15 கட்சிக்கும் இயக்கத்துக்கும் வேண்டியவரான ஒரு வழக்கறிஞர் வீட்டில் அண்ணன் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார், அவன் போய்ச் சேர்ந்த போது அவனை மிகவும் பிரியத்தோடு வரவேற்றார். அண்ணனோடு இயக்க மூலவர்கள் என்று அவன் கருதிய வேறு சிலரும் இருந்தனர். தேர்தல் செலவுகளுக்கான நிதி வசூல், மாவட்ட வாரியாக இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நாடகங்கள் நடத்துதல், தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒரு தீவிரமான போராட்டத்தில் ஈடுபடத் தயார் செய்வது ஆகிய வேலைகளில் நாடகங்கள், மாணவர்களைத் தயார்நிலைக்குக் கொண்டுவருவது ஆகிய இரண்டையும் அவன் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கருதியது. உரிமையோடு, “தம்பீ இவையிரண்டிற்குமே உன்னைத் தான் நம்பியிருக்கிறேன்” - என்று அண்ணனே உத்தரவிட்டு விட்டார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றோடும் எதையும் தாங்கும் இதயத்தோடும் செயல்பட வேண்டும் என்றார். தவறு செய்பவர்களை மன்னிக்கவும் மறக்கவும் பழகவேண்டும் என்றார். தவறு செய்யாமலே கூட மற்றவர்களைக் குற்றம் சாட்டத் தயாராயிருந்தனர் சிலர். ‘கலைஞர்களின் செல்வாக்கினால் இயக்கம் வளர்ந்திருக்கிறதா? அல்லது வளர்ந்து விட்ட இயக்கத்தின் செவ்வாக்கினால் கலைஞர்கள் புகழும் பொருளும் பெறுகிறார்களா?’ - என்றொரு சர்ச்சை திருமலையை விரும்பாதவர்களால் எழுப்பப்பட்டது. இயக்கத்துக்குள்ளேயே தன்மேல் கோபமும் பொறாமையும் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது திருமலைக்குத் தெரிந்தது. ஆனால், அந்தப் பொறாமை அவனை வீழ்த்திவிட முடியவில்லை. வேலூரிலும், மதுரையிலும் கூடிய இயக்க மாநாடுகளில் ஏற்கனவே இருந்த யார் யாரோ காணாமற் போனாலும் தொடர்ந்து இவன் இருந்தான். பெயர் பெற்றான். விருதுநகர்த் தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று. பெயரிடக்கோரி உண்ணாவிரதமிருந்தார். அவருடை கோரிக்கைக்குக் காங்கிரஸ் அரசு செவி சாய்க்கவில்லை. தன் இதய தெய்வமாகிய அண்ணனுடன் அவனும் சென்று விருதுநகர் முதியவர் சங்கரலிங்கனாரைச் சந்தித்து அவருக்கு மரியாதை செலுத்த முடிந்ததில் பெருமைப்பட்டான் திருமலை. ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று தம் கட்சிக்குத் துணிந்து பெயர் வைத்திருந்தவர்கள் அதே பெயரை மாநிலத்திற்கு வைக்காமல் வீண் பிடிவாதம் பிடித்தார்கள், சங்கரலிங்கனாரைப் போய்ப் பார்த்து மரியாதை செய்ததன் மூலம் மக்களிடம் தங்களுக்கு மரியாதை தேடிக் கொண்டார்கள் அவர்கள். 78 நாட்களுக்குப் பின் சங்கரலிங்கனார் உயிர் நீத்தபோது ஆட்சியின் வீண் பிடிவாதம் அவர்களுக்குப் புகழ் சேர்ப்பதாயில்லை. திருமலை வகையறா இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு முன்னை விடப் பொது மக்களிடம் தங்கள் மதிப்பும், மரியாதையும் பெருகத் தக்க விதத்தில் பல காரியங்களை அடுத்தடுத்துச் செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டது. 1962-இல் சீன ஆக்ரமிப்பின் போது அவர்கள் இயக்கம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டது. கை விட வேண்டும் என்று சிலர் வற்புறுத்திய பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடவும் இதுதான் தருணம் என்று தோன்றியது. அந்நிய ஆக்ரமிப்பிற்கு எதிராக நேரு பெரு மகனாரின் கரத்தைப் பலப்படுத்த வேண்டுமென்று இயக்கத் தலைமை விடுத்த பெருந்தன்மையான அறிக்கை மக்களை மிகவும் கவர்ந்தது. அந்த இயக்கத்துக்குப் பக்குவமும் விவேகமும் இருப்பதை மேலும் நிரூபிப்பது போல் மற்றொரு காரியமும் நிகழ்ந்தது. பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் இயக்கமே நசுங்கி அழியும்படி விட்டுவிடுவதா அல்லது பிரிவினைக் கோரிக்கையைத் தியாகம் செய்து விட்டு இயக்கத்தை மட்டும் வளர்ப்பதா என்று - முடிவுசெய்ய வேண்டிய தருணம் வந்தபோது சமயோசிதமாகப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுவதாக இயக்கத் தலைமை அறிவித்தது. ‘கண்ணிர்த் துளிகள் பதவி ஆசைக்காகத் திராவிட நாடு கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்’ - என்று கிண்டல் செய்தவர்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. திருமலையோ அண்ணனின் தீர்க்க தரிசனத்தையும், அரசியல் தொலை நோக்கையும் வியந்தான். தன் போன்றவர்களையும் இயக்கத்தையும் கட்டிக் காத்த இதய தெய்வத்துக்கு நன்றி கூறினார்கள் அவர்கள். திருமலையைப் போன்று அண்ணனுக்கு ஒரிரு ஆண்டுகள் இளமையாக இருந்த மூத்த தலைவர்கள் கூடப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது பெரிய ராஜ தந்திரம் என்று கருதினார்கள். சீன ஆக்ரமிப்பின் போது நேரு பெருமகனார்க்கு அளித்த ஆதரவின் மூலம் இயக்கம் ‘சிறுபிள்ளைத்தனமானது இல்லை, பொறுப்புள்ளது’ என்ற நம்பிக்கை வந்திருந்தது. அவனைப்போல் நாடகம் திரைப்படம், என்று இயக்கத்தில் வேறு கலைகள் மூலம் பயனடைந்து வந்தவர்களை ஒடுக்க வேலூர் மகாநாட்டில் அதை ஒரு பிரச்னையாக்க முயன்றவர்களை அண்ணன் வாயடைக்கச் செய்த விதம் திருவை மலைக்கச் செய்திருந்தது. நீண்ட காலத்துக்கு அவன் அதை மறக்கவில்லை.
அவன் இயக்க வேலைகளாக அலைந்து அடுத்து வர இருக்கும் பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்ட ஊரூராக நாடகங்களும், கூட்டங்களும் போட்டுக் கொண்டிருந்த போது ஒர் இரவு செங்கல்பட்டில் நாடகம் முடிந்து இரவு இரண்டு மணிக்குக் காரில் சென்னை திரும்பினான். அவன் வழக்கமாக இரவு போய்த் தங்கும் இரண்டு மூன்று வீடுகளில் மிகவும் இளம் வாளிப்பான ஒரு நடிகையின் வீட்டுக்கு எப்போதும் போல் அன்றும் போனான். அந்த நடிகையை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்குக் குடியேறச் செய்து வீடு வாங்கிக் கொடுத்து இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடிக்க வைத்து முன்னேற்றியதே அவன்தான். ஏறக்குறையத் தன்னோடு மட்டும் தான் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று இவன் அவளைப் பற்றி நம்பிக் கொண்டிருந்தான்.
ஆனால் அன்று செங்கல்பட்டில் இயக்க நாடகம் முடிந்து அவன் அவள் வீட்டிற்குச் சென்ற போது இவனுக்குப் போட்டியாக முளைத்திருந்த வேறொரு பணக்காரத் தயாரிப்பாளர் டைரக்டரின் கார் அங்கே அவள் விட்டு போர்டிகோவில் நின்று கொண்டிருந்தது. இரத்தம் கொதித்தது இவனுக்கு. அந்த நடிகை தனக்குத் துரோகம் செய்துவிட்டதாக இவன் எண்ணினான். தான் இப்படித் துரோகங்களைத் தன்னையே நம்பிவந்த சண்பகம் தொடங்கி எத்தனையோ பெண்களுக்குச் செய்திருப்பது அப்போது அவனுக்கு நினைவு வரவில்லை. அந்தத் தயாரிப்பாளர் வந்து போனது பற்றி அலட்டிக் கொள்ளாமல், அவர் போன பின் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து இவன் வந்திருந்தால் ஒருவேளை இவனையும் சிரித்துக் கொண்டே அவள் வரவேற்றிருக்கக் கூடும்தான். ஆனால் திருமலைக்கு இப்போது வெறி மூண்டு விட்டது. தான் பரத்தனாயிருக்கும் அதே வேளையில் தன்னிடம் பழகும் ஒவ்வோர் அழகிய பெண்ணும் பத்தினியாயிருக்க வேண்டும் என்று எண்ணும் சுயநலமான சிந்தனை அவனிடம் என்றுமே இருந்தது. தனக்கு அடிமை போலிருந்த சண்பகத்தை அவன் பெரிதாக ஒன்றும் வாழ வைத்துவிட வில்லை. தன்னிடம் அழகிய உடலை ஒப்படைத்து. இணைந்திருந்த மற்றொரு பெண்ணிடமும் அவன் துரோகியாகவே நடந்து கொண்டான். தான் யாருக்கும் துரோகம் செய்யலாம், தனக்கு யாரும் துரோகம் செய்ய நினைக்கவும் கூடாது என்கிற இந்த நிலப்பிரபுத்துவ மனப்பான்மையின் வேர் அவனுள் ஆழ இறங்கியிருந்தது. திரு அங்கே தோட்டத்தில் துணிகள் காயப் போட்டிருந்த ஒரு புத்தம் புது நைலான் கயிற்றை இழுத்துத் தயாராக வளையம் போட்டு வைத்துக் கொண்டு அவர்கள் இருந்த ஏ. சி. அறையின் வாயிலில் காத்திருந்தான். பஞ்சமா பாதகங்களில் அவன் முழுத் தகுதியடையக் கொலை ஒன்று தான் இதுவரை மீதமிருந்தது, இன்று அதையும் செய்யக் கூடிய வெறி அவனுக்குள் வந்திருந்தது. படங்களிலும், நாடகங்களிலும், கதைகளிலும் பார்த்துக் கொலை என்பது சுலபமானது, செய்ய முடிந்தது, செய்யக் கூடியது என்றெல்லாம் தோன்றினாலும், கைகளும், மனமும் நடுங்கின. உடம்பில் வேர்த்துக் கொட்டியது. கொஞ்ச நேரம்தான் அப்படி. பின்பு அவனுக்குத் துணிவு வந்துவிட்டது. அவளும் அவனும் சிரித்தபடியே ஏ.சி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது மறைந்திருந்த அவன் தயாராக நைலான் கயிற்றில் செய்து வைத்திருந்த வளையத்தை அந்த ஆளின் கழுத்தில் கச்சிதமாக விழுகிறபடி வீசிக் கயிற்றின் இரண்டு நுனிகளையும் விரைந்து சுண்டி இழுத்து இறுக்கியபோது ஒரே சமயத்தில் இரண்டு அலறல்கள் எழுந்தன. ஒன்று மாட்டிக் கொண்டவனுடையது. மற்றொன்று அவளுடையது. கயிற்றை அவன் கைகள் இழுத்து இறுக்கிய வேகத்தில் குரல்வளையும் ஒடுங்கி ஓய்ந்தன. ‘ஏதாவது மூச்சு விட்டால், நீயும் தொலைந்தாய்’ - என்று சைகையினாலேயே அவளையும் மிரட்டினான். வாசலில் இருந்து கூக்குரல் கேட்டு ஓடி வந்த கூர்க்காவை அவளைக் கொண்டே திருப்பி அனுப்பச் செய்தான். கொலையுண்ட ஆளை அவர் காரிலேயே சாய்ந்தார் போல உட்கார வைத்து நள்ளிரவில் கடற்கரையோர உட்சாலையில் கொண்டு போய் விட்டுத் திரும்பினான். பல ஆண்டுகளுக்கு முன் எழிலிருப்பு ஜமீனின் உள்பட்டணத்திலிருந்து அவனை இப்படிச் சிலர் கொலை செய்ய முயன்று அடித்துக் கொண்டு வந்து தேரடியில் போட்டபோது அவன் அப்பாவி; அநாதை, இன்றோ வாழ்க்கையின் சகலவிதமான சூதுவாதுகளும் வெற்றி மார்க்கங்களும் தெரிந்த அரசியல்வாதி. அவனால் முடியாதது எதுவுமில்லை. அன்றிரவு முழுவதும் கட்சி நாடகக் குழுவுடன் செங்கல்பட்டில் இருந்ததாகப் பக்காவான அலிபி தயாரிக்க முடிந்தது. விரோதிகளை விரைந்து அழித்துவிடத் துணியும் அரசியல் எச்சரிக்கையுணர்ச்சி தான் இந்தக் கொலையை அவன் செய்யத் தூண்டியது. வெற்றிப் பாதையில் தனக்கு இடையூறாக இருப்பவர்களை அகற்றுவதும் அப்புறப்படுத்துவதும் தவறில்லை என்ற உணர்வு அரசியலில் சகஜமானதாக நினைக்கப் பட்டது. இந்தக் கொலைக்குப்பின் அவனிடம் ஒர் அடிமையைப்போல் படிந்து, பணிந்து வழிக்கு வந்திருந்தாள் அந்த நடிகை. போலீஸார் கொலையின் தடையங்களை அடைய முடியாமல் திணறி இறந்தவனின் கார் டிரைவர், கடற்கரையில் வழக்கமாகச் சுற்றும் சில ரெளடிகள், ஆகியவர்களைப் பிடித்து வைத்து லாக்கப்பில் விசாரிக்கத் தொடங்கியிருந்தனர். திருமலையும், சம்பந்தப்பட்ட இளம் நடிகையும் சந்தேகத்துக்கே உட்படவில்லை. மிகவும் திறமையாகத் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு அந்த நடிகையையும் காப்பாற்றியிருந்தான் அவன். ‘பஞ்சமா பாதகங்கள்’ என்று சொல்கிறார்களே, அதில் ஏறக்குறைய எல்லாவற்றையுமே தாட்சண்யமும், பயமுமின்றித் தன்னால், உடனே செய்ய முடியும் என்ற நம்பிக்கை இப்போது அவனுக்கு வந்திருந்தது. தனக்குப் பிடித்தமான அழகியிடம் போட்டி ஆளாக வந்து தொல்லை கொடுத்த இடையூறு தொலைந்தது என்கிற திருப்தியோடு போட்டித் தயாரிப்பாளர், டைரக்டர் ஒருவரைத் தீர்த்துக்கட்டி விட்டோம் என்ற நிம்மதியும் இன்று இருந்தது. என்ன காரணத்தாலோ அந்த ஆளின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கும் போது எழிலிருப்பு உள்பட்டணம் ஜமீன் வகையறா ஆட்களை நினைத்துக் கொண்டான் திருமலை. வைரம் பாய்ந்த அந்தப் பழைய விரோதத்தை எண்ணியதுமே கொலைக்குச் சங்கல்பம் செய்து கொண்டது போல் ஓர் உறுதி கிடைத்தது. தனது தற்காலிக விரோதிகளைத் தொலைக்கப் போதுமான மனஉறுதி பெறுவதற்காக நிரந்தர விரோதிகளை அடிக்கடி நினைக்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவன் வளர்ந்திருந்தான். வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது அரசியல் உருவாயிற்று. வெறுப்பிலும், துவேஷத்திலுமே அவனது வெற்றிகளும், பொருளாதார, புகழ் வசதிகளும் உறுதிப்படுத்தப் பெற்றன. இது நாளடைவில் அவனை ஒரு லாடிஸ்ட் ஆக்கியிருந்தது. பிறரைத் துன்புறுத்தி மகிழவேண்டிய மனநிலைக்கு அவன் வந்திருந்தான். அது தவறில்லை என்று அவனே நம்பினான். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இயக்கமும், அதன் தலைமையும் அவனைக் கைவிடுவதற்கு ஒருபோதும் தயாராயில்லை. அவனது செல்வாக்கு இயக்கத்தில் நாளுக்கு நாள் ஓங்கியபடியிருந்தது. |