10 ‘அவள் தான் இணையற்ற பேரழகி’ என்று ஒப்புக் கொண்ட எல்லாரையும் சுலபா மன்னிக்கத் தயாராயிருந்தாள். அழகில் அவளுடைய ‘சுப்ரீமஸியை’க் கேள்வி கேட்கக் கூடியவர்கள் சர்ச்சை செய்யக் கூடியவர்கள் எல்லாரையும் அவள் வெறுத்தாள். விரோதித்துக் கொள்ளக் கூடத் தயாராயிருந்தாள். காமிராமேனிடம் கூட முதலில் அவளுக்கு ஏற் பட்ட விரோதம் பின்பு அவர் நேரில் வந்து ‘உங்களைப் போலக் காமிராவுக்கு அழகான முகம் வேற இல்லே’- என்று புகழ்ந்தவுடன் மாறிவிட்டது. மன்னித்து விட்டாள். சுய கர்வத்தை மிதக்கச் செய்கிற தாழ்வு மனப்பான்மை அவளுள்ளே நிரம்பியிருந்தது. அந்தத் தாழ்வு மனப்பான்மை மட்டும் உள்ளே நிரம்பியிராவிட்டால் அவளுடைய கர்வம் மேலெழுந்து நிற்காமல் போயிருக்கும். தன் வேலைக்காரர்கள் கீழ் நிலையிலுள்ளவர்கள், ஊழியம் புரிகிறவர்கள் கால்களில் விழுந்து கும்பிடுவது அவளுக்குப் போதையூட்டியது. அதை அவள் விரும்பினாள். குப்பையரெட்டி அவளை அன்று ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. இன்றோ பலர் அவளைத் தெய்வமாக மதித்தார்கள். வணங்கினார்கள். என்ன மதிப்பு இன்று வந்தாலும் குப்பையரெட்டி அன்று மதிக்காததும் சேர்த்தேதான் நினைவு வந்தன. அதை மறக்கவே முடியவில்லை. ஆறாத வடுவாக அது உள்ளே இருந்தது. சினிமா சம்பந்தப்பட்டவர்களின் பிள்ளைகள் பெண்கள் கலியாணமாகிப் பார்க்க வந்தால் அவர்கள் விழுந்து கும்பிட்டு ஆசி கேட்கிறார்களா இல்லையா என்று கவனித்தே அவர்களுக்குத் தான் செய்ய வேண்டியதைச் செய்தாள். இது பற்றிக் காரியதரிசி கவிதாவுக்கு ஸ்டான்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இருந்தன. நம்பர் டூ கணக்கு ரொக்கத் தொகையிலிருந்து நூறு ரூபாய் உறையிலிட்டது, ஐநூறு ரூபாய் உறையிலிட்டது என இரண்டு கவர்களைத் தயாராக வைத்திருப்பாள் கவிதா. தேடிவந்த மணமக்கள் காலில் விழுந்து கும்பிட்டால் எஜமானியிடம் ஐநூறு ரூபாய் உறையை நீட்டுவாள். காலில் விழுந்து கும்பிடா விட்டால் வெறும் நூறு ரூபாய் உறைதான். கவிதாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்த போது சுலபா அதில் ஆர்வமே காட்டாதது போல நடந்து கொண் டாள். “அவசரப்பட்டுக் கல்யாணம் கிலியாணம்னு ஆம்பிளையோட மாட்டுத் தொழுவத்திலே தாலிக் கயிற்றாலே கட்டப்பட்டு உள்ளே போயிறாதே. உன் சுதந்திரம் எல்லாம் பறிபோய் நிற்கப் போறே” - என்று சுலபா கூறியபோதே திருமணங்களின் மேலும் ஆண்களின் மேலும் அவளுக்கு இருந்த வெறுப்பும் ஆத்திரமும் புலப்பட்டன. தான் கலியாணம் செய்து கொள்வதற்கு முன்பே சுலபாவிடமிருந்து விலகிட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொள்வதுண்டு. கலியாணத்திற்குப் பின் சுலபாவிடம் வேலை பார்ப்பது மிகவும் சிரமம் என்று கவிதா தனக்குத் தானே புரிந்து கொண்டிருந்தாள். சுலபாவும் ஜாடைமாடையாக அதைத் தெரிவித்திருந்தாள். “பெண்களை அவமானப் படுத்தறாங்க, அலட்சியம் செய்யிறாங்க, கொடுமைப் படுத்தறாங்க, கேவலப் படுத்தறாங்க... கொத்தடிமை மாதிரி வேலை வாங்கறாங்க. பிள்ளை பெறுகிற மிஷின் மாதிரித் தேய்ந்துத் துரு பிடிக்க விடறாங்க, கொஞ்சம் முதுமை வந்ததும் புறக்கணிக்கிறாங்க.. .இத்தனை பண்ணியும் எந்தப் பொம்பிளையும் ஆம்பிளை கையாலே தாலி கட்டக் கழுத்தை நீட்டிக்கிட்டு ஓடறதை இன்னும் நிறுத்தலே. ஆம்பிளைகிட்ட அப்பிடி என்னதான் மயக்கமோ தெரியிலே” என்று கடுமையாக விமர்சிப்பாள் சுலபா. கவிதா இவற்றையெல்லாம் விமர்சிக்காமல் விவாதிக்காமல் பொறுமையாகக் கேட்டுக் கொள்வாள். விவாதிப்பதும், விமர்சிப்பதும் எஜமானிக்குப் பிடிக்காதவை என்பது தான் காரணம். இந்தப் போக்கைப் பற்றி எஜமானியின் பொருளாதார ஆலோசகரும், தன் மாமாவுமான கனகசபாபதியிடம் மெதுவாகப் பலமுறை பிரஸ்தாபித்து விவாதித்திருக்கிறாள் கவிதா. கவிதாவைப் போன்ற திருமணமாகாத ஓர் இளம் பெண்ணிடம் எந்த அளவு இதற்கு விளக்கமாகப் பதில் சொல்லலாமோ அந்த அளவு கனகசபாபதியும் பதில் சொல்லியிருந்தார். வரவர இப்படிப் புகார் கவிதாவிடம் இருந்து அதிகம் வந்தது. “எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லிப் போரடிக்கிறாங்க! அத்தனை ஆம்பளைங்களும் நரமாமிச பட்சிணிங்கிறாங்க, அதுக்கு நான் உடனே கைதட்டி சபாஷ் சொல்லணும்னும் ஆசைப்படறாங்க மாமா! ஒரே ரோதனையாப் போச்சு...” “இந்த விஷயத்திலே அவள் ஒரு ‘சைக்காலஜிகல் மித்’ அதாவது மனோதத்துவப் புதிர் கவிதா. ‘ஃபெமினிஸ்ட்’னு கூட ரொம்ப கெளரவமாகச் சொல்லிவிட முடியாது. இதில் அவளை நாம மாத்தறது முடியாத காரியம். நமக்கு ஒத்து வர்ர வரை இருக்கலாம். பிடிக்கலைன்ன முதல்நாள் சொல்லிட்டு மறு நாளே ஒதுங்கிக்கலாம்... தப்பில்லே... கிட்டத்தட்ட அலுங்காமல் குலுங்காமல் மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறே! காரிலே கூட்டிக்கிட்டுப் போய்க் காரிலேயே வீட்டு வாசல்லே கொண்டு வந்து டிராப் பண்ணிடறா. கோடிக்கணக்கிலே வெள்ளையும் கறுப்புமாகச் சொத்தைச் சேத்து வச்சுட்டுப் பூதம் காக்கிற மாதிரித் தனியே காத்துக் கிட்டிருக்கா... உனக்கோ இன்னும் ரெண்டு மூணு வருஷத்திலே கலியாண ஏற்பாடு எதுவும் நாம பண்ணப் போறதில்லே. அதுவரை பல்லைக் கடிச்சுக் கிட்டுப் பொறுமையா இருந்துடேன். கலியாண ஏற்பாடுன்னு வர்ரப்போ நானே சுலபா கிட்டப்போயி, ‘நாளையிலேருந்து கவிதா வேலைக்கு வரமாட் டாள்’னு சொல்லிடறேன். அதுவரை எனக்காகப் பொறுத்துக்கோ! ஆம்பளை செகரெட்டிரி அவளுக்குப் பிடிக்காது. வேற பொம்பளைங்களை விடறது நம்பிக்கையில்லே. என் இண்ட்ரஸ்டிலேயாவது நீ அங்கே இருந்தாகணும். அவளோட நம்பர் டூ அகவுண்ட் பணத்திலே என்னோட க்ளையண்ட்ஸ் நெறையப் பேர் கடன் வாங்கியிருக்காங்க. நான் சம்பந்தப் பட்டிருக்கேன்” இவ்வளவும் கேட்ட பின் வேறு வழியின்றி “சரி மாமா! பொறுத்துக்கிறேன்” என்பாள் கவிதா. விரக்தியையும் ஆசைகளையும் பக்கத்தில் பக்கத்தில் வைப்பது, தளிரையும் நெருப்பையும் அருகருகே இருக்கச் செய்வதுபோல் தான். சுலபாவின் அருகே கவிதாவும் அப்படித்தான் இருந்தாள். சதா காலமும் சுலபாவின் விரக்தியான ஆண் எதிர்ப்புப் பிரசாரத்தைக் கேட்டுக் கேட்டு இளம் தளிராக இருந்த அவள் வெதும்பினாள் வாடி வதங்கினாள். சபித்தாள். ஒருநாள் சுலபா ஏதோ ஸ்டூடியோவில் படிப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அன்று லீவு போட்டிருந்த கவிதாவை டாக்ஸி ஸ்டாண்ட் அருகே ஓர் அழகிய இளைஞனோடு பார்க்க நேர்ந்து விட்டது. சுலபாவின் ஏ.சி. கார் கவிதாவின் அருகே வந்து ஓசைப் படாமல் நின்றது. “நீ மட்டும் ஏறிக்கொள்” என்று கடுப்போடு அவளை அழைத்தாள் சுலபா. “என் கூட இன்னொரு நண்பர் இருக்கிறார் அம்மா! இன்று நான் லீவு... நாளை உங்களைப் பார்க்கிறேன்' என்றாள் கவிதா. “யாருடி அவன்?” கவிதா இந்த ஆணவமான கேள்விக்குப் பதிலே சொல்லவில்லை. நல்ல வேளையாகக் கவிதா ஏ.சி. காருக்குள் உட்கார்ந்து கதவை அடைத்துக் கொண்டு எஜமானியம்மாளிடம் பேசி விட்டு வந்ததால் அவள் ‘யாருடீ அவன்?’ என்று கேட்டது வெளியே கவிதாவின் காதலனுக்குக் கேட்டிருக்க முடியாது. மெல்ல ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிக் கழற்றிக் கொண்டாள் கவிதா. அந்த ஒரு நாள் அவளுடைய சுதந்திரமான தினம், எஜமானியின் விரக்தியில் இருந்து வெளி உலகத் தென்றலைத் தாராளமாக அநுபவிக்க முடிந்த நாள். “கூப்பிட்டால் போய்விட்டு வருவதுதானே?” என்றான் அவள் காதலன். “ஐயோ போரடிச்சுக் கொன்னுடுவா... இன்னிக்கு நான் லீவு.” “இத்தனை பெரிய ஸ்டார் தெருவிலே பார்த்து ஏ.சி. டயோட்டாவை அருகில் கொண்டு வந்து நிறுத்திப் பிரியமாக் கூப்பிடறப்பப் பிகு பண்ணிக்கிறியே?” “உங்களுக்குத் தெரியாது! அந்த ஏ.சி.க் காருக்குள்ளே ஒரே புழுக்கமா இருக்கும். அவங்க சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ரம்பமா அறுப்பாங்க.” “நீ அவங்க கிட்டக் கொஞ்சம் மரியாதையா நடந்திட்டிருக்கணும் கவிதா” என்றான் அவள் காதலன். அந்தப் பேச்சை மாற்றி அவனைத் தன் உலகுக்குள் கொண்டு வர அவள் மிகவும் சிரமப்பட்டு முயல வேண்டியிருந்தது. லிவு போட்டுவிட்டு வந்தபின்னும்தேடிவந்து தன்னுடைய சுதந்திரத்தில் குறுக்கிட்ட எஜமானியம்மாள் மேல் கோபம் கோபமாக வந்தது கவிதாவுக்கு. |