1

     வேணி இரைக்க இரைக்க ஓடி வந்தாள். மேடு பள்ளங்கள், சரிவுகள் பாராமல் கப்பிச் சாலையைக் குறியாகக் கொண்டு விழுந்தடித்து ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த ஒலிகளும் கூட வந்தன.

     உஷ் உஷ்... உய் உய்... என்ற சீட்டியொலிகள்; செருப்புச் சத்தங்கள், சிரிப்பொலிகள்.

     நீலகிரியின் மூலை முடுக்கு கிராமங்களுக்குரிய ‘நாகரீகங்கள்’ அல்ல இவை. நீலகிரி மலையில் அப்போது திருவிழாக் கூட்டம் கூடும் இளவேனிற் காலம். உதகை நகரில் நெருங்கும் கும்பல், பொழுது போகாமல், டிரான்சிஸ்டர், காமிராப் பெட்டி தூக்குக் கூடைகள் சகிதம் மூலைகளெல்லாம் திர்ய வருவதும் வழக்கம் தான். அருகிலே எங்கேனும் நீர்வீழ்ச்சி பார்க்க வந்த இளவட்டக் கும்பல் போலும்! காற்றுப் புகாத கண்ணாடிச் சட்டை, ஆழ்ந்த வண்ண கால் சராய், அபாயக் கலர் காலுறை தெரியும் பளபளத்த காலணிகள், சினிமாத் தாரகை மீசை அல்லது கோமாளி தாடி, வாரி விட அவசியமில்லாத கிராப்பு இவை போன்ற இளைஞர் நாகரிகங்களில், தனிமையில் அகப்படும் பெண்களை அபாயமற்ற முறையில் கிண்டல் செய்து கொண்டு தொடர்வதும் ஒன்று.

     அவள் தேயிலைத் தோட்டத்தின் குறுக்குப் பாதையொன்றில் புகுந்தாள். அங்கும் புகுந்தது கிண்டல் செய்யும் குழு. பச்சைக் குவியலாகக் குவிந்துள்ள தேயிலைச் செடிகளுக்கிடையே பெரிய பெரிய இலைகளுடன் வளர்ந்த சிறு மரங்களில் ‘டீ டொமாடோ’ பழங்கள் தொங்கின. கையில் அகப்பட்ட பழங்களைத் திருகிக் கடித்துக் கொண்டு அவளை விடாமல் தொடர்ந்தார்கள் அவர்கள்.

     வேணி அந்தக் கப்பிச் சாலையில் நின்றுதான் பஸ்ஸை எதிர்பார்க்க வேண்டும். ஐந்தரை மணி பஸ்ஸென்று பேர் பெற்றது. அது ஆறரை மணிக்குள் வந்தால் அதிர்ஷ்டம் தான். மணியோ ஆறடித்து விட்டது. திரும்பிப் பார்த்து, ‘ஐயா படித்த நாகரிகக்காரர்களே? இதுதான் நீங்கள் படித்த லட்சணமா’ என்று கேட்க நா துடித்தது. ஆனால் பாழாய் போன தைரியம் கேட்கும் வரையில் நிற்கவில்லையே?

     வேணி நாளொரு கொண்டையும் பொழுதொரு பின்னலுமாக அலங்கரித்துக் கொண்டு, உதடுகளில் ஆங்கிலம் கொஞ்ச, நகரத்துக் கல்லூரிகளில் பயின்றவளல்லவே? ஒரு கிராமத்து உயர்நிலைப் பள்ளியில் படித்து விட்டு கிராமங்களில் தொண்டு செய்யவே பயிற்சியும் பெற்றாள். முழுக்க முழுக்க நகர வாசனையே அறியாத மலைக் கிராமங்களில்தான் வேலையும் செய்கிறாள். அவள் இயல்பாகவே பயந்த தன்மை உடையவள். கிராமத்துப் பெண்களுக்கு எழுத்தறிவித்தல், ஒட்டுறவோடும் அன்போடும் வாழ மனப்பான்மையை வளர்க்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குழந்தைகளை சீரிய முறையில் பேணி வளர்க்கவும், சுத்தமாகவும் நோய்களுக்கு இடங்கொடாமலும் வாழ உதவுதல் முதலிய எல்லாப் பணிகளும் அவளுக்குப் பொறுப்பானவை.

     கிராமம் கிராமமாக அவளைப் போன்றதொரு இளம் பெண் நடந்து, இப்பணிகளை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதான செயலாக இல்லை. இளந்தலைமுறையின் படித்த ஆண்கள் தன்னந்தனியே வழியில் செல்லும் பெண்ணை இவ்வண்ணம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்களே?

     வேணி எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள். மாலைக் குளிர் காற்று, அவளைச் சிலிர் சிலிர்க்கச் செய்தது. கதர்ச் சேலையின் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு சரிவில் வேகமாக இறங்கி வந்தவள் திடுக்கிட்டு நின்றாள். காப்பிச் செடியின் அடியில், பெரியதொரு பாம்பு! நடு வயிறு விழுங்கிய இரையைக் காட்டியது!

     “ஐயோ!”

     அவளையுமறியாமல் அவள் கத்திக் கொண்டு நின்றதைத் தொடர்ந்த கோஷ்டி கவனியாமலிருக்குமா?

     “டேய், பாம்புடா!” என்று ஒருவன் கூவினான்.

     அடுத்து பெரிய கல்லொன்று பறந்து வந்து பாம்பின் வீங்கிய வயிற்றைத் தாக்கியது. வேணி கண்களை மூடிக் கொண்டாள்.

     தொடர்ந்து கற்கள் தப்திப்பென்று விழும் ஓசை.

     பலவித மணங்கள் அவளை நெருங்கிச் சூழ்ந்தன.

     “பாம்புச் செத்துப் போச்சு மிஸ். நீங்கள் போகலாம்.”

     “இதோ இவன் தான் ஹீரோ. மிஸ்... பார்டன் பேரென்னவோ?”

     வேணி, மறுமொழியே கூறாமல் ஓடினாள்.

     “அட, ஒரு ‘தாங்க்ஸ்’ கூடச் சொல்லாமல் ஓடுதடா!”

     “அது பட்டிக்காடு போலிருக்கிறது!”

     ஹோ என்ற சிரிப்பொலி அவள் செவிகளைத் தாக்கியது. அவர்கள் மறுபடியும் “பாம்பு, பாம்பு” என்று அச்சுறுத்தினாலும் வியப்பில்லை.

     ஓரு வழியாகச் சரிவைக் கடந்து, பாதைக்கு இறங்கினாள் வேணி. உதகை நகரிலிருந்து, இருபத்தைந்து மைலில் உருவாகிக் கொண்டிருந்த அணைக்கட்டுப் பிராந்தியத்தை இணைக்கும் சாலை அது. அங்கிருந்து ஏழாவது மைலில் உள்ள தூதூர் கிராமம் அவளுடைய இருப்பிடம். பச்சையான மலைச்சரிவுகளினூடே தட்டுப்போல் செல்லும் வளைந்த சாலையில் நின்று அந்திப் பொழுது அனுபவிக்க மிகவும் இனிமையாகத்தான் இருந்தது. சரிவுகளில் வெள்ளை வெள்ளையாக மலர்ந்து கிடந்த வெண்ணெய்க் கிண்ண மலர்கள் கொள்ளை எழில் கூட்டின. சற்று எட்டி, கண்ணாடிச் சன்னல்கள் தெரியும் தேயிலைத் தொழிற்சாலையைச் சுற்றி ஒரு கிராமம் தெரிந்தது. நாசியெங்கும் நறுமணம் ஊட்டும் தேயிலை. மழைக் குளிராக் ஐருந்தால் சொர்க்க சுகத்தையே அளிக்கக் கூடியது. இருட்டி விட்டால் கிராமங்களெல்லாம் சாலையிலிருந்து தேவகன்னி வாரி இறைத்த ஒளிப் பூக்கள் போல் மின்னொளி பெற்றுக் கண் சிமிட்டத் தொடங்கி விடும்.

     அங்கே பஸ்ஸுக்குக் காத்து நிற்கும் நேரம் அவளுக்கு அலுப்பை ஊட்டியதே இல்லை. ஆனால், அவளைத் தொடர்ந்து வந்த கோஷ்டியும் சாலையில் வந்து நின்றது. ஒருவனுடைய கையில் டிரான்சிஸ்டர் தொங்கியது. அதிலிருந்து விரசம் அலைமோதும் சினிமா கீதம் முழங்கியது. கும்பல் தாளம் போட்டு ரசித்தது.

     வேணி கனல் தெறிக்கத் திரும்பிப் பார்ப்பதும், பொங்கி வரும் சினத்தை அடக்கிக் கொண்டு பஸ் வரும் திசையைப் பார்ப்பதுமாகப் பரபரத்தாள். இயல்பாகவே சிவந்த நிறமுள்ள மேனி, மலைவாசம் அவள் கன்னங்களுக்கும் செவ்விதழ்களுக்கும் இயற்கையாகவே ரோஜாப் பூச்சை அளித்திருந்தன. அவளுடைய அடர்ந்த கருங்கூந்தல் மற்ற பெண்களே பொறாமைப்படும் தனி உடைமை. அதை அப்படியே முறுக்கிக் கொண்டை போல் சுற்றிக் கட்டியிருந்தாள். நெற்றியிலே செஞ்சாந்துத் திலகம். கழுத்திலே மெல்லிய இரட்டைச்சரக் கறுப்பு மணிகளே அணி செய்தன. முரட்டு வெள்ளைக் கதர்ச் சேலை; பூப்போட்ட கதர்ச் சோளி. கையிலே சிறு புத்தகமும் பர்சும், கைக்குட்டையும் வைத்திருந்தாள். அவள் வட்டக் கருவிழிகளில் சினம் பொங்கப் பார்த்த பார்வையும் இளவட்டங்களுக்கு இன்னும் ரசனையையே கொடுத்தது.

     “ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ!” என்ற வானொலியை நிறுத்திவிட்டு மெள்ள முனகினான் ஒரு குறும்புக்காரன்.

     “உங்களுக்கு வெட்கமாக இல்லை?” என்று நெருப்பை உமிழ்ந்தாள் வேணி.

     பல ஆண்டுகள் மூத்தவளாகி விட்டாற் போன்ற துணிவிலே தாவினாற் போல் அவள் கேட்ட இந்தக் கேள்விக்கும் கொல்லென்ற சிரிப்பே பிறந்தது எதிரொலியாக.

     ஒருவன் இன்னும் கொஞ்சம் ரசிக்க எண்ணினான். “சேசே, என்னையா இது, வெட்கமில்லை, வெட்கமில்லை? என்று கேட்ட பின்னும் சிரிக்கிறீர்கள்?”

     வேணி அதே உறுதியில் நின்ற வண்ணம், “நீங்களெல்லாரும் கல்லூரியில் படித்தவர்கள் என்று நினைக்கிறேன். ஒரு தனிவழி நடக்கும் பெண்ணிடம் இவ்வளவு மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளத்தான் கற்பிக்கிறார்களா கல்லூரிகளில்? அவமானம்!” என்றாள்.

     “கரெக்ட். சிஸ்டர், கரெக்ட். இந்தத் தடிப் பயல்கள் இப்படித்தான் கல்வி கற்கும் கல்லூரிகளுக்கு இழுக்குத் தேடி வைக்கிறார்கள். நீங்கள்... எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள். பத்திரமாக உங்களை நான் கொண்டு சேர்க்கிறேன்...” என்று ஒருவன் முன் வந்தான்.

     “மிக்க நன்றி. உங்கள் உதவி இப்போது தேவை இல்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாம்!” என்றாள் நறுக்குத் தெறித்தாற் போல்.

     “அவன் பெரிய ஆஷாட பூதி வேஷம் போடுகிறான், மிஸ்... மன்னிக்கவும். நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது. எந்தக் கல்லூரிப் படிப்பு என்று மட்டும் தெரிவிக்க முடியுமா?” என்றான் இன்னொருவன் வணக்கமாக.

     தான் கல்லூரியில் படிக்காததை அவள் ஒரு குறையாக உணரத் தொடங்கி இருந்தாள். அவள் முகத்திலடித்தாற் போல் மறுமொழி சொல்லாதவளாக, திரும்பிப் பாராமலே நின்றாள்.

     “ஏன் தயங்குகிறீர்கள், மிஸ்? உங்கள் அசாதாரண தைரியத்தைக் கண்டு அசாதாரண மகிழ்ச்சி கொண்டே கேட்டேன். எனக்கொரு தங்கச்சிப் பாப்பா. கரப்பான் பூச்சியைக் கண்டால் கரடியைக் கண்டாற் போல் கதறுவாள். அவளை நீங்கள் படித்துப் பெருமை தேடித்தரும் கல்லூரியில் படிக்க வைக்கலாமென்று ஒரு அற்ப ஆசை...” என்று குழைந்தான்.

     அந்தப் பாழாய்ப் போன பஸ், சரியாக ஐந்தரை மணிக்கே போய்த் தொலைந்து விட்டதா என்ன?

     அவளைச் சடேரென்று திகில் கவ்வியது.

     அப்போது, அவள் செல்ல வேண்டிய திசைப்புறம் இருந்தே ஒரு ஜீப் பறந்து வந்தது. அது சட்டென்று பத்தடி முன்னே சென்றபின் திடுக்கிட்டுத் துள்ளினார் போல் அதிர்ந்து நின்றது.

     முன் ஆசனத்தில் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்த இளைஞன், புழுதிக்காக மாட்டிக் கொண்டிருந்த கறுப்புக் கண்ணாடியைக் கையில் எடுத்துக் கொண்டு இறங்கி வந்தான்.

     காக்கி முழு நிஜார் - புழுதியினாலேயே சிவப்பாயிருந்த வெள்ளைச் சட்டை, தலையிலும் செம்புழுதிக்குக் குறைவில்லை. விழிகளில் குறுகுறுக்கும் ஒளி. சிரிக்கும் வட்ட முகம்.

     அவன் ‘ஹலோ’ என்று விளித்துக் கொண்டு அந்த இளைஞர் கோஷ்டிக்கு வரவில்லை. வெள்ளைக் கதர்ச்சேலை தரித்து நின்ற வேணியின் அருகிலே வந்து நின்றான். அவளுடைய கருவிழிகள் வியந்து அகன்றன. இரண்டொரு விநாடிகள் திகைப்பு.

     “நீ... இங்கே... எங்கே இருக்கிறாய் வேணி?... தெரிகிறதல்லவா?”

     “ஆமாம்... தூதூர்... பஸ்ஸுக்கு நிற்கிறேன்... நீங்கள்...”

     நான் சாலையில் தான் இருக்கிறேன் வேணி!

     அவன் சிரித்தான். அவளுக்கும் சிரிப்பு வந்தது.

     அவள் சங்கடத்தையும், அருகே பேச்சு மூச்சற்று நின்ற கும்பலையும் அவன் கண்ணோட்டம் விட்டான்.

     “...வருகிறாயா? உன்னைத் தூதூர் கொண்டு விட்டு விடுகிறேன்?” ஆறரை பஸ்ஸை எதிரே பார்த்தேனே?”

     அவன் மீண்டும் ஆறரை பஸ்ஸை நினைத்துக் கொண்டோ என்னவோ சிரித்தான்.

     நல்ல வேளை...!

     “மிக்க நன்றி ஸார்...” என்று கூறிய வேணிக்கு இன்னமும் அவனைக் கண்ட திகைப்பு மாறவில்லை.

     அவன் ஜீப்பைத் திருப்பிக் கொண்டு வர, டிரைவருக்குப் பணித்தான்.

     அவள் ஜீப்பின் பின்புறம் போனாள். திரை இழுத்து மூடப் பெற்றிருந்தது.

     “ஓ... பின்புறம், நிறைய ஏதேதோ சாமான்கள் இருக்கின்றன. முன்புறம் தான் ஏறிக் கொள்ள வேண்டும் வேணி...”

     வேணி தயக்கத்துடன் முன் வைத்த காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். மூச்சுவிடவும் மறந்து, கிண்டல் கோஷ்டி இந்தச் சங்கடத்தை ரசித்ததை அவள் முகம் சிவக்கக் கண்டாள்.

     “ஏன் வேணி?... தயக்கமாக இருக்கிறதா? ஓ... அப்படியானால் நான் நிற்கிறேன். நீ மட்டும் ஏறிக்கொள்” என்று கவடில்லாமலே அவன் சிரித்தான்.

     அவன் அவ்விதம் தன்னை அவநம்பிக்கைக் காரியாக, பட்டிக்காடாக நினைப்பதை வேணியினால் பொறுக்க முடியவில்லை; பிறர் ஒரு உண்மைப் பலவீனத்தைக் குறிப்பிட்டு விட்டால் அதை ஏற்க மறுத்து, அஞ்சும் சந்தர்ப்பத்தையே வரவேற்க எழும்புவது மனித இயல்பாயிற்றே?

     “ஓ... அப்படியெல்லாம் இல்லை ஸார்...” என்று மழுப்பி விட்டு வேணி ஜீப்பினுள் புகுந்து டிரைவருக்கருகில் அமர்ந்து கொண்டாள்.

     அவன் கூறியது உண்மையே. பின்புறம் கள்ளிப் பெட்டிகள், எண்ணெய்ப் பீப்பாய்கள் போன்ற சாமான்கள் குப்பை வண்டி போல் நிறைந்திருந்தன. குமார் பாய்ந்து ஏறிக் கொண்டான். வண்டி பறந்தது.



சோலைக் கிளி : 1