7

     “மௌண்டன் நெஸ்ட், ஓல்ட் கார்டன் ரோட் உதகை” என்ற முகவரிக்குக் கீழ், குமாரின் கிறுக்கலில் இந்த வரிகள் அடங்கி இருந்தன.

     “பின்னிருந்து ஒரு அம்மா பார்ப்பதால் நீ கேட்ட கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு விஷயம் தெளிவாக்க விரும்புகிறேன். என் வீட்டில், வேனிலுக்கு வந்துள்ள அம்மாவைத் தவிர, ஆயாவையும், தோட்டக்காரனையும் தான் நீ பார்க்கலாம். நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம் - குமார்.”

     கூந்தலுக்குள் வைத்து முடிந்த மல்லிகைப் பூவின் மணம் போல் இந்தக் கடிதத்தில் பொதிந்துள்ள பொருள் வேணிக்குக் கிளர்ச்சியூட்டியது. டிசம்பர் குளிரில் நெருப்பில்லாத அறையில் அவள் உறக்கம் பிடிக்காமல் புரண்டிருக்கிறாள். அது போல் அன்று உறக்கம் பிடிக்கவில்லை அவளுக்கு.

     பூபதி விட்டுச் சென்றிருக்கும் பழக் கூடையோ, அசைக்க முடியாது என்று அறிவுறுத்துவது போல் கண்களை விழித்தால் மூலையில் காட்சி தந்தது. துண்டுக் கடுதாசி பறந்து போகக் கூடியது. பழக்கூடை நிலையானது.

     அவளுடைய உள் மனசுக்கு அப்படிப் புரிந்தாலும், அந்தக் கடித வரிகளே ஏன் திரும்பத் திரும்ப வருகின்றன நினைவில்?

     அவள் தனக்கே தடை விதித்துக் கொண்டாற் போல் எழுந்து அந்தக் காகிதத்தைக் கசக்கினாள்; பிறகு கிழித்து மூலையில் போட்டாள்.

     அவளுக்கு என்றுமே வரையறையை மீறத் துணிவு கிடையாது.

     பூபதி அவளுக்குத் தெரியாதவனல்ல, புரியாதவனல்ல என்றாலும், மாமா, அத்தை, தந்தை எல்லோருடைய விருப்பத்துக்கப்பால் பழத்துள் கொட்டை போன்ற ஒரு கசப்பு லேசாக மனசிலே உறைத்தது.

     வேணிக்குக் குழந்தைப் பருவம் மிகக் குழப்பமான பருவம். தாடி மீசையுடன் பயங்கரமாகத் தோற்றமளிக்கும் ஒருவர் அவளை அடிக்கடி வந்து தூக்கிக் கொஞ்ச முற்படும் போது அவள் ‘பூச்சாண்டி’ என்று அலறியிருக்கிறாள். அவள் துவக்கப்பள்ளியில் படித்த நாட்களில் கூட, பூச்சாண்டி பழகி விட்டாலும், அந்தப் பூச்சாண்டி தான் தந்தை என்றே தெரியாது. மாமாவைத்தான் அவள் அப்பா என்று அழைத்திருக்கிறாள். அவர் வெளியே சென்று திரும்பும் போது பூவும் முறுக்கும் வாங்கி வந்து அவள் கையில் கொடுக்காமலிருக்க மாட்டார். அந்த வீடு பெரிய களஞ்சியங்களுள்ள இரண்டு கட்டு வீடு. நடுவே பெரிய முற்றம். முற்றத்தில் கிணறு உண்டு. வீட்டின் ஒரு புறம் மாட்டுக் கொட்டில். இன்னொரு புறம் எண்ணெய்ச் செக்கு.

     அத்தை ரவிக்கை போடாத காலத்தைச் சேர்ந்தவள். எப்போதும் அவளுக்கு வீட்டிலும் கொட்டிலிலும் வேலை இருக்கும். அத்தையும் செங்கமலமுமாக, சுமை கயிற்றைக் கட்டிக் கிணற்றில் தண்ணீர் இழுப்பார்களே, அது மறக்க முடியாத நினைவாயிற்றே! செங்கமலம் அந்த ஆழக்கிணற்றில் தண்ணீர் இழுக்கவும் அடுப்படியில் வேலை செய்யவுமே பிறந்தாளோ என்று கூட வேணிக்குத் தோன்றிற்று. கணவன் வீட்டைப் பார்க்கு முன்பே, மாங்கல்யத்தை இழந்த துரதிர்ஷ்டக்காரி அவள். அத்தையை விட அவள் கறுப்பு. ஆனால் அத்தைக்கு நரைத்திராத கூந்தல், செங்கமலத்துக்கு வெள்ளி இழைகளாக மாறி விட்டது. அவள் வேணிக்கு அன்பின் வடிவம். வாட்டசாட்டமாக வெள்ளைச் சேலை உடுத்துக் கொண்டு நளினமோ, மென்மையோ தெரியாதவளாகத் தோன்றினாலும் வேணியினால் அந்த அன்பை எப்படி மறக்க முடியும்?

     எத்தனையோ நாட்களில் சிறுமிப் பருவத்தில், புரிந்தும் புரியாததுமானதொரு அச்சத்தில் அவள் திடீர் திடீரென்று உறக்கத்தில் விழித்துக் கொண்டதுண்டு, உடல் குலுங்கும், அப்போது இரு நீண்ட கரங்கள் அவள் பூ உடலை அணைக்கும்.

     “என்னம்மா? பயந்துக்கிட்டியா? நானிருக்கிறேனே கண்ணு?” என்று கனிவுச் சொற்கள் அவள் நெஞ்சுக்கு இதமாக வரும்.

     “செங்கமலத்தக்கா, நீ தானே எனக்கு அம்மா?” என்று அவள் செவியோடு வேணி கொஞ்சுவாள். செங்கமலம் அவள் பூங்கன்னத்தை எலும்பு முட்டும் முகத்தோடு அணைத்துக் கொள்வாள். கன்னங்களில் கண்ணீர் ஈரம் படியும்.

     செங்கமலத்துக்கு அடுத்தவள் கிருஷ்ணம்மா. கிருஷ்ணம்மாவுக்குச் சிறு வயசிலேயே திருமணம் நடந்து விட்டது. ஒரு கிராமத்து விவசாயிதான் அவள் கணவனும். ஆண்டு தோறும் அவள் தாய் வீட்டுக்கு வருவாள். நெருக்கமான பிள்ளைப் பேற்றிலும், தாங்காத குடும்பத்திலும் நலிந்தவள்.

     மூன்றாவதான லட்சுமிக்கு வெகு நாட்கள் கழித்தே திருமணமாயிற்று. குரோஷே நூலும் ஊசியுமாகவே அவள் காட்சியளிப்பாள். வேணியை விதவிதமாகச் சிங்காரிப்பது அவளுக்கு அப்போதெல்லாம் பொழுது போக்கு. அவளுடைய அடர்ந்த கூந்தலை கற்பனைக் கெட்டிய விதமெல்லாம் பின்னிச் சிங்காரிப்பாள்.

     லட்சுமியின் கணவருக்கும் வேணி செல்லப் பெண்.

     அத்தான் பூபதி எல்லோரிலும் இளையவன்.

     மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த அருமைப் பிள்ளையாக, செல்லமாக வளர்ந்தவனுக்குப் போட்டியாக அவள் வந்து விட்டாற் போல், அந்தக் காலத்தில் அவளிடம் சண்டை போடாத நாள் கிடையாது. வாசல் திண்ணையில் மச்சுப்படி வளைவின் கீழ் அவளை இழுத்து வைத்து அவன் அடிப்பான். செங்கமலமும் லட்சுமியும் கண்டால் சிரித்துக் கொண்டு ஓடியே போவான்.

     ஆனால், அவன் கோயமுத்தூர் கல்லூரிக்கும், பட்டணத்துக் கல்லூரிக்கும் சென்ற பிறகு முற்றிலும் மாறிவிட்டான்.

     கால்சராய், விதவிதமான சட்டைகள், தங்கச் சங்கிலி, கைக் கடியாரம் எல்லாமாக அவன் லீவுக்கு வீட்டுக்கு வந்தாலே தடபுடல் படுத்தினான். வேணியை லட்சியமே செய்வதில்லை. ஒரு நாள் பூபதி அத்தான் செக்கடியில் பராக்குப் பார்த்தாற் போல் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.

     அவள் ஓடோடிப் போய் மாமாவிடம் சொல்லி அவரைக் கூட்டி வந்து காட்டினாள். அன்றெல்லாம் அவர் கத்திக் கொண்டு இருந்தார். மறுநாள் பூபதி அவர் சோளக் காட்டுக்குப் போயிருந்த சமயத்தில் அவளைக் கரகரவென்ரு இழுத்துப் போய் நாலு அறை வைத்தானே, இப்போது நினைத்தாலும் கன்னம் எரிந்தது.

     செங்கமலம் அவள் கன்னத்துக் கோடுகளைக் கண்டு பூபதியிடம் அன்று சண்டையான சண்டை போட்டாள். “இப்ப அடிக்கிறானில்லே? நாளைக்கு சேர்த்து வச்சுக் கொஞ்சுவான்” என்று அத்தை சிரித்தாள்.

     வேணி கொட்டக் கொட்ட விழித்தாள்.

     இளமைப் பருவத்தில் முரடனாகவே அவளிடம் நடந்து கொண்டான்.

     அவள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கச் சென்ற பின், பூபதியை அவள் காணவே வாய்ப்பில்லாமல் போயிற்று. பரீட்சையில் தேறிய பிறகு, குமாருக்கு அஞ்சினாற் போல் அவளை அப்பா செண்பகப் புதூரில் கொண்டு விட்டாரே, அப்போது பூபதி ஊரில் தான் இருந்தான்.

     “அட! வேணியா இவ்வளவு வளர்ந்து விட்டாயா? அடையாளமே தெரியலையே?” என்று வியந்தான். அவளிடம் வலியப் பேச வந்தான். அவள் அடுத்தாற் போல் படிப்பதில் கூட அவன் சிரத்தை காட்டினான். மாமா அவளை சேவிகா டிரெயினிங்குக்கு அனுப்புவதாக மணியக்காரரின் யோசனையைக் கேட்டு வந்து சொன்ன போது, அவன் மறுப்பொன்றும் காட்டவில்லை.

     அதற்குப் பிறகு, அடுத்த ஆண்டில், பயிற்சி நடுவில் விடுமுறைக்காக அவள் லட்சுமியின் வீட்டுக்கு வந்திருந்தாள். லட்சுமி அக்காவும் அத்தானும் குழந்தை கோபுவுடன் எங்கோ அன்று வெளியே சென்றிருந்தார்கள். மாலை ஆறு மணி இருக்கும். வேணி அந்த வெளிச்சத்தில் முற்றத்துக் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து சட்டை தைத்துக் கொண்டிருந்தாள். தையல் சரியாக இல்லை. அந்தி நேரத்தைப் பொருட்படுத்தாமல் பிரிக்க வேண்டியிருக்குமோ என்று கண்ணைக் கடுக்க ஆராயும் வேளையில் இரு கரங்கள் அவளைச் சுற்றி வளைத்து அவளுடைய கண்களைப் பொத்தின.

     லட்சுமியின் வளைக்கரங்களல்ல. தலையில் முண்டாக சட்டைப் பித்தான் உரசியது.

     வேணி வாய் திறந்து “ஐயோ” என்று கூவியிருப்பாள். ஆனால் கை கண்களை விட்டு வாயைப் பொத்தியது.

     அது பூபதியின் கை.

     “அடாடா...” என்று அவள் முகத்தைத் திருப்பி மெதுவாகச் சிரித்தாள். “இன்னும் சிறுபிள்ளையாக இருக்கிறாயே வேணி?” என்று மெல்லிய கனிவு மொழியுடன் அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றான்.

     “உங்களுக்கு இது தகாது” என்று திமிறிக் கொண்டு வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் அவள்.

     “தகும் வேணி தகும், ஏன் தெரியுமா?” என்று அவளை பின்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்ட அவன், அரும்பு மீசைக்குக் கீழே பற்கள் தெரிய மெல்லச் சிரித்தான்.

     “இச்சைக்கினிய மது, என் இரு விழிக்குத் தேனிலவு” என்று காதோரம் குனிந்து அவன் பாடியபோது, அவள் அவன் கன்னத்தைப் பிடித்துத் தள்ளினாள்.

     “அக்கா! லட்சுமி அக்கா! லட்சுமி அக்கா!” என்று அலறினாள்.

     மறுபடியும் பூபதி அவள் வாயை மூடி விட்டான்.

     “கத்தாமலிரு, நான் விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் விடவே மாட்டேன். கதவு தாழ்ப் போட்டிருக்கிறேன். அக்காவும் அத்தானும் இப்போது வரமாட்டார்கள். வந்தாலும் வேணி, என்னையும் உன்னையும் கண்டு சிரிப்பார்கள். கேலி பேசுவார்கள்.”

     இதைப் போன்றதொரு அச்ச நிலையை வேணி அந்த விநாடி வரையிலும் உணர்ந்திருக்கவில்லை. அவளுக்கு எதிர்ப்புக் காட்டும் வகை கூடத் தெரியவில்லை.

     “நான் கத்தவில்லை அத்தான், விட்டு விடுங்கள்” என்று கெஞ்சி அழுதாள்.

     அழுகைக்குப் பலன் இருந்தது. ஆனால், புகை படிந்த இதழ்களைப் பதித்து விட்டுத்தான் அன்று அவளை அவன் விட்டான்.

     பெண் நெஞ்சம் மென்மையானது, அருமையானது, காசுக்குக் கூடக் கிடைக்கும் சரக்கல்ல அது என்றெல்லாம் தெளிய பூபதிக்கு வசதிக் குறைவுகள் இல்லை. தன்னை அவள் எதிர்க்கவோ, மறுக்கவோ முடியாதென்ற தெம்பு அவனுக்கு இருந்தது.

     அவனை மறுப்பதாக அவள் கனவு காண்பது, ஊமையின் கனவை ஒத்ததுதான். அதை விடத் துர்ப்பாக்கியம் விடிந்தால் அவன் திரும்பவும் வருவான்.

     அவளை வேலைக்கனுப்பும் வரை “நீ படித்துப் பாஸ் செய்யாமல் ஒரு வேலையில் ஊன்றாமல் கல்யாணப் பேச்சு எப்படி எடுப்பது, தம்பி?” என்று அத்தை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் என்பதை வேணி அறிவாள்.

     வேணி படித்த பின் - பயிற்சி எடுத்த பின் மூன்று ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்பது நிபந்தனை.

     இரண்டரை ஆண்டுகளாகி விட்டன. அவனும் ஒரு வேலையில் இருக்கிறான், நினைவூட்ட வந்திருக்கிறானோ? இங்கே தனிமையை ஏற்படுத்திக் கொண்டு அவன் வந்திருக்கும் விஷயம் மாமா, அத்தை முதலியோருக்குத் தெரியுமோ, தெரியாதோ? தெரிந்தால் எப்படி அனுமதிப்பார்கள்?

     காலையில் கண்களெல்லாம் எரிச்சல். உடம்பு கூட வலித்தது. வானும் கூட மூட்டமாகவே இருந்தது. அன்று வீட்டிலிருக்கவும் அவளுக்கு வெறுப்பாக இருந்தது. வெளியே செல்லவும் ஓர் அச்சம்.

     காலை வேலை எல்லாம் முடித்து விட்டு, பதினொரு மணி சுமாருக்கு மங்கலாக வந்த வெயிலைத் தேடிக் கொண்டு அவள் வாயிலுக்கு வந்தாள்.

     “என்னம்மா? சாவகாசமாக வெயில் காய வந்து விட்டாய்? நினைவே இல்லையா? கிளம்பு, கிளம்பு” என்று குரல் கேட்டதும் வேணி சட்டென்று நிமிர்ந்தாள்.

     நளினி.

     அவளைப் போல் இன்னொரு வட்டத்தில் பணிபுரியும் பெண். அவள் அன்று அணைக்காலனிப் பக்கம் செல்ல வேணியை அழைத்திருந்தாள். அணைத்திட்ட காலனியில், தொழிலாளர் குடும்பப் பெண்களுக்காக ஓர் உதவும் திட்டம் இருந்தது. அப்பெண்களுக்கு ஒரு சங்கம் ஏற்படுத்தி, தையல் கம்பளிப் பின்னல் கலைகளைப் பயில்வித்து, அக்கலைகளின் மூலம் அவர்கள் வருவாயை அதிகரித்துக் கொள்ள வழி செய்ய உதவுவதே அத்திட்டம். இதற்கான தையல் இயந்திரம், கம்பளிப் பின்னல் நூல் முதலிய சாதனங்களை வட்டார வளர்ச்சித் துறையினர் உதவியிருந்தார்கள். திட்டத்தை வெற்றிகரமாக்க பெண்கள் ஒத்துழைக்க வேண்டுமே? நளினி புதிதாக வேலைக்கு வந்த பெண், வேணியை விடத் துணிவு இல்லாதவள். அவளுக்குத் தனியாக வெளியே செல்லவே பயமாக இருந்தது!

     பெண்களிடம் திட்டத்தை எடுத்துச் சொல்லி, சங்கத்தைத் துவங்குவதற்கான முன்னோடி வேலைகளில் பங்கு கொள்ளத்தான் நளினி வேணியை உதவிக்கு அழைத்திருந்தாள். அந்தத் தேதியில் அவள் வருவதாகவும் கூறியிருந்தாள்.

     “என்ன நினைவேயில்லையா, வேணி? ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கிறது? அழுதாயா?” என்று கேலியாகக் கேட்டுக் கொண்டே அவள் வீட்டுக்குள் வந்தாள்.

     உள்ளே நுழைகையிலேயே பழங்களின் வாசனை அவள் மூக்கைக் கவர்ந்து விட்டது.

     “அடேடே... ஏதம்மா, ஒரே பழம்? இங்கே யாரேனும் விருந்தாளி வந்திருந்தார்களா, வரப் போகிறார்களா, வந்திருக்கிறார்களா?”

     “வந்திருந்தார்கள். வந்திருக்கிறார்கள்.”

     “அப்படியானால் நீ இன்று என்னுடன் வரமாட்டாயா, வேணி?”

     “சே, சே, வந்த விருந்தாளி நீதாணடி, கூடையைத் திறந்து உனக்கு எது பிடிக்குமோ எடுத்துக் கொள். இதோ நான் கிளம்பி விட்டேன்.”

     நளினி கூடையைத் திறந்து பரிசீலனை செய்தாள். ஒவ்வொன்றையும் மாதிரி பார்த்தாள்.

     “யாரடி வந்தது? உண்மையைச் சொல்!”

     “மாமா. உண்மை என்ன உண்மை?”

     “போய்விட்டாரா? உனக்கு ஒருத்திக்காகவா இத்தனை பழங்கள் வாங்கி வந்தார்?”

     “சே, சே, ஊருக்குக் கொண்டு போக வாங்கி வந்தார், ஊட்டியிலிருந்து. கடைசியில் விட்டு விட்டு மறந்து போய் விட்டார்?”

     “ஓ... மாமா வாழ்க. அவருக்கு ஒரு மகன் இருந்தால் அவனும் வாழ்க.”

     “என்னை எதற்குப் பார்க்கிறாய்? நான் வந்தாயிற்று.”

     “இந்த கறுப்புத் திராட்சை உன் கண்ணைப் போல் இருக்கிறது. மிகவும் இனிமை...” என்றாள் நளினி குறும்பாக.

     “சரி, சரி, நீ இப்போது மாமன்மகனாக மாறி விடாதே, போவோம்” என்றாள் வேணி.

     அவள் அன்று அந்நேரம் போவாள் என்று எதிர்வீட்டுக்காரர்கள் எப்படி எதிர் பார்த்திருப்பார்கள்?

     “வேணி இன்றும் வெளியே போகிறாயா என்ன? அவர் வரமாட்டார்?” என்று கேட்டுக் கொண்டு கமலம் வந்தாள்.

     “நான் இப்போது வந்து விடுவேன். அவர் வந்தால் சாவி கொடுங்கள் அக்கா?” என்று அவளிடம் சாவி கொடுத்தாள் வேணி.

     “யாரடி... பொய்தானே சொன்னாய்?”

     “இல்லை... அப்பா வந்தாலும் வருவார் என்று எதிர்பார்க்கிறேன். போகலாம் வா...” என்றாள்.

     மங்கலான வெயில் சற்றே பளிச்சென்றடித்தது.

     அவர்கள் வெளிச்சென்று அரைமணிக்கெல்லாம் பூபதி வரத் தவறவில்லை. கமலமே சாவி கொடுத்தாள்; செய்தியையும் சொன்னாள்.

     அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். தையல் இயந்திர மேஜையில் பளிச்சென்று கண்களில் பட்டது, ஒரு துண்டுக் காகிதம், பூபதி எடுத்தான்.

     “உங்கள் பழக்கூடைக்கு மிக்க நன்றி, இவ்வளவுக்கு இங்கு செலவில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? இன்று தவிர்க்க முடியாததொரு வேலை வந்து விட்டது. அதனால் இங்கு தங்க முடியவில்லை. தயவு செய்து தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இன்றும் நான் திரும்ப ஒருக்கால் நேரமாகி விட்டால், தயவு செய்து எனக்கு மிகவும் சங்கடமான நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

     -வேணி

     குறிப்பு: அத்தை, மாமா, அக்கா எல்லோருக்கும் ஊரில் என் அன்பான வணக்கங்களைத் தெரிவிக்கவும்.

     -வேணி

     இக்கடிதம் எழுதியிராது போனால் ஒருக்கால் அவன் திரும்பியிருப்பானோ என்னவோ? பஸ் போனாலும் போகட்டும் என்று அன்று தீர்மானமாக அவன் காத்திருந்தான்.



சோலைக் கிளி : 1 2 3 4 5 6 7 8