சிலையும் நீயே சிற்பியும் நீயே

26. “விழுவது மீண்டும் எழுவதற்காகவே!”

     “கீழே விழுந்தவன் இனிமேல் விழுவதற்கு பயப்படத் தேவையில்லை” என்கிறார் அறிஞர் பன்யன். ஆம்... ஒரு முறை விழுந்துவிட்ட மனிதன் இனிமேல் வாழ்க்கையில் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. உடனடியாக எழப்பார்க்க வேண்டுமே தவிர, விழுந்த தருணங்களை எண்ணி எண்ணி மாய்ந்து போய்விடக் கூடாது.

     உங்களை நீங்களே திறம்பட செதுக்கிக் கொண்டு ஒரு மாபெரும் வெற்றியாளனாக உருவாகிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், உங்களை சற்றும் அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ‘மனச்சோர்வு’. மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது? நாம் எடுத்த முயற்சியில், நாம் செய்து கொண்டிருக்கிற வேலையில் தோல்வியைக் காணுகிற போது, ஒரு வீழ்ச்சியைக் காணுகிற போது உங்களை அறியாமலேயே ஒரு மனச்சோர்வு வந்து உங்களை பலமாகப் பிடித்துக் கொண்டு உங்களை அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. இந்த நேரத்தில் தான் நீங்கள் செல்ல வேண்டிய தாரக மந்திரம், “விழுவது மீண்டும் எழுவதற்காகவே!”

     எந்த ஒரு சாதனையாளனும் மடமடவென வெற்றிகளை சந்தித்துக் கொண்டே போனதாக சரித்திரம் இல்லை. எந்த ஒரு வெற்றியாளனும், ‘வெற்றியைத் தவிர சிறு தோல்வியைக் கூட நான் சந்தித்ததில்லை’ என்று சொன்னதாக ஆதாரமும் இல்லை. ‘வெற்றி’ எனப்படும் சிம்மாசனம் அமைக்கப்பட்ட மேடை பல்வேறு தோல்வி அனுபவங்கள், பல்வேறு வீழ்ச்சி அனுபவங்கள் எனப்படும் படிக்கட்டுகளால் அமைக்கப்பட்டதே. ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் நாம் ஒவ்வொரு வித பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். எந்தப் பாடமுமே கற்காமல் நாம் பரிட்சை எழுதி விட முடியாது. எந்தப் பரிட்சையுமே இல்லாமல் நாம் வெற்றி அடைந்து விடவும் முடியாது. ஆக, வெற்றியை அடைய பல்வேறு தோல்விகளைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.

     தோல்விகளைக் கண்டு துவளாமல் அதைப் படிப்பினையாகக் கொண்டு முன்னேறுபவன் வெற்றியாளனாகிறான்.

     தோல்விகளைக் கண்டு துவண்டு முயற்சிகளை அப்படியே கைவிட்டு விடுபவன் முற்றிலுமாய் தோற்றுப் போய் விடுகிறான்.

     தடைக் கற்களையே படிக்கற்களாய் நினைத்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம். ஒரு மேலை நாட்டு வாசகத்தை இங்கு நினைவு கூறலாம். “நான் எழும்பியுள்ள இந்தக் கோட்டை என் மீது எறியப்பட்ட கற்களைக் கொண்டு தான்.” உங்களில் பலருக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் வெற்றியின் போது கைகுலுக்க மறந்தவர்கள், கைகொடுக்க முன்வராதவர்கள், கண்டு கொள்ள மனமில்லாதவர்கள் உங்கள் தோல்வியின் போது மனம் கைகொட்டி சிரிக்க, மிகவும் அக்கறை உள்ளவர்கள் போல “என்ன? எது?” என்று கேட்பார்கள். அதாவது நீங்கள் அடைந்த தோல்வியின் ஆழம் எவ்வளவு, எழ முடியுமா, எழ முடியாதா என்பதைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு அக்கறை காட்டுவார்கள். அடுத்தவர் வீழ்ச்சியில் மகிழ்ச்சி அடையும் மனிதர்கள் இவர்கள். இவர்கள் மகிழ்ச்சிக்கு ஒரு போதும் இடம் தராதீர்கள். அதாவது வீழ்ந்து கொண்டு கிடக்காதீர்கள். “விழுவது மீண்டும் நான் வீறு கொண்டு எழுவதற்காகவே” என்று சொல்லி எழுந்து காட்டுங்கள், மறுபடி உயர்ந்து காட்டுங்கள்.

     “துன்பம் என்கிற பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை நீங்கள் தடுக்க முடியாது. ஆனால் அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வசிப்பதை நீங்கள் தடுக்கலாம்” என்கிறார் ஒரு சிந்தனையாளர். அதாவது துன்பத்தைத் தலையில் அப்படியே சுமந்து கொண்டு அதன் பாரம் தாங்காமல் படுத்துவிடாதீர்கள் என்கிறார்.

     நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ வீழ்ச்சி அடைந்த மனிதர்கள் மறுபடி எழுச்சி அடைந்ததைப் பார்த்திருக்கிறோம். அவர்களில் சிலரை இங்கு நினைவு கூர்வோமா?

     “சார்லி சாப்ளின்” என்றாலே அவரது ‘சவக், சவக்’ நடை தானே உங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. கேமாராவின் முன்பு மட்டும் தான் தன் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக மட்டுமே அவர் இவ்வாறு நடக்கிறார் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவ்வாறில்லை. அவரது இயல்பான நடையே இதுதான். இளவயதில் நோய் காரணமாக அவரது கால்கள் வளைந்து போய்விட்டன. கதாநாயகனாகவோ, வில்லனாகவோ நடிக்கத் தகுதி இல்லாதவர் என்று கருதப்பட்ட அவர், தான் வீழ்ச்சி அடைந்து விட்டதாக ஒரு நாளும் நினைக்கவில்லை. தனது குறையையே பெரும் தகுதியாகப் பாவித்து வளைந்த கால்களையே சற்று மிகைப்படுத்தி வளைந்து நடந்து தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். தன் வளைந்த கால்களையே நினைத்துக் கொண்டு வீட்டில் ஒரு அறையில் முடங்கிக் கொண்டு இருந்திருந்தார் என்றால் திரைப்பட ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடித்திருக்க முடியுமா?

     இவரைப் போலவேதான் இசைமேதை பீதோவானும். பிறவியிலேயே சற்று காது மந்தமான அவர் தன் குறையைப் பெரிதுபடுத்தாமல் இசைத் தயாரிப்பில் மூழ்கி இருந்த நேரம் தனது நாற்பத்தி ஆறாம் வயதில் முற்றிலுமாய் காது கேட்கும் தன்மையை அறவே இழந்தார். வீழ்ச்சி அடைந்து விட்டதாக ஒரு போதும் நினைக்கவில்லை அவர். இசைமெட்டுக்கள் அவர் சிந்தனையில் எதிரொலிக்க, எதிரொலிக்க மிகச் சிறந்த ஆறு சிம்பொனி இசைகளை அமைத்து இசை உலகில் ஒரு உன்னத இடத்தைப் பிடித்தார்.

     தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாற்று ஏட்டைப் படித்த எவரும் வீழ்ச்சி அடைந்தால் மேலும் வீழ்ந்து விடமாட்டார்கள். அது பற்றி கவலைப்படாமல் எழுந்து விடுவார்கள் என்றே சொல்லலாம். பிறக்கும் போது ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். தலை வினோத வடிவில் இருந்ததால் மூலை வளர்ச்சி இல்லாத குழந்தை என்று பெற்றவர்களும், உள்ளூர் வைத்தியர்களும் முடிவு செய்தனர். பள்ளிக்கும் அனுப்பப்படவில்லை. மூன்று மாதம் மட்டுமே வாழ்நாளில் பள்ளிக்குச் சென்று படித்தவர் எடிசன் என்றால் நம்ப முடியுமா? ‘மூளை வளர்ச்சியற்ற குழந்தை’ என்று மருத்துவ ரிப்போர்ட் பெற்ற இவர், இவரது குறைபாடுகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டு சோர்ந்து போய்விடவில்லை. ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் மனதின் அடித்தளத்தில் வேரூன்றி இருந்ததால் அவர், அவரது குறைபாடுகளைப் பற்றி எண்ணவில்லை. மற்றவர்களது கிண்டல் கேலிப் பேச்சுக்களுக்குச் செவி சாய்க்கவில்லை. கருமமே கண்ணாயினார் என்று இருந்த அவர் ஒன்று இரண்டு கண்டுபிடிப்பு அல்ல 1032 கண்டுபிடிப்புக்களைத் தன் வாழ்நாளில் கண்டுபிடித்து கண்டுபிடிப்பு உரிமம் பெற்றார். பெரிய பெரிய தாங்க முடியாத குறைபாடுகளையே தூசி போல எண்ணி செயலாற்றிய சாதனையாளர்கள் உங்கள் கண்முன் உதாரணங்களாக இருக்க நீங்கள் தூசி போன்ற பிரச்சினைகளைப் பெரிய பாறாங்கற்களாக நினைத்து மனதினுள் போட்டு அழுத்திக் கொண்டு துவண்டு போய்விடலாமா?

     வீழ்ந்து விட்டோமே என்று நினைக்காதீர்கள். வீழ்ச்சி என்பது தோல்வி அல்ல. வீழ்ந்தும் எழாமல் இருப்பதுதான் தோல்வி. மண்ணில் விழுந்துவிட்ட விதைகள் தான் விருட்சங்களாக ஆகி இருக்கின்றன. சிப்பியினுள் விழுந்து விட்ட மழைத்துளிகள் தான் முத்துக்களாக ஆகி இருக்கின்றன. எனவே இந்த முறை நீங்கள் விழுந்தது எழுச்சியுடன் எழுவதற்காகத்தான்.

     இம்முறை எழுந்தால் வெற்றி நிச்சயம். எப்படி என்கிறீர்களா?

     ஒரு முறை தோல்வி காணும் போது அதற்கான காரணம் நமக்கு நிச்சயமாகப் புலப்பட்டு விடுகிறது இம்மாதிரி செய்திருந்தால் தோல்வி ஏற்படாமல் இருந்திருக்கும். இந்த மனிதருடன் கூட்டு சேராமல் இருந்திருந்தால் இந்தத் துன்பம் ஏற்படாமல் இருந்திருக்கும் என்று இந்தத் தோல்வியைப் பற்றி ஒரு தெளிவான ஞானம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த ஞானம் நமக்கு தொடர்ந்து வெற்றிகளை ஏற்படுத்தித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

     அடுத்து ஒருமுறை விழுந்து எழும்போது அடுத்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று நம்மை அறியாமலேயே மன உறுதி பிறப்பதுடன், புத்துணர்வுடன் புதிதாக வேலையைத் துவங்க ஆரம்பிப்போம்.

     அனுபவமில்லாமல் ஒரு வேலையைச் செய்வதற்கும் வெற்றி தோல்விகளை அனுபவித்து பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்று நாம் ஒரு வேலையைச் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அனுபவம் என்கிற ஆசிரியர் முதலில் பரிட்சை வைக்கிறார். பிறகு பாடங்களைச் சொல்லித் தருகிறார். இம்முறை பாடங்களைப் படித்தபின் எழுதும் பரிட்சை நிச்சயமாக வெற்றியைத் தானே அள்ளித்தரும்.

     வீழ்ந்த பிறகு மனதினுள் உத்வேகம் பிறக்க நாம் நமது செயலில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாய் பார்த்துப் பார்த்தே ஒரு முறைக்குப் பலமுறை யோசித்தே எடுத்து வைக்கிறோம். இவ்வாறு கவனித்து எடுத்து வைக்கப்பட்ட அடிகள் சறுக்கல்களை சந்திப்பதில்லை.

     நம் வாழ்க்கை என்பது தெளிந்த ஆற்று நீரோடை போன்றது என்று வைத்துக் கொள்வோம். ஆறு அதன் போக்கில் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. குறுக்கே ஒரு பெரிய அணையை எழுப்பியதும் அங்கு ஒரு மிகப் பெரிய சக்தியின் தேக்கம் உருவாகிறது. நீர் மின்சக்தி நிலையம் உருவாகக் காரணம் ஆகிறது. அதே போல் தான் நம் வாழ்க்கையில் ஒரு அணை அதாவது தடை அல்லது தேக்கம் உருவாகும் போது அதை ஒரு தடை என்று எண்ணக் கூடாது. நம் வெற்றிக்குத் தேவையான சக்தியை உருவாக்கித் தருவதற்கான ஒரு ‘சக்திக் கருவூலம்’ உருவாகி இருக்கிறது என்று எண்ண வேண்டும். இந்த சக்திக் கருவூலத்தின் மூலம் நீங்கள் செயற்கரிய சாதனைகள் பல புரிய எண்ணம் கொள்ளல் வேண்டும்.

     ஒரு செயலில் ஈடுபடும் போது முதன் முதலாக நுழையும் போது நம் அறிவிற்கும், உணர்விற்கும் எட்டிய அளவில் மட்டுமே முதலில் ஈடுபடுகிறோம். நம் வெற்றியின் அளவுகோலும் அதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு தோல்வி ஏற்பட்டு, தடை ஏற்பட்டு தேக்கம் விழும் போது அங்கு ஒரு சக்திக் கருவூலம் உருவாக நம் அடிப்படை எண்ணங்கள், உணர்வுகளுக்கு ஒரு புது உத்வேகம் பிறக்க, அதன் அடிப்படையில் செயலாற்றம் நடைபெறும் போது நம்மை ஒரு சாதனையாளராக, வெற்றியாளனாக உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

     ஒன்றைக் கருத்தில் கொள்ளுங்கள்

     “முட்கள் இல்லாமல் கிரீடம் இல்லை
     சிலுவை இல்லாமல் அரியணை இல்லை
     கண்ணீர் இல்லாமல் காவியம் இல்லை
     தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை”

     அதே போல்

     “வீழ்ச்சி இல்லாமல் எழுச்சி இல்லை.”

     எனவே கவலைப்படாதீர்கள். இம்முறை நீங்கள் விழுந்துவிட்டது மீண்டும் எழுச்சியுடன் எழுவதற்காகவே!