கு விலையா என் சொத்துச் சுகம் எல்லாத்தையும் ஈடு கொடுக்கக் கூட நான் தயார்.” “‘நீ நரகத்துக்குத் தான் போவாய்’ என்று அவரது பக்தர்கள் உன்னைச் சபிப்பார்கள்.” “அந்தப் பேரழகை ஒருமுறை அநுபவிப்பதே சுவர்க்கமாக இருக்கும். அப்படி அநுபவம் கிடைத்துவிட்டால் அதன் பிறகு நரகத்துக்குப் போகக் கூட நான் தயார்.” “எல்லா ஆசாபாசங்களையும் மோக முனைப்புக்களையும், ஜெயித்துவிட்டுச் சிரிக்கிற ஒரு துறவியின் மேல் நீ மோகம் கொள்கிறாய்!” “பலரை ஜெயித்தவனை ஜெயிப்பது தான் சுகம்! தோற்றவர்களை ஜெயிப்பதில் ஜெயம் எங்கே இருக்கிறது?” “ஸோ எல்லாவற்றையும் - எல்லாரையும் வென்ற ஒருவன் உனக்குத் தோற்க வேண்டும்! ரொம்பத்தான் பேராசைக்காரிடீ நீ! உன் பேராசை விநோதமானதுதான்.” எப்போதோ நடந்திருந்த இந்தப் பழைய உரையாடலிலிருந்தும் இதில் உதாரணமாக இடம்பெற்ற கஜாரண்ய சுவாமி என்ற பேரழகரின் உருவத்திலிருந்தும் சுலபாவின் கனவிலுள்ள பரிசுத்தமான ஆணழகு எது என்பதைக் கோகிலா அநுமானமாகவும், பேரளவு சரியாகவும் புரிந்து கொண்டிருந் தாள். இது அவளுக்கு நினைவிருந்தது. கோகிலா பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது இரவு ஒருமணி. “கவலைப்படாதே! உன்னைத் தயாராக்கிக் கொள்! உன் இருபத்தெட்டாவது பிறந்த நாளன்று கஜாரண்ய யோகி மாதிரி ஒருவரிடம் உன்னைத் தனியே கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பி விடுவேன் என்று நம்பிக்கையாக இரு! உனக்கு அப்படி ஒரு தனிமையில் அப்படி ஒரு பேரழகுடன் பன்னிரண்டு மணி நேரம் தங்க ஏற்பாடு செய்து விடுகிறேன். அதன் பின் உன் சாமர்த்தியம். பாதாம் அல்வாவை பிளேட்டில் முன்னால் வைத்து விடுகிறேன். சாப்பிடுவதும், ருசிப்பதும் ருசிக்காததும், பயன்படுத்திக் கொள்வதும் பயன்படுத்தாமல் போவதும் எல்லாம் உன் பாடு, விஷ் யூ குட்லக்” என்று உற்சாகமாக வாக்குறுதியளித்து விடை பெற்ற கோகிலா விடம் விவரமாக எல்லாம் சொல்லுமாறு தூண்டித் துருவினாள் சுலபா. “உரிய சமயத்தில் எங்கே எப்படி யார் என்பதெல்லாம் கூறப்படும்” என்று பூடகமாகப் பதில் கூறிவிட்டுப் போய்ச் சேர்ந்தாள் கோகிலா. சுலபாவின் இருபத்தெட்டாவது பிறந்த நாள் வர இன்னும் மூன்றே நாட்கள் தான் இருந்தன. அது ஒரு வெள்ளிக்கிழமையாகப் பார்த்து வந்தது. பிறந்த நாள் என்பதே கோகிலாவுக்கு மட்டும் தான் தெரிவிக்கப் பட்டிருந்தது. “சொந்த விஷயமாகக் கோகிலாவும் நானும் சில காரியங்கள் கவனிக்க வேண்டியிருக்கு. வர்ர வியாழன், வெள்ளி, சனி மூணு நாளும் ஃபரீயா வை” என்று கவிதாவிடம் சொல்லி விட்டாள் சுலபா. அவளும் குறித்துக் கொண்டாயிற்று. தான் பிறந்த பிறவிலேயே மிச்சமிருக்கும் ஒரே ஆனந்தம் என்று சுலபா நினைத்த வெள்ளிக்கு முன்பாக ஒரு நாளும், பின்பாக ஒரு நாளும் சேர்த்தே சொல்லியிருந்தாள். செவ்வாய்க்கிழமை காலையில் கோகிலா ஃபோன் செய்தாள்: “சுலபா! உன் விஷயமாக இன்று போகிறேன். அநேக மாக வெற்றியோடு திரும்புவேன்.” “எங்கேயடீ போகிறாய்? எப்போது திரும்புவாய்?” “எங்கே என்பதெல்லாம் வந்து சொல்கிறேன். அநேகமாக இன்று மாலை அல்லது இரவில் திரும்புவேன். உன்னுடைய வர்ணனைப்படி சாமுத்ரிகா லட்சணமுள்ள ஓர் இளம் சாமியாரைக் கண்டு பிடிச்சாச்சு, அவர் உன்னைச் சந்திக்குப்படி செய்யணும், அதுக்காகத்தான் போய்க்கிட்டிருக்கேன்.” “ரொம்ப தூரமோடீ கோகிலா?” “கொஞ்சம் தூரம்தான், வந்து சொல்றேன் எல்லாம்.” கோகிலாவின் பக்கமாக ஃபோன் வைக்கப்பட்டு விட்டது. இவளை மேலும் தொண தொணக்க விடாமல் ஃபோனை அவளே வைத்து விட்டாள். இவளுக்கானால் இங்கே மனசும் உடம்பும் நிலை கொள்ளவில்லை. பரபரத்தன. உடனே ஆகாயத்தில் பறக்க வேண்டும் போலவும், கடலில் முக்குளிக்க வேண்டும் போலவும் தோன்றியது. சுற்றி இருந்த எல்லாமும், எல்லாரும் சின்னதாய்க் குறுகிப் போனாற் போலிருந்தது. தன் அழகைக் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டாள். நடிப்பதற்காக வசனம் பேசித் தன் முகபாவத்தைத் தானே சரி பார்த்துப் பழகும் விசேஷ முழுநீள பெல்ஜியம் கண்ணாடி அது. உணர்ச்சிகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும். குளியலறையிலும் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. குளிக்கும் போது பசு வெண்ணெயைத் திரட்டித் திரட்டிச் செய்தது போன்ற மிருதுவான தன் தந்த நிற முழு உடம்பை - அந்நியமான அந்த யாரோ ஒரு சந்தியாசியின் பார்வையில் அது எப்படித் தோன்றும். எவ்வாறு படும் என்கிற எண்ணத்தோடு பார்ப்பதை அவளால் அன்று தவிர்க்க முடியவில்லை. அணிந்து புனைந்து அலங்காரங்களுடன் அந்தப் புதியவருக்கு எப்படித் தோற்றமளிப்போம் என்பதை வெளியே உள்ள கண்ணாடியில் பார்த்தாயிற்று, திருப்திகரமான விடையும் பெற்றாயிற்று. அணியாமல், புனையாமல் - அணிகளையும், புனைவுகளையும் கழற்றிய ‘கைபுனைந்தியற்றாக்'கவின் பெறுவனப்பில் எப்படித் தெரிவோம் என்பதை இங்கே குளியலறையிலே பார்த்தாயிற்று. உறுதி செய்து கொண்டும் ஆயிற்று. இப்படி எல்லாம் தன்னை அந்நியமாக ஆக்கி அந்நியனுடைய பார்வையிலே எப்படி அழகாயிருப்போம் என்று சமீப காலமாக அவள் பார்த்துக் கொண்டதே இல்லை. இப்படி யாரையும் புதிதாகக் கவர வேண்டிய அவசியமே அவளுக்கு ஏற்பட்டதில்லை. நீண்ட காலத்துக்குப் பின் இந்த ‘ரிஹர்சல்’ அவளுக்குத் தேவைப்பட்டது. அநுராக செளந்தரிய ஒத்திகையை இன்று தனக்குத் தானே அவள் செய்து பார்த்துக் கொண்டாள். ஒரு படை எடுப்புக்கு முன் படைகளையும், ஆயுதங்களையும் சரிபார்க்கிற படைத்தலைவனுடைய நிலையில் இன்று இவள் இருந்தாள். புலன்களிலும், ருசிகளிலும் அவ்வப் போது தோற்கும் சராசரி மனிதர்களுக்கான படை எடுப்பில்லை இது. புலன்களை வென்றவர்களைத் தோல்விக்கு அழைக்கும் புதிய படை எடுப்பு இது. கோகிலாவிடம் சுலபாவே சொல்லியது போல் - இது தோற்றவர்களை வெல்லும் முயற்சியில்லை. வென்றவர்களைத் தோற்கச் செய்யும் முயற்சி. ஆகவே அவள் தன் அழகு என்ற இயற்கை அரணையும் புனைவுகள் என்ற சாதனங்களையும் சரி பார்த்து வைத்துக் கொண்டாள். எல்லாப் படைகளையும் வெல்வதற்கு ஆயத்தப்படுத்தி வைத்துக் கொண்டாள். “காதலில்... காமத்தில், சந்தோஷம் அடைய வேண்டுமானால் நன்றாகத் தோற்க வேண்டியிருக்கும்” - என்று கோகிலா சொல்லியிருந்தது நினைவு வந்தது. கோகிலா காதலிலும் பக்தியிலும் எந்தத் தரப்பில் ஆணவமும் தன் முனைப்பும் விஞ்சி நிற்கிறதோ அந்தத் தரப்புத் தோற்றுவிடுகிறது என்கிறாள். தோற்கிற வெற்றி எது? வெல்கிற தோல்வி எது? என்பது பற்றிக் கோகிலாவின் விளக்கங்கள் சுலபாவுக்குப் புதுமையாகவும் புரியாதவையாக வும் இருந்தன. வருகிற வெள்ளிக்கிழமையன்று தானே வெல்லப்போவது போல் முயன்றாள் சுலபா. ஆனால் தோற்கப் போவது போல் உணர்ந்தாள். உணர்வும் செயலும் முரண் பட்டன. ஒரு வேளை இந்த விவகாரத்தில் கோகிலா சொல்லு வது போல் தோற்பது தான் வெற்றியோ என்று எண்ணவும் தோன்றியது இவளுக்கு. பிற்பகல் கழிந்தது. மாலையும் வந்தது. இரவு எட்டு மணிக்குத்தான் கோகிலாவிடமிருந்து அவள் எதிர்பார்த்த டெலிஃபோன் கால் வந்தது. “என்னடீ ஆச்சு?” “நேரிலே இதோ அங்கே புறப்பட்டு வந்துக்கிட்டே இருக்கேன்.” “காயா? பழமா?” “ஏறக்குறையப் பழம்தான்... நேரே வந்து எல்லாம் விவரமாச் சொல்றேன்.” இருபது நிமிஷத்தில் கோகிலா நேரில் வந்து சேர்ந்தாள். சுலபா கேட்காமல் அவளே திட்டத்தை விவரித்தாள். வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் ஆவல் பரபரக்கும் மனநிலையோடு செவிமடுத்தாள் சுலபா. “காரியத்தை ஏறக்குறைய நமக்குச் சாதகமான எல்லை வரை கொண்டு வந்திருக்கேன். மத்தது உன் சாமர்த்தியம்.” “அப்பிடீன்னா...? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன். எனக்குப் புரியலியே?” “விவரமாச் சொல்றேன். குறுக்கே பேசாமக் கேட்டுக்கோ! வெள்ளிக் கிழமை காலம்பர நாம ரெண்டு பேரும் எங்க ஏ.சி. பென்ஸ் காரில் திருப்பதி போறோம். திருப்பதியிலே சகஸ்ரகலசாபிஷேகம் பண்ணிப் பெருமாளைத் தரிசனம் பண்ணிட்டுப் பகல் மூணு மணிவரை அங்கே ஒய்வு எடுக்கிறோம். அப்புறம் அங்கிருந்து மதனபள்ளி போற ரோட்டிலே ரிஷி வேலிக்கு முன்னாடி இருக்கிற ‘திவ்ய சேவாசிரமம்’ என்கிற ஆசிரமத்துக்குப் போகிறோம். அந்த ஆசிரமம் ஒரு காட்டாற்றின் கரையில் முந்நூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய மாந்தோப்புக்குள் குளு குளு என்று அமைந்திருக்கிறது. குளு குளு என்றிருக்கும் அதன் சூழ்நிலையே மிகவும் ரம்மியமானது. அதிலே இளம் வயதில் பலவிதமாகச் சீரழிந்து வாழ்வை இழந்து வழி தவறிய பெண்களுக்கு மறுவாழ்வு அளித்துக் கல்வி தொழிற்பயிற்சி எல்லாம் தரும் நிலையங்கள் உள்ளன, இன்னொரு பகுதியில் அதை நடத்தும் திவ்யானந்தர் என்ற அழகிய துறவியின் ஆசிரமம் ஆற்றங்கரையில் ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்தத் திவ்யானந்தர் பேரழகன். உன் கனவுகளில் நிரம்பியிருக்கும் எல்லா செளந்தரியங்களும் நிறைந்த சுந்தரபுருஷன். தூய பல் வரிசை மின்ன வெண்முத்துப் போல் சிரிக்கிறார். கொழுந்துவிட்டு எரியும் அக்னிபோல மேனிநிறம். பக்கத்தில் நின்றால் வா வா என்று இழுக்கும் மல்லிகைப்பூ மணக்கிற சரீரம். ஒளி உமிழும் காந்தக் கண்கள். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னல் ஏற்பாடு செய்ய முடியவில்லை. வழிதவறுகிற இளம் பெண்களுக்குப் புத்திமதி கூறும் அவரிடம் உன்னைக் கொண்டுபோய் நெருங்க வைப்பது சுலபம். வேறு விவரங்களை ஒரு துறவியிடம் பச்சையாகப் பேரம் பேசி முடிப்பது சிரமம் என்பதால், “என் சிநேகிதி ஒருத்தி உங்கள் புத்திமதிகளைக் கேட்க விரும்புகிறாள் சுவாமி! நிரம்ப வசதியுள்ள பணக்காரி - இந்த ஆசிரமத்துக்கு லட்ச லட்சமாக உதவக் கூட அவளால் முடியும். பகலில் இங்கு வரவும் உங்களிடம் பேசவும் கூச்சப்படுகிறாள். தயங்குகிறாள். உங்களுடன் தங்கிப் பேசினால் அவள் திருந்தி மனம் மாறக் கூடும். வெள்ளியன்று மாலை அவளை இங்கே அழைத்து வருகிறேன். மறுநாள் அதிகாலையில் நானே திரும்ப வந்து அவளைக் கூட்டிக் கொண்டு போய் விடுவேன். உங்கள் அருட் பார்வையில் அவள் திருந்தி விடுவாள் என்பது என் நம்பிக்கை” என்றேன். நான் கூறியதைக் கேட்டு அவர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் நானே மயங்கிச் சொக்கிப் போனேன். “அவள் பகலில் வந்தால் என்ன? இதில் ஒளிவு மறைவு எதற்கு?” என்று கேட்டார். “பெரிய வசதியுள்ள குடும்பத்து யுவதி! பகலில் வழுக்கி விழுந்தோரைத் திருத்தி வாழ்வு தரும் இந்த ஆசிரமத்திற்குத் தேடி வரக் கூச்சப்படுகிறாள் சுவாமீ! உங்களைப் போல் ஒரு மகானுக்கு அருள்புரிய எந்த நேரமானால் என்ன? நீங்கள்தான் பெரிய மனசு பண்ணி அவளைத் திருத்த வேணும்” என்றேன். வேண்டியபடியே “சரி! அழைத்து வா!” - என்றார் திவ்யானந்தர்.” சுலபா கோபமாகக் குறுக்கிட்டாள். “மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல இப்படி ஏற்பாடு பண்ணி விட்டு வந்திருக்கியேடீ கோகிலா! விடிய விடிய உட்கார்த்தி எனக்கு உபதேசம் பண்ணிக் காலையில் விபூதி குங்குமம் கொடுத்துத் திருப்பி அனுப்பிவிடப் போகிறார்.” “அதுவரை உன் சாமர்த்தியங்கள் எங்கேடி போயிருக்கும்? பிறந்ததிலிருந்து புலன்களை அடக்கிய ஓர் இளம் வயதுச் சாமியாருடன் கிறங்க அடிக்கும் போதையூட்டுகிற பேரழகுள்ள நீ ஓரிரவு தனியே விடப்படப் போகிறாய், வேறு யாரும் உங்கள் இருவரைத் தவிர அங்கு இருக்கப் போவதில்லை. பன்னிரண்டு மணி நேரம் உபதேசம் கேட்கிற அளவு படுமந்தமானவளாடி நீ?” “என்ன என்ன செய்யச் சொல்கிறாய்?” “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை! தண்ணீரில் தூக்கிப் போட்டபின் இப்படித்தான் நீந்தணும்னு மீன் குஞ்சுக்கு யாரும் சொல்லித்தர மாட்டார்கள் சுலபா.” “பாதிக் கிணறு தாண்டின மாதிரி ஏற்பாடு பண்ணிவிட்டு வந்திருக்கிறாய்?” “ரொம்ப டெலிகேட்டான விஷயம் இது! என்னைப்போல ஒரு பெண் உன்னைப் போல ஒரு பெண்ணுக்கு இது வரைதான் ஏற்பாடு பண்ண முடியும் இந்த விஷயத்தில். என் கணவர் எத்தனையோ வியாபார நண்பர்களுக்கு ஹோட்டல் - ஹோஸ்டஸ் - எல்லாம் ஃபோனிலேயே ஏற்பாடு பண்ணிப் பேசறப்போ நானே கேட்டிருக்கேன். அது ஈஸி. வசதியுள்ள ஆண்களுக்கு உபசரணைப் பெண்கள் அரேஞ்ஜ் பண்றது சுலபம். வசதியுள்ள உன் போன்ற ஒரு பெண்ணுக்கு நீ சொல்கிற வர்ணனைகளுக்கு உட்பட்ட ஓர் ஆண்மகனை ஏற்பாடு செய்யிறதுங்கிறது முடியாத காரியம். விபரீதமான முயற்சியும் கூட. அதனால் என்னமோ சொல்லி எப்படியோ பேசி உள்ளே நுழைந்து அந்தத் திவ்ய சேவாசிரமத்துக்கு ஐயாயிரம் ரூபாய் டொனேஷன் வேறு தந்து நான் என் மேல் நம்பிக்கை வரச் செய்ய வேண்டியிருந்ததடி சுலபா. என் மேலும் நான் சொன்ன ஏற்பாட்டின் மேலும் சந்தேகமே ஏற்படாமல் பெருந்தன்மையாக அந்தத் திவ்யானந்தர் ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். வெறும் படத்தில் சிரிக்கிற சிரிப்பு ஆடுகிற ஆட்டம், தோன்றுகிற தோற்றத்தின் மூலமே பல லட்சம் மக்களை மயங்க அடித்துப் பைத்தியமாக்கியிருக்கிற நீ பெண் வாடையே படாமல் வறண்டு - காய்ந்து போயிருக்கிற ஒரு சாமியாரை வசப்படுத்துகிற வேலை கூட மீதமில்லாமல் நீ அங்கே போன வுடன் தயாராகச் சொம்பிலிருந்து தண்ணிர் படுகிற மாதிரி, முடியணும்னு நெனச்சா நான் ஒண்ணுமே பண்ண முடி யாதுடி!” “நீயே இப்படித் தயங்கினால் நான் என்னடி பண்ணுவேன் கோகிலா!” “மேயப் போகிற மாட்டுக்குக் கொம்பிலே புல்லைக் கட்டி விடமுடியாது என்பார்கள்...” “நான் மாடா?” “இல்லை பசு? காளையைத் தேடிப் போகிறாய். தேடி வருகிற பசுவைப் பெரும்பாலும் காளை கைவிடுவதில்லை.” கோகிலா கிண்டல் செய்கிறாளோ என்று பட்டது சுலபாவுக்கு பதில் சொல்லாமல் இருந்தாள். கோகிலாவே மேலும் பேசலானாள்: “உன் சக்தி உனக்குத் தெரியாதுடீ சுலபா! விசுவாமித்திர முனிவனே மேனகையிடம் மயங்கிப் பல்லிளித்திருக்கிறான். திவ்யானந்தர் உன்னிடம் எந்த மாத்திரம்? உன் அழகுக்கு இந்தச் சாமியார் ஒரு சவால் என்று நினைத்துக் கொண்டு போ. உன்னல் அவரை ஜெயிக்க முடியும்.” “ஜெயிப்பதில் சந்தோஷமில்லை என்று நீயே சொல்லியிருக்கிருய்!” “இந்தமாதிரி ஓர் ஆண்பிள்ளையை ஜெயிப்பதே அவனிடம் எல்லாவற்றையும் தோற்பதற்குத் தானே?" பணம் ஏதாவது கொண்டு போக வேண்டுமா?” “கொண்டுபோனால் தப்பில்லை! நல்ல காரியம் செய்கிறார். ரொக்கம் தான் வேண்டும் என்பதில்லை. ‘செக்’காகவே தரலாம். இன்கம்டாக்ஸ் விலக்கு உத்தரவுகூட வாங்கியிருக்கிறார்.” “நானும் டொனேஷன் தரத்தான் போகிறேன். எவ்வளவு என்று அங்கே போன பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் கோகிலா!” “உன்னையே இழக்கப் போகிறாய்! பணத்தை இழப்பதா பெரிய காரியம்?” |