சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 26. சிராமலையில் |
12 முன்னிரவின் குழப்பமும் வேதனையும் வேணிக்கு ஓய்ச்சலைக் கொடுத்தன. அன்று அவள் எங்குமே வெளியில் செல்லவில்லை. வீட்டு வேலையை முடித்துக் கொண்டு இரண்டு சிட்டம் நூல் நூற்றான். அவள் வீட்டிலும் இருந்து, பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் அந்த ஒற்றை அறை குழந்தைகளுக்குச் சொந்தமாகிவிடும். ஆட்டம், பாட்டு முதலிய வேடிக்கைகளோடு குழந்தைகளுக்கு பூபதி வாங்கி வந்திருந்த பழங்களும் அன்று கிடைத்தன. பரபரப்போடு அப்போது அங்கு மாணிக்கம்பிள்ளை வந்தார். அவர் நேராக மூன்றாமவரின்றி வேணியிடம் பேசியதில்லை. “நேற்று, விஷயம் தெரியுமாம்மா?” என்றார். “என்ன?” “ரோடில் இங்கிருந்து பன்னிரண்டாவது மைலில் ஒரு லாரி மோதி கீழே இருநூறடி பள்ளத்துக்குள் விழுந்து, இரண்டு ஆள் குளோசாகி விட்டார்களாம். பயங்கர விபத்தாம்.” அந்த மலைச்சாலைகளில் லாரி விபத்து அபூர்வமானதல்ல, ஆனால் வேணிக்கு அவர் கூற்றில் ஏதோ பயங்கர அதிர்ச்சி உள்ளடங்கியதாகத் தோன்றியது. “ஐயோ...?” “கீழே எஸ்டேட் அருவி ஒன்று இருக்கிறது. டிரைவரும், க்ளீனரும் தான் இருந்தார்கள். இரண்டு பேரும் குளோஸ் என்று சொல்லுகிறார்கள். இல்லை, மூன்று பேர் இருந்தார்கள். எல்லோருமே போய்விட்டார்களென்றும் சொல்கின்றனர். நேற்று... அவர்... கடைசி பஸ்ஸிலே போயிட்டாரில்லே?” வேணிக்குத் தலை சுற்றியது. ஆண்டவனே இப்படி ஒரு தண்டனையா. நெஞ்சிலிருந்து சொல்லெழும்பாமல் நிற்கும் அவளைக் கண்டு மாணிக்கம்பிள்ளை கரகரத்த குரலில், “ஏனென்றால், நேற்று ராத்திரி அவர் பெட்ரோல் பங்கில் இருந்ததாகவும், லாரியில் போனதாகவும் பங்குக்காரர் சொல்கிறார். எனக்கு வேலையே ஓடவில்லை போங்கள். பஸ் தவறிப் போனால் அவர் அப்படி எதற்குப் போக வேண்டும்? நம் வீட்டில் படுத்துக் கொள்ளவா இடமில்லை? லாரிக்காரன் குடித்துத் தொலைத்திருந்தானோ தூக்க மயக்கமோ தெரியவில்லை. முதல் வண்டியே இன்றைக்கு இப்போதுதான் வந்தது... ஆள் அடையாளமே தெரியவில்லையாம். எனக்கு என்ன சந்தேகம் என்றால்...” “ஒரு சந்தேகமும் நீங்கள் சொல்ல வேண்டாம் போங்கள்” என்று கத்த வேண்டும் போலிருந்தது வேணிக்கு. கண்கள் அவளையறியாமல் குளமாயின. “அழாதீர்களம்மா, ஆண்டவன் செயல். இன்னும் நிச்சயம் ஒன்றும் தெரியவில்லை. முன் சீட்டிலே உட்கார்ந்திருந்த ஆள் இரண்டு பேருக்கும் உயிரில்லை என்கிறார்கள். ஆனால், பெட்ரோல் பங்க்கில் இவர் லாரியில் ஏறியதாகச் சொல்கிறார், பின்னே ஏறியிருப்பாரா?” வேணி செவிகளைப் பொத்திக் கொண்டாள். கூடை பழங்களும் குழந்தைகளின் கைகளில் அரையும் குறையுமாகத் தோன்றி அவளை இடித்தன. பெண்ணுக்கு உரிய இரக்கம் அவளுக்கும் இல்லையா? அத்தைக்கு அருமை மகனே... இதுவா உன் கதி! நேற்று அவன் இறைஞ்சினான்; குழைந்தான். “உன்னைக் கண்ணீர் விடச் செய்கிறேன்” என்று சூளுரைத்து விட்டுப் போனான். கண்ணீர் விடச் செய்யும் முடிவா இது? இந்த முடிவு உண்மையாக இருந்து விடக் கூடாதே! ஐயோ? அவளால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. மாணிக்கம்பிள்ளை தம் சோதரியை அழைத்து அவளுக்குத் துணை வைத்துவிட்டுத் தாமே பார்ப்பதாகச் சென்றார். முணுக்கென்றால் ஊர் கூடிவிடும் கிராமத்தில், இத்தனை பெரிய செய்தி பரவாமலிருக்குமா? அவளுடைய அறைக்கு ஊர்ப் பெண்கள் எல்லாரும் துக்கம் விசாரிப்பது போல் வந்து கூடிவிட்டனர். துயரம் விசாரிக்க வந்தவர்கள் கூட்டிவிட்ட ஆற்றாமையும் கழிவிரக்கமும் உச்ச நிலையில் கூடி அவளை வதைத்தன. “நேற்றெல்லாம் இங்கேதான் சுற்றிச் சுற்றி வந்தார். பாவம் - நான் யாரோ என்னமோன்னு இருந்தேன். அப்புறம் தான் கோகிலம் சொன்னாள் பாவம்...” என்றாள் ஒருத்தி. “பஸ் தவறிப் போனால் இங்கே ராத்தங்க இடமில்லையா? வாத்தியார் வீடு சும்மா கிடக்குது. பழகியவங்களுக்கு இது செய்ய மாட்டோமா?” என்றாள் இன்னொருத்தி. “உன் நல்ல மனசுக்கு ஒரு கேடும் வராதம்மா” என்று தேறுதல் கூறினாள் ஒரு மூதாட்டி. குழந்தைகளெல்லாரும் அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டு கும்பல் கூடி நின்றார்கள். “ஆமாங்க இதுவும் ஒரு விசயத்துக்கு நல்லதுதான். நாளைக்குக் கலியாணமான பிறகு வராமல் இப்போதே வந்தது பாருங்க?” என்று கமலம் கூறிய போது ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது வேணிக்கு. வெகுளித்தனமாக அவள் கூறினாள் என்றாலும் அது உண்மையாயிற்றே! பொழுது ஏற ஏறக் கண்ணீர் காய்ந்தது. மாணிக்கம் பிள்ளை சொன்னாற் போல் அடுத்த பஸ்ஸுக்குத் திரும்பவில்லை. இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தி விட்டதாகவும், வெற்று லாரியே உருண்டு கிடப்பதாகவும், போகும் வரும் பஸ் பிராயணிகளிடமிருந்து செய்திகள் வந்தன. வேணிக்கு முதல் நாளைய நிகழ்ச்சியை எவரிடமேனும் கொட்டி அழுதால் தேவலை போலிருந்தது. “உன் குற்றமில்லை. அவன் குற்றம்தான் இது. இந்த முடிவுக்கு நீ காரணமில்லை” என்று எவரேனும் அவளிடம் சொல்ல மாட்டார்களா? வெளியே பறந்து செல்லவும் எண்ணம் பறந்தது. ஆனால் அந்தத் துயரச் செய்தியை ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் மனம் மருண்டது. அங்கு வரும் கடைசி பஸ்ஸில் மாணிக்கம்பிள்ளை திரும்பி வந்தார். குத்துவிளக்கின் முன் வேணி தோத்திரப் பாடல் பாடிக் கொண்டிருந்தாள். கமலம் மட்டுமே உடன் இருந்தாள். கதவு தாளிடப் பெற்றிருந்தது. கதவைத் தட்டினார் மாணிக்கம்பிள்ளை. திறக்கக் கூட அவளுக்குத் தெம்பிள்ளை. “ஆண்டவன் கருணை இருக்கிறதம்மா! உனக்குக் குறைவில்லை. அவர் லாரியின் பின்னே ஏறி இருந்தாராம். அவர் பிழைத்து விட்டார். எஸ்டேட் பங்களாவில் டாக்டர் யாரோ இருந்தாங்களாம். உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். நான் பார்த்தேன். நன்றாகப் பேசினார். உடம்பெல்லாம் அடி இருந்தாலும் பலமாக இல்லை. இரண்டு நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். ஊருக்குக் கூட சிநேகிதர்கள் தகவல் கொடுத்திருப்பதாகச் சொன்னார். கவலைப்படாமல் தூங்கம்மா” என்றார். அப்பாடா - அடுத்த நாள் பொழுது விடிந்ததிலிருந்து வானம் இருண்டு மழை கொட்டியது. வேணியினால் வெளிக் கிளம்ப முடியவில்லை. அதற்கும் மறுநாள் மாணிக்கம்பிள்ளையிடம் கூறிவிட்டே வேணி பஸ்ஸில் ஏறிச் சென்றாள். ஆஸ்பத்திரிக்குச் சென்று அவனைப் பார்க்காமலிருப்பது சரியல்ல. அங்கு அவனைப் பார்ப்பதால் வேறெதுவும் பேசவும் இடமில்லை. நடந்தவை எல்லாம் போகட்டும். காலை பதினோரு மணி சுமாருக்கு அவள் ஆஸ்பத்திரிக்குள் விசாரித்துக் கொண்டு அவன் படுக்கையைத் தேடிச் சென்றாள். “அப்பப்பா, இந்த பேஷண்டுக்கு விசிட்டர் ஓயாது போலிருக்கிறது. யாரம்மா நீங்கள்? டாக்டர் வரும் நேரம்!” என்று தாதிப் பெண் எரிந்து விழுந்தாள். “ஓ... அப்படியா? பார்க்கத்தான் வேண்டுமென்ற அவசியமில்லை. அவருக்கு இங்கே... உறவினர் யாரும் வந்திருந்தார்களா?” “லாரி ஆக்சிடெண்ட் பேஷண்டு தானே? இப்போது தான் அவருடைய அப்பா வந்து போனார். நண்பர்கள், டாக்டர்கள், எத்தனை பேர்!” “...அவர் ...மிஸ்டர் பூபதிக்கு, மிகவும் பலத்த அடியோ?” “நாளைக்கு ஊருக்கு அழைத்துப் போகலாம்” என்றாள் அவள். “அப்படியானால் நான் மாலையில் வருகிறேன். அவருடைய அப்பா இங்கு இருக்கிறாரா?” “இல்லை, மாலையில் வருபவராக இருக்கும். நீ யார்? சொல்ல வேண்டுமா?” “வேண்டாம் வேண்டாம் மாலையில் வருகிறேன்” என்று வேணி நடந்தாள். அவள் தன் அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டு வெளியே வருகையில் மணி ஒன்று. அலுவலகக் கூட்டமும், சீருடை அணிந்த பள்ளிப் பிள்ளைகளின் கூட்டமும் அமைதியும் அழகும் நிரம்பிய மலை நகரின் சாலைகளில் பவனி சென்றன. வெயிலின் வெதவெதப்பு, மனசுக்கு உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது. ஹோட்டலுக்குச் சென்று உணவருந்தும் உத்தேசத்துடன் அவள் ‘சேரிங் கிராஸ்’ சரிவில் இறங்குகையில் பின்னே படபட வென்ற சத்தத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் முன்னே இரண்டடி சென்று நின்றது. “ஹலோ?... என்ன? எங்கே, இப்படி?” கறுப்புக் கண்ணாடியைக் கையில் கழற்றிக் கொண்டு குமார் தான் அவளை நோக்கிச் சிரித்த வண்ணம் நின்றான். குப்பென்று ஆயிரமாயிரம் பூக்கள் வெடித்தாற் போல் ஒரு திகைப்பு, சிரிப்பு. “எங்கே, இப்படி... கேட்கக் கூடாதோ? பதிலையே காணோம்?” “இல்லை ஸார்...” என்றாள் வேணி மென்னகை பூக்க. “இல்லை ஸாரா?... உன்னை நம்புவதற்கில்லை போலிருக்கிறதே?” “இல்லை... இல்லை ஸார்...” என்றாள் அவள் மீண்டும் சிரிப்பு வெடிக்க. “பார்... மறுபடியும் இல்லை என்கிறாயே?... எங்கே இப்படி?” வேணி சற்றே தயங்கிவிட்டு, “எங்கள் எஸ் இ ஓவைப் பார்க்க வந்தேன். ஆபீசில் கொஞ்சம் வேலை இருந்தது” என்றாள். “ஓகோ! எங்கள் வீட்டுக்கு வரவில்லை நிச்சயமாக என்கிறாய்! அப்படித்தானே?” “ஐயோ, அப்படி எல்லாம் இல்லை ஸார். வருவதாகத்தான் இருந்தேன்.” “எப்போது?” தலையைக் குனிந்து கொண்டு நகத்தைக் கிள்ளியபடி “எப்போது வேண்டுமானாலும்” என்றாள் வேணி. “இப்போது?” சாப்பாட்டு நேரத்தில் அழைக்கிறாரே என்று சற்றுச் சங்கடமாக இருந்தது அவளுக்கு. “ஏன், சௌகரியமில்லையா?” என்றான் குமார். “...இல்லை இல்லை ஸார்... சாப்பாட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தேன்...” “ஓகோ! எங்கள் வீட்டுக்கு வரலாம். அப்படியானால்...” என்றான் அவன். அவள் மறுக்க இயலாதவளாக அவனுடன் நடந்தாள். சுற்றுமுற்றும் பார்க்க ஓர் அச்சம். திருட்டுச் செயல் புரிவதைப் போல் மனசில் ஒரு படபடப்பு. ஊடே ஒரு மகிழ்ச்சிச் சரடும் இழையோடாமலில்லை. தமக்காகவே அந்த நகரம் எழில் கொஞ்சி வெதுவெதுப்பான வெய்யிலால் அவர்களை அணைப்பது போன்றதொரு உணர்வுடன் அவர்கள் சேர்ங்கிராஸைக் கடந்து சாலையில் நடந்தார்கள். வண்டியைக் கூட அவன் திரும்புமுன் மூலக்கடையில் நிறுத்திவிட்டான். ஒருவருக்குமே தெரியாததொரு உலகில், ஒரே ஒரு தொடர்பாக மட்டும் அவன் இணைந்து வருவது போன்ற திணறலில் வேணி வேறு எதையும் நினைக்க மறந்து போயிருந்தாள். |