![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
தேவிஸ் கார்னர் - தற்போதைய வெளியீடு : நூல்கோல் - Knol Khol |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 5 |
5 வேணிற் காலத்தில் உதகை நகரின் இட நெருக்கடி ஆண்டுக்காண்டு வளர்ச்சி எய்துவதைக் கண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடலாம் போலிருந்தது. ஆனால் இந்த இட நெருக்கடியில் ஒரே ஒரு வசதி உண்டு, அதுதான் மலை நிழல் தரும் குளிர். எட்டுப் பத்துச் சதுரமுள்ள ஓர் அறையில் எட்டுப் பேர் படுத்துக் கொண்டாலும் அந்த நல்ல குளிர் இன்னமும் ஒருவர் வந்தாலும் முடங்கிக் கொள்ளலாம் என்று இடம் கொடுக்க வசதி செய்தது. மண்டிக்கடை வியாபாரி ஒருவரின் இல்லத்தில் பூபதியும் அவன் தோழர்களும் தங்கி இருந்தார்கள். தங்கி இருந்தார்கள் என்று சொல்வதை விட, முடங்கிக் கிடந்தார்கள் என்று சொன்னால் பொருந்தும். அவருடைய குமாரனின் நண்பர் குழாத்தில் பூபதியும் ஒருவன். பரண் போலிருந்த பலகை மச்சை சென்னைக் கல்லூரியில் படிக்கும் மகனுக்கும் தோழர்களுக்கும் அந்த வீட்டார் உதவி இருந்தார்கள். வந்தவர்களுக்கெல்லாம் வயிறு வாடாமல் சோறு போடலாம், முடங்கவும் இடம் கொடுக்கலாம், ஆனால் போர்த்துக் கொள்ள கம்பளிகள் வழங்குவது சாத்தியமில்லையே? தண்ணீர்த் தட்டும், வெந்நீர்த் தட்டும், விறகுத் தட்டும், விருந்தினரை விரட்ட வீட்டாருக்கு ஒத்துழைத்தாலும், உதகைக்கு வரும் விருந்தினருக்கு மலை நகர் இலகுவில் விடை கொடுத்து விடுவதில்லை. பகலில் நடந்த நடை, சுற்றிய சுற்றல், அடித்த அரட்டை அலுப்பில் எல்லா பயல்களுமே கூறட்டை விட்டுத் தூங்கினார்கள். இந்த எட்டுப்பேர் கோஷ்டியில், கல்லூரி நண்பர்கள், விடுதி நண்பர்கள் என்று வெவ்வேறு படிப்புப் படித்தவர்கள் ஒட்டியிருந்தாலும், எட்டு ஆண்டுகள் கல்லூரிகளையும் விடுதிகளையும் குத்தகை எடுத்தும் பட்டத்தை ஒட்டிக் கொள்ளாமல் அரசாங்க அலுவலகம் ஒன்றில் வெறும் எழுத்தனாகப் பணிபுரியும் மாஜி மாணவன் பூபதி ஒருவன் தான். வேணி அவனுக்காகவே வளர்ந்தவள் என்று தீர்மானமான உறுதி அவனுக்கு இருந்தது. அது இன்று நேற்று தோன்றிய உறுதியா? அவன் தெருவில் கிட்டி விளையாடிக் கொண்டிருக்கையில், மாமன் ஒரு நாள் வண்டியில் செவேலென்று ஒரு குழந்தையுடன் வந்து இறங்கிய போதே அவனுடைய ‘பெண் சாதி’ அவள் என்று அவன் அமமவும் சோதரிகளும் அவன் பிஞ்சு மனசில் இட்ட விதையாயிற்றே? வேணிக்கு அம்மா இறந்து போய் விட்டாள் என்பது மட்டுமில்லை. மாமன் பெண் கொண்ட இடத்தைப் பற்றி ஒரு சிறு தகவல் கூட பேச்சிலோ பிரஸ்தாபத்திலோ வந்தது கிடையாது. வயிற்றுக் கில்லாத ஏழைப் பெண், அவளும் பெண்ணைப் பெற்று விட்டு இறந்து போனாள் என்பது தான் ஊகம். எனவே, வேணி அவர்கள் வீட்டிலேதான், அவனுடைய சோதரிகள் கொஞ்ச, அப்பா சீராட்ட, தளர் நடை நடந்து, சிறுமியாக, வளர்ந்தாள். மாமன் குடும்பத்தில் ஒட்டியதேயில்லை. அடிநாளில் சண்டைக்குப் போனார். பிறகு சாமியார் ஒருவரோடு திரிந்தார். இப்போதும் பார்க்க தாடி மீசையுடன் சாமியார் கோலத்தில் தான் இருப்பார். பால மலைக் கோயிலருகில் ஒரு சாப்பாட்டு விடுதி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு அக்காவும் அத்தானும் அந்த முருகனுக்கடுத்த மரியாதைக்குரியவர்கள் என்பதும் பூபதிக்குத் தெரியும். அந்த வேணி, இன்று, இன்னொருவனுடன், இணையாக அல்லவோ அமர்ந்திருந்தாள்? அந்த இன்னொருவன் காதல் மொழிகள் பேசும் அளவுக்கல்லவோ நெருங்கி உட்கார்ந்திருந்தாள்? வேணியை வேலைப் பயிற்சிக்கு அவனுடைய அப்பா வேலாயுதம் சிபாரிசு செய்து அனுப்பிய போதே அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவனால் ஆட்சேபிக்க முடியாதபடி, அவர்கள் திருப்பிக் கேட்கும்படி இருந்தது அவன் நிலைமை. பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு கல்லூரிக்குத் தாவியதுமே ஏதோ சொர்க்க வாழ்வில் குதித்து விட்டது போன்ற மகிழ்ச்சி தலை நிற்காமல் ஏறியது. படிப்பு இரண்டாந்தரமானாலும், தோழர்கள், நாகரிக உடைகள், உல்லாச விருந்துகள், அரட்டை, சோம்பேறித்தனம் என்று செலவழிக்கக் கற்றுக் கொண்டான். நுழைமுக வகுப்பில் தேறவே இரண்டு ஆண்டுகள் மாறி மாறிப் பரீட்சை எழுத வேண்டியிருந்தது. நுழைமுகத்தில் வெற்றி கண்டதும், இன்ஜினியரின் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என்று முயற்சி செய்வதையே சாக்காகச் சொல்லிச் சென்னையில் மாணவ வாழ்க்கை நடத்தத் தாவினான். மாற்றி மாற்றி ஆங்கிலப் படங்களும் தமிழ்ப் படங்களும் பார்ப்பதும், ஒரு உபயோகமுமில்லாத வெட்டி அரட்டை அடிப்பதும், கடற்கரையில், கன்னியர் விடுதிகளின் வாயிலில் உல்லாசமாகத் திரிவதுமாக ஆண்டுகள் கழிந்தன. பட்டணக் கரையின் படிப்பின் பெயரைச் சொல்லி, விவசாயம் தவிர வேறொன்றும் அனுபவமில்லாத அப்பாவின் பணத்தைக் கரைக்க வழியா இல்லை? ஆனால், வேலாயுதம் பெருமையடித்துக் கொள்ளும் குடிமேன்மை காரணமோ, அவருடைய நல்ல காலமோ, பூபதி நெறி மீறிய வம்புகளில் செல்லத் துணிந்தவனல்ல. சென்ற ஆண்டு வரையிலும் வேலாயுதம் அவனுடைய படிப்புக்கு மதிப்புக் கொடுத்துப் பொறுத்திருந்தார். “நீ படிச்சுக் கிழிச்சது போதுமடா? வீட்டிலேருந்து வெட்டி சோறு வேணாலும் சாப்பிடு. உன் பெண்சாதியா வரப் போகும் பெண்ணை அதற்குத்தான் படிக்கவும் வச்சு வேலைக்கும் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்” என்றார் சூடாக. அவனுக்கு ரோசமில்லையா? ரோசத்தில் உடனே ஒரு வேலையைத் தேடிக் கொண்டான். அரசினர் அலுவலகத்துக்கு எழுத்தர்களுக்குரிய பரீட்சையையும் எப்படியோ தேறியாயிற்று. ஆனால் வேணியைக் கல்யாணம் செய்து வைக்கும் யோசனையே மாமனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய அப்பாவும் கம்மென்று இருந்தாரே? வேணியும் பல சந்தர்ப்பங்கள் வாய்த்தும், பட்டணத்துக் கன்னியரைப் போல சிங்காரித்துக் கொண்டு, கதைகளிலும் சினிமாக்களிலும் வருவது போல் அவனை ‘அத்தான்’ என்று கொஞ்சி அழைக்கவும், கிள்ளை மொழி பயிலவும் ஆசைப்படவில்லை. அவனாக நெருங்கிய போதும் அசட்டுப் பெண் அழுது அவனைக் குழப்பத்துக்கு உள்ளாக்கினாள். “என்ன இருந்தாலும் பட்டிக்காடு பட்டிக்காடு தானே. காதலுக்கு அஞ்சுகிறது” என்று பூபதி மனசுக்குள் சமாதானம் செய்து கொண்டிருந்தான். அவன், உல்லாச நீலகிரிப் பிரயாணம் புறப்பட்டதன் உள் நோக்கமே வேணியை வலை வீசிப் பிடிக்கத்தான். அவனுடைய அம்மா மரகதம் அவனுக்கு இலகுவில் செலவுக்குப் பணம் கொடுக்கவில்லை. “ஆபீஸ் வேலையம்மா! சும்மாவா உல்லாசம் போறேன்! திரும்பிப் பணம் வந்ததும் உன்னிடம் கொடுத்து விடுகிறேன்!” என்றான். “ஆமாடா, நீ மாசம் சம்பாரிக்கும் பணம் உன் துணிக்கே பற்றவில்லை. எனக்குப் பணம் கொடுக்க மாட்டே? வருஷக் கணக்காகப் படித்துப் படித்து, நீ சம்பாதிக்கும் காசு என்னன்னுதான் எனக்குப் புரியலே...” என்று சொல்லி விட்டுத் தான் பணத்தை வீசி எறிந்தாள். வேணியின் விலாசம் கிடைப்பது கஷ்டமாக இல்லை. அவன் சோதரி லட்சுமிக்கு வேணி எழுதிய கடிதம் ஒன்று அவன் கைக்குக் கிடைத்தது. மற்றவர்கள் தேயிலை தொழிற்சாலை பார்ப்பதாகக் கிளம்பிய பிறகு, பூபதி மட்டும் சாக்குச் சொல்லித் தங்கினான். பழக்கூடை சகிதம் அவள் இருப்பிடம் நாடிக் கிளம்பினான். நினைக்க நினைக்க ஏமாற்றம் பொறுக்க இயலாததாக இருந்தது. வேணி, இந்த வேணி, பட்டிக்காடென்று அவன் நினைத்த வேணி, இவ்வளவு முன்னேறி விட்டாளா? இவன் நேற்ரு முளைத்தவனோ முன்பே முளைத்திட்டவனோ தெரியவில்லையே? ஒரு வேளை உத்தியோக முறையில் பெரியவனாக இருப்பானோ? இருக்கட்டுமே? அதற்காக, இப்படியா நடந்து கொள்வாள்? பலர் பார்ப்பார்களே என்ற நினைப்பின்றி, ஓர் ஆபீஸருடன் இத்தகைய முறையில் பிரயாணம் செய்ய நிர்ப்பந்தம் வந்தால், அந்தக் கணமே அந்த வேலைக்குக் கால் கடிதாசி நீட்டி விட்டு வெளியேறுவதல்லவோ, அவனுக்கு மனைவியாகக் காத்திருக்கும் வேணியின் பண்பாக இருந்திருக்க வேண்டும்? இந்த ஆற்றமை வெறியில் அவன் எரிந்து கருகிக் கொண்டிருக்கையில் அவன் நண்பர்கள் வேறு வயிற்றெறிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள். “பிரதர், நீ இந்தப் பஸ்ஸிலேதான் வரியா? சரியான சமயம் எங்களுடன் வராமல் போனாயே? ஒரே தமாஷ். ரொம்பத் தூரம் ஒரு மானைத் துரத்தி வந்தோம். மான் என்றாலும் நைலான் சாதியல்ல. சுதேசி” என்று ஒருவன் விண்ட போது பூபதிக்குப் பக்கென்றது. “பெரிய ஜம்பம் பேசுறாரு, மான் புலியாக மாறியதும் இந்த ஐயா பூனையாகப் பதுங்கியதை நீ பார்க்கவில்லையே?” என்று அவனைக் கிண்டினான் இன்னொருவன். “ஜீப்பிலே வந்து கொத்திக் கொண்டு போனானே, அவன் யாராயிருக்கும்? நம்மிடம் புலி போல் உருட்டி மிரட்டினாள். அவனைக் கண்டதும் பூனைக்குட்டி போல் குழைந்து சுருண்டு உட்கார்ந்து கொண்டாளே?” என்று மற்றொருவன் ஐயம் கிளப்பிய போது பூபதி சிலையாக மாறிப் போனான். ‘பயல்கள் அவளையா துரத்தி வந்து கிண்டல் செய்தார்கள்?’ “யாராயிருப்பான்? அவளுடைய உரிமைக்காரனாக இருப்பான். இங்கே எங்கேனும் அநாமதேயப் பள்ளிக் கூடத்தில் அரிச்சுவடி கற்றுக் கொடுக்கும் வாத்தியாரம்மாளாக இருக்கும். இப்போதெல்லாம் ஜீப் யார் யாருக்குத் தான் இருக்கிறதென்றில்லை. இது போல் ஜீப்பில் சுற்றும் வேலை ஒண்ணு கிடைச்சாப் போதும்னு ஹாயாக இருப்பேன் பிரதர்” என்று சாந்தமாக ஒருவன் விளக்கினான். இந்தச் சுவாரசியப் பேச்சில் பூபதியை முதலில் யாரும் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. ஆனால் அது எத்தனை நேரம்? “என்ன பிரதர்? காதலியை சந்தித்து பொடானிகல் கார்டனில் டூயட் பாடிக் கொண்டிருப்பேன் என்று வீராப்புக் கூறிவிட்டு இங்கே பஸ்ஸில் வந்து பேஸ்தடிச்சாப் போல் உட்கார்ந்திருக்கிறே? எங்கே போனாய் பிரதர்? காதலி எங்கே?” அவனை மிருதங்கமாக்கி முதுகில் பதம் பார்த்தார்கள் தோழர்கள். “அட... சீ! சும்மாவானும் ஒரு பேச்சுக்குச் சொன்னால் காதலியாம்! ஆளை விடய்யா!” என்று எரிந்து விழுந்தான், பூபதி. “ஓகோ? காதலியைக் கோட்டை விட்டு விட்டார் போலிருக்கிறது பிரதர், பாவம்... த்ஸொ... த்ஸொ...” “அழுவாதே அழுவாதே காதலனே...” என்று ராகம் போட்டுப் பாடினான் ஒரு குறும்புக்காரன். பூபதியும் இப்படியெல்லாம் கொட்டமடிக்கக் கூடியவன் தான். ஆனால், தனக்கே வந்த வினையை எப்படி ரசிப்பான்? அவர்களை ஒரு நிமிஷ நேரம் பார்த்தாலும், நன்றாகப் பார்த்தானே? அவன் பார்க்க ஏதோ அதிகாரமுள்ளவன் போல்தான் இருந்தான். சிரித்துக் கொண்டிருந்தான். பல் வரிசைகள் இன்னமும் அவன் கருத்தில் உறுத்திக் கொண்டிருந்தன. அவனருகில் பூனைக்குட்டி போல் குழைந்து சுருண்டு... வேணி... வேணி! உனக்கு இவ்வளவு துணிவு எப்படி வந்தது? பூபதிக்கு உறக்கமே பிடிக்கவில்லை. |