சிலையும் நீயே சிற்பியும் நீயே 10. “ஆள் பாதி! ஆடை பாதி!” “உங்களின் திருப்திக்காக உணவு உண்ணுங்கள். மற்றவர்கள் திருப்திக்காக ஆடை அணியுங்கள்” என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின். ஆம்... சாதனை மனிதராக உங்களை உருவாக்கிக் கொள்ள விரும்பும் நீங்கள், உங்கள் குறிக்கோளில் முன்னேறி சாதனைச் சிகரத்தை எட்டுவதற்கு, சாதனைப் படிக்கட்டுகளில் அன்றாடம் ஏற வேண்டி இருக்கிறது. அப்போது சாதனைப் படிக்கட்டுகளில் ஆங்காங்கு வீற்றிருக்கும் சாதனையாளர்கள் சிலரை சந்தித்தாகவும் வேண்டியிருக்கிறது. ஆமாம். நீங்கள் சந்திக்கச் செல்லும் மனிதர்கள் சாமான்ய மனிதர்கள் அல்ல. அவர்கள் திறமையில், உழைப்பில் முன்னேறி ஒரு தகுதியில் அமர்ந்துள்ள கனவான்கள். அவர்கள் முன் நீங்கள் உங்கள் முயற்சிக்காகச் செல்லும் போது அவர் மனதில் உங்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படம் வேண்டுமே எனும் ஆதங்கம் மனதின் அடித்தளத்தில் ஒட்டிக் கொண்டிருக்க நீங்கள் அவரைக் காண அவர் அறைக்குச் செல்கிறீர்கள். “தலையில் கிரீடம் அணிந்த சக்கரவர்த்திக்குக் கிடைக்கும் மரியாதையில் பாதியளவு கூட இரவுத் தொப்பி அணிந்த அதே சக்கரவர்த்திக்குக் கிடையாது” என்கிறார் கோல்ட் ஸ்மித். நிறைய இடங்களில் உங்களுக்கே அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். - மடிப்புக் களையாத பளிச் உடையுடன் நிமிர்ந்த நடையுடன் டக்... டக்... என்று நீங்கள் ஒரு அலுவலகத்திற்குள் வரும் போது வாட்ச் மேன் ‘வாங்க ஸார்’, ‘வாங்க மேடம்’ என்று வரவேற்று மேனேஜர் அறை வரை கூட வந்து விட்டு வருவான். அதே நேரம் கசங்கிய உடையுடன், தளர்ந்த நடையுடன் வந்தாலோ ஸ்டூலை விட்டுக் கூட அவனைக் கிளப்புவது கஷ்டம். - மடிப்புக் கலையாத பட்டுப் புடவை சரசரக்க வரும்போது கோவிலில் கர்ப்பக் கிரஹம் வரை உங்களுக்கு ப்ரீ பாஸ்தான். - டிரஸ் வாங்க ஜவுளிக் கடைக்குச் செல்லும் போது கூட நீங்கள் மதிப்பாக டிரஸ் செய்திருந்தால் தான் கடைப்பையனும் மதித்து டிரஸ்களை எடுத்துக் காட்டுவான். இல்லாவிட்டால், ‘இவர் எங்கே வாங்கப் போறாரு?’ என்று மனதிற்குள் உங்களுக்கே ஒரு மதிப்பெண் அளித்துவிட்டு, அடுத்த ‘பளிச்’ உடை கஸ்டமரைப் பார்த்து ‘வாங்க ஸார்’ என்று பளிச் சிரிப்பை உதிர்ப்பான். இப்படிக் கோவில் முதல் கோட்டை வரை உங்களுக்கு மதிப்பெண் போட வைக்கும் உங்கள் உடைக்கு நீங்கள் மதிப்பளிக்காமல் இருக்கலாமா? “ஆடைகள் மனிதர்களை உருவாக்கவில்லை. ஆனால் வெகு தூரம் போராடி வெற்றியை எட்ட அவை நல்ல தொடக்கத்தைத் தரும்” என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர். ஆம் இவரது கூற்று ‘நெப்போலியன் ஹில்’லின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தையே பிரதிபலிப்பதாக இருக்கிறது. சரி, நேர்த்தியாக உடையணியத் தீர்மானித்து விட்டீர்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - முதலில் வயதுக்கேற்ற உடையணியுங்கள். வயது முதிர்ந்த ஒரு பெண்மணி லோ கட் ஜாக்கெட், லேஸ் வைத்த ப்ளவுஸ், மிக மெல்லிய புடவை இப்படி இளவயது போல் உடை அணிவது கேலிக்கு இடமளிக்கும். மாறாக, அவர் நல்ல ஆழ்ந்த வண்ணத்தில் காட்டன் புடவை அல்லது பிரிண்டட் பட்டு அணிவது மற்றவர் மத்தியில் ஒரு பெருமையைத் தேடித் தரும். - மற்றவரைக் கவர வேண்டும் என்பதற்காக ஒருபோதும் ஆபாச உடையணியாதீர்கள். லேட்டஸ்ட் மாடல் என்று சொல்லி தொலைக்காட்சி, சினிமா இவற்றில் வருவது போல் லேசாக ஆடைக்குறைப்பு செய்யாதீர்கள். உங்களை வேடிக்கைப் பொருளாக பாவித்து வேடிக்கை பார்ப்பார்களே தவிர மனதார மதிப்பளிக்க மாட்டார்கள். நன்கு உடலை மறைக்கும் ஆடைக்கு என்றுமே மதிப்பு தனிதான். - நீங்கள் அணியும் உடை உங்கள் உருவத்திற்கும் நிறத்திற்கும் பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். குள்ளமாக உள்ளவர்கள் குறுக்குக் கோடு போட்ட ஆடைகளையும், உயரமாக உள்ளவர்கள் நீளவாக்கில் கோடு போட்ட ஆடைகளையும் தவிர்க்கலாம். இளநீல நிறம், இளமஞ்சள் வண்ணம், க்ரீம் நிறம் போன்றவை எல்லா நிறத்தவருக்கும் ஏற்றது. நல்ல சிவப்பாக உள்ளவர்களுக்கு அடர்ந்த வண்ணமே அவர்கள் நிறத்தைச் சற்று வெளுப்பாக தூக்கிக் காட்டும். கறுப்பு நிறம் உள்ளவர்கள் அடர்ந்த வண்ணத்தையும், கறுப்பு நிறத்தையும் தவிர்ப்பதே நல்லது. பருமனானவர்கள் பெரிய பூப்போட்ட பெரிய கட்டம் போட்ட உடைகளைத் தவிர்ப்பதே நல்லது. - எந்த இடங்களுக்கு எந்த உடை பொருந்தும் என்பதைக் கவனித்து அணியுங்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்களுக்குக் காட்டன் துணிகளே ஏற்றவை. திருமணம் மற்றும் குடும்ப விசேஷங்களுக்குப் பட்டாடைகளே ஏற்றது. ஒரு கல்யாண வீடு களை கட்டுவதே கலர் கலராய் காஞ்சீபுரம் பட்டு சரசரக்க கலகலவென வளைய வரும் பெண்மணிகளால் தானே! மாலை நேர வரவேற்பு போன்றவைகளுக்கு கலர் சம்க்கி மற்றும் தங்க ஜரிகை வேலைப்பாடு உடைகள் ஏற்றது. - உயர் பதவியிலிருக்கும் ஒருவரை சந்திக்கச் செல்லும் போது எக்காரணம் கொண்டும் கசங்கிய ஆடை அணியாதீர்கள். உடையில் கவனமில்லாதவர் எதிலுமே சிரத்தையாக இருக்க மாட்டார் என்று பார்ப்பவரை உங்கள் தோற்றம் நினைக்கச் செய்யும். - பெரும் பொறுப்பான பதவியை வகிக்கும் ஆண்களுக்கு ‘பளிச்’ வெள்ளை நிற உடையே மதிப்பைத் தரும். பெண்களுக்கு இளம் மஞ்சள், இளம் நீல நிற உடை மதிப்பைத் தரும். பொதுவாக வெள்ளை, இள நீல நிற ஆடைகள் அடிக்கடி அணிவது கண்ணியத்தையும், பொறுப்புணர்வையும் அதிகரிக்கும். மேல் நாட்டு அறிஞர் ப்ரீஸ்ட்லி என்பவர் வாழ்க்கையில் நடந்த சிறு சம்பவம்: ப்ரீஸ்ட்லி ஒரு ஆடை அலங்காரப் பிரியர். நேர்த்தியான உடை அணிந்து மற்றவர்களைக் கவர வேண்டும் என்று நினைப்பவர். ஒரு நாள் அலுவலகம் முடிந்து திரும்பிய அவர் ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்று விலையுயர்ந்த நல்ல டிரெஸ் ஒன்றை எடுத்துத் தருமாறு கேட்டார். கடையில் உள்ள பணியாள் நல்ல உடுப்புகள் அனைத்தையும் எடுத்துக் காட்ட கடைசியில் ப்ரீஸ்ட்லி ‘க்ரிம்ஸன் ரெட் கோட்’ ஒன்றை செலக்ட் செய்து போட்டு அங்குள்ள கண்ணாடியில் பார்த்தார். இந்தக் கோட்டில் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று பார்த்துவிட்டு கழற்ற மனமின்றி கழற்றி அதை வாங்கிக் கொண்டு சென்றார். அடுத்த நாள் அலுவலகத்தில் வேலைப் பளு அதிகம் இருந்த நேரம். அந்தக் ‘கிரிம்ஸன் ரெட் கோட்’ அணிந்து டிப் டாப்பாகச் சென்றார். எல்லோரும் தன்னைக் கவனிக்கிறார்களா, ‘கோட்டை’ப் பற்றி விசாரிக்கிறார்களா, என்று மனதிற்குள் ஒரே ஆராய்ச்சி. கண்டும் காணாமல் இருப்பவர்கள் மேல் ஒரே கோபம். அன்று மாலை வீடு திரும்பினார். ப்ரீஸ்ட்லிக்கு தினமும் மாலை ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து தன்னைப் பற்றி அன்று தான் கவனித்த வேலை பற்றி சிந்தித்துப் பார்ப்பது வழக்கம். அன்று சிந்தித்துப் பார்த்த அவர் தன் பகட்டு உடையால் அன்று அலுவலக வேலைகள் அனைத்தும் பாதித்ததை எண்ணிப் பார்த்து தன் செயலுக்காக வருந்தினார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பொறுப்பான வேலையில் இருப்பவர்கள் வேலைப் பளு அதிகம் உள்ள நேரங்களில் கண்ணியமாக உடையணிவதே போதும். மிகவும் பகட்டான ஆடை அணிவது வேலையைப் பாதிக்கும். என்ன... உங்களைச் செதுக்கிக் கொள்ளும் சிற்பியாகிய நீங்கள் உங்கள் நேர்த்தியான, தனித்துவமான ஆடை மூலம் சிறப்பாக அடையாளம் கண்டு கொள்ளப்படுவீர்கள் தானே! சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|