6

     பாலமலை என்ற பெயர் அந்த ஊருக்கு, அங்கே குடி கொண்டிருந்த முருகன் கோயிலை ஒட்டித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். மலை என்று சொல்ல உருப்படியாக அங்கு மலை ஏதும் கிடையாது. வெறித்துக் கிடக்கும் பொட்டல் வெளியில் மொட்டைப் பாறை ஒன்று படுத்திருப்பதை, நெடுஞ்சாலையில் செல்லும் பஸ் பிரயாணிகள் கூடப் பார்க்கலாம். அதன் உச்சியில் சின்னஞ்சிறு முருகன் கோயிலும் கண்களில்படும். அதன் நடுவில் கரும்பாய் இனிக்கும் நீர்ச்சுனை ஒன்றும் உண்டு. சாலையிலிருந்து பார்த்தால் அருகில் தெரிந்தாலும், நடந்தால் முக்கால் மைலுக்குக் குறையாது.

     முருகன் கோயிலை அண்டி எழும்பிய பழைய ஊர், புதிய மலர்ச்சி பெற்று வருவதற்கு அடுத்து எழும்பியுள்ள உயர் நிலைப் பள்ளிக் கட்டிடமே சாட்சி கூறியது. நெடுஞ்சாலையில் வரிசையாகக் கடைகள் நெருங்கியிருந்தன.

     ‘சாமி கடை’ என்று பெயர் பெற்ற சுப்பையாவின் உணவு விடுதிக்குப் பலகை விளம்பரம் கிடையாது. கையிலே கப்பறையுடன் ஆண்டிப் பரதேசிகள் வெய்யிலுக்காகக் குறட்டில் தங்கியிருப்பதுண்டு. பார்த்தால் வீடு போல் தோன்றும். வாயில் திண்ணையை அடுத்து கூடத்தில் இரண்டு மேஜைகளும் ஏழெட்டு நாற்காலிகளும் தான் அந்தக் கடைக்கு விளம்பரம். இந்த அபூர்வ விடுதியில் காப்பி, தேயிலை கிடையாது. எளிய கூலிக்காரர்களுக்கு, வியாபாரக்காரர்களுக்கு, ஆண்டிப் பண்டாரங்களுக்கு, தயிர்ச் சோறும், சாம்பார் சோறும் கிடைக்கும் இடம் அது. குறிப்பிட்ட சிலரைத் தவிர, அந்த விடுதிக்கு அதிகமான கூட்டமே வருவதில்லை.

     வேணி, பள்ளிப் படிப்பின் இறுதியான இரு ஆண்டுகளைத் தந்தையின் ஊரிலே தான் கழித்தாள். வீட்டை அடுத்து ஒழுங்கை போல் ஒரு சந்து உண்டு. அவள் நடமாட்டமெல்லாம் அதே வழியில் தான். கடையில், அவள் தந்தையே முதலாளியும், தொழிலாளியுமாக உள்ளவர் என்றால் மிகையில்லை. உதவிக்கு ஒரே ஒரு பையன் தான். கோடை விடுமுறைக்கு அவள் அநேகமாக அத்தை மகள் லட்சுமியின் வீட்டுக்குப் போய் விடுவதுதான் வழக்கம். லட்சுமியின் கணவன் அருகே பதினைந்து மைலிலுள்ள ஒரு ஊரில் தான் ஆரம்பப் பள்ளி ஆசிரியனாக இருந்தான். லட்சுமிக்கு வேணியிடம் சொல்லொணாப் பிரியம் உண்டு. ஆனால், லட்சுமி அப்போது பிரசவத்துக்குத் தாய் வீடு சென்றிருந்தாள். வேணி எங்கும் ஊருக்குப் போகவில்லை.

     சித்திரை வெய்யில் எரிக்கும் பிற்பகல் நேரம். சாப்பாட்டு நேரமெல்லாம் போய், வேணியின் தந்தை பையனை அழைத்துக் கொண்டு நெல்லரைக்க மில்லுக்குப் போயிருந்தார்.

     திண்ணையிலுள்ள கம்பிக் கதவை உட்புறம் பூட்டிக் கொண்டு அவள் உள்ளே முற்றத்து வேப்ப மரத்தின் கீழ் நார்க் கட்டிலில் படுத்தபடி, சுவாரசியமாக ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். கதவு தட்டப் பெறும் சத்தம், பூட்டு இழுக்கப் பெறும் ஓசை கேட்டது. முற்றத்திலிருந்து சந்து வழி வருவதுதான் சுலப வழி. வேணி அங்கு வந்து எட்டிப் பார்த்தாள்.

     நாட்டுச் செடிகளுக்கு நடுவே ஒரு குரோட்டன்சுச் செடி போல் அந்தச் சூழலுக்குப் புதியவராகக் காட்சியளிக்கும் தோற்றம். தொப்பியும், நிஜாரும், ஷர்ட்டும், கறுப்புக் கண்ணாடியுமாக ஓர் இளைஞன் நின்றிருந்தார்.

     “...இங்கு... சாப்பாடு கிடைக்குமா? போர்டொன்றும் காணோம்?” என்று விசாரித்தார்.

     எல்லாம் முடித்துக் கொண்டு தான் சாத்தி விட்டு அப்பா போயிருந்தார். ஆனாலும் வந்தவர் களைத்து வந்திருந்தார். மோட்டார் சைக்கிள் வாகனம் அங்கு இருந்ததைக் கண்ணுற்று, அவர் அதில் தான் வந்திருந்தார் என்றும் புலனாயிற்று.

     கௌரவமான உத்தியோகம் வகிப்பவராகத் தோன்றியது. இல்லை என்று சொல்லவும் தெம்பில்லை. உட்காருங்கள் என்று சொல்லிவிட்டுக் கதவைத் திறக்கவும் தோன்றவில்லை. அவள் விழிப்பதைக் கண்ட அவன் சிரித்துவிட்டு, “சாப்பாடு இல்லையா? மோர் கிடைக்குமா?” என்று கேட்டான்.

     அவள் கதவைத் திறந்து விட்டு மோர் கொடுக்கலாம் என்று உள்ளே ஓடிய சமயம் அவள் தந்தையே வந்து விட்டார்.

     பக்கத்திலே எங்கோ தொழிற்சாலை கட்டுகிறார்களாம். அவருக்கு அங்கு வேலை என்று அவள் புரிந்து கொண்டாள். அன்று அவள் தந்தை போட்ட ஆறிய சோற்றை உண்டு விட்டு அவர் போனார். அன்றிலிருந்து தினமும் பகலில் அங்கே அவர் சாப்பாட்டுக்கு வரலானார்.

     அவளுடைய தந்தைக்கு அவர் மீது ஒரு வகைப்பாசம் விழுந்து விட்டதென்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல. அவர்களுடைய பேச்சிலிருந்து, அவருடைய தந்தை மேஜர் கண்ணப்பனை சுப்பையாவுக்கு பர்மாப் போர் முனையில் பரிசயம் உண்டென்றும் புரிந்தது.

     அவருக்கு மட்டும் பகலில் நல்ல உணவாகத் தயாரிப்பதை அப்பா மேற்கொண்டார்.

     “உங்களைப் போன்றவர், இங்கு இந்தப்படி ஏறி வருவதே எனக்குப் பெருமை. நல்ல நல்ல செயல்களுக்காக வேர்வை சிந்தும் உங்களுக்கு எல்லாம் என் போன்றவர்கள் என்ன வசதி செய்ய முடியும்?” என்று மனமுருகிப் பேசுவார்.

     குமார் குறித்த நேரத்தில் தான் வருவான் என்று சொல்ல முடியாது.

     சாப்பாட்டுக் கூடத்தின் பக்கம் ஒரு நாள் கூட வேணி, தலைகாட்டியதில்லை. ஆனால், குமாருக்கு அந்தக் கூடத்தில் உணவு படைக்காமல், உட்புறம் இருந்த தனியறையில் தான் உணவு கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். அப்போதெல்லாம் சுப்பையாவுக்கு, குமார் மிகவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் எண்ணம் தான் இருந்தது. அந்தத் தனியறையில் வேணி புத்தகங்களை வைத்திருந்தாள். அவள் படித்து, புழங்கி நடமாடும் இடம் அது. முதலிலெல்லாம் அவன் உணவு கொள்ளும் நேரத்தில் அவள் முற்றத்துக்கு நழுவிக் கொண்டிருந்தாள்.

     அவன் குறிப்பிட்ட நேரத்தில் தான் வருவதில்லை என்பதாலும், சுப்பையா தவறாகக் கருதி ஆட்சேபம் செய்யாததனாலும், அவளுடைய கூச்சமும் கட்டுப்பாடும் கொஞ்சம் தளர்ந்தது.

     பழக்கத்தில் தண்ணீர் கொண்டு வைத்தோ, இலை போட்டோ, அன்றையச் செய்தித் தாளைக் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தோ அவள் தந்தைக்கு உதவி செய்யலானாள். வியப்புக் கலந்த நாணப் புன்னகையொன்று அவளுடைய இதழ்களில் மலரும். அவனும் புன்னகையுடன் அவளிடம் பள்ளிக்கூடத்தைப் பற்றியோ, பரீட்சையைப் பற்றியோ ஏதேனும் கேட்பான்.

     “உங்கள் பள்ளிக்கூடத்தை மிகப் புதிய முறையில் நான் வேலை பழகும் கம்பெனியார் கட்டப் போகிறார்கள்” என்றான் ஒரு நாள்.

     அவள் அப்போதெல்லாம் மறுமொழி கூறவே சங்கடப் படுவாள்.

     தொழிற்சாலைக் கட்டிடம், விடுமுறைக்கப்புறமும் நீடித்துக் கொண்டிருந்தது. குமார் தொழிற் கல்லூரியில் இறுதிப் பரீட்சை எழுதிவிட்டு அடுத்த விடுமுறைக்கும் அதே கட்டிடத்துக்கு வந்தான்.

     அந்த விடுமுறையில் வேணி பள்ளி இறுதியாண்டுப் பரீட்சை முடித்து விட்டாள். குமார் மீண்டும் வருவானென்றே அவள் எதிர் நோக்கியிருக்கவில்லை.

     சங்கோசத்துடன், “எங்கள் பள்ளிக்கூடத்தைக் கட்டப் போகிறீர்களா, சார்?” என்று விசாரித்தாள்.

     “பரவாயில்லையே? எனக்கு நினைவில்லை. நீ நினைவு வைத்திருக்கிறாயே? பள்ளிக்கூடத்தை நன்றாகக் கட்டிவிட்டால் இன்னும் ஒரு வருஷம் படிக்கலாம் என்ற ஆசையா வேணி?” என்று அவனும் கேட்டு விட்டுச் சிரித்தான். அப்பாவும் கூடச் சிரித்தார்.

     அவளுக்கு ஒரே வெட்கமாகப் போயிற்று. உள்ளே ஓடிப் போனாள்.

     அப்போதெல்லாம் வேணியின் அப்பா, அவன் மலை உயரத்தையும், கீழ்ப் பள்ளத்தையும் இணைக்கும் சாலை போடுவது போன்ற எண்ணம் கொண்டிருக்க மாட்டான் என்று நிச்சயமாக நினைத்திருந்தார் போலும்? அப்படி நினைத்திருந்தால் அப்போதே அவளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பாரே?

     அன்று குமார் சாப்பாட்டுக்கு வரும் போது பிற்பகல் மணி மூன்றரையாகி விட்டது. அவ்வளவு நேரமானதால் இனி அவன் வரமாட்டான் என்று எண்ணியே அவள் தந்தை பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில் கோயில் சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்துக்குப் போயிருந்தார். அன்று தான் வேணி பரீட்சையில் தேறிய விவரம் தெரிய வந்தது.

     மூன்றரை மணிக்கு அவன் பசியும் களைப்புமாக வந்தான். வேணிக்கு ஒரே சிரிப்பு.

     “என்ன வேணி! ரயிலில் ஏறி ஊருக்குப் போகப் போகிறாயா?” என்று அவன் நகைத்தான்.

     “நான் பாஸ் பண்ணிவிட்டேன் சார், இந்தாருங்கள் சர்க்கரை” என்று உள்ளே ஓடிப் போய் சர்க்கரை கிண்ணத்துடன் திரும்பினாள்.

     “ஓகோ? கங்க்ராசுலேஷன்ஸ். அப்பா எங்கே வேணி?”

     “இத்தனை நேரம் நீங்கள் வருவீர்கள் என்று காத்திருந்து விட்டு இப்போதுதான் வெளியே போனார். நான் இலை போடட்டுமா சார்?”

     “போடட்டுமாவா? மேஜை நாற்காலி எல்லாம் கூட விழுங்கிவிடும் குண்டோதரப் பசி இப்போது...” என்று அவன் வாயிலில் போய் வாளி நீரை எடுத்து, முகம் கை எல்லாம் கழுவிக் கொண்டான்.

     வேணி மின்னல் போல் பாய்ந்து இலையைக் கொண்டு வந்து போட்டாள். தண்ணீரை எடுத்து வைத்தாள். பிறகு பரிமாறலானாள்.

     அவள் இலையில் என்ன போட்டாள் என்பது கூடத் தெரியாதபடி இலை காலியாயிற்று.

     “இப்படிச் சாப்பிட்டால் கட்டுபடியாகாது ஸார்” என்று சொல்லிக் கொண்டே அவள் சாம்பாரைக் கொண்டு வந்தாள்.

     “அப்புறம் என்ன செய்யப் போகிறாய் வேணி? காலேஜா?”

     வேணி உதட்டைப் பிதுக்கினாள்.

     “காலேஜுக்கெல்லாம் அனுப்ப மாட்டாங்க.”

     “ஓகோ! கல்யாணமா?” குரல் இறங்க, ஒளி பூக்க அவன் குறுநகையுடன் கேட்டான்.

     “ஊஹூம்...”

     “அப்படியானால்...?”

     “என்னவாக இருக்கும்? நீங்களே ஊகித்துப் பாருங்களேன், சார்?”

     குமார் சிரித்துவிட்டு, “ஓகோ உத்தியோகமா, வேணி?” என்றான்.

     அவள் தலையை ஆட்டினாள்.

     “ஆஸ்பத்திரியா, பள்ளிக்கூடமா, ஆபீஸா” என்று சொல்லலாமா வேணி?”

     “எனக்கு இரண்டுமே அவ்வளவாகப் பிடிக்கவில்லை” என்றாள் அவள் காலால் தரையைக் கிளறிக் கொண்டு.

     “ஓ... ஆபீசருக்குப் பின் நின்று எஸ் ஸார், எஸ் சார் என்று சொல்லப் பிடித்திருக்கிறதோ?”

     வேணி சட்டென்று நிமிர்ந்தாள்! “அப்படிச் சொல்ல வேண்டி இருக்குமா சார்?”

     “பின், ஆபீஸ் அசிஸ்டென்ட் என்றால் என்ன நினைத்துக் கொண்டாய்?”

     “அப்படியானால் உங்கள் ஆபீசில் எனக்கொரு வேலை போட்டுக் கொடுங்கள் இன்ஜினீயர் சார்” என்றாள் வேணி ரசத்தைக் கொண்டு வந்து ஊற்றியபடி. அவன் கேலியாகப் பேசி அவளுக்குப் பேச்சுத் துணிவை வளர்த்திருந்தான். அவளும் விளையாட்டுக்கு மேல் உட்பொருள் ஏதும் நினைத்துக் கூடப் பார்த்திருக்கவில்லை.

     அவள் சிரித்த வண்ணம் ஏதோ சொல்ல முயலுமுன் மிளகாய்க் காரம் தலைக்கேற, கண்கள் சிவந்து நீர் துளித்து விட்டது. தண்ணீரை மடக் மடக்கென்று விழுங்கி விட்டு, “மோர்... மோர்...” என்று கூவினான்.

     “அடடா, காரமாக இருக்கிறதா ஸார்? நான் தான் ரசம் வைத்தேன்” என்றாள் வேணி.

     தொண்டைக் கம்மலுடன் குமார் நகைத்தான். “அற்புதம் வேணி. உனக்குச் சமையலில் இவ்வளவு திறமை உண்டென்று அறிய ஒரே சந்தோஷமாக இருக்கிறது.”

     “கிண்டல் பண்ணுகிறீர்களே, சார். அப்பாவே கஷ்டப்படும் போது உதவி செய்யலாமென்று வந்தேன். உண்மையாக நன்றாக இல்லையா, சார்?”

     “பிரமாதம். உப்பு, புளி, மிளகாய் கொள்ளாத விலை விற்கும் இந்த நாட்களில் இனி நீயே சமையல் செய். தண்ணீரைக் குடித்தே ஆனந்தமாக வயிறு நிரம்பி விடும்” என்று அவன் எழுந்து விட்டான். வேணிக்கு முகம் சுண்டி விட்டது.

     “எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஸார், பாதியில் எழுந்து விட்டீர்களே!”

     “இல்லை வேணி, உண்மையில் சாப்பாட்டு நேரம் தவறி விட்டதா? வழியில் ஒரு தோப்பில் பத்து இளநீர் குடித்தேன். உண்மையில் உன் ரசம் அற்புதம்.”

     “பொய். வரும்போது மேஜை நாற்காலி எல்லாம் விழுங்கி விடுவதாகப் பயமுறுத்தினீர்கள். இப்போது பேச்சை மாற்றுகிறீர்கள்” என்று மொழிந்த அவள் உண்மையாக வருத்தப்படுவது தெரிந்தது. குமார் கையலம்பித் துடைத்துக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்தான்.

     “வேணி, என் சொந்த ஆபீசிலே உனக்கு ஒரு நல்ல வேலை போட்டுத் தருவதாக நினைக்கிறேன் அதற்கு...”

     அவள் கண்களில் ஒளி துள்ளியது.

     “அதற்கு என்ன சார், என் க்வாலிபிகேஷன்ஸ் பத்தாதா? நான் ஷார்ட்ஹாண்ட் டைப் கூடக் கற்றுக் கொள்கிறேன் சார்...”

     “வேண்டாம், வேண்டாம், வேணி. ஷார்ட் ஹாண்ட் லாங்க் ஹாண்ட் ஒன்றுமே தேவையில்லை. உன் அப்பாவிடம் கொஞ்சம் கவனமாகப் பயிற்சி பெற்றால் போதும். வேணி, எனக்கு மிளகாய் என்றால் மட்டும் பயம். அதுவும் பச்சை மிளகாய், அலர்ஜி.”

     அவளுக்கு முதலில் புரியவில்லை. இரு வண்டு விழிகள் அவனை ஊடுருவது போல் நோக்கின. முகமெல்லாம் செம்மை பூத்தது. குமாரின் குரலிலும் கிளர்ச்சி தெரிந்தது.

     “உன்னை... எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது, வேணி” இளமையின் கிளர்ச்சியும், கவடற்ற ஆவலுமே அவனை அப்போது அத்தகைய சொற்களை உதிர்க்கச் செய்திருந்தாலும், அவன் அதைச் சொன்னதற்காக வருத்தப்படப் போவதில்லை. ஏனெனில், திருமணத்தை மிகப் பெரிய பிரச்னையாக எண்ணி அவன் கனவு கண்டிருக்கவில்லை. ஆனால் வேணிக்கு அது நம்ப முடியாத, நினைக்க முடியாத இன்ப அதிர்ச்சி. அவளுடைய நினைப்புக்கப்பாற்பட்ட தொரு வாழ்வை அவன் அளிக்க முன் வந்ததை ஏற்க முயலுகையில் கண்ணீர் கூடத் துளித்து விட்டது.

     “எனக்கு... எனக்கு அதற்குத் தகுதி இருக்கிறதா சார்” என்று கேட்க நாவெழவில்லை.

     “விளையாட்டுக்குச் சொல்லவில்லை வேணி. உண்மையாகச் சொல்கிறேன். உனக்கு இஷ்டம் இருக்குமோ?”

     மனவெழுச்சியை அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

     “உனக்கு இஷ்டமில்லை என்றால் நான் சொன்ன சொற்களுக்கு வருந்துகிறேன். வேணி! அழுகிறாயா?...”

     “இல்லை... இல்லை சார்...” என்று மகிழ்ச்சிப் பெருக்கிலே திக்கித் தடுமாறி விட்டாள் அவள்.

     “பின் ஆரம்பத்திலேயே ஓர் எஸ் சார் கூடச் சொல்லவில்லையே வேணி!” என்று கலகலவென்று சிரித்தான் அவன்.

     குங்குமமாக வழியும் முகத்தைத் துடைத்து துடைத்து இன்னமும் சிவப்பாக்கிக் கொண்டு ‘எஸ் சார்’ என்று அவள் வெட்கத்துடன் ஓடிய காட்சியைப் பார்த்துக் கொண்டே சுப்பையா வந்தார். குமார் அப்போதும் கவடில்லாமல் சிரித்துக் கொண்டு தான் நின்றான்.

     சுப்பையா உள்ளத்தில் இருப்பதை முகத்தில் காட்டி விடக் கூடியவரல்ல.

     “சாப்பிட்டாயிற்றா, தம்பி?” என்று விசாரித்தார்.

     “ம், இன்றைக்கு வர நேரமாகி விட்டது...” என்று குமார் சிரித்துக் கொண்டே வழி மொழிந்தான். அவர் தனக்கும் வேணிக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணையில் கடைசி வார்த்தையையேனும் கட்டாயம் கேட்டிருப்பார் என்று அவன் நிச்சயமாக நினைத்திருந்தான். அது பொய்யில்லை.

     “நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது தம்பி, நீங்கள் உலகம் புரியாத இளவயசு. இது போல் இன்னொரு நாள்... நான் பார்க்கக் கூடாதென்று சொல்ல வேண்டியிருக்கிறது.” குமாரின் முகம் வாடியது. “நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. நான் தீவிரமாக நினைத்துச் சொல்கிறேன். வேணிக்கு இஷ்டமென்றால்...” என்று முடிக்கு முன் அவர் குறுக்கிட்டார்.

     “இந்த வயசில் அவளுக்கு உலகம் தெரியாது தம்பி. உங்கள் உயரத்துக்கு எட்ட எங்களுக்கு ஆசையும் கிடையாது. சக்தியும் கிடையாது. மிகவும் ஒட்டுறவாக அன்பாகப் பழகினீர்கள். இந்த உறவே நமக்கு அதிகம். நான் சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது. நான் அநுபவப் பட்டவன். நீங்கள் இது விஷயம் இதற்கு மேல் பேசாமல் விட்டு விடுவதையே நான் விரும்புகிறேன்” என்றார்.

     “நான் மிக வருந்துகிறேன்” என்று சொல்லிவிட்டு, அன்று குமார் போய்விட்டான். வேணியை அன்று மாலையே, அத்தையின் வீட்டுக்கு செண்பகப் புதூருக்குக் கூட்டிப் போனார் அவர். குமாரை அவள் அதற்குப் பிறகு அன்று மாலையில் தான் கண்டிருக்கிறாள்.