22 “பத்திரிகையிலே உங்களைப்பற்றிக் கட்டுரை எழுதற எழில்ராஜா வேறு யாருமில்லை! சண்பகத்திட்ட உங்களுக்குப் பிறந்த மகன்தான். நீங்க ராவணன்னு அவனுக்குப் பேர் வச்சீங்க. சண்பகம் அது பிடிக்காமே ராஜான்னு கூப்பிட - அதுவே நிலைச்சுப் போச்சு! எழில்ங்கிறது ஊர்ப் பேரோட தொடக்கம். ராஜாங்கிறது சொந்தப் பேரு” - என்று சர்மா விவரித்தபோது திருவுக்குத் தலை சுற்றியது. சப்த நாடியும் ஒடுங்கினாற் போல் ஆகிவிட்டது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவன் கதறினான். எழில்ராஜாவைத் தீர்த்துக் கட்டச் சகல ஏற்பாடுகளுடனும் புறப்பட்டு விட்டவர்களை எப்படித் தடுப்பதென்று இப்போது புரியவில்லை, முகத்திலும், உடலின் மற்ற பகுதிகளிலும் தெப்பமாக வேர்த்து விட்டது. “என்ன? உங்களுக்கு என்ன ஆயிடுத்து இப்போ?” என்று பதறிப் போய்க் கேட்ட சர்மாவுக்கு அவனால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை. செய்வதறியாது அவன் கைகளைப் பிசைந்தான். ஏவி அனுப்பியிருக்கும் குண்டர்களைத் தடுப்பதற்கு வேறுசில குண்டர்களைப்பின் தொடர்ந்து அனுப்பலாமென்று டெலிபோனைச் சுழற்றினான். அவனுக்கு வேண்டிய எண் கிடைக்கவில்லை. அவன் எதையும் வாய் விட்டுச் சொல்லாததால் அப்போது அவனுடைய பதற்றத்துக்கும், குழப்பத்துக்கும் காரணம் என்னவென்று சர்மாவுக்குப் புரியவில்லை. அவர் திகைத்தார். திருவுக்கு உடல் பற்றி நடுங்குவதையும் வேர்த்து விறுவிறுப்பதையும் பார்த்து அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இதுவரை அவனை இப்படி நிலையில் அவர் பார்க்க நேர்ந்ததே இல்லை. “சாமீ! கன்னையா எங்காவது ஆப்பிடுவானா பாருங்க...” என்றான் அவன். குரல் நடுங்கிக் குழறியது அவர் கன்னையனைத் தேடிப் போனார். குடி, கூத்து என்று தாறுமாறாக வாழ்ந்ததனால் திடீரென்று அவனுக்கு உடல் நிலை கெட்டு ஏதோ ஆகிவிட்டதென்று நினைத்துக் கொண்டார் அவர். பங்களா முகப்பு, தோட்டம், அலுவலக அறை எல்லா இடங்களிலும் தேடி விட்டுத் திருவின் உதவியாளனான கன்னையன் எங்கேயும் தென்படாததை உள்ளே அவனிடமே போய்த் தெரிவித்து விட்டு “உங்களுக்குத் திடீர்ன்னு உடம்பு ஏதோ சரியில்லேன்னு நினைக் கிறேன். டாக்டரைக் கூப்பிடணும்னா நானே ஃபோனில் கூப்பிடறேனே...? இல்லேன்னா வாசல்லே செண்ட்ரியா நின்னுண்டிருக்கானே அந்தப் போலீஸ் கான்ஸ்டேபிளைக் கூப்பிடச் சொல்லட்டுமா?” - என்றார் சர்மா. நெஞ்சைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்து விட்ட திரு அவரிடம், ‘வேண்டாம்’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினான். ‘கொலை பாதகனே’ - என்று அவனுடைய மனச்சாட்சியே அவனை இடித்துக் காட்டியது. அப்போது அந்த நிலையில் தன்னை யாரும் கவனிப்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘நீர் போகலாம்’ - என்பதற்கு அடையாளமாகச் சர்மாவை நோக்கி ஜாடை காட்டினான் அவன். “நான் வரேன். உடம்பைக் கவனிச்சுக்கோங்கோ. பம்பரமா அலையறேள். உங்களுக்கு ஓய்வு வேணும். அந்தத் தமிழ் இசை கான்பரன்ஸ் தலைமைப் பேச்சைத் தயாரிச்சுண்டு நாளன்னிக்கு மறுபடி வந்து பாக்கறேன்” என்று சொல்லிக் கொண்டு சர்மா புறப்பட்டார்.
அதற்கு முந்திய விநாடி வரை திருவுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை கிடையாது. நல்வினை, தீவினைகளை அவன் என்றும் பொருட்படுத்தியதே இல்லை. விதியை நம்பியதில்லை. இப்போது என்ன காரணமோ தெரியவில்லை. அவன் அந்தரங்கம் அவற்றை எல்லாம் எண்ணி நடுங்கியது. தான் செய்த பாவங்களும், தீவினைகளும் எல்லாம் சேர்ந்து தன் சொந்த மகனைத் தானே கொலை செய்ய நேரும்படி இப்படிச் சதி புரிந்து விட்டனவோ என்று தோன்றியது. ஏற்கெனவே பிளட்பிரஷர், நெஞ்சுவலி எல்லாம் தொடங்கியிருந்தன. வயது வேறு ஆகி இருந்தது. திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி யாரிடமும் விட்டுச் சொல்ல முடியாமல் திணறினான் அவன். “இப்படி அநியாயமாக ஒரு பச்சிளங் குருத்தைக் கொல்லப் போகிறார்கள்! போய் யாராவது தடுத்து விடுங்களேன்” என்று அவனே சொல்லி மாட்டிக் கொள்ளவும் முடியாமல் இருந்தது.
சண்பகத்தின் லட்சுமிகரமான முகம் அவனுக்கு நினைவு வந்தது. அவளுக்கும் தனக்கும் முறிவு ஏற்பட்ட பின் அரசியலில் தன்னை எதிர்த்தே வேலை செய்த மைத்துனன் நினைவுக்கு வந்தான். சண்பகத்தின் மரணத்தின் போது மொட்டை போட்டுக் கொண்டு கொள்ளிச்சட்டி ஏந்திச் சென்ற இதே மகன் நினைவுக்கு வந்தான். விதி எவ்வளவு கோரமான சதியைச் செய்துவிட்டது என்றெண்ணியபோது சிறு குழந்தை போல் குமுறிக் குமுறி அழுதான் திரு. ஏதாவது அற்புதம் நடந்து எழில்ராஜா தன்னைக் கொல்வதற்குச் சூழும் ஆட்களிடம் இருந்து தப்பிவிடக் கூடாதா என்று கூட இவன் இப்போது எண்ணினான். தன்னுடைய மகன் என்று தெரியாமல் தானே அவனைக் கொல்ல ஆள் ஏவியதை மறுபடி நினைத்தால் கூடப் பாதாதிகேசபரியந்தம் நடுங்கியது. தான் ஆடா விட்டாலும் சதை ஆடும் என்பார்களே அப்படிச் சதை ஆடியது. மனமும், உடலும், பெரும் பாதிப்புக்கு ஆளாகி அவன் மூர்ச்சையானான். நல்ல வேளையாக வெளியே போயிருந்த உதவியாளன் கன்னையா அந்த நேரத்தில் திரும்பியிருந்தான். உடனே திருவை அவனுக்கு மிகவும் வேண்டிய ஒரு டாக்டரின் தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. பத்திரிகைகளில் செய்தி வந்துவிடும் என்பதாலும் பலர் பார்க்க வருவார்கள் என்பதாலும் வேறு சில இரகசியங்கள் கருதியும் திரு எப்போதும் மாடவீதியிலிருந்த இந்த தனியார் மருத்துவமனையில் சேர்ந்து - தனியிடத்தில் ஓய்வு எடுப்பதாக மட்டும் வெளியே தகவல் தெரிவிப்பது வழக்கம். யாரையும் தன்னைப் பார்க்க அநுமதிப்பதில்லை. இந்த இரகசிய ஏற்பாட்டால் ரோஸி முதல் தாண்டவராயன் வரை அவனோடு எப்போதும் போல் நெருங்கிப் பழக வாய்ப்பிருந்தது. சினிமா நடிகைகள், படத் தொழிலின் பெரும் புள்ளிகள் எந்நேரமும் அந்தரங்கமாகத் தேடி வந்து போக இந்தத் தனியார் மருத்துவமனை பெரிதும் உதவியாயிருந்தது. பொது மருத்துவமனையாகவோ அரசாங்க மருத்துவமனையாகவே இருந்தால் யார், யார் பார்க்க வருகிறார்கள் என்பது இரகசியமாயிராது. பத்திரிகை நிருபர்கள் சதாகாலமும் வளைய வளைய வந்து கொண்டிருப்பார்கள். ஏதோ திடீர் அதிர்ச்சி காரணமாக மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் முழு ஒய்வு தேவைப்படுவதாகவும் டாக்டர் கூறினார். மருந்துகளும் தூக்க மாத்திரையும், கொடுத்துத் தூங்கச் செய்தார். விடிந்ததும், அவனுக்கு நினைவு வந்தவுடன் காலைப் பத்திரிகைகளைத் தேடினான் அவன். நெஞ்சு படபடக்கப் பத்திரிகைகளைப் புரட்டிப் படித்தால் மேலும் அந்தப் புதிர் நீடித்தது. முந்திய இரவு ஒரு ரிப்போர்ட்டிங் விஷயமாக வெளியே சென்ற நிருபர் எழில்ராஜா வீடு திரும்பவில்லை என்றும் சமூக விரோதிகளால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் மட்டுமே ஒரு சிறிய செய்தி வெளியாகி இருந்தது. அதுவும் சில பத்திரிக்கைகளில் மட்டுமே வெளி வந்திருந்தது. வேறு சில பத்திரிகைகளில் அந்த விவரமே இல்லை. மர்மம் தொடர்ந்தது. தான் ஏவிய ஆட்கள் அவனைக் கடத்திக்கொண்டு போயிருக்கும் பட்சத் தில் உயிரோடு தப்ப விட்டிருக்க மாட்டார்கள் என்பதிலும் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. காரியம் திட்ட மிட்டபடி முடிந்து விட்டால் மறுபடி தன்னை அவர்கள் உடனே சந்திக்க வேண்டியதில்லை என்றும், திட்டமிட்டபடி முடியா விட்டால் மட்டுமே சந்திக்கலாம் என்றும் ஏற்பாடாகியிருந்தது. பதற்றத்தோடு கன்னையனைக் கூப்பிட்டு, “நேற்றிரவு அல்லது இன்று காலை தன்னை யாராவது வீட்டுக்குத் தேடி வந்தார்களா?” என்று விசாரித்ததில் அவன் கூர்க்காவிடமும் சென்ட்ரியிடமும் கேட்டு விட்டுத் திரும்பி வந்து தெரிவிப்பதாகப் புறப்பட்டுப் போனான். போய்விட்டுத் திரும்பி வந்து அவன் தெரிவித்த செய்தி ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நிமிஷ வாரியாகப் பார்க்க வந்தவர்களின் பெயரை சென்ட்ரி குறித்து வைத்திருந்தான். வேணுகோபால சர்மா வந்து போன பின் இரவு யாருமே திருவைக் காண வரவில்லை. காலையில் மட்டும் சில கட்சி ஆட்கள், தொழிலதிபதிர்கள், இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர். முந்திய மாலை கொலைக்கு இரகசியமாக ஏவப்பட்டவர்கள் யாருமே திரும்பவும் அவனைப் பார்க்க வரவில்லை என்பதிலிருந்து காதும், காதும் வைத்தாற்போல் ஆளைக் கடத்திச் சென்று தீர்த்து விட்டிருப்பார்கள் என்றே அநுமானிக்க முடிந்தது. அவர்கள் அதைச் செய்திருந்த சாமர்த்தியத்தால் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் வெளியாகலாம். மேற்கொண்டு சில தினங்கள் தொடர்ந்து தாமதமும் ஆகலாம் என்று தோன்றியது. மகனைக் கொன்றிருப்பார்கள் என்றெண்ணியதுமே மறுபடி அவனுக்கு மயக்கம் போட்டுவிட்டது. இப்போது டாக்டர்களுக்கே புரிந்துக் கொள்ள முடியாத மர்மமாயிருந்தான். மந்திரிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று டாக்டர் புரிந்து கொண்டிருந்த தொழிலதிபர் தாண்டவராயனிடமும், ரோஸியிடமும், கன்னையனிடமும் மட்டும், ஏதோ பெரிய அதிர்ச்சி மூளையையும் இதயத்தையும் தாக்கிப் பாதிச்சிருக்கு. இப்ப இவரிடமிருந்தே அது என்னன்னு, தெரிஞ்சிக்கவும் முடியாது. பார்க்கலாம். உங்களுக்கு ஏதாவது தெரியுமானா மறைக்காம உடனே எங்கிட்டச் சொல்லுங்க” என்றார். உண்மையில் அவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்க வில்லை. திடச்சித்தமும் எதற்கும் கலங்காத வைராக்கிய முரண்டும் உள்ள திருவின் ‘மனத்தை பாதிக்கும் நிகழ்ச்சி எதுவும் தன் வாழ்விலோ, பொதுவாழ்விலோ நடந்திருக்க முடியாது’ என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். வழக்கம் போல் திருவின் நிலைபற்றிப் பத்திரிகைகளில் எதுவும் வந்து விடாமலிருக்க எச்சரிக்கை எடுத்துக் கொண்டான் கன்னையன். ஏதோ விரக்தியடைந்தவன் போல உணவு உண்ண மறுத்தான் திரு. மருந்து சாப்பிடுவதிலும், சிகிச்சை பெறுவதிலும் கூடச் சிறிதும், சிரத்தை காண்பிக்கவில்லை அவன். தொழிலதிபர் தாண்டவராயனும், ரோஸியும் இரவு பத்துமணிக்கு மேல் அவனைச் சந்திக்க வந்த போது தற்செயலாக அவனுக்கு நினைவு வந்தது. ஆனால் அவன் அவர்கள் இருவரையும் வாயில் வந்தபடித் திட்டி வெளியேறச் சொல்லிக் கூப்பாடு போட்டான். ‘நான் பாவி, படுபாதகன்’ என்று திரும்பத் திரும்ப அவன் ஏன் தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டு கண்ணீருகுக்கிறான் என்பது டாக்டர்களுக்கே புரியாத மர்மமாயிருந்தது. எந்த நிகழ்ச்சியானது அவனை இப்படிப் பாதித்து அதிர்ச்சியடையச் செய்திருக்க வேண்டுமென்று அவர்களால் அந்த விநாடிவரை அநுமானிக்க முடியாமல் இருந்தது. அவனிடமே பேச்சுக் கெடுத்து அறியவும் இயலாதபடி அவன் நிலைமை மிகவும் மோசமாயிருந்தது. சித்தத்தெளிவற்ற நிலையிலும் காலை மாலை தினசரிகளில் திரு காட்டும் அளவு கடந்த ஆர்வம் டாக்டர்களை யோசிக்க வைத்தது. நர்ஸ் மூலமும் மற்ற உதவியாளர்கள் மூலமும் செய்தித்தாள்களில் திரு படிப்பது என்ன என்பதை இரகசியமாகக் கண்காணித்துக் கண்டறியக் கூட அவர்கள் முயன்றார்கள். “இளம் பத்திரிகை நிருபர் எழில்ராஜா காணாமற் போய் இன்றுடன் பத்து நாட்களாகின்றன. அவரைக் கடத்திக் கொண்டுபோய்க் கொலை செய்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்க்ள்” - என்று முதன் முதலாகக் கொலை பற்றிய பிரஸ்தாபம் பத்திரிகைகளில் வெளிவந்த தினத்தன்று மீண்டும் தினசரிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதே திரு மூர்ச்சையானான். திரு இந்தப் பத்து நாள்வரை தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓய்வெடுக்கிறார் என்று மட்டுமே திருவைப் பற்றிய செய்தி வெளிவந்திருந்தது. ஒரே எதிர்த்தரப்புப் பத்திரிகை மட்டுமே, “அமைச்சர் திருவுக்கு சித்தபிரமை - அடிக்கடி நினைவு தவறுகிறது. திடுக்கிடும் உண்மை பொதுமக்களுக்கு மறைக்கப்படுகிறது” - என்று தலைப்புச் செய்தி வெளியிட்டுப் பரபரப்பூட்டியிருந்தது. கன்னையா மறுத்து அறிக்கை வெளியிட்டான். அமைச்சர் திரு அவர்களின் உடல்நிலைப் பற்றித் தாறுமாறாகவும். தவறுதலாகவும் பத்திரிகைகளில் வெளிவருகிற செய்திகளைக் கண்டித்து மறுத்துவிட்டு “ஓய்வு கொள்வதற்காக” வந்த பழைய செய்திகளையே மீண்டும் உறுதிப் படுத்தியிருந்தான் கன்னையா. முழுமையாக மாதம் ஒன்று ஓடிவிட்டது. கடத்தப்பட்டதாகக் கருதப்படும் எதிர்க்கட்சிப் பத்திரிகையாளர் எழில்ராஜா உயிரோடிருக்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்கக் கூடப் போலீசுக்குத் துப்பில்லை என்கிற பாணியில் சில பத்திரிகைகளில் கண்டனத் தலையங்கங்கள் கூட வெளிவந்துவிட்டன. தான் அனுப்பிய ஆட்கள் தன் மகனைத் துடிக்கத் துடிக்கக் கொன்று தீர்த்து விட்டார்கள் என்று இந்தச் செய்தியைப் பார்த்த பின் திரு நிச்சயம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. அவன் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அடிக்கடி நினைவு தவறியது கிழிந்த நாராகப் படுக்கையில் கிடந்தான் அவன். ஏதோ வேலையாக எழிலிருப்புக்குப் போயிருந்த வேணுகோபால சர்மா சென்னை திரும்பியதும் திருவைச் சந்திக்க அவன் தங்கியிருந்த மருந்துவமனைக்குத் தேடி வந்தார். அவர் வந்த சமயம் திரு தன் நினைவற்றுக் கிடந்ததால் டாக்டர்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்த சர்மா டாக்டரிடம் அந்த விஷயத்தைச் சொல்ல நேர்ந்தது. “கடத்திக் கொண்டு போய்க் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் எழில்ராஜா என்ற இளம் பத்திரிகையாளன் அமைச்சர் திருவின் சொந்த மதன்தான்! ஒருவேளை அந்தச் செய்தி அவரைப் பாதித்திருக்கலாம்” என்று சர்மா கூறியதை டாக்டர் அலட்சியப்படுத்தவில்லை. அன்று மாலையே டாக்டர் தனியே திருவின் அறைக்குச் சென்று அவனுக்குச் சுய நினைவு இருந்த சமயமாகப் பார்த்து, “உங்களுக்குத் தெரியுமோ? அந்த இளம் பத்திரிகையாளன், கொல்லப்படவில்லையாம். சாமர்த்தியமாகத் தன்னைக் கடத்தியவர்களிடம் இருந்து தப்பி விட்டானாம்” என்று ஆரம்பித்ததுமே திருவின் முகத்தில் ஆவல், மலர்ச்சி எல்லாம் பளிச்சிட்டன. “அப்படியா? அவனை நான் உடனே பார்க்கணும் டாக்டர்!” - என்று திரு படுக்கையில் எழுந்து உட்காரக் கூட முயன்றான். சர்மா கூறியது சரிதான் என்று டாக்டர் முடிவு செய்து கொள்ள முடிந்தது. மறுபடி சர்மாவை அழைத்து வரச் செய்து மேலும் விவரங்களைச் சேகரித்தார் டாக்டர். இதற்கிடையில் கட்சியில் அவனுக்குப் பயந்து ஒடுங்கியிருந்த அவனது எதிரிகள் மெல்ல அவனுக் கெதிராகப் போர்க்கொடி காட்டத் தொடங்கினார்கள். “எவ்வளவு நாள்தான் ஒரு சித்தஸ்வாதீனமற்ற ஆளை அமைச்சராக வைத்திருப்பது? லஞ்சம் மூலம் நிறையப் பணம் வேறு பண்ணியாயிற்று. ஆரோக்கியமாக இருந்தபோது லஞ்சம். நோயாளியான பின்னும் பதவியா?” என்று திருவுக்கு எதிராகக் குரல் கிளம்ப, ஆரம்பித்திருந்தது. |