உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சிலையும் நீயே சிற்பியும் நீயே 8. திறமைகள் துருப்பிடிக்கலாமா? “திறமை” - ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவனால் விதைக்கப்பட்டு, ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு உன்னதமான விஷயம் திறமை. தனக்குள் இருக்கும் திறமையைத் தேடிக் கண்டுபிடித்தவன் முன்னேறி சாதனையாளனாகிறான். தன் திறமையைத் தானே அறியாதவன் சாமான்யனாகிறான். சாமான்ய நிலையிலிருந்து சாதனை நிலைக்கு உயர்த்தப்பட விரும்புகிறீர்களா? இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களுக்குள் உள்ள திறமையைத் தேடிக் கண்டு பிடியுங்கள். திறமை என்பது ஆண்டவன் அளித்த வரப்பிரசாதம். அந்தத் திறமையை சரியாகக் கண்டுபிடித்து முன்னேறி சாதனை புரிவது நிச்சயமாக அவரவர் கையில் தான் இருக்கிறது. “எல்லாப் பறவைக்கும் இறைவன் இரையை அருளியிருக்கிறான். ஆனால் எந்த ஒரு பறவைக்கும் இரையை அதன் கூட்டினுள் கொண்டு போய் வைப்பதில்லை” என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர். உங்கள் திறமையை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? உங்களுக்கு ஓவியத்தில் திறமையா? எழுதுவதில் திறமையா? விளையாட்டில் ஆற்றலா? அல்லது விஞ்ஞானத்தில் ஈடுபாடா என்று நீங்களே கண்டுபிடியுங்கள். உங்கள் திறமையை உங்களை விட மதிப்பிடுபவர் யாரும் இருக்க முடியாது. பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ உங்கள் திறமை பற்றி மதிப்பிடுவதைக் காட்டிலும், உங்களால், உங்களால் மட்டுமே உங்கள் திறமையை மிகச் சரியாக மதிப்பிட முடியும்.” சரி, உங்கள் திறமையைக் கண்டறிந்து விட்டீர்கள். அதை வளர்த்துக் கொள்வது எப்படி? - உங்கள் திறமைக்காக, அதை வளர்த்துக் கொள்வதற்காக, தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். ‘நாள் தவறாமல்’ என்பது முக்கியம். ஒரு நாள் திறமைக்காக பயிற்சி செய்துவிட்டு, ஒரு வாரம் அதைப் பற்றி நினைக்காமல் இருந்து பயனில்லை. உங்கள் திறமைக்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தில், மற்றவர் குறிக்கீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். - மற்றவர் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். விமர்சனம் செய்வது எளிது. விமர்சிப்பவருக்கு அந்தத் துறையில் எவ்வளவு தூரம் ஆற்றல் இருக்கிறது. உங்கள் திறமையை விமர்சிக்க இவர் தகுதியானவர்தானா என்று யோசித்துப் பாருங்கள். தகுதியில்லாதவர் என்னும் பட்சத்தில் அவர் கூற்றை முற்றிலுமாக நிராகரித்துவிடுங்கள். பதில் சொல்லி, உங்கள் தரப்பில் பேசி அனாவசியமாக நேரத்தை வீணாக்காதீர்கள். - உங்களுக்கு ஆலோசனை கூறும் நபர் மிகச் சரியானவர் எனும் பட்சத்தில் அவரது ஆலோசனைகளை நன்கு கேட்டு கடைப்பிடியுங்கள். ஏனெனில் குறிப்பிட்ட துறையில் அவருக்கு அனுபவ அறிவும் அதிகம் இருக்கலாம். நம் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்பதைப் போல மற்றவர் அனுபவங்களிலிருந்தும் நாம் நமக்குத் தேவையான பாடங்களை எடுத்துக் கொள்ளலாம். - உங்களுக்கு நல்ல திறமை இருந்து முன்னேறுவதில் ஆர்வமும், முயற்சியும் இருந்தால் வறுமை, நோய், உடல் ஊனம் எதுவும் நிச்சயமாக பாதிக்காது. திறமை இருந்தால் வறுமையையும் நிச்சயமாகப் போக்கிவிடலாம்.
“வறுமையைக் கண்டு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே” எனும் திரைப்படப் பாடல் வரிகளை நினைவு கூறுங்கள். வறுமையைத் திறமையே போக்கியது என்பதற்கு நார்வே நாட்டுக் கவிஞர் “இப்சன்” ஒரு எடுத்துக் காட்டு. இவர் சாதாரண மருந்துக் கடையில் வேலை பார்த்த போது வறுமை வாட்டி எடுத்தது. முப்பது வயதிலேயே வாழ்க்கை முடிந்து விடுமோ என்று துவண்டார். வறுமை பற்றிய தனது உள்ளக் குமுறல்களையே கவிதையாக்கி வெளியிட, அது பலரையும் கவர்ந்தது. நாடகங்களுக்கிடையே இவரது பாடல்கள் பாடப்பட்டு மக்களை ரசிக்க வைத்தது. பிறகு இவர் புகழ் பெற்ற நாடக ஆசிரியரானார். தனக்குள் இருந்த கவிதை எழுதும் திறமை அவர் வறுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பெருமை மிக்க கவிஞரானார். வறுமை நீங்கியதுடன் அவர் வாழ்நாளும் கூடியது. இறக்கும் பொழுது அவருக்கு வயது 78. இவர் மட்டுமா? வறுமை இருக்கிறதே என்று துவளாமல் தங்கள் திறமையைப் பெருக்கி முன்னுக்கு வந்தவர்களை இப்போது நினைவு கூர்வோமா? அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரஹாம் லிங்கன் ஒரு ஏழை விறகு வெட்டியின் மகன். ஏன்... நம் ஜனாதிபதி மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் மீனவர்களுக்குப் படகு செய்து கொடுக்கும் நடுத்தரக் குடும்பத்தில் ஏழாவது மகனாகப் பிறந்தவரே! “மூக்குக் கண்ணாடி” முதல் “இயர் புக்” வரை பல்வேறு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த பெஞ்சமின் ப்ராங்க்ளின் மெழுகுவர்த்தி செய்து விற்கும் வியாபாரியின் மகன்! சோவியத் யூனியனின் தலைவராக உயர்ந்த ஸ்டாலின் செருப்பு தைக்கும் ஏழைத் தொழிலாளியின் மகன்! உலகில் முதல் பில்லியனராக, தன் பொருளாதார நிலையில் ஒரு சாம்ராஜ்யமாக உயர்ந்த ஜான்.டி.ராக்பெல்லர் ஒரு குமாஸ்தாவின் மகனே! தனது ஒன்பதாவது வயதில் பசிக் கொடுமையால் ஒரு இசைக் குழுவில் வேலைக்குச் சேர்ந்தவர் தான் சார்லி சாப்ளின்! இப்படி எத்தனையோ உதாரணங்கள். வறுமை மட்டுமல்ல, திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் முழுதாக மனம் வைத்தீர்களானால், உடல் ஊனத்தின் பாதிப்பு கூட உங்களுக்குத் தெரியாது. உடல் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் தன் திறமையாலும், முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர்களில் முதன்மையானவர் ஹெலன் கெல்லர். பிறவியிலேயே பார்வையும், கேட்கும் திறனும், பேசும் திறனும் இல்லாமல் பிறந்த ஹெலன் கெல்லர் தன் திறமையிலே நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால் சாதனை புரிந்திருக்க முடியாது. கடும் பயிற்சியால் எழுதப் படிக்கக் கற்று 14வது வயதில் இளங்களைப் பட்டம் பெற்றதுடன் லத்தீன், பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளையும் கற்றுத் தேறி 19 வயதிலேயே தன் வெற்றியை ‘எனது சுயசரிதம்’ எனும் பெயரில் நூலாக எழுதி வெளியிட்டார். தனது 88 வயது வரை சிறந்த சமூக நலத் தொண்டராகப் பணியாற்றினார். இன்றைய முன் உதாரணங்கள் சிலவற்றைப் பார்ப்போம். தன் வயலின் இசைத் திறனால் இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த வயலின் இசை மேதை சந்திரசேகர் பார்வையற்றவரே! செயற்கைக் கால் பொருத்தி நடனமாடும் சுதா சந்திரன் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. - சிலருக்குத் திறமை இருந்து, வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ‘டக்’ என்று வளர்ச்சி பாதிக்கப்பட்டு ஒரே இடத்தில் நின்று விடுவார்கள். இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் அவர்களுக்கு ஆணவம், கர்வம் தலை தூக்கியது என்று தெரிந்து கொள்ளலாம். ‘தனக்குத் தான் எல்லத் திறமையும் இருக்கிறது மற்றவர்கள் நம்மை நாடி வரட்டும்’ என்னும் ஒரு ஈகோவால் நிறைய வளர்ச்சி வாய்ப்புக்களை இழந்து விடுகிறார்கள். எனவே, கர்வம் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்கும் போது உங்களை விட உயர்ந்த, சாதித்த பலரை நினைத்துப் பாருங்கள், நீங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் உயர வேண்டும் என்பது உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். மேலும் இந்தத் திறமை ஆண்டவன் கொடுத்தது. இதன் வளர்ச்சியும், வெற்றியும் ஆண்டவனுக்கே என்று நினைத்து வாழும் போது அங்கு கர்வம் ஒரு போதும் தலை தூக்குவதில்லை. - உங்கள் துறையிலேயே மற்ற சாதனையாளர்கள் இருந்தால் அவர்களைப் பாராட்டுங்கள். சாதனை என்பது சாமான்யமாக வந்துவிடாது. பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் சாதனையை சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த நீங்கள் உங்களை விட சாதித்த சாதனையாளர்கள் சந்தித்த சோதனைகளும் ஏராளம். அவர்களை மனதாரப் பாராட்டுங்கள். பாராட்டு என்பது நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் ‘டானிக்’ என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் திறமை என்ன என்று சரிவரப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் ‘சூழ்நிலை’. ஒரு குட்டிக் கதை இதோ: ஒரு கோழி தன் முட்டைகளை வைத்து அடைகாக்க ஆரம்பித்தது. எப்படியோ ஒரு பருந்தின் முட்டையும் அதோடு கலந்து விட அதையும் சேர்த்து கோழி அடை காத்தது. இருபத்தி ஓராம் நாளில் எல்லாக் குஞ்சுகளும் வெளிவந்தன. கோழிக் குஞ்சுகளுடன் பருந்துக் குஞ்சும் வெளி வந்து சேர்ந்து வளர ஆரம்பித்தது. சில நாட்கள் கழிந்தன. வானத்தில் அண்ணாந்து பார்த்த பருந்துக் குஞ்சு, ஒரு பருந்து உயரத்தில் வட்டமிடுவதைப் பார்த்து, அந்தப் பறவை மட்டும் எப்படி இவ்வளவு உயரத்தில் பறக்கிறது. நம்மால் முடியவில்லையே என்று நினைத்து, தன் தாய்க்கோழியிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, அந்தத் தாய்க்கோழி, “அது வேறு இனம், பருந்து, அதனால் மட்டுமே அப்படிப் பறக்க முடியும். நம்மால் முடியாது” என்று சொல்ல அந்தப் பருந்துக் குஞ்சும் அதை நம்பி பறந்து பார்க்கும் எண்ணத்தையே கைவிட்டது. அதாவது பருந்துக் குஞ்சும், கோழிக் குஞ்சாகி விடும் சூழ்நிலை காரணத்தால் என்பது புரிகிறதல்லவா? சூழ்நிலை காரணமாக எத்தனையோ திறமைசாலிகளுக்கு அவர்கள் திறமையும் தெரிவதில்லை. பலமும் புரிவதில்லை. சரி... திறமையை வளர்த்துக் கொண்டால் என்னென்ன பிளஸ் பாயிண்ட்களை வாழ்க்கையில் சந்திக்கிறீர்கள் என்று பார்ப்போமா? - மற்றவர் மத்தியில் ஒரு செல்வாக்கு. அதனால் உங்கள் மனதில் ஒரு பூரிப்பு. ‘நாமும் வாழ்க்கையில் சாதித்திருக்கிறோம்’ எனும் பெருமை உங்களைச் சூழ்ந்து கொள்ள மன ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. - உங்கள் துறையில் புதுப் புது நுணுக்கங்கள் தெரியவர உங்களுக்கே வியப்புத் தோன்றும் அளவிற்குப் புது விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும். உங்கள் திறமையால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நுணுக்கங்கள் உங்களுக்கு எல்லையற்ற மனத் திருப்தியைத் தேடித் தரும். - திறமையுடன் சேர்ந்த உழைப்பில் நீங்கள் ஒன்றும் போது உங்களை அறியாமல் ஒரு தவத்தில் ஈடுபடுகிறீர்கள். இந்த ‘ஆத்ம தவம்’ உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு வித மனநிறைவை, மன நிம்மதியை ஏற்படுத்தும். நல்ல திறமையை, சிறந்த ஆற்றலை வரப் பிரசாதமாகப் பெற்ற நீங்கள் தன்னம்பிக்கையில்லாமல், முயற்சிகள் செய்யாமல், உழைப்பில் கடுமையாக ஈடுபடாமல் உங்கள் திறமையைத் துருப்பிடிக்க விடலாமா? சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|