சிலையும் நீயே சிற்பியும் நீயே 11. “அனுபவமே ஆசான்” “அனுபவம் ஆசான்களில் எல்லாம் மிகச் சிறந்த ஆசான். கட்டணம் தான் அதிகம்” என்கிறார் அறிஞர் கார்லைல். அனுபவம் பற்றி பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன்... நீங்களே கூட உணர்ந்து சொல்லியிருப்பீர்கள். “சே... சே... இந்த மோசமான அனுபவம் என் எதிரிக்குக் கூட வரக்கூடாது. நொந்து நூலாயிடுவான்.” “ரொம்ப இலேசா சொல்லிட்டீங்க. அனுபவிச்சவனுக்குத் தான் தெரியும் வலியும், வேதனையும்.” இவையெல்லாம் துயர அனுபவத்திலிருந்து வரும் வார்த்தைகள். “அந்தப் பெரிய காரிலே இயற்கைக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்கிட்டே மலைமேலே பயணம் செய்ல்வது நல்ல சுகமான அனுபவம்.” “போட்டியெல்லாம் முடிஞ்சு மேடை ஏறி ஜனாதிபதிகிட்டே அவார்ட் வாங்கினப்ப கிடைச்ச அனுபவம் இருக்கே... வாழ்நாள்லே மறக்க மாட்டேன்” - இவையெல்லாம் இன்பமான அனுபவத்திலிருந்து கூறப்படும் வார்த்தைகள். ‘சச்சா குட்ரி’ என்னும் அறிஞர் சொல்கிறார்: “நம்முடைய கெட்டிக்காரத்தனம் நமது அனுபவத்திலிருந்து விளைகிறது. நமது அனுபவமோ நமது முட்டாள்தனத்திலிருந்து விளைகிறது.” எனவே ஒவ்வொரு அனுபவத்தையும் நாம் வாசலில் நின்று வரவேற்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக அனுபவம் எனும் ஆசிரியர் தனது மாணாக்கர் ஒவ்வொருவருக்கும் தானே பாடம் கற்பிக்க நினைக்கிறார். அதனால்தானோ என்னவோ ஒவ்வொரு மனிதனும் தானாக அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் வரை யார் சொல்லியும் கேட்பதில்லை. மற்றவர் அனுபவங்களைப் பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை. “அவனை நம்பாதே... அவன் அப்பா காலத்திலிருந்தே அந்தக் குடும்பம் பத்தி எனக்குத் தெரியும். நம்ப வைத்துக் காலை வாரி விட்டுடுவான்” - தந்தை சொல்லும் போது காதில் வாங்காத மகன் பின்னால் அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்கிறான். “காதல் எல்லாம் உதவாது. காதலால் சீரழிஞ்ச குடும்பங்கள் எத்தனையோ நான் பார்த்திருக்கேன்” - தாய் சொல்லும் போது காதில் வாங்காத மகள் பிற்காலத்தில் ‘அனுபவம்’ மூலம் பாடம் கற்கிறாள். “அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் பரீட்சை வைக்கிறது. பிறகு தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறது” என்கிறார் வெர்னன் ஸெண்டர்ஸா எனும் மேலை நாட்டு அறிஞர். நம் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது என்பது ஒருபுறமிருக்க, மற்றவர்கள் அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய பாடம் கற்றுக் கொள்ளலாம். எவ்வாறு? - மற்றவர்களது அனுபவங்கள் பற்றித் தெரிந்து கொள்ள நிறைய உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும். - நான், என் வீடு என்றில்லாமல் சமுதாயத்தினரோடு நன்கு பழகி ஒன்றி வாழ வேண்டும். நன்கு பழக முன் வந்தால் தான் அவர்களும் தங்கள் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள். - வாழ்க்கையில் முன்னேறிய பலரின் அனுபவங்களைப் புத்தகங்கள் வாயிலாக அறியலாம். நம் இளைய தலைமுறையினரிடமும் இது பற்றிச் சொல்லி அனுபவ அறிவைப் புகட்டலாம். - வீட்டுப் பெரியவர்களை மதித்து நடந்து அவர்களது அனுபவங்களைக் கேட்டாலே பாதி உலக அறிவு வந்துவிடும். வயது முதிர்ந்த அவர்களுக்கு எத்தனையோ அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். நம் நிகழ்கால சம்பவங்கள் அவர்களது கடந்த கால அனுபவங்கள். அதனால் வீட்டுப் பெரியவர்களின் அனுபவ அறிவை உதாசீனப்படுத்த வேண்டாம். அவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். “நான் இப்ப சொன்னா கேட்க மாட்டே. அடிபட்டாதான் உனக்குப் புரியும். ஆம்... மனிதனது சுபாவமே இதுதான். மனிதன் நனைந்து போகும் வரை அவன் ஒரு குடிசை கட்டிக் கொள்ள மாட்டான். அவன் தலை இடித்து வீக்கிப் போகும் வரை குனிந்து, வளைந்து செல்லக் கற்க மாட்டான். வயது முதிர்ந்தவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை இதோ: ஒரு கிராமத்தில் ஒரு மிகப் பெரிய மைதானம். அதில் ஒரு தொழிற்சாலை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்காக பெரிய அலுவலர்களும், பொறியியல் வல்லுநர்களும், தொழில் அதிபர்களும் வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டனர். தொழிற்சாலை வாசற்பகுதி என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் ஒரு மிகப் பெரிய பாறாங்கல் இருந்தது. இதை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று யோசித்தனர். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தோன்றிய யோசனையைச் சொன்னார்கள். ஒரு என்ஜினியர் ஒரு டைனமைட் வெடிகுண்டு வைத்துப் பாறாங்கல்லை வெடித்து சிதற வைத்து அப்புறப்படுத்தலாம் என்றார். ஒருவர் பெரிய பெரிய துண்டுப் பாறைகள் ஆக்கி ‘கிரேன்’ மூலம் தூக்கி அப்புறப்படுத்தலாம் என்றார். இவர்கள் சொன்ன யோசனைக்கு நேரமும், பொருள் செலவும் அதிகமாக இருந்தன. நண்பகல் வந்தது. அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர், என்ன எல்லோரும் பேசிக்கிறாங்க என்று வினவ, பாறாங்கல்லை அகற்றுவது பற்றிப் பேசுவதாகச் சொன்னார்கள். அதற்கு இவர் “இதற்கு ஏன் இவ்வளவு யோசனை? பக்கத்திலேயே, பெரிய அளவில் பள்ளம் தோண்டி கல்லைத் தள்ளிவிட்டு, மண்ணால் மூடிவிட வேண்டியதுதானே” என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருந்தார். யோசிக்காமல் ‘டக்’ கென்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் ஆச்சரியத்தால் வியந்தனர். இதுதான் ‘அனுபவ அறிவு’ என்பது. அனுபவ அறிவு சக்தி வாய்ந்தது. ஏட்டுக் கல்வியால் பெற்ற அறிவை விட அனுபவத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்டது ஏராளம். எந்த வேலைக்கு நாம் சென்றாலும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துக் கேட்பது, “முன் அனுபவம் உண்டா?” “எத்தனை வருட முன் அனுபவம் இருக்கிறது?” என்பதே. ஏனெனில் அனுபவத்தின் மூலம் அந்த வேலையைப் பற்றி நன்கு தெரிந்திருப்பார்கள். அதன் நுணுக்கத்தைப் பற்றிய அனுபவ அறிவு அவர்களுக்கு இருக்கும். முதலிலிருந்து அந்தப் பணி பற்றி விளக்க வேண்டியது இருக்காது என்பதாலேயே முன் அனுபவம் பெற்ற பணியாட்களையே நியமிக்கிறார்கள். நம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நமக்கு அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதைப் போல, பிறருடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தும் பாடங்கள் கற்கலாம். தன் வாழ்க்கையில் சிறு வயதில் சின்னத் தப்புகளை, சின்னத் தவறுகளைச் செய்து, அந்தத் தவறுகளுக்காக வருந்தி இனிமேல் அந்தத் தவறுகளைச் செய்வதில்லை என்று சபதம் எடுத்து அதன்படி வாழ்ந்தவர் நம் மகாத்மா. இதை அவரது சுய சரிதை நூல் மூலம் அறியலாம். அமெரிக்கர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களைப் புத்தகம் வாயிலாக அறிந்த ஒரு இளைஞனின் மனதில் அமெரிக்காவில் அடிமை விலங்கைத் தகர்த்தெறிய வேண்டும் என்னும் வைராக்கியம் பிறந்தது. பிற்காலத்தில் அதற்காகப் பாடுபட்டு வெற்றி கண்டவர் தான் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன். காரல் மார்க்ஸ் எழுதிய ‘தாஸ் கேபிடல்’ கம்யூனிஸ புரட்சி எண்ணத்தை லெனினின் மனதில் விதைத்தது. எனவே, எந்தவொரு துறையில் நீங்கள் சாதனை புரிய விரும்பினாலும், வேதனையான அனுபவம் நிகழ்ந்து விடுமோ என்று நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு பின் வாங்காதீர்கள். எந்த ஒரு முயற்சியும் ஒன்று வெற்றியில் முடியும் அல்லது நல்ல அனுபவத்தில் முடியும் என்று எண்ணுங்கள். ஒரு வாடாத புகழ் மணத்துடன் கூடிய ஒரு வெற்றி மாலை உங்கள் கழுத்தில் விழ வேண்டுமானால் அந்த வெற்றி மாலை, ‘அனுபவம்’ எனும் கதம்ப மலர்களால் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். உலக வரலாற்றில் உங்கள் பெயர் ‘சாதனையாளர்’ என, அழியாத வண்ணம் பொறிக்கப்பட வேண்டுமென்றால் அனுபவம் எனும் உளியின் அடிகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும். அனுபவம் என்பது ஒரு விளக்கு. அந்த விளக்கின் ஒளி கொண்டு தான் வாழ்க்கைப் பாடத்தை நமக்கு விளக்குகிறார் ‘இறைவன்’ எனும் ஆசிரியர். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும் இறைவன் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்:
“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன், ‘பிறந்து பார்’ என இறைவன் பணித்தான். “இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன். ‘இறந்து பார்’ என இறைவன் சொன்னான். “மனையாள் சுகம்” யாதெனக் கேட்டேன். ‘மணந்து பார்’ என இறைவன் பணித்தான். “அனுபவித்தே அறிவது வாழ்வெனின் இறைவா நீ ஏன்?” என்றேன். இறைவன் சற்றே அருகில் வந்து “அனுபவம் என்பதே நான் தான்” என்றான். எனவே, ஒவ்வொரு அனுபவத்தையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|