உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சிலையும் நீயே சிற்பியும் நீயே 19. “மூட நம்பிக்கைக்கு ஒரு மூடு விழா” “மூட நம்பிக்கை மனிதனின் பெரிய எதிரி. மத வைராக்கியம் அதை விடப் பெரிய எதிரி” என்கிறார் சுவாமி விவேகானந்தர். “காலையிலே சாமி கும்பிட்டப்ப தேங்காய் குறுக்கே உடைஞ்சுது. என்னவோ நடக்கப் போகுது” - இது வீட்டில் பாட்டியின் புலம்பல். “பூனை குறுக்கே போனப்பவே நினைச்சேன். இந்தக் காரியம் உருப்படாதுன்னு. அதே போல நடந்துட்டது” - இது ஒரு நடுத்தர வயதுத் தந்தையின் முணுமுணுப்பு. ‘காலண்டர் தினப்பலன்’லே இன்னிக்கு தோல்வின்னு பார்த்தப்பவே தெரியும், இன்னிக்கு இன்டர்வியூவிலே ‘அவுட்தான்’னு - இது ஒரு வேலை தேடும் பட்டதாரியின் வார்த்தைகள். இப்படியாக மூட நம்பிக்கை என்பது எண்பது சதவீதம் எண்பது வயது பாட்டி முதல் இருபது வயது இளைஞர் வரை நம் இரத்தத்திலே ஊறிப் போயிருக்கிறது. முன்னேற்றச் சிந்தனைகள் பல நம் எண்ணத்தில் இருந்தாலும் அவ்வப்போது இந்த மூட நம்பிக்கைச் சிந்தனைகள் தலைதூக்காமல் இருப்பதில்லை. “மூட நம்பிக்கை மனதின் விஷம்” என்கிறார் ஜோசப் லூயிஸ். ஆம்... சாதனையாளராக உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள விரும்பினால், மக்கள் மத்தியில் உங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க விரும்பினால், உங்கள் வாழ்க்கை எனும் பூந்தோட்டத்தில் நீங்கள் ‘மூட நம்பிக்கை’ எனும் களைகளை நிச்சயமாக நீக்கியாக வேண்டும். ஏன் மூட நம்பிக்கைகளை நீக்க வேண்டும்? - மூட நம்பிக்கை நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையை முதலில் குழி தோண்டிப் புதைத்து விடும். - நம் தைரிய உணர்வை மெல்ல மெல்ல நம்மிடமிருந்து விலக்கி பய உணர்வை அச்ச உணர்வை நம்முள் புகுத்தி விடும். - குறிப்பிட்ட காரியத்தை குறித்த நேரத்தில் செய்ய விடாமல் நம்மை முடக்கிப் போட்டுவிடும். - பாஸிட்டிவ் எண்ணங்களை நம்மிடமிருந்து போக்கி ‘இப்படி நடந்து விடுமோ?’ எனும் ஒருவித நெகடிவ் எண்ணங்களை நம் மனதில் விதைத்து விடும். ‘போன காரியம் நடக்காமல் போய்விடுமோ?’ ‘அசம்பாவிதம் நடந்து விடுமோ’ என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அந்த எதிர்மறை எண்ணங்களுக்கே ஒரு வித சக்தி ஏற்பட்டு, அந்தச் செயலில் தோல்வி ஏற்பட்டு விடலாம். - நாம் மூட நம்பிக்கைக் கருத்துக்களை நினைப்பதோடு நிறுத்திவிடாமல் வீட்டில் மற்றவர்களிடமும், குழந்தைகளிடமும் சொல்வதால் அவர்கள் மனோபாவம் ஒரு வித பாதிப்பிற்கு உள்ளாவது இயற்கையே. ‘மூட நம்பிக்கை’ குறித்து ஒரு வேடிக்கையான கதை இதோ: ஒரு நாட்டில் ஒரு அரசர் அரசாண்டு வந்தார். அவருக்கு மூடநம்பிக்கை அதிகம். ஒருநாள் அவர் வேட்டையாடச் செல்லும் போது, ஒரு அழகான இளைஞன் எதிர்ப்பட அன்று வேட்டையில் அவருக்கு எக்கச்சக்க வெற்றி. உடனே தன் மந்திரியைக் கூப்பிட்டு அந்த இளைஞனுக்குத் தன் அரண்மனையில் ஒரு அறை ஒதுக்கித் தருமாறும், ‘இனிமேல் தினம் அந்த இளைஞன் முகத்தில் தான் விழிப்பேன்’ என்றும் ஆணையிட்டார். இளைஞனுக்கு அறை ஒதுக்கப்பட்ட அடுத்த நாள் காலை அந்த இளைஞன் முகத்தில் விழித்தார் அரசர். திரும்பி நடந்த போது அந்த அறையின் கதவு அரசர் நெற்றியில் தட்ட, காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அரசவைக்கு வர, அரசவை கஜானாவில் திருட்டு ஏற்பட்டதாக செய்தி வந்தது. ‘சே... என்ன இன்று இவன் முகத்தில் விழித்து இந்த சோதனை’ என்று நொந்து கொண்டிருந்த நேரத்தில் அந்நிய நாட்டு அரசன் போருக்குத் தயார் என அறிக்கை விட்டிருந்தான். மிகவும் கோபம் கொண்ட அரசன் மந்திரியைக் கூப்பிட்டு, “அந்த இளைஞனை உடனே சிரச்சேதம் செய்யுங்கள். அவன் முகத்தில் விழித்ததால் தான் எனக்கு இத்தனை கஷ்டம்” என்று ஆணையிட்டார். அரசவை குரு இதைக் கேட்டு சிரித்தார். “என்ன சிரிக்கிறீர்கள்?” என்று அரசர் வினவ அதற்கு அவர், “மன்னா... நீங்கள் அவன் முகத்தில் விழித்ததால் ஏதோ திருட்டு, அந்நிய நாட்டுப் போர் என்று இத்தோடு போயிற்று. ஆனால் அவனுக்கோ உங்கள் முகத்தில் விழித்ததால் சிரச்சேதமே ஆகப் போகிறது” என்று கூற, அரசவையே சிரிக்க ஆரம்பித்து விட்டது. அப்போது தான் அரசர் தனது மூட நம்பிக்கை பற்றி உணர்ந்து இளைஞனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். “நம்மை முடக்கும் நம்பிக்கையே மூட நம்பிக்கை” என்கிறார் அருள் தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள். சரி... நாம் எதில் எதில் எல்லாம் மூட நம்பிக்கை கொள்கிறோம் என்றும் அதை இனிமேல் நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பார்ப்போம். - “பூனை குறுக்கே போய்விட்டது. போன காரியம் சரிப்படுமா?” இப்படியெல்லாம் நினைத்துக் குழம்பாதீர்கள். தெருவில் பத்துப் பூனைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் திரியும் போது குறுக்கே போகாதா என்ன? - “தேங்காய் குறுக்கே உடைந்ததே. எதுவும் கெட்டது நடந்து விடுமோ?” - இதுவும் தேவையற்ற கற்பனை. உடைக்கத் தெரியாமல் உடைத்தால் குறுக்காக மூன்றாக என்ன, நான்காகக் கூட உடையும். - “நாளைக்கு சிஸேரியன் ஆபரேஷன் பண்ண வேண்டாம் டாக்டர். நாளை மூல நட்சத்திரம்” - இதுவும் தேவையற்ற ஒரு ஆலோசனை. எந்த நேரம் சிஸேரியன் செய்தால் தாய்க்கும் சேய்க்கும் நல்லது என்று உங்களை விட டாக்டருக்கே நன்றாகத் தெரியும். - ‘அவன் மூஞ்சியிலே முழிச்சாலே எனக்கு ஆகாது’ இவ்வாறெல்லாம் ஒருவரைத் தாழ்த்திப் பேசாதீர்கள். “கேடும் நன்றும் பிறர் தர வாரா” என்பது பழமொழி. அன்றன்று செயல்கள் நடப்பது அவரவர் கையில் தான் இருக்கிறது. மற்றவரால் நமக்குத் தீங்கு நடக்கும், நம் செயல்கள் யாவும் கெட்டுவிடும் என்று நினைப்பது அறிவீனம். - “விளக்கு தானாக அணைஞ்சுட்டதே. எதுவும் அபசகுனத்தைக் காட்டுதோ?” - இவ்வாறு நீங்களும் குழம்பி வீட்டிலுள்ளவர்களையும் குழப்பாதீர்கள். எண்ணையோ, திரியோ சரியாக இல்லாத பட்சத்தில், காற்று பலமாக வீசும் பட்சத்தில் விளக்கு அணையாதா என்ன? - “அன்னிக்கு அவங்க வீட்டிலேயிருந்து பெண் பார்க்க வந்தப்ப டிவியை யதேச்சையா போட்டோம். ஒரு சோக சீன்லே, அவ கத்திக் கதறி அழற மாதிரி காட்டறப்பவே தெரியும், இந்த இடம் கூடிவராதுன்னு” இப்படிப் பேசுபவர்களும் இருக்கிறார்கள். டி.வி. சீரியல் என்றாலே எண்பது சதவீதம் சோக சீன்கள் தானே! இவ்வாறெல்லாம் நினைக்கும் நீங்கள் அந்த நேரம் ஏன் அந்த தொ(ல்)லைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்கிறீர்கள்? “மூட நம்பிக்கை” பற்றி இன்னொரு சுவாரஸ்யமான கதை இதோ: ஒரு கிராமத்தில் நான்கு நண்பர்கள் ஒரு திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தனர். மழைக் காலம். மழை திடீரென பிடித்துக் கொண்டது. அவர்கள் வந்த பாதையில் இரண்டு கூரைக் கொட்டகைகள் இருந்தன. நான்கு பேரும் ஓடிப் போய் ஒரு கூரையின் அடியில் நின்று கொண்டனர். காற்று பலமாக வீசியது. அவ்வப்போது மின்னலும் வெட்ட, மழை ‘சோ’வெனப் பெய்தது. நான்கு பேரில் மூன்று பேர் நான்காமவனைப் பற்றி தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டனர். “அவன் சரியான தோசி, துரதிஷ்டமானவன். அவனும் நம்முடன் இந்தக் கூரையின் கீழே இருந்தால் இடி நம்மீது விழுந்தாலும் விழுந்துவிடும். நயமாகப் பேசி இவனை முதலில் வெளியேற்றி விட வேண்டும்” என்று பேசிக் கொண்டனர். மெதுவாக அவனிடம், “நான்கு பேராக நின்றால் கொட்டகைக்குள் இட நெரிசலாக இருக்கிறது. நீ வேண்டுமானால் ஒரு காலை வெளியே வைத்துக் கொண்டு நில்” என்றெல்லாம் ஜாடையாகப் பேசி வெளியேற்றப் பார்த்தனர். இவர்களின் தொந்தரவு பொறுக்காத நான்காமவன், “சே... உங்களோட பெரிய தொந்தரவாய் போச்சு. நான் அந்தக் கொட்டகைக்குப் போறேன்” என்று சொல்லி, அங்கிருந்த இன்னொரு கொட்டகைக்குச் சென்று நின்று கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் மழை வலுத்து இடி இடிக்க, இடி நேராக முதல் கொட்டகையில் விழ, மூன்று நண்பர்களும் பலியானார்கள். துரதிஷ்டசாலி என்று கருதப்பட்ட நான்காமவன் மட்டும் பிழைத்துக் கொண்டான். “மூட நம்பிக்கை கடவுளின் மேலுள்ள அர்த்தமற்ற பயம்” என்கிறார் சீரோ எனும் அறிஞர். சரி... மூடநம்பிக்கைக்கு நம்மால் இயன்றவரை எப்படி மூடு விழா நடத்தலாம் என்று பார்ப்போமா? - மூட நம்பிக்கைகளுக்கு ஒரு போதும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசாதீர்கள். எதையாவது சொல்லி விட்டு, “இதை நான் சொல்லலே. எங்க அப்பா தாத்தா காலத்திலே இருந்து சொல்வாங்க. அதுபடி நடந்தும் இருக்கு” என்று நீங்களே ஆணித்தரமாக நம்புவது போலச் சொல்லி இளம் சமுதாயத்தினரை உங்களால் முடிந்த அளவு கெடுக்கப் பார்க்காதீர்கள். - மூட நம்பிக்கைகளை ஒழிப்பது பற்றிய சுய முன்னேற்றக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கி நீங்களும் படித்து உங்கள் குடும்பத்தினரையும் படிக்கச் செய்யலாம். - மூட நம்பிக்கைகளை நம்பாமல் உங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து பாருங்கள். பூனை குறுக்கே சென்றாலும் நீங்கள் வெளியே சென்று தொடர்ந்து உங்கள் வேலைகளைக் கவனியுங்கள். முன்னை விட உங்கள் வேலை சுலபமாக, வெற்றிகரமாக முடியலாம். அதற்காக அதே பூனை தினமும் குறுக்கே வருமா என்று ஆவலாக எதிர்பார்க்காதீர்கள். - உங்கள் குழந்தைகள் மூட நம்பிக்கையுடன் ஏதாவது பேசினால் ஆரம்பத்திலேயே கண்டியுங்கள். அதை ஆதரிப்பது போல ஒரு போதும் பேசாதீர்கள். மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளிவிடுவது நல்லது. ‘புல்லாக இருக்கும் போது நகத்தால் கிள்ளாமல் விட்டால், பின்னர் மரமான பிறகு கோடாரியால் வெட்ட வேண்டி இருக்கும்’ என்பார்கள். - உறவினர் நண்பர்களை எங்காவது விழாக்களில் சந்தித்துப் பேசும் போது, “மூட நம்பிக்கைகளுக்கு எங்கள் வீட்டில் இடமில்லை” என்று உங்கள் கருத்தை ஆணித்தரமாக அவர்களிடம் சொல்லுங்கள். உங்களைப் பார்த்து ஓரிருவர் மாறலாம். அவர்களைப் பார்த்து நான்கு ஐந்து பேர் மாற, சமுதாயமே மாறாதா என்ன? - இந்த “சிலையும் நீயே சிற்பியும் நீயே” தொடரைப் படித்து உங்களை நீங்களே திறம்பட மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் “மூட நம்பிக்கைக்கு மூடு விழா” நடத்தி விட்டீர்கள் தானே! இனிமேல் உங்கள் சாதனைக் கோட்டைக்குத் திறப்பு விழா தான்! சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|