14

     குமாரிடம் அலுவலகம் போக வேண்டாம் என்று மொழிந்தாலும் அவள் அங்கே சென்று ஒரு வார லீவுக்கு எழுதினாள். ஆஸ்பத்திரிக்குத் திரும்புகையில் மணி நான்கு.

     பார்வையாளர்கள் வரும் நேரமானதால் காவலாளியும் தாதிப் பெண்களும் கடுமை காட்டவில்லை.

     வார்டின் ஓரத்துப் படுக்கையில், சிவப்புக் கம்பளிப் போர்வையின் ஒரு பகுதியில் செய்தித் தாளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூபதியின் உருவம் தெரிந்தது. படுக்கையினருகில் யாருமே இல்லை.

     அவள் மெள்ள நடந்து, லாக்கரின் அருகில் நின்றாள்.

     பூபதிக்கு அவள் வந்த விஷயம் தெரியுமோ தெரியாதோ? அல்லது கோபத்துடன் இருக்கிறானோ?

     ஆனால், வேணி முந்தைய நாளைய நிலையில் இல்லை. ஊசலாடிக் கொண்டிருந்த கயிற்றில் இன்று பிணைப்பு ஏற்பட்டு விட்டது. பூபதியை ஒருகால் மணந்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று தயங்க வேண்டாம்.

     “பேப்பரில் செய்தி வந்திருக்கிறதா அத்தான்?” என்று கேட்டாள், மெதுவாக. பூபதி அப்போதுதான் கவனித்தாற் போல் செய்தித்தாளைத் தள்ளினான். அவனுடைய முகம் சலனமற்றிருந்தது. கண்கள் இரங்கின. மூக்கு கன்றிக் கறுத்து இருந்தது.

     “காலையிலேயே வந்திருந்தாயாமே?”

     “ஆமாம். நீங்கள்... தூங்கினீர்கள். ஆபீஸூக்குப் போய்விட்டேன். மாமா வந்திருக்கிறார?”

     “ஆமாம், என் மாமா வந்திருக்கிறார், தந்தியைப் பார்த்துவிட்டு. உன்னைப் பார்க்கத்தான் காலையில் கிளம்பிப் போனாரே?”

     “அடாடா...?” என்று நா பதறினாற் போல் காட்டிக் கொண்டாலும் மனசு, அதுவும் நல்லதுதான் என்று மகிழ்ச்சி கொண்டது.

     “உட்கார் வேணி...” என்றான் பூபதி.

     “நான்... நடந்ததற்கெல்லாம் மிகமிக வருந்துகிறேன்” என்றாள் வேணி.

     “நானும் தான் வேணி, முட்டாளாக அறிவீனனாக நடந்து கொண்டு விட்டேன்...” என்றான் அவன்.

     இத்தகைய மறுமொழியை வேணி எதிர்பார்த்தே இருக்கவில்லை. அவன் குரோதத்துடன் உறுத்துப் பார்ப்பான், பேசவே மாட்டான் என்றல்லவா எண்ணினாள்.

     “நானும் உங்களுக்குக் கோபமூட்டும்படி பேச நேர்ந்து விட்டது. விபத்துச் செய்தி கேட்டதும் நான் அதிர்ச்சியுற்றேன். உங்களைக் கோபமூட்டி, மனிதத் தன்மைக்கே மாறாக நடந்து விட்டேனே என்று வருந்தினேன். நான் கலங்கிப் பிரமையுற்றிருக்கையில் நல்ல வேளையாக மாணிக்கம்பிள்ளை வந்து நல்ல செய்தி அறிவித்தார்...”

     “இந்தப் பத்திரிகைச் சேதியைப் பார்த்தாயா, வேணி?”

     “பார்க்கவில்லையே?” என்று அவள் அந்தத் தாளை வாங்கினாள்.

     “உதகைச் சாலையில் லாரி குடை கவிழ்ந்தது! இரண்டு பேர் கோர மரணம்! ஒருவருக்கு பலத்த காயம்” என்ற தலைப்புக்களின் கீழ் வெளியான விவரத்தில் மரணமடைந்தவர்களின் பெயர்களில் பூபதி (வயது 24) என்று செய்தி கண்டாள்.

     பிழைத்தவர் லாரி க்ளீனர் என்ற விவரமும் வெளியாயிருந்தது.

     “பெயரை மாற்றிப் போட்டிருக்கிறார்களோ?”

     “என் பர்ஸ் கீழே கிடந்து அகப்பட்டிருக்கிறது. இறந்தவன் நானென்று முதலில் எண்ணியிருப்பார்கள் போலிருக்கிறது. வேணி, உண்மையில் அந்த பூபதி இறந்து போனான். இங்கே படுத்திருப்பவன் வேறு பூபதி. அன்றைய இரவு என் வாழ்வில் மகத்தானதொரு திருப்பம். என் அம்மாவானால் கண்டம் என்று சொல்வாள்” என்றான் பூபதி.

     “அத்தைக்கு இந்தச் செய்தியை யாரேனும் படித்துச் சொல்லிவிட்டால் உங்களைக் கண்ணால் காணும் வரை உயிர் கூட்டில் தரியாது.”

     “ஆமாம். மூடப்பாசம், குருட்டுப் பாசம். என் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர் என் அப்பா... என்னை வெறுத்து வெருட்டியவர்களே என் மீது உண்மை அன்பு கொண்டவர்கள். நீயும் தான் வேணி...”

     ஒரு கணம் கசப்பை விழுங்குவது போல் சங்கடப்பட்டாள் வேணி. அப்போது அங்கு ரூபா வந்தாள்.

     ஒரு கணம் கசப்பை விழுங்குவது போல் சங்கடப்பட்டாள் வேணி. அப்போது அங்கு ரூபா வந்தாள்.

     “ஹௌ ஆர் யூ?” என்று பூபதியின் பக்கம் வந்து மிகவும் பழகிய உரிமைக் குரலில் கேட்டுவிட்டு அவள் புன்னகை செய்தாள்.

     பூபதியின் மங்கிய இதல்களில் புன்னகை கொள்ள “ஆல்ரைட் டாக்டர்.”

     அவளுடைய மழலைக் குரலில் சிரிப்புச் சிந்தியது.

     “கொய்ட் ஆல் ரைட்!... கால்வலி?” அவன் காலை அழுத்திவிட்டுக் கேட்டாள்.

     “வீட்டுக்குப் போய்விட்டால் சரியாய்ப் போகும் டாக்டர். என் அம்மா உப்புப் புளி வைத்தியம் செய்வாள்?”

     அவள் சிரித்துவிட்டு, “அதிர்ஷ்டக்காரர். உங்களை அதிக நாளைக்கு நினைவு வைத்திருப்பேன். உங்கள் வேணியிடம் என்னைச் சொல்வீரா” என்றாள் குறும்பாக.

     வேணிக்கு இதயம் வெகு வேகமாகத் துடிக்கலாயிற்று.

     பூபதி திரும்பாமலே, “இதோ இருக்கிறாள், டாக்டர். நீங்களே பார்த்துச் சொல்லிக் கொள்ளுங்கள்” என்றான்.

     இரு துள்ளும் மீன் விழிகள் வேணியிடம் பாய்ந்தன.

     “ஓகோ! நீங்கள் தான் வேணியா? கங்கிராஜுலேஷன்ஸ்” என்று அவளுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் குலுக்கித் தள்ளினாள்.

     “இவர் தப்பியது உங்களால் தான். விபத்திலிருந்து ஓடோடி வந்து, டாக்டர் இருக்குமிடம் பார்த்து விழுந்தார். வேணி வேணி என்று தான் உயிர் மூச்சே வந்தது, தெரியுமா?”

     அவள் சிரிக்கும் போது வேணி தலையை ஒரேயடியாகச் சங்கடத்துடன் குனிந்து கொண்டாள்.

     அவள் மோவாயை ரூபா செல்லமாகத் தட்டினாள்.

     “கவனமாகப் பார்த்துக் கொள். அவர் வேணி, வேணி என்று மூச்சு விட்டாலும் ஒன்றுமே சொல்லவில்லை. கல்யாணமாயிருந்தாலும், ஆகாமல் இருந்தாலும் வாழ்த்துக்கள்...”

     வேணிக்கு நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் நெஞ்சு அறுத்தது.

     “ஓகே... வரட்டுமா? கடவுள் விருப்பமிருந்தால், பின்னர்... பின்னர் சந்திக்க நேரட்டும், சந்தோஷமாக” என்று மீண்டும் அவள் ஒரு குறும்புப் புன்னகையைச் சிந்தியபோது பூபதி கை குவித்து விடை கொடுத்தான்.

     “வேணி...?”

     “ஹ்ம்...?” என்றாள் அவள் திடுக்கிட்டாற் போல்.

     “...ஏன்... ஏதோ போல் இருக்கிறாய் வேணி? நான் உயிர் பிழைக்க ஒரு வகையில் காரணமாக இருந்தவர் அந்த டாக்டர். நினைவில் நான் ஒன்றும் சொல்லவில்லை. நினைவில்லாத நிலையில்... என்ன சொன்னேனென்று புரியவில்லை... அதற்காக... வருந்துகிறாயா வேணி?”

     அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருவது போல் பேசுகிறானே? வீட்டின் தனிமையில் சென்று எது தவறு, எது சரி என்று யோசனை செய்வது நலமாகுமோ? அவளுடைய உள்ளம் ஏன் நடுங்குகிறது? குளிர் சுனையில் முழுகி வந்த பின், குத்து வலியோடு வரும் குளிர் காய்ச்சலின் தொடக்கத்தைப் போல் ஏன் நடுக்கம் உண்டாகிறது?

     “...மறந்தே போனேன். நாலேமுக்காலுக்குப் பஸ்ஸாயிற்றே? உங்களுக்கு ஏதேனும் வேண்டுமா, அத்தான்? என்ன சாப்பிட்டீர்கள்?” என்றாள்.

     “எனக்குத் தேவைக்கு மேல் சாப்பாடு கிடைக்கிறது. உனக்குப் பஸ்ஸுக்கு நேரமாகிவிடும், போ வேணி. நீ இங்கு வந்ததே சந்தோஷம் எனக்கு” - அவன் விழிகள் பளபளத்தன. நன்றியா, பாசமா, கனிவா என்றெல்லாம் புரியவில்லை. என்றாலும் அவள் உள்ளத்தைக் குடைந்து துருவிய ஒளி அது.

     விடுவிடென்று ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள்.

     மறுநாள் வானில் தூற்றல் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது.

     வேணிக்கு வீட்டினுள் இருப்புக் கொள்ளவில்லை. சுயநலம் ஓங்கிவிட்டால், தனக்குச் சாதகமாகவே இயங்க யாரும் கற்பிக்க வேண்டியதில்லை போலும்! வேணி அதற்கு முன் தந்தையை இவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாளோ?

     “ஏன் அப்பா, இத்தனை நேரம்? முதல் பஸ்ஸிலேயே உங்களை எதிர்பார்த்தேன்.”

     அழுக்குத் துணிகள் அடங்கிய பையை அவரிடமிருந்து வாங்கியபடியே “சுடு நீர் இருக்கிறது. குளிக்கலாம்பா” என்று உபசரித்தாள்.

     அவருடைய பைத் துணிகளைச் சோப்புப் போட்டு துவைக்க எடுக்கையில் பூபதியின் பனியன் சட்டையும் இருக்கக் கண்டாள். சற்றே துணுக்குற்றாலும் சோப்புப் போட்டு துவைத்து உலர்த்தினாள். தந்தைக்குப் பிடித்ததாகச் சமையல் செய்து உணவைப் பரிமாறினாள்; குளிராக இருக்கிறதென்று நெருப்புப் போட்டு முன்னறையில் இதமாக வைத்து அவர் கனிவைப் பெற முயன்றாள்.

     சுப்பையா அதிகமாகப் பேசவில்லை. அபூர்வமாக ஒளியிடும் முகத்தைப் பார்த்ததும் பார்க்காததுமாக அலட்சியமாக இருக்க முயன்றார்.

     அவளுடைய பேச்சில் அதுகாறும் அவர் கண்டிராத பரபரப்பு! செய்கைகளில் ஒரு துடிப்பு! ஒரு சிறு பொட்டு விழுந்தாலும் துளும்பித் தயாராக இருக்கும் பாற்குடம் போன்ற பாவனை.

     “அப்பா, நீங்கள் பார்க்க மிகவும் ஓய்ந்து விட்டீர்கள். எதற்காக! இன்னும் தொழில் செய்ய வேண்டும் நீங்கள்?”

     “ஆமாம் அம்மா, என்னால் முன் போல் சமாளிக்க முடியவில்லை. உன் மாமாவும் அத்தையும் ஊருடன் வந்துவிடச் சொல்கிறார்கள்...”

     “அதுவும் நல்ல யோசனைதானப்பா.”

     “அதெப்படி அம்மா முடியும்?... ஏற்கெனவே வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காத கவலை. இன்னொரு வீட்டுக்குரிய சொத்தை அங்கே சேர்ப்பது வரை கடன் போல் தானே?”

     அவளுக்கு இதயம் துள்ளி விழும் பரபரப்பு உண்டாயிற்று.

     “அப்பா!...”

     “ஆமாம்மா, அதிக நாளைக்கு என் பொறுப்பைக் கட்டிக் காப்பதில்லை என்று நிச்சயமாக்கி விட்டேன்.”

     “அப்பா!... நீங்கள்... உங்கள் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தானே நினைப்பீர்கள்?”

     வானவில்லைப் போல் வண்ண ஜாலங்கள் அவள் முகத்தில் தோன்றி மறைந்தன. விரல்கள் தரையில் கோலமிட்டன.

     அவர் அதைப் பார்த்துக் கொண்டே நிதானமாகப் பேசினார்.

     “அந்தச் சந்தோஷம் நீடித்ததா என்பதையும் கூட நினைப்பேனம்மா. அறியாத குழந்தைக்கு திருடன் கொடுக்கும் மிட்டாயும் கூட இனிமையாக இருக்கிறது. சந்தோஷத்தைப் பாகுபாடு செய்யத் தெரிந்தவர்களுக்கே புரியும் வேணி!”

     “நான் அறியாக் குழந்தை இல்லை அப்பா!”

     “வேணி, உன் பரபரப்புக்குக் காரணத்தை நான் அறிவேன். உன்னையும் குமாரையும் நான் சேரிங் கிராஸில் பார்த்தேன். மனது ரொம்ப வேதனைப்பட்டதம்மா...”

     “வேதனைப்பட என்ன அப்பா இருக்கிறது? நீங்கள் உண்மையில் பெருமைப்பட வேண்டுமப்பா. நாமாக இருந்தால் அவர்கள் நிலையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டோம். அந்தஸ்தும், ஏற்றத்தாழ்வும் மனிதன் வரும்போதுமில்லை, போகும் போதும் இல்லை. இத்தகைய பரந்த மனதோடு பேசி, பண்போடு நடந்து கொள்ளும் அவரைக் குறித்து நீங்கள் பெருமைப்பட வேண்டுமப்பா. அவர் நிலைக்கு எத்தனையோ உயர்ந்த இடத்துப் பெண்கள் மேலான படிப்பும் பட்டமும் உடையவர்கள் வரக் காத்திருக்கையில் முன்னொரு நாள் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இன்னமும் அதை நினைவுப் படுத்தும் பெருந்தன்மையை நினைத்துப் பாருங்கள் அப்பா” என்றாள் பட்டாசு வெடிக்கும் வேகத்தில்.

     அவளுடைய தந்தை அசையவில்லை.

     “அதை விட எனக்கு உயிரினும் மேலான மனிதர்களிடம் நான் கொடுத்திருக்கும் வாக்கையே பட்ட கடனையே நான் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. வேணி உன் அத்தையும் மாமனும் ஏன் பூபதியும் கூட உன்னை இன்று நான் வேறு அந்தஸ்து மருமகனுக்குக் கட்டப் போகிறேன் என்றால் இடிந்து போய் விடுவார்கள். எனக்கு அவர்கள் முகத்தில் விழிக்க வழியில்லை. பெண் படிப்பதே அவர்களுக்கு புதுமை, வேலை செய்வதோ புரட்சி. ஆனால் அவளாக ஒரு மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டாள், இருவரும் காதலிக்கிறார்கள், அது அந்தஸ்துக்கெல்லாம் அப்பாற் பட்டது என்பதை யெல்லாம் அவர்களைப் புரிந்து கொள்ளச் செய்வது மிகவும் கஷ்டம். புருஷன் குடித்தாலும் அடித்தாலும் உதைத்தாலும் கூடத் தனக்கென்று ஒரு சுகவாழ்வை எண்ணி அவனை வெறுக்கத் தெரியாததொரு பண்புக்குட்பட்ட பெண்களையே அவர்கள் சாதாரணமாக அறிந்தவர்கள். என் மகள் உன் மகனைக் காதலிக்கவில்லை என்று நான் காரணம் காட்டத் துணிய மாட்டேன் வேணி.”

     குழந்தைக்கு ஆசையாக ஒரு நண்பன் பலூன் வாங்கித் தந்தான். செப்பு வாயில் வைத்து அதை அவள் ஊதினாள். ஆனால் பெற்றவளே அதை ஊசியால் குத்தி விட்டாள்.

     “உனக்கு இன்னுமொரு கதை தெரிய வேண்டாமென்று எண்ணினேன். அந்தக் காலத்தில் உன் தந்தைக்கும் உன்னைப் போல் தான் தன் மீதே ஒரு கர்வம் இருந்தது. பதினேழு வயதிலேயே செங்கமலத்தக்காவுக்கு முன் தலை முடி நரைத்துப் போயிற்று. தாய் தகப்பனின்றி தமக்கையின் அன்பு ஊட்டத்தில் நிகு நிகுவென்று வளர்ந்த பையனுக்கு அவளைக் கட்டி வைக்கலாம் என்று மாமன் எண்ணினார். ‘உன் மகளையா? எனக்கா? எனக்கு அக்காளைப் போலிருக்கிறாள்? பெரியவராகப் பார்த்துக் கட்டிவை’ என்று சிரித்தான். சிரித்து விட்டுப் போனான். பிறகு அழுது கொண்டே ஓர் இளங் குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு அந்த வீட்டுப் படியேறி வந்தான். அந்தக் குழந்தையை அவர்கள் அநாதையாக்கவில்லை தெரியுமா? -” என்றார் அவர். வேணி வெகுநேரம் பேசவில்லை.

     என் உணர்ச்சிகளுக்காகப் பலரையும் மனம் நோகச் செய்ய மாட்டேன் என்ற உறுதியுடன், கடைசியில் “பூபதி அத்தானையே நான் மணந்து கொள்ளச் சந்தோஷமாகச் சம்மதிக்கிறேனப்பா” என்றாள்.