6

     அதே போலப் பாரிஸில் ஈஃபில் டவர் அருகேயும் வார் ஸெயில்ஸ் அரண்மனை முகப்பிலும் படப்பிடிப்புக்கள் இருந்தன. பாரிஸில் இருந்தபோது ஒரே ஒரு நாள் ஆடிட்டரும், சுலபாவும் தலைமறைவானர்கள். காலை ஆறு மணிக்கே புறப்பட்டு ‘ஜூரிச்’ போனார்கள். அன்று முழுவதும் ஜூரிச்சில் கழித்தார்கள். பாரிஸிலிருந்து ஆடிட்டர் கனக சபாபதியின் உறவினர் ஒருத்தர் முந்திய தினமே ஜூரிச் சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு இவர்களை விமான நிலையத்துக்கு வந்து அழைத்துப் போனார். ‘ஸ்விஸ் பாங்க்’ கணக்கு விவகாரத்தை முடித்துக் கொடுத்தார். பிற்பகலுக்குள் அந்த வேலை முடிந்து விட்டது. பிற்பகலுக்கு மேல் அங்கிருந்து ஜெனிவாவுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்து விட்டு மறுநாள் காலை ஜெனிவாவிலிருந்து பாரிஸ் திரும்பினர்கள்.

     இந்தியாவில் இந்த மாதிரி அவள் இஷ்டம் போல் சுற்ற முடியாது. படிப்பிடிப்பு என்றால் அது கிராமமாயிருந்தாலும் நகரமாயிருந்தாலும் கூட்டம் கூடிவிடும். இங்கே பாரிஸில் படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக் கொண்டு நின்றாலும், நீச்சல் உடையில் நடுத்தெருவில் நின்றாலும் சீந்துவாரில்லை. யாரென்றோ ஏனென்றோ பார்ப்பவர்கள் இல்லை, விசாரிப்பவர்கள் இல்லை. இப்படிக் கவனிக்கப்படாமலும் விசாரிக்கப்படாமலும், வியக்கப்படாமலும் இருந்ததில் நிம்மதி என்று இவர்களே சொல்லிக் கொண்டாலும் உள்ளூற ஆதங்கமாகத்தான் இருந்தது. ‘டேய் சுலபா டோய்!’ - என்று காணாததைக் கண்டுவிட்ட மாதிரித் துரத்திக் கொண்டு ஓடிவரும் பாமரக் கூட்டம் இல்லாததில் உள்ளே ஏக்கமாக இருந்தாலும் வாய் என்னவோ, ‘இங்கே ரொம்ப ஃப்ரீயா இருக்கு, ரசிகர்களோட டிஸ்டர்பன்ஸே இல்லை’- என்று சொல்லி மகிழ்வது போலப் பாசாங்கு செய்தது. சுற்றி இருப்பவர்களுக்குத் தங்களை யாரென்றே தெரியவில்லை. தாங்கள் யாரென்று அவர்கள் கவலைப்படவும் இல்லை என்பது ஊமைக் காயமாக உள்ளே வலிக்கத்தான் செய்தது. தங்களை வியந்து தொழாதவர்கள் மத்தியில் தாங்கள் இருக்கிறோம் என்பதைச் சிரமப்பட்டுத்தான் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. யாரும் ‘ஆட்டோ கிராப்’ கேட்கவில்லை. பொது இடங்களில் ஷூட்டிங் நடப்பதுகூட யாருடைய கவனத்தையும் கவரவில்லை. அடிவருடிகளும், துதிபாடிகளும், பிறரைக் கவனித்துக் கவனித்தே தம்மை மறந்து விடுவோரும் நிறைந்த இந்தியா மாதிரி இந்த நாடுகள் இல்லாதது புரிந்தது, யாரையும் யாரும் கவனிக்கவே மாட்டேனென்கிறார்கள். அவரவர்கள் வேலையை அவரவர்கள் கவனித்தார்கள். மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படவும் வியக்கவும் யாருக்கும் நேரமோ அவகாசமோ இருந்ததாகத் தெரியவில்லை. இது புதுமையாயிருந்தது. இந்திய இட்லி, இந்திய ரசம், இந்திய சாம்பார் எல்லாம் கிடைக்காதது போல இந்தியக் குணங்களும் காணக் கிடைக்கவில்லை இங்கே.

     காதுத் தோட்டுக்கும், மூக்குத்திக்கும் வைத்துக் கட்டுவதற்கு நல்ல ப்ளுஜாக்கர் வைரம் - பெல்ஜியம் கட்டிங் உள்ளதாகத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டுமென்றாள் சுலபா.

     யூனிட்டில் மற்றவர்களை எல்லாம் பாரிஸிலிருந்தே ஊர் திரும்பச் சொல்லிவிட்டுச் சுலபர், கவிதா, கனகசபாபதி, எஸ்.பி.எஸ். நால்வரும் வைரம் வாங்குவதற்காக ஆம்ஸ்டர்டாம் சென்றார்கள்.

     திரும்பிய பின் கனகசபாபதி கூறியது போலவே சுலபாவை இந்த வெளிநாட்டுப் பயணம் மாற்றியிருந்தது. அவள் உற்சாகமாகவும் விரக்தியற்றும் இருந்தாள். புகழுக்காகவும், கூடி நிற்கிற துதிபாடிகளுக்காகவும் ஏங்கினுள். வைரம் தேர்ந்தெடுத்து வாங்க ஆசைப்பட்டாள். ஸ்விஸ் கிரெடிட் வங்கியில் இரகசிய எண் கணக்கு வைத்துக் கொண்டாள். எஜமானிக்கு வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்க இந்தப் பயணம் பயன்பட்டதைக் கவிதா உணர்ந்தாள்.

     லண்டனில் இரண்டு காட்சிகளும், பாரிஸில் இரண்டு காட்சிகளும் எடுத்து முடித்ததுமே படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடாத - சடங்கு போன்ற - எந்த இடைஞ்சலும், அசெளகரியமுமற்ற அந்தப் படப்பிடிப்புகள் சுளுவாக முடிந்து விட்டன. எல்லாரும் ஊர் சுற்றுவது -பாரிஸ் பை நைட் - பஸ் டிரிப், ஷாப்பிங் போவது ஆகிய வேலைகளைத் தான் உற்சாகமாகச் செய்தார்கள்,

     எஸ்.பி.எஸ். புரொடக்ஷன்ஸார் பாரிஸில் படிப்பிடிப்பு - லண்டனில் சுலபா - என்று செய்திகளை முன் கூட்டி ஊரிலிருந்து புறப்படும் போதே எழுதிக் கொடுத்தபடி தமிழ்த் தினசரிகள் பிரமாதமாக நாலு காலம் தலைப்போடு பிரசுரித்து ஊரையே கலகலக்கப் பண்ணிக் கொண்டிருந்தன. அவர்கள் யூனிட் வெளிநாட்டில் இருந்த இருபது நாளும் வெளிவர ஏற்ற இருபது தலைப்புச் செய்திகளை அழகாக எழுதிக் கோடுத்து வெளியிடும் பொறுப்பு - புரொடக்ஷன் மானேஜரிடமும் வசனகர்த்தாவிடமும் விடப்பட்டிருந்தது. அவர்கள் அதை ஜிஞ்ஜாமிர்தம் பண்ணினார்கள். வெளிநாட்டுப் படப்பிடிப்புக்கு விளம்பரம் கிடைத்துக் கொண்டிருந்தது.

     ஊர் திரும்பியதும் மீதி உள்ள நாலைந்து ஷெட்யூல்களை முடித்து ரீரிகார்டிங், எடிடிங் பூர்த்தி செய்தால் சூட்டோடு சூடாகப் படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம். ஏரியா விற்பனை முன்னைவிட அதிகமாக ஆகும். அதில் வருகிற லாபத்தைப் பார்க்கும்போது இந்த வெளிநாட்டுப் படப்பிடிப்புச் செலவு கொசுக்கடி மாதிரித்தான். சட்டப்படி கிடைத்த வெளிநாட்டுச் செலாவணி தவிரவே எஸ்.பி.எஸ். முதல் சுலபா வரை வேறு தனிவசதிகளும் கைநிறைய இருந்தன.

     ஜூரிச் அக்கவுண்ட், ஆம்ஸ்டர்டாமில் பதினாறுகல் வைத்துத் தோடு கட்டுவதற்கு வைரம் எல்லாம் நினைத்தது போல் செய்து கொள்ள முடிந்தது.

     அதிகம் பிரபலமாகப் பிரபலமாகச் சுலபாவுக்குள் அப்படி ஒரு பிடிவாத குணம் வளர்ந்து வந்தது. ‘தான் நினைத்தது நடக்க வேண்டும், அதுவும் நினைத்தபடியே பிசகாமல் நடக்க வேண்டும், அதற்குத் தடையாயிருப்பதை எல்லாம் நிர்மூல மாக்கிவிட வேண்டும்’ என்ற மனப்பான்மை வளர்ந்து கொண்டு வந்தது. ‘எல்லார் நினைப்பதும் நடக்க வேண்டும். எல்லாரும் ஆசைப்பட வேண்டும். எல்லாரும் வாழ வேண்டும்’ என்று எண்ணி அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுவது ஜனநாயக மனப்பான்மை. ‘தான் நினைப்பது மட்டும் நினைத்தபடி நடக்க வேண்டும்’ - என்று எண்ணுவது சர்வாதிகாரம். உள்ளுக்குள் அவள் சர்வாதிகாரி போலத்தான் ஆகியிருந்தாள். சர்வாதிகாரம் செல்லுபடி ஆயிற்று. சலாம் போட்டுக் கொண்டு அடிபணிந்தார்கள் இங்கே.

     சலவை நோட்டாக வேண்டும் என்றால் அப்படியே செண்ட் தெளித்து எடுத்து வந்து காலடியில் குவித்தார்கள். வெளிநாடு போய்ப் படப்பிடிப்பு நடித்த வேண்டும் என்றால் உடனே வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். எல்லாமே நடந்தன. எல்லாமே நினைத்தபடியே நினைத்த விதத்தில் நடக்கிற போதும் மனம் அதே நிலைக்குப் பழகி அதையே எங்கும் எதிர்பார்க்கிறது. எதிர்பார்த்தது, எதிர்பார்க்கும்.

     சுலபாவும் இப்போது அந்த நிலைக்கு வந்திருந்தாள். அவள் சொன்னதை ‘அது சாத்தியமில்லை’ - என்று யாராவது மறுத்துப் பேசினால் அவளுக்குக் கோபம் வந்தது. அவள் சொல்கிற எதையும் யாராவது எதிர் நின்று விவாதிக்கவோ, வினவவோ முயன்றால் கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவளால். ஒருவரிடம் ஆணவம் கொடி கட்டிப் பறப்பதற்கு இவை எல்லாம் புற அடையாளங்கள் என்றால் சுலபா விடம் இந்த அடையாளங்கள் வெளிப்படையாகவேத் தென்படத் தொடங்கின.

     “உன்னை யாரும் யோசனை கேக்கலே! பேசாமே நான் சொல்றதைக் கேளு! எனக்கு எதை எப்படிச் செய்யணும்னு தெரியும்” - என்பன போன்ற வாக்கியங்கள் அவளிடம் அடிக்கடி வெளிப்பட்டன இப்போது.

     கவிதா இதைக் கவனித்தாலும் தனக்கேன் வம்பு என்று பேசாமல் இருந்து விட்டாள். ஒரு படத்தில் ஒரு காட்சியில் அவள் பாடுவதாக ‘நான் ஒரு பயித்தியக்காரி’- என்ற எடுப்புடன் ஒரு பாடல் இருந்தது. அந்தத் திரைக் கதையில் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் அவள் அப்படிப் பாடுவதுதான் பொருத்தம் என்று ஏற்பாடு செய்து பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் பலநாள் சிரமப்பட்டு அதை இசையமைத்து முடித்திருந்தார்கள். அவளுக்கு அந்தப் பாட்டுத் தன்னுடைய ‘இமேஜைக்’ கெடுத்து விடுமோ என்று மனத்திலே பட்டது. அவ்வளவு தான். மெல்ல டைரக்டர் மூலம் அந்தப் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் சொல்லி அனுப்பினள். அது ‘ஹிட் ஸாங்’ ஆகப் புகழ் பெறும் என்று நம்பிக்கொண்டிருந்த அவர்களுக்கு இவள் கூறியதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. இவள் பாட்டை மாற்றச் சொல்லி வற்புறுத்தினுள்.

     “உங்களைத் தனிப்பட யாரும் நெனைக்க மாட்டாங்க மேடம்! அந்தப் படத்திலே நீங்க நடிக்கிற ரோலுக்கு அந்தப் பாட்டுப் பொருந்துதா இல்லியான்னு மட்டுமே பார்ப்பாங்க” என்று எவ்வளவோ சொல்லி வாதாடினார் பாடலாசிரியர். அவர் வாதத்தை அவள் ஏற்கவில்லை.

     கதாசிரியரும், இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இணைந்து மறுத்தனர். “சரி நாளைக்குப் பார்ப்போம்! போய் வாங்க”.என்று அவர்களை விடைகொடுத்து அனுப்பி விட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட சில தயாரிப்பாளர்களுக்கு அன்றிரவே ஃபோனில் தகவல் சொல்லிப் பேசினாள் சுலபா. மூன்று பேருக்கும் அடுத்தடுத்துச் சில தயாரிப்புக்களுக்கான ஒப்பந்தங்கள் இரத்து ஆயின. ஒன்றும் புரியாமல் திணறி நடுநடுங்கிப் போனார்கள் அவர்கள். விசாரித்ததில் அது சுலபாவின் வேலை என்று புரிந்தது. பிழைப்பைக் கெடுக்கிறாளே என்று அஞ்சி நடுங்கி ஓடிவந்து அவளிடம் முறையிட்டார்கள். கெஞ்சிக் கேட்டு மன்றாடினார்கள்.

     “இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை” - என்று சிரித்து மழுப்பினாள் அவள். அந்தச் சிரிப்பில்தான் மர்மம் இருந்தது. எச்சரிக்கை இருந்தது. ‘என்னிடமா வாலாட்டுகிறீர்கள்?’ - என்ற எச்சரிக்கை அதில் தொனித்தது. உடனே பாடலும் இசையும் மாறின. ‘நானொரு பயித்தியக்காரி’ - பாட்டு மாற்றப்பட்டது. தொழிலையும் பிழைப்பையும் காப்பாற்றிக் கொள்ளும் ஆத்திரத்தில் பாடலாசிரியர் சுலபாவை வாழ்த்தியே ஒரு பாடலைத் தனியாக எழுதி வந்து நேரில் அவளிடமே பாடி விட்டார்.

     கலை பாராட்டும் கவின் பேரழகே
     கண் பார்த்துக் கருணை காட்டு!
     பல பாராட்டிப் பயனென்ன?
     பகை பாராட்டி விளைவென்ன?
     நிலை மாறாத பெண்ணரசி
     நித்தியமாம் நடிப்பரசி!
     சுலபாவைப் போலுண்டோ தொல்லுலகில்?

என்று பாடிச் சட்டம் போட்டு வரவேற்பு இதழ் போல் கண்ணாடியிற் பொதிந்து தந்து அவளிடம் மன்னிப்பும் கேட்டார் பாடலாசிரியர்.

     அதன் பின்புதான் இரத்து ஆன ஒப்பந்தங்கள் அவருக்குத் திரும்பக் கிடைத்தன. தான் நினைத்ததற்குக் குறுக்கே நிற்பவர்களை அவள்... பொறுத்து விட்டுக் கொடுத்ததே கிடையாது. எப்படியும் அவர்கள் பணிந்தே ஆக வேண்டும். அதற்கான காரியங்களை அவளால் செய்ய முடிந்தது. நிகழ்காலம் இப்படி நடந்தாலும் கடந்த காலத்தில் தன்னை எதிர்த்தவர்களைத் தேடிப் பழி வாங்க முடியவில்லையே என்கிற கவலை உள்ளூற அவளை வாட்டியது உண்டு. அப்படிப்பட்டவர்களை அவள் மறக்க முயன்றாள். ஆனால் மறப்பது சுலபமாக இல்லை.