5 தன் காரியதரிசி கவிதாவைத் தவிர அவரே எதிர்பாராத விதமாக ஆடிட்டரையும் கூட அழைத்துக் கொண்டு போனாள் சுலபா. அதிலும் ஒரு திட்டம் இருந்தது. எங்கெங்கோ எப்படி எப்படியோ குல்மால் செய்து மாத்தி வைத்திருந்த ஃபாரின் கரன்ஸியில் சுவிஸ் பாங்கில் ஒரு இரகசிய நம்பர் அக்கெளண்ட் வைத்துக் கொள்ள ஆடிட்டர் உடனிருக்க வேண்டும் என்று எண்ணினாள் சுலபா. அவளே ஆடிட்டரை உடன் வர வற்புறுத்தினாள். மிகப்பல சினிமாப் பெரும் புள்ளிகளின் நம்பர் ஒன் நம்பர் டூ அக்கவுண்டுகளைக் கவனித்து வந்த ஆடிட்டர் கனக சபாபதிக்கு நல்ல அநுபவம் ஸ்விஸ் பாங்க் விவகாரங்களில் இருந்தது. தானே தனியாக ஏதாவது ஏடா கூடமாகப் பண்ணிப் புரியாத தேசத்தில் வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்று எண்ணினாள் சுலபா. அதனால்தான் ஆடிட்டரையும் கூப்பிட்டிருந்தாள். பாண்டிச்சேரியில் பிறந்து இப்போது பிரெஞ்சு நாட்டில் பல ஊர்களில் வாழும் உறவினர்கள் பலர் கனகசபாபதிக்கு இருந்தார்கள். அதனால் அவர் உதவி தேவைப்பட்டது. ஆனால் பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றித் தயாரிப்பாளர் எஸ்.பி.எஸ்.ஸுக்குத் தெரிய விடவில்லை அவர்கள். “உதவியாளர்ங்கிற முறையிலே கவிதா வரப்போரு, என்னோட ஆடிட்டரும் கூட வரார். அவர் செலவுகளை நான் பார்த்துக்கிறேன்” - என்று உபசாரத்துக்காக எஸ்.பி.எஸ்.ஸிடம் சுலபா கூறினாள். “செலவு என்னம்மா பெரிய விஷயம்? உங்க ஆடிட்டர் தானே? அவரும் நம்ம யூனிட்ல ஒருத்தர் மாதிரித் தான்! வரட்டும். நமக்கும் நாலு இடத்திலே பேசக் கொள்ள ஒரு படிச்ச ஆளாவது வேணும். அவருக்காக நீங்க செலவழிக்க வேணாம் என் கிட்டவே விட்டுடுங்க” என்று எஸ்.பி.எஸ். பெருந்தன்மையாகப் பதில் சொல்லிவிட்டார். வாழ்க்கையில் அவளுடைய ஆசைகள் ஒவ்வொன்றும் சுலபமாக நிறைவேறி வந்தன. கடைசியாக இந்த ஸ்விஸ் பேங்க் ஆசையும் நிறைவேறப் போகிறது. ‘சுலபா’ என்று தனக்குப் பெயர் வைத்துக் கொடுத்தவரை இப்போது அவள் உள்ளம் வாழ்த்தியது. எல்லாம் சுலபமாகவே நடந்து விடுகின்றனவே! பயணத்தில் படப்பிடிப்பை விட அவர்கள் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது தான் முக்கியமாயிருந்தது. கதாநாயகன், கதாநாயகி, காமிராமேன், டைரக்டர், தயாரிப்பாளர், தயாரிப்பாளரின் நெருக்கமுள்ள இரண்டு பணக்கார விநியோகஸ்தர்கள், கதாநாயகியோடு அவள் காரியதரிசி கவிதா, ஆடிட்டர் கனகசபாபதி என்று ஒன்பது பேர். புறப்பட்டார்கள். கிடைத்த அந்நியச் செலாவணி அநுமதியில் இந்த ஒன்பது பேர்தான் போகமுடியும் என்று ஆகிவிட்டது. இவர்களிலேயே சிலருக்கு அநுமதி வாங்குவதற்காக யூனிட்டில் சம்பந்தப்பட்டவர்களைப் போலப் பெயர்கள் சூட்ட வேண்டியிருந்தது. கவிதா ‘காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்’ ஆனாள், கனகசபாபதி - புரொடக்ஷன் கண்ட்ரோலர் ஆனார். எஸ்.பி.எஸ்.ஸின் இரு நண்பர்களும் லொக்கேஷன் ஷாட் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நடிகர்கள் என்று காட்டப்பட்டிருந்தனர். அந்தியச் செலாவணி அநுமதி வாங்குவதற்கு இந்த மாதிரிக் காண்பித்தாக வேண்டியிருந்தது. எஸ்.பி.எஸ். இன்னும் இரண்டு மூன்று பேர்களைச் சேர்த்துப் பன்னிரண்டு பேர் வரையில் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் ஒன்பது பேருக்குத்தான் அநுமதி கிடைத்தது. அதற்கு மேல் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை, புறப்படுவதற்கு முன் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்திகளும் விளம்பரங்களும் தடபுடல் பட்டன. ‘எஸ்.பி.எஸ், புரொடக்ஷன்ஸாரின் மாபெரும் தயாரிப்பு. கவர்ச்சிக் கன்னி சுலபா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் லண்டன், பாரிஸ் நகரங்களில் படப்பிடிப்பு ஆக ஏற்பாடு’ - என்று விளம்பரமாயிற்று. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக நியூயார்க் - டோக்கியோ எல்லாம் விடுபட்டுப் போயிற்று. அவர்களும் பொருட்படுத்தவில்லை. இந்த ஃபாரின் லொக்கேஷனுக்கு ஆகிற செலவை மட்டுமே கணக்கிட்டால் கூட உள்நாட்டில் கச்சிதமாக இன்னொரு படம் எடுத்து முடித்து விடலாம் என்று தெரிந்தது. ஆனாலும் கண்ணை மூடிக்கொண்டு செலவழிக்கத் தயாராயிருந்தார்கள். ‘சுபவிரயங்கள்’ என்று சோதிட பாஷையில் ஒரு பதப்பிரயோகம் உண்டு. ‘சுபமான வீண்செலவுகள்’ என்று அதற்கு அர்த்தம். எஸ்.பி.எஸ்.ஸைப் பொறுத்தவரை இது ஒரு ‘சுய விரயம்’தான். ஆனால் பணம் விரயமாகாமல் சினிமாவில் லாபம் சம்பாதிக்கவே முடியாது என்பதைப் பாலபாடமாகவே அவர் கற்றுத் தெரிந்து கொண்டிருந்தார். ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை பாதாம்கீர் கேட்டால் அவள் உதவியாள் - மேக்-அப்-மேன் நடிகையின் தாய் என்ற பெயரில் அவள் மெய்க்காப்பாளராக அல்லது பொய்க்காப்பாளராக செட்டுக்குள் வரும் மூதாட்டி, கார் டிரைவர் இத்தனை பேருக்கும் பாதாம் கீர் வாங்கிவர வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இது எரிச்சலூட்டியது. “என்னப்பாது? பணத்தை சும்மா வாரி விடறீங்களே? யார் அப்பன் வீட்டுச் சொத்துப் பாழ்போகுது? அந்தப் பொம்பளைத்தான் நடிக்கிது. லைட் வெளிச்சத்தில் நின்னு வாட வேண்டியிருக்கு. பாதாம்கீர் கேட்குது! இவனுகளுக்கெல்லாமும் கூடப் பாதாம்கீர் இல்லாட்டி வேற எதுவும் தொண்டையிலே எறங்காதோ?” - என்று கடுமையாகக் கண்டித்துக் கொண்டிருந்தார் எஸ்.பி.எஸ். நடைமுறையில் அதனால் பல இடைஞ்சல்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. “என்னாய்யா இது மாதிரிக் கஞ்சப் பெட்டிப் புரொட்யூஸரை நான் பார்த்ததே இல்லை” என்று அவர் காதுபடவே பேச ஆரம் பித்தார்கள். மெல்ல மெல்ல அநுபவம் வந்த பின்பு அவர் முற்றாக மாறினார். யாதார்த்தத்தைப் புரிந்து கொண்டார். இந்தக் கலையே ஒரு சுபவிரயம். இதில் போய் விரயம், வீண், என்று பார்க்கக் கூடாது. வாழ்க்கையில் இப்படி எத்தனையோ அழகான வீண் செலவுகள் இருக்கின்றன. விறகு வெட்டுகிறவன் நாள் முழுவதும் நெற்றி வேர்வை ஆறாக ஓடி வேலை செய்துவிட்டு முப்பது ரூபாய்க்கும் குறைவாகக் கூலி வாங்கிக் கொண்டு போகிற இதே உலகில் அரைமணி நேரம் பாடுகிற இசைக்கலைஞன், கால்மணி நேரம் ஒரு ஷாட்டுக்கு நடிக்கிற நடிகை, ஆயிரக்கணக்கில் வாங்குகிறாளே என்று தர்க்கம் செய்து பயனில்லை. அது வேறு இது வேறு. ‘நிறைய விரையம் செய்தால்தான் நிறையச் சம்பாதிக்க முடியும் என்கிற மாதிரி ஒரு கலை இது! இங்கே சிக்கனம் பார்க்க விரும்புகிற நல்லவனை எல்லாருமாகச் சேர்ந்து நஷ்டப்படுத்தி விடுவார்கள், சுபவிரயத்தைச் சகித்துக் கொள்கிற மனப் பக்குவமே இதில் வெற்றி’ - என்ற இரகசியம் அவருக்குப் புரிந்த பின் அவர் தேறியிருந்தார். பதினைந்து வருஷங்களுக்கு முன் தேவகோட்டையில் எஸ். பி. எஸ், சிட்பண்ட்ஸ் அதிபராயிருந்த சொ.ப.சொ. வேறு இன்றைய எஸ்.பி.எஸ். வேறு. அன்றைய எஸ்.பி.எஸ். அறவே மாறிவிட்டார் இப்போது, ஐம்பதினாயிர ரூபாய் சலவை நூறுகளாக வாங்க நூற்று இருபத்தைந்து ரூபாய் வட்டம் கொடுக்க அன்றைய சொ.ப.சொ. துணிந்திருக்க மாட்டார். இன்று அப்படிப் புது நோட்டுக்களாகக் கொண்டு போய்க் கொடுப்பது ஒரு நடிகையை மகிழ்விக்கும் என்று புரிந்துவிட்டால் அதை உடனே நிறைவேற்றித் தருவது தம் கடமை என்று புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக் கொண்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஞானம் தான் தொழிலில் அவருக்கு மேலும் மேலும் வெற்றியைக் கொடுத்தது என்று சொல்ல முடிந்தது. மார்க்கெட்டில் “எஸ்.பி.எஸ். அண்ணன? ஃபார் ஹிம் நத்திங் இஸ் இம்பாஸிபிள்” என்று பேசக்கூடிய பெருமையைத் தந்திருந்தது. “உலகில் சந்தோஷமாக இருக்க ரெண்டு வழிங்க இருக்கு. மத்தவங்களைக் கஷ்டப்படுத்திச் சந்தோஷம் அடையிறது ஒண்ணு. அதிலே எனக்கு நம்பிக்கை இல்லே. மத்தவங்களைத் தாராளமாச் சந்தோஷப்படுத்தி நாமளும் சந்தோஷமா இருக்கிறது இன்னெண்ணு. இந்த ஃபீல்டிலே இன்னிக்கி இந்த ரெண்டாவது வழிதான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று எஸ்.பி.எஸ். தம் வாழ்க்கை பிலாஸபியைத் தாமே எப்போதாவது ரொம்பவும் வேண்டப்பட்டவர்களிடம் சொல்வது உண்டு. “ஒரு முழுப் புரொடக்ஷனுக்கு ஆகிற செலவுகளை ரெண்டு மூணு லொக்கேஷன் ஷாட்டுக்காக வீணாக்கணுமா?” என்று எஸ்.பி.எஸ்.ஸின் நண்பர் ஒருவர் அவர் தம்முடைய யூனிட்டோடு வெளிநாடு புறப்படுவதற்கு முன் கேட்டார். “விரயம் தான் நஷ்டம். இது வெறும் விரயமில்லே, சுபவிரயம். இதுலே நஷ்டம் வராது” என்று சுருக்கமாகப் பதில் சொன்னர் எஸ்.பி.எஸ். ‘சுபவிரயம்’ என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதைவிட வேடிக்கை என்னவென்றால் முழு யூனிட்டுக்குமான வெளிநாட்டுப் பயண உடைகள் எடுக்கத் தைக்க - என்று எல்லாச் செலவுகளையும் அவரே பார்த்துக் கொண்டார். யூனிட் முதலில் லண்டன் போய்விட்டு அங்கே மூன்று நாள் தங்கியபின் அப்புறம் பாரிஸ் போவது என்று ஏற்பாடாகி இருந்தது. ஒவ்வோர் இடத்திலும் படிப்பிடிப்பு வேலைகள் மிகச் சில மணி நேரங்கள் தான். ஷாப்பிங், ஊர் சுற்றிப் பார்த்தல் ஆகியவற்றுக்கே அதிக நேரம் செலவாயின. லண்டனில் அவர்கள் இரண்டு ஹோட்டல்களில் தங்கினார்கள். சுலபா, கவிதா, ஆடிட்டர், எஸ்.பி.எஸ். நால்வரும் ஹைட்பார்க் எதிரே இருந்த மார்பின் ஆர்ச் அருகிலுள்ள பிரபல கம்பர்லாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கினர்கள். மற்றவர்கள் கொஞ்சம் உள்ளே பிக்காடில்லி சர்க்கஸ் அருகே ஓர் இரண்டாந்தர ஹோட்டலில் தங்கினர்கள். எல்லாமே வசதியாகத்தான் இருந்தன. பகலில் ஹைட்பார்க்கில் கொஞ்சம் ஷூட்டிங் நடந்தது. சுலபாவும், கதாநாயகனும் டூயட் பாடியபடியே ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். பார்க்குக்கு உள்ளே இருந்த ‘ஸெர்ப்பண்டைன் லேக்’கில் இருவரும் படகு செலுத்துகிற மாதிரி ஒரு ஷாட் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹைட்பார்க்கிலோ, ஏரியிலோ, பகலில் கூட்டமே இல்லை. இருந்த ஒரு சிலரும் இவர்களது ஷூட்டிங்கைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. பட்டிக்காட்டான்கள் யானை பார்க்கிற மாதிரி ஷூட்டிங் பார்க்கக் கூடும் நம்மூர்க் கூட்டம் லண்டனில் இல்லாதது புதுமையாயிருந்தது. உள்ளூறக் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. தங்களையோ தங்கள் படப் பிடிப்பையோ யாருமே பொருட்படுத்தவில்லை என்பதனால் வந்த ஏமாற்றம் அது. கவனிக்கப்படாமல் விடப்பட்ட வருத்தம் உள்ளூற இருந்தது. |