11

     மலைக் கானகத்தின் நடுவே அந்த மாளிகை இருப்பது தெரியாமல் மறைந்திருந்தது. சாலையை அடுத்த சரிவெல்லாம் தேயிலைச் செடிகளும், ஸில்வர் ஓக் மரங்களுமாக அழகு பெற்றாலும், பகலிலேயே அம்மாளிகையின் முழு வடிவம் சாலையிலிருந்து புலனாகாது. இரவிலோ, அழகிய வனதேவதையின் இருப்பிடமோ என்று வியக்க, அருகிலே வந்தால் தான் கண்டு கொள்ள முடியும்.

     ஓர் ஆலை அதிபருக்குச் சொந்தமான அம்மாளிகை அநேகமாக ஆண்டில் சில மாதங்களே கலகலப்பாக இருக்கும். கல்லூரியில் படிக்கும் அதிபரின் மகள் கலைச் செல்வி தோழிகளுடன் விடுமுறை நாட்களில் அங்கு வந்து சில நாட்கள் தங்குவாள். அந்நாட்களில், மாளிகையில் கிண்கிணி சதங்கை யொலிகள் நாதமெனச் சிரிப்பொலியும் மழலைக் குரலொலிகளும், வண்ண வண்ணப் பூஞ்சிதறல்களும் கொஞ்சிக் குலவும்.

     முன்னிரவுகளில், மாளிகை தேவமங்கையரின் பூஞ்சோலையெனத் திகழும்.

     இரவின் கரியதுகில் சேர்ந்து விழிகளை வருடிச் சுக நித்திரையில் ஆழ்த்தும். அவ்வேளையில், ரூபாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. ஏதோ ஒரு நாலைந்து நாளைய ஓய்வை நாடி அவள் மலைவாசம் வந்திருந்தாள். ஓய்வில் ஒத்த இளமைக்கும் உல்லாசத்துக்கும் குறைவிருக்கவில்லை. அவள் கஷ்டமே தெரியாமல் வளர்ந்த பெண். துன்பத்தையும் நாவையும் கண்டு வேதனையுறும் செல்வியானவள். உலகத்துத் துன்பங்களின் ஒரு திவலையையேனும் துடைக்கலாம் என்று தொழில் செய்யப் புகுந்தவள். இந்த உல்லாயக்களிப்பு வேறு அந்தத் துன்ப உலகம் வேறு. இரண்டையும் இணைத்துப் பிணித்து வைத்துக் கொண்டாலே ஒன்றுக்கொன்று துணையாக வலுப்பெறும் என்று புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த இரண்டையும் ஒன்றோடொன்று இணைத்துப் பிணைக்கத்தான் அவளுக்கு இப்போது வழி புலப்படவில்லை போலிருந்தது.

     முன்போல் இந்த தோழியர் கூட்டங்களில் மன மகிழ்ச்சி பெற முடியவில்லையே?

     குமார் என்ன சொன்னான்? உண்மையாகவே அவனை மணந்து கொண்டு இந்த நோய்க் கூட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியுமோ? மண வாழ்வை எந்த லட்சியத்துடனும் பிணைக்க முடியாதென்பதில்லை. ஆனால் அது நிறை வாழ்வாக இருக்க வேண்டுமே?

     தன் எண்ணத்தை தயக்கத்தை வெளியிட்டால், ஒருவன் தெம்பாகப் பேச மாட்டானா? “பூ, உன் லட்சியத்தின் வழிக்கே வரமாட்டேன். கல்யாணமான பின் நீ மட்டும் அடுப்படியில் சரணடையப் போகிறாயா என்ன? ஆந்தமான வேலை செய். ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டிருப்போம் என்று பேசியிருக்க மாட்டேனா? சே...! ஒன்றும் பிடிக்கவில்லை!”

     ரப்பர் நுரைப்பஞ்சின் மெத்தையில் ரூபா புரண்டு புரண்டு படுத்தாள். அருகில் ஒருத்தி குறட்டை விடுகிறாள். ஒருத்தி குளிரில் பிடித்து வைத்தாற் போல் போர்வைக்குள் அசங்காமல் கிடக்கிறாள்.

     நாய்கள் ‘குரைத்த’ சத்தம் கேட்கிறது. கேட்டுக் கொண்டே இருக்கையில் ஓலம் வலுத்தது. பங்களாவையும் தோட்டத்தையும் சுற்றித் திரியும் அல்சேஷியன் நாயின் குரைப்பொலி மட்டுமில்லை. சுற்றி உள்ள காடுகளிலிருந்தெல்லாம் வந்த நாய்களின் குரைப்பைப் போல் ஓலம்.

     ஏதேனும் வனவிலங்குகள் தென்பட்டால் நாய் குலைக்குமென்று புஷ்பா கூறினாள்.

     வந்திருக்குமோ?

     வராந்தாவில் காவலாளியின் அடியோசை கேட்டது. ரூபா துள்ளி எழுந்தாள். சற்றைக்கெல்லாம் அவள் மெள்ள கையில் டார்ச்சுடன் வெளியே வந்தாள்.

     “உமர்?... உமர்?”

     யாரோ ஓர் அம்மா வருவதைக் காவலாளி பார்த்து விட்டு, “அம்மா?” என்று குரல் கொடுத்தான்.

     “நாய்கள் ஏன் குரைக்கின்றன?”

     “அதான் தெரியலேங்கம்மா! நான் ஆயுதத்துடன் போகலாம்னு வந்து கங்கனை எழுப்பினேன்.”

     அவர்கள் இருவரும் சற்றைக்கெல்லாம் பாதையில் சென்றார்கள். ரூபா மெதுவாகச் சென்று செல்வியை எழுப்பினாள். ஒருத்தி எழுந்ததும் அடுத்தடுத்துத் தங்கி இருந்த ஆறு பேர்களும் எழுந்து விட்டனர். எல்லோருமே வராந்தாவில் வந்து நின்றனர்.

     “நாய்கள் ஆவிகளைக் கண்டு கூட குரைக்குமாம்” என்றாள் சியாமளி.

     “நீராவியைக் கண்டு கூடவா?” என்று ரூபா சிரித்தாள்.

     “சிறுத்தை ஏதேனும் வந்திருக்கும். முன்பு எப்போதோ நான் குழந்தையாக இருந்த போது இங்கு வந்ததுண்டாம்” என்றாள் மாளிகைச் சொந்தக்காரியான செல்வி.

     “குரைப்பு நின்று விட்டது. பாதையில் கொஞ்சம் கொஞ்சம் போய்ப் பார்க்கலாமா?” என்று ஒரு யோசனையைப் பாதையில் விழிகளை ஊன்றிக் கொண்டு கேட்டாள் காந்தா.

     “சிறுத்தை இந்த விளக்கொளியில் பேட்டி கொடுக்கத் தயாராக இருக்குமா என்று பார்க்கிறாளடி அவள்!”

     “எனக்கு என் தீஸிஸை எழுதி முடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறதம்மா...” என்றாள் சியாமளி.

     “எனக்குக் கூட, நான் ஒரு லட்சிய டாக்டர் என்று பெயரெடுப்பதா, லட்சிய மனைவி என்று பெயரெடுப்பதா என்ற ஆராய்ச்சியில் இன்னமும் முடிவு கிடைக்கவில்லை. அதனால் பாதையில் வருவதற்கும் சிறுத்தைக்குப் பேட்டி கொடுப்பதற்கும் துணிவில்லையடி!” என்றாள் ரூபா.

     “இவ்வளவுதானா உங்கள் சூரத்தனம்” என்று காந்தா சிரித்தாள் கலீரென்று.

     “பாம்புப் பொந்தில் போய் கை நீட்டுவதொன்றும் சூரத்தனமல்ல, பாம்பு எதிர்ப்பட்டால் அதன் வழி விட்டு விலகிச் செல்வதுதான் சூரத்தனம்” என்று செல்வி விளக்கினாள்.

     “அதோ, பாம்பு! பாம்பு!” என்று ஒருத்தி கூச்சலிட காந்தா உளறியடித்து ஓட பெருஞ் சிரிப்பு தொடர்ந்து எழுந்தது.

     அப்போது பாதையில் ஓடி வந்தான் உமர்.

     “என்னப்பா...?”

     “அங்கே... ஒரு... ஒரு... ஆள் அடிபட்டுக் கிடக்க்றானம்மா!”

     “ஆளா?”

     ஏக காலத்தில் எல்லோருமாகக் கேட்டார்கள்.

     “ஆமாம், ரோடில் லாரி ஒண்ணு கவுந்து போயிருக்குது. டிரைவர் யார்ன்னு தெரியலே. கிளீனரும் நசுங்கிட்டான் போலிருக்குது. ஒருத்தன் பொழைச்சிருக்கிறான் போலிருக்குது. கத்திக் கூச்சல் போடுகிறான். நாய் அவனிடம் தான் குரைச்சிருக்குது.”

     எல்லோரும் சில விநாடிகள் திகைத்து நின்றார்கள்.

     ரூபா மட்டும் கிளம்பினாள்.

     “இவளுடைய வீர தீர சூரத்தனத்தைக் காட்ட நேரம் வந்து விட்டது” என்றாள் ஒருத்தி களுக்கென்று நகைத்து.

     “அதற்குச் சிரிக்க வேண்டாம்! முதலுதவிப் பெட்டி ஏதேனும் இருக்கிறதா? என்று பார்த்து உதவி செய்யலாம்” என்றாள் ரூபா கடுமையாக.

     இதற்குப் பிறகு விடியும் வரையிலும் அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது.

     சரிந்து உருண்டு விழுந்து கிடந்த பூபதிக்கு வெகுநேரம் ஒன்றும் புரியவில்லை.

     பெட்ரோல் பங்கில் காற்றடித்துக் கொள்ள வந்திருந்த லாரியில் ஏறிக் கொண்டான் - பின்புறம் தொட்டியில், டிரைவரிடம் வாடை வீசியது. ஆமாம். ஏற்றிக் கொள்ளக் கூடத் தகராறு செய்தான்.

     குடிவெறியில் மரத்திலே மோதியதும், அவன் குதிக்க முயன்று விழுந்ததும் நினைவுக்கு வந்தன. உடம்பெல்லாம் சிராய்ப்புக் காயம்; கணுக்காலில் இரத்தக் காயத்தின் எரிச்சல். எங்கோ போகிறாற் போல் இருக்கிறதே!

     “லாரியிலே வந்தவரோ, எங்கேனும் வேட்டைக்கு வந்த சூரப் புலியோ?” என்று யாரோ கேட்டனர். தொடர்ந்து சிரிப்பொலி.

     ஏதோ வண்டியில் தான் அவன் போய்க் கொண்டிருந்தான். வண்டி தானா? வெள்ளை மேலங்கி தரித்த ஒருத்தி அவள் ஆசனத்துக்கு முன்னிருந்து எட்டிப் பார்க்கிறாள் போல் இருக்கிறது. சொர்க்கலோக யாத்திரையோ? இந்த வெள்ளை உடைக்காரி, தேவதையோ?

     திடீரென்று பூபதி விசித்து விசித்து அழலானான்.

     “ஹ்ம்...” அவன் கையைச் சில்லென்ற மென்கரம் அழுத்திப் பிடித்தது.

     “இதோ ஆயிற்று வலியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்...”

     இவள் யார்?

     “நீ... வேணியா? வேணி! வேணி!”

     “...கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆஸ்பத்திரி வந்து கொண்டு இருக்கிறது.”

     வளைவுகளும் திருப்பங்களும் கடந்து ஆஸ்பத்திரிக்கு வண்டி வந்து சேருகையில் மணி இரண்டு.

     அடிபட்ட காயங்களைப் பரிசோதித்துக் கட்டுப் போடு முன் பூபதி களைத்து உறங்கிப் போனான்.

     அவன் வலி வலி என்று அலறிய போது உள்ளூற எதேனும் சேதமாயிருக்குமோ என்று ரூபா அஞ்சியிருந்தாள்.

     “வேணி” என்ற சொல்லைத் தவிர அவனிடமிருந்து எதுவும் பிரியவில்லை. உறங்குகையில் அப்பாவி போல் தென்பட்ட அந்த இளைஞனை நோக்குகையில் ஆழ்ந்த பெருமூச்சொன்று அவளிடமிருந்து பிரிந்தது.

     உதடுகள் இன்னமும் - ‘வேணி வேணி’ என்று முணமுணத்தாற் போல் ஓர் அசைவு இருந்தது.

     ஒரு மனிதனின் உள்ளம் வலியிலும் வேதனையிலும் உறக்கத்திலும் தான் பேசுகிறது. இந்த வேணி இந்த இளைஞனின் மனைவியோ? உள்ளம் கவர்ந்தவளோ? உடன் பிறந்து உயிராயிருப்பவளோ? ரூபா திரும்பிச் செல்லுகையில் காரிலேயே உறங்கி விட்டாள்.