![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் |
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள் (1981) |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
ஒட்டகம் (Camel) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 9 |
9 வேணி பஸ்ஸிலிருந்து இறங்கி கையில் சாவி வளையத்தை ஆட்டிக் கொண்டு வேகமாக நடந்து வருகையிலே மணி ஆறே முக்கால். அவள் தாமதித்து வந்ததற்குக் காரணம் இருந்தது. இனி உதகைக்கு திரும்ப பஸ் ஏதும் கிடையாது. பூபதி வந்திருந்தாலும் தங்கி இருக்க மாட்டான். ஆனால், வாயிலை நெருங்கியதும் அவள் கால்கள் தடுமாறின. வீட்டில் விளக்கெரிந்தது. பூபதி வாயிலில் நின்றான். வேணி விடுவிடென்று உள்ளே புகுந்தாள். சில்லென்ற நீரைக் கால்களில் ஊற்றி கழுவிக் கொண்டு திரும்புகையில், அந்தச் சில்லிப்பு குளிர் மின்னற் கொடி போல் உடலெங்கும் ஓடி அதிர்ச்சியூட்டியது. பூபதி வாயிற் கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்டிருந்தான். அவள் காட்டானையைக் கண்டு விட்டாளா? அல்லது கடும் புலிதான் எதிரே நிற்கிறதா? காட்டானை கடும் புலியாக இருந்தால், ஓவென்றலறி ஊரைக் கூட்டலாம். ஊரே அவளுக்குத் துணையாகக் கூடும். இப்போது அதைச் செய்ய முடியாதல்லவா? பூபதியின் எரிச்சல் தெரியாத வண்ணம் ஒரு சிரிப்புச் சிரித்தான். “ஏன் இப்படி ஷாக் அடித்தாற் போல் நின்று விட்டாய் வேணி?” அவனுடைய உரிமையுணர்வில் ஏற்பட்ட பங்கம் அவனுள் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவன் தன்னுடைய பலவீனத்தை உணர்ந்திருந்தான். வேணி அப்போது சற்றே இணக்கமாக நடந்து கொண்டிருந்தால், அவன் தான் கண்ட காட்சியில் விஷமில்லை என்று மனம் தேறிக் கூட இருப்பான். உண்மையில் அவ்வித ஆறுதல்களுக்காகவே அவள் துடித்துக் கொண்டிருந்தான் என்று கூடச் சொல்லலாம். ஆனால், வேணி அவனை ஏறெடுத்து நோக்கவில்லை. “வாயிற் கதவை ஏன் சாத்தினீர்கள்? அவசியமில்லையே?” என்றாள். “ஓகோ? நான் அவசியம் என்று கருதுகிறேன். இங்கே அண்டை எதிர் வீடுகள் மிக நெருக்கமாக இருக்கின்றன. நமக்குள் நடக்கும் பேச்சு வார்த்தைகளை எல்லோரும் ரசிக்க வேண்டாம் என்று சாத்தினேன்!” என்றான் பூபதி. அவனுடைய விஷமமான மறுமொழி அவள் கோபத்தைக் கிளறி விட்டது. “திறந்து விடுங்கள், சொல்கிறேன்! நமக்குள் அண்டை அயல் ரசிக்கும்படியான பேச்சு வார்த்தைகளுக்கு இடமேயில்லை!” கோபம் விழிகளில் தெறித்தாலும் அவளால் அவனை மீறிச் சென்று வாயிற்கதவைத் திறக்க இயலவில்லை. சிறைப்படுத்தப் பெற்ற புறாவைப் போல் துடித்தாள். “இருக்கிறது வேணி, இருக்கிறது” என்றான் பூபதி. “இல்லை, இல்லவே இல்லை. நீங்கள் இங்கே வந்தது பண்புக் குறைவு. அதிலும் இவ்விதம் நடந்து கொள்வது முற்றிலும் சரியில்லை. மரியாதையாகக் கதவைத் திறந்து விட்டுப் பண்புடன் நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவமானம்” என்று பொங்கி வெடித்தாள் அவள். “நானும் அதையேதான் சொல்கிறேன். வீணாகக் கத்தினாலோ கூவினாலோ, அது உனக்குத்தான் அவமானம். அதை மனசில் எண்ணித்தான் நான் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறேன். இந்த நிமிஷத்தில் நான் எப்படி அமைதியாக இருக்கிறேன் என்பது எனக்கே வியப்பு...” வேணி நடுநடுங்கி நின்றாள். அந்தச் சிறு வீட்டுக்கு வாயிற் கதவு தவிர, பின் வாசல் கூடக் கிடையாது. அத்தையும் மாமாவும் அவள் விலாசத்தை அவனிடம் கொடுத்து, இப்படியும் ஒரு சோதனையை ஏற்படுத்துவார்களோ? கண்ணீர் தான் அவளுக்குப் பொங்கி வந்தது. பூபதி இன்னமும் அருகில் வந்தான். “எதற்கு அழுகிறாய் வேணி? நீ அழுது பார்க்க நான் வரவில்லை. நீ என் முன் காட்சி சமைக்க வேண்டாம்” அவன் தன் கண்ணீரைத் துடைத்து விடுவானோ என்றஞ்சி அவள் அவசரமாக அந்தத் தோல்விச் சின்னத்தைத் துடைத்துக் கொண்டாள். “பின் எதற்கு இங்கு வந்தீர்கள்? ஒரு பெண் தனியாக இருக்கும் இடத்தில், இரவு தங்கும் நிர்ப்பந்தத்தை வீணாக ஏற்படுத்திக் கொள்ள வந்திருப்பதுதான் நீங்கள் பல நாட்கள் படித்துக் கற்றுக் கொண்ட பண்பா?” அவள் ஆத்திரத்துடன் இதைக் கேட்டபோது, ஏற்கெனவே பங்கப்பட்டிருந்த அவனுடைய உரிமை உணர்வு இன்னமும் வேதனைக் குள்ளாயிற்று. “நீ படித்து, உத்தியோகம் செய்து கற்றுக் கொண்டு நடக்கும் அரிய பண்பைக் காட்டிலும், என் பண்பு மோசமாகி விடவில்லை என்று தான் யாரும் சொல்வார்கள். புரிந்ததா? தனியாக இங்கே இருக்கும் பெண் யார்? எனக்கு முக்காலே அரைக்காலும் உரிமையாகி விட்டவள். ஊரறியச் செய்யும் சடங்கு தான் செய்யவில்லை. எனக்கு மனைவியாக இருக்கும் பெண்ணை, நான் இந்தப் பக்கம் வரும் போது பார்க்க வந்தது தவறென்று யாரேனும் சொல்பவராக இருந்தால் அவரைக் கூட்டிவா. உன் தந்தை சொல்வாரா? என் தந்தை சொல்வாரா? அம்மா சொல்வாளா?” “அவர்கள் சொல்வதற்கு முன் நான் சொல்கிறேன்” என்று வேணி கூறிய போது, பூபதி உண்மையாகவே திடுக்குற்றான். “ஏன் ஏனென்று கேட்கிறேன். இங்கே வேலை செய்கிறேன் என்ற பெயரில் ஜீப்பில் எவனுடனோ சுற்றுவதை நான் கண்டு விடுவேன் என்ற பயமோ?” என்று துள்ளினான். அவள் ஒரு கணம் அசைவற்று நின்றாள். “...பண்புக்குரியவளே? ஏன் ஊமையாகி விட்டாய்? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிந்தால் மனமுடைந்து போவார்கள். நல்ல வேளையாக பஸ்ஸிலிருந்து இக்காட்சியை அவர்கள் காணாமல் நான் கண்டேன். அவர்கள் மானத்திற்கஞ்சிப் பிழைப்பவர்கள். உன்னை மிக மிக உயர்வாக நினைப்பவர்கள். அவர்களுக்கு நீ மதிப்புக் கொடுப்பதற்காக இருந்தால் இந்த வேலைக்கு இன்றே தலை முழுகிவிட்டு நீ ஊர் வந்து சேர வேண்டும்...” என்றான் நெருப்புக் கோடு கிழித்தாற் போல். “வீண் அபவாதம் கூறும் வாயைக் கழுவிக் கொள்ளுங்கள்! நீங்கள் சகோதரிகளுடன் பிறந்தவர் - வேலை செய்ய ஒரு பெண் வெளியிறங்கினால் அபாண்டப் பழி ஏற்றுகிறீர்களே! உங்களுடனும் சகோதரிகள் வேலை செய்பவர்களில்லையா?” “ஜீப்பில் காதல் மொழிகள் பேசிக் கொண்டு செல்லுமளவுக்கு எனக்கு நாகரிகப் பண்பு கிடையாது வேணி” என்று கிண்டலாக அவன் நகைத்தான். “நிறுத்துங்கள்! இது அபாண்டம். பஸ் தவறிவிட்டது. அவர் என்னை வீட்டில் கொண்டு விட்டுப் போனார். பின் பகுதியில் சாமான் இருந்தது. இம்மாதிரி என் மீது பழி போட உங்களுக்கு அதிகாரம் யாரும் வழங்கவில்லை” என்றாள் வேணி ரோசமாக. “நிச்சயமாக அதிகாரமுண்டு. நான் மணந்து கொள்ளப் போகும் பெண் நீ. எனக்கும் தன்மானம் உண்டு. வேணி, நிச்சயமாக இது விளையாட்டில்லை. நான் தீவிரமாகச் சொல்லுகிறேன். நீ வேலை செய்வதில் எனக்கு விருப்பமில்லை. சந்தர்ப்பங்களைச் சுயநலத்துக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் கழுகுகளிடையே என் வருங்கால மனைவி உலவக்கூடாது...” “எல்லோரையும் உங்கள் கண்களால் பார்க்க வேண்டாம்?” “வேணி!” என்று கத்தினான் பூபதி. “நிச்சயமாக என்னால் இதைப் பொறுக்க முடியாது.” “உங்கள் குறுக்கீடு நியாயமற்றது. நீங்கள் அபாண்டப் பழி சுமத்துகிறீர்கள். கதவைத் தாழிட்டு, கீழான நோக்குடன் இங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள்...” பூபதியின் உள்ளம் அலை பாய்ந்தது. அபாண்டப் பழி என்று சொன்னாலும், அவள் ஏன் அவனை ஒப்புக் கொள்ளவில்லை? “வேணி இப்படி வந்து உட்கார். உண்மையில் நீ எதற்காக என்னைக் கண்டு அஞ்ச வேண்டும்? நீ என்னை மதிப்பவளாக நடந்து கொண்டால் நிச்சயமாக உனக்கு மரியாதைக் குறைவை ஏற்படுத்த மாட்டேன்” அவன் இறைஞ்சினான். அவள் அவன் கையை உதறித் தள்ளினாள். “வேணி! வேணி! நான் உன் மீது உயிரையே வைத்திருக்கிறேன். நீ இப்படி உதறுவதன் மூலம் என் மனசைப் புண்ணாக்குகிறாய். நான் சத்தியமாகச் சொல்கிறேன் வேணி, உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. நான் பொறுப்பற்றவனாக நடந்து கொண்டு இருக்கலாம். சிறுபிள்ளைத்தனமாக வீட்டில் சண்டையிட்டிருக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் நான் இப்போது வருந்துகிறேன். நீ என்னைத் தாழ்வாக நினைக்கக் கூடாது. என்னைப் புரிந்து கொள்கிறாயா வேணி?” தன் உயர்நிலையிலிருந்து இழிந்து அவன் கெஞ்சினான். ஆனால், அவள் அந்த அன்பின் ஆழத்தை, உரிமையுணர்வின் பற்றுதலைப் புரிந்து கொண்டிருக்கவில்லை. “அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? நீங்கள் இப்படி எல்லாம் சூழ்ச்சி வலை பின்னிச் சந்தர்ப்பத்தைச் சிக்க வைத்து, என்னை அச்சுறுத்துகிறீர்கள். பிறகு வருந்துகிறேன் என்றால் என்ன பொருள் அதற்கு?” “வேணி, நான் பரீட்சையில் தவறியவன் என்று நினைப்பாய். நிச்சயமாக இந்த நிமிஷமே உறுதி கொண்டிருக்கிறேன். நான் எப்படியும் வாழ்க்கையில் முன்னேறுவேன். உத்தியோகத் துறையில் ஓர் உயர்ந்த பதவியை எட்டிப் பிடிக்க இந்த நிமிஷத்திலிருந்து நான் முயற்சி செய்வேன். நீ என்னை நம்பு. அந்த வேலை உனக்குத் தேவையில்லை. நாளைக்கே இதற்குத் தலைமுழுகி விடுகிறேன் என்று மட்டும் சொன்னால் போதும்.” அவன் முகம் ஆதூரத்துடன் அவளை நெருங்கியது. “உங்கள் முடிவுக்கு மிகவும் நன்றி... ஆனால்... வேலையை உதறும் உத்தேசம் எனக்கு இல்லை. நீங்கள் என் சுதந்திரத்தில் இப்போது அநாவசியமாகக் குறுக்கிடுவதாக எண்ணுகிறேன்...” இப்படி அவள் கூறிய போது, பூபதிக்குத் தன் காலடிப் பூமி நழுவி விட்டாற் போல் இருந்தது. அவள் அப்படியானால்... அந்த... அவனைக் காதலிக்கிறாளா? அந்த அழகுப் பல்வரிசை - அவன் முகம், கவர்ச்சியானதென்ற உண்மை விழுங்கவே முடியாததாக இருந்தது. “வேணி!” என்று பொங்கி எழுந்த பூபதியைப் பார்க்க அவளுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த துணிவும் கரைந்து போயிற்று. “உன்னை இந்த நிமிஷத்தில் என்னுடையவளாகச் செய்து கொள்ள முடியும். ஆனால் நீ நினைப்பவன் போன்றவனல்ல நான். ஆனால் இன்று நீ என்னை அவமானம் செய்யும் பலனை உணரச் செய்யாமல் நான் விடமாட்டேன்! உன் கழுத்தில் நான் தாலி கட்டியே தீருவேன். உன்னை எண்ணி எண்ணி கண்ணீர் விடச் செய்வேன். நீ புரிந்து கொள்வாய், என்னை!” தீப்பொறிகளை உதிர்த்தாற் போல் சொற்களைக் கொட்டிவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு அவன் வெளியேறினான். திறந்த கதவை மூடத் தெரியாமல் வேணி பேயறையப் பட்டாற் போல் நின்றாள். |