சிலையும் நீயே சிற்பியும் நீயே

28. “உற்சாகம் உங்கள் கையில்!”

     கலைத்துறையாகட்டும், தொழில் நுட்பத் துறையாகட்டும் ஏதேனும் ஒரு துறையில் வெற்றிக் கொடி நாட்ட நினைக்கும் நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? எவ்வாறு வாழ வேண்டும் என்று சிந்தித்தீர்களா? எவ்வாறு வாழ்ந்தால் நீங்கள் நினைத்ததற்கு மேலாகவே உயரச் செல்லலாம். எண்ணியதற்கு மேலாகவே சாதனை புரியலாம் என்று யோசித்தீர்களா? உங்களை உயர்த்தக் கூடிய உன்னத டானிக் ஒன்று இருக்கிறது. அதுதான் “உற்சாகம்”.

     மனதில் உற்சாகம் இருக்கும் போது மலையளவு பிரச்சனை கூட கடுகளவாகி விடுகிறது. மனதில் சந்தோஷம் நிரம்பி வழியும்போது பெரும் கற்பாறை கூட உருகும் பனிப் பாறையாகி விடுகிறது. சரி, உற்சாகமாக இருப்பது எப்படி?

     “மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.” முதலில் உங்களுக்குள் இன்று முதல் அதாவது இந்த நிமிடம் முதல் நான் சந்தோஷமாக இருப்பேன். எப்போது எந்தப் பிரச்சனை வந்தாலும் மனதை ஒரு உற்சாக மனநிலையில் வைத்திருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சனை முடிந்தால் தான் சந்தோஷமாக இருக்க முடியும். இந்த வேலை முடியட்டும் பார்க்கலாம். இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே சந்தோஷமாக இரு என்றால் எப்படி? என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை - ‘பிரச்சனை ஓயட்டும், சந்தோஷமாக இருப்பேன் என்பது அலை ஓயட்டும், மீன் பிடிக்கிறேன்’ என்பது மாதிரிதான்.

     எல்லோருமே அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். ஒரு பிரச்சனை என்று வரும்போது அது முடியும் நேரம் சுத்தமாக நிம்மதி கிடைத்து விடுகிறதா? இல்லையே! அதிலிருந்து வேண்டுமானாலும் விடுதலை கிடைக்கலாம். அடுத்த பிரச்சனை மெல்லத் தலை தூக்குகிறது அல்லவா? ஆக நாம் நினைக்க வேண்டியது என்ன? பிரச்சனைகளுக்கு நடுவிலும் நாம் உற்சாகமாக இருப்பது எப்படி? கவலைகளுக்கு நடுவிலும் நாம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதையே.

     மனிதர்களில் எத்தனையோ வகையான மனிதர்களை அன்றாடம் சந்திக்கிறோம். பெரிய துன்பங்கள் பிரச்சனைகள் இருந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு சமாளிக்கலாம் என்கிற எண்ணத்துடன் வாழ்பவர்கள் சிலர். பிரச்சனைகளே இல்லாவிட்டாலும் கூட இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு மனதிற்குள் உழற்றிக் கொண்டு வாழ்பவர்கள் சிலர். இதிலிருந்து என்ன தெரிகிறது? பிரச்சனை என்பது வெளியில் இல்லை. ஒவ்வொருவர் மனத்திற்குள் தான் இருக்கிறது.

     ஒரு சுவாரஸ்யமான கதை இதோ:

     ஒரு மனிதன் ஒரு துறவியை சந்திக்க வந்தான். துறவியிடம், “சுவாமி, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. பணத்திற்கு எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால் வாழ்க்கையே ஒரே பிரச்சனையாக இருக்கிறது. என்னுடைய கவலைகளைப் போக்க ஒரு வழி சொல்லுங்கள்” என்றூ கேட்டான். அதற்குத் துறவி, “உங்கள் வீட்டில் எத்தனை பேர் வாழ்கிறீர்கள்?” என்று கேட்க, அவனும் “நான், என் மனைவி, இரு குழந்தைகள்” என்றான். உடனே துறவி, “நீ சந்தோஷமாக வசிக்க வேண்டுமானால் நான் சொல்கிறபடி செய். ஒரு கோழி வாங்கி வீட்டில் வைத்து வளர்த்து வா” என்றார். “என்ன ஸ்வாமி விளையாடுகிறார்களா? ஒரு கோழி வாங்கினால் சந்தோஷம் வந்துவிடுமா?” என்று கேட்க, துறவி “நான் சொல்கிறபடி செய். செய்துவிட்டு அடுத்தவாரம் இதே நேரம் என்னை வந்து பார்” என்றார். அவனும் ஒரு கோழி வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். வீட்டினுள் மேய விட்டு பொறுமையாக அதை வளர்த்து, அடுத்த வாரம் துறவியைப் பார்க்கச் சென்றான். “என்னப்பா, சந்தோஷம் கிடைத்ததா?” என்று கேட்க, “இல்லை சுவாமி! கோழி ஒரே அட்டகாசம். இங்கேயும் அங்கேயும் பறந்து கொண்டு எங்கே பார்த்தாலும் அசிங்கம் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் சொன்னீர்களே என்று வளர்க்கிறேன்” என்றான். துறவி சற்று யோசித்துவிட்டு, “கோழி இருக்கிறபடியே இருக்கட்டும். ஒரு நாய்க்குட்டி வாங்கி வளர்த்து வா. அடுத்த வாரம் என்னை வந்து பார்” என்றார். குழம்பியபடியே சென்ற அவனும் துறவி சொன்னபடியே ஒரு நாய்க்குட்டி வாங்கி அதனையும் வளர்க்க ஆரம்பித்தான். ஒரு வாரம் கழிந்தது. துறவியைப் பார்க்க வந்தான் அவன். “என்ன சந்தோஷமாக இருக்கிறாயா?” என்று துறவி வினவ, அவன் “என்னவோ ஒண்ணும் சொல்வதற்கில்லை. கோழி தொந்தரவு பத்தாது என்று நாய் வேறு ஓயாமல் குரைத்துக் கொண்டு ஒரே பிரச்சனை” என்று சொன்னான்.

     துறவி, “சரி, ஒரு மாடு வாங்கி அதையும் கோழி, நாய் இவற்றுடன் வளர்த்து வா. அடுத்த வாரம் வா” என்றார். “என்ன சுவாமி இது?” என்று அவன் குழம்பிப் போய் கேட்க, துறவியும் சொன்னபடி செய்... என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். அவனும் துறவி சொன்னபடியே ஒரு மாடு வாங்கிக் கொண்டு சென்றான். அவனுக்கும், அவன் மனைவி குழந்தைகளுக்கும் கோழி அசுத்தம் செய்ததை சுத்தப்படுத்த, நாய்க்கு அவ்வப்போது உணவு கொடுக்க, மாட்டை மேய விட, குளிப்பாட்ட என்று நேரம் சரியாக இருந்தது. அடுத்த வாரம் ஆஸ்ரமம் சென்ற போது துறவி, “சந்தோஷமாக இருந்தாயா?” என்று கேட்க, “நிம்மதியே சுத்தமாக பறி போச்சு சுவாமி. ரொம்பவே கஷ்டப்படறேன்” என்று சொன்னான். துறவியும் “சரி, நான் சொல்கிறபடி செய். இன்றே கோழி, நாய், மாடு மூன்றையும் யாருக்காவது கொடுத்துவிடு. மறுபடி அடுத்தவாரம் வந்து என்னைப் பார்” என்றார். பெரும் குழப்பத்துடன் சென்ற அவன் அடுத்த வாரம் வந்து துறவியைச் சந்தித்தான். “ஸ்வாமி, ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரு பிரச்சனையும் இல்லை” என்று மிகவும் மகிழ்ச்சியாகச் சொன்னான். அதற்கு துறவி, “மகனே... யோசித்துப் பார். முன்பு முதன் முதலில் நீ இங்கு வந்த போதும் உன் வீட்டில் இது போலத் தான் நீ, உன் மனைவி, இரு குழந்தைகள் மட்டும் இருந்தீர்கள். நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் வீட்டில் ஒரே பிரச்சனை என்று புலம்பினாய். நடுவில் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் பல வந்தன. உண்மையில் பிரச்சனைகள் என்றால் என்ன என்று புரிந்து கொண்டாயா? இப்போது தெரிகிறதா நிம்மதி என்றால் என்ன என்று. அமைதியான வாழ்க்கையை ஆண்டவன் உனக்குக் கொடுத்திருக்கிறான். அனாவசியமாகக் கவலைப்பட்டு நிம்மதியை இழக்காதே” என்று அறிவுரை கூறினார். அவனும் நிம்மதியாக வீடு திரும்பினான்.

     பெரும்பாலும் நாம் அந்த மனிதனின் மன நிலையில் தான் இருக்கிறோம். தேவையற்ற ஆசைகளை மனதில் வளர்த்துக் கொண்டு, தேவையற்ற பிரச்சனைகளை நாமே வரவழைத்துக் கொண்டு, பிறகு பிரச்சனைகளைத் தீர்க்க நிம்மதியை நாடி அலைந்து கொண்டு மொத்தத்தில் உற்சாகத்தை மொத்தமாகப் பறி கொடுக்கிறோம்.

     சரி... பல்வேறு துன்பங்களுக்கிடையேயும் இன்பம் காண்பது எப்படி? சோதனை முட்கள் சூழ்ந்திருந்தாலும் உற்சாகம் என்கிற ரோஜாவைக் கையில் எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

     உங்களுக்குள்ளாகவே ஒரு ரசனைத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ரசனை ஒருவருக்கொருவர் மாறுபடும். சிலருக்கு இசையில் ரசனை. சிலருக்கு ஓவியத்தில் ரசனை, சிலருக்கு இயற்கைக் காட்சிகளை அனுபவிப்பதில் ரசனை, சிலருக்குப் படிப்பதில் ரசனை, சிலருக்கு எழுவதில் ரசனை. இப்படி ரசனைகள் மாறலாம். இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொழுது போக்குகள் எல்லாமே ரசனைகள் ஆகிவிடாது. ஆத்மார்த்தமாக மனம் ஒன்றி ரசிக்கும் ஈடுபாடே ரசனையாகிறது. ரசனைகளை வளர்த்துக் கொண்டு அன்றாடம் சில மணித்துளிகள் அதில் செலவிடும் போது மனம் இலேசாகிவிடுகிறது. துன்பங்களால் பாறையாக கனக்கும் மனது இலவம் பஞ்சாக மாற அங்கு உற்சாகம் துளிர் விடுகிறது.

     ஹெலன் கெல்லர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிறவியிலேயே கண் பார்வை அற்றவர். காது கேட்க முடியாதவர். ஊமை. ஒரு சமயம் அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் அவர் வீட்டிற்குச் சென்றார். அவர் வீட்டிற்குச் செல்லும் வழி, அழகான அருவி, பூந்தோட்டங்கள் என ஒரே இயற்கைச் சூழலாக அழகாக அமைந்திருந்தது. வீட்டை நெருங்கும் போது சற்றுத் தொலைவில் தென்பட்ட ஹெலன் கெல்லரைக் கவனித்தார். ஒரு பூ ஒன்றைக் கையால் தொட்டு, அதன் மென்மையைத் தொட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த நண்பர் முக்கியப் புலன்கள் மூன்றும் வேலை செய்யாத போதே இவர் இவ்வாறு இயற்கையை ரசித்து மனதில் உற்சாகமாக இருக்க முடிகிறது. எல்லாப் புலன்களும் வேலை செய்த போதும், வழியில் தென்பட்ட எந்த இயற்கைச் சூழலையும் ரசிக்க முடியவில்லையே தன்னால் என்று எண்ணி வெட்கித் தலை குனிந்தார்.

     இதிலிருந்து என்ன தெரிகிறது? ரசனையுள்ளவராக இருந்ததால் ஹெலன் கெல்லர் தன் பிறவிக் குறைகளைக் கூடப் பொருட்படுத்தவில்லை. மனதளவில் உற்சாகமாக வாழ்ந்ததுடன் பார்வையற்ற, கேட்கும் பேசும் திறனற்றவர்களுக்கான ‘ப்ரைலி’ எழுத்தைக் கண்டு பிடித்தார். தன் ரசனை உள்ளத்தால் தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வாழ்ந்து அழியாப் புகழ் பெற்றிருக்கிறார்.

     எனவே அழகான இந்த வாழ்க்கையில் சில நுண்ணிய விஷயங்களை ரசிக்கப் பழகுங்கள். அதிகாலைப் பறவைகள் கீச்... கீச்... ஒலி, எங்கோ தூரத்தில் ஒலிக்கும் கோவில் மணி ஓசை, காதோரத்தில் மெல்லியதாகத் தவழ்ந்து வரும் அக்காலத் திரைப்படப் பாடல்கள், எம்.எஸ்.பாடல்களில் மிதந்து வரும் பக்தி மணம், உங்கள் வீட்டு முற்றத்தில் எட்டிப் பார்க்கும் வெண்ணிலவு ஒளி, உங்கள் குழந்தையின் பார்வைப் பிரகாசம், உங்கள் தாத்தாவின் பொக்கை வாய்ச் சிரிப்பு, மனைவியின் இதழோரக் குறுநகை இப்படி ரசிக்க விஷயங்களா இல்லை! எத்தனையோ ரசிக்கும் விஷயங்கள் கண் முன்னே குவிந்து கிடக்க, தேவையற்ற குழப்பங்களால் மனதைக் குழப்பிக் கொள்வது ஏன்?

     மனதில் எந்நேரம் உற்சாகத்துடன் வளைய வருபவர்களைப் பாருங்கள். முகத்தில் ஒரு குழந்தைச் சிரிப்பு. பேச்சுக்கு நடுவே இழையோடும் நகைச்சுவை. ஒரு துடிப்புப் பேச்சு. துள்ளல் நடை. ஒரு கூட்டத்தில் கூட தனியாக ‘பளிச்’ என்று தெரியும் தோற்றம். இவர்களைப் பார்க்கும் போதே நம்மை அறியாமல் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

     நீங்களும் இன்றிலிருந்தே இப்போதிருந்தே உற்சாகமாக இருந்து பாருங்கள். நீங்களும் மாறுவீர்கள். உங்கள் சூழ்நிலையே மாறும். உங்கள் சோதனைகள் சாதனைகளாகும். உங்கள் வேதனைகள் வெற்றிப் படிகளைக் காணும். ஏழ்மை நிலையின் உச்சத்தைக் கண்டவர் தான் பாரதி. ஆனால், துவண்டு போய் விழுந்து விட்டாரா அவர்? “இவ்வுலகம் இனியது, வான் இனிது, காற்றும் இனிது, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, மலை இனிது, கடல் இனிது, எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா... இறைவா...” என்று பாடுகிறார்.

     இயற்கை அளித்த சீதனங்களில் இன்பத்தைக் கண்டு இயன்ற அளவு நீங்களும் உற்சாகமாக இருங்கள். மற்றவர்களையும் உற்சாகப்படுத்துங்கள்.

     ஆம்... உற்சாகம் உங்கள் கையில்!