சிலையும் நீயே சிற்பியும் நீயே

9. “ஆத்ம நண்பன் - புத்தகமே!”

     “புத்தகம் இல்லாத வீடு ஜன்னல்களே இல்லாத அறைக்கு ஒப்பாகும்” என்கிறார் அமெரிக்க அறிஞர் ஹோரெஸ் மான். ஆம்... ஒரு அறைக்கு சூரிய ஒளியையும், காற்றையும் தர ஜன்னல்கள் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒரு மனிதனுக்கு அவன் மன ஆரோக்கியத்திற்கு நல் அறிவையும், சிந்தனையையும் தூண்டவல்ல புத்தகங்கள்.

     எத்தனையோ எண்ணிலடங்கா ஆன்மீக ஞானிகளும், தத்துவ மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், உருவானதற்கு மூல காரணமாக பல்வேறு புத்தகங்கள் இருந்திருக்கின்றன என்பதை அவர்கள் வாழ்க்கை வரலாறுகள் மூலமாக அறியலாம்.

     இராஜா ஹரிச்சந்திரன் கதை நூல் தன் வாழ்க்கையையே சீர்திருத்தி உணர்த்தியது என்கிறார் மகாத்மா. “ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரமணரின் நூல்கள் இன்றளவும் எனக்கு ஆன்ம பலம் அளித்து அமைதியாகச் செயலாற்ற உதவுகிறது” என்கிறார் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

     உங்களை நீங்கள் சீர்திருத்திக் கொள்ள விரும்புகிறீர்களா? சாமான்ய மனிதனிலிருந்து, சரித்திர நாயகனாக உயர்த்திக் கொள்ள விரும்புகிறீர்களா? இன்றிலிருந்து தரமான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பியுங்கள். படிக்கும் பழக்கத்தை மெல்ல மெல்லப் பழகிக் கொண்டாலே நற்பண்புகள் உங்களிடம் மெல்ல மெல்ல ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும்.

     புத்தகங்கள் ஒருவரை எந்தெந்த வகையில் மாற்ற வல்லது என்று பார்ப்போமா?

     நல்ல அறிஞர்களைப் பற்றி, சான்றோர்களைப் பற்றிப் படிக்கும் போது நமக்குள்ளும் நாமும் இந்த உலகில் ஏதாவது சாதிக்க வேண்டும், நம்மாலும் சாதிக்க முடியும் என்று இந்த உலகிற்குக் காட்ட வேண்டும் என்கிற ஒரு சின்ன அறிவுப் பொறி நம் எண்ணத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது.

     புத்தகங்கள் படிக்கப் படிக்க அறிவு விரிய விரிய சின்னத்தனமான கோபங்கள், தாபங்கள் இவற்றிற்கு மனதில் இடமில்லாமல் போக, சமுதாயத்தினர் மத்தியில் தனித்துத் தெரிய ஆரம்பித்து விடுகிறோம்.

     புத்தகங்களை ஆழமாக மணிக்கணக்கில் படித்துப் புரிந்து கொள்ள பழக்கப்படுபவர்களுக்கு பொறுமைத்தன்மையும் அதிகரிக்கும். பொறுமை நிச்சயமாகப் பெருமை தேடித் தரும் அல்லவா!

     புத்தகங்கள் படிப்பதில் விருப்பம் வர வர தேவையற்ற நண்பர்களுடன் ஊர் சுற்றல், தேவையற்ற தொலைக்காட்சிப் பொழுது போக்கு, தொலைபேசியில் நண்பர்களுடன் வீண் பேச்சு இப்படிப் பல தேவையற்றதுகள் தன்னாலேயே ஒதுங்கிப் போய்விட ஆரம்பிக்கும். தேவையற்ற களைகளைப் பிடுங்கிவிட்டாலே சாதனைச் செடி ஊட்டமாக வளரும் அல்லவா?

     சாதிக்க விரும்புகிறவர்களுக்கு நிச்சயமாக ஒருவித அறிவு தாகம் இருக்கும். அது ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். விஞ்ஞானம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அல்லது இலக்கியம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். என்ன தான் ஆன்றோர் உரைகள் பல செவி வழி கேட்டாலும் புத்தகம் வாயிலாக உணர்ந்து ஆத்மார்த்தமாக அனுபவித்துப் படிக்கும் போது அந்த அறிவுத் தாகத்திற்கு ஒரு தணிவு ஏற்படுகிறது.

     புத்தகங்கள் நம்மை மட்டுமல்ல, நம் வீட்டிலுள்ள சிறு குழந்தைகளையும் சீர்ப்படுத்தும். பொதுவாக வீட்டில் நம் குழந்தைகள் நம்மைப் பார்த்துப் பார்த்தே பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்கின்றன. நம் கையில் எப்போதும் புத்தகம் இருப்பதைப் பார்க்கும் குழந்தைகளுக்கும் படிக்கும் உணர்வு தானாகவே வந்துவிடும். நாம் எந்த நேரமும் தொலைக்காட்சியே கதி என்று உட்கார்ந்து கொண்டு, குழந்தைகளைப் படி... படி... என்று சொன்னால் அவர்கள் கேட்கப் போவதில்லை.

     ஃபுல்டன் ஷீன் எனும் மேலை நாட்டு அறிஞர் சொல்கிறார்: “உடலுக்குப் போஷாக்கு கொடுப்பதைப் போல சிந்தனைக்கும் போஷாக்கு அவசியம். சிந்தனைக்குப் போஷாக்கு கிடைக்கப் படிப்பது மிகவும் அவசியம். ஒரு சிந்தனை தான் இன்னொரு சிந்தனைக்கு உணவாக முடியும். எனவே ஒரு சிந்தனையால் தான் இன்னொரு சிந்தனைக்கு உணவு அளிக்க முடியும். உங்களுடைய சிந்தனையை விட வளமான சிந்தனையிடமிருந்து உணவைப் பெறுவதற்குப் பெயர் தான் படிப்பது. ஒருவரது புத்தகங்களைப் படிக்கிற போது அதிலுள்ள சிந்தனையைப் பெற்று உங்கள் சிந்தனைச் செல்வத்தை உயர்த்திக் கொள்கிறீர்கள்” என்கிறார்.

     “நூல்கள் என்பவை சிந்தனை நிரம்பிய பீரங்கிகள்” என்கிறார் பிரெஞ்ச் தத்துவ ஞானி மாண்டேயின்.

     - ஓஷோ ரஜனிஷ் தத்துவக் கருத்துக்களை மக்கள் மனதில் புகுத்த வேண்டும் என தத்துவக் கட்டுரைகளாக எழுதிக் குவித்து 650 கட்டுரை நூல்கள் வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் 32 மொழிகளில் 1150 தலைப்புகளில் வெளியாகி உள்ளன. இவர் உலகம் எங்கும் உள்ள சீடர்களை உருவாக்கியது தனது புத்தகங்கள் மூலமாகத்தான். தான் வாங்கிப் படித்த புத்தகங்களைச் சேகரித்து சுமார் 50000 புத்தகங்களைக் கொண்ட நூலகமே வைத்திருந்தார்.

     - நல்ல நூல்கள் மூலமாகவே தான் உயர்ந்ததாகக் கூறும் மனிதருள் குறிப்பிடத் தக்கவர் கம்ப்யூட்டர் மன்னன் பில்கேட்ஸ். தன் சிந்தனை சக்தியை வளர்த்ததில் பெரும் பங்கு நூலகத்தையே சாரும் என்கிறார்.

     - நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தைக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டயானா ஹைடன் எனும் இந்தியப் பெண்மணி 85 நாடுகளைச் சேர்ந்த அழகிகளைப் போட்டியில் வென்று ‘உலக அழகி’ பட்டத்தைப் பெற்றார். ஐரீஷ் கவிஞரான டபிள்யூ.பி.கீட்ஸின் “தமது இன்றைய செயல்களுக்கு நேற்றைய நம் கனவுகளே பொறுப்பு” என்ற கவிதை வரிகளே தனது வெற்றிக்குக் காரணம் என்கிறார். அதாவது போட்டியில் நடுவர்களது இறுதிக் கேள்விக்கு, இந்தக் கவிதை வரிகள் மனதில் நிழலாட, “கனவுகளிலிருந்துதான் நம் கடமைகள் துவங்குகின்றன” என்று பதில் கூறி பரிசைத் தட்டிச் சென்றார்.

     புத்தகம் படிக்கும் ஆர்வம் ஒரு இளம் மாணவனைக் கோடீஸ்வர அந்தஸ்திற்கு உயர்த்தியது. இதோ அந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி.

     வாடிகன் நூல் நிலையத்தில் இளம் மாணவன் ஒருவன் அதிகம் அறிமுகமாகாத தத்துவ ஞானி ஒருவர் எழுதிய மிகப் பெரிய புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். படிப்பில் ஆர்வம் உள்ள அவனுக்கு அந்தத் தத்துவ ஞானியின் புத்தகம் சுவாரஸ்யத்தை உண்டாக்கியது. மிகப்பெரிய அந்தப் புத்தகத்தைப் படித்து முடிப்பதற்கு சில தாள்களே இருந்த நிலையில், புத்தகத்தின் கருத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு வாசகம் அதில் எழுதப்பட்டிருந்தது: “இந்த இடத்தைப் படிக்கின்றவர் புரேபேட் கோர்ட்டுக்குச் சென்று கோப்பு எண் 162/ரோமாபுரி பிப்ரவரி 5, 1784 ஐப் பார்க்கவும்.”

     அந்த மாணவன் அப்படியே செய்தான். அந்தத் தத்துவ ஞானி தன்னுடைய செல்வம்முழுவதையும், அவரது அந்தப் புத்தகத்தில் அந்தப் பகுதி வரை பொறுமையாகப் படிக்கிறவருக்குச் சேர வேண்டும் என்று உயிர் எழுதி வைத்திருந்தார். 170 வருடங்களாக அந்தப் புத்தகத்தைப் பிரித்துப் படித்தவர் யாருமில்லை. இந்த மாணவனுக்குக் கிடைத்த தொகை 170 வருட வட்டியும் சேர்ந்து பணம் எட்டு கோடி டாலர் மதிப்பைப் பெற்றிருந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டு உழைத்துப் படிக்கும் நபரையே, தன் வாரிசாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற அந்தத் தத்துவ ஞானியின் கொள்கையின் உன்னதத்தைப் பாருங்கள்.

     புத்தகங்கள் படிப்பதன் மேன்மை அளவிட முடியாதது. படிக்கும் போது வெறும் பொழுது போக்காகப் படிக்காமல் ஒரு பெரிய டைரியில் படித்ததில் மனதைத் தொட்ட இடம், பின்பற்ற வேண்டிய கருத்துக்கள், எழுதிய எழுத்தாளர்கள் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போது எடுத்துப் புரட்டிப் பார்த்தாலும் இந்த ஆத்ம நண்பன் உங்கள் மனதை இதமாக வருடிக் கொடுப்பான்.

     தரமான புத்தகங்களை நிறையப் படித்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்கள். இனி நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

     - உங்கள் வீட்டில் உங்களுக்காக ஒரு புத்தக அலமாரி ஒன்று ஏற்படுத்தி நல்ல தரமான புத்தகங்களாக, உங்களுக்கு எப்போதும் எடுத்துப் படிப்பதற்கு ஆர்வத்தைத் தரும் புத்தகங்களாக சேகரிக்க ஆரம்பியுங்கள்.

     - ‘மாதம் ஒரு நூல்’ என்று உங்களுக்குள்ளாக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, தேவையற்ற சில செலவுகளைக் குறைத்துக் கொண்டு, மாதம் ஒரு புத்தகம் வாங்கி வைக்கலாம்.

     - செய்தித் தாள்களிலும், மாத வார இதழ்களிலும் வரும் புத்தக மதிப்புரைகளைப் படித்து புதிது புதிதாக வந்துள்ல புத்தகங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு வாங்கலாம்.

     - உங்கள் உறவினர், நண்பர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க, அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ தினங்களில் புத்தகங்கள் வாங்கிப் பரிசளிக்கலாம்.

     - உங்களுக்கு வரும் பரிசுப் பொருட்களும் புத்தகங்களாகவே இருக்கட்டும் என்று உறவினர், நண்பர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

     - புத்தகங்கள் படிக்கும்போது பொழுது போக்கு அம்சமான சிறுகதை, நாவல்கள் இவற்றை விட சுயமுன்னேற்ற நூல்களை வாங்கிப் படிப்பது உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும்.

     - நாம் விரும்பும் எல்லாப் புத்தகங்களையும் விலைக்கு வாங்க இயலாது அல்லவா? அருகிலுள்ள நூலகங்களில் அங்கத்தினராகி தங்கள் அறிவுப் பசிக்கு இரை தேடிக் கொள்ளலாம். புதிதாக வந்துள்ள புத்தகங்கள் என்னென்ன என்று அவ்வப்போது நூலகரைக் கேட்டுப் பெற்றுப் படிக்கலாம்.

     - வாழ்க்கையை நல்ல முறையில் அன்றன்று அனுபவித்து ஆத்ம திருப்தியுடன் வாழ நினைப்பவர்கள் கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கட்டும். கையில் உள்ள புத்தகம் புத்தக அலமாரியில் உள்ள இரண்டு புத்தகங்களுக்குச் சமம் என்பார்கள்.

     புத்தகங்கள் படிக்கப் படிக்க உங்கள் வாழ்க்கையில் புதுப்புது பிடிப்புகள் ஏற்படுவது உறுதி.