2

     தூதூர் சுமாரான பெரிய ஊர்தான். நீலகிரிப் படக மக்களின் பழைய குடியிருப்பான அந்த ஊரில், கீழ்ச்சீமைமார்கள் பலரும் வந்து குடியேற முன்னேற்றம் வந்திருந்தது. அப்பால் அணைத்திட்டக் குடியிருப்புக்களும் வந்த பிறகு, எப்போதேனும் ஒரு முறை ஒரு நாளில் அவ்வழியே செல்லும் பஸ், அடிக்கடி செல்லலாயிற்று. சாலையில் பஸ் நிறுத்தத்தை இருந்த கடைகளும் வளர்ந்து கடைத்தெரு என்று சொல்லும் அந்தஸ்தை அடைந்தது.

     சாலையிலிருந்து தேயிலைத் தோட்டச் சரிவுகளைக் கடந்து நூறு கஜம் சென்றாலே ஊர் தெரிந்தது. கும்பலாக ஓட்டு வில்லை வீடுகளைத் தவிர, ஒரு தனி மேட்டில் டூரிங் சினிமாக் கொட்டகையும், வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளியும், ஊருக்குப் பெரிய தேயிலை அதிபரின் பங்களாவும் காட்சி தந்தன.

     பிற்பகல் மூன்று மணிக்குத் தூதரைக் கடந்து செல்லும் பஸ்ஸில் பூபதி வந்து இறங்கியதை, மளிகைக்கடைக் கல்லாவில் இருந்தபடியே மாணிக்கம்பிள்ளை பார்த்தார்.

     பளபளக்கும் ஷார்க்ஸ்கின் ரக நிஜார்! டெரிலின் சட்டை கயிறுபோல் பளபளக்கும் இடுப்புப் பட்டை, சற்றே கறுத்த உயரமான இளைஞன் களையான முகம்தான். ஆனால் கிள்ளி எடுக்கச் சதை இல்லை. கழுத்தெழும்புகள் சட்டையைப் போட்டு மூடியிருந்தாலும் முட்டி நின்றன. பஸ்ஸிலிருந்து ஒரு பெரிய தூக்குக் கூடையையும் இறக்கி வைத்தான் ஒரு பொடிப் பயல்.

     டீக்கடைச் சுறுசுறுப்பையும் கவனியாமல் பஸ் கிராமத்துக்கு விடை கூறிச் சென்றது.

     வரி இன்ஸ்பெக்டர், காப்பி தேயிலை போர்டுக்காரர், பொது நலத்துறை மலேரியா என்று வரும் அதிகாரிகள் என்று கிராமத்தில் இப்போதெல்லாம் யார் யாரோ வந்து இறங்குவதென்னவோ உண்மை. வெளுப்பும் மடிப்பும் கிராமங்களுக்குப் புதுமையாக இருந்த காலம் மலையேறி விட்டது. ஆனாலும், பழத்தூக்குக் கூடை சகிதம் (பழங்கள் தாமென்று மாணிக்கம்பிள்ளை நிச்சயமாகக் கருதினார்.) கிராமத்தைத் தேடி வருபவர், யார் வீட்டுக்கேனும் தான் வருவார். பள்ளிக்கூட ஆசிரியர் எவரையேனும் தேடி வந்திருப்பாரோ?

     பூபதி சாலையின் இருபுறங்களிலும் நோட்டம் விட்டான். மேடுபள்ளம் என்று கூறுகளாகத்தான் சாலை பிரித்திருந்ததே ஒழிய, கிராமம் எது என்று புரியவில்லை.

     மாணிக்கம்பிள்ளை சற்றே எழும்பியபடியே கனைத்துக் கொண்டார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தேயிலைத் தோட்டக் கூலியாகப் பிழைக்க வந்த மாணிக்கம், முன்னேறி முன்னேறி மளிமை முதலாளியானவர். காவேரிக் கரையும் பச்சை நெல் வயல்களும் கனவு போலானாலும், சமவெளியிலிருந்து வருபவர்களைக் கண்டாலே ஒரு ஆர்வம் உண்டு. “ஸார் புதிசு போலிருக்கிறது. எங்கே போகணும்? யாரைத் தேடி?”

     பச்சைக் கோட்டுக்குள்ளும் பெரிய தலைப்பாகைக் குள்ளுமிருந்து தன்னை விசாரித்த கடைக்காரரை பூபதி நிமிர்ந்து பார்த்தான். “இங்கே... நீலவேணி என்று...”

     “ஓ, சேவிகா அம்மாளைத்தானே கேட்கிறீர்கள்? உட்காருங்கள் சார், அவங்க இப்பத்தான் கொஞ்சம் முன்ன பஸ்ஸில் போனார்கள். உட்காருங்கள் சார்... உங்களுக்கு உறவோ?”

     வேணி சாயங்காலம் பஸ்ஸில் தான் திரும்பி வருவாளென்று மாணிக்கம்பிள்ளைக்குத் தெரியும். ஆனால் அந்தப் பெண்ணுக்கு இவர் யார், என்ன உறவு என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொள்ளாமல் விட்டு விடுவது ஒரு புத்திசாலித்தனமாகுமா? அவர் குடியிருக்கும் கௌடர் லைனில் தான் ஓரத்து வீட்டில் அவளும் இருந்தாள். எல்லோருக்கும் பொதுவாக இரண்டு தண்ணீர்க் குழாய்கள் தான். முன்பின்னறியாததொரு ஊரில் தைரியமாக ஒரு பெண் வந்து வேலை செய்யப் போவதும், வாழ்வதும் அவர்கள் கவனத்தை ஏற்கெனவே கவராமலில்லை. தாயில்லை, தகப்பனார் எங்கோ முருகன் கோயிலில் ஓட்டல் நடத்துகிறார் என்று தெரிந்து கொண்டிருந்தார்கள்.

     “அடுத்த பஸ் எப்போது வரும்?” என்று கேட்டான் பூபதி.

     “நீங்க இப்படி உட்காருங்க சார், ஊட்டியிலிருந்து தானே வரீங்க?” என்று மாணிக்கம்பிள்ளை பெஞ்சியைக் காட்டி உபசரிக்கையுடன் பையனைத் தேநீர் வாங்கி வர விரட்டினார்.

     “ஆமாம்... சும்மா, சீஸன் என்று சிநேகிதர்களுடன் வந்தேன். அடிக்கடி வெளியே போய்விடுவாளோ?” என்று பஸ் வரும் திசையையே நோக்கி அவன் விசாரித்தான்.

     “...கிராமம் கிராமமாகச் சுற்றும் வேலைதானே சார்? உங்களுக்கு... உறவா?”

     “ஆமாம்... என் மாமன் மகள்...” என்று கூறுகையில் அவன் முகம் சிவப்பேறியதை அவர் கவனிக்காமலில்லை.

     “ஓ... அதானே பார்த்தேன்? டீ சாப்பிடுங்க ஸார்... சும்மா சாப்பிடுங்க” என்று விடாமல் அவர் உபசரித்தார்.

     “நமக்கெல்லாம் ஊரு...”

     “செண்பகப்புதூர், கோயம்புத்தூரிலேயிருந்து எட்டு மைல்...”

     “அங்கே வேலையா...”

     “தோட்டம் காடு எல்லாம் இருக்கிறது. ஐயா பார்த்துக் கொள்கிறார். நான்... கோயமுத்தூரில் வேலையாக இருக்கிறேன். சாயங்காலம் இருட்டிய பிறகு கூட வருவாளா?” என்று கவலையுடன் விசாரித்த பூபதியின் மேல் மிக உயர்வான அபிப்பிராயம் விழுந்து விட்டது அவருக்கு.

     “அஞ்சரை பஸ்தானே? அவ்வளவுதானே? அவ்வளவுக்காகாது... உங்களுக்குக் கூடப் பிறந்தவங்க...”

     “மூன்று பேர். பெண் மக்கள். கட்டிக் கொடுத்து புருஷன் வீடு போய் விட்டார்கள். பையன் நான் ஒருவன் தான்...”

     “ஆகா... பின்னே கேட்க வேண்டுமா? காலத்திலே மகனுக்குக் கல்யாணம் முடிக்க வேணுமென்று ஆசையிருக்காதா? இது என்ன வேலை ஸார்... ஏதோ வாழ்க்கைக்கு வசதி இல்லாத பெண்கள் வேலைக்கு வரட்டும்...”

     பொருள் பொதிந்த புன்னகையுடன் அவர் அவனைப் பார்த்தார்.

     “வேணி வேலை செய்ய வந்ததில் எங்களுக்கு இஷ்டமில்லை. ஆனால் எங்கையாவுக்கு இதெல்லாம் ரொம்ப இஷ்டம். அவர் இஷ்டப்படும்போது தடுக்க முடியுமா?...”

     “அது உண்மை ஸார், சும்மா சொல்லக் கூடாது. இந்தப் பக்கமே இவங்க வந்த பிறகு, பெண்கள் சண்டை சச்சரவு குறைஞ்சு போச்சு. என்ன பார்க்கிறீங்க?” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்.

     கொஞ்சம் புகழ்ந்து வைப்பதால் நாவுக்கும் நஷ்டமில்லை, கேட்பவருக்கும் சந்தோஷமாக இருக்கும் என்று தான் அவர் எண்ணினார்.

     ஆனால், பூபதிக்கு அப்படிச் சந்தோஷம் உண்டாகவில்லை. அதைக் காட்டிக் கொள்ள முடியாமல் சங்கடப்படுகையில் மாணிக்கம்பிள்ளை அவனை வீட்டுப் பக்கமும் அழைத்துச் சென்றார். பழக் கூடையைத் திருப்பிச் சுமந்து வரமுடியவில்லை. அவன் திரும்பிச் சாலைக்கு வந்த போது, ‘அஞ்சரை பஸ்’ வந்திருந்தது. ஆனால் வேணி அதில் வரவில்லை.

     “இந்தப் பக்கம் தானே போனாங்க? ராவைக்கு எங்கும் தங்க மாட்டாங்களே? ஆனால், பஸ் இன்னைக்கு முந்தி வந்து விட்டதனால் எங்கேனும் தவற விட்டுத் திண்டாடுறாங்களோ? ஸார், நீங்கள் இப்போது ஊட்டி பஸ் வரும். வழியில் தான் நின்று கொண்டிருப்பாங்க. கண்டுகொள்ளலாம்...” என்றார் மாணிக்கம்பிள்ளை.

     பூபதி பொங்கும் எரிச்சலுக்குப் புன்னகைத் தாழ் போட்டவனாக மாணிக்கம் பிள்ளையிடம் விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறினான். மேற்கே ஒளிப்பிழம்பாய், இரத்தச் சிவப்பாய்க் கதிரவன் மலைகளுக்கிடையே குறுகிச் சென்றான். கிழக்கே கருநீலக்கடலாய் இரவு பாய் விரிக்க வந்தது. மேட்டிலும் பள்ளத்திலும் குத்துக் குத்தாகத் தேயிலைச் செடிகள் நேர்த்தியான பூவேலைக் கம்பளம் விரித்தாற்போல் விளங்கின. குறுகிய கப்பிச் சாலையில் பஸ் வளைவைக் கடக்கையில், எதிரே ஒடுங்கி ஒரு ஜீப் ஒதுங்கியிருந்ததைப் பூபதி ஆசனத்தினின்று கண்டான்.

     ஜீப்பில் டிரைவர் - அடுத்து வேணி - அவளுக்கருகில் அவள் தலைக்கு மேல் ஆசனத்தின் விளிம்பில் கையை வைத்துக் கொண்டு, சிரிப்பும் கவர்ச்சியுமாக, சுவாதீனமாக உட்கார்ந்திருப்பவன் யார்? யார்?

     குமுறிக் கொண்டிருந்த எரிமலை குபீரென்று வெடித்து உடலெங்கும் பாய்ந்து விட்டாற் போலிருந்தது. உணர்வைக் கூட்டி விழுங்கிக் கொள்கையில், பஸ் வளைவைக் கடந்து சென்றது.



சோலைக் கிளி : 1 2 3