1 முன்னே நடக்க வழியோ இடமோ இல்லை என்று ஆகிற போது பின்னால் திரும்ப வேண்டி நேர்வது தவிர்க்க முடியாதது. மேலே ஏறுவதற்கு உயரமோ, சிகரமோ இல்லாத போது கீழே இறங்க வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லை. படியேறுவதைப் போல் படியிறங்குவது அத்தனை சிரமமான காரியமில்லைதான். ஏறுவதற்கு ஆன நேரத்தில் பாதி நேரத்திற்குள் கீழே இறங்கி விடலாம். நினைவுப் பாதையில் படியிறங்கித் திரும்பிப் பின்னோக்கி நடப்பதும் அப்படித்தான். கழிந்து போனவற்றை நினைத்து உருகுவதற்குத் தமிழில் அழகான சொற்றொடரே இருக்கிறது. ‘கழிவிரக்கம்’ என்று எத்தனை பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். அவனுக்குத் தன்னுடைய மனத்துக்குள் அந்தரங்கத்தில் ஏதோ வேகமாக வற்றிக் குறைந்து கொண்டிருப்பது போல் ஓர் உணர்ச்சித் தவிப்பு. குறைந்து கொண்டிருப்பது என்னவென்று சரியாக நினைக்கவும் சொல்லவும் தெரியவில்லை. ஆனால் உருவெளித் தோற்றத்தில் அது ஒரு காட்சியாக மட்டும் தெரிந்தது. மிகவும் மங்கலாகக் கனவுக் காட்சி போல் தெரிந்தது. ஒரு பெரிய அகல் விளக்கில் எண்ணெய் வற்றித் திரி தன்னையே எரித்துக் கொண்டு பின்னோக்கி நகர்வது போல் மனவெளியில் காட்சி. எரிப்பதற்கு வேறு எதுவும் இல்லாத போது தானே தன்னை எரித்துக் கொண்டு மடியும் சுபாவம் நெருப்பினுடையது. அணைகின்ற சுடர் - அவிகின்ற நெருப்பு - என்ற நினைப்பு அச்சானியமாகவும், பயமாகவும் இருக்கிறது. அப்படி எண்ணத் தொடங்கும் போதே நெஞ்சை ஏதோ இறுக்கிப் பிழிவது போலிருக்கிறது. இழப்பதை விட இழக்கப் போகிறோம் என்ற நினைப்பு மிகவும் பயங்கரமானது, கொடூரமானது, விட்டுவிட்டுக் கொலை செய்யக் கூடியது. அடைவனவும், இழப்பனவும் சேர்ந்ததுதான் வாழ்க்கையோ என்று கூடத் தோன்றுகிறது. அடைந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக நினைத்தால் இழக்கப் போகிறோம் என்ற நினைப்பே அச்சுறுத்துவதாக இருந்தது. அவனுடைய கண்களில் மெல்ல மெல்ல நீர் மல்கியது. இப்படி வேளைகளில் அழுவது கூட ஒரு சுகமான ஆறுதலாக - பாரத்தைக் குறைப்பதாக இருக்கிறது. ஒரு வேளை அழுகையில் துக்கம் கரைகிறதோ என்னவோ? நடுநாயகமாக மாட வீதியிலிருந்த அந்தத் தனியார் நர்ஸிங் ஹோமில் ஒவ்வோர் அதிகாலையிலும் எல்லாச் சொகுசு அறைகளிலும் ஏ.சி.யை நிறுத்திவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து வெளிக்காற்றைத் தாராளமாக அநுமதித்துச் சுத்தம் செய்த பின் மீண்டும் அரை மணி நேரத்துக்குப் பின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி மறுபடி ஏ.சி.யைப் போடுவது வழக்கம். அன்றும் அப்போது ஜன்னல்கள் திறந்திருந்தன. ஜன்னலுக்கு வெளியே அறைகளைத் துடைத்துச் சுத்தம் செய்யும் வேலைக்காரி வேறு யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இன்னிக்கித் தேரோட்டம். தேர் கிளம்பியாச்சு. வெய்யிலைப் பார்க்காமே வடம் பிடிச்சாங்கன்னாப் பொழுது சாயறதுக்குள்ளாறத் தேர் நிலைக்கு வந்துடும்.”
மிகவும் மங்கலான நினைவுகளோடு கண்களை மூடியபடி படுக்கையில் படுத்திருந்த அவனுடைய செவிகளில் யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல இச்சொற்கள் ஒலித்தன. நோய்ப் படுக்கையில் படுத்திருந்த அவனது மனம் பின்னோக்கிச் சென்றது. நினைவுகள் வந்த வழியே திரும்பி நடந்தன. அவனுக்குள்ளேயும் ஒரு தேரோட்டம் மெல்ல ஆரம்பமாகியிருந்தது. ***** பச்சை வெல்வெட் துணியைத் தாறுமாறாய் உதறி அவற்றினிடையே ஒரு முத்து மாலையைக் கிடத்தினாற் போல் உயரமும் செறிவுமாய்க் கிடந்த மலைத்தொடர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு ஒன்றில் அமைந்திருந்தது அந்த ஊர். யாரோ கவியுள்ளம் படைத்தவன் அந்த ஊருக்குப் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ‘எழிலிருப்பு’ என்ற பெயர் தேய்ந்து கிழடு தட்டி எள்ளிருப்பு என்றும் எலியிருப்பு என்றும் நாளடைவில் விதம் விதமான பாட பேதங்களைப் பெற்றிருந்தது. ஊரைப் பற்றிய பழம் பாடல்களிலும் கோவில் மதில் கல்வெட்டுக்களிலும் ஜமீன் அரண்மனை ரெக்கார்டுகள் - சாசனங்களிலும் தெளிவாக எழிலிருப்பு என்று தான் இருந்தது. புகழ்மிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்த அந்த ஊர் இசை வேளாளர்கள் அது ஏழிருப்பு (ஏழிசை) அல்லது யாழிருப்பு என்றெல்லாம் தான் அழைக்கப்பட வேண்டுமென்றார்கள். சங்கீதம், கவிதை, நிருத்தியம் என்று கலைத்துறைகளில் புகழ்மிக்க பலர் அந்த ஊரில் தோன்றியிருந்தார்கள். அந்த ஊரில் தோன்றிய பலர் கவிதை எழுதியது ஒருபுறம் இருக்க அந்த ஊரே எழுதப்படாததோர் சுயம்புவான கவிதையாக இருந்தது. இயற்கை விட்டுவிட்டுப் புன்முறுவல் பூப்பது போல் மலைகளில் ஆங்காங்கே வெளேரென்று அருவிகள் சிரித்தன. காற்றில் சந்தனமும் முல்லையும் மணந்தன. வெப்பம் உறைக்காத இதமான மென்குளிர் ஆண்டு முழுவதுமே நிலவியது. அசுத்தமும், தூசியும் சந்தடியும் என்னவென்றறியாத அந்தப் பள்ளத்தாக்கு நகரம், மிகப் பெரிய கோவிலும், கோபுரமும் அதை ஒட்டினாற் போல் படிகமாய்த் தெளிந்த நீர்ப்பரப்பு அகன்ற தாமரைக் குளமும் தேரடியுமாகப் பரம்பரையான தமிழ்நாட்டுச் சிற்றூரின் சாமுத்திரிகா லட்சணங்களை எல்லாம் முதற் பார்வையிலேயே பெற்றிருந்தது. தேரடிக்கு அருகே கோவில் நந்தவனத்துக்கு அப்பால் பெரிய தென்னந்தோப்பின் நடுவே மதிற் சுவருக்குள்ளாக ஜமீன் அரண்மனைகள் இருந்தன. மதிற் சுவருக்கு வெளியே இருந்த நகரப் பகுதிக்கு வெளிப்பட்டணம் என்றும் உள்ளே இருந்த நகரப் பகுதிக்கு - அதாவது - அரண்மனை - அதன் அங்கமானவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு உள் பட்டணம் என்றும் பெயர்கள் ஏற்பட்டு நிலைத்திருந்தன. வெளிப்பட்டணத்து வீதிகள் தெருக்கள் எல்லாம் கோவிலுக்கு இப்பால் அளவாகவும் அழகாகவும் கட்டமைப்போடும் தொடங்கின. தெரு வீடுகள் கோணல் மாணலின்றி நூல் பிடித்த மாதிரி இருந்தன. உள்பட்டணத்தையும், வெளிப்பட்டணத்தையும், கோவிலும் தேரடியும் குளமும் நடுவே இருந்து தனித் தனியே பிரிந்தன. தேரடியில் இரண்டு பிரும்மாண்டமான கருங்கல் பாறைகளுக்கு நடுவில் இயற்கைக் குகை போல் அமைந்திருந்த ஒரு பிளவில் பாறையோடு பாறையாகச் செதுக்கப்பட்டிருந்த அநுமார் நகரின் காவற் கடவுளாகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதியாகவும் புகழ் பெற்றிருந்தார். அந்தக் குகையில் கோயில் தோன்றிய காலத்திலிருந்து அணையாமல் எரியும் வெண்கல அகண்ட விளக்கு ஒன்று இருந்தது. புயலானாலும் மழையானாலும் வெள்ளமானாலும் இந்த அகண்ட விளக்கு மட்டும் அணைந்ததேயில்லை என்று ஊரில் பெருமையோடும் கர்வத்தோடும் கூறிக்கொள்வார்கள். கதவும் பூட்டும் இல்லாத இந்த மாபெரும் பாறை அநுமார் தான் ஜமீனை ஆளும் வம்சாவளியினரான உடையார்களின் குலதெய்வம். அங்கே ஒவ்வொரு ஜமீன்தாருக்கும் முறைப்படி மணந்த பட்டத்து ராணியின் வாரிசுகளைத் தவிர மற்ற வகையில் தொடர்பு கொண்டிருந்த பெண்கள் மூலம் பிறந்த வாரிசுகள் வேறு ஏற்பட்டு ஜமீன் சொத்தைக் கணிசமாகக் கரைத்தார்கள். அசல் பட்டத்து ராணியின் பிள்ளைகள் அடியாட்களின் பலத்தோடும் அதிகார மமதையோடும், மற்ற வகையில் தங்களோடு போட்டிக்கு வந்து சொத்தைக் கரைப்பவர்களை உள் பட்டணத்திலிருந்து துரத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஜமீன்தாரின் மரணத்துக்குப் பின்பும் சகஜமாக நடக்கும். சொத்துரிமைச் சண்டையில் அசல் வாரிசுகளல்லாதவர்கள் குரூரமாக வெளியேற்றப் படுவார்கள். சமஸ்தானத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருந்த ஓர் ஒப்பந்தப்படி பிரிட்டிஷ் போலீஸ் உள் பட்டணத்திற்குள் அழைக்கப்பட்டால் ஒழியத் தானாக நுழையவே முடியாது. எழிலிருப்பு ராஜா ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்த பெண்களின் வாரிசுகளாகத் தோன்றிய ஆண்களும், பெண்களும், உரிமை எதுவும் கொண்டாடாமல் அடிமைகள் போல் உள் பட்டணத்தில் காலந்தள்ளலாம். உரிமை கொண்டாடினாலோ, அசல் வாரிசுகளுக்குச் சரிசமமாக நடக்க முயன்றாலோ உடனே ஆபத்து வரும். நிம்மதியாக வாழ முடியாது. திருமலைராஜனும் அப்படி ராஜ சம்பந்தத்தில் பிறந்தவன் தான். ஆனால் அவன் தன்னைப் பெற்ற தாயின் முகத்தைக் கூடப் பார்த்ததில்லை. அவன் கண்களைத் திறக்கு முன்னே அவள் கண்களை மூடியிருந்தாள். தந்தை யாரென்று வளர்ந்து பெரியவனாகி நினைவு தெரிந்த பின் அவனுக்கு சொன்னார்கள். ஆனால் அவனுடைய தந்தையை அவன் அருகில் நெருங்கிப் பாசத்தோடு அப்பா என்று அழைக்க முடியாது. விலகி நின்று மற்ற அரண்மனை ஊழியர்களையும், விசுவாசிகளையும் போல் பயபக்தியோடு தான் ஸ்ரீராஜசேகர ரகுநாயக உடையாரை அவன் காண முடியும். ஆனால் அவனுக்குப் பின் பட்டத்து ராணியிடம் அவருக்குப் பிறந்த சின்னக் கிருஷ்ண ராஜ உடையார் என்னும் சின்னக் கிருஷ்ணன் அவருடைய மடியிலேயே ஏறி விளையாட முடியும். அந்த இளமையில் திருமலைராஜன் அதைப் பார்த்துப் பொறாமைப்பட்டான். சின்ன வயதிலேயே எது இருந்ததோ இல்லையோ, அவனுக்கு ரோஷமும் சுயமரியாதையும் அளவுக்கதிகமாக இருந்தன. அதனால் அடிக்கடி குட்டுப்பட நேர்ந்தது. குட்டுப்பட்டுக் குட்டுப்பட்டே வளர்ந்தான் அவன். அவனுடைய பதினேழாவது வயதில் காதில் கடுக்கன் அணிந்த உள் பட்டணத்து திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியாரிடம் அவன் சுதேசிப் படிப்புப் படித்த அதே சமயத்தில் சின்னக் கிருஷ்ணன் சகல ராஜ மரியாதைகளுடனும் மதராசில் ஆங்கில கல்வி கற்றான். அந்த ஏப்ரலில் ஸ்ரீ ராஜ சேகர ரகுநாயக உடையார் காலமான போது சின்னக் கிருஷ்ணனைப் போலவே திருமலைராஜனும் இரகசியமாகத் தன் தந்தையை இழந்தான். அதன் பிறகுதான் அநாதையான திருமலைராஜனின் சோதனைகள் ஆரம்பமாயின. திருமலைராஜனைப் போலவே இருந்த வேறு சிலர் பயந்து வெளியேறி விட்டனர். உள்பட்டணத்தில் திடீரென்று சின்னக் கிருஷ்ணனின் அந்தஸ்து உயர்ந்து விட்டது. அவன் திருமலைராஜன் போன்றவர்களிடம் பேசுவதே, கேவலம் என்று நினைத்து நடந்து கொள்ள ஆரம்பித்தான். ரோஷமுள்ள திருமலைராஜன் சின்னக் கிருஷ்ணனைச் சந்தித்து ஏதோ பேச அவன் கோபத்தில் இவனை ‘பாஸ்டர்ட்’ என்று திட்டினான். அதற்கு என்ன அர்த்தம் என்று திருமலைராஜனுக்கு முதலில் புரியவில்லை. மறுநாள் முழுவதும் ஏதோ ஒரு சந்தேகத்தால் உந்தப்பட்டு வெளிப்பட்டணத்தின் பதினெட்டு வீதிகளிலும் சுற்றி இறுதியாக ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூட வாத்தியாரிடம் கேட்டு அவர் அகராதியைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தயங்கித் தயங்கி “தகப்பனில்லாத அல்லது தகப்பன் பெயர் தெரியாத பிள்ளை” - என்று சொன்னவுடன் ஒரு தீவிர வெறியோடு புயல் வேகத்தில் உள் பட்டணத்தில் நுழைந்தான். அந்த வார்த்தையை நினைக்க நினைக்க அவன் உள்ளம் கொதித்தது. முதலில் தான் விசாரித்த பலர், “அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது? விடு... வேறு ஏதாவது பேசு” என்று ஏன் ஒதுங்கினார்கள், தட்டிக் கழித்தார்கள் என்று இப்போதுதான் திருமலைராஜனுக்குப் புரிந்தது. நேரே அரண்மனைக்குப் போய்த் தன் போன்றவர்கள் நுழையக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த ராணியின் அந்தப்புர பகுதிக்குள்ளும் நுழைந்து அங்கே தன் தாயுடன் பேசிக் கொண்டிருந்த சின்னக் கிருஷ்ணனை நோக்கி வெடித்துச் சீறினான் திருமலைராஜன். “டேய்! சின்னக் கிருஷ்ணா! என்னையாடா பாஸ்டர்டுன்னே? உன்னைப் பெத்த அதே அப்பன்தாண்டா என்னையும் பெத்தான். இன்னிக்கில்லாட்டியும் என்னிக்காவது ஒரு நாள் உன் வாயாலேயே என்னை ‘அண்ணே’ன்னு கூப்பிட வைக்கல்லேன்னா நான் ஆம்பிளை இல்லேடா” - என்று அரும்பு மீசையை நீவிவிட்ட திருமலைராஜனைக் காவல்காரர்களை ஏவி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள் ராணியும் மகனும். அன்றோடு அந்தச் சம்பவத்தோடு திருமலைராஜனின் உள்பட்டண வாசம் முடிந்தது. மறுநாள் விடிந்தால் வைகுண்ட ஏகாதசி. நள்ளிரவில் நடுங்கும் குளிரில் அடியாட்கள் மூலம் திருமலைராஜன் உள்பட்டணத்தில் இருந்து கடத்தப்பட்டான். மூர்ச்சையாகிற வரைக்கும் மூக்கு முகம் தெரியாமல் உதைத்து அவனை வெளியே கொண்டு போய் எறிந்தார்கள் அரண்மனை அடியாட்கள். திருமலைராஜனுக்குத் தன் நினைவே இல்லை. சில்லென்று உடம்பில் குளிரும் பனியும் உறைத்து அவன் கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்க்க முயன்ற போது உடம்பை அசைக்கவே முடியவில்லை. பூட்டுக்குப் பூட்டு வலித்தது. விழுந்து கிடந்த இடத்திலிருந்தே கண்களைத் திறந்து அந்த மங்கிய இருளில் பார்த்த போது குகையில் அநுமார் கோவில் அணையா விளக்கு எரிவது தெரிந்தது. தேரடிக்கும் அநுமார் பாறைக்கும் நடுவே தான் விழுந்து கிடப்பது தெரிந்தது. தன் பெயரோடு எதிரே கோவில் கொண்டிருக்கும் திருமலைராஜப் பெருமாள் சந்நிதியின் கோபுர விளக்கு உயரத்தில் தெரிந்தது. கோபுர வாசல் முகப்பில் வைகுந்த ஏகாதசிக் கூட்டத்தின் குரல்களும் சந்தடியும் மெல்ல ஒலிப்பதை அவன் விழுந்து கிடந்த தொலைவிலிருந்தே கேட்க முடிந்தது. அவர்கள் அடித்திருந்த இராட்சத அடிகளில் இறந்து போயிருந்தால் கூட வைகுண்ட ஏகாதசியன்று இறந்த புண்ணியம் தனக்குக் கிடைத்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு கணம் தான் அந்த நினைப்பு நீடித்தது. ஏதோ ஒன்று சாதித்து முடிக்கப்படுகிற வரை தான் இறக்கக் கூடாது என்ற பிடிவாதமும், வாழ வேண்டும் - வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியமும் உடனே அடுத்த கணமே தோன்றின. உடம்பிலும், மனத்திலும் ஏதோ ஒன்று ஜிகு ஜிகு வென்று வேகமாகப் பற்றி எரிவது போல் அவன் உணர்ந்தான். அந்த எரிச்சல், அந்த தகிப்பு அவ்வளவு விரைவில் அடங்கி விடமுடியாதென்று அவனது உள்ளுணர்வே அவனுக்குச் சொல்லியது. எந்தத் தேரடி மண்ணில் தான் வீழ்த்தப் பட்டோமோ அந்த இடத்திலிருந்தே எழுந்து நின்று வாழ்ந்து காட்ட வேண்டும் போல் தவிப்பாயிருந்தது. வீழ்த்தப்பட்டதன் காரணமாகவே எழுந்திருக்க வேண்டுமென்றும் ஒடுக்கப்பட்டதன் காரணமாகவே உயர வேண்டுமென்றும் துடிப்பாயிருந்தது. கண்கள் சோர்ந்து போய் மூடின. தளர்ச்சி உடம்பை அசைக்க முடியாமல் கட்டிப் போட்டிருந்தது. விண்விண்ணென்று இசிவெடுத்து வலித்தது. அப்போது தாமரைக் குளத்தின் பக்கமிருந்து ஜலதரங்கம் வாசிப்பது போல் வளையொலி அவன் பக்கமாக நெருங்கி வருவது கேட்டது. சில விநாடிகளில் அந்த வளையொலியுடன் பூக்களின் கதம்பமான நறுமணத்தையும் அவன் நாசி உணர்ந்தது. மெல்லக் கண் விழித்தால், அந்த நேரத்தின் தேவதையாகிய உஷையே நீராடி விட்டுப் பூக்குடலையோடு அருகே வந்து நிற்பது போல் ஓர் இளம் பெண் நின்றாள். அவளருகே கோயில்களில் எல்லா விளக்குகளையும் திரியிட்டு ஏற்றுவதற்காக எண்ணெய்த் திரியுடன் எடுத்துப் போகும் கைவிளக்கோடு ஒரு முதியவரும் நின்றார். உற்றுப் பார்த்ததில் நந்தவனத்துப் பண்டாரமும் அவர் மகளும் என்று மெல்ல மெல்லப் புரிந்தது. அவர்கள் பதறினார்கள். தனக்கு யாரால், என்ன நேர்ந்ததென்று கோவையாக அவர்களிடம் எடுத்துச் சொல்லக் கூட வரவில்லை அவனுக்கு. |