23 எதிலும் தர்ம நியாயங்களைப் பற்றிக் கவலைப்பட்டிராத அவன் இயக்கத்து ஆட்கள் அரசியலிலும் அப்படித்தான் இருந்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தை உடனே பயன்படுத்திக் கொண்டு முன்னேறவும், பணம் பண்ணவும் ஆசைப்பட்டார்கள். திரு சித்தஸ்வாதீனம் அற்றவனாகி மாதக் கணக்கில் படுத்த படுக்கையாகி மருத்துவமனையில் விழுந்து விட்டான் என்றதும் அவனது எதிரிகள் பலருக்கு கொண்டாட்டமாகி விட்டது. பத்திரிகைகளில் அவனது இயக்கத்தைச் சார்ந்த ஆட்களே ஜாடைமாடையாக அவனைக் குறிப்பிட்டு ‘லஞ்ச ஊழல் பேர் வழிகள் பதவி விலகியாக வேண்டும்’- ‘சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்டாக வேண்டும்’ என் றெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள். அவன் கட்சிக்காகவும், இயக்கத்துக்காகவும் பம்பரமாக ஓடியாடி உழைத்துக் சிரமப்பட்ட நாட்களைப் பற்றிய விசுவாசம் இப்போது யாருக்கும் இருக்கவில்லை. யானை வலுவிழந்து தளர்ந்து, படுத்தால் எறும்பு கூட அதன் காதில் புகுந்து கடித்துவிட முடியும். கண் முன் விழுந்த எலும்புத் துண்டிற்காகத் தெரு நாய்கள் அடித்துப் பிடுங்கிக் கொள்வது போல், பதவிக்காக மனிதர்கள் நாயாகப் பறந்தார்கள். அசிங்கமான அளவு பதவியை அடைய அவசரப்பட்டார்கள். இவ்வளவிற்கும் நடுவில் வேறு ஏதோ வேலையாக மாநிலத் தலைநகருக்கு வந்திருந்த சின்னக் கிருஷ்ணராஜ உடையார் அவனுடைய அரசியல் எதிரி என்று அவனே கருதியும் வித்தியாசம் பாராமல் அவனை மருத்துவ மனைக்கு வந்து பார்த்து ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போனார். அவருடைய தொடர்ந்த பெருந்தன்மைக் குணம் அவனை வியப்பில் ஆழ்த்தியது. சின்னக் கிருஷ்ணராஜன் பிறந்த அதே ஊரில், அதே ஜமீன் அரண்மனையில் அதே தந்தைக்கு மகனாகப் பிறந்தும் தன்னிடம் ஏன் அந்தப் பெருந்தன்மையும் பண்பாடும் சிறிதும் வளரவில்லை என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. எவ்வளவோ யோசித்தும் பொருள் விளங்காத புதிராயிருந்தது அது. ‘பத்திரிகையாளன் எழில்ராஜா தன்னைக் கடத்தியவர்களிடமிருந்து தந்திரமாக உயிர்தப்பி விட்டான்’ என்று டாக்டர் சொல்லிய பொய் திருவிடம் பல மாறுதல்களை உண்டாக்கியது. சித்தப் பிரமை நீங்கிச் சற்றே தெளிவும் தென்படத் தொடங்கியது அவனிடம். கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடமும் செயற்குழு உறுப்பினர்களிடமும் அவனுக்கு எதிராகக் கையெழுத்து வேட்டை நடப்பதாகக் கன்னையன் மூலம் தகவல் தெரிந்தது. அவனைக் கீழே தள்ளுவதற்குத் தாண்டவராயனே பணம் செலவழிக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிந்தது. தன்னைச் சுற்றியிருந்த எல்லாரும் எல்லாமும் குமட்டியது அவனுக்கு. தன்னைக் காண வந்த தாண்டவராயனைத் தான் திட்டியதும் பார்க்க மறுத்ததுமே இன்று அவன் தன்னை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணமென்று சுலபமாகவே அநுமானிக்க முடிந்தது. நம்பிக்கையின்மையின் காரணமாக எந்தச் சமயத்திலும் மேற்பகுதியில் ராஜிநாமாவை டைப் செய்து கொள்ள ஏற்ற வகையில் அவன் உட்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் இடம் காலி விட்டு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்திருந்தது கட்சி மேலிடம். இப்படிக் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வதுதான் பாதுகாப்பான ஏற்பாடு என்று அவனே கட்சி மேலிடத்துக்கு அன்று யோசனை சொல்லி யிருந்தான். அப்போதுதான் பயப்படுவார்கள், கட்டுப் பட்டு நடப்பார்கள் என்று முதல்வருக்கு அவனே யோசனை சொல்லியிருந்தான். இப்படி வெள்ளைத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் வழக்கம் அதற்கு முன்பு இருந்ததில்லை. இன்று இந்தக் கையெழுத்து அவனுக்கே உலை வைத்துவிடும் போன்ற நிலைமையை உண்டாக்கியிருந்தது. வயதுக்கும் அனுபவத்துக்கும் மதிப்பு, மரியாதை, உழைத்துப் பாடுபட்ட தியாகியை உயர்த்துதல் போன்ற மதிப்பீடுகள் மாறிக் கிடைத்த சந்தாப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு யாரும் எத்தனை பெரிய நாற்காலிக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு அதில் ஏற்கெனவே இருப்பவரைக் கீழிறங்கச் சதி செய்யலாம் என்ற நிலை இன்று ஏன் வந்தது என்று அவனே இப்போது யோசித்தான். உடலும், மனமும் பலவீனமான அந்த நிலையில் படுத்த படுக்கையாக இருந்து அப்படி யோசிப்பது கூடச் சுகமான அநுபவமாக இருந்தது அவனுக்கு.
உலகில் எதிலுமே மதிப்பு இல்லாமல் எதையுமே உயர்வாக நினைக்காமல், எதையுமே நம்பாமல் பணம், பதவி இரண்டுமே குறியாக உள்ள ஒரு தலைமுறையைத் தன் போன்றவர்களே உருவாக்கி விட்டு விட்டோமோ என்று மிகவும் கூச்சத்தோடு இப்போது உணர்ந்தான் அவன், தான் தளர்ந்து விழுந்து விட்டதற்காக உள்ளூர மகிழ வேண்டிய தன் அரசியல் எதிரி உடையார் தன்னைத் தேடி வந்து பார்த்து ஆறுதல் கூறுகிறார். தான் உடல் நலமற்றிருப்பதற்காக உண்மையிலேயே தன்னைத் தேடி வந்து அநுதாபமும் ஆறுதலும் கூற வேண்டிய தன் கட்சிக் காரர்கள் தனக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘வேல்யூஸ்’ என்றும் மதிப்பீடுகள் என்றும் எதைப் பற்றியும் அவன் இளமையில் கவலைப்பட்டதில்லை. அவற்றை அறவே இலட்சியம் செய்யாததோடு கடுமையாக எதிர்த்துமிருக்கிறான் அவன். இன்றோ அவனே அவைகளைப் பற்றிச் சிந்திக்க நேர்ந்திருந்தது. காரணம் அவனே அவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான்.
‘தன் மகன் பிழைத்து விட்டான். அவன் சாகவில்லை’ என்று டாக்டர் சொல்லியதும் அதற்காக அவன் அதுவரையில் நம்பியிராத கடவுளுக்குக்கூட நன்றி கூறத் தவித்தது அந்தரங்கம். நேர்மையையும், கைசுத்தத்தையும் கட்டிக் காக்க எழுத்து மூலம் போராடும் அந்த இளம் பத்திரிகையாளன் தன் மகன் என்றறிந்த போது அவனுக்குப் பெருமிதம் பிடிபடவில்லை. அவனைக் கொலை செய்ய ஆள் ஏவித் தூண்டினோம் என்று நினைக்கவே இப்போது அருவருப்பாக இருந்தது. பதவியும் புகழும் எப்படிப்பட்ட கொலை பாதகத்துக்குத் தன்னை தூண்டி விட்டிருக்கின்றன என்பதை மறுபடி நினைத்துப் பார்த்த போது நாணமாக இருந்தது. ஆயிரம் பேர் புகழ்கிற அளவு உயரத்துக்குப் போய் விடுகிற ஒருவன் - ஒரே ஒருவன் இகழ்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவு கர்வம் படைத்தவனாகி விடுவதைத் தவிர்க்க முடியாது தான். ‘புகழ் கள்ளைவிடப் போதை மிகுந்தது’ - என்று பல முறை பலருடைய வாசகங்களாகக் கேள்விப்பட்டிருந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் இப்போதுதான். அவனுக்குத் தெளிவாகப் புரிவது போலிருந்தது. இன்று இந்தப் பலவீனமான வீழ்ச்சி நிலையில் சுய விசாரணையிலும் சுய விமர்சனத்திலும் ஈடுபட்ட அளவு இதற்கு முன்பு எந்த நாளிலும், எந்த நாழிகையிலும் அவன் மனம் ஈடுபட்டதே இல்லை. தன்னைத் தானே திரும்பிப் பார்த்து உள் முகமாக மடக்கி மடக்கி விசாரிக்கும் ஆத்ம விசாரணை என்பதை எல்லாம் அவன் அநுப விக்க நேர்ந்ததே இல்லை. அந்தந்த விநாடிகளில் எப்படி எப்படித் தோன்றியதோ அப்படி, அப்படி எல்லாம்தான் இதுவரை அவன் வாழ்ந்திருந்தான். முன் யோசனை பின் யோசனைகளில் ஈடுபட அவனுக்கு நேரமிருந்ததில்லை. எந்த முன்னேற்றமும் ஜெட் வேகத்தில் தன்னை நாடி வரவேண்டுமென்று தவித்து ஓடியிருக்கிறான் அவன். தடுக்கி விழுந்து, தளர்ந்து படுத்த பின்பே தான் வந்த வேகத்தில் தன் காலடியில் யார், யார் எது எது சிக்கி, மிதிபட்டு, நசுங்கியிருக்கக் கூடும் என்பதே உணர்வில் பட ஆரம்பித்தது. வேகத்தைப் பற்றி நினைத்து ஓரிரு கணங்கள் பின்னால் திரும்பிப் பார்ப்பதற்கே நிதானம் தேவைப்பட்டது. தலைதெறிக்க முன்னோக்கி ஓடுகிற போதே பின்னால் திரும்பிப் பார்ப்பது என்பது சாத்தியமில்லை. பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டுமானால், முதலில் முன்னோக்கி ஓடுவதிலிருந்து விடுபட்டு நிற்க வேண்டும், அல்லது நிறுத்தப்பட வேண்டும். இப்போது அவன் தளர்ந்து நின்று போயிருந்தான். அல்லது நிறுத்தப்பட்டிருந்தான். முன்னோக்கித் தலைதெறிக்க ஓடாத அல்லது ஓடமுடியாத காரணத்தால் பின்னோக்கித் திரும்பிப்பார்ப்பது இந்த வினாடியில் சுலபமாயிருந்தது. தான் ஓடிவந்த ஜெட் வேகத்தில் தனக்குத் தெரியாமல் தன் சொந்த மகனே மிதிப்பட்டு அழிந்திருப்பானோ? என்கிற பயமும், பதட்டமும் வந்தபோது தான் இன்று அவனுடைய ஓட்டமே நின்றது. நலிந்துபோன மனத்தோடு குழம்பிக் குழம்பி அவன் மன நோயாளியாகவே ஆகியிருந்தான். அவன் தங்கியிருந்த மாடவீதி மருத்துவமனையில் அவனுடைய வழக்கமான டாக்டரோடு அவருக்கு வேண்டிய நண்பரான சைக்கியாட்ரிஸ்டும் அவனை வந்து பார்த்துக் கொண்டிருத்தார். அந்த டாக்டர்களும் வேணு கோபால் சர்மாவுமாக அவனுடைய உடல் நிலை தேறுவதற்கு ஒரு தத்ரூபமான நாடகத்தை அடிக்கடி அவன்முன் நடித்துக்காட்ட வேண்டியிருந்தது. உண்மை நிலைகளையும் வேறு விவரங்களையும் அவனிடம், பேசியோ விசாரித்தோ, அவனைக் குழப்பாமலிருக்க டாக்டர்களும், சர்மாவும் உதவியாளன் கன்னையாவும் தவிர வேறு யாருமே திருவைச் சந்தித்து விடாமலிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரு எது, எதை விசாரித்தால் எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று நர்ஸ்களுக்கும், வேலைக்காரிகளுக்கும் கூட பலமுறை முன்னேற்பாட்டுடன் ஒத்திகை நடத்திச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. தினசரி சைக்கியாட்ரிஸ்ட்டு திருவைச் சந்திக்குப் போது சர்மாவும் அவரோடு உடனிருந்தார். “உங்க மகன் தப்பிச்சுட்டான். மறுபடி ஆபத்தில் சிக்கிக்கக் கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கான். நீங்க கவலைப்படாம இருங்கோ” -என்று சர்மா தன்னிடம் கூறும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் திரு அவரிடம் தன் ஆசையை வெளியிடத் தவறியதில்லை. “சாமீ! ஒரு தடவை அவனை இங்கே கூட்டிக்கிட்டு வாங்க. இல்லாட்டி என்னையாவது அவன் இருக்கிற எடத்துக்குக் கூட்டிக்கிட்டு போங்க... அவனுக்கு என்னைப் பிடிக்காது! என்னைப் பத்தி ரொம்பக் கண்டிச்சுத் திட்டி எழுதியிருக்கான்... இருந்தாலும் அவன் கிட்ட நான் மன்னிப்புக் கேட்கக் கூட அருகதை இல்லாதவன்...” இந்த ஆசையை அவன் கண்ணிரோடும், கலங்கி நெகிழ்ந்த குரலோடும் வெளியிடும் சமயங்களில் எல்லாம், “கொஞ்ச நாள் பொறுத்துக்குங்கோ! அவன் மனசை மெல்ல மெல்ல மாத்தி நானே அவனை இங்கே கூட்டிண்டு வரேன்” - என்று பதில் சொல்லி சர்மா திருவைச் சமாளித்துக் கொண்டு வந்தார். திருவுக்கோ தன் மகன் தன்னைப் பார்க்க ஒப்புக்கொண்டு வருவானா என்பதில் சந்தேகமும் தயக்கமும் இருந்தன. லஞ்ச ஊழல் பேர்வழி பதவியை துஷ்பிரயோகம் செய்து பணம் பண்ணியவன், என்றெல்லாம் தன் மேல் ஏற்கெனவே மகனுக்கு இருக்கும் வெறுப்புக்களைத் தவிரக் கொலைக்குத் தூண்டி விட்டு ஆள் அனுப்பியதே தான்தான் என்ற சந்தேகமும், வந் திருந்தால் அவன் எப்படித் தன்னை ஒரு பொருட்டாக மதித்துச் சந்திக்க வருவானென்ற சந்தேகமும், பயமும், தயக்கமும், கூச்சமும் எல்லாம். திருவுக்குள் இருந்தன. வெளியே விவரித்துச் செல்லவே கூடக் கூசும் இரகசிய காரணங்களாக இருந்தன. அவை, தாறுமாறாகக் கரைகளை அழித்துக் கொண்டு காட்டு வெள்ளமாகப் பெருகிய காரணத்தால் அருமை மனைவியை இழந்திருந்தான் அவன். அரசியலில் தன்னை ஆளாக்கி, உருவாக்கிவிட்ட பொன்னுச்சாமி அண்ணனுக்குத் துரோகம் செய்திருந்தான். சொந்த மகன், மைத்துனன் எல்லோருக்கும் துரோகங்கள் செய்திருந்தான். துரோகங்களை சகஜமான விளையாட்டைப் போல் செய்கிற பலரை உருவாக்கியிருக்கும் இன்றைய சூழ்நிலைக்குத் தானும் ஒரு முன் மாதிரியாக வாழ்ந்திருப்பதாகவே இப்போது அவனுக்குத் தோன்றியது. அவனுடைய எண்ணங்கள் அனைத்தும் வெறும் கழிவிரக்க நினைவுகளாகவே இருந்தன. திருத்திக் கொள் வதற்கு வாழ்க்கை அதிகமாக மீதமில்லாத காலத்தில் ஏற்படும் கழிவிரக்க நினைவுகளால் யாருக்கு என்ன பயன் விளைய முடியம்? ‘நான் முடிந்து கொண்டிருக்கிறேன். என் மகனாவது நல்லவனாக - யோக்கியனாக - யோக்கியதையின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஏற்படுகிற தார்மீக துணிவுடனும் கர்வத்துடனும் உலகில் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் -புகழ் பெறவேண்டும்’ என்று தனக்குள் பிரார்த்தித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான் திரு. இதுவரை பிரார்த்தனைகளை அவன் கிண்டல் செய்திருக்கிறான். இகழ்ந்திருக்கிறான். ஆனால் இன்றென்னவோ தன்னையறியாமலே தன் அருமை மகனின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யத் தோன்றியது அவனுக்கு. அவனுடைய வற்புறுத்தல் பொறுக்க முடியாமல் எழில்ராஜாவைப் பார்த்துப்பேசி அங்கே அழைத்து வருவதாகக் கூறிவிட்டுச் சர்மா புறப்பட்டுப் போனார். அவர் போன சிறிது நேரத்துக்கெல்லாம் உதவியாளன் கன்னையா மாலைத் தினசரியுடனும் ஒரு முக்கியமான செய்தியுடனும் திருவைச் சந்திக்க அவசர அவசரமாக வந்து சேர்ந்தான். அப்போது டாக்டர்கள் நர்ஸ்கள் யாரும் திருவின் அருகில் இல்லை. அதனால் கன்னையனுக்குப் போதுமான தனிமை திருவிடம் கிடைத்திருந்தது. |