சிலையும் நீயே சிற்பியும் நீயே

5. “விட்டு விடாதீர்கள் விடா முயற்சியை!”

     ‘வால்டேர்’ எனும் பிரெஞ்ச் அறிஞர் சொல்கிறார்: “மேதைக்கும், பாமரனுக்கும் இடையில் ஒரு மிகச் சிறிய வேறுபாடுதான் இருக்கிறது. அதுதான் விடா முயற்சி!”

     உங்களுக்கு மிகச் சிறந்த குறிக்கோள் இருக்கலாம். கடினமாக உழைக்கும் ஆற்றல் இருக்கலாம். மற்றவர்களை விடச் சிறந்த திறமையும் இருக்கலாம். ஆனால் இதுவரை நீங்கள் முன்னேற்றம் காணாமல் சாதனை புரியாமல் இருப்பது ஏன்? உங்களிடம் விடாமுயற்சிதன்மை இல்லாமல் இருப்பதே காரணம். முயற்சி செய்திருப்பீர்கள். ஒரு முறை அல்லது இரண்டு, மூன்று முறை. பிறகு மனச்சோர்வு ஏற்பட்டு, மற்றவர் கேலி கிண்டலைப் பொருட்படுத்திக் கொண்டு, ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையால் உழன்று, உங்கள் மனத்திற்குள்ளாகவே ஒரு விரக்தி ஏற்பட்டு, உங்கள் கையாலேயே ‘நான் எதற்கும் லாயக்கற்றவன், துரதிர்ஷ்டக்காரன்’ என்று ஒரு சர்ட்டிபிகேட் கொடுத்துக் கொண்டு, துவண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விடுகிறீர்கள். இந்த நிலைக்குக் காரணம் யார்? உங்கள் குடும்பமா? உங்கள் உறவினரா? உங்கள் நண்பர்களா? அல்லது இந்தச் சமுதாயமா? யாருமில்லை. முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம்.

     எப்படி? எந்தத் துறையாகட்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற நிலையில் ஒருவிதப் போட்டி தன்னாலேயே நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் வெறும் முயற்சி மட்டும் நிச்சயமாகப் போதாது. கடின முயற்சி அதாவது விடா முயற்சி தேவையாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தாக வேண்டும். விடா முயற்சி செய்பவனே வென்றவன் ஆகிறான்.

     “வாழ்க்கையிடமிருந்து நீ என்ன கேட்கிறாயோ அதை அது உனக்குக் கொடுக்கும். நீ மட்டும் அதைத் தெளிவாகவும், ‘தொடர்ந்தும்’ கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும்” என்கிறார் நெஸ்பிட் எனும் தத்துவ போதகர்.

     தொடர்ந்து தொடர்ந்து துரத்திக் கொண்டு ஓடிச் செய்யும் முயற்சியே விடா முயற்சி.

     எந்த ஒரு வெற்றியாகட்டும் தானாக வந்து மடியில் விழுவதில்லை.

     “விதைத்தவுடன் அறுவடை செய்து விட முடியாது.”

     “மாத ஊதியம் பெற முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டும்.”

     “ஒரு குழந்தையைப் பெற பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும்.” இதிலென்ன சந்தேகம்? இவ்வாறு காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று பலமாக நம்பிக்கை வைத்துக் கூறும் நீங்கள், நீங்கள் செய்யும் முயற்சியில் ஒருமுறை, இருமுறை முயற்சி செய்துவிட்டு, பலன் உடனே கையில் வரவில்லை என்றால் கோபத்திலும், விரக்தியிலும் தவிப்பது ஏன்? முயற்சியைக் கைவிடுவது ஏன்?”

     “காலமும், பொறுமையும் தான் மல்பெர்ரியிலிருந்து (முசுக்கொட்டை இலை) பட்டுத் துணியைக் கொண்டு வருகிறது” என்பது ஒரு கிழக்கத்தியப் பழமொழி.

     “யார் யார் முயற்சியைக் கைவிடுகிறார்கள் என்று பார்ப்போம்?

     - முதலில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், தன் மேலேயே நம்பிக்கை இல்லாமல், தன் குறிக்கோளையும் நம்பாமல் இருப்பவர்கள் தன் முயற்சியையும் நம்ப மாட்டார்கள். தன் முயற்சிக்கு முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார்கள்.

     - உழைக்கத் தயங்கும் சோம்பேறிகள். இவர்கள் பேருக்கு ஓரிரு முயற்சி செய்துவிட்டு ‘எனக்கு நேரம் சரியில்லை’, ‘எனக்கு சூழ்நிலை சரியில்லை’ என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி முயற்சியைக் கைவிட்டுவிடும் சுகவாசிகள்.

     - தமது திறமையை சரிவரப் புரிந்து கொள்ளாமல் தானே துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதில் முயற்சிகள் பல செய்தாலும், பலன் கிடைக்காமல் கைவிட்டு விடுபவர்கள்.

     - கோழை மனம் படைத்தவர்கள். சின்னச் சின்ன அடிகளுக்கும் துவண்டு போய் அதாவது யாராவது ஒரு வார்த்தை சொன்னால் மனம் ஒடிந்து விடுவது. ஒரு சின்னத் தோல்விக்கு அதல பாதாளத்தில் தலைகுப்புற விழுந்த மாதிரி கலங்குவது போன்ற கோழைகளும் அடுத்த முயற்சி செய்வதில்லை.

     - விதி வசத்தால் பெரிய பெரிய இழப்புக்களை சந்தித்தவர்கள். மிக நெருங்கிய உறவினர் மரணம், பெரிய பொருள் இழப்பு போன்ற இழப்புக்களாலும் முயற்சி கைவிடப்படுகிறது.

     ‘கால்வின் கூலிட்ஜ்’ என்பவர் சொன்ன வார்த்தைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. உங்கள் சாதனை சிலையை செதுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள், உங்கள் ஆழ்மனதில் பொறித்துக் கொள்ள வேண்டிய அந்தக் கல்வெட்டு வார்த்தைகள் இதோ:

     ‘விடாமுயற்சியின் இடத்தை வேறெதுவும் பிடிக்க முடியாது. திறமை அந்த இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனெனில் திறமை இருந்தும் தோல்வியடைந்தவர்களை நாம் நிறையப் பார்க்கிறோம். மதிநுட்பம் அந்த இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனெனில் பலரின் மதிநுட்பம் கண்டு கொள்ளப்படாமலேயே போயிருக்கிறது. கல்வி அந்த இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனென்றால் படித்துப் பாழானோர் பலருண்டு. விடாமுயற்சியும் மன உறுதியுமே எல்லா வல்லமையையும் கொண்டது.

     ஆம்... விடாமுயற்சியின் இடத்தை வேறு எதுவும் பிடிக்க முடியாது. விடாமுயற்சி செய்து தோற்றவர் என்பவர் எவருமில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இன்று ஒரு எடிசன், ஒரு நியூட்டன், ஒரு லிங்கன், ஒரு பீத்தோவன், ஒரு ஷேக்ஸ்பியர் நம்மிடையே இருந்திருக்க முடியாது.

     ஆபிரஹாம் லிங்கன் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவர் முயற்சிகளும், அவர் கண்ட தோல்விகளும் பின்னர் அவர் கண்ட வெற்றியும் மெய் சிலிர்க்க வைக்கும்.

     21வது வயதில் வியாபாரத்தில் தோல்வி.

     22வது வயதில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.

     24வது வயதில் தன் தொழிலில் தோல்வி.

     26வது வயதில் தன் காதலியின் இழப்பு.

     27வது வயதில் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிப்பு.

     34வது வயதில் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.

     45வது வயதில் ஆட்சிக்குழு தேர்தலில் தோல்வி.

     49வது வயதில் மீண்டும் ஆட்சிக்குழு தேர்தலில் தோல்வி.

     பிறகு தனது 52வது வயதில்தான் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போதும், விரக்தி அடைந்து மறுபடியும் முயற்சி செய்யாமல் இருந்தால் அவர் தன் வாழ்க்கையில் இந்த வெற்றியைக் கண்டிருக்க முடியுமா? ஒவ்வொரு முறையும் விழும் போதும் எழாமல் இருந்தால் இந்த வெற்றிக் கொடியை நாட்டியிருக்க முடியுமா? தோல்வி அடையும் போது நாம் ஒவ்வொருவரும் ஆபிரஹாம் லிங்கனை நினைவு கூர்ந்து கொள்ள வேண்டும்.

     ஆபிரஹாம் லிங்கன் மட்டுமல்ல. எத்தனையோ பேர்களை உதாரணங்களாக நினைவு கூறலாம்.

     - கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி அறியாத மாணவர்கள் இருக்க முடியாது.

     - பல்ப்பைக் கண்டுபிடிக்க முயன்ற போது, கிட்டத்தட்ட 10,000 முறைகள் தோற்ற பின் தான் ‘பல்ப்’ கண்டுபிடிப்பில் வெற்றியடைந்தார் தாமஸ் ஆல்வா எடிசன்.

     - தாம் கண்டுபிடித்த காரில் ரிவர்ஸ்கியரை வைக்க மறந்து பலமுறை தோல்வியடைந்து பின்னர் வெற்றி கண்டவர் தான் ஹென்றி ஃபோர்ட்.

     - திறமையற்றவர் எனக் கருதி பல பத்திரிகை ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டவர் தான் ‘மிக்கி மௌஸ்’ படங்களின் ஓவியர் வால்ட் டிஸ்னி. எலிகள் அதிக அளவில் நடமாடிய ஒரு கொட்டகையில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்குமிங்கும் ஓடிய எலிகளின் செய்கைகளைப் பார்த்து அவர் மனதில் தோன்றிய எண்ணப் பொறிதான் ‘மிக்கி மௌஸ்’.

     - மின் காந்த அலைகள் மூலம் செய்திகளை அனுப்பலாம் என்று கூறிய போது மார்க்கோனிக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். பல்வேறு முயற்சிகளில் தோல்வி கண்டு பிறகு வெற்றி பெற்ற அவரது கண்டுபிடிப்பான ‘ரேடியோ’ இல்லாத வீடே இன்று இல்லை எனலாம். பின்னர் வயர்லெஸ் கருவிகள் பலவும் பிறக்கக் காரணமாக இருந்தது இவரது கண்டுபிடிப்பே.

     இது மட்டுமா? மருத்துவத் துறை வல்லுநர்களின் விடா முயற்சி சாதனையை ஒப்பிட முடியுமா? போலியோ, பிளேக், காலரா போன்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடித்ததிலிருந்து அறுவை சிகிச்சையில் நவீன முன்னேற்றங்கள் வரை அவர்கள் சாதித்த சாதனைகள் என்னென்ன? அதற்காக அவர்கள் சந்தித்த சோதனைகளை அளவிட முடியுமா? இவர்கள் அனைவரும் தங்கள் முயற்சியில் பின்வாங்கி இருந்திருந்தால், விடா முயற்சியால் ஈடுபடாமல் இருந்திருந்தால் இன்று நம் நிலை என்ன?

     வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்டுப் பாருங்கள். அதற்குப் பின்னால் எவ்வளவு தோல்விக் கதைகள் இருந்திருக்கின்றன என்று?

     தெய்வத்தால் முடியாத காரியமானாலும் கூட கடும் முயற்சி பலன் தந்துவிடும் என்கிறார் தெய்வப் புலவர்.

     “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
     மெய்வருத்தக் கூலி தரும்.”

     தெய்வத்தால் முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை. முயற்சியின் சிறப்பை வலியுறுத்துவதற்காக திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

     “நாம்... அதாவது நம் உடலிலுள்ள ஜீவகாந்த அணுக்கள் அனைத்தும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு பாடுபடும் போது, திரும்பத் திரும்ப முயற்சி செய்யும் போது, வான் காந்தத் துகள்களே நம் உடலில் ஜீவகாந்த அணுக்களாகப் பரவியுள்ளது என்பதால், நம் எண்ணங்களுக்கு ஏற்ப, வான் காந்த சக்தியும் அதாவது இறை அருளும், அருட்பேராற்றலாக நமக்கு அருள் புரிந்து வெற்றி தரும்” என்று அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் தன் ‘மனவளக் கலை’ மூலமாக நமக்கு அருள்கிறார்.

     “புகழ் பெற்ற அறிவாளிகள், ராஜ தந்திரிகள், வீரர்கள் இவர்களிடம் எல்லா சக்திகளும் முழுமையாக இருந்தன என்று சொல்வதற்கில்லை. இவர்கள் மூலம் தெய்வ சக்திதான் செயலாற்றி இருக்கிறது என்றே கூற வேண்டும்” என்கிறார் அறிஞர் ரஸ்கின்.

     எனவே... முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சி செய்யுங்கள். புலனறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு உள்ளுணர்வு இறையருள் மூலம் உணர்த்தப்பட்டு, இறை சக்தியால் செயலாக்கம் பெற்று மகத்தான சாதனையை நிச்சயம் சாதிப்பீர்கள். முயல், ஆமையிடம் தோற்றது ‘முயலாமை’யால் தான். எனவே இன்றே உங்கள் வாழ்க்கை அகராதியில் ‘முயலாமை’ எனும் வார்த்தையை எடுத்து விடுங்கள். முயற்சி திருவினையாக்கும். விடா முயற்சி வெற்றியை ஈட்டித் தரும். அதனால் ‘விட்டு விடாதீர்கள் விடா முயற்சியை.’