17 வனாந்தரமாக மண்டிக்கிடந்த அந்த மாந்தோப்புக்குப் பிரதான சாலையிலிருந்து விலகிய செம்மண் புழுதி படிந்த கிளைச்சாலைக்குள் இவர்களது பென்ஸ் திரும்பியபோது மாலை ஆறே முக்கால் மணி. காட்டுக்கே உரிய பச்சை வாசனையும் சிள் வண்டுகளின் ‘கீங்கீஸ்’ ஒலியும் ஆரம்பமாகி விட்டன. சுலபாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஏதோ ஒரு சுகமான தவற்றைச் செய்யத் துணிந்து விட்டாலும் அதைச் செய்யக்கூடாது என்று ஒரு கணமும் செய்து சுகம் காணவேண்டும் என்று மறு கணமுமாக மாறி மாறித் தோன்றின. மாந்தோப்பின் அருகே ஓடை நீர் சலசலக்கும் ஒலி ஜலதரங்கமாய் ஒலித்தது. ஆகாயம் நீலப் படுதாவாய் மேலே விரிந்து கிடந்தது. ஒரு கர்மயோகி போல் காரை மாந்தோப்பின் முகப்பில் நிறுத்தி விட்டு எந்தப் பதற்றமும் இல்லாத குரலில், “சுலபா வா! வலது காலை முன் வைத்து இறங்கு” - என்று மணப்பெண்ணுக்குச் சொல்வது போல் சொல்லி அவளை இறக்கி அழைத்துக் கொண்டு உள்ளே ஒற்றையடிப் பாதையில் சென்றாள் கோகிலா. இவர்களது கார் நின்ற இடத்திலிருந்து பத்து நிமிஷம் ஒற்றையடிப் பாதையில் நடக்க வேண்டியிருந்தது. அந்த ஒற்றையடிப் பாதை கொஞ்சம் மேடாயிருந்த பகுதியிலிருந்த ஒரு குடில் போன்ற சிறிய கட்டிடத்துக்கு இட்டுச் சென்றது, கீழே சற்றுப் பள்ளத்தாக்கான பகுதியில் ஹாஸ்டல் போலத் தெரிந்த விளக்குகள் மின்னும் ஓர் நீண்ட கட்டிடத்தைக் காட்டி, “அதுதான் வழுக்கி விழுந்த பெண்கள் மறுவாழ்வு விடுதி! பக்கத்தில் தெரிவது அவர்களுக்குப் பல்வேறு தொழில்களைக் கற்பிக்கும் பயிற்சி நிலையம். எதிரே தெரிவது திவ்யானந்தர் தங்கும் குடில்” - என்று மெல்லிய குரலில் சொன்னாள் கோகிலா. அதில் மின் விளக்கு இல்லை. அகல் விளக்கின் ஒளியில் அமர்ந்து தியானத்தில் இருந்த திவ்யானந்தர் காலடி ஓசை கேட்டுக் கண் திறந்தார். இளஞ்சூரியனைப் போல் அழகாயிருந்தார் திவ்யானந்தர். திருப்பதியில் கர்ப்பக் கிருகத்தில் உணர முடிந்த அதே சந்தனம் கருப்பூரம் இணைந்த நறுமணம் நிலவியது குடிலில். இருவரும் வணங்கினர்கள். கோகிலா சொன்னாள். “சுவாமி! நான் அன்னிக்கு வந்து சொன்னேனே என் சிநேகிதி... அது இவதான்! உங்க புத்தி மதிதான் இவளுக்குப் புதுவாழ்வு காண்பிக்கணும்.” சுலபா மீண்டும் அவரை வணங்கினாள். “உங்கள் உபதேசம் இவளை நல்வழிக்குக் கொண்டு வரும்னு நம்பிக்கையோடப் போறேன் சுவாமி! காலையில் வருகிறேன்” - என்று கோகிலா புறப்பட்டு விட்டாள். உபசாரத்துக்காகக் கூட திவ்யானந்தர் ‘நீயும் இரேன்’ என்று கோகிலாவைக் கேட்கவில்லை. சுலபா அப்படியே கட்டுண்டு உட்கார்ந்திருந்தாள். கீழே கார் ஸ்டார்ட் ஆகித் திரும்புகிற ஓசை கேட்டது. கோகிலா புறப்பட்டு விட்டாள். எதிரே மாயக் கண்ணனே துறவியாக அமர்ந்திருப்பது போல் ஒரு தேஜஸ். ஒரு காந்தி, ஒரு தெய்வீகப் புன்னகை. “உன் மனசில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லம்மா?” சுலபாவுக்கு முதலில் பேசவரவில்லை, பொய்யும் சொல்ல வரவில்லை! நிஜம் பேசவும் முடியவில்லை. “உன்னைப் பார்க்கும்போது சாட்சாத் சரஸ்வதியே மனக் கஷ்டத்தோடு என் எதிரே வந்து உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது.” சுலபா மெல்ல விசும்பினாள் கண்களில் நீர் கரந்து சுரந்து வெளிப்பட்டது. காணாமல் போன தாயைக் கண்ட குழந்தை போல் திடீரென்று அழ ஆரம்பித்தாள். பெண்ணே! நீ அழுவது தவறில்லை! அழுகையில் தான் துயரங்கள் கரையும். அழாமல் எந்தப் பெண்ணும் இங்கே வருவதில்லை. ஆண்களின் பொறுப்பற்ற ஆசைகளில் நைந்த பல இளம் பெண்களை மீட்டுத் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்து வாழ்வில் நம்பிக்கையூட்டி வழிகாட்டி அனுப்பும் பணியைத்தான் இந்த ஆசிரமத்தில் செய்து வருகிறோம்! நீயும் இங்கே நம்பிக்கை பெறமுடியும்.” “உங்கள் பணியைக் கேட்டு என் இதயம் கரைந்து உருகுகிறது சுவாமி.” டயலாக் மாதிரி எப்படியோ ஒரு வாக்கியம் பேசிவிட்டாள் சுலபா. ஞாபகம் வந்து செக்கைக் கைப்பையிலிருந்து எடுத்து எழுந்து வணங்கி அவர் காலடியில் வைத்தாள். தங்கத்தில் வடித்து மெருகிட்ட மாதிரி எத்தனை அழகான, திருவடிகள். அந்தக் கால்களையே ஆசைதீர முத்தமிடலாம் போலிருந்தது சுலபாவுக்கு. “இது என்ன?” “உங்கள் சேவையில் என் பங்கும் இருக்கட்டும் என்று...” “நீ மிகவும் பெரிய வசதியுள்ள குடும்பத்துப் பெண் என்று உன் சிநோகிதி சொன்னாள்.” “...” “ஏழைகளை விட வசதியுள்ளவர்கள் தான் அதிகம் வழி தவற நேரிடுகிறது.” “ஒரு படுபாவி என் வாழ்வையே சீரழித்து விட்டான் சுவாமீ! என்னை ஆசைகாட்டி மோசம் செய்து எங்கோ எப்படியோ கூட்டிச் சென்று கடைசியில் ஒரு விபசார விடுதியில் விற்றுவிட்டு ஓடிவிட்டான்.” “உன்னைப் போன்ற பெரிய குடும்பத்துப் பெண்கள் எப்போதும் பண உதவி செய்ய முன்வருகிறீர்களே ஒழிய இப்படி விடுதியில் நேரடியாக ஈடுபட்டுச் சேவை செய்ய முன் வருவதில்லை. உன் தோழியும் அன்று ஒரு தொகை டொனேஷன் கொடுத்தாள். நீயும் தொகை போடாமல் ஒரு செக் கொடுத்திருக்கிறாய்!” “என் மாசு நீங்க எப்படிப்பட்ட சேவையைச் செய்யும்படி நீங்கள் கட்டளையிட்டாலும் நான் செய்யத் தயாராயிருக்கிறேன்.” “திருந்துவதற்கு விரும்புகிற யாரும் தவற்றை உணரவும், ஒப்புக் கொள்ளவும் துணிய வேண்டும். ஏழைப் பெண்கள் தவறுகளை உணர்ந்து ஒப்புக் கொண்டு திருந்துகிறார்கள். உங்களைப் போன்ற வசதியுள்ள குடும்பத்துப் பெண்கள் தவறுகளை மறைத்துக் கொண்டு வாழப் பழகுகிறீர்கள். இதுபோன்ற இடங்களுக்கு வரக்கூடப் பிறர் பார்க்காத நேரம், பிறர் பார்க்காத தனிமை எல்லாம் உங்களுக்கு வேண்டியிருக்கிறது.” “...” “வழுக்கிவிழுந்த பெண்களின் இல்லத்தில் நம்மைப் பார்த்ததாக யாரும் யாரிடமும் பேசிவிடக் கூடாது என்ற பயம் பாசாங்காக உருவாகி விடுகிறது.” சுலபாவுக்குச் சுரீரென்று உரைத்தது. “எளியேனைப் பொறுத்தவரை பாசாங்கு எதுவுமில்லை சுவாமீ! வீடு வாசல், பணம், சுகம், எல்லாவற்றையும் நான் மதிக்கவில்லை. நீங்கள் இடும் கட்டளையைச் சிரமேற் கொண்டு செய்யத் தயாராயிருக்கிறேன்.” “இப்படிப் பெண்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் ஆசிரமத்தை என்போல் ஒரு துறவி நடத்துவதில் சில தர்ம சங்கடங்கள் இருக்கின்றன, இந்தப் பணியில் எனக்கு உதவியாக லட்சுமீகரமான முக அமைப்புள்ள - பார்த்தால் விரசமான எண்ணமே வராத தெய்வீக முக ராசியுள்ள ஒரு பெண்மணி எனக்குத் தேவை. உன்னைப் பார்த்தால் அப்படி முகராசி தெரிகிறது. என்னோடு இந்தப் பணியில் ஈடுபடும் துணிவு உனக்கு வருமா? எந்த ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால் எனக்கே என் தாயின் முன் நிற்பது போன்ற உணர்வு வருகிறதோ அப்படி ஒரு முகம் உனக்கு இருக்கிறது!” “சுவாமி! நிஜமாகவா? ஆண்களின் சாலங்களில் நைந்த முகத்தைப் பார்த்தா இப்படிச் சொல்கிறீர்கள்...” “உன் முகத்தில் ஓர் ஆசிரமத்தின் அன்னையைப் பார்க்கிறேன். இந்தத் திவ்யசேவாசிரமம் இதன் அன்னையாக உன்னை அழைத்தால் நீ வருவாயா பெண்ணே?” “நானா?... இந்தப் பாவ ஜென்மமா?” “வீணாகச் சுயநிந்தனை செய்து கொள்ளாதே! எந்த நிமிஷம் இந்த ஆசிரமத்தின் அன்னையாக வரச் சம்மதிக்கிறாயோ அந்த நிமிஷமே உன் கோலம் மாறவேண்டும். எளிய காவிநிறச் சேலை. இங்கேயே இந்த அலமாரியில் அப்படிச் சேலைகள் நிறைய வாங்கி வைத்திருக்கிறோம். சேருகிற பெண்களுக்கு இங்கே அது தான் யூனிஃபாரம். நீயும் அதை அணிய வேண்டும். நகைகள், ஆடம்பரங்கள் கூடாது! இந்தப் பணியை விடத் தொகை போடாத உன் செக் கூட எனக்குப் பெரிதில்லை.” “யோசிக்க நேரம் கொடுங்கள்.” “பணக்காரர்களால் யோசிக்காமல் நல்லது கூடச் செய்ய முடியாது. காரை விட்டுவிட, பங்களாவை விட்டுவிட பணத்தை விட்டுவிட, மமதையை விட்டுவிட, எல்லாவற்றுக்கும் யோசிக்க வேண்டும். யோசித்தபின் விட முடியாது. விட்டபின் யோசித்துப் பயனில்லை. நான் கூட விஜயவாடாவில் ஒரு கோடிசுவரனின் ஒரே மகனாகப் பிறந்தேன். யோசிக்காமல் திடீரெனக் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் இப்படிச் சாமியாரானேன்.” ஐந்து நிமிஷ மெளனத்தின் பின் மீண்டும் அவரே கூறினர்: “நல்லது செய்ய யோசிப்பதற்குள் சிலசமயம் நம் வாழ்வே முடிந்து போய் விடுகிறது! முடிவதற்குள் ஆரம்பிக்க வேண்டும் நாம்.” சுலபாவுக்குத் தான் எதற்காக அங்கே வந்தோம் என்பதே வேகமாக மறந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த தீப்பிழம்பின் வேகத்தில் உள்ளே சில எரிந்தன. பொசுங்கிப் பொடிப் பொடியாயின. அவர் பேசிக் கொண்டிருந்தபோதே குழந்தைபோல் தூங்கி விட்டார் அங்கே. வெறும் தரையில் - அப்படியே வலது கையை மடித்து வைத்துக் கொண்டு தூங்கும் அந்தச் சுந்தர புருஷனின் அருகே நெருங்கி நடுங்கும் கைகளினால் தன் மடியில் தலையை எடுத்து வைத்துக் கொண்டாள் அவள். சாட்சாத் திருப்பதிப் பெருமாளையே எடுத்து மடியில் கிடத்திக் கொள்வது போலிருந்தது. |