சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 15 |
13 படிக்கட்டுகளின் மேலே மஞ்சள் ரோஜாக் கொடிகள் அலங்கரிக்கும் ஒரு வளைவு வாயில். வாயிலுக்குள் நுழைந்து, சுவரிலிருந்த மணியைக் குமார் அழுத்தினான். அவன் பின்னே, அந்நியக் கூச்சம் தெளியாமல், அன்புக் கை ஒன்றீல் உட்கார்ந்திருக்கும் புறாவைப் போல் வேணி நின்றாள். ஓடி வந்து கதவைத் திறந்தவன் எப்போதும் துடை துணியுடன் காட்சி தரும் பணியாளனல்ல. ஆயாவின் அருமந்த மகன் பேபி. அவன் வேணியைப் பார்த்துவிட்டுச் சட்டென்று பின்னே ஒதுங்கினான். “உள்ளே வா, வேணி!” என்று குமார் அவளை அழைத்தான். இளநீலச் சுவர்கள் கீழே மெத்தென்ற விரிப்புக்கள், நேர்த்தியான பூங்கொத்துக்களை ஏந்திக் கொண்டிருக்கும் கிண்ணங்கள். மெத்தென்ற சோபா செட்டுகள். “உட்கார் வேணி, ஒரு நிமிஷம்...” என்று அவளை அவன் உபசரித்தாலும் அவளுக்குக் கூச்சம் தெளியவில்லை. திரையைத் தள்ளிக் கொண்டு அவன் உள்ளே நகருகையில், அந்தப் பணியாளன், “உட்காரம்மா!” என்று மீண்டும் கூறினான். வேணி சட்டென்று அமர்ந்து கொண்டாள். “மாம்...” கொஞ்சலாக ஒரு சீழ்க்கை ஒலி. “மா...ம்? எங்கே காணோம்?...” குமாரின் கொஞ்சலுக்கு எதிரொலியே வரவில்லை. சமையற்கட்டு தனிப்பகுதி. அங்கு இருக்கிறாளோ? “அம்மோவ்... ப்ராட் மை ஃபியான்ஸீ மாம்!” மெல்லிய இந்தக் கொஞ்சும் செய்தி அஞ்சலுக்கு எதிரொலி கொடுக்க, துடை துணிப் பணியாளன் தான் ஓடி வந்தான். “அம்மா இல்லீங்க.” “அதை நீ சொல்லாமலே தெரிகிறது. இடியட், போய்க் கூட்டி வா” என்றான் குமார். “இல்லீங்க... அம்மா ஊருக்குப் போயிட்டாங்க...” “ஊருக்கா? எங்கே, கூனூருக்கா?” “இல்லீங்க... ஐயா போன் போட்டாங்க - போயிட்டாங்க.” கடவுளே! இப்படியும் ஓர் அந்நியோந்நிய தம்பதி உண்டா? அவன் ஊரை விட்டுப் போய் இரண்டு நாட்கள் கூட முழுசாக ஆகவில்லையே? ஆயா அப்போது அங்கு தலை நீட்டினாள். “நேற்று நீங்க போன பிறகு போன் வந்தது. அம்மா உடனே மத்தியான பிளேனுக்குக் கிளம்பிப் போச்சு. லட்டர் ஒண்ணு எழுதி வச்சிருக்கு” என்றான். குமார் பரபரப்புடன் பிரித்தான்.
“குமார், அப்பா முதுகு வலி என்று சேதி கொடுத்தார். எனக்கும் ஒரு கெட்ட கனவு கண்டதால் இருப்புக் கொள்ளவில்லை. உன்னை எங்கே கூப்பிடுவது என்று புரியவில்லை. கவலைப்பட ஒன்றுமில்லை. நான் பகல் விமானத்தில் கிளம்பிப் போகிறேன். போய் எழுதுகிறேன். - அன்பு, மாம்” கடிதத்தை மடித்துக் கொண்டு அவன் முன்னறைக்கு வரும் வரையிலும் வேணி மருள மருள விழித்துக் கொண்டு சோபா நுனியில் அமர்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் சட்டென்று எழுந்து நின்றாள். அவன் முகத்தில் பெரிய புன்னகை மலர்ந்தது. பார்வையில் கனிவு நிறைந்தது. “ஒரு நிமிஷம் இரு வேணி. கீழே போய் ஒரு டிரங்க் புக் பண்ணிவிட்டு வருகிறேன்” என்று கேட்டுக் கொண்டு போனான். அந்த வீட்டின் கீழ்த்தளம் கீழே சாலையில் வாயிலுடன் கிடங்கு போல் அமைந்திருந்தது. அங்கே மின்சார சாதானங்கள் கொண்ட கடை, தைல விற்பனைக் கடை முதலிய வியாபார அறைகள் இடம் பெற்றிருந்தன. அங்கேயுள்ள தொலைபேசியில் ஒரு டிரங்க் கேட்டுவிட்டு அவன் மேலே வந்தான். மறுபடியும் அவனைக் கண்டதும் பள்ளிப் பிள்ளைபோல் எழுந்த வேணியின் கூச்சம் அவனுக்கு நகைப்பூட்டுவதாக இருந்தாலும் அவன் நகைக்கவில்லை. “உன்னைக் காக்க வைத்து விட்டதற்காக வருந்துகிறேன் வேணி. நேற்றுத்தான் அம்மா சென்னைக்குப் புறப்பட்டுப் போய் விட்டாளாம். நான் நேற்றுக் காலையில் தான் போனேன்... அப்பாவை விட்டுப் பிரிந்து அரை மாசம் கூட ஆகவில்லை. சொப்பனம் கண்டார்களாம். இங்கிருந்து கோயமுத்தூர் போய் பறந்து போயிருக்கிறாள்...” வேணி பதில் கூறத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள். “சரி, நாம் சாப்பிடலாம். நீ மனசுக்குள் சபித்துக் கொண்டிருப்பாய். பசி கிண்டிக் கொண்டிருந்திருக்கும். அப்படித்தானே?” “ஓ... இல்லை ஸார்...” “இல்லை ஸாரா? என்ன இல்லை?” “பசி இல்லை; அதனால் சபிக்கவில்லை.” அவள் நாணத்தோடு நகைத்த போது ரோஜாக் கன்னங்கள் குழிந்தன. “பசி இல்லையா? எப்போது வரம்பெற்று வந்தாய்?” என்று அவனும் சிரித்தான். “ஆயா?... ஆயா?...” அவன் கூவுமுன் மலையாளத்து அம்மை ஓடி வந்தாள். “பசி இல்லாத போனாலும் ஆயா உன்னை அனுப்பச் சம்மதிக்க மாட்டாள். ஆயா, இந்தக் கொச்சம்மைக்கு வீடு எல்லாம் காட்டிக் கொடு!” என்று அவன் பணித்தான். உள்ளே நுழைந்த வேணி திக்குமுக்காடிப் போனாள். கனவு கண்டதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பறந்து போன அவன் அம்மாளுக்கும் அத்தை மரகதத்துக்கும் உளப்பாங்கில் வித்தியாசமே இல்லை. ஆனால்... எத்தனை வசதியான வாழ்வு! எங்கு திரும்பினாலும் பளபளப்பு. எங்கு திரும்பினாலும் கச்சிதம். ஒரு குழாயைத் திறந்தால் கூட அமைதி கெட்டு விடுமோ என்ற பிரமை தோன்றியது. கண்ணாடியில் தன் கூந்தலையும் கசங்கிய சேலையையும் பார்த்துக் கொள்ளவே வேணிக்கு நாணமாக இருந்தது. அந்த இடத்துக்கு அவள் வரப் போவதாகக் கொஞ்சமேனும் எண்ணியிருந்தால் வேறு சேலையேனும் உடுத்து வந்திருப்பாளே! தூய வெள்ளை விரிப்பு அணிந்த மேசை பளபளக்கும் தட்டுக்களைத் தாங்கி நின்றது. பட்டைக் கண்ணாடிக் குடுவையில் நீண்ட மலர்க் கொத்துக்கள் கம்பீரமாகக் காட்சி தந்தன. குமார் உடுப்புக்களை மாற்றி லுங்கி அணிந்து கொண்டு வந்திருந்தான். வேணியினால் என்ன முயன்றும் அந்த இடத்துக்குப் பொருத்தமாக அமைதியுடனிருக்க இயலவில்லை. குமார் தங்களுடைய அந்தஸ்துக்கு அப்பாற்பட்டவன் என்ற பாவனை அவளுக்கு இருந்த போதிலும், அது வித்தியாசமாகத் தோன்றும்படி அவன் ஒரு நாள் கூடப் பழக்கத்தில் வெளியாக்கி இருக்கவில்லை. அவன் அவளையே ஆதூரத்துடன் நோக்கிய போது, அவளுடைய உள்ளக் குழப்பங்களை எல்லாம் உணர்ந்து அவள் கூச்சத்தைப் போக்குபவன் போல் தோன்றியது. ஓர் அம்மா, தன் புதல்வியை இப்படிப் பார்ப்பாளோ? ஓர் அண்ணன் தன் சோதரியை இப்படி நோக்குவானோ? அன்றி ஒரு... நினைக்கவே நெஞ்சு புல்லரித்தது. ஆயா தட்டுக்களை நிரப்பினாள். “மோளே” என்று அவள் அழைக்கையில், அன்பின் ஈரம் அவள் நெஞ்சைக் குளிர்விக்கிறதே! இந்த ஆயா என்ன உறவு! வெறும் வேலைக்காரியாக இருப்பாளோ? “எனக்கு இன்று ஏமாற்றம். என் அம்மாவிடம் உன்னை அறிமுகம் செய்து வைக்க நினைத்திருந்தேன்” என்றான் குமார். “எனக்கும் தான்” என்றாள் வேணி மெள்ள. “நான் இப்படி ஒரு பெண்ணைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வைப்பேனா என்று அம்மா தினமும் கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று இங்கிருந்தாள் என்னை அடியோடு மறந்து போயிருப்பாள்...” வேணி என்ன பேசுவாள்? செவிகளில் அவன் குரல் தேன் தாரை போல் விழுந்தன. அவளுக்கே அவளை நினைவில்லை. நினைவிருந்தால் அல்லவா அச்சமும் குறுகுறுப்பும் கூடவே நினைவுக்கு வரும்? “நீ பேசவே இல்லையே வேணி?” வேணி நிமிர்ந்து நோக்கவே முடியாமல் திணறினாள். என்ன பேசுவது? அந்தப் புழுதி படிந்த கிராமத்தில் உண்ட எச்சிலையைக் கழுவிக் கழுவிக் கறுத்த அழுக்கு மேஜையில் எங்கள் எளிய உணவை உண்ண வருவீர்களே அப்போதையக் கலகலத்த பழக்கத்தில், நீங்களும் நாங்களும் ஒரே படியிலுள்ளவர்களென்று தோன்ற பிரமித்தேன். அப்பாவின் மீதும் கோபமும் வந்தது. இப்போது அன்றாட வாழ்வின் ஒரு சிறு அம்சத்திலும் கூட உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அல்லவோ புலனாகிறது? அன்பு இதை மூடுமோ? வியப்பும் திகைப்புமாக இடையே நிமிர்ந்தாலும் குரல் எழும்பவில்லை. குமார் அவளையேதான் வைத்த கண் வாங்காமல் நோக்கிக் கொண்டு இருந்தானே? “என்ன வேணி? ஏதேனும் வேண்டுமா? உப்பா...” அவன் கேட்குமுன் ஆயா ஓடி வந்தாள். “இல்லை, இல்லை, ஒன்றும் வேண்டாம்” என்று தண்ணீரைக் குடித்தாள் வேணி. “பின் நீ ஏன் சாப்பிடத் தெரியாத குழந்தை போல் நடித்துக் கொண்டிருக்கிறாய் வேணி?” “...ஒன்றுமில்லை. இந்த எல்லாவற்றையும் சாப்பிட வயிறு கொள்ளுமோ என்று பிரமையாக இருக்கிறது.” அவளுக்குச் சகஜபாவமே வரவில்லை என்பதைக் குமார் உணர்ந்து கொண்டான். “வேணி, நீ யாரோ எஸ்.ஓ.சியோ, என்னமோ சொன்னாயே? அவர் மீது எனக்கு இப்போது ஒரே பொறாமையாக இருக்கிறது...” “எஸ்.இ.ஓ. ஸார். சோஷியல் எஜுகேஷனல் ஆர்கனைசர். அந்த அம்மாள் நல்லவர்.” “ஓஹோஹோ...!” என்று குமார் குழந்தை போல் சிரித்தாள். வேணி புன்னகை செய்தாள். “நீ யாருக்கோ எஸ் ஸார் போடுகிறாய் போலிருக்கிறது. பொறாமைப் படலம் என்றால் கூட, அம்மாள் என்கிறாய். உனக்கு கர்வம் அதிகம் வேணி!” தலை நிமிராமலே வேணி, “இருக்கலாம்” என்றாள். “லாம் என்ன லாம்! இருக்கிறது!” என்றான் அவன், அழுத்தமாக. “எனக்கு இருப்பதை நானே சொல்லிக் கொள்வதா? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதற்குக் காரணம், இப்போது என்னைக் கர்வக்காரி என்று சொல்பவரே...” என்று மெதுவாகக் கூறிக் கொண்டே சடக்கென்று எழுந்து கை கழுவப் போனாள். “என்ன, என்ன சொன்னாய்? எனக்குக் காது கேட்கக் கூடாதென்று முண முணுக்கிறாய்?” “ஊஹூம், ஒரு முறை கூறியதை மறுமுறை கூறுவதற்கில்லை. கேட்காவிட்டால் ஊகித்துக் கொள்ளுங்கள்...” பொங்கி வரும் பூரிப்புக்கு அணையிடும் நாணச் சிவப்பில் தான் இக்கன்னியின் எழிலின் இரகசியம் பதுங்கிக் கிடக்கிறதோ என்று வியப்பவனைப் போல் அவன் நின்றான். அப்போதுதான் “டிரங்க்” கிடைத்து விட்டதாக ஆயாவின் பையன் வந்து தெரிவித்தான். “நீயும் வா வேணி!” என்று அழைத்த வண்ணம் குமார் வெளியே நடந்தான். அவன் தொலைபேசியை எடுக்கையில் கடையில் யாருமே இல்லை. சாப்பாட்டுக்குச் சென்றிருந்தனர். வேணி அவனையே பார்த்துக் கொண்டு வாயிற் கதவடியில் நின்றாள். “ஓ... குமார் அம்மா, அப்பாவிடம் சொப்பனம் சொல்லியாச்சா? என்ன சொப்பனம்? என்னிடம் சொல்லக் கூடாதா? அப்பாவிடம் மட்டும் சொல்லும் கனவா...ம்... ஆனாலும் என்னை ஏமாற்றி விட்டீர்கள்.” அவன் சிரித்துக் கொண்டே வேணியைத் திரும்பிப் பார்த்தான். “ஆமாம்... எஸ் மாம்... அம்மோவ்! உங்களுக்கு மிக மிகப் பிடிக்கக் கூடிய ஒரு பெண்ணைக் கூட்டி வந்திருக்கிறேன். ஆமாம் பொய்யில்லை. விளையாட்டில்லை மாம். இதோ இங்கே நிற்கிறாள்... ம், அப்பா பேசுகிறாரா?... ஹலோ!... அப்பா உடம்பு சரியாப் போச்சா, அம்மாவைக் கண்டதும்?... ஆமாம்பா இங்கே தான் நிற்கிறாள். கூப்பிட வேணுமா? அவள் குரலைக் கேட்டாள் தான் சந்தேகம் தீருமா?...” தொலைபேசியுடன் அவன் வேணியை அழைத்தான். “உன் குரலை அப்பா கேட்க வேண்டுமாம். ப்ளீஸ், வேணி இங்கே வா...” என்று அவன் அவளிடம் அதை நீட்டினான். “வா!... ஒன்றுமில்லை?” வேணி வரவில்லை. “அப்போவ்!... அவள் எ பிட் ஷை சிரிப்பு... தாங்கஸ் மாம். இங்கே இன்று மிக நன்றாக இருக்கிறது. இங்கே எப்போது வருகிறீர்கள்? நாங்கள் வர வேண்டுமா? ஹோ சரி ரைட் ரைட்டோ.” அவன் சிரித்துக் கொண்டே வெளிப்பட்ட போது வேணி வீட்டின் மேல் வாயில் பூம்பந்தரில் நின்றாள். “நீ வெட்கப்படுகிறாய் என்றால், நீயே இல்லை. பொய்யாக ஏமாற்றுகிறேன் என்கிறார் அப்பா. நான் கிழவன், என்னிடம் குரலைக் காட்ட என்ன வெட்கம் என்று கேட்கிறார்.” வேணி எப்படிப் பேசுவாள்? “உனக்கு இப்போது ஆபீசுக்குப் போக வேண்டுமா, வேணி?” “...இல்லை ஸார்...” “பின்...? இல்லை ஸாரைத் தவிர ஒன்றுமே பேச மாட்டேன் என்கிறாயே?” அவன் குரல் சட்டென்று கனிவின் பளுவுடன் தாழ்ந்தது. ...நான் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று குழம்புகிறேன். நான் இங்கே வந்ததே சரியா, தப்பா என்பது கூடப் புரியவில்லை. நான் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவில் அன்பு காட்டுகிறீர்கள். என்னிடம்... ”உங்கள் அன்புக்கு நான் தகுதியுள்ளவன் தானா என்று முடிவு கூடச் செய்ய முடியவில்லையே?” வேணி இந்த வார்த்தைகளை வெளியிடத்தான் முயன்றாள். ஆனால் கடைசி வாக்கியமே வெளிவந்தது. குமார் அவள் கன்னத்தைத் தட்டி விட்டுப் பெரிதாக நகைத்தாள். “ஹே, இதெல்லாம் என்ன பேச்சு? எப்போது கற்றுக் கொண்டாய்?” “நான் கற்றுக் கொள்ளவில்லை. உண்மை வெளியாகிறது. உங்கள் அந்தஸ்தும் எங்கள் நிலையும் மலையும் மடுவும்...” “ஹும்... அப்புறம்?” “இது கேலியில்லை ஸார்... எங்கள் வீட்டைப் பார்த்தால்...” “ஹ்ம்...” “உங்கள் அம்மாவும், அப்பாவும்...” “அம்மாவும் அப்பாவுமா உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள்?...” “என் அப்பாவைச் சொல்லக் கூடாதா?” குமார் அவள் கையை எடுத்துக் கொண்டு அவளையே ஊடுருவ நோக்கினான். அந்த நோக்கைத் தாங்க அவளுக்குத் துணிவில்லை. அந்தக் கையின் உறுதி அவள் உடலைச் சிலிர்க்கச் செய்தது. உள்ளம் பொங்கித் தளும்பியது. “வேணி, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்காலம் நம்முடையது. எதிர்காலம் எனக்கு மகத்தான நம்பிக்கையுடன் தெரிகிறது. உன் அப்பா இந்த முடிவின் குறுக்கே நிற்கவே மாட்டார். நீ என்ன சொல்கிறாய் வேணி?” ஒரு பெண்ணின் வாழ்வில் அதி முக்கியத்துவம் வாய்ந்த விநாடி இதாகத்தான் இருக்கும். அவளுடைய மூடிய கண்ணிதழ்களின் ஓரத்தில் ஈரம் பசைத்தது. வானில் சூரியன் மலை முகடுகளின் குறுகிய இடைகளில் ஒளிந்து கொள்ளும் மேகக் கன்னியரைக் கதிர்களால் தொட்டு விளையாடிக் கொண்டு இருந்தான். சோர்வும் துன்பமும் இல்லாத பொழுது எங்களுக்கென்று மலை நகரம் அரைக்கண் மூடிய போதை இன்பத்தில் லயித்துக் கிடந்தது. |