13

     கோகிலாவுக்கும் சுலபாவுக்கும் நெருக்கமான சிநேகிதம் இருந்தாலும் இருவருக்குமிடையே நிறைய வேறு பாடுகள் இருந்தன. கோகிலா மனத்தத்துவத்தில் பட்டதாரி, ஏராளமான ஆங்கில நாவல்களையும் உளவியல் நூல்களையும் படித்தவள். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவள். உலகப் புகழ் பெற்ற நாவல்கள், காப்பியங்கள், கதைகள், நாடகங்களின் கதாபாத்திரங்களையும் அவர்கள் பற்றிய திறனாய்வு நூல்களையும் படித்தவள்.

     சுலபா ஃபார்மல் எஜுகேஷனுக்காகத் தெலுங்குத் திண்ணைப் பள்ளிக் கூடத்திலும் ஒதுங்காதவள். அவளுடைய செல்வத்துக்கும் புகழுக்கும் பின்னால் கூட முறையான படிப்பு என்பது ஓரளவுதான் வளர முடிந்தது. அதற்குள் புகழும் பணமும் அதைவிட அதிகம் வளர்ந்து விட்டன.

     அளவாய் அழகாய்ச் செதுக்கி எடுத்த தங்கச்சிலை போன்ற வனப்பும், முகவசீகரமுமே சுலபாவின் பெரிய முதலீடுகளாக அமைந்து அவளை முன்னுக்குக் கொண்டு வந்திருந்தன. படிப்பு இன்மை குறையாக உணரப்படாத அளவு செல்வம் அவளிடம் சேர்ந்து விட்டது.

     தெலுங்கிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்துக் கூட்டி அவள் கையெழுத்துப் போடும் விதங்களை வைத்தே அவள் அதிகம் படிக்காதவள் என்பதைச் சொல்லிவிட முடியும். ரொம்ப வருஷங்களுக்குப் பின் தினத்தந்தி படிக்கப் பழகிக் கொண்டாள். வீட்டுக்கு வருகிற ஆங்கில நாளிதழ்களைக் கவிதாதான் படிக்க வேண்டும். சுலபா படிப்பதாகச் சிலவேளை பாவிப்பாள்.

     தன் உடலின் வசீகரமான வளைவுகளாலும் முகத்தின் மோகனப் புன்னகையாலும் - பெண்ணுக்கு அதிக அழகு என்றும் கம்பீரம் என்றும் வர்ணிக்கத்தக்க எடுப்பான உயரத்தாலும் அவள் கவர்ச்சி பிரமாதமாயிருந்தது. நல்ல சண்பகப் பூவின் மேனி நிறம், சிரிப்புக்கு மட்டுமே கனகாபிஷேகம் செய்யலாம் போல அத்தனை அழகான பல்வரிசை. எதிரே நிற்பவர்களைச் சுருட்டி விழுங்கும் சிரிப்பு. மோகனமான கண்கள். உல்லாசமான இந்த விழிகளுக்கும், புன்னகைக்கும் அப்பால்தான் விரக்தியும், வெறுப்பும் மறைந்திருக்கின்றன என்பதைச் சத்தியம் செய்து சொன்னால் கூட நம்புவது சிரமமாயிருக்கும். இப்படிப் பட்டவளிடம் போய்க் கோகிலா ‘லெஸ்பியன்’ என்றால் என்ன புரியும் இவளுக்கு?ஃபோனில் பேசிய மறுதினம் நேரில் பார்த்த போது கோகிலா லெஸ்பியனிஸம் பற்றி இவளிடம் விவரித்ததும் இவள் சிரித்தாள். கேலியாகக் கேட்டாள்:

     “அந்த மாதிரிக் கூட உண்டா என்ன?”

     “அந்த மாதிரி மட்டும் என்ன? அதற்கு நேர் மாறாக இந்த மாதிரியும் கூட உண்டுடி” - என்று லெஸ்பியனிஸத்திற்கு நேர் மாறானதைக் கோகிலா விவரித்த போது கூட எல்லாம் தெரிந்த குருநாதர் முன் சிஷ்யை கேட்பது போல் அடங்கிக் கேட்டுக் கொண்டிருந்தாள் சுலபா. கோகிலா கூறுபவை இவளுக்குப் புதியவையாயிருந்தன. ஆனால் இதெல்லாம் கோகிலாவும் சுலபாவும் பழகத் தொடங்கிய புதிதில்தான். நாளாக நாளாக நிறைய இரக சியங்களை - நிறைய விஷயங்களைக் கோகிலாவிடம் பழகிப் பழகியே தெரிந்து கொண்டாள் சுலபா. கோகிலாவைப் போல ஒரு படித்த - எந்தப் போக்கிரித்தனத்துக்கும் துணிந்த மேல் வர்க்கத்துப் பெண்ணின் நட்பு சுலபாவுக்கு அவசியமாயிருந்தது. அந்த நட்பு இதமாகவும், சுகமாகவும், தேவையானதாகவும் இருந்தது. கோகிலாவும் இவளும் சந்திக்கத் தவறிய வாரக் கடைசிகளே அநேகமாக இராது. இருவரும் ஒருவர் மனசுக்குள் இருப்பதை இன்னொருவரிடம் கொட்டித் தீர்த்து விடுவார்கள். பாரம் குறைந்த மாதிரி உணர்ந்த பின்பே இருவருக்கும் திருப்தி ஏற்படும். இப்படிச் சந்திப்புக்கள் பேச்சுக்களின்போது கவிதாவோ, நரசம்மாவோ கூட உடனிருக்க அவர்கள் அநுமதிப்பதில்லை. இந்தச் சந்திப்புக்களின் சுகங்களை இவர்கள் இருவர் மட்டுமே பங்கிட்டுக் கொண்டார்கள்.

     சுலபா வெளிநாட்டில் படிப்பிடிப்பு ஏற்பாடுகள் முடிந்து திரும்பியதும் அவளும், கோகிலாவும் தங்களுக்குள் சந்தித்துக் கொண்டது சுவாரஸ்யமானதொரு சந்திப்பாக இருந்தது.

     தன்னோடு வெளிநாட்டுக்கு வந்திருந்த யாருமே பிரயோசனமில்லை. கோகிலாவோடு வெளிநாடு போயிருந் தால் நன்றாயிருந்திருக்கும் என்று சுலபாவை உணரச் செய்து விட்டாள் கோகிலா. அவள் ஒவ்வொன்றாகச் சொல்லி அதைப் பார்த்தாயா? இங்கு போனாயா? அதெல்லாம்‘என்ஜாய்’ பண்ணாமலா திரும்பி வந்தாய்? - என்று கேட்கக் கேட்கச் சுலபாவுக்கு ஒரே ஏமாற்றமாகவும், தவிப்பாகவும் போயிற்று. இவள் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வந்திருந்த பாரிஸ் நகரை விடக் கோகிலா ஆர அமரப் பலமுறை பார்த்து விட்டு வந்திருந்த பாரிஸ் கேட்கச் சுகமாயிருந்தது. இவள் பார்த்து முடித்த லண்டனை விட அவள் பார்த்து ரசித்து நினைவூட்டிய லண்டன் சுகமானதாயிருந்தது. அவள் இடங்களைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பார்த்திருந்தாள்.

     “பாரிஸ் போயிருந்தியே பிகால் பார்த்தியா?”

     “அப்படீன்ன?...”

     “பிகாலுக்கு உன்னை யாருமே கூட்டிக்கிட்டுப் போகலியாடீ?”

     “போகலியோ எனக்கென்ன தெரியும்டி?”

     “அப்படியானல் நீ பாரிஸைப் பார்க்கவே இல்லைடீ! இனிமேல் புதுசா என்னோட ஒரு தடவை வந்து பார்த்தால் தான் உண்டு.”

     “உன்னோடப் பாரிஸைப் பார்க்கப் போறதுங்கிறது ஒரு பாரிஸைக் கைகோத்து உடனழைத்தபடி இன்னொரு பாரிஸைப் பார்க்கப் போகிற மாதிரின்னு சொல்லணும்டி கோகிலா.”

     “பின்னென்ன பாரிஸை நர்சம்மாவோடவும், கவிதா வோடவுமா போய்ப்பார்க்க முடியும்? கோகிலா, கூட இருந் தால் நீ அதிர்ஷ்டசாலியா யிருந்திருப்பேடீ?”

     “நான் துரதிருஷ்ட சாலிதான்டீ! கவிதாதான் என்கூட இருந்தாள்.”

     “கவிதாவுக்கு என்ன தெரியும்? பாவம். சிறிசு. கல்யாண மாகாதவள்.”

     “அப்படியில்லேடி கோகுலா! அவளும் யாரோ ஓர் இளைஞனைக் காதலிக்கிறாள். சதா காலமும் லீவு போட்டு விட்டு அவனோடு ரெஸ்ட்டாரெண்டுகள், தியேட்டர்கள், பார்க்குகள் என்று கால்தேயச் சுற்றுகிறாள்.”

     “சும்மா ஆண்களைச் சுற்றுகிற பெண்கள் எல்லாம் பிரார்த்தனையுடன் அநுமார் கோயிலையோ, பிள்ளையார் கோயிலையோ சுற்றுகிறவர்கள் மாதிரித்தான். அவர்களுக்கு எப்போது எப்படி வரம் கிடைக்கும் என்றே தெரியாது! பிள்ளையார் கோயிலையும், அநுமார் கோயிலையும் சுற்றுகிற மாதிரித்தான் கவிதாவோடு பாரிஸையும் லண்டனையும் பய பக்தியோடு சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருக்கிருய் நீ.”

     “போதும்டீ! ரொம்பத்தான் கிண்டல் பண்ணாதே. நான் சுற்றிப் பார்த்ததிலே என்ன குறை? தயாரிப்பாளர் எஸ்.பி.எஸ். என்னைத் தரையிலே இறங்கவிடாமல் பார்த்துக் கொண்டார். கப்பல் மாதிரி ஒரு லிமோஸின் கார் எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டுப் போச்சு. ஜூரிச்சுக்கும், ஜெனிவாவுக்கும், பிளேன்ல பறந்தோம். ஆம்ஸ்டர்டாமிலே ப்ளூஜாக்கர் வாங்கினோம்! ஒரு குறையும் இல்லே...”

     “அப்படிக் கீழே இறங்காமே லிமோஸின்ல சுத்தினதுதான் தப்பு. பாரிஸ் என்பது சுகந்தம், பாரிஸ் என்பது உல்லாசம், பாரிஸ் என்பது சந்தோஷம். பையில் பணத்துடனும் மனசில் மகிழ்ச்சியுடனும் கீழே இறங்கி நடப்பவர்கள்தான் அதை அநுபவிக்க முடியும். மெட்ரோ ரயிலில ‘ரவுண்ட் ட்ரிப்' டிக்கட்டை வாங்கி வைத்துக் கொண்டு இஷ்டம் போல் சுற்றினால் அங்கங்கே சுகங்களும், சந்தோஷங்களும் கேளிக்கை களும் இறைந்து கிடப்பது புரியும். கேளிக்கைகள் அதிகம் இறைந்து கிடிக்கிற இடம்தான் பிகால், ‘மெளலின் ரோஜ்’ போய்ப் பார்த்தியா? ‘பிகால்’லே ரெண்டு மூணு கேஸட்டாவது வாங்கினியா? நாலஞ்சு ஃப்ளோர் ஷோவாவது பார்த்தியா? பாரிஸ்ல என்னதான் பண்ணினே?”

     “எஸ்.பி.எஸ். சிரமப்பட்டு டிக்கெட் வாங்கி லிடோவுக்குக் கூட்டிக் கிட்டுப் போனார். அதுக்கு நேரம் கிடைக்கிறதே சிரமமாப் போச்சு, லேட் நைட் ஷோவாப் பார்த்து டிக்கெட் வாங்கிப் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்.”

     “அதெல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடிப் பாரிஸ் போனவன் பார்த்தேன்னு சொல்லிப் பீத்திக்கிட்டிருக்கிற பழைய விவகாரம்! எய்ட்டீஸ்ல ஒருத்தன் சொல்லிக்கிறதுக்கு லைஃப்ஷோ, மெளலின் ரோஜ்னு எத்தினி எத்தினியோ புதுசா வந்திருக்கேடீ?”

     “அதெல்லாம் எனக்கென்னடி தெரியும்? என்னைக் கூட்டிக்கிட்டுப் போனவங்க எங்கெங்கே கூட்டிக்கிட்டுப் போனாங்களோ அதெல்லாம் தான் நான் பார்த்தேன்.”

     “சில சமயத்திலே கூட்டிக்கிட்டுப் போறவங்களும் கூடப் போறவங்களும் சேர்ந்து ரெண்டு குருடங்க யானை பார்த்த கதையா ஆயிடும். கூட வர்ரவருக்குப் பிடிக்குமோ பிடிக்காதோங்கிற தயக்கத்திலேயும், கூச்சத்திலேயும் கூட்டிக்கிட்டுப் போறவங்களுக்குச் சிலதை விசாரிக்கவும், சொல்லவும் தோன்றாது. கூட்டிக்கிட்டுப் போறவர் தன்னைப் பத்தி என்ன நினைப்பாரோ என்ற தயக்கத்திலும், பயத்திலும், கூச்சத்திலும் கூடப் போகிறவரே தன் ஆசைகளை உள்ளே புதைத்துக் கொள்வது உண்டு. நம்மிடையே வேஷங்கள் அதிகம். வேஷங்களைப் பிறர் முன் களைய நாம் விரும்புவதே இல்லை. தனியே நமக்கு நாமே அந்தரங்கமாக உடைமாற்றுவது போல் அவற்றை இரகசியமாகக் களைந்துவிட்டு மறுபடி வேஷம் போடுகிறோம். இந்தியர்களின் பொதுக் குணங்களில் இதுவும் ஒன்று சுலபா! ஓர் ஃபிரெஞ்சுக்காரனோ, அமெரிக்கனோ இப்படி வேஷம் போடுவதுமில்லை. களைவதும் இல்லை. நாம் இரண்டையுமே அடிக்கடி செய்கிறோம். வேஷம் போடுகிறோம். களைகிறோம். மோஸ்ட் ஆஃப் த இண்டியன்ஸ் ஆர் ஸ்பிளிட் பெர்ஸ்னாலிட்டீஸ்...”

     “என்னைப் பொறுத்தவரை வேஷம் போடுவதும் களைவதும், கலைப்பதும் மறுபடி புதுவேஷம் போடுவதும்தான் என் தொழில் கோகிலா!”

     “நம் நாட்டில் வேஷம் போடுபவர்கள் யார் என்பது கேள்வியில்லை. வேஷம்போடாதவர் யார் என்பது தான் கேள்வி. மேக்கப் இல்லாமலே சகஜமாக வேஷம் போடுவதைப் பிறவிக் குணமாகப் பெற்ற கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம்டி சுலபா!”

     “கொஞ்சங் கூடத் தேசபக்தியே இல்லாமல் இப்படி உன் சொந்த நாட்டையே வேஷதாரிகளின் தேசம் என் கிறாயேடீ? இது உனக்கே நன்றாயிருக்கிறதா கோகிலா?”

     “தேசபக்தி வேறு! ஆத்ம பரிசோதனை வேறு. இந்தக் கடுமையான விமரிசனம் ஆத்ம பரிசோதனைதான். வேஷம் போடுவதும், இரகசியமாகக் களைவதும், பிறகு புது வேஷம் போட முயல்வதும் நமது தேசிய குணங்களில் தலையாயது.”

     “நீ ஒருத்தியாவது இந்தத் தேசத்தில் விதிவிலக்காக இருக்கிறாயே? அது போதாதாடீ?”

     “இருக்கிறேன்! ஆனால் எங்கே என்னை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடிகிறது. நானும் வேஷம் போடத்தான் வேண்டியிருக்கிறதடீ சுலபா! நம் சமூக அமைப்பு அப்படி! நான் வெளிப்படையாக என் வேஷங்களைக் களைந்து நினைப்பதைப் பேச ஆரம்பித்தால் அப்புறம் என்னைப் பற்றி என்ன சொல்லுவாங்க தெரியுமா? ‘கோகிலா சரியான திமிர் பிடிச்ச பொம்பளை. ஷீ இஸ் அப்டு எனிதிங்’னு கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க, நம்மூரைப் பத்தி எனக்கு நல்லாவே, தெரியும்டி சுலபா!”