18 நீண்ட நாட்களாக ஆட்சியில் இருந்து விட்ட காங்கிரஸை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் இயக்கமும், இயக்கக் கூட்டணியும் அந்தக் கூட்டணியின் மூத்த தலைவராகிய மூதறிஞரும் தீவிரமாயிருந்தார்கள். தமிழகத்தின் பகுதிகளில் இந்தியை எதிர்த்தும், இயக்கத்தை ஆதரித்தும் உடலில் மண்ணெண்ணையை அல்லது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு பலர் தீக்குளித்திருந் தார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்திருந் தார்கள் . இவையெல்லாம் சேர்ந்து அனுதாபத்தை இவர்கள் பக்கம் ஈர்த்திருந்தன. திருமலை தனது தேர்தல் தொகுதியாகிய எழிலிருப்பிலேயே வந்து தங்கி வேலை செய்தான். முன்பு ஒரு தேர்தலில் மேல்தட்டு மக்களை ஈர்ப்பதற்கு ‘வித்தகர்.வேணு கோபாலனார் பாராட்டு விழா’ - என்று நடத்தியது போல் இப்போது நடத்தியாக வேண்டிய அவசியமில்லை. மேல்தட்டு மக்களின் கூட்டம் மூதறிஞரின் கூட்டணி காரணமாகவே அவனை முழுமனதுடன் ஆதரித்தது. ஒப்புக்கொண்டது. ஏற்றுக் கொண்டும் விட்டது. தேர்தலுக்கு ஒன்றரை மாதக்காலத்துக்கு முன்பே அவன் தன் ஆட்களுடன் எழிலிருப்பில் முகாம் போட்டு விட்டான். வெட்டுக் காயத்தோடு இளம் நடிகையையும் அருகே வைத்துக் கொண்டு, ‘மொழிப் போரில் விழுப்புண் பெற்ற வீரர் - அழிப்போரை எதிர்த்தழிக்கும் ஆற்றல் மறவர்’ என்ற பிரசுரம் அடங்கிய பெரிய படத்துடன் கூடிய சுவரொட்டியை அவன் ஒட்டியதால் அவனுடைய மைத்துனன் அதாவது மூத்த மனைவி சண்பகத்தின் தம்பி தேர்தலில் அவனை எதிர்த்து ஜமீன்தாருக்காக வேலை செய்தான். கீழ்த்தரமான பிரச்சாரங்களில் பரம்பரைப் பெரிய மனிதனான ஜமீன்தாருக்கு விருப்பமில்லை என்றாலும் திருமலை சார்ந்திருந்த கூட்டணி ஜமீன் குடும்பத்தைப் பற்றித் தாறுமாறாக மேடைகளில் பேசியதால் காங்கிரஸ் சார்புள்ள ஊழியர்கள் மட்டத்தில் எதிர்த்தரப்பிலிருந்தும், திருமலையைக் கிண்டல் செய்து சில மட்டரகமான சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. ‘ஊருக்கு ஒரு பெண்டாட்டி, பேருக்கு ஒரு கட்சி’ - என்ற பாணியில் அந்தச் சுவரொட்டிகள் அச்சிடப் பட்டிருந்தன. ஆனால் அப்போது புயலாக வீசிக் கொண்டிருந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் இந்த மாதிரிப் பிரச்சாரம் எல்லாம் எடுபடவில்லை. ஜமீன்தார் தனிப்பட்ட முறையில் ஒழுக்கமானவர், தெய்வ பக்தி நிறைந்தவர். பரம்பரைப் பெரிய மனிதன் என்பதெல்லாம் கூடப் பெரிதாகவோ பிளஸ் பாயிண்டாகவோ யாருக்கும் படவில்லை. திருமலை ஒழுக்க மற்றவன், தெய்வ நிந்தனை செய்கிறவன், புகழ்மிக்க பாரம்பரிய மற்றவன் என்பதெல்லாம் கூடப் பெரிய ஆட்சேபணைகளாகவோ, மைனஸ் பாயிண்டுகளாகவோ, யாருக்கும் படவில்லை. அகவிலைகள் கண்டபடி ஏறியிருந்தன. ரேஷனில் சரியாக அரிசி கிடைக்கவில்லை. ஆட்சி மெத்தனமாயிருந்தது. மக்களைப் பற்றித் தப்புக் கணக்குப் போட்டிருந்தது. “இதே தேரடியில் புழுதியோடு புழுதியாகப் புரண்டு அணு அணுவாகப் போராடி வளர்ந்தவன் நான். உடல் வலிக்க வலிக்க உழைத்து முன்னேறியவன் நான். ஏழை எளியவர்களாகிய உங்களில் ஒருவன். எனக்கு ஒரு முறை உங்களுக்குத் தொண்டு செய்ய வாய்ப்பளியுங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று முழங்கும் என் இதய தெய்வமாம் அண்ணனின் பேரிலும், தவமுனிவருக்கு ஈடான மூதறிஞரின் பேரிலும் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்” - என்பது போல் பேசிப் பேசி மக்களைக் கவர்ந்தான் திருமலை. காற்று மிகவும் அவனுக்குச் சாதகமான நிலையில் வீசிக் கொண்டிருந்தது, வெற்றி பெற்றுவிட முடியும் என்ற அபார நம்பிக்கை இதுவரை எந்த நாளிலும் ஏற்பட்டிராத அளவு அவனுள் ஏற்பட்டிருந்தது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது என்ற நிலையில் சென்னையிலிருந்து அவனுக்கு ஒரு டிரங்க் கால் வந்தது. பங்களாவில் அவன் வேலைக்கு வைத்திருந்த நம்பிக்கையான ஆள்தான் பேசினான். ‘நகை நட்டுக்கள் ரொக்கம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஆந்திர ஜமீன்தார் ஒருவனுடன் அவள் விஜயவாடாவுக்கு ஓடிவிட்டாள்’ - என்ற தகவல் தெரிந்தது. திருமலைக்கு அப்போது அவள் தன்னை விட்டு ஓடினதை விட அந்தச் செய்தி பத்திரிகைகளில் வராமலிருந்தாலே தேர்தல் பிழைக்கும் என்று தோன்றியது. இந்தி எதிர்ப்புப் போரில் வெட்டுக் காயத்துடன் எடுத்த புகைப்படத்தின் அழகியான அவள் அருகேயிருந்து கண்ணிர் உகுப்பது போல் சுவரொட்டிகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு ஒட்டியிருந்தான் அவன். இந்த நேரத்தில் அவள் அவனை விட்டு ஓடிவிட்டாள் என்ற செய்தி பத்திரி கைகளில் வந்தால் பெரிதும் பாதிக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. தேர்தல் முடிகிற வரை எதுவும் பத்திரிகைகளுக்குத் தெரிய வேண்டாம் என்று எல்லாத் தரப்பிலும் எச்சரித்து வைத்தான். ஒன்றரை மாதத்துக்கு மேல் அவன் ஊரில் இல்லாததைப் பயன்படுத்தித் தன் பெயரிலிருந்த அந்த பங்களாவைக் கூட யாருக்கோ விற்று முடித்திருந்தாள் அவள். இது திருமலைக்குத் தெரிந்தபோது ஆத்திரம் ஆத்திரமாக வந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளிவருகிற வரை இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதில்லை என்ற பிடிவாதத்தோடு மெளனமாக இருந்தான் அவன், எவ்வளவோ பக்காவாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தும் தப்பிவிட்டாள் என்பது எரிச்சலூட்டியது. ஒரு தங்கச் சுரங்கம் யாருக்கும் தெரியாமலே அடைபட்டுப் போனது போல் ஏமாற்றமாயிருந்தது. ஆனால் ஒன்றும் பெரிதாகக் குடி முழுகிப் போய் விட்டதாக அவன் ஒடுங்கி ஒய்ந்து உட்கார்ந்து விடவில்லை. இன்னொரு தங்கச் சுரங்கத்தைத் தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததுதான் காரணம். அடிக்கடி அண்ணன், “தட்டி னால் தங்கம், வெட்டினால் வெள்ளி, தோண்டினால் தோரியம், செதுக்கினால் செம்பொன் அகழ்ந்தால் அலுமினியம், சுரண்டினால் துத்தநாகம்” - என்று அழகுற மேடையில் அடுக்கும் சொல் நயத்தை நினைவு கூர்ந்தான் அவன். மற்றொரு தங்கக் கட்டியைத் தட்டி எடுக்கமுடியும் என்றும் நம்பினான். தான் தொட்டதை எல்லாம் தங்கமாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை கைநழுவிப் போன தங்கக் கட்டியைப் பற்றி அவனைக் கவலைப்படாமல் இருக்கச் செய்தது. அவனுள் இருந்த தன்னம்பிக்கையைச் சிறிது தடித்தனமான தன்னம்பிக்கை என்று கூடச் சொல்லாம். முந்திய தேர்தலில் கிடைத்ததை விடத் தாங்கள் பல மடங்கு அதிகமான அளவு வெற்றியைப் பெற முடியும் என்று அவர்களுக்கே தோன்ற ஆரம்பித்திருந்து. ஐயாவும், பழைய தோழர்களும் காங்கிரஸ் கூட்டணியையே ஆதரித்துப் பிரசாரத்துக்கு வந்தும் அவன் கவலைப்படவில்லை. ஐயா பல இடங்களில் அவனைத் தாக்கி பேசியும் அவன் தனது கூட்டங்களில் ஐயாவைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவே இல்லை. நாத்திகனும், பகுத்தறிவு வாதியுமான தன்னை எதிர்த்தும் ஆத்திகரும் பணக்காரருமான ஜமீன்தாரை ஆதரித்ததும் ஐயா பிரச்சாரம் செய்தது வேடிக்கையாகத் தோன்றியது அவனுக்கு. ஒரு வகையில் தன்னை எதிர்த்துப் பேசுவதன் மூலமே ஐயா தனக்கு உதவி செய்கிறார் என்று கூட அவனுக்குத் தோன்றியது. ஐயாவின் சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவர் ஆதரிக்கும் கட்சிக்கு நிச்சயமாக ஓட்டுப் போடக் கூடாதென்று முடிவு செய்வார்கள் சில பிரிவினர். அது தனக்கு மறைமுகமான பேருதவி என்று அவன் எண்ணினான. காங்கிரலை. ஆதரித்து ஐயாவும் கண்ணிர்த் துளிகளை ஆதரித்து மூதறிஞரும் பேசிய விநோதம் தெருவுக்குத் தெரு பேட்டைக்குப் பேட்டை நிகழ்ந்தது. இரண்டு முதியவர் களுமே முன்பு தாங்கள் சார்ந்திருந்த அல்லது தங்களைச் சார்ந்திருந்த இயக்கங்களை இன்று தேர்தல் கூட்டணிகள் மூலம் அழித்து ஒழித்துவிட முயன்றார்கள். ஐயாவோ காங்கிரஸை ஆதரித்தே தீர்த்துக் கட்டிவிடுவார் போலிருந்தது. மரபுகளில் நம்பிக்கையும், பயபக்தியும் உள்ள சில தொகுதிகளில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களை ஆதரித்து ஐயா பேச வராமல் இருந்தாலே பெரிய உதவி என்று கூட அந்தரங்கமாக எண்ண ஆரம்பித்திருந்தார்கள். “படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்” - என்று காங்கிரஸ் தலைமை பேசிய பேச்சுக்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டுமென்று மூதறிஞரும் தம்பிகளின் அண்ணனாகிய பேரறிஞரும், விரும்பி முனைந்து வேலை செய்தார்கள். மூதறிஞரும் அண்ணனும் பல மேடைகளில் ஒன்றாகத் தோன்றிப் பெருங் கூட்டத்தை ஈர்த்தனர். ‘பர்மிட் கோட்டா லைசென்ஸ் ராஜ்யம்’ என்று காங்கிரஸ் இயக்கத்துக்குப் பட்டப் பெயரே சூட்டியிருந்தார் மூதறிஞர். பொதுத் தேர்தல் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவுகள் வெளி வர ஆரம்பித்ததுமே திருமலை உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். முதல் நிலவரமே அவர்களுக்குச் சாதகமாக இருந்தது. ஒவ்வொரு முடிவும் அவர் களுக்கு வியப்பாகவும் காங்கிரஸுக்கு அதிர்ச்சியாகவும் பேரிடியாகவும் அமைந்தது. இரண்டு மூன்று தலைமுறைகளாக எழிலிருப்பில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஜமீன்தார் பதினேழாயிரம் ஒட்டு வித்தியாசத்தில் திருமலையிடம் தோல்வியடைந்தார். தோல்வியை ஒப்புக் கொண்டு அவரே பெருந்தன்மையாக அவனுக்கு. வாழ்த்துக் கூறிக் கை குலுக்கிவிட்டுப் போனார். இயக்கத் தோழர்கள் அவனை ரோஜாப்பூ மாலைகளால் மூழ்கச் செய்து விட்டனர். தோளில் அலாக்காகத் தூக்கி ஊர்வலம் விட்டனர். முந்திய ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த கட்சியின் பெரும் தலைகள் மடமடவென்று சாய்ந்தன. “ஐயோ இத்தனை பெரிய வெற்றியா!” என்று இவர்களே ஏற்றுக் கொண்டு மகிழப் பயப்படும் வெற்றியாயிருந்தது அது, மகிழ்ச்சியைவிடப் பயப்படும் தன்மையும் திகைப்புமே அதிகமாயிருந்தன. ஆட்சி அமைக்கப் போதுமான அறுதிப் பெரும்பான்மை அவர்களுக்குக் கிடைத்து விட்டது. முன்னை விட அதிகமான இடங்களையே அவர்கள் எதிர்பார்த்தார் கள். ஆனால் ஆட்சியே கிடைத்துவிட்டது! பசிக்கு ஏதாவது உண்ணக் கிடைத்தால் போதுமென்று கையேந்தியவனுக்கு ‘உள்ளே வா, விருந்து படைக்கிறேன்’ என்று தலைவாழை இலை போட்டு வடை, பாயசத்துடன் விருந்து படைத்திருந்தார்கள் தமிழக மக்கள். வெற்றித் திகைப்பையும். சந்தோஷ அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு எழுந்து செயல்படவே சில நாட்கள் ஆயின வென்றவர்களுக்கு. மக்களுக்கும், தங்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்ட மூத்த தலைவர்களை ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்து ஆசி பெறத் தொடங்கினார்கள் வென்றவர்கள். தாங்கள் பயின்று வளர்ந்து ஆளான ஈரோட்டுத் தத்துவத்தின் தந்தையான ஐயாவைப் பார்த்து வணங்கி ஆசி பெற்றனர். அவரும் பெருந்தன்மையாக அவர்களை வரவேற்று வாழ்த்தினார். மூதறிஞர், பெருந்தலைவர், என்று கட்சி பேதம், கொள்கைபேதம் பாராமல் ஒவ்வொரு தலைவரையும் சந்தித்து ஆசி கோரினார்கள் அவர்கள். இவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த சாதாரண மாணவன் ஒருவனிடம் தோற்றிருந்த நிலையிலும், பெரும் தியாகியும் மக்கள் தலைவருமான காமராஜ் அவர்கள், “இது மக்கள் தீர்ப்பு. மதிக்கிறேன்” - என்று மிகவும் கண்ணியமாகத் தோல்வியை ஒப்புக் கொண்டார், வாழ்த்தினார்.
இயக்கத்தைச் சேர்ந்த புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூடினார்கள். அமைச்சர்களைத் தேர்த்தெடுக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டியிருந்தது. அண்ணன் உட்பட அவர்கள் அனைவருக்கும் ஆட்சியநுபவம் புதியது. இதுவரை புரிந்திராதது. எதிர்க்கட்சியாக இருக்கிறவன் ஓர் அரசியல் கட்சி அனுபவிக்கிற அசாத்தியத் துணிச்சலையும், விமர்சனம் செய்யும் உரிமைகளை யும் அது ஆட்சிக்கு வந்த மறுகணமே இழந்து விடுகிறது, திருமலை வகையறாவும் அப்போது அந்த நிலைமையில் தான் இருந்தார்கள். ஆனால் அண்ணனின் சாதுரியமும் நிதானமும் அவர்களுக்குப் பேருதவியாயிருந்தன. ஆட்சியை அமைக்கும்.அந்த நேரத்தில் அண்ணன் மிகப் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டார். அமைச்சர் பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் களில் திருமலையின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதற்கு முந்தைய அமைச்சர்களைப் போல் கடவுளின் மேல் ஆணையிட்டுப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாமல் தமிழ்த் தாயின் மேல் ஆணையிட்டு, மனச்சாட்சியின் பெயரால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள் இவர்கள். இதற்குள்ளேயே “நாளையிலிருந்து தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி தெருத் தெருவாகக் குவித்து விற்கப்படும். தமிழக வீதிகளில் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடப் போகிறது. மூன்றுபடி லட்சியம் என்றார்கள். முடியாவிட்டால் ஒரு படி நிச்சயம் முந்துங்கள்! முந்துங்கள்! காணத் தவறாதீர்கள், கதை - பேரறிஞர் பெருந்தகை - வசனம், பாடல்கள் சீர்திருத்தச் சிங்கம் திருமலையரசன்’’- என்று தோற்ற கட்சியினர் கிண்டலாக மேடைகளில் பேசவும், சுவர்களில் எழுதவும் ஆரம்பித்திருந்தனர். பொருளாதாரப் பிரக்ஞையில்லாத அரசியல் வாக்குறுதிகளும், உணர்ச்சிகரமான தேர்தல் உறுதிமொழிகளும் பின்னால் எவ்வளவு வம்பை உண்டாக்கும் என்பது அண்ணனுக்கே இப்போது தான் புரிந்தது. “இந்த வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் முச்சந்தியில் என்னை நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்” - என்று மேடையில் முழங்கப் போக இன்று சுவர்களில் ‘முச்சந்தி இங்கே! சவுக்கும் இங்கே! மூன்றுபடி எங்கே?’ என்று எழுத ஆரம்பித்திருந்தார்கள். எழிலிருப்பு டி.பி.யில் முன்பு தனக்கு மறுக்கப்பட்ட அதே ஏ.சி. அறையில் திருமலை இன்று அமைச்சர் அந்தஸ்துடன் தனக்கு வேண்டிய பழகிய ஒரு பெண்ணுடன் தங்கப் போக இப்போது அவன் அமைச்ச ராகையினால் அது இரசாபாசமாகிவிட்டது. எதிர்க் கட்சிப் பத்திரிகைகள் - ‘மந்திரியா மதன காமராஜனா?’ என்று தலைப்புப் போட்டு எழிலிருப்பு டி.பி. ஏ.சி. அறை அழகி யார் என்ற ஆய்வில் இறங்கின. முதல் முறையாகத் தந்தை முன்பு செய்தது போல் அண்ணனும் இன்று அவனைக் கூப்பிட்டுக் கடுமையாகக் கண்டித்தார். |