3

     வண்டியில் ஏறிக் கொண்டாலும் சில நிமிஷங்களுக்கு வேணிக்குத் திகைப்பும் குழப்பமும் நடுக்கமும் அகலவில்லை. கொஞ்சமும் எதிர்பார்த்திராத திடீர்ச் சந்திப்பு. ஒரு சங்கடமான சந்தர்ப்பத்தில், சங்கடமான நிலையில் பிரயாணம் செய்வதை நினைக்கையிலேயே அவளுக்கு முகமெல்லாம் எதிரே தெரிந்த செக்கர்வானம் போல் மாறியது.

     “ஒன்றுமே பேசவில்லையே? மௌனவிரதமா இன்று, நான் பங்கப்படுத்தி விட்டேனோ?” என்றான் ரவிகுமார்.

     “இல்லை... உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்... நான் ஓட்டமாக ஓடி வந்தேன். பஸ்ஸும் போய்விட்டது. அங்கே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்திருப்பீர்களே?...” என்றாள் அவள்.

     “நீ இங்கே எங்கேயோ ஒளிந்து இருக்கிறாய் என்ற விஷயம் வெகு நாட்களுக்கு முன்பே தெரிந்து விட்டது வேணி. நான் சற்று முன் கூட நினைத்துக் கொண்டேன். என்னால் இப்போது கூட நம்ப முடியவில்லை” என்றான் அவன் அவளையே பார்த்தபடி.

     “எப்படி தெரிந்தது ஸார்?”

     “ஊட்டியில் உன்னை ஒரு நாள் பார்த்தேன். கலெக்டர் ஆபீஸுக்கு அருகில். உன்னைப் போலவே இருந்தது. சந்தேகம் தெளிந்து நான் விரைந்து வருமுன் நீ ஓடி விட்டாய். இன்னொரு நாள் உன்னைச் சேரிங்கிராஸ் அருகில் பஸ்ஸில் பார்த்தேன். சரிதானா?”

     “இருக்கும். அங்கே மாசம் ஒரு நடை போய் வருவேன்” என்று சொல்லி விட்டு அவள் வாயை மூடிக் கொண்டாள். ஊர் வருமுன்பே, பெட்ரோல் பங்க் அருகிலேயே இறங்கி விட வேண்டும். மிக்க நன்றி மிக மிக நன்றி என்று விடை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒரு கன்னிப் பெண், இரத்த பாசச் சகோதரராக இல்லாத ஆணுடன் உத்தியோக முறையில் பழக வேண்டியிருப்பதைத் தவிர்க்க முடியாது... மனசில் இவ்விதமெல்லாம் அவள் தடை யுத்தரவுகளைக் கற்பித்துக் கொண்டிருக்கையில், குமார் பேசினான்.

     “ஓகோ? இன்று முக்காலும் மௌன விரதம் தான் போலிருக்கிறது. இன்று திங்கட்கிழமை, சேவிகைகளுக்கு இன்று மௌன நாளோ? பேசாமல் இருந்து செயல்பட வேண்டிய அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்துவதும் உங்கள் கடமைகளில் ஒன்றோ?” வேணி தன்னையும் மீறிச் சிரித்தாள்.

     “நான் சேவிகா என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?”

     “நெல்லுக்குள் அரிசி இருப்பதைப் பார்த்தவுடன் எப்படிக் கண்டு பிடிக்கிறோமோ அப்படி அம்மணி!”

     மறுபடியும் வேணி நகைத்தாள்.

     “நீங்கள் இங்கே அணைத் திட்டத்தில் இருக்கிறீர்களா, ஸார்?”

     “நான் தான் சொன்னேனே! சாலையில் தான் இருக்கிறேனென்று?”

     “நீங்கள் அப்போது போலவே இப்போதும் இருக்கிறீர்கள்.”

     “நீயும் தான் வேணி. நீ கதர்ப்புடவையை உடுத்திக் கொண்டு காட்டு வழியில் நடந்தாலும் பழைய வேணியாகத்தான் இருக்கிறாய். எனக்கு ஒரே ஒரு சந்தேகம். நீ கோபிக்காமலிருந்தால் கேட்கிறேன்.”

     “நான் ஏன் ஸார் கோபிக்கிறேன்?”

     “உன் அப்பா உன்னை வேலைக்கு விட்டாரென்பது ஆச்சரியம். அதை விட, இந்த வேலைக்கு எப்படி விட்டாரென்பது ஆச்சரியம்.”

     “அதென்னவோ உண்மை. போனால் போகிறது, ஆசிரியப் பயிற்சி எடு என்றார். நான் பிடிவாதமாக இதில் சேர்ந்தேன். ஆனால்...”

     “ஆனால் என்ன?”

     “ஒரு வேலைக்குப் போகும் பெண்ணுக்கு எத்தனை எதிர்ப்புக்கள் இருக்கின்றன. பெண்கள் தனியாக உலவுவதை எந்த இடத்தில் எந்த வேளையிலும் அனுமதிக்கலாம் என்று ஆண்கள் உலகம் துணிவு வழங்கும் வரை ஒரு முன்னேற்றம் வந்ததாகச் சொல்வதற்கில்லை.

     “துணிவை யாரும் வழங்க வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது வேணி. வெறும் வாயரட்டல் கோஷ்டியைச் சமாளித்துத் தலைகுனியச் செய்ய வகையில்லா தைரியசாலி. கிராமத்துப் பிடிவாதங்களிடம், பழமை வெறிகளிடம் எப்படி ஈடுகொடுக்கிறாளென்று தெரிய வேண்டுமே?”

     வேணிக்கு வெட்கமாக இருந்தது.

     அவளுக்கு ஏனோ கால் ஊன்றித் தலை நிமிர்ந்து நோக்க இன்னமும் துணிவு வரவில்லை.

     “எங்கேம்மா வந்தீங்க? மாதர் சங்கம் இருக்கிறதென்றெழுதி வேணுமானால் கணக்குக் காட்டுங்கள். இந்த ஊரில் ஒத்துவராது” என்று ஊருக்குப் பெரியவர் ஒருவர் சொல்லி விட்டால் நேரடியாக நிமிர்ந்து கட்சியை எடுத்துரைப்பதற்குள் வேர்த்துப் போகிறதே? அலைச்சல், அபவாதம், உடம்புவலி, அதிகாரிகளின் ஆணை வளையங்கள், மனச்சாட்சிக்குப் புறம்பாக, ஒரு பயனுமின்றி சேவைக்குச் சம்பளம் வாங்கும் உறுத்தல்...

     “என்ன மறுபடியும் மௌனமாகி விட்டாய்?”

     “இல்லை ஸார். நீங்கள் பார்த்த உடனேயே மனம் விட்டுப் பேசுகிறீர்கள். பல சமயங்களிலும் எனக்குச் சலிப்பு வருகிறது. ஒருவர் மனதையும் நாமாக மாற்ற முடியாது. அதற்கு ஒரு பக்குவப்பட்ட சூழ்நிலை உண்டாக வேண்டி இருக்கிறது. ஏதோ சர்க்காரில் சம்பளம் வாங்குகிறாள்; வந்து போகிறாள் என்று தான் மதிக்கிறார்களே ஒழிய, ஒத்துழைக்க ஒருவரும் முன் வருவதில்லை. அநேகமாக இதே மனப்பான்மை நிலவுவதால் தன்னம்பிக்கை போய், ஏதோ ஒரு வழக்கமான நடைமுறையைப் பொய்யாகக் காட்டிவிட்டு என்னைப் போலுள்ளவர்கள் காலத்தைக் கழிக்க வேண்டியிருக்கிறது. வேலைக்கு வருமுன் எத்தனையோ கனவுகள். இப்போது இதை விட்டு எங்கேனும் ஆபீசில் புகுந்து கொண்டாலும் தேவலை, விட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது?” என்றாள் வருத்தம் இழையிட.

     “பெண்கள் வேலைக்கு வருவதில் இப்படி ஒரு சௌகரியம் இருக்கிறது. நினைத்தால் விட்டு விடலாம்...”

     “உங்களுக்கும் கூட இம்மாதிரித் தொல்லைகள் உண்டா ஸார்?”

     “பின் ஜீப்பில் உல்லாசப் பிரயாணம் என்று நினைத்தீர்களா அம்மணி? பொதுவாக நமக்கெல்லாருக்குமே அநேகமாக ஒரு குறை. மாணவ நாட்களில் உலகமே தெரியாத பொறுப்பறியாத ஒரு சிறைப் பருவத்தில் இருக்கிறோம். சடாரென்று உத்தியோகப் பொறுப்புக்கு வந்ததும் கண்ணைக் கட்டி நடுக்கடலில் விட்டாற் போலிருக்கும். உன் போன்ற பெண்கள் விஷயத்தில் இந்த நிலை இன்னும் ஒரு சுற்று நெருக்கம். உன்னைப் புரிந்து கொள்ள முடிகிறது இப்போது. நாலைந்து வருஷங்களுக்கு முன் எனக்கும் உன்னைப் போல்தான் பல சங்கடங்கள் இருந்தன.”

     “என் வளர்ச்சிக்கு டானிக் தருவது போல் பேசுகிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு எப்படி என்னைப் போன்ற பிரச்னைகள் இருக்க முடியும் சார்? நீங்கள் மலைமேல். நான் கீழே...”

     “பொய்... இருவரும் இப்போது சாலையில்தான் போகிறோம். அப்பா இங்கு உன்னிடம் தான் இருக்கிறாரா வேணி?”

     “ஊஹூம்...” என்றாள் அவள் மறுபேச்சின்றி.

     “நீ மட்டும்தான் இருக்கிறாயா?” என்றான் அவன் அவளுடைய கழுத்துக் கருமணியைப் பார்த்துக் கொண்டு.

     வேணி சாலையிலேயே பதித்த விழிகளுடன் ‘ஆமாம்’ என்றாள்.

     ஒளிப் பூக்கள் அணி செய்யும் தூதூர் கிராமம் தெரிந்து விட்டது. எட்ட இருந்து நோக்க அந்தக் கிராமம் எவ்வளவு அழகாக இருக்கிறது! லட்சியங்களும் கனவுகளும் கூட எட்டி இருந்து சிந்திக்க கவர்ச்சிகரமாகவே இருக்கின்றன. ஊரில் நுழையுமுன்பே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி விடலாமா? ஆனால் மரியாதைக்குக் கூட வீட்டுக்கு வரச் சொல்லாமல் வழியிலேயே விடைபெறுவது மரியாதையாகுமா?

     அவள் முடிவு செய்யுமுன் ஊர் வந்து விட்டது. “எங்கே போக வேண்டும்?” என்றார் டிரைவர்.

     கப்பிப் பாதை கூட இல்லாத வழியில் வண்டியைத் திருப்பச் சொன்னாள் வேணி.

     ஜீப்பும் காரும் தூதூருக்குப் புதிதல்ல. ஆனாலும் எவரும் அலட்சியம் செய்யுமளவுக்கு அதன் கவர்ச்சி மங்கவில்லை.

     ஊருக்குள் குலுங்கி அதிர்ந்து புழுதி கிளப்பிக் கொண்டு நுழைந்த ஜீப்பைப் பல ஜோடிக் கண்கள் வியந்து நோக்கின. கௌடர் லைனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமியர் ஓடோடி வந்தார்கள். வேணியின் வீடு முதல் வீடுதான். குமார் இறங்கியதும் பாய்ந்து குதித்த அவள் பூட்டைத் திறந்து கொண்டே, “வாருங்கள் ஸார், ஒரு நிமிஷம், உள்ளே எட்டிப் பார்த்து விட்டுப் போகலாம்” என்றாள். முன்புறம் இரண்டடி வராந்தா. அதை அடுத்து, எட்டடிச் சதுர அறை. அந்த அறை மூலையில் ஒரு தையல் இயந்திரம் காட்சி தந்தது. அதன் அருகில் இருந்த ஸ்டூலையே வேணி அவனுக்கு உட்காரச் சொல்லி நல்கினாள். ஒரு திறந்த சுவரலமாரியில் புத்தகங்கள் ஒரு தட்டில் ஒழுங்காக அடுக்கப் பெற்றிருந்தன. இன்னொரு தட்டில் ஒரு பளிங்குப் பிள்ளையாரும் சிறு குத்துவிளக்கும் இருந்தன. சுவரில் சில பொன்மொழிகள் அடங்கிய அட்டை ஒன்று தொங்கியது.

     கீதோபதேசப் படம் தாங்கிய காலண்டர் இன்னொரு சுவரில் விளங்கியது.

     குமார் கச்சிதமான அந்த அறையைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவனாய் உட்கார்ந்திருக்கையில் வேணி உள்ளே போய்விட்டாள். ஸ்டவ் எரியவிடும் கிரஸின் புகை வாசனை வந்தது. அப்போதுதான் மாணிக்கம் பிள்ளையின் சோதரியான கமலம் ஒரு தனி நாணத்துடன் தோளைப் போர்த்துக் கொண்டு குமாரைக் கடந்து வேணி ஸ்டவ் பற்ற விடும் அறைக்கு வந்தாள்.

     அடுப்பை எரிய விடுவதில் கவனம் செலுத்தியிருந்த வேணி திடுக்கிட்டாற் போல் நிமிர்ந்தாள்.

     “நீங்களா அக்கா?”

     “ஆமாம், பின்னே யாராயிருக்க முடியும்? பால்காரன் இன்னும் வரவில்லை. யாரோ விருந்தாளி போலிருக்கிறதேன்னு, டீ போடப் பால் கொண்டு வந்தேன்” என்று புடவைத் தலைப்பை அகற்றி டம்ளர் பாலைக் கீழே வைத்தாள்.

     அவள் வந்த காரணம் என்ன வென்றறிய முடியாதா என்ன?

     “இவர்... அப்பாவுக்கு ரொம்ப சிநேகம் அக்கா. இங்கே இன்ஜினியராக இருக்கிறாராம். வரும் வழியில் பஸ் ரிப்பேராய்ப் போச்சு. நல்ல வேளையாக இவர் வந்து இங்கே கொண்டு விட்டார்.”

     வேணிக்குப் பொய் புகல நினைத்தாலும் வரவில்லை. ஆனால் கமலம் அங்கிருந்து அகலவில்லை. ஒரு கன்னிப் பெண்ணின் வீட்டில், இரண்டுங்கெட்டான் நிலையை உண்டாக்காமல் இருக்க, அண்டை அயல் வீட்டார் உதவி செய்யாமல் யார் செய்வார்கள்?

     வேணி தேநீர் தயாரித்துக் கொண்டு வரும் வரையிலும், கொஞ்ச நேரம் கொட்டுக் கொட்டென்று உட்கார்ந்து பார்த்தான் குமார். பிறகு அலமாரித் தட்டிலுள்ள புத்தகங்களைப் பரிசீலனை செய்யலானான். குழந்தைப் பாடல்கள் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருக்கையில் அவள் தேநீரைக் கொண்டு வந்தாள்.

     “உங்களுக்கு என்னால் மிகவும் தொந்தரவு” என்றாள் அவரைப் பார்த்த வண்ணம்.

     “அதை நானல்லவோ சொல்ல வேண்டும்?” என்றான் குமார் தேநீரை எடுத்துக் கொண்டு.

     வேணிக்குப் பரீட்சை சமயத்தில் விநாடிகள் நழுவுவது போன்ற உணர்வு உண்டாயிற்று. ஒவ்வொரு நிமிஷமாக நழுவி விட்டது.

     எதிர்பாராச் சந்திப்பு. ஏதோ பேச வேண்டும் என்ற துடிப்பு மிஞ்சினாலும் கனத்த திரையைத் தள்ளத் துணிவில்லை.

     அவன் தேநீரைக் குடித்து விட்டு, “மிக்க நன்றி, வரட்டுமா?” என்று புன்னகை செய்தான்.

     “...நன்றி... நான் சொல்ல வேண்டாமா? வந்து... உங்கள் ஹெட் குவார்ட்டர்ஸ் எங்கே என்று சொல்லலாமா?” துணிவு எப்படியோ வந்து விட்டது.

     “...ஊட்டி தான். சேரிங்கிராஸிலிருந்து நடந்து போகும் தூரம் தான் வீடு... குறித்துத் தருகிறேன்... அந்தப் பக்கம் வந்தால் வா” அவன் அலமாரியிலிருந்து ஒரு தாள் எடுத்து அதில் ஏதோ கிறுக்கி அங்கேயே வைத்தான்.

     அவர் தனியாக இருந்தால், சரளமாக “வந்தால் வா” என்று சொல்வாரோ?

     என்றாலும் வேணி தயக்கமோ, திகைப்போ காட்டாமல் மறுமொழி தந்தாள். “கட்டாயம்... நீங்கள் கூப்பிடா விட்டாலும் வரத்தான் கேட்டேன். இந்த கிராமப்புறங்களில் யாரேனும் படித்த புதிய பெண்களைக் கூட்டி வந்து பேசச் சொன்னால் நான்கு பேர் பார்க்கவேனும் மாதர் சங்கங்களுக்கு வருவார்கள். அதற்கு உங்கள் வீட்டிலும்... உதவுவார்கள் என்று நம்புகிறேன்.”

     அவளுக்கே எப்படித் தனக்கு அவ்வளவு சாதுரியமாகப் பேச வந்ததென்று புரியவில்லை. பின்னே கமலம் அசையாமல் நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

     ரவிகுமார் குறுநகையுடன் “கட்டாயம். அவசியம் உதவுவார்கள். வருமுன் தெரிவித்தாயானால் நலமாக இருக்கும்” என்றான்.

     “மிக்க நன்றி ஸார்...!”

     அவன் ஜீப்பில் தாவி உட்கார்ந்தான்.

     மணி ஏழடிக்கும் நேரமாக இருந்த போதிலும் வேனில் தொடக்கமாதலால் இன்னமும் இருட்டியிருக்கவில்லை. சிறுவர்கள் பலரும் ஜீப்பைத் தொடர்ந்து ஓடிவிட்டுத் திரும்புவதைப் பார்த்த வண்ணமே அவள் மூனையில் வந்து நின்று கொண்டிருந்தாள்.

     சந்தேகம் வெளிச்சமாகி விட்டது. அவசியம் உதவுவார்கள் என்று மொழிந்ததொன்றே போதும்!

     பட்டம் பெற்ற பெண்மணியாக இருப்பாளோ? பொதுக் கூட்டங்களில் பேசும் திறனும், அறிவும் கூடியவளாகத்தான் நிச்சயமாக இருப்பாள். கட்டாயமாக அவள் அழகாகவும் இருப்பாள்.

     “ஏம்மா, வேணி? ஸ்டவ் எரிகிறதே? கிரசின் வீணாகிறதே?” - மாணிக்கம் பிள்ளையின் மனைவியும் அவளைத் துளைக்க வந்து விட்டாள்.

     “அவங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டியவராம் அண்ணீ!” என்று கமலம் விளக்கினாள்.

     “அப்படியா? நானும் அப்படித்தான் நினைச்சேன். எங்கே ஊட்டியில் இருக்கிறாராமா?”

     “ஆமாம் அக்கா...” என்றாள் வேணி வீட்டுக்குத் திரும்பியபடி.

     “கல்யாணம் கட்டிக்கிறாரோ?”

     “உம்...” என்று வேணி பெருமூச்செறிந்தாள்.

     என்ன பெரிய சேவிகா அவள்? தான் வசிக்கும் சுற்றுப்புறப் பெண்களின் வீண் வம்பு ஆசையை மாற்றி விட முடியவில்லையே?

     “வேணி! நீ எனக்குத் தங்கச்சி போல. நான் சொல்றேன்னு தப்பா நினைக்க மாடேன்னு சொல்லுறேன். என்னதான் படிச்சு வேலைக்குப் போனாலும், பெண் பிள்ளை பெண் பிள்ளைதாம்மா! உலகத்தின் கண் பொல்லாதது. மனசிலே கவடில்லாமல் நீ நடந்தால் கூட அது உலகத்தின் கண்ணுக்குத் தெரியாது. நீ அவர் கூட ஜீப்பிலே அப்படி நெருங்கி வருவது அவ்வளவு நல்லாயில்லேம்மா. நீ இதே கொஞ்ச நேரம் முன்னே வந்திறங்கி இருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும்?” என்றாள் திருமதி மாணிக்கம்பிள்ளை.

     “என்ன ஆகியிருக்கும்?”

     ஸ்டவ்வை அணைத்து விட்டு டம்ளரைக் கழுவ வந்த வேணி விழிகள் குத்திட அவளைப் பார்த்தாள்.

     “என்னக்கா?”

     அவள் முகத்தில் தீவிரம் மாறி குறும்புப் புன்னகை இலங்கியது.

     “அப்படி வா வழிக்கு. நீ இத்தனை நாளில் ஒரு பேச்சுச் சொன்னாயா? என்னமோ வேலைக்கு வந்திருக்கிறது. யாரும் மனிதர்களில்லை என்று தானே நாங்களும் எண்ணிக் கொண்டிருந்தோம்? உன் குட்டு வெளிப்பட்டு விட்டதம்மா!”

     வேணிக்கு இன்னமும் ஒன்றும் புரியத்தானில்லை, ஒரே துடிப்பு.

     “எனக்கு ஒன்றுமே புரியவில்லையே அக்கா?”

     “ஆகாகா, எப்படிப் புரியும்? பச்சைக் குழந்தை பார்?” என்று அவள் கன்னம் வலிக்கக் கிள்ளி அவளைக் குழந்தையாக்கினால் அந்த எதிர் வீட்டுக்காரி.

     “சத்தியமாக எனக்குப் புரியவில்லை அக்கா...”

     “புரியுமா? புரியாது. நீ கதர்ப் புடவையும் தானுமாக வேஷம்தானே போட்டாய், எங்களிடமெல்லாம்? நீ அந்தண்டை போனாய், இந்தப் பக்கம் அவர் தேடி வந்துட்டார் பழக் கூடையுடன். அவரே வந்து உன் குட்டை எல்லாம் உடைத்து விட்டார். காத்திருந்தார். காத்திருந்தார், இந்நேரம். கடைசியில் பழக்கூடையை விட்டு விட்டு நாளை வருவதாகப் போனார்.”

     வேணி இப்போதும் விழித்தாள்.

     பழக் கூடையுடன் வந்தாரா? அப்பா வந்து விட்டாரா ஒரு வேளை? அப்பா வந்தால் பழக் கூடையை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு இந்த முகம் தெரியாத மலையில் எங்கே போய்விடுவார்?

     “அப்பாவா வந்தார்?”

     “இல்லை, ஆட்டுக்குட்டி! தெரியாமல் நடிப்பதைப் பார், பாசாங்குக் கள்ளி!” என்று அவள் இடிக்கையிலே கடைப் பையன் பழக் கூடையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து வைத்தான்.

     வேணி மூடியைக் கொஞ்சம் அகற்றிப் பார்த்தாள். ஆப்பிள், வால்பேரி, மலைவாழை, ப்ளம்ஸ் என்று நிரம்பியிருந்தன. காகித நோட்டுக்களை அடுக்காகக் கொடுத்தாலே வாங்க முடியும். அல்லது பழத்தோட்டச் சொந்தக்காரராக இருக்க வேண்டும்.

     “அக்கா? நிச்சயமாக இதெல்லாம் எனக்காக யாரோ வாங்கி வந்தாரா? எனக்கு இருக்காது, நிச்சயமாக இது ஏதோ ஆள்மாறாட்டம் போலிருக்கிறது” என்றாள் வேணி.

     “ஆஹாஹா... என்ன நடிப்படி அம்மா! அவர் நீலவேணி என்று வாய் இனிக்கச் சொன்னதை நானும் கூடக் கேட்டேன். ஆனியிலே முகூர்த்தம் என்று முன்னறிவிப்புச் செய்ய வந்தார் போலிருக்கிறது. பாவம்... ஏமாற்றம்.”

     “நீ என்னைப் பரீட்சைக்குத் தயார் பண்ணுவதாகச் சொல்லிட்டு ஓடிப் போகிறாயே வேணி?” என்றாள் கமலம்.

     முகூர்த்தம் என்று சொல்லிக் கொண்டு பூபதி இங்கே வரும் அளவுக்கு கல்யாணப் பேச்சு தலை தூக்கி விட்டதா? இங்கே வந்து முன்பின் அறியாதவர்களிடம் தம்பட்டம் போடுவார்களோ? இத்தனை பழங்களடங்கிய கூடை ஒன்று எதற்கு? விளையாட்டில் தோற்ற சிறுமி போல் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. “தூக்கிப் போங்கள் இதெல்லாம் எனக்கு வேண்டாம்” என்று கூடச் சொல்லி இருப்பாள். ஆனால் பழக்கமான பண்பு கைவிடவில்லை. கூடையை அகற்றி வைத்து விட்டு குத்து விளக்கேற்றினாள். அவர்கள் இருவரையும் அனுப்பிய பின் கதவைத் தாளிட்டாள்.

     குமார் எழுதி வைத்த விலாசம் பார்க்கவில்லையே என்ற நினைவு வந்தது. அலமாரியின் பக்கம் போய் மடித்தாற் போல் வைத்த காகிதத்தை அவள் பிரித்தாள்.

     அதில் விலாசம் மட்டுமா இருந்தது?

     பழக்கூடையையும் அந்தக் காகிதத்தையும் மாறி மாறிப் பார்த்த அவளுக்கு சில விநாடிகள் ஒன்றுமே தோன்றவில்லை.



சோலைக் கிளி : 1 2 3