16 வெள்ளிக்கிழமை விடிந்தது. அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து நீராடித் தயாரானாள் சுலபா. சரியாக நாலில் இருந்து நாலேகாலுக்குள் காருடன் வருவதாகக் கோகிலா முதல் நாளிரவே ஃபோனில் சொல்லியிருந்தாள். தாங்கள் இருவரும் எங்கே போகிறோம் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் சுலபாவிடம் எச்சரித்திருந்தாள் கோகிலா. சுலபா மிக எளிமையாகவும் அதே சமயத்தில் கவர்ச்சியாகவும் தன்னை அலங்கரித்துக் கொள்வதற்கு ஏற்ற சாதனங்களை உடன் எடுத்துக் கொண்டிருந்தாள் வாசனைப் பொருள்கள் உயர் ரக செண்ட், சந்தன அத்தர், புனுகு ஜவ்வாது என்று அள்ளிக்கொண்டு போனாள். செக் புஸ்தகம் எடுத்துக் கொண்டாள். குறும்புக்காரக் கண்ணனை நாடிப் போகும் ஒரு இளம் கோபிகையைப் போன்ற மனநிலையில் இருந்தாள் சுலபா. மனத்தில் ஒரே சிருங்கார அவஸ்தை. அன்று அவள் தன்னைக் கண்ணாடியில் பலமுறை அழகு பார்த்துக் கொண்டாள். சமீப காலத்தில் இப்படி ஒர் அழகுப் பரபரப்பை அவள் அடைந்ததே இல்லை. தான் அழகு என்பதில் அவளுக்குச் சந்தேகமோ, இரண்டாவது அபிப்பி ராயமோ கண்ணாடியில் பார்த்து உறுதி செய்து கொள்ளும் அவசியமோ இதுவரை ஏற்பட்டதே இல்லை, இன்று தான் முதல் முதலாக அந்த இனிய பதற்றமும், பரபரப்பும் அவளுக்கு ஏற்பட்டன. அதை அவளே உணர்ந்தாள். அநுபவித்தாள். அவஸ்தைப்பட்டாள். மெய்சிலிர்க்கும் ஓர் அநுபவத்தை இதுவரை வேறு பெண்களையே தீண்டியறியாத ஒரு பரிசுத்தமான ஆண்மகனைத் தீண்டப் போகிறோம் என்ற எண்ணத்தைத் தாங்கி இதயமே சுகமாகக் கனத்து வீங்கியிருந்தது. மூன்றாவது மனிதருக்கு இந்த நாசூக்கான விஷயம் பரவி விடக்கூடாது என்பதனால் அத்தனை பெரிய ஏ.சி. பென்ஸ் காரில் கோகிலாவும் சுலபாவும் மட்டுமே பயணம் செய்தார்கள். கோகிலா எக்ஸ்பர்ட் டிரைவர். பெண் பயில் வான் மாதிரிக் கோகிலாவுக்கு நல்ல கட்டுமஸ்தான உடம்பு. இலேசில் சோர்ந்து விடமாட்டாள். “நீயே ஓட்டறதாலே நிறுத்தி நிறுத்தி வேணுமானாப் போகலாம். சிரமப் படாதே. அவசரம் ஒண்ணுமில்லே” என்று சுலபா வீட்டை விட்டுக் கிளம்பும்போது சொன்னாள். “கையிலே லேடஸ்ட் பென்ஸை வச்சுக்கிட்டு அதையே என்னலே கட்டை வண்டி மாதிரி ஓட்ட முடியாது. சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு நேரம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. கோயிலைத் தரிசனம் பண்ண வர்ரவங்க உன்னைத் தரிசனம் பண்ற மாதிரி ஆயிடப்படாது. அஞ்சேமுக்கால் ஆறுக்குள்ளே போயிட்டம்னாக் கூட்டம் சேராமே எல்லாம் காதும் காதும் வச்சாப்ல முடியும்” என்றாள் கோகிலா. சுலபா மறுத்துச் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள். “இங்கே திருப்பதியிலே சாமி தரிசனம் முடிஞ்சு ஊர் திரும்பறோம்கிறதுதான் மத்தவங்க கிட்ட நாம சொல்ல வேண்டியது. ஆனல் பகல் முழுதும் இங்கேயே ஏ.சி. சூட்டில் தங்கிவிட்டு இருட்டியதும் இரகசியமாக மதனபள்ளி ரோட்டி லுள்ள திவ்ய சேவாசிரமத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு விடுவேன். அங்கே திவ்யானந்தர் உன்னை எதிர்பார்த்துத் தனியாக் காத்திருப்பார்.” “நீ என்ன செய்வதாக உத்தேசம்டி கோகிலா.” “நானா? நான் உன்னை அங்கே டிராப் பண்ணியதும் நேரே திருப்பதி திரும்பி ஏற்கனவே நாம் ரிஸர்வ் செய்த அதே ஏ.சி. சூட்டில் ஓய்வு கொண்டுவிட்டு மறுநாள் அதாவது நாளைக் காலையில் உன்னைப் பிக் அப் செய்ய ஆசிரமத்துக்கு மீண்டும் வருவேன்.” “என்னை நிராயுதபாணியானவளாக நிர்ப்பலமான வளாகத் தனியே அந்த இளம் சாமியாரிடம் விட்டுவிட்டு நீ போய்விடுகிறாய்?” “மோக யுத்தத்தில் ஆணோ பெண்ணோ நிராயுத பாணிகள் ஆவதில்லை. அவர்களுடைய தாபங்களே அவர்களுக்குப் போதுமான ஆயுத பலங்கள்.” “பல விஷயங்களைத் திவ்யானந்தரிடம் மனசு விட்டுப் பேச முடியாமல் போயிற்று என்றாய்! அவர் என்னைச் சந்திக்கும் போது தனியாயிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் நீ எப்படி விதித்தாய்?” “நீ மனசு விட்டுப் பேசக் கூச்சப்படுவாய் என்று சொல்லி அவருடைய சம்மதத்தைப் பெற்றேன். அந்த நிர்மலமான இளைஞர் சந்தேகம், பயம், ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற் பட்டவராயிருக்கிறார். கள்ளம் கபடிமே தெரியவில்லை. உடனே சம்மதித்தார். இளம் பெண்ணான ஓர் அழகியை இரவில் தனியே சந்திக்கச் சொல்லி மற்றோர் பெண்வந்து வேண்டுகிறாளே, இது என்ன சதியோ என்றெல்லாம் நினைக்கிறவராகவே அவர் தென்படவில்லை.” “உடம்பு மட்டுமின்றி மனசும் கறைபடாதது என்று சொல்.” “நிறையப் படித்தவர். சீரழிகிற பெண்களைத் திருத்திப் புது வாழ்வு அளிக்கும் நற்பணிக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்.” “குப்பைய ரெட்டி போல் பெண்களைச் சீரழிப்பதற்கு வாழ்க்கையையே செலவழிப்பவர்கள் உள்ள இதே உலகில் தான் இந்தத் திவ்யானந்தரும் இருக்கிறார்.” “குப்பைய ரெட்டி கூழாங்கல்! இது மாணிக்கம்.” கோகிலா படுவேகமாகக் காரைச் செலுத்தினாள். பலபல வென்று விடிகிற நேரத்துக்குக் கார் திருமலையில் இருந்தது. சந்நிதியில், தரிசனம் செய்கிறபோது உணர்ந்த சந்தனம் பச்சைக் கருப்பூர வாசனை அவளது வழக்கமான ஞாபகங்களைக் கிளரச் செய்தன. அதே புனித வாசனைகளும் பிரம்மசரியத்தின் காந்தியும், தேஜஸும் அழகும் உள்ள ஓர் உடல் அன்றிரவு தனக்கு விளையாடக் கிடைக்கப் போகிறது என்ற உணர்வும் ஏற்பட்டது. அது அநுராகச் சுவையாக உள்ளே தங்கியது. சகஸ்ர கலசாபிஷேகம் முடிந்து பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள். பகல் உணவும் அறைக்கே வந்தது. நேரம் நெருங்க நெருங்கச் சுலபாவுக்குப் பரபரப்பும் பூரிப்பும் ஆவலும் கிளர்ந்தன. மனசு நிலை கொள்ளாமல் தவித்தது. ‘என்ன உடுத்திக் கொண்டு போவது? எதை எதை அணிவது?’ - என்று சுலபா அதிகமாக அலட்டிக் கொள்வதைப் பார்த்துக் கோகிலா அவளைக் கிண்டல் செய்தாள். “கோவில் திருவிழாவுக்காக அம்மன் விக்கிரகத்தை ஓவராக அலங்கரிக்கிற மாதிரி ஒரேயடியாக அலங்கரித்துக் கொண்டால் உன் இயற்கையான வசீகரமே தெரியாது. சிம்பிளாக - உன் அழகே அதிகம் தெரிகிறமாதிரி - நகைகள் புடைவை பவுடர் முதலியவை உன்னைவிட அழகாகத் தோன்றி அதிகப் பிரசங்கித்தனம் பண்ணாத வகையில் போய் நில்! வெள்ளைவாயில் புடைவை. உன் தங்க நிறக் கழுத்தின் பொன் வண்ணத்தை எடுத்துக் காட்டுகிற மாதிரி ஒரு மெல்லிய கருகமணிமாலை, தோடு, மூக்குத்தி - நீ விரும்பினால் காலில் கொலுசு கைகளுக்குக் கருநிறக் கண்ணாடி வளையல்கள். இவை போதும்.” “பட்டுப் புடைவை வேண்டாமென்கிறாயா?” “வேண்டவே வேண்டாம்! உன் உடம்பே மழமழப்பான வெண்பட்டுக் குவியல் மாதிரி! ஒரு பட்டில் இன்னொரு பட்டு நிற்காது.” “சென்ட் லிப்ஸ்டிக்...” “வாசனை தெளித்துக் கொள்! உதட்டுச் சாயம் வேண்டாம். ஏற்கெனவே செர்ரிப்பழம் போல மின்னும் உன் உதடுகளுக்குச் சாயம் வேண்டியதில்லை.” “எல்லாம் சரி! நீயோ எதையும் வெளிப்படையாக விட்டுப் பேசிக் கொள்ளவில்லை என்கிறாய். சந்திக்க மட்டும் ஏற்பாடு பண்ணியிருப்பதாகச் சொல்கிறாய்! அவரிடம் நான் எப்படியடி ஆரம்பிப்பேன்? எப்படி மயக்கி எப்படி வசப்படுத்தி எப்படி..?” “செக் புத்தகம் கொண்டு போ! திவ்ய சேவாசிரமத்தின் சேவைகளைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லு. குப்பையரெட்டி மாதிரி எவனோ ஒருத்தன் உன் வாழ்வைப் பாழாக்கி விட்டான் என்பதைச் சொல்லு... உங்கள் உபதேசம்தான் என்னைக் கைதூக்கிவிடும் என்று சொல். அழு. கால்களைத் தொட்டு வணங்கு - மன்றாடு! மெல்ல மெல்ல வசப்படலாம்.” “நான் நிர்ப்பலமாக உணர்கிறேன்.” “இந்த நிர்ப்பலமே உன் பலம் சுலபா! நீ ஒரு செளந்தரியப் படையெடுப்பு நடத்தப் போவது புரியாமல் இப்படிப் பேசாதே.” “பயமாயிருக்கிறதடீ.” “நீ ஒன்றும் பச்சைக் குழந்தையில்லை. முதலிரவுக்குப் போகிற பேதைக் கன்னிப் பெண்ணுமில்லை, பலரை நொடியில் வென்ற வெற்றியரசி என்பதை நினைத்துக் கொள்!” “இதுவரை நான் ஆண்களை வென்றிருப்பது உண்மை! ஆனால் என் தாபங்கள் தீர வேணுமானால் நான் இங்கே தோற்க வேண்டுமேடீ கோகிலா!” “கவலைப் படாதே எந்தப் பஞ்சும் நெருப்பில் எரியும் சுலபா!” “இதில் யார் நெருப்பு? யார் பஞ்சு?” “காமம் கனிந்து திரண்ட எல்லாப் பேரழகுமே எரியும் நெருப்புத்தான்! இங்கு உன் அழகுதான் அக்னி.” “நான் நீறு பூத்த நெருப்புத்தான் கோகிலா! என்னல் எரிக்க முடியுமா?” “உன்னல் முடியுமோ முடியாதோ; உன் அழகால், சிரிப்பால் விழியால், அங்க வனப்பால் எதிரே நிற்கிறவனின் பிரம்மசரியத்தை எரித்துப் பொசுக்கி விடமுடியும்.” ஜல்லிக்கட்டுக்குப் போகிற பந்தயக் காளையைக் கொம்பு சீவி எண்ணெய் பூசி முட்டுவதற்கான வெறியூட்டி அனுப்புகிற மாதிரிச் சுலபாவைத் தயாராக்கினாள் கோகிலா. மாலை மணி ஐந்து. சுலபா மறுபடி நீராடினாள். கோகிலா சொல்லியிருந்தபடி எளிமையாக அலங்கரித்துக் கொண்டாள், வந்து நின்றாள். பார்த்துவிட்டுக் கோகிலா சொன்னாள்: “சபாஷ்! இப்படியே வாரியணைத்துக் கொள்ளணும் போலிருக்கிருய்! இப்படி வெண்மை நிறம் சந்நியாசிகளுக்கு எப் போதுமே பிடிக்கும்.” “எனக்குக் காவி நிறம் ரொம்பக் கவர்ச்சிடீ கோகிலா.” “ரொம்பப் பொருத்தம்! வெண்மையில் காவி சேர்ந்தால் சரியாக ஒட்டிக் கொள்ளும்.” “என்னென்ன எடுத்துக் கொள்ளணும்? கோகிலா!” “முதலில் நீ மறந்து விடாமல் உன்னை எடுத்துக் கொள்! கைப்பையில் கையெழுத்திட்டுத் தேதி போட்டுத் தொகை போடாத ஒரே ஒரு செக் லீஃப் மட்டும் வைத்துக் கொள்! வேறு எதுவும் வேண்டாம்! எல்லாவற்றையும் இங்கே அறையிலேயே விட்டு விடு. வீண் சுமை எதுவும் வேண்டாம்.” “மாற்றுப் புடைவை ஒன்று வேண்டாமா?” இதைக் கேட்டு கோகிலா குறும்புத்தனமாகச் சிரித்தாள். அவள் விழிகளில் குறும்பு மின்னியது. “நல்ல ஞாபக சக்தியடி உனக்கு! மாற்றுப் புடவை கொண்டு வந்திருந்தால் எடுத்துக்கொள். எனக்கு ஆட்சேபணை இல்லை.” சுலபா உள்ளே போய்ப் பெட்டியை எல்லாம் குடைந்து விட்டுத் திரும்பி வந்து, “இந்த வெள்ளை வாயில் புடவையைத் தான் மாற்றுப் புடைவையாகக் கொண்டு வந்தேன். கட்டிக் கொள்ளப் பட்டுப் புடைவை என்று எண்ணி இதைக்கூட மாற்றாக எடுத்து வைத்தேன். இப்போது இதையே மெயின் ஆகக் கட்டிக் கொண்டாயிற்று... வேறு மாற்றுப் புடை வைன்னா ‘சில்க்’ தான் இருக்கு.” “அப்படியானால் விடு! மாற்றுப் புடவையே வேண்டாம்! நீ ஆசைப்பட்ட சந்தனமும் பச்சைக் கருப்பூரமும், ஏலமும் மணக்கிற பரிமள சுகந்தங்களின் உஷ்ண மூச்சுக்கள் படிகிற அதே புடைவையே உன் உடம்பை அலங்கரிக்கட்டுமே.” சுலபா இதைக் கேட்டுப் புதுமணப் பெண் போல வெட்கப்பட்டாள். தப்பு வராமல் கவனமாகத் தன் செக் புத்தகத்திலிருந்து ஒரு லீஃபை எடுத்துத் தேதி போட்டுக் கை யெழுத்திட்டுக் கைப்பையில் பேனாவுடன் வைத்துக் கொண்டாள். மாலை ஐந்தே முக்கால் மணிக்கு அவர்கள் கார் மலையிலிருந்து கீழே இறங்கியது. ஏ.சி. காராகையினால் சுலபாவின் இங்கிதமான பரிமள நறுமணங்களால் காரே சாந்தி முகூர்த்த அறை போல் கமகமத்தது. காரை ஒட்டியபடியே கோகிலா சொன்னாள்: “நீ சாதுரியமாகப் பேசித்தான் அவரைக் கவர வேண்டும்! இப்படிச் சந்நியாசிகளிடம் மனசைக் கவராமல் உடம்பைக் கவர்வது கஷ்டமான காரியம். வழி சொல்லி அழைத்து வாயிற்படி வரை கொண்டு போய்விட மட்டுமே என்னால் முடியும்! படை எடுப்பை வெற்றிகரமாக முடிப்பது உன் கையில் தான் இருக்கிறது.” “நான் என்ன பேச முடியும்? இந்த மாதிரிப் படித்த ஞானியிடம் நான் பேச என்ன அகப்படும் கோகிலா!” “உன் கஷ்டங்களைச் சொல்! அறிவுரை கேள். பிரமாதமான காதல்களை இரக்கம்தான் உண்டாக்குகிறது.” |