18 பொழுது விடிவதற்கு இன்னும் சில நாழிகைகள் இருந்தன. ‘கருப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?’ - என்று பாவித்தபடியே அந்தச் சந்தனம் மணக்கும் சிரசைத் தன் மடியிலிருந்து தரையில் அலுங்காமல் எடுத்துவிட்டு உறங்கச் செய்து பின் சுலபா எழுந்திருத்தாள். இப்போது அவள் மனசில் பாரமோ பரிதவிப்போ இல்லை. வெளியேயும் அவளுள்ளேயும் விடிந்து கொண்டிருந்தது. அங்கே குடிலிலிருந்தே பின்புறமாக ஓடைக்கு இறங்குவதற்கு வழி இருந்தது. கை வளைகள், கழுத்துமணி, மோதிரம், தோடு, மூக்குத்தி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் களைந்து குடிலினுள் வைத்து நீராடி வரச் சென்றாள். திரும்பி வந்து அவர் முந்திய இரவில் சுட்டிக் காட்டியிருந்த அந்த அலமாரியைத் திறந்து அந்த ஆசிரமப் பெண்கள் கட்டும் யூனிஃபாரமான சிவப்பு நிறச் சேலையில் ஒன்றை எடுத்துத் தானும் அணிந்தாள். கருமை மின்னும் ஈரக் கூந்தல் பிடரியில் புரண்டது. அப்போது திவ்யானந்தர் கண் விழித்து எழுந்திருந்தார். இன்னும் இருள் முழு அளவில் பிரியவில்லை. மங்கிய விளக்கொளியில் காவி உடையில் அவளைப் பார்த்த அவர் இதமான குரலில் மெல்ல வினவினார்: “யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டாய் என்று நினைக்கிறேன்.” “யோசித்து முடிக்கவில்லை! முடிவதற்குள் யோசித்து விட்டேன்.” “உனது தொகை போடாத செக்கை விடப் பெரியது இது. பண தானத்தை விட சிரமதானம் எனக்குப் பிடிக்கும்.” அவர் நீராடச் சென்றார். கோகிலா வருகிற நேரமாயிற்று. சுலபா அவளை எதிர் கொள்ள முகப்பை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்தாள். இப்போது அவள் மனம் பூப்போல் மிருதுவாயிருந்தது. சுற்றிலும் அங்கங்கே மலர்ந்து கொண்டிருந்த பவழமல்லிகைப் பூக்கள் இவளுடைய இருதயத்துக்குள் முந்திய இரவே மலர்ந்திருந்தன. மணம் பரப்பின. அந்த மாந்தோப்பு, அதன் குளிர்ச்சி, அதன் சமுதாயப் பணி, அதன் தொண்டுகள் எல்லாமாகத் திடீரென்று அவளு டைய மனத்தில் மரியாதைக்குரியதொரு மூப்பையும், தாய்மையையும் கொண்டு வந்திருந்தன. திடீரென்று ஒரே ஒரு ராத்திரியில் பல அநாதைப் பெண் குழந்தைகளுக்கும் ஒரே ஒரு விவரம் தெரிந்த ஆண் குழந்தைக்கும் அவள் தாயாகி இருந்தாள். தூரத்தில் ஓடை நீர்ப்பரப்பில் மூழ்கும் தீக் கொழுந்தாய் மின்னிய அந்தத் துறவியின் உடம்பை நோக்கி, ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ - என்று பிரார்த்தித்தாள் சுலபா. அவளது காமங்கள் மாறியிருந்தன. தகனமாகியிருந்தன. அவள் யாரையே எரிக்க வந்தாள். எரிந்து போயிருந்தாள். ஜெயிக்க வந்தாள். தோற்றுப் போயிருந்தாள். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த மின்னல் தாக்கி அவள் உள்ளேயிருந்த அசுர குணங்கள் சாம்பலாகி விட்டிருந்தன. இருபத்தெட்டு வயது பிறந்தவுடன் அத்த இருபத்தெட்டு வயதின் மொத்தமான பாவச் சுமைகளையும் அழுக்குகளையும் இப்படி ஒரு அதிகாலையில் ஒரு காட்டு ஓடையில் நீராடிக் களைந்து விட்டு புதிதாக முதல் வயதிலிருந்து மறுபடி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த மாதிரி மனசு இந்த விநாடியில் சத்துவகுணமே நிரம்பிச் சாந்தமாயிருந்தது. ‘ஏன் இப்படி மாறினோம்? எந்த நொடியில் மாறினோம்? எதற்காக மாறினோம்?’ - எல்லாமே மாயம்போல் நடந்து முடிந்திருந்தன. நம்பமுடியாத மாற்றம். இனி மாறவே முடியாத புது நம்பிக்கை. கார் வருகிற ஓசை கேட்டது. கோகிலா தனது இந்தக் கோலத்தையும் இந்த முடிவையும் எப்படி எதிர் கொள்வாள் என்று நினைத்துக் கற்பனை செய்ய முயன்றாள் சுலபா. ஒற்றையடிப் பாதையில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். கோகிலாவின் முகத்தில் ஒரே வியப்பு. “இதல்லாம் என்னடீ வேஷம் சுலபா! மாற்றுப் புடவைக்காக இந்த யூனி ஃபாரத்தை எடுத்துக்கிட்டியா?” “நேற்று வரை வாழ்விலும், படங்களிலும் நான் போட்டவைதான் வேஷம் கோகிலா! இன்றும் இனியும் இதுதான் நிஜம்!” அவள் குரலிலிருந்த உண்மையையும், உருக்கத்தையும் பார்த்துப் பதறிய கோகிலா “என்னடீ ஆச்சு உனக்கு” என்று அருகில் வந்து கைகளைப் பற்றினாள். “ஒன்றும் ஆகவில்லை! இந்தா! இதை நீ எடுத்துக் கொண்டு போ.” கோகிலா அந்தப் பொட்டலத்தைக் கை நீட்டி வாங்கினாள். பிரித்துப் பார்த்தாள். சுலபாவின் விலையுயர்ந்த வைரத் தோடுகள், மூக்குத்தி, மோதிரம், மாலை, வளைகள் எல்லாம் அதில் இருந்தன. “இதுவரை பழகிய நமது சிநேகிதத்தின் அடையாளமாக இவற்றை இனி நீ வைத்துக் கொள்.” “விளையாடதேடீ! இதெல்லாம் இந்த வயசிலே உன்னாலே முடியாது. நான் என்னமோ நெனைச்சு இங்கே உன்னை இட்டுக்கொண்டு வந்துவிட்டேன். பிள்ளையார் பிடிக்கக் குரங்காப் போச்சே? இதென்னடீ விபரீதம்?... பாதி நிற்கிற படம் எல்லாம் என்ன ஆறது? வீடு, வாசல், சொத்துச் சுகத்தை எல்லாம் விட்டு இங்கே இந்தக் காட்டில் சாமியாரிச்சியா இருக்கணுமா நீ? நான் விடமாட்டேன். இந்தக் கோர வேஷத்தைக் களைந்துவிட்டு என்னோடு உடனே புறப்படுடீ!” கோகிலா உணர்ச்சி வசப்பட்டுப் பதறினாள், இன்னும் சிறிது நேரத்தில் அழுது விடுவாள் போலிருந்தது. அவளால் சுலபாவின் இந்த ‘மெடமார்பஸைத்’ தாங்க முடியவில்லை. சுலபாவிடமோ கோகிலாவின் இந்த வார்த்தைகள் எந்த உணர்வையும், எந்தச் சலனத்தையும் உண்டாக்கவில்லை. தெளிவான - நிதானமான குரலில் கோகிலாவுக்குப் பதில் சொன்னாள் அவள். “இனி என்னல் நடிக்க முடியாது! நான் வாழவேண்டும். வாழப் போகிறேன். ஒப்பந்தம் உள்ள புரொட்யூஸர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு. ஆடிட்டிரையும், கவிதாவையும் உரிய ஏற்பாடுகளுடன் இங்கே அனுப்பி வை. கணக்குகளை ஒழுங்கு செய்து என் சொத்துக்களை இந்த ஆசிரமத்துக்கு எழுதி வைக்கணும்.” “சுலபா! இதென்னடி விபரீதம்...? அடி பாவீ!” இதற்குப் பதில் சொல்லாமல் கோகிலாவைக் கும்பிட்டு விட்டு ஒற்றையடிப் பாதையில் ஒரு மெளன நிழலாய்த் திரும்பி நடந்தாள் சுலபா. “தனது 28-வது பிறந்த நாளில் திரைவானிலிருந்து ஒரு புகழ்பெற்ற நட்சத்திரம் தனது எல்லாப் பிரகாசங்களுடனும் அழகுடனும் ஆன்மீகத் தோட்டத்துக்குள் உதிர்ந்து விட்டது” - என்று தேடி வருகிற பத்திரிகைக்காரர்களுக்குத் தான் சொல்ல வேண்டிய வாக்கியத்தை யோசித்தபடியே காரை நோக்கித் திரும்பி நடந்தாள் கோகிலா. (முற்றும்) |