13 தேர்தல் வேலைகளில் திருமலை முழுமூச்சாக இறங்கினான். சின்னக் கிருஷ்ணராஜனைப் பற்றி அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்க்காமல் உள்பட்டணத்தோடு சம்பந்தப்படுத்திப் பழைய பூர்வோத்தரங்களை எல்லாம் சொல்லிக் கொச்சையாக எதிர்த்தான் திருமலை. அதற்கு நேர் மாறாகச் சின்னக் கிருஷ்ணன் தன்னை எதிர்க்கும் தனிநபர்கள், பெயர்களைக் குறிப்பிடாமல் தன்னால் மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்ய முடியும் என்று. மட்டும் பிரச்சாரம் செய்தார். சின்னக் கிருஷ்ணனின் இந்தப் பண்பு பலரால் பாராட்டப்பட்டது. பெரும்பாலோரால் வரவேற்கப்பட்டது. திருமலை சண்பகத்தைத் தள்ளி வைத்திருப்பது சொந்த மகனைப் படிக்க வைக்கக் கூடப் பண உதவி செய்யாமல் தன் சுகத்துக்காகப் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது ஆகிய விவகாரங்களைப் பற்றி எதிர்த் தரப்பினர் பதிலுக்குப் பேச ஆரம்பிப்பார்களே என்று யாரும் யோசிக்கவே இல்லை. ஒரே ஒருவர் யோசித்து அதுபற்றி அவனை எச்சரித்தார். “தம்பீ! உங்க பூர்வோத்தரமும் மத்ததும் இந்த ஊர்லே எல்லோருக்கும் நல்லாத் தெரியும். அதனாலே கோவில் குளம் பக்தி இதுகளிலே தீவிர நம்பிக்கையுள்ள மேல் தட்டு மக்களில் யாருடைய ஓட்டும் உங்களுக்குக் கிடைக்காது. அவர்களுக்கு உங்க மேலே நம்பிக்கை வர்ற மாதிரி நீங்க உடனே எதினாச்சும் பண்ணியாகணும்.” “எதினாச்சும் பண்ணியாகணும்னு நான் திடீர்னு அனுமாருக்கு வடைமாலை போடவோ, பெருமாளுக்குத் திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைக்கவோ முடியாது. அதுக்கு ஒருநாளும் என் மனச்சாட்சி சம்மதிக்காது. வேணும்னா ஒரு காரியம் பண்ணலாம்! நம்ம வேணு கோபால சர்மா முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலே உள்ளூரிலே தமிழாசிரியரா இருந்து ஓய்வுபெற்றவர். முக்கால்வாசி வாக்காளர்கள் அவருடைய மாணவர்களாக இருந்திருப்பார்கள். அவர் பக்தி, கோவில், குளம், சம்பிரதாயம் பழைய பழக்க வழக்கங்கள் எல்லாத்திலேயும் நம்பிக்கை உள்ளவர்தான். அவருக்கு ஒரு மணிவிழா நடத்தி தடபுடல் பண்ணி அதன் மூலமாக மேல்தட்டு ஒட்டுக்களை நம்ம சைடிலே திருப்ப முடியுமான்னு பார்க்கணும்.” “மணிவிழான்னு போட முடியாது. அவருக்கு ஏற்கெனவே அறுபது முடிஞ்சு போச்சுங்க...” “மணிவிழாவுக்கும், அறுபதுக்கும் சம்பந்தம் இருந்தாகணும்னு ஒண்ணும் கட்டாயமில்லை. எப்ப யாருக்கு, மணிகுடுக்கிறோமோ அதுதான் மணிவிழா! இப்ப சர்மாவுக்கு மணிவிழா! போஸ்டரிலும் அழைப்பிதழிலும், எல்லாத்திலியும் ‘வித்தகர் வேணுகோபாலனார் மணி விழா’ன்னு பிரிண்ட் பண்ணுங்க. சர்மான்னு பேரு வேணாம். தலைவர் திரு. நடத்தும் ‘வித்தகர் வேணு கோபாலனார் மணி விழா’ன்னு போஸ்டர் போடுங்க. வேணுகோபாலனார் படத்தையும் எம் படத்தையும் அந்த ஆளுயரப் போஸ்டர்லே அச்சுப் போட்டு, உள்பட்டண வெளிப்பட்டண அக்ரஹாரங்கள், சந்நிதித் தெருக்கள் எல்லாத்திலியும் நிறைய ஒட்டுங்க...” “நல்ல ஐடியா! செஞ்சிடலாம்.” மணிவிழா எற்படாயிற்று. மணிவிழாவில் வேணு கோபாலனார்க்குப் பொன்னாடை போர்த்தி மலர்க் கிரீடம் சூட்டித் திரு பேசினான்:
“மாற்றான் தோட்டத்திலே மலர்ந்ததாயினும் ஏற்றதொரு நறுமலரை அதன் மணத்தை மதிப்பவர்கள் நாங்கள். ஏறக்குறைய முப்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக இங்கே தமிழ்த் தொண்டாற்றிய இந்தப் பெரியவரைக் காங்கிரஸார் ஏன் கவனிக்கவில்லை? உள்பட்டணத்துப் பண மூட்டைகள் இந்த ஏழைத் தமிழ்த் தொண்டருக்கு ஏன் உதவ முன் வரவில்லை? இவர் மந்தி நிகர் இந்தி மொழியைப் பரப்பப் பாடுபட்டிருந்தால் தொந்திகள் குலுங்க உள்பட்டணத்துப் பெருந்தனக்காரர்கள் இவருக்கு உதவிட ஓடோடி வந்திருப்பார்கள். இவர் பாடுபட்டதோ ஏழைத் தமிழுக்காக. பாடுபட்டவர்கள் நாதியற்றும் போகலாகாது என்ற அக்கறை எங்கள் இயக்கத்துக்கு மட்டுமே உண்டென்பதை நாடறியும், நானிலம் முழுவதுமே அறியும். நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை” - என்பதாக முழக்கித் தள்ளினான் திருமலை.
உள்ளுர் மக்களில் பெரும்பாலோர் அநுமார்மேல் அசையாத நம்பிக்கையும் பயபக்தியும் உள்ளவர்கள். பெரும்பாலான பாமர மக்களிடம் அந்த எழிலிருப்புத் தேரடி அநுமார் படத்தை நீட்டி வலது கையில் சத்தியம் வாங்கிக் கிருஷ்ணராஜனுக்கே ஓட்டுப் போடுமாறு காதும் காதும் வைத்தாற்போல் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் ஜமீன்தாருக்காக வேலை செய்தவர்கள். தேர்தல் நாள் நெருங்க நெருங்கப் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. பரம்பரைப் பெரிய மனிதனை மதிக்கவேண்டும் என்ற தழும்பேறிய மனப்பான்மை ஊரில் அதிகமாக இருந்தது. உள்பட்டணத்து அரச குடும்பத்தைக் கேரக்டர் அஸாஸினேஷன் செய்வது போல் திருமலையும், அவன் தரப்பினரும் பேசிய பேச்சுக்கள் சுவரில் எழுதிய கன்னா பின்னா எழுத்துக்கள் எல்லாமே நேர் எதிரான பலன்களை அளித்தன. அந்த எழுத்துக்களைப் பார்த்தபின், பேச்சுக்களைக் கேட்ட பின் மக்களுக்கு உள்பட்டண அரச குடும்பத்தினர் மேல் மரியாதை அதிகமாயிற்றே ஒழியக் குறையவில்லை. எழிலிருப்பு போன்ற பழமையான ஜமீன் நகரங்களில் ‘நெகடிவ் அப்ரோச்’ எடுபடவில்லை. சினிமாவில் சம்பாதித்த பணத்தைத் தண்ணிராய் ஓட விட்டுச் செலவழித்தும், முழுமூச்சாக எதிர்ப்புப் பிரச்சாரத்தில் இறங்கியும் ஜெயித்து விடலாம் என்று திருமலையால் முழுமையாக நம்ப முடியவில்லை. தேர்தலுக்குப் பத்துப் பதினைந்து நாள் இருக்கும் போது, இருந்தும் பயனில்லை செத்தும் பயனில்லை என்பது போல் சண்பகம் அவனுக்கு மகத்தான கெட்ட பெயரை உண்டாக்கி விட்டுப் போய்ச் சேர்ந்தாள். நந்தவனத்து மனோரஞ்சிதப் புதரடியில் பாம்பு கடித்து இறந்து போன சண்பகத்துக்குச் சிறுவன் ராஜா தலையை மொட்டை அடித்துக் கொண்டு கொள்ளிச் சட்டி ஏந்தி அந்திமக்கிரியைகள் செய்தான். திருமலைக்கு யாரும் வந்து தகவலே சொல்லவில்லை. தன்னுடைய தேர்தல் அலுவலக மாடியிலிருந்து ஒரு பாடையைப் பின்பற்றி யாரோ ஒரு சில உறவினர்களுடன் முன்னே ஒரு சிறுவன் மொட்டையடித்துக் கொண்டு சுடாமல் இருக்க உறி போல் கட்டிக் கொள்ளிச் சட்டியைப் பிடித்துப் போவதையும் கூடத் திருமலையே பார்த்தான். போவது தன் மூத்த மனைவி சண்பகத்தின் பிணம் தானென்பதையோ, கொள்ளி ஏந்திச் செல்வது தன் மகன் தான் என்பதையோ அவனால் அனுமானிக்க முடியவில்லை. மாலையில் தான் விவரம் அவனுக்குத் தெரிந்தது. நந்தவனத்துக்கு ஓடினான். சண்பகத்தின் தம்பியோ மகன் ராஜாவோ அவனிடம் முகம்கொடுத்துப் பேசவே இல்லை. “எலெக்ஷனுக்குத்தானே வந்திருக்கீங்க. எலெக்ஷன் வேலையைப் போய்க் கவனியுங்க” - என்று வேறு எகத்தாளமாகப் பேசி விட்டான் சண்பகத்தின் தம்பி. வைக்கோற்போரில் தீப்பற்றுவது போல், ‘உள்ளூரிலேயே இருந்துக்கிட்டுச் சொந்த சம்சாரத்தோட சாவுக்குக் கூட எட்டிப் பார்க்காத கல் நெஞ்சுக்காரன் ஐயா அந்தத் திருமலை’ - என்று இச் செய்தி எங்கும் நெருப்பாகப் பரவிவிட்டது, அவன் கல்நெஞ்சுக்காரன், ஈவு இரக்கமில்லாத படுபாதகன் என்பது போல் அவனுக்கு எதிராகப் பரவியவற்றை அந்தச் சமயத்தில் மேடை போட்டு மறுத்துப்பேசவும் முடியவில்லை. உண்மையிலேயே அவன் சண்பகத்தின் சாவுக்குப் போக முடியாமல், ஊரறியத் தன் அநுதாபத்தைக் காட்ட முடியாமல் விதி சதி செய்து விட்டது. விதியில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது என்றாலும் அப்போது நம்பாமலிருக்கவும் முடியவில்லை. இம்மாதிரி அபக்கியாதிகள் எழிலிருப்பைப் போன்ற ஊர்களில் ஏற்படும்போது அவற்றைச் சுலபத்தில் பிரசாரம் செய்து மறுத்தோ, மேடை போட்டுப் பேசியோ மாற்றி விட முடியாதென்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது. இவ்வளவுக்கும் உள்பட்டணத்தார் தரப்பில் யாரும் இந்தச் சம்பவத்தை எடுத்துச் சொல்லிப் பேசவோ, பிரசாரம் செய்யவோ முயலவில்லை. கிருஷ்ணராஜனே அதைத் தடுத்து விட்டாராம். ஆனால் பிரசாரமே செய்ய அவசியமில்லாமல் அது பரவியது. கணிசமாக அவன் பெயரைக் கெடுத்தது. சண்பகத்தின் எதிர்பாராத திடீர் மரணத்துக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் தேர்த லின் போக்கையே பாதித்துத் திசை திருப்பி மாற்றி விட்டது. அது. அவளுடைய சாவு அவனுடைய வெற்றி நம்பிக்கையயும் சேர்த்துக் கொன்று விட்டது. இவ்வளவுக்கும் கிருஷ்ணராஜன் மிகவும் பண்போடு தன் தேர்தல் அலைச்சல்களுக்கு நடுவில் எங்கேயோ ஒர் ஐந்து நிமிஷம் திருமலையைத் தனியே சந்தித்துச் சண்பகத்தின் மரணத்துக்காக முறைப்படி துக்கமும் விசாரித்து விட்டார். தேர்தல் நாளுக்கு முன்னமேயே திருமலையின் தரப்பில் வேலை செய்தவர்களிடம் ஒரு சோர்வு வந்துவிட்டது. சோர்வும், அவநம்பிக்கையும் அவர்களைத் தளர்த்திவிட்டன. தேர்தல் முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் இருந்த நிலைமையைப் பார்த்தால் திருமலைக்கு டெபாஸிட் பிழைக்குமா என்றே சந்தேகமாக இருந்தது. ஆனால் பின்னால் சில தொகுதிகளில் அவனுக்குக் கிடைத்த ஓட்டுக்கள் நிலைமையைச் சரிப்படுத்த உதவின. பத்தாயிரத்து எழுநூற்றெண்பது ஒட்டுக்கள் அதிகம் பெற்று உள்பட்டணம் கிருஷ்ணராஜன் வெற்றி பெற்று விட்டார். திருமலைக்கு டெபாஸிட் போகாமல் பிழைத்து மானத்தைக் காப்பற்றியது. தேர்தல் முடிவு டெக்ளரேஷனில் கையெழுத்துப் போடும் போது “ஒரு மரியாதைக்கு அவரைக் கங்கிராஜுலேட் பண்ணிட்டு வாங்க” -என்று தன் உதவியாளன் கன்னையா தன்னிடம் சொன்னதைத் திருமலை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. எவ்வளவோ பேரும் புகழும், பணமும் வந்தும் திருமலையிடம் ‘கல்ச்சர்’ என்ற அம்சம் பூஜ்யமாகவே இருப்பதைப் பார்த்து உதவியாளன் கன்னையா உள்ளுற வருத்தப்பட்டான். பணவசதி, படாடோபம், ஜமீன் ஆட்சியுரிமை, எல்லாம் பறிபோன பின்பும் உள்பட்டணத்து அரச வம்சத்தினரிடம் ஒட்டிக் கொண்டிருந்த பண்பாடும் பெருந்தன்மையும் மட்டும் குன்றாமல் குறையாமல், அப்படியே இருந்தன. அதைக் கண்டும் அவர்கள் மேலே பொறாமைப்படுவதைத் தவிரத் திருமலையால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவனது இயக்கம் முதல் முதலாகத் தேர்தலில் இறங்கி எப்படியோ மாநிலம் முழுவதுமாகச் சேர்த்து ஒரு பத்துப் பதினைந்து இடங்களில் சட்டசபை உறுப்பினர் பதவியைக் கைப்பற்றியிருந்தது. எதிர்பார்த்ததைவிட இது குறைவுதான் என்றாலும் அரசியலில் பதவியைப் பிடிக்கும் முயற்சிக்கு ஆரம்பம் கிடைத்து விட்டதற்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். |