சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 17 |
17 வேனில் கோலாகலங்கள் முடிந்து உதகை நகரில் பருவ மழைக்கான மேகங்கள் வானில் திரை விரித்து விட்டன. ஊசிகளாய்க் குத்தும் சாரல் வெறி மழையும் கடுங் குளிரும் நகரின் எழில்மிகு தோற்றங்களை எல்லாம் அழிக்க முயன்றன. ஆதவன் இந்த அரங்கில் இடமில்லை என்று மறைந்தே கிடந்தான். குமார் மூன்று நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. இம்மாதிரியான காலநிலையில் எசமானன் இல்லாத வீடு எப்படி இருக்கும்? வேனிலுக்குப் பெரியம்மை வருவதற்கு முன்பு, அந்த இல்லத்துப் பணியாளன் திம்மன் ஒருவனே இருந்தான். புதல்வனுக்கு நல்ல உணவு ஆக்கிப் படைக்க, சிவகாமி ஆயாவை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருந்தாள். வேலை செய்யாமலே பழகி விட்ட சோம்பேறி திம்மன். ஆயா அவனை விரட்டுவதும், அவன் அவளைக் கேலி செய்து சிரிப்பதும் அங்கு அன்றாடப் பொழுது போக்காக இருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் எசமானர் வீடு திரும்புவாரோ என்னமோ? இந்தப் பூக்கிண்ணத்துப் பூவெல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன. தண்ணீர் இறங்கி சுவர் ஓரம் வழிந்திருக்கிறது. துடைப்பதில்லை, பெருக்குவதில்லை என்று கடுகடுப்புடன் ஆயா திம்மனைக் கடிந்து கொள்ள வாயிற்புறம் வந்த போது, தபால்காரர் ஒரு திருமண அழைப்பிதழை அவளிடம் கொடுத்து விட்டுப் போனார். “உனக்கில்லை, வீட்டையாவுக்கு!” என்று அவளிடம் சொன்ன போது அவள் சிரித்துக் கொண்டாள். ஆயாவுக்குத் தட்டுக்கெட்டு மலையாளம் படிக்கத் தெரியும். தமிழ் தெரியாது. ஆனால், வேணி என்ற எழுத்துக்கள் புரிந்ததும் நெஞ்சு துணுக்குற்றது. அந்த எழுத்துக்கள் மலையாளமாகப் புரிந்தாலும், தமிழ் என்று தெரிந்தாலும் அந்த வீட்டுக்கு அன்றொரு நாள் ஒளிக்கதிர் போல் வந்த செல்வியையே அவள் மனதில் கொண்டு வந்தன. அந்தக் கவரின் மேலேயே இரண்டு கைகள் இணைகின்றன. மொழு மொழுவென்ற கையும், வலிய ஆண் கரமுமாக அவளுக்கு கண்களில் தோன்றின. சந்தன பேலா, பன்னீர் செம்பு, மாலை, பெயர்கள்... வேணியோ... வேணியோ! அவளுடைய பெயரை அன்று ஐயன் அப்படித்தான் அழைத்தார். ஏன், ஆயாவும் கேட்டாளே? அவளுக்குக் கலியாணமோ? அவளுக்கு எப்படிக் கல்யாணமாக இருக்க முடியும்? அந்த வீட்டில் அவளுக்குத் தெரிந்த குமாரனான ஐயன் அவளை அழைத்து வந்தார். “ஆயா வீடெல்லாம் காட்டிக் கொடு, இந்தக் கொச்சமைக்கு இங்கே சாப்பாடு” என்று அவர் சாதாரணமாகவா கூறினார்? டாக்டர் ரூபா குழந்தை முதல் விளையாடிய பழக்கம். அது தவிர, ஒரு பெண்ணை ஏறெடுத்து நோக்கி அப்படி ஐயன் சிநேகம் கொண்டாடியதாகத் தெரியவில்லையே?... அந்தக் கன்னி அன்று சாப்பிட அமர்ந்திருக்கையில், ஒவ்வொரு கோணமாக மனநிறைவின் வண்ணஜாலங்களை ஆயா கண்டது பொய்யா? சிரித்து மகிழ்ந்தது பிரேமையா?... ஒரு கன்னி மனசில் ஆடவனின் அன்பு நிறைந்த புத்தொளிர்க் கதிர்களின் பிரதிபலிப்பை அவள் அறிய மாட்டாளா? பதினாறு ஆண்டுகளில் அவளுக்கு அப்படி ஒரு நினைவு வந்ததில்லை. தாமரை மொட்டுப் போல் குடிசை வாயிலில் ஓலைப்பாயில் கிடந்த குழந்தை கிட்டாத குழந்தை. அந்தச் செல்வத்தைத் தூக்கிக் கொண்டு அன்று அவர் ஓடியே போனார். ஓலைப்பாயிலிருந்து குபீரென்று எழுந்து, இந்தக் குமாரனின் அருகில் வந்து நிற்கிறாளோ என்றல்லவா ஆயா மலைத்தாள்? கண்களில் ஒளிப்பூக்களாய்ச் சுடர்விட்ட நாணம், கன்னச் செழுமையில் ஐயன் நோக்கிய போதெல்லாம் சிவப்பேறிய விந்தை, சொற்கள் எழாமல் தடுமாறிய திணறல் எல்லாவற்றையும் மிக அருகில் நின்று பார்த்தாளே? கழுத்தில் மச்சம் கூடத் தெரிந்தது. அள்ளி அணைத்து கண்ணீர் பெருக்கத் தாபம் வாட்டியது. ஆயிரமாயிரம் சொற்கள் உருவாக வந்து, எந்த ஊரென்று கூடக் கேட்க இயலாததோர் உணர்ச்சிப் பிரளயத்தில் கரைந்தன. அந்த வேணி தனக்குக் கல்யாணம் என்பதை ஐயனுக்குச் சூசகமாக அறிவிக்க இந்தக் கல்யாணப் பத்திரிகையை அனுப்பி வைத்திருப்பாளோ? பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு அவள் சிலையாக நிற்கையில், “அம்மா!” என்ற குரல் கேட்டது. “அம்மா...!” ஆயாவின் ஒரே வாரிசான பேபி. அழுக்கில் தோய்ந்த கிழிசல் கோட்டு. கறுப்புக் கட்டம் போட்டதொரு சராய். எண்ணெய் காணாத கோலம். “எங்கேடா வந்தாய்? போ போ!” என்று வெருட்டினாள். “நாளை ஒன்னாந்தேதி, சம்பளம் முழுசும் உன் கையில் கொடுக்கும். ஒரு அஞ்சு ரூவாம்மா. அதிகமில்லே - அஞ்சு அஞ்சே அஞ்சு...” “அஞ்சு காசு கூட இல்ல. இப்ப ஐயன் வரும் நேரம். இங்கே நிக்கண்டா போ!” அவன் கெஞ்சு கெஞ்சென்று கெஞ்சினான். குளிருக்கு மாற்ற ஒரு போர்வை இல்லையாம். படுக்க இடமில்லையாம். கடைத் திண்ணையில் படுக்கிறானாம். மூன்று நாட்களாகப் பட்டினியாம். இதொன்றும் அவனுடைய தாய்க்குப் புதிதில்லை. போதைச் சரக்குக்காக அவன் உயிர் வாழ்கிறான். அதற்குப் பணம் வேண்டும். அவள் செய்த பாவங்களின் நிழல் அவன். அவளை நிம்மதியாகத் தன் இழப்புக்களைக் குறித்து ஏங்கிச் சாகவும் விடாத சத்துரு. ஒரு மகன் வடிவில் அவளுடன் சுற்றிச் சுற்றி வருகிறான். படிப்பு, நேர்மை, அறிவு, கண்ணியம் எல்லாம் அவனுக்குப் புறம்பானவை. எத்தனையோ நாட்கள் அவனுக்காக ஒரு முழுக்குப் போட்டு விட்டு மறந்து விடுவதைப் பற்றிக் கனவு கண்டிருக்கிறாள். ஆனால், கனவு எப்போதும் பலிப்பதில்லையே? அவளுடைய உழைப்பின் ஊதியம் அனைத்தையும் அவன் எப்படியோ மோப்பம் அறிந்தே பிடுங்கிக் கொண்டு போய் விடுவான். அவளுடைய பாசம் வென்று விடுவதாகச் சொல்வதற்கில்லை. பணத்தைக் கொடுத்து துன்பத்தை அதிகமாக்கிக் கொண்டு இருவரில் ஒருவர் விரையில் முடிவதே நோக்கம் என்று அவள் மனசைத் தேற்றிக் கொள்வதுண்டு. காலைச் சுற்றிய பாம்பு இலகுவில் போய்விடாது. ஆனால் அதற்கு முன் ஓர் எண்ணம் தலை தூக்கியது அவளுக்கு. சமையலறை மூலையில் அவள் அந்தத் திருமண அழைப்பிதழை மீண்டும் பிரித்துப் பார்த்தாள். “என்னம்மா அது?” “இது ஒன்னு வாசிச்சுக் காட்டு?” திருடனுக்குத் திருட்டுத் தனத்தின் ரேகை தென்பட்டாலும் புரிந்து விடாதா? பேபிக்கு அது உடனே பெரிய விஷயமாகப் புரிந்தது. “இது... எசமானருக்கு வந்த கடிதம். உனக்கென்ன இதில்?” என்று கேட்டாற் போல் விஷமமாக அம்மையைத் துளைத்தன அவன் கண்கள். “எனக்குத் தெரிய வேணும், படி...!” செண்பகபுதூர் வேலாயுதம் பிள்ளையின் குமாரன் திருநிறைச் செல்வன் பூபதிக்கு - அம்மையம்பட்டி சுப்பிரமணியனின் குமாரத்தி, திருநிறைச்செல்வி நீலவேணியை - செண்பகப்புதூர் - சுப்பிரமணியன் - சுப்பிரமணியன். சுப்பையா... சுப்பையா... அவன் படித்த விவரங்களில் மீதி எதுவுமே அவள் செவிகளில் விழவில்லை. சுப்பிரமணியன் - சுப்பையா. சுப்பையாவின் குமாரத்தி வேணி. அமுதகலசம் பொங்கி, ஆவியாய்ப் போனாற்போல் அவளுடைய உடல் தடுமாறியது. பத்திரிகை இதழை வாங்கி மடித்தாள். “யாரம்மா அது? அன்னைக் கொரு நாள் இங்கே வந்திருச்சே...” “போடா...!” ஆவி சீறும் வேகத்தில் அவள் வெருட்டினாள். “இது கல்யாணம் ஆயிட்டதம்மா, ஒரு மாசமான பழைய பத்திரிகை.” “உன்னை நான் கேட்கவில்லை!” பேபி சிரித்தான். “எனக்கு அஞ்சு ரூபாவைக் கடாசு, நான் ஒழிஞ்சு போறேன்.” “ஒரு காசு கிடையாது... போ... ஐயன் வரும் போல் சத்தம் கேட்கிறது. நான் வேலையை நோக்கட்டும்.” மோட்டார் சைக்கிளின் ஓசை பொய்யில்லை. வானம் ஒரே நிழலாய்க் கவிந்து குமுறியது. குமார் மழைக்கோட்டை வாயில் கொம்பிலேயே மாட்டிவிட்டு உள்ளே வந்தான். ஆயாவிடம் சாப்பிட்டாயிற்று என்று அறிவித்து விட்டு படுக்கைக்குப் போய்விட்டான். பலப்பல நாட்களுக்கு முன் ஆயா பருவக் குமரி பாருவாக இருந்த நாட்களில் ஒரு “வலிய உத்தியோகஸ்தர்” வீட்டில் பணிபுரிந்து வந்தாள். நாட்டிலே குடும்பம் இருந்தது. அவரோ வெளியூரில் உத்தியோகம் செய்பவர். வாராந்தர நாட்களில் நாள் கிழமைகளில் எஜமானரின் கார், அந்தப்புர இடத்தில் வந்து தங்கும். அப்போது அந்த வண்டியை ஓட்டிக் கொண்டு அந்த ஆளும் வருவார். டிரைவருக்கு இன்ஜினீயர் சாமி வீட்டில் சாப்பாடும் காப்பியும் கிடைக்கும். என்றாலும், முட்டைக்கும் பிட்டுக்கும், அவன் கொச்சுப் பாருவின் குடிலுக்கு வருவது வழக்கமாயிற்று. குடிலில் வயசான அவளுடைய அம்மையும், நான்கு வயசில் ஒரு பையனும் இருந்தார்கள். பையன் அக்காவின் குழந்தை என்றும், அவள் மகப் பேற்றில் உயிர் மீளவில்லை என்றும் பையனின் தந்தை எங்கோ கிழக்காப்பிரிக்காவில் கொத்துப் பணி செய்யப் போனவன் வரவில்லை என்றும் அம்மை ஒரு நாள் அவரிடம் தெரிவித்தாள். வயிற்றுப் பிழைப்புக்கே கஷ்டமான குடும்பம் என்று அவருக்குத் தெரிந்துதானிருந்தது. என்றாலும், அவருக்கு அவள் மோகினியாக இருந்தாள். அவளோ அவரை ஆட்கொள்ள வந்த தெய்வமாகக் கருதினாள். சொந்த ஊர் சண்பகப்புதூர் என்று கூறினாரே ஒழிய, அப்போது வேறு விவரங்கள் எதுவும் தெரியாது. கோடித் துணி வாங்கிக் கொடுத்து, அம்மை கூறியபடி சம்பந்தம் கழித்துக் கொண்டார். எஜமானர் ஊருக்கு வருகிறார் என்றால் அந்தக் குடிலிலும் மகிழ்ச்சி பொங்கலாயிற்று. முதல் வருஷமெல்லாம் அவளைக் கொண்டு போய்க் குடும்பம் நடத்துவதாக அவரும் கூறவில்லை. அவர்களும் வாய் திறக்கவில்லை. பாரு தன்னுடைய மறுவார்ப்பே போல் ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்தாள். அப்போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. எத்தனையோ இரவுகளில் ஆயா, பாருவாக துன்ப இருளில் குலை துடிக்கக் கண்ணீரும் வறளக் கிடக்கையில், கல்யாணமென்று அவரைச் சார்ந்த உடனேயே அவருடன் ஊர் விட்டுச் சென்றிருக்க மாட்டாளா என்று ஏங்கியிருக்கிறாள். அப்படிப் போயிருந்தால், கடல் தாண்டிப் போயிருந்த முன்னவன், அவளுடைய கனவான சொர்க்க வாழ்வில் தீவைக்கக் கண்டுகொள்ள முடிந்திருக்காதல்லவா? வயிற்றுப் பசி தீர்த்துக் கொள்ள அந்த முதல்வனுக்கு அவளுடைய கன்னிமையை அம்மை விலை பேசினாள் என்றால் பொய்யில்லை. அதை நிழலாக எண்ணி போனவன் திரும்பி வரமாட்டான் என்று ஒதுக்கி, அக்கா பிள்ளை என்று கதை திரித்தாளே, அந்த வினைதானோ வாழ்நாளெல்லாம் சூழ்ந்து கொண்டது? ஆனால், இந்த மனிதரை அவள் சாதாரணமாகவா நினைத்து இருந்தாள்? தங்கள் வறுமையை மறைத்துக் கொண்டே அவருக்கு ராஜோபசாரம் செய்தது அன்பினாலல்லவா? அவரிடம் அவள் வாயசைத்துப் பணம் கேட்டதில்லை. அம்மை முணுமுணுத்தால் கூட அவளுக்கு எங்கிருந்தோ ஆவேசம் வந்துவிடும். போனவன் முன்பு தங்கனீகாவிலிருந்து இரண்டு கடிதங்களும் ஏதோ முப்பது ரூபாயும் மட்டுமே அனுப்பியிருந்தான். ஏறக்குறைய ஐந்து வருஷங்களான பின் அவளை நாசமாக்க வருவான் என்று யாரோ எதிர் பார்த்தார்கள்? அப்படி வந்தவன் முன்பின் வரமாட்டானா? குழந்தை பிறந்து ஒரு மாசமாகவில்லை. ஓலைப்பாயில் படுத்த குழந்தையை உறுத்துப் பார்த்தான். பிறகு காலால் தள்ளினான். அவள் மார்போடு அழுத்திக் கொண்டு திரும்பி நின்றாள். முன்பு அக்கா பிள்ளை என்று அவருக்குப் பொய் புகன்ற அம்மை, இப்போது இந்தக் குழந்தைக்குச் சமாதானம் சொல்லத் தெரியாமல் நின்றாள். தங்கனீகாவிலிருந்து கட்டி கட்டியாகக் கொண்டு வந்து இருப்பான் என்று அவனை உபசரித்தாள். பாருவைச் சித்திரவதை செய்தாள். ஒரு நாள் இடியே அவள் தலையில் விழுந்தது. அவள் தெய்வமாகக் கருதியவர் வந்தார். குடித்து விட்டுக் கிடந்த பேய் அவரை உதைக்கப் போனான். அந்தத் தெய்வம் உறுத்துப் பார்த்தது. துணிச்சுருளில் கிடந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு... அப்படியே நடந்து போனார். அதுவே கடைசியோ கடைசி. முழுக் குடியனிடம் மூன்று ஆண்டுகள் கொடிய தண்டனை. பற்கள் போய் ஆயாவானாள். இந்த மூத்த பையன் அந்த அப்பனுக்கு மைந்தன். சின்ன வயசில் கண்டதெல்லாம், விலங்கு வாழ்க்கைதானே? எப்படி நன் மணம் மலரும்? அன்று கறுப்புத் துணிச் சுருளில் அந்தக் குழந்தை குடிலுக்கு வெளியே கத்தி விறைத்த கோலம் இன்றும் அவள் கண்முன் நின்றது. அந்தக் குழந்தை, மாலையும் கழுத்துமாக யார் கையோடு இணைந்து நிற்கப் போகிறாள்? பொழுது குறுகி இருளாகக் குமையும் நேரத்தில் தான் குமார் எழுந்து வந்தான். வேற்றுடை தரித்து, முன்னறைக் கணப்பின் கீழமர்ந்து தேநீரருந்துகையில் ஆயா சாடையாக நோக்கினாள். அந்தக் கையின் மீது பார்வை பதிந்த போது நெஞ்சில் பகீரென்று ஒரு குலுக்கம். இந்தக் கையுடன், அன்றொரு நாள் அவள் கண்ட மென்கரம் இணையப் போவதில்லையா? ஒரே ஊரிலே, அவளுடைய கண்களின் கனவாக இருந்த உயிர், எழிலின் இருப்பிடமாக உலவி வந்தும் அவளுக்குத் தெரியவில்லையே? குமாரனான ஐயனின் முகத்தில் வழக்கத்துக்கு மாறான சோகம் எதுவும் புலப்படவில்லை. செவ்வொளியின் வெம்மையில் முகம், உதயமாகும் பூரண நிலவுபோலவே காட்சி தந்தது. எப்படி, அவள் எதைக் கேட்பாள்? அந்தத் திருமண அழைப்பிதழை அவன் பார்க்க வைத்து விட்டால், அந்த நகை சிந்தும் முகம் எப்படியாகுமோ? கையில் குழந்தையுடன், கல்லாக மரமாக ஒரு கணம் அவளை நோக்கிய ஒருவரை மறுபடியும் வேறு வடிவில் காண்பாளோ? ஓட்டையில் சிக்கிய தூசி போல் துடித்தாள் அவள். தேநீர் கிண்ணங்களை எடுக்க ஆயா மீண்டும் வருகையில் குமார் பேசினான். “எந்தா விசேஷம், ஆயா?” “ஒன்னுமில்ல...” நாதளர்ந்து போயிற்று. “பேபி வந்தானோ?” “ஆ...” ஒரு அலுப்பு. “இங்கே இருக்கிறானா இப்போது? பணம் வாங்கிக் கொண்டு போய்விட்டானா?” “போயி...” என்று முண முணுத்துவிட்டு ஆயா மெள்ள மெள்ள நகர்ந்து வந்து அந்தத் திருமண அழைப்பிதழை மேசை மீது வைத்தாள். நின்று நோக்கத் துணிவில்லாமல் பின்னே நகர்ந்தாள். |