14

     தேர்தல் தோல்விக்குப் பின் கணக்கு வழக்குகளைத் தீர்க்கவும் எலெக்‌ஷன் வேலையாக அலைந்த வாடகைக் கார்கள் முதலியவற்றுக்குப் பணம் கொடுத்துக் கணக்குத் தீர்க்கவும் சில நாட்கள் தொடர்ந்து அவன் எழிலிருப்பில் தங்கியாக வேண்டியிருந்தது. போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள், தேர்தல் ஸ்லிப்புக்கள் அச்சிட்ட வகையில் நிறையப் பணம் தர வேண்டியிருந்தது. ஒலிபெருக்கி மேடை ஏற்பாடுகள், ஊழியர்களுக்குச் சாப்பாடு, சிற்றுண்டி வாங்கிய ஒட்டல் கணக்கு எல்லாம் நிறையப் பாக்கியிருந்தன. கன்னையாவையும் சர்மாவையும் உடன் வைத்துக் கொண்டு அவற்றை எல்லாம் சரிபார்த்துப் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாகச் செய்தான்.

     ஊருக்குப் புறப்படுமுன் கடைசியாக ஒரு நைப்பாசை திருமலையின் மனத்தில் எழுந்தது. சண்பகமோ போய்ச் சேர்ந்து விட்டாள். இனியும் மகனை அவனுடைய மாமனாகிய சண்பகத்தின் தம்பியிடம் வளரவிட வேண்டிய அவசியமென்ன? மகனைச் சென்னைக்கு அழைத்துச் சென்று டான்பாஸ்கோவிலிலோ, வேறு கான்வென்டிலோ சேர்த்துப் படிக்க வைக்கலாமா என்று தோன்றியது. ஒரு நந்தவனத்துப் பண்டாரத்தோடு தன் மகன் வளர வேண்டாமென்று எண்ணினான் திரு. தானே போய்க் கூப்பிட்டால் நடக்காதென்று தெரிந்தது. சர்மாதான் இதைப் பேசி முடிவு செய்யச் சரியான ஆள் என்று அவரைக் கூப்பிட்டு எல்லா விவரமும் சொல்லி தத்தவனத்துக்கு அனுப்பினான். சர்மாவுக்கு இது சரிவரும் என்று படவில்லை. தயக்கத்தோடுதான் நந்தவனத்துக்குப் புறப்பட்டுப் போனார் அவர். திருமலையின் விருப்பத்தைத் தட்டிச் சொல்ல முடியாமல்தான் அவர் போக வேண்டியிருந்தது. சண்பகத்தின் தம்பி முகத்திலடித்தாற் போல உடனே மறுத்துச் சொல்லி விட்டான். “சாமீ! எல்லாம் படிச்சு நாலும் தெரிஞ்ச நீங்க இந்தக் கிராதகனுக்காக, இப்படித் தூது வரலாமா? பையனை இவங்கூட அனுப் பினா அவன் படிச்சு உருப்பட முடியுமா? மூணு நாலு சம்சாரம்; ஏழெட்டுத் தொடுப்பு. இதோட குடி, சினிமா சகவாசம் இத்தனையும் இருக்கிற எடத்துலே பையன் ஒழுங்காக எப்படிப் படிச்சு வளர முடியும்? நாலு காசுக்கு ஆசைப்பட்டு உங்களைப் போலப் பெரியவுக இந்த மாதிரி விடலைப் பசங்களோட சுத்தறதே எனக்குப் பிடிக்கலே.”

     “என்னப்பா பண்றது? வயித்துப்பாடுன்னு ஒண்ணு. இருக்கே? காலட்சேபம் எப்படியாவது நடந்தாகணுமே?” என்றார் சர்மா.

     “பிச்சை எடுத்தாவது என் மருமகனை ஒழுக்கமாக வளர்த்துப் படிக்க வைப்பேன்னு சொல்லுங்க” என்று கறாராகச் சொல்லி விட்டான் சண்பகத்தின் தம்பி. சர்மா திரும்பி வந்து திருமலையிடம் விவரங்களைச் சொன்னார். சண்பகத்தின் தம்பி உட்பட யாரும் தன்னை ஒரு குடும்பப் பாங்கான மனிதனாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது திருமலைக்குப் புரிந்தது. தேர்தல் தோல்வியைத் தவிர இது இன்னொரு தோல்வியாக அமைந்தது அவனுக்கு. பையனை அவன் மாமனிடம் இருந்து பிரித்து அழைத்துச் சொல்லுவதற்குக் கோர்ட் சட்டம் ஆகியவற்றின் துணையை நாட விரும்பவில்லை அவன். தன்னிடம் வளர்வதைவிட நந்தவனத்துக் குடிசையில் அவன் இன்னும் யோக்கியனாகத்தான் வளர முடியும் என்ற நம்பிக்கை உள்ளுறத் திருமலைக்கும் இருந்தது. தேர்தலில் நிறையப் பணம் செலவாகி விட்டது. மறுபடி சென்னை திரும்பியதும் மற்றவர்கள் படங்களுக்குக் கதை வசனம், பாடல் எழுதுவதைத் தவிர வட்டிக்குக் கடன் வாங்கித் தானே ஒரு படம் எடுத்து விற்றால் கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தோன்றியது. தொழிலில் அவனுக்கு இருந்த செல்வாக்கால் யாரும் கடன் கொடுக்கத் தயாராயிருந்தார்கள். பணத்தைக் கடன் வாங்கிப் படம் எடுக்கத் தொடங்கினான். அதே சமயம் திராவிட முழக்கம் ‘அதிரடி’ பகுதியில் தன் தோல்வியைப் பற்றியும், எழிலிருப்பு ஜமீன்தார் பணத்தைத் தண்ணிராக வாரி இறைத்து வென்று விட்டார் என்றும், தொடர்ந்து எழுதி வந்தான். உண்மையில் ஜமீன்தார் தன்னை விடக் குறைவான தொகையைச் செலவழித்துத்தான் வெற்றி பெற்றார் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. என்றாலும் அரசியலில் நிஜத்தைச் சொல்லிப் பயனில்லை என்று அவன் ஒரு நம்பிக்கையோடு தொடர்ந்து பொய்களைச் சொல்லி வந்தான். தன் எதிரி உண்மையிலேயே நல்லவனாயிருந்தாலும் கூட அவன் நல்லவனில்லை என்று மக்களுக்குச் சித்தரித்துக் காட்டுவதில் எவன் முழுமையாக வெற்றி பெறுகிறானோ அவன்தான் முழுமையான அரசியல்வாதி என்று நம்பினான் திருமலை. மக்களை மூட நம்பிக்கையால் ஏமாற்றி சாமி படத்தில் கையடித்து வாங்கிப் பணம் கொடுத்து ஓட்டுச் சேகரித்தே ஜமீன்தார் வெற்றி பெற்றார் என்று இடைவிடாமல் எழுதி வந்தான் அவன். சிலர் அதை நம்பி அதுதான் உண்மையோ என்று மருளவும் ஆரம்பித்தனர். தேர்தலில்தான் தோல்வியே ஒழியத் திரை உலகில் எப்போதும் போல் அவனுக்கு வெற்றிகள் தொடர்ந்தன. சொந்தமாக எடுத்த படம் டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் நல்ல லாபத்துக்கு விலை போயிற்று, அவனே டைரக்டர், தயாரிப்பாளர் என்றெல் லாம் பெயரைப் போட்டுக் கொள்கிற துணிச்சலும், புகழும் வந்துவிட்டன. அந்த ஆண்டு அவன் எதிர்பாராத விதமாக ஒரு வழக்கில் சிக்கிக்கொண்டு பேரும் பணமும் கெட்டு நஷ்டப்பட்டுத் திண்டாட நேர்ந்தது. இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தில் திருமணம் ஒன்றிற்குத் தலைமை வகிப்பதற்காக அவன் போயிருந்தான். மணப் பெண் கொள்ளை அழகு. சினிமாவில் கதாநாய்கியாக உடனே ‘புக்’ பண்ணி நடிக்க வைக்கலாம் போல அத்தனைக் கவர்ச்சி அந்தப் பெண்ணுக்கு இருந்தது. மணமகன் வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் அத்தனை அழகில்லை: சுமார் ரகம் தான். மணமகள் குடும்பம் தான் அவனுக்கு மிகவும் நெருக்கமான இயக்கத் தொடர்புடையது.

     அந்த மணப்பெண்ணைப் பார்த்தவுடன் மனத்தில் என்ன தோன்றியதோ அதை அப்படியே மேடையில் பேசி விட்டான் அவன்.

     “எங்கள் மணப்பெண் சினிமா நட்சத்திரங்களைப் புறமுதுகிடச் செய்யும் அத்தனை பேரழகுடன் விளங்குகிறார். ஆந்திரத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் அழகிகளைத் தேடியலையும் திரையுலகம் இந்தப் பெண்ணைப் போன்ற தமிழ் அழகிகளை அடையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பெண் மட்டும் நடிக்க வந்திருப்பாராயின் நானே என்னுடைய தயாரிப்பு ஒன்றிற்கு இவரைக் கதாநாயகியாகவே செய்திருப்பேன். கதாநாயகியாகத் திரை உலகில் துழைந்திருந்ததால் வரலாறு படைத்திருப்பார் இவர்” என்று இப்படித் தொடங்கித் தொடர்ந்தது அவனுடைய தலைமை உரை. மணமகனுக்கும், மணமகன் வீட்டாருக்கும் இது பிடிக்கவில்லை. திருமணத் தலைமையில் ‘மணமகள் நடிகையாகியிருக்கலாம்’ என்பது போன்ற பேச்சு என்னவோ போலிருந்தது. கெளரவமாகவும் இல்லை. தலைமை வகிக்க வந்த மூன்றாம் மனிதன் ஒருவன் மணப் பெண்ணின் அழகை அங்கம் அங்கமாக வர்ணிக்க ஆரம்பித்தது வேறு மணமகனுக்கும், அவனை ஒட்டி வந்திருந்த உறவினர்களுக்கும் எரிச்சலூட்டியது. அவர்களுக்கு இந்தத் தலைமை, இதுமாதிரி மேடைப் பேச்சு எதுவுமே பிடிக்கவில்லை. வர்ணனையும், சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்ற பேச்சும் வரம்பு மீறிப் போகவே பெண் வீட்டாரும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் விழித்தனர்.

     ஒரு வழியாக மணவிழா முடிந்தது. திருமலை சென்னை திரும்பினான். ஒரு வாரம் கழித்து அவன் தன்னுடைய புரொடக்ஷன் அலுவலகத்தில் இருந்தபோது யாரோ ஒர் அழகிய இளம்பெண் சூட்கேஸும் கையுமாகத் தேடி வந்திருப்பதாக வாட்ச்மேன் வந்து தெரிவித்தான். உள்ளே வரச்சொன்னால் அவன் தலைமை வகித்து நடத்திய அந்த மணவிழாவின் மணமகள் இரயிலிலிருந்து இறங்கிய கோலத்தில் பெட்டியும் கையுமாக எதிரே நின்றாள்.

     “சார்! உங்களை நம்பித்தான் புறப்பட்டு வந்திருக்கேன். எப்படியாவது என்னை ஹீரோயின் ஆக்கிடுங்க சார்! நான். அந்தக் காட்டானோட குடும்பம் நடத்த முடியாது. அவனுக்கு நான் அழகாயிருக்கிறதே பிடிக்கலே. வாய்க்கு வாய், ‘பெரிய ரம்பையின்னு நினைப்பாடி’ன்னு குத்திக் காமிச்சிக்கிட்டே இருக்கான். கதாநாயகி மாதிரி அழகாயிருக்கேன்னு என்னைப் பத்தி புகழ்ந்து பேசினதுக்காக உங்க மேலே அவனுக்குப் படு ஆத்திரம். என்னாலே இனிமே அந்த நரகத்திலே காலந்தள்ள முடியாது! நானே சொல்லாமல் கொள்ளாமல், புறப்பட்டு வந்திட்டேன்.”

     துணிந்து கணவனையே அவன் இவன் என்று ஏக வசனத்தில் திட்டினாள் அவள். அவன் மணவிழாவில் அவளைப் புகழ்ந்த புகழ்ச்சி அவளுக்கு வீட்டை விட்டு ஓடி வருகிற துணிவையே அளித்திருக்கின்றதென்று திருமலைக்குப் புரிந்தது. அவள் செயலுக்காக அவளைக் கண்டிக்கவும் முடியாமல், பாராட்டி ஏற்கவும் முடியாமல் திணறினான் அவன். தனது பொறுப்பில்லாத பேச்சு புதிதாகத் தொடங்கிய குடும்ப வாழ்வு ஒன்றையே சீரழித்திருப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. தன்னுடைய இணையற்ற சொல்வன்மை தன் காலடியில் ஒர் அழகியைக் கொண்டு வந்து சேர்த்திருப்பதாகவே எண்ணிப் பெருமைப்பட்டான் அவன்.

     மெல்ல மெல்ல அவளை வசப்படுத்திப் படத்தில் கதாநாயகியாக்குவதாக உறுதிமொழி கொடுத்து முதலில் தனக்குக் கதாநாயகியாக்கிக் கொண்டு மகிழ்ந்திருந்தான் திருமலை. சில நாட்களில் விவரமறிந்த அவள் கணவன் திருமலையின் மேல் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தான். சினிமாவில் நடிக்கச் சான்ஸ் தருவதாகப் பொய் கூறித் தன் மனைவியைக் கடத்திச் சென்று கெடுத்து விட்டதாகத் திருமலைமேல் குற்றம் சாட்டியியிருந்தான். ‘அப்டக்‌ஷன்’ (கடத்தல்) என்று வேறு பழி வந்திருந்தது. இந்த விவகாரம் ஒரு நாலைந்து மாதம் கோர்ட், கேஸ் என்று அவனைச் சீரழித்து விட்டது. கணிசமாகச் செலவும் வைத்து விட்டது. சாதாரண மனிதனாக இருந்து கொண்டு ஒரு பெண்ணைப் புகழ்வது வேறு, சினிமாத் தயாரிப்பாளர், இயக்குநராக இருந்து கொண்டு ஒரு பெண்ணைப் புகழுவது அபாயகரமான காரியம் என்பது இன்று அவனுக்குப் புரிந்தது. இந்த விவகாரம் அவன் பெயரைப் போதுமான அளவு கெடுத்து விட்டது. கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு மக்களும் இதை எல்லாம் மறந்து விட்டார்கள் அவனும் மறந்துவிட்டான். அவனை ஓர் அங்கமாகக் கொண்டிருந்த இயக்கம் இம்மாதிரிச் சறுக்கல்களையும், வழுக்கல்களையும் என்றுமே பொருட்படுத்தியதில்லை. மக்களின் மறதியை நம்பித்தான் பலர் அரசியல் நடத்தினார்கள். தேர்தல்களுக்கு நின்றார்கள். வெற்றி பெற்றார்கள். இயக்கங்களை நடத்தினார்கள். பேர் புகழ் எல்லாம் பெற்றார்கள். சட்டமன்றத் தேர்தல்களில் தளர்வுற்றிருந்த அவன் கட்சி நகரவை பஞ்சாயத்துத் தேர்தல்களில் முழுமூச்சுடன் இறங்கியது, பொதுவாக நாட்டில் அகவிலைகள் ஏறியிருந்தன. நல்ல அரிசி கிடைக்கவில்லை. ரேஷன் வேறு. அரிசி விலை பலமடங்கு ஏறியிருந்தது. உடையார் அண்ணாச்சி... உளுந்துவிலை என்னாச்சு என்பது போன்ற கோஷங்களை எதுகை மோனையோடு இயக்கத்துக்கு அவன் எழுதிக் கொடுத்தான். நகரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அதிசயப்படத்தக்க அளவில் அவர்களின் வெற்றி இருந்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை. சென்னை மாநகராட்சியை அவர்கள் பிடித்தார்கள். வேறு பல நகரசபைகள், பஞ்சாயத்துக்களையும் அவர்கள் கைப்பற்றியிருந்தார்கள். மக்கள் தங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியிருந்தது. கையில் பத்திரிகையும், பையில் பண வசதியுமுள்ள அவனுக்கு இயக்கத்தில் எப்போதும் போல் தனிச் செல்வாக்கு இருந்தது. பொதுவாக ஒருவனுடைய அறுபதாவது ஆண்டைத் தான் கொண்டாடுவார்கள். திருமலைக்கோ ஐம்பதாண்டு நிறைந்ததையே ‘பொதுவாழ்வுச் செம்மலுக்குப் பொன்விழா’ - என்று கொண்டாடினார்கள். அரைப் பவுனில் ஒரு மோதிரம் - கட்சிச் சின்னத்தோடு பேரறிஞர் பெருந்தகையாக அவன் வணங்கிய இதய தெய்வமான அண்ணனே அவனுக்கு மேடையில் அணிவித்தார். “சொற்பொழிவுத் தென்றல், என்னருமை இளவல், திரை வசனத் திறனாளர், இயக்கத் தளபதி இன்று பொன்விழாக் காண்கிறார். மணிவிழா நாளைக் காண்பார்” - என அண்ணன் பாராட்டுரைகளைப் பகர்ந்து அவனைப் புகழ்ந்தார்.

     அவனது பொன் விழாவைக் கட்சி கொண்டாடிய சிறிது காலத்தில் இந்தி மொழியைத் தீவிரமாக எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துவதென்ற எண்ணம் இயக்கத்தில் தீர்மானம் செய்யப்பட்டிருந்தது. கட்சியை வளர்க்கவேண்டுமானால் நாளடைவில் தனி நாடு கோரிக்கையை மெல்ல மெல்ல விட்டுவிட வேண்டுமென்று சட்ட விவரம் தெரிந்த, சிலர் தலைவர்கள் மட்டத்தில் வற்புறுத்தி வந்தன்ர். டெல்லியில் மாநிலங்களவைக்குப் போய் வந்தபிறகு அண்ணனின் மனப்பான்மையிலும் சில மாறுதல்கள் வந்திருப்பது போல் தோன்றியது. நாட்டுக்கு ஏற்பட்டிருந்த அந்நிய அபாயங்கள் முற்றித் தோன்றிப் பயமுறுத்திய போதெல்லாம் தனி நாடு கோரிக்கை என்ற ஒரே காரணத்தைக் காட்டியே இந்த இயக்கத்தைத் தடைசெய்து விடுவார்களோ என்று பயம் நிலவியது.

     “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - அது நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” - என்று மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளைப் பலமுறை சந்தித்தவர்களுக்கே ‘கட்சியைத் தடை செய்வார்களோ’ என்ற எண்ணம் மட்டும் பயத்தை உண்டாக்கியது. மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பின் மாநில ஆட்சியையும் கைப்பற்றமுடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் வந்திருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு நாள் ஒரு முக்கிய வேலையாகக் கலந்து பேச வேண்டுமென்று அண்ணன் அவனைக் கூப்பிட்டனுப்பினார்.