4

     மலைகளைச் சுற்றிச் சுற்றிப் பாம்பு போல் நெளிந்து செல்லும் சாலைகளின் நாடி பார்க்கும் குமார், அன்று இல்லத்துக்குத் திரும்பிய போது இரவு ஒன்பதடிக்கும் வேளையாக இருந்தது. நகரின் கோலாகலங்களை வாயிலில் உள்ள சலவைக்கல் மேடையில் உட்கார்ந்து பார்க்கும்படி, அந்த இல்லம் ஒரு மேட்டில் அமைந்திருந்தது. கீழே சாலையிலிருந்து சரிவாக அமைந்த படிக்கட்டுகளில் ஏறி, அழகிய பூங்கொடிகளாலமைந்த வளைவு வாயிலையும் கடந்து செல்லு முன்பே வீட்டில் விருந்தினர் வந்திருக்கும் செய்தி குமாருக்கு எட்டி விட்டது.

     ஜீப் சாலையிலேயே அவனை இறக்கி விட்டுச் சென்றது. கோட்டைக் கையில் போட்டுக் கொண்ட அவன் படிகளை அவசரமாகக் கடந்து உள்ளே சென்றான். முன்னறையில் தான் எல்லோரும் இருந்தார்கள்?

     “ஏன் இவ்வளவு நேரம் குமார்? நான் நேற்றே சொன்னேன். காலையில் வேறு நினைவுபடுத்தினேன்? வீட்டை விட்டு இறங்கி விட்டால் எதுவும் நினைவிலிருப்பதில்லை!” என்று அவனுடைய அம்மா சிவகாமிதான் கடிந்து கொண்டாள். சற்றே பருமனான தோற்றம் கொண்ட நடுத்தர வயதுப் பெண்மணிதான். ஆனாலும், முகத்தில் சுருக்கங்கள் விழுந்து, வயசுக்கு மீறிய தோற்றம் கொடுத்தது. கல்வியின் மறுமலர்ச்சியும், விசால மனப்பண்பும் அவளைப் பார்த்த உடனேயே எவருக்கும் புலனாகும்.

     “நமஸ்தே ஆன்டி ஜி!” என்று குமார் அங்கிருந்த இன்னொரு முதிய பெண்மணியைப் பார்த்துப் புன்னகை செய்தான். அந்த அம்மணியைப் பார்க்கையிலேயே மகாராஷ்டரத்தைச் சார்ந்தவள் என்று யாரும் கண்டு கொள்வார்கள். சிவகாமி அம்மாளின் நெருங்கிய சிநேகிதை அந்த அம்மாள். நாகபுரிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாக இருந்த அநுசூயா தேவி. இளவேனிலைக் கழிக்கத்தான் மலைவாசம் செய்ய வந்திருந்தாள். கொஞ்சம் எட்டி, குமாரைப் பார்த்தும் பாராமலும் சினம் கொஞ்சும் முகத்துடன் தவிக்கும் இளம் பெண் யாருமில்லை. அநுசூயாவின் நான்கு மகள்களில் ஒருத்தி, தூய வெண்ணிறப் பட்டுச் சேலை உடுத்தியிருந்தாள். நல்ல உயரம். சதைப் பற்றில்லாத உடற்கட்டுத்தான். இடது கையில் ஒரு கடியாரத்தையும், செவிகளில் வளையங்களையும் தவிர ஆபரணங்களே இல்லை.

     “குமார் நான் முன்பு நாலு வருஷத்துக்கு முன் பார்த்ததற்கு இப்போது மாறி விட்டான். அந்தச் சிறுபிள்ளைத்தனம் இல்லை... ஆனால், குறும்புத்தனம் போகவில்லை” என்று சிரித்தாள் அநுசூயா.

     “ரொம்ப நன்றி ஆன்டிஜி! எங்கே போய்விட்டது அதுவும் என்று சொல்வீர்களோ என்று பயந்தேன். நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள்? எனக்கு வந்திருப்பதே தெரியவில்லையே?”

     “நாங்கள் கூனூரில் வந்து தான் தங்கியிருந்தோம். எனக்கு இந்தக் குளிர் பிடிக்கவில்லை குமார். நான் நாளைக்கு ஊருக்குப் போகிறேன். நேற்றுத்தான் சிவகாமியைப் பார்த்தேன். நீ இங்கிருப்பதாக, இந்தப் பெண் அரை வார்த்தை மூச்சு விட வேண்டுமே? சண்டையா உனக்கும் அவளுக்கும்?”

     “அம்மா! எனக்குப் பசி கிள்ளுகிறது. சாப்பாட்டு உத்தேசம் ஏதேனும் உண்டா இல்லையா?” என்று வெடுக்கென்று கேட்டு விட்டு எழுந்தாள் அந்த இளம் பெண்.

     “ஓ... மன்னியுங்கள் டாக்டரம்மா! சோற்றுக் கோபம் தானா?” என்று கேட்டு விட்டு குமார் இரண்டெட்டில் உள்ளே பாய்ந்தான்.

     அடுத்த வினாடி, “ஆயா! ஆயா! ஆ...யா!” என்று அவன் கூப்பாடு போடும் குரல் கேட்டது.

     “இந்தக் காலத்து இளைஞர்களுக்குச் சகிப்புத்தன்மையே ரொம்பக் குறைந்து விட்டது. சிவகாமி” என்றாள் அநுசூயா.

     “அது இந்த விஞ்ஞான யுகத்தின் கோளாறு அநு, இளைஞர்களுக்கு மட்டும் இல்லை; நமக்குக் கூடத்தான் முன் போல் சகிப்புத்தன்மை இல்லையே?”

     அவர்கள் இருவரும் பள்ளித் தோழிகளாக இருந்து கல்லூரியிலும் தொடர்ந்து பழகியவர்கள். சிவகாமி ராணுவத்தில் பணியாற்றிய டாக்டர் கண்ணப்பனை மணந்து கொண்ட பின்னரே இருவரும் எப்போதாவது சந்திப்பதென்ற மாற்றம் வந்தது. எப்போதாவது சந்தித்தாலும் இருவரும் பழைய நாட்களையே பற்றிப் பேசுவார்கள். குமார் வருமுன்பும் அவர்கள் பழைய நாட்களைப் பற்றியே பேசிப் போரடித்தார்கள். அவன் வந்ததும் சில நிமிஷ இடைவெளி மீண்டும் அதையே தொடர்ந்ததும் ரூபாவுக்குக் கோபம் கோபமாகத்தான் வந்தது. எழுந்து வெளியே சென்றாள்.

     குமார் புழுதி போகக் குளித்து உடையணிந்து வருமுன், சாப்பாட்டு அறை மேஜையில் ‘ஆயா’ என்று அவன் அழைத்த மலையாளத்து அம்மை, தட்டுகளை வைத்துப் பரிமாறச் சித்தமானாள்.

     ஒன்பதரை மணியாகியிருந்தது அவர்கள் உட்காருகையிலே. முதியவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக இளவயதினர் இருவரும் எதிர் எதிராகவும் அமர்ந்தார்கள்.

     “ரூபா, ரொம்ப ரொம்பத் தயவு பண்ணி மன்னித்துக் கொள். அப்பா முன்பு ஒரு ‘புல்டாக்’ வளர்த்து வந்தார்... அதற்குக் கூட ரூபி என்று தான் பெயர் என்று நினைவு... இல்லையா அம்மா?” என்றான் குமார்.

     “இங்கே யாரும் ‘புல்டாக்’ மாதிரி இல்லை” என்றாள் ரூபா வெடுக்கென்று. “இன்னமும் சிறு பிள்ளைகள் போல் சண்டை போடுகிறார்களே?” என்று அநுசூயா சிரித்தாள். சிவகாமி மெள்ள ஜாடையாக “நீ அவர்களைக் கவனிக்காதே அநு. அவன் எதானும் அவளைக் கிண்டுவான். இல்லா விட்டால் அவள் வம்புக்கிழுப்பாள். இரண்டு பேரும் பேசிக் கொள்வதைக் கேட்டால் நமக்கு அவர்கள் பிள்ளைப் பருவம் தாண்டினாற் போலவே தெரியாது. இவன் பெரிய வேலைக்காரன். அவள் பொறுப்பும் பொறுமையும் அதிகமான டாக்டர். எப்படித்தான் ஆனார்களோ?” என்றாள்.

     ஆயா ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து பரிமாறிக் கொண்டிருந்தாள். ரூபா ஒன்றுமே பேசாததினால் அவன் கவனம் ஆயாவின் மீது சென்றது.

     “நம் ஆயா, பல சமயங்களிலும் கிழவியா, குமரியா என்று புரிவதில்லை. ஆயா? நீ மட்டும் பல் கட்டிக் கொண்டால், சினிமாத் தாரகைகள் கெட்டார்கள்...” என்றான்.

     ஆயா பொக்கை வாயைத் திறந்து சிரித்தாள்.

     “ஆமாம். ஆயாவுக்கு ஒரு முடி வெளுக்கவில்லை. எனக்கு வெளுத்து விட்டது... பல் எப்படி விழுந்தது?” என்று ஆராய்ச்சியில் இறங்கினாள் அநு.

     “ஆயாவுக்கு நம்மவ்வளவு வயசாயிருக்குமோ என்னமோ? ஆனால் நம் வீட்டுக்கு வரும் போதே ஆயாவுக்குப் பல் கிடையாது. இப்படித்தான் இருந்தாள். இருபது வருஷம் ஆகிறதா ஆயா, நீ வந்து?” என்று கேட்டாள் சிவகாமி.

     “பதினஞ்சு கொல்லமாயி” என்று ஆயா சிரித்தாள்.

     “ஆயாவுக்குப் பேரென்ன?” என்றாள் ரூபா திடீரென்று.

     “ஆயாவுக்குப் பேர் ஆயா” என்றான் குமார்.

     “ஆயாவென்று ஒன்றும் பேரில்லை. நீ வைத்த பேர் தான் அது. அதுவே நிலைத்து விட்டது. அவள் பேர் பாரு...”

     “பேரொன்னும் வேண்ட ஆயாவே மதி” என்று பின்னும் சிரித்தாள் ஆயா.

     “ஆயா இன்றைக்கு எதையோ நினைத்து நினைத்துச் சிரித்துக் கொள்கிறாள். என்ன ஆயா? பையன் வந்தானோ” என்று விசாரித்தான் குமார்.

     “பையன் வந்து போனால் சிரிப்பா வரும் அவளுக்கு? அது... நம் தங்கம் இல்லை, கிளி மூக்குத் தங்கம்?” என்று சிவகாமி திடீரென்று ஆரம்பிக்கவும் குமார் ரூபாவைப் பார்த்தான்.

     “அம்மா நாளையே ஊருக்குப் போய்விட்டால், நீயும் போய் விடப் போகிறாயா ரூபா” என்றான் மெதுவாக.

     “பின் இங்கே என்ன வேலை?”

     “ஓகோ இங்கே உனக்கு வேலையில்லையா? மறந்து போனேன். உன் பேஷன்ட்ஸ் எல்லோரும் மூச்சு விட ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாமே என்று யோசனை சொல்ல வந்தேன்...”

     “மிக அழகாகப் பேசி விட்டதாக யாரும் பெருமைப்பட வேண்டாம்” என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டு அவள் கைகழுவப் போனாள். அவள் முன்னறைக்குச் சென்றதைக் கண்டு அவனும் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவளைத் தொடர்ந்தான்.

     “ஒரு விஷயம்... தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த மாதிரி, உர் புர்ரென்று ஓர் அழகிய கழுதை, ஓர்... என்னைப் போல் ஒரு கழுதையுடன் சண்டைக்கு வந்தால்...”

     “இங்கே ஒருவரும் கழுதையில்லை. தெரிந்து கொள்ளட்டும். நான் நேற்றே ‘இன்று எட்டு மணிக்கு என்னை விட்டு விட வேண்டும் ஆன்டி’ என்று சொன்னேன். உன்னிடமும் தான் சொன்னாளாம். நீ வேண்டுமென்றே ஒன்பதரை மணிக்கு வந்தால் என்ன அர்த்தம்?”

     “அப்பப்பா, ஒரு டாக்டருக்கு இவ்வளவு கோபம் வந்தால் நோயாளிகளின் கதி என்ன ஆகும்?”

     “அதுதான், இம்மாதிரி அலட்சியம் செய்து கோபப்படுத்துகிறவர்களிடம் என் போன்றவர்கள் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவு கட்டினேன்.”

     “நிச்சயமாக நான் அலட்சியம் செய்யவில்லை. ரூபா... கேளேன்?”

     “நீ ஒன்றும் என்னைச் சமாதானப்படுத்த வேண்டாம். உன் சுபாவம் அது.”

     “அடாடாடா... ரூபா நிச்சயமாக உன்னை அப்படி நினைப்பேனா? உன்னை எவன் அலட்சியமாக நினைக்க முடியும்? பெரிய இடத்துப் பெண். ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்வதே லட்சியம் என்று சொல்லும் லட்சியவாதி. உன்னைப் போய், நான் எப்படி அலட்சியம் செய்ய முடியும்? விஷயம் இதுதான். வழியிலே ஒரு பெண் பஸ் தவறிப் போய் நின்று கொண்டிருந்தாள். ஒரு காலிக் கும்பல் பக்கத்திலே...”

     “எனக்கு ஒருவரும் கதை சொல்ல வேண்டாம்.”

     “அடடா... கதை இல்லை ரூபா, உண்மை. கேள் அந்தப் பெண் வேறு யாரோவாக இருந்தால் பரவாயில்லை. அதாவது உன்னைப் போல் என்று வைத்துக் கொள். நான் கவனித்தே இருக்க மாட்டேன். ஒரு அப்பாவிப் பெண், பாவம். பேசவே வெட்கப்படும். இரைந்து பேசினால் அழுகை வந்து விடும்... நான் எப்படி விட்டு விட்டு வரட்டும் சொல்லு.”

     “நீ இந்தக் கதை எல்லாம் அளக்க வேண்டாம் குமார், நான் ஸீரியஸ்ஸாகச் சொல்கிறேன். நம் அம்மாக்கள் இப்படிப் பழைய காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டு நண்பர்களாக இருக்கட்டும். சில லட்சியங்களுடன் கல்யாணம் செய்து கொள்வது சுதந்திரத்தைப் பாதிக்குமென்று நம்புகிறேன்” என்றாள் சிம்னியைப் பார்த்துக் கொண்டு ரூபா.

     குமாரும் தீவிரமாகத்தான் இருக்க முயன்றான். “நான் என்னமோ, உன்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்க வந்தாற் போல் பேசுகிறாயே? உண்மையில் நான் கூட உனக்கு ஒரு விஷயம் தீவிரமாகத் தெரிவிக்க இருந்தேன். ‘பார்டர் ரோட் புரஜக்ட்’ தெரியுமா? இளம் இன்ஜினீயர்களை அழைத்திருக்கிறார்கள். நானும் தான் சில லட்சியங்கள் கொண்டிருக்கிறேன். தெரிந்து கொள்...”

     ரூபாவின் முகத்தில் இப்போது கோபமில்லை. அவன் சொல்லுவது பொய்யா, மெய்யா என்று பரிசீலனை செய்பவள் போல் அவனையே பார்த்தாள். “கல்யாணம் பண்ணிக் கொண்டால் ஒன்றிரண்டுக்கேனும் அம்மாவாக வேண்டும். பிறகு அந்த அப்பாவாகிறவரின் மனசரிந்து போக வேண்டும். இதெல்லாம் லட்சியங்களுக்கு ஒத்து வருமா?” என்றாள் குறுநகையுடன்.

     “கஷ்டம் கஷ்டம்! இந்தக் கழுதைக்கு வெட்கமேயில்லை!” என்று குமார் திரும்பிக் கொண்டான்.

     “டாக்டராகு முன் வெட்கப் படுவதை விட்டு விட வேண்டும். அவர்களுக்கு வெட்கப்பட இரகசியமே கிடையாது” என்றாள் ரூபா சிரித்துக் கொண்டு.

     “எனக்கு டாக்டர், லட்சியம் என்று ஒரு கழுதையையும் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமில்லை. நான் ஒரு வேளை கல்யாணம் செய்து கொண்டால்...”

     “எந்தத் தலைக் கிறுக்குப் பிடித்த இன்ஜினீயரும் அப்படி எந்தக் கழுதையும் எதிர்பார்ப்பதாக எண்ண வேண்டாம்!” என்று மொழிந்த ரூபா, “ஆன்டீ எனக்குத் தூக்கம் வருகிறது” என்று கூவினாள்.

     குமார் உடனே “ரொம்ப சரி, குட்நைட். காலையில் நானும் எழுந்திருக்க வேண்டும்” என்று அங்கிருந்து அகன்றான் சிரித்துக் கொண்டே.