15

     வெள்ளைக் களிமண் பாண்டங்கள் குத்துப்பட்டால் பயன்பெறாது குப்பைக்கே போக நேரிடுகிறது. ஆனால், உறுதி வாய்ந்த உலோகப் பாண்டங்களில் குத்து விழுந்தால் அதைச் சீர்செய்ய முயல்வதே இயல்பு. உடலியல்பினால் பெண் மெல்லியலென்று கருதப்படுவதனாலோ என்னவோ காலம் காலமாக ஆணுக்கு அடங்கியவளாகவே வைக்கப்படுகிறாள். அவளுக்கு மென்மையே அணிகலம். அடக்கமே அவள் உயர்வு. அவள் அனுபவித்து அன்பு செய்வதை விட அன்பு செய்யப்படுவதிலேயே உயர்வை எய்துகிறாள். ஆனால் ஆணின் இயல்பு அத்தகையதல்ல. வீட்டுக்குத் தலைவனாக உரிமை பெறுபவன். நடைமுறையில் வீடு தலைவியைச் சார்ந்தாலும், அதிகாரத்துக்கு அவனே மேலோங்கி நிற்கிறான். அவன் ஆள்பவன். வன்மையும் திண்மையும் அவனுக்கு இயல்பான குணங்கள். எனவே அவனுடைய இயல்பில் குத்தோ, களங்கமோ நேர்ந்தாலும் மனைவி பொறுத்து, திருத்துவதே கடமை என்பது சகஜமாகக் கருதப்படுகிறது. ஆனால், மனைவி, கணவனை மீறியவளாக இருப்பதை எவரும் இயல்பாக நினைப்பதில்லை. கணவன் ஒருவன் மனைவியைப் பளிங்குப் பீங்கான் போலவே கருதுகிறான் என்றால் மிகையேயில்லை.

     வேணி வேலை ஒப்பந்தப்படி இன்னும் சில மாதங்கள் வேலை செய்ய வேண்டி இருந்தது. ஆனால், முயற்சியின் பேரில் அவளுக்குக் கணவனின் இருப்பிடத்துக்கே மாற்றல் வழங்க அவளுடைய அதிகாரி முன் வந்தார். அந்த அதிகாரி அவளுடைய கல்யாணச் சேதி கேட்டு வாழ்த்தினார். அவளுக்கு அளிக்கப் பெற்ற வட்டத்தில் அவள் அற்புதமான முறையில் பணியாற்றியதைப் பாராட்டு விட்டு, அவள் சொந்த வட்டத்திலோ, மாவட்ட அலுவலகத்திலோ பணி புரியச் சாதகமாக மாற்றலளிப்பதாகவும் கூறியிருந்தார்.

     மாவட்டக் கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி சம்பந்தமான அலுவலகங்கள், அரசாங்கக் கஜானா முதலிய பல இடங்களும் ஒரே சுற்றுக்குள் இடம் பெற்றிருந்த தாகையால், அந்தச் சுற்றுக்குள் காலை வேளையில் கூட்டத்துக்குக் குறைவே இருக்கவில்லை. பல வகைகளான பெர்மிட், லைசென்சுகள் வாங்க வந்த கூட்டம், ஏதோ வேலைக்காக நடக்கும் போட்டிக் கூட்டம் தவிர, கஜானா வாயிலில் பணம் கட்டும் கும்பல் ஒரு புறம் அடிமுடி தெரியாமல் நீண்டு போயிற்று. அந்தக் கும்பலில் தான் பூபதியும் நின்றான். அவனுடைய அலுவலக சம்பந்தமாகத்தான் ஏதோ பணம் கட்டி அவன் ரசீது பெற வேண்டி அங்கு வந்திருந்தான். ஆனால், அவனுடைய பார்வை, அங்கிருந்து நூறு கெஜ தூரத்தில் தெரிந்த வாயிலில் ஒன்றியிருந்தது.

     அந்த வாயிலின் மேற் பலகையில், “அந்தரங்க உதவியாளர்” என்ற எழுத்துக்கள் தெரிந்தன. வேணி, அங்கே வாயிலில் வெகு நேரமாக வெளியே வருவதும் அடுத்த அறைக்குள் செல்வதுமாகச் சகஜமாக நடமாடினாள். அவளுடைய நடப்பில் புதிய கூச்சமில்லை. அரைக்கை ஸ்லாக்கும் நிஜாருமாக அங்கு அவள் தென்படும்போது எதிர்படுபவர்கள் எத்தனையோ பேர். வராந்தாவில் எதிர்ப்படும் போது ஒரு புன்னகை - அல்லது ஒரு தலை அசைப்பு.

     வேணி, அவன் மனைவிதான், ஒரு மாசமாக புது மனைவிதான். அங்கே வேலை செய்கிறாள். அந்த அறைக்கும் இந்த அறைக்கும் போக அவளுக்கு அப்படி என்ன இருக்கும்?

     ஒரு ஜீப் வந்தது. ஏதோ தெய்வ தரிசனம் கண்டாற் போல் பலரும் ஒதுங்கி நின்றனர். வணக்கம் தெரிவித்தனர். ஏதோ ஒரு மன்னர் மன்னன் போல் அந்த ஜீப் அதிகாரி இறங்கிச் சென்றான். பதில் வணக்கம் தெரிவிக்கக் கூட அவன் தலையசைத்ததாகத் தெரியவில்லை. சற்றைக்கெல்லாம் வேணியும் அந்த அறைக்குள் சில காகிதங்களுடன் பாய்ந்து சென்றாள்.

     பூபதியின் கால்கள் இயந்திர கதியில் முன்னுக்குச் சென்றாலும், இந்த அலுவலக நாடகமே அவன் கவனத்தில் காட்சி மாறிக் கொண்டிருந்தது.

     அரசினர் அலுவலகத் தோரணைகளை, நடைமுறைகளை அவன் அறியாதவனா? அலுவலக வரையறைகள் அவனுக்குப் புதிதல்லவே! என்றாலும் அவன் அவற்றுள் ஒரு பெண்மணி இடைப்பட்டுச் சுழலுவதை இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்ததில்லை. பொதுவாக வேலைபுரியும் பெண்களை அவன் கண்டிக்கிறான். அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பெண்கள் இல்லாது போனாலும் அவனுக்கு அலுவலகத்தில் வேலை புரியும் பெண்கள் புதுமைக் காட்சியில்லை. ஆனால், இப்போது அவன் பார்வையில் புதிய கூர்மை, புதிய ஒளி கூடியிருந்தது. அவள் யாரோ ஒருத்தியல்ல. வேணி, அவன் மனைவி!

     பூபதிக்குக் கண்களிலே நொய் விழுந்தாற் போல் ஒரு வேதனை. இடைவேளையில் அவள் வருவதாகச் சொல்லியிருந்த இடத்துக்கும் வரவில்லை.

     ஓட்டலில் வெறுங்காப்பியை அருந்திவிட்டு, பகல் பொழுது முடிவதற்குச் சற்று முன்பே ஏதோ சாக்கைச் சொல்லி அவன் கிளம்பி விட்டான். வீட்டு வாயிலில் கல்யாணத்துக்காக போட்ட பந்தலை இன்னமும் பிரிக்கவில்லை. பள்ளிக்கூடம் திறந்தாகி விட்டதனால் கிருஷ்ணா, லட்சுமி எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். அவனுடைய தந்தைக்கு முன் போல் உடல் நலிவில்லை. அதனால் வீட்டிலில்லை. பந்தலை அடுத்து பெரிய திண்ணை. திண்ணையில் ஒரு புறம் மச்சுப்படி இருந்தது.

     திண்ணையிலே கூடத்துச் சன்னல் வழியாக பூபதி எட்டிப் பார்த்தான். மரகதம் கல்யாண வரிசைகளை எல்லாம் யாரோ ஒரு வெள்ளை முடி மூதாட்டிக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.

     “செங்கமலம்! அந்த மாடத்திலே வந்திருந்த கவர் கூடெல்லாம் எடுத்து வாம்மா?” என்று கூவினாள் அவள்.

     கல்யாணத்தின் போது தன் மகனுக்கும் மருமகளுக்கும் வந்த வாழ்த்துக்களைக் கூட மிகப் பெருமையுடன் எல்லோரிடமும் காட்டுவது அவள் வழக்கமாக இருந்தது.

     “எத்தனை காகிதம் இதுபோல அத்தை? ஒரு நூறு இருக்கும்! தம்பிக்குச் சிநேகிதர்கள் வேணிக்குச் சிநேகிதப் பெண்ணுகள் எல்லாரும் கல்யாணத்துக்கு வராமப் போனாலும் இப்படித் தந்தி அனுப்பினாங்க. இதபாருங்க, இதெல்லாம் வேணிக்கு ஆபீசுப் பெண்ணுகள் கொடுத்ததுதான்...”

     வந்திருந்த கிராமத்து மூதாட்டி வெற்றிலை புகையிலை மெல்லும் வாயுடன்,

     அ... ஆ! என்று கேட்டு அதிசயித்தாள்.

     ஆட்டினால் நிசமாகவே அழும் குழந்தை பொம்மை.

     குழந்தை பால் குடிக்கும் கிண்டியும் ரப்பரும் - பிளாஸ்டிக் கிண்ணம்.

     கூடை - இதெல்லாம் கண்டிராத புதுமைகளல்லவோ?

     “இப்போதும் கூட வேணி வேலைக்கும் போகுதா?”

     “ஆமாம். ரெண்டு பேரும் ஒண்ணாப் போயி ஒண்ணா வராங்க...” என்று மொழிந்தாள் மரகதம்.

     “உன் மருமவளுக்கு, சோறாக்க, வைக்க - பிடிக்க, ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லு, பின்னே?”

     “ஏன் தெரியாம? இதோ இந்த விளக்கு காப்பிக் கிளாஸு எல்லாம் கல்யாணத்திலே வந்ததுதான். ரொம்ப நல்ல பேரு அதுக்கு. வேலை செஞ்ச இடத்திலே...?”

     “இப்ப அதுக்கும் சோறாக்கி வச்சு, சேலை துவைச்சுப் போட்டு, செங்கமலம் ஆபீசுக்கு அனுப்பணும்?”

     மூதாட்டி தான் பார்க்கும் கோணத்திலேயே கேள்விகளைப் பிரயோகிக்கையில் பூபதி, “அம்மா!” என்று கத்தி விட்டு மச்சுப் படியில் ஏறினான்.

     “வந்தாச்சா? செங்கமலம்! காப்பி வை” என்று குரல் கொடுத்த கையுடன் மரகதம் தலையை அள்ளி முடிந்து கொண்டே முற்றத்து நெல்லைத் தின்னும் கன்றைப் பிடித்துக் கட்டப் போனாள்.

     “மருமகளைக் கூப்பிடு மரகதம்! முன்னமே பார்த்தாலும் இப்ப பார்த்திட்டுப் போறேன்” என்று கிழவி எழுந்து நின்றாள்.

     “தம்பி மட்டும் தான் வந்தான். இருந்து கூட்டி வரக் கூடாதா?” என்று செங்கமலம் முணுமுணுக்கையில் பூபதி முறைத்துப் பார்த்துக் கொண்டே பின்புறம் சென்றான்.

     படிப்பு வாசனையையும், பட்டண நெடியையும் நுகர்ந்திராத மரகதத்துக்கும் செங்கமலத்துக்கும் கூட இந்தப் புரட்சியை ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால், அவற்றிலே புரண்டிருந்த பூபதிக்குக் கண்ணில் இன்னமும் உறுத்தல் மாறவில்லை.

     திருமணம் அவர்களிடையே பழைய கோபதாப - மனவேற்றுமைகளைத் துடைத்த பின் புதிய கோலத்தைத் துவக்கும் சடங்காகவே பரிணமித்திருந்த தென்றால் பொய்யில்லை. பெருந்தன்மையுடன் அவனும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவளும் அவன் கூறிய சூளுரையை மறந்து விடும் வண்ணம் நடந்து கொண்டாள்.

     “இன்றிலிருந்து ஒரு புதிய வாழ்வே நமக்குத் துவங்குகிறது. கடந்ததை இருவரும் மறந்து விடுவோம். நான் உங்களுக்கு என்றும் உரியவள். அறியாமல் தவறு செய்திருந்தாலும் மன்னித்து விடுங்கள்...” என்று அவன் கைகளைக் கண்ணீர் படிந்த முகத்தில் ஒத்தி எடுத்த போது அவன் கரைந்து போனான். தன் மனைவியின் அன்பைக் குறித்து ஓர் எள்ளளவு சந்தேகமும் அவனுக்கு இப்போது தோன்றியிருக்கவில்லை. பழைய மூலையை விட்டு மாறி, அவள் அவனுக்கருகிலேயே வந்ததையே அவன் பெரிதாக எண்ணிவிட்டான்.

     இப்போது... புதிய பார்வை புலப்பட்டது. அலுவலகம் என்பதும் ஒரு பெரிய கடல் தான். அந்தக் கடல், நான்கு சுவர்களாகிய எல்லைக்குள், அடுக்குப் பைல்கள், பீரோக்கள், மேசை நாற்காலிகளாகிய பாசிகளும் பூண்டுகளும், இடையே பலப்பல வகைச் சுறாக்களும் மீன்களும் உண்டென்ற ஞானம் அவனுக்குத் தானாகவே உதயமாயிற்று. இந்தக் கடலிலும் தூண்டில் போடுகிறவர்களும் உண்டு. சுறாக்களுக்கு இரையாவதற்கும் வழிவகை இருக்கும் என்ற உணர்வும் அவனுக்கு அப்போது பிறந்தது.

     செங்கமலம் காப்பி கொடுத்தாள். அதை அருந்தி விட்டு அவன் மீண்டும் வெளியே செல்லக் கிளம்பினான்.