2 எந்த விடுதிக்கு அவளுக்குத் தெரியாமலே அவள் விற்கப்பட்டிருந்தாளோ அந்த விடுதியின் அழுக்கடைந்த நாள்பட்ட நாற்றமெடுத்த படுக்கையிலிருந்து அதிர்ஷ்டம் அவளைக் காப்பாற்றியது. ஏதோ ஒரு பலவீனமான நிலையில் அங்கே அவளிடம் வந்த ஒரு தயாரிப்பாளர் சினிமாவுக்கான முகக்கட்டு அவளிடம் இருப்பதாகக் கண்டு பிடித்து அவளை அந்த நரகத்திலிருந்து விடுவித்துத் தமக்கு மட்டுமே உரிமையாக்கித் தனியாக ஒரு சிறிய வீட்டில் குடியமர்த்தினார். அவளை அவர் மட்டுமே அநுபவிக்க முடிந்தது. முன்பு தசை வியாபார விடுதியில் இருந்தவரை எதுவும் அவளுக்கு என்று தனியாகவோ, சொந்தமாகவோ இருந்ததில்லை. அவளுடைய உடல் உட்படத்தான். அதுதான் அந்த விடுதி நடைமுறை. அங்கே புடைவை, சோப்பு, சீப்பு, அலங்காரத்துக்கான கவரிங் அணிகலன்கள் எல்லாமே விடுதிக்குச் சொந்தம். மாலை வேளைகளில் தொழிலுக்கு அணிவகுத்து நிற்பதற்கு முன் அவற்றை அவரவர்கள் உபயோகிக்கலாம். கிராக்கிக்குத் தகுந்த மாதிரி எதிர்பார்க்கிற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாதிரி யார் வேண்டுமானால் அவற்றை அணிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் அழுக்கடைந்த கிழிந்த கவர்ச்சியற்ற அவரவர்களுடைய சொந்த உடைகளைத்தான் அவர்கள் அணிந்து கொள்ள வேண்டும். இதுதான் அந்த விடுதியின் நடைமுறையாயிருந்தது. எல்லார்க்கும் எல்லாம் சொந்தம் - யாரும் எதையும், எவரையும் தனியாக உரிமை கொண்டாட முடியாது என்பது போல ஒருவகைப் பொது நிலைமைதான் அங்கே நிலவியது. அங்கிருந்து அவளைப் பிரித்துத் தமது தனியுடைமை ஆக்கிக் கொண்ட கிழட்டுத் தயாரிப்பாளர் ஒரு நாள் பின் மாலை வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமான போது சுப்பம்மா என்கிற ‘சுலபா’வின் பொற்காலம் தொடங்கியது. அவளை விடுதியிலிருந்து விடுவித்த போதே, ‘சுப்பம்மா’ என்கிற பழைய தேய்ந்து போன - வேலைக்காரிகளுக்கும், எடுபிடிகளுக்கும், பாத்திரம் தேய்ப்பவர்களுக்குமே உரியது போல ஒலிக்கும் பெயரை நீக்கிச் ‘சுலபா’ என்று சினிமாவுக்கே உரிய முறையில் புதுப் பெயரிட்டு ஞானஸ்நானம் செய்திருந்தார் தயாரிப்பாளர். ‘சுலபா’வைத் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், சினிமாத் தொழிலுக்கு நிதியுதவி செய்பவர்களும் ‘சுலபமாக’ அணுக முடிந்தது. இது அவள் வெற்றிகளின் இரகசியம். இந்த ரிஷிமூலம், நதி மூலங்களை இப்போது யாரும் கேட்கத் தயாராயில்லை. ஆனால் அவள் வரலாற்றின் முதல் நுனியில் இப்படிச் சில ‘மூலக்காரணங்கல்’ இருந்தன என்பது மட்டும் உண்மை. இந்த மூலகாரணங்களால் அவள் வளர்ந்திருந்தாள். இவற்றால் அவள் எச்சரித்து வைக்கப்பட்டிருந்தாள் என்பதும், போதுமான அளவு விழிப்புடன் இருந்தாள் என்பதும் உண்மை. மனிதர்களைப் பற்றிய அவளது பால பாடங்களாக இவை உள்ளே நிரம்பியிருந்தன. புகழ், பழி, பேர், பெருமை, எல்லாமே பண வசதியைப் பொறுத்து அமையக் கூடிய சினிமா உலகில் அவள் பெற்றிருந்த அநுபவங்கள் அவளை எதையும் சமாளிக்கிற தயார் நிலையில் வைத்திருந்தன. அநுபவங்களே அவளுடைய பலமாயிருந்தன. வாழ்க்கையில் அநுபவங்களை விடப் பெரிய ஆசிரியன் யாரும் இருக்க முடியாது. பள்ளிக் கூடங்களில் மழைக்கும் ஒதுங்கியிராத அவள் கற்றதெல்லாம் வாழ்க்கை அநுபவங்களிலிருந்துதான். வாழ்வின் அநுபவங்கள் உடனிருந்தே கற்றுக் கொடுப்பவை என்பதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அநுபவங்களின் மூலம் பாடங்கள் பதிவதைப் போல வேறு எவற்றின் மூலமும் அத்தனை அழுத்தமாகப் பதிவதில்லை என்பதைச் சுலபா உணர்ந்திருந்தாள். தடுமாறி விழுந்த அநுபவங்கள் தான் மேற்கொண்டு தடுமாறி விழாமல் அவளைக் காப்பாற்றின என்று சொல்ல வேண்டும். விழுந்தவற்றிலேயிருந்து எழுவதற்கும் எழுந்தவற்றிலே இருந்து இனி விழாமல் இருப்பதற்கும் அவள் தெரிந்து கொண்டிருந்தாள். பரந்து விரிந்த இந்த உலகில் இப்போது அவளுக்கு உண்மையான உறவினர் என்று யாருமில்லை. தொழில் வசதிகளுக்காக வீட்டோடு நீண்ட நாட்களாக உடனிருக்கும் ஆயாக் கிழவி நரசம்மாவைத் தன் தாய் போல் படப்பிடிப்புக்களுக்கும், அவுட்டோர்களுக்கும் அழைத்துச் செல்லுவதுண்டு. நரசம்மாவைத் தவிரக் கடிதப் போக்குவரத்து - வரவு செலவு - கால்ஷீட் - ஷெட்யூல் விவரங்கள் குறித்த டைரி வைத்துக் கொள்ள ஒரு காரியதரிசிப் பெண்ணும் இருந்தாள். ‘கவிதா’ என்று அழகான பெயர் அவளுக்கு. பி.ஏ. பட்டதாரி. தன்னுடைய நம்பர் ஒன், நம்பர் டூ ஆகிய இரண்டு கணக்கு வழக்குகளையும் கூட இவனை நம்பிவிட்டிருந்தாள் சுலபா. ஆனால் அதற்கும் காரணம் இருந்தது. கவிதாவின் தாய் மாமன் தான் சுலபாவின் ஆடிட்டர். அவளுடைய வரவு செலவு இன்கம்டாக்ஸ் - வெல்த்டாக்ஸ் விவகாரங்களை அவர் தான் பார்த்துக் கொண்டார். “வெளி ஆட்கள் யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளாதே! காலம் கெட்டுக் கிடக்கிறது! எதை எங்கே உளறி வைப்பான்கள் என்று தெரியாது! என் மருமகள், தங்கமான பெண். எந்தத் தகவலையும் மூச்சு விட மாட்டாள். எனக்கும் நம்பிக்கையானவள். உனக்கும் நம்பிக்கையானவள். வேலையில்லாமல் இருக்கிறாள், பிரியப்பட்டதைக் கொடு! வாங்கிக் கொள்வாள்” - என்று ஆடிட்டரே கவிதாவைக் கொண்டு வந்து விட்டிருந்தார். அவளைப் பற்றி அவர் சொன்னவை நூற்றுக்கு நூறு உண்மையாயிருந்தன. கவிதா மிகமிக அடக்கமாகவும் நம்பிக்கையாகவும் நடந்து கொண்டாள். நேரம் காலம் கணக்குப் பார்க்காமல் வேலை செய்தாள். வீட்டுக்குப் போவதிலேயே குறியாயில்லை. “கொஞ்சம் வேலை இருக்கிறது. உன் உதவி தேவைப்படுகிறது. இன்னிக்கு மட்டும் இங்கேயே சாப்பிட்டுவிட்டு என்னோடு தங்கிவிடேன்” என்று சுலபா சொல்லி வேண்டிக் கொள்கிற தினங்களில் பிகு பண்ணிக் கொள்ளாமல் அவளுடனேயே தங்கினாள். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவளைப் போலப் பழகாமல் குடும்பத்தில் ஒருத்தியைப் போலப் பழகிய காரணத்தினால் கவிதாவைச் சுலபாவுக்கு மிக மிகப் பிடித்திருந்தது. ஆனாலும் நரசம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டிய இடங்களுக்குக் கவிதாவையும், கவிதாவைக் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டிய இடங்களுக்கு நரசம்மாவையும் கூப்பிட்டுக் கொண்டு போக அவள் முயலுவதே இல்லை. அதில் கவனமாயிருந்தாள். மிகச்சில சமயங்களில் மட்டுமே இரண்டு பேரையும் ஒரே இடத்திற்குக் கூப்பிட்டுக் கொண்டு போக நேரிடும். ஆனால் அப்படி இடங்களும், சந்தர்ப்பங்களும் மிகமிகக் குறைவு தான். மிக மிக அபூர்வம் தான். காரியதரிசி கவிதாவையும் நரசம்மாவையும் தவிர ஒரு சமையற்காரி, ஒரு தோட்டக்காரன், ஒரு வீட்டு வேலைக்காரி, ஒரு டிரைவர், ஒரு கூர்க்கா, ஆகியவர்கள் அந்த பங்களாவில் உண்டு. இரண்டு பசுமாடுகள், ஓர் அல்சேஷியன், நாலு பூனைகள், இவை அங்கிருந்த பிராணிகள். பங்களாத் தோட்டத்தின் ஒரு கோடியிலுள்ள சின்ன அவுட் ஹவுஸில் தோட்டக்காரனும் அவன் குடும்பமும் குடி இருந்தன. காலையில் பால் கறப்பதும், பசுமாடுகளைப் பராமரிப்பதும் கூட அவனிடமும் அவன் மனைவியிடமுமே விடப்பட்டிருந்தன. கூர்க்காவுக்கு வாசலில் கேட் அருகிலேயே ஒரு சிறிய அறை வசிப்பிடமாக அமைந்தது. தோட்டத்துக் குழாய், அவன் குளிக்கக் கொள்ளப் பயன்பட்டது. இருபத்தைந்து முப்பது மனை விஸ்தீரணமுள்ள பெரிய காம்பவுண்டில் கட்டிடம் இருந்த இடம் உள்ளடங்கிய இரண்டு மனை அளவு மட்டுமே. மற்றப் பகுதிகளில் எல்லாம் புல்வெளி, பூஞ்செடி கொடிகள், வாழை, மா, பலா முதலிய மரங்கள் என்று கிளி கொஞ்சும் சோலையாயிருந்தது. அந்தப் பங்களா. வெயிலே உள் நுழைய முடியாது. தோட்டத்து, ‘லானில்’ எப்போதாவது வருஷப் பிறப்பு பொங்கல் என்று அவள் பத்திரிகைக்காரர்களை விருந்துக்கு அழைப்பதுண்டு. இப்போது அம்மாதிரிப் பத்திரிகைக்காரர்களை அழைத்து விருந்து வைத்துப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துப் பப்ளிஸிடி தேடும் ஆசை கூடக் கழன்று போய் விட்டது. புகழ் பெறுகிற வரை ஆதரித்து எழுதுவதற்காகப் பத்திரிகைக்காரர்களுக்கு விருந்து. புகழ் பெற்று உச்சிக்கு வந்ததும் வம்புகள் பண்ணாமலிருக்க, எதிர்த்து எழுதாமலிருக்க தொழிலையும் பெயரையும் பாதிக்கிற கிசுகிசுக்களை எழுதாமலிருக்க என்று எதிர்மறையாக ஒரு பாதுகாப்பு முயற்சி என்பதாகப் பத்திரிகைகளிடம் ஒரு கலைஞனுக்கு இருவகை ஈடுபாடுகள் இருப்பதுண்டு. அதுதான் வழக்கம். ஆனால் வரவர இப்போது கொஞ்ச நாளாக இருவகை ஈடுபாடுகளுமே அவளுக்கு இல்லை. ஏதோ ஒர் இழப்பில், ஏக்கத்தில் அடைய முடியாத எதையோ எண்ணித் தன் எஜமானி தவிப்பது போல் கவிதாவுக்குத் தோன்றியது. அதைச் சுலபாவிடம் எப்படி விசாரிப்பது என்று தயங்கினாள். விசாரிப்பது நாசூக்காக இராததோடு அதிகப் பிரசங்கித்தனமாகி விடுமோ என்றும் பயமாக இருந்தது. விரக்தியும், சலிப்பும் கலையின் எதிரிகள் என்பது கவிதாவுக்குப் புரிந்திருந்தது. அதனால் தான் அவள் தன் எஜமானியைப் பற்றிக் கவலைப் பட்டாள். சுலபாவின் ஆடிட்டரும் தன் தாய் மாமனுமான ஆடிட்டர் கனகசபாபதியிடம் போய் இந்த நிலைமையைத் தெரிவித்து யோசனை கேட்டாள் கவிதா. “ஒரே இடம் ஒரே தொழில், ஒரே மாதிரி மூஞ்சிகளைப் பார்த்துப் ‘போர்டம்’ ஆகியிருக்கும். எங்கேயாவது ஃபாரின் டிரிப் அடிச்சிட்டு வரச் சொல்லி யோசனை சொல்லிப் பாரேன்” என்றார் அவர். “நான் சொல்லப் போய் ஒருவேளை எனக்கு ஃபாரின் டிரிப் போகணும்னு ஆசையோன்னு அவங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கன்னா என்ன செய்யிறதுன்னுதான் பயமா இருக்கு மாமா!” - என்றாள் கவிதா. “அப்போ நீ பேசாமே இரு! நானே ஒரு நாள் நானாத் தேடி வர்ற மாதிரி அவளைத் தேடி வரேன். அப்ப என் யோசனையாக நானே சொல்ற மாதிரி இதைச் சொல்றேன். நீயும் கூட இரு” - என்றார் கனகசபாபதி. அவர் யோசனை கவிதாவுக்குப் பிடித்திருந்தது. “ஒரு மாசம் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜப்பான் எல்லாம் சுத்திட்டு வான்னு’ யோசனை சொல்றேன் பாரு! உடனே சரீன்னுடுவா” - என்றார் அவர். சொன்னபடி அவர் சுலபாவைத் தேடி வந்தார். பேச்சு வாக்கில் தம்முடைய யோசனையைச் சொன்னார். உற்சாகமாக விவரமாக வெளிநாட்டுப் பயணத்தை வர்ணித்தார். |