முன்னுரை சமூகத்தின் எந்த மனிதனும், எந்தப் பிரச்னையும் எழுத்துக்கோ எழுத்தாளனுக்கோ அப்பாற்பட்டவனோ அப்பாற்பட்டதோ இல்லை என்றாலும் சிலரைப் பற்றியும் சிலவற்றைப் பற்றியும் அணுகவும் பயப்படுகிற நிலை இன்னும் எழுத்தாளரிடையேயும், வாசகரிடையேயும் இருக்கிறது. இந்தத் தடுமாற்றமோ பயமோ எழுதத் தொடங்கிய அன்றிலிருந்து என்னிடம் இருந்ததில்லை. அரசியல்வாதிகள், அரசியல், அவை சார்ந்த முறைகேடுகள், ஊழல்கள், தொடர்புடைய கதாபாத்திரங்களைக் கற்பனை செய்யவும் புனைந்தெழுதவும் நான் ஒரு போதும் தயங்கியது இல்லை. எழுதாமல் ஒதுங்கி நின்றதுமில்லை. நெஞ்சக் கனல், சத்திய வெள்ளம், பொய்ம் முகங்கள் போன்ற என்னுடைய நாவல்களின் வரிசையில் இப்போது மூலக்கனலும் சேர்கிறது. துடிதுடிப்போடு வாழ்வைத் தொடங்கி ஊழலில் துவண்டு பழைய துடிதுடிப்பை மீண்டும் கழிவிரக்க நினைவாக அடையும் மூலக்கனல் கதாநாயகன் கற்பனைப் பாத்திரமே. ஆனால் ஒவ்வொரு கற்பனைக் கதாபாத்திரமும் தத்ரூபமாக அமைந்து விடுவதன் காரணமாகக் கதையை வாசிப்பவர்கள் கதையில் வருகிறவர்களையும், நடைமுறை வாழ்க்கையிலுள்ளவர்களையும் இணைத்துப் பார்த்துக் குழம்பிக் கொள்ள ஏதுவாவதுண்டு. பல கதைகள் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாவதுண்டு. தத்ரூபத்தன்மைக்கு இந்த நிலை ஏற்படுவதும் கூட ஒரு சான்றாக அமையுமே ஒழிய வழுவாகாது. நிச்சயமாகக் கற்பனை தான் என மக்கள் அலட்சியமாக விட்டுவிடும் இலக்கியப் படைப்புக்களை விட இப்படிப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் அதிகமான சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். சர்ச்சைகளைச் சந்திக்க நேரிடும். சவால்களைச் சந்திக்க நேரிடும். ஒப்பிட்டுப் பார்த்துப் பேசுகிற விதத்தில் பொருந்தி அமைந்து விடுவதிலுள்ள ஓர் அபாயம் இது! ‘அவரைக் குறிக்குமோ, இவரைக் குறிக்குமோ’ என்ற அவசியமற்ற வம்புப் பேச்சுக்கள் கிளம்புவது தவிர்க்க முடியாமற் போகிறது. ஓர் அரசியல் நாவல் இப்படி வம்புகளுக்கு ஆளாவது விந்தையே. இந்தக் கதையின் உள்ளோட்டமான சுருதியை யாரும் தட்டிக் கேட்கவில்லை; ஆனால் ‘அவரா, இவரா’ என்று சர்ச்சை செய்வதிலேயே நேரம் கழிக்கிறார்கள். அம்மாதிரிச் சர்ச்சைஅநாவசியமானது, தேவையற்றது.
இந்நாவல் முற்றிலும் கற்பனையே. எல்லா வலுவான கற்பனைகளும் உண்மைபோலத் தோன்றுவதைத் தவிர்க்கவோ, விலக்கவோ முடிவதில்லை. உண்மையோ என மருண்டு போக வைக்கும் கற்பனைப் படைப்பு எதுவோ அதற்கு அது ஒருவகையில் பெருமைதான். சிறப்புதான். நற்சான்றுதான்.
ஒரு காலகட்டத்தைத் தத்ரூபமாகச் சித்தரிக்க முயன்று பார்த்ததின் விளைவு தான் இந்த நாவல். ஒரு வேளை இன்னும் இருபதாண்டுகளுக்குப் பிறகு இப்போது உணர்வதை விட இதன் அருமைப்பாட்டை மிகவும் நன்றாக உணர முடியுமோ என்னவோ? அதுவரை பொறுமையாக இருக்கக் கூட நான் தயார். பாமர மக்களை விழிப்படையச் செய்யும் முயற்சியில் உருவாகும் இலக்கியப் படைப்புக்களை உருவாக்குகிறவர்களுக்குச் சில சோதனைகளும், எதிர்ப்புக்களும் ஏற்படத்தான் செய்யும். ‘எனை வகையால் தேறியக் கண்ணும் வினை வகையால் வேறாதல்’ என வள்ளுவர் கூறுகிறாரே அதுதான் கட்சியாயிருப்பவர்கள் ஆட்சியாக மாறும் போதும் நடக்கிறது. அதை எழுதினால் கசப்பாக இருப்பது போல் தோன்றுவது இயல்பு. கசப்பாக உணர்வதும் இயல்புதான்! காரணம் - உண்மை கசப்பானது. ஆனால் சிலவற்றைக் கசப்பானது என்று முன்னதாக உணரும் ஞானம் எதுவோ அது இனிப்பானதே. அத்தகைய ஞானமும் பக்கவமும் இருந்தால் தான் இந்த நாவலைப் படிக்க முடியும். இரசிக்க முடியும். அப்படி ஞானமும் பக்குவமும் கொண்டு இதைப் படிக்கப் போகிறவர்கள், ஏற்கெனவே படித்து முடித்து விட்டு அத்தகைய ஞானத்தையும் பக்குவத்தையும் பெற்றவர்கள், இரு சாரருக்கும் என் அன்பையும் வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன். கல்கியில் வெளியான இந்நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலயத்தார் நூல் வடிவில் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.
நா.பார்த்தசாரதி தீபம், 9-6-1985 |