சிலையும் நீயே சிற்பியும் நீயே

30. “அகந்தையை அகற்றுங்கள்”

     எந்த ஒரு சாதனையாளனாகட்டும், வெற்றி வீரனாகட்டும், அவன் மென்மேலும் நாளுக்கு நாள் திறமையில், அறிவில், ஆற்றலில் தன் சாதனையில் வளர்ந்து கொண்டே போகிறான் என்றால், அதற்குக் காரணம் அவன் குணத்தில் ஆணிவேராக ‘பணிவு’ இருந்திருப்பதைப் பார்க்கலாம்.

     அதே நேரம் ஒருவன் என்னதான் திறமை உள்ளவனாக இருந்த போதிலும் அவன் திறமை வெளிப்படாமல் நாளுக்கு நாள் சரிவைச் சந்திக்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவனிடமுள்ள தீய குணமான ‘அகந்தை’ என்பதையும் தெள்ளத் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.

     இன்று நேற்றல்ல, இதிகாச காலத்திலேயே அகந்தையினால் அழிந்தவர்கள் சரித்திரங்கள் ஏராளம். பகவத் கீதையில் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாக யோகத்தில் கிருஷ்ணர் போர் புரியத் தயங்கி நின்ற அர்ஜுனனைப் பார்த்து, “அர்ஜுனா, தயங்காதே, துரியோதனனுக்கு எப்போது ஆணவம் தலையெடுக்கத் தொடங்கியதோ அப்போதே அவனுக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. எனவே அவன் அழிவது நிச்சயம்” என்று பாடம் புகட்டுகிறார். ஆணவம் தலை தூக்கினால் அழிவு நிச்சயம் என்பதை ஆண்டவன் வாயிலாகவே கேட்கும் நீங்கள் இன்றே, இப்போதே எத்தனையோ நல்ல குணங்களுக்கு இடையே ‘ஆணவம்’ என்கிற சிறு மாசு உங்களுக்குள் இருக்குமானால் அதை நீக்கி விடுங்கள். உங்கள் சாதனைச் சிலை மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றால் ஆணவம் எனும் கற்துகளை உங்கள் அறிவு எனும் உளியால் நீக்குங்கள்.

     ஆணவம் ஒருவனுக்கு எப்போது ஏற்படுகிறது? எதுவுமே நிலையாக அமைந்தவனுக்குப் பெரும்பாலும் ஆணவம் ஏற்படுவதில்லை. பரம்பரை பரம்பரையாக செல்வந்தனாக இருப்பவனுக்கு ஆணவம் திடீரென்று ஏற்படுவதில்லை. நல்ல அறிஞனுக்கு, நிறையக் கல்வி அறிவு பெற்று நிறைகுடமாகத் திகழ்பவனுக்கு திடீரென்று ஆணவம் வருவதில்லை. சிலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். “அவனுக்கு ஏன் திமிர் வராது. திடீர் பணம்.” “அவனுக்குப் பதவி வந்ததும், ஆணவமும் வந்திடுச்சு.” இப்படியாக திடீர்ப்பணம், திடீர் வசதி, திடீர்ப் பதவி என அவனே எதிர்பாராமல் அவன் மேல் அதிர்ஷ்டக் காற்று வீசியதும், மகிழ்ச்சியால் நிலை குலைந்து ஆணவம் என்னும் சால்வையை அவனே எடுத்துப் போர்த்திக் கொள்கிறான்.

     அந்த மாயச் சால்வை நல்லவைகளைப் பார்க்காதபடி அவன் கண்களை மறைக்கிறது. நல்ல விஷயங்களைக் கேட்காதபடி காதை மறைக்கிறது. ஏன் ஆணவ மிகுதியால் சமுதாயத்தினரோடு ஒன்ற முடியாத நிலையில் தன்னை கோபுர உச்சிக்குக் கற்பனை செய்து கொண்டு நிமிர்ந்து நிற்கிறான். பதவி, பணம், செல்வாக்கு எல்லாம் மாற மாற அவன் இயல்பு நிலைக்கு வர நினைத்தாலும் அவனால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் அவனை ஒதுக்கி விடுகிறது. அவனால் மறுக்கப்பட்ட உறவினர்கள், நண்பர்கள் அவனைப் பார்க்க விரும்புவதில்லை. மொத்தத்தில் ஆணவத்தால் அவன் அழிவையே சந்திக்கிறான்.

     ஆணவம் அறிவை மறைக்கிறது என்பதற்கு மகாபாரதக் கதையில் ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூறலாம். பாரதப் போர் ஆரம்பமாகிவிட்டது. கௌரவர் தலைவன் துரியோதனனும், பாண்டவர் தலைவன் தருமரும் உதவி வேண்டி ஸ்ரீ கிருஷ்ணரை நாடி அவரது துவாரகைக்குச் சென்றார்கள். கிருஷ்ண பரமாத்மா தனது படுக்கையில் சயனித்திருந்தார். முதலில் துரியோதனன் வந்தான். வந்தவன் கிருஷ்ணரது தலைமாட்டில் அமர்ந்தான். அடுத்து தருமர் அந்த அறைக்குள் நுழைந்து, கிருஷ்ணர் துயில் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவரது துயிலைக் கலைக்க மனமில்லாதவராய் கால்மாட்டில் ஓசைப்படாமல் அமர்ந்தார். இருவர் வந்ததையும் கிருஷ்ணன் அறியாதவரா என்ன! இருப்பினும் சற்று நேரம் பொறுத்து கண் விழிப்பவர் போல் கண் விழித்துப் பார்த்தார். பாதத்தின் அருகில் அமர்ந்திருந்த தருமர்தான் முதலில் கண்ணில் பட்டார். “வாருங்கள் தருமரே, என்ன விஷயம்?” என்று வினவ, “முதலில் வந்தவன் நான் தான். என்னைத்தான் நீங்கள் முதலில் கேட்க வேண்டும்” என்று துரியோதனன் ஆணவத்துடன் கூற, திரும்பிப் பார்த்த கிருஷ்ணன், “நீயும் வந்திருக்கிறாயா? என்ன விஷயம் முதலில் நீயே சொல்” என்று கேட்க, அவனும், “கிருஷ்ணா! போர்க்களத்தில் உன் உதவியை நாடி வந்திருக்கிறேன்” என்று கூறினான். கிருஷ்ணன், “நான் வேண்டுமா? என் படை பலம் வேண்டுமா?” என்று கேட்டார். துரியோதனன் “உன் சேனைகள் முழுவதையும் எனக்கு அனுப்பி வை. அதுவே போதும்” என்று கேட்க, கிருஷ்ணரும் “உனக்கே தந்தேன்” என்று வரமருள, மிகவும் திருப்தியாகச் சென்றான் துரியோதனன். “சேனைகள் எதுவும் வேண்டாம். நீ ஒருவனே போதும்” என்று கேட்ட தருமர் இறுதியில் வெற்றி வாகை சூடினார். ஆணவம் அறிவை மறைக்க, கேட்க வேண்டியதை யோசிக்காமல் கேட்ட துரியோதனனுக்குத் தோல்வியே மிஞ்சியது.

     இப்படியாக ஆணவத்தால் அழிந்த பலரையும் அன்று இதிகாச காலத்திலும், மன்னர்கள் காலத்திலும் வரலாறுகள் வாயிலாகச் சந்தித்திருக்கிறோம். இன்று நடைமுறை வாழ்க்கையிலும் ஏராளமானவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

     சரி... ஆணவக்காரர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

     - யாரையும் மதித்துப் பேசினால் தலையிலுள்ள கிரீடம் விழுந்து விடுமோ எனும்படியான ஒரு நிமிர்ந்த பார்வை.

     - யாரையும் நேருக்கு நேர் பார்த்துப் பேசாமல் தலையை உயர்த்தியபடி உன்னிடம் எனக்கென்ன பேச்சு? என்பது போன்ற ஒரு பேச்சு.

     - யாருடனும் ஒட்டி உறவாடிப் பழகாத ஒரு தன்மை.

     - பேச்சில் ஒரு சுயநலம் கலந்த கர்வம்.

     - யாரும் எளிதில் நெருங்க முடியாதபடி சுற்றிலும் ஒரு வளையம் இருப்பதைப் போன்று ஒரு நடவடிக்கை.

     இவ்வாறான சுபாவம் உள்ள இவர்கள் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் நினைத்துப் பார்க்காததாலோ என்னவோ, தன்னைப் பற்றியும் தனது இந்த சுபாவம் சரிதானா என்பது பற்றிக் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. நினைக்கும் அளவிற்கு அறிவு வேலை செய்வதில்லை.

     பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் ஆணவம் மிகுதியால் நுழைவுத் தேர்வுக்கு உழைத்துப் படிக்காமல் அதில் கோட்டை விடுகிறான்.

     அலுவலகத்தில் உயர் பதவியிலிருக்கும் அதிகாரியின் ஆணவப் பேச்சினால், சக ஊழியர்கள் வெறுப்புக்கு ஆளாக, அந்த அலுவலகம் முன்னேற்றங்களைக் காண முடியாமல் போகிறது.

     அரசியல்வாதியின் பதவி ஆணவத்தால் நாளடைவில் கட்சித் தொண்டர்கள் அதிருப்திக்கு ஆளாக, அடுத்த தேர்தலில் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

     குடும்பப் பெரியவர்களது ஆணவத்தால் “நான் தான் மாமியார், இங்கு நான் வைத்ததுதான் சட்டம்” என்கிற போக்கினால் முறிந்த உறவுகள் ஏராளம்.

     கலைத் துறையினருக்கும் ரசிகர்கள் பெருகப் பெருக ஆணவம் பெருகினால் அந்தக் கலையில் மென்மேலும் வளர்ச்சி அடையாமல் ஒரு கட்டத்தில் வளர்ச்சி நின்று விடுவது இயற்கையே.

     நெருங்கிய உறவுக்குள் ஆணவம் தலை தூக்கும் போது அங்கு அன்பு குறையத் தொடங்கி விடுகிறது. ஆணவம் தலைதூக்கி ஒருவரை ஒருவர் அதட்டிப் பணிய வைக்கும் போது ஒருவித பய உணர்ச்சி தோன்றுமே தவிர, உள் அன்பு அங்கே குறைந்து விடுகிறது.

     இப்படியாக ஆணவம் அறிவையோ, ஆற்றலையோ, திறமையையோ வளர்ப்பதில்லை. மாறாக வளர்ச்சிகளையும், வாய்ப்புகளையும் தடுத்து நிறுத்தி விடுகிறது.

     “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
     அணியுமாம் தன்னை வியந்து.”

     என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது “உண்மையான பெருமையானது என்றும் பணிவுடன் இருக்கும். சிறுமையானது தன்னைத் தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்” என்கிறார்.

     1997ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. “இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதர் யார்?” “காந்திஜி” தான் என்று பலரும் கூறினார்கள். அவருக்கு அடுத்த இடம் “அன்னை தெரஸா”. இருவரையும் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பணிவின் மறு உருவமாகத் திகழ்ந்தார்கள். அகங்காரமோ, ஆணவமோ இருவருக்குமே தலை தூக்கியதில்லை.

     எனவே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு வரத் துடிக்கும் நீங்கள் இதுவரை பணிவாக இல்லாவிட்டாலும் கூட, பணிந்து போகாவிட்டாலும் கூட இனிமேலாவது பணிவு எனும் நற்குணத்துடன் இருக்கப் பழகுங்கள். கல்வி, செல்வம், வீரம், பதவி எனும்படியான மிகச் சிறந்த பொன் ஆபரணம் உங்களிடம் இருந்தாலும் அது ‘பணிவு’ எனப்படும் மெருகு போடப்படும் போது மட்டுமே ஒளி வீசப்பட்டு உலக அரங்கில் ஒரு சுடர்விடும் நட்சத்திரமாகப் பிரகாசிக்க முடியும்.

     அகந்தையினால் தற்காலிக சந்தோஷம் கிடைப்பதாக உணரலாம். ஆனால் பணிவின் போது கிடைக்கும் நிரந்தர நிம்மதி அள்விட முடியாதது.

     “சிலையும் நீயே! சிற்பியும் நீயே!” எனும் இந்தத் தொடரை வாரம் தவறாமல் படித்து உங்களை நீங்களே செதுக்கித் தேவையற்ற பழக்க வழக்கங்களையும், தீய பண்புகளையும் ஒழித்து, நற்குணங்களால் உங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல நேரத்தில் உங்களுக்காக ஒரு வார்த்தை. நீங்கள் எது செய்தாலும் அதன் பயன் இரு மடங்காய் உங்களுக்குக் கிடைக்கும். இது இறை விதி. நீங்கள் உங்களுக்குத் தெரிந்த நான்கு பேருக்கு உதவினால் உங்களுக்குத் தெரியாத எட்டு பேர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மீது வைக்கும் அன்பும், ஆதரவும் அதன் இரு மடங்காய் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கொண்ட நட்பின் அளவும் அதன் இரு மடங்காய் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் சிலரைக் கை தூக்கி வாழ வைத்தால், பலர் முன் வந்து உங்களை, உங்கள் குடும்பத்தினரை வாழ வைப்பார்கள். விதை நெல்லின் அளவு மட்டுமே விளைவதில்லை. விளைவு கணிசமாக இருக்கிறதல்லவா? அதைப் போலவே நீங்கள் செய்யும் நல்லதும் தீயதும், நல்ல விஷயங்கள் தான் இரு மடங்காகும் என்பதில்லை. தீயதும் கூடப் பிறருக்கு நீங்கள் இழைக்கும் அநீதியும் இரு மடங்காக உங்களைத் தாக்கும், தண்டிக்கும். எனவே, “மறந்தும் பிறன் கேடு சூழற்க.”

     நல்லதே எண்ணி, நல்லதே சொல்லி, நல்லதே செய்து வாழுங்கள். உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும். நீங்கள் வெற்றியைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வெற்றி உங்களைத் தேடி வரும்.