6 உடல் நலிந்து படுத்த படுக்கையாயிருந்த பொன்னுச்சாமி அண்ணனைச் சந்தித்துத் திருமலை தாங்கள் நடத்த இருந்த அந்தப் போராட்டம் சம்பந்தமாக யோசனை கேட்ட போது அவர் அதற்கு அவ்வளவு உற்சாகமாக வரவேற்று மறுமொழி கூறவில்லை. “தம்பீ! எதுக்கும் கொஞ்சம் நிதானமாப் போங்க ‘எதையும் நம்பாதே, நம்பாதே’ன்னு சொல்லிச் சொல்லி ஜனங்க நம்மையே நம்பாமப் போயிட்டாங்க. அடாவடித்தனமா இந்த மாதிரி எல்லாம் போராட்டம் நடத்தினா இயக்கத்தோட பேரு கெட்டுப் போகும். அவசரப்படாதீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க.” அங்கே எழிலிருப்பு ஊரில் உள்பட்டினத்துக்கும், வெளிப்பட்டணத்துக்கும் நடுவே தாமரைக் குளத்தின் கரையில் ஒரு பழங்காலத்து அரசமரமும், அதனடியில் பிள்ளையில், நாகர் சிலைகளும் இருந்தன. திருமணமான பெண்களில் மக்கட்பேறு இல்லாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அந்த அரச மரத்தைச் சுற்றி வந்தார்கள். நேர்ந்து கொண்டவர்கள், மரத்தில் சிறுசிறு தொட்டில்களோடு குழந்தைப் பொம்மைளைக் கட்டித் தொங்க விட்டார்கள். இந்த மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்து அரசமரத்தடியில் மறியல் செய்ய வேண்டும் என்றான் திருமலை. அவனை ஒத்த சில இயக்க இளைஞர்களும் அதை வர வேற்றனர். பொன்னுச்சாமிக்கு அவனுடைய இந்தத் திட்டம் பிடிக்கவில்லை. படுத்த படுக்கையான பின் அவருடைய பல பிடிவாதங்களில் தளர்ச்சி வந்திருந்தது. அவர் உடல்நலம் தேறி எழுந்திருக்க வேண்டுமென்று அவருடைய மனைவி வெட்டுடையார் கோயிலுக்கு இரகசியமாகப் போய் வந்தாள் என்பதைத் திருமலை கேள்விப்பட்டிருந்தான். அடுத்த இரண்டு அட்டாக்குகளால் தளர்ந்து படுத்தபின் அண்ணன் பல விஷயங்களில் மென்மையாகி மாறியிருப்பது திருமலைக்குத் தெரிந்தது. பலவற்றில் நிதானமாகி யிருந்தார். வீணாக மனிதர்களை விரோதித்துக் கொள்ளக் கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இப்போது வந்திருப்பது புரிந்தது. திருமலை எவ்வளவோ மன்றாடியும் பொன்னுச்சாமி அண்ணன் அந்தப் போராட்டத்திற்குச் சம்மதிக்கவில்லை. “பொம்பளைங்க குளிச்சுப்போட்டு ஈரத் துணியோட அரச மரத்தைச் சுற்றி வர்றப்ப - நாம தடித்தடியா ஆம்ளைங்க போயி நின்னுக்கிட்டு மறியல், அது இதுன்னு வழி மறிச்சா நம்ம பேர் தான் கெட்டுப் போகும். நமக்கு அவநம்பிக்கைப்பட எத்தினி சுதந்திரமும், உரிமையும் இருக்குதோ, அத்தினி சுதந்திரமும் உரிமையும் அவங்களுக்கு நம்பிக்கைப்படறதிலேயும் இருக்கு. மூட நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாமே ஒழிய நேரடி நடவடிக்கையிலே எறங்கிடப்படாது.”
ஈரோட்டிலிருந்து ஐயா எப்போது பொதுக் கூட்டத்துக்கு வந்தாலும் கூட்ட மேடையில் ஐயாவின் காலடியில் அமர்கிற அளவு ஈடுபாடுள்ள அண்ணனா இப்படிப் பேசுவது என்று வியந்தான் திருமலை. ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தில் சிறிய திருவடியாகிய அநுமன் ராமபிரானின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருப்பது போலதான் ஐயா பேசும் கூட்டங்களில் அவர் காலடியில் அமர்ந்திருப்பார் பொன்னுச்சாமி. வயதும், தளர்ச்சியும், விரக்தியும் அவரைக் கூட இப்படி மாற்றியிருப்பது தெரிந்தது. இன்று!
அப்போது அவர் சொன்னபடி செய்யாமல் அரச மரத்தடியில் மறியலில் ஈடுபடுவது என்று திருமலையும் மற்ற இளைஞர்களும் தாங்களாகவே முடிவு செய்தனர் இளங்கன்று பயமறியாது என்பது போல் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திப் பேர் வாங்கிவிட வேண்டும் என்று மட்டுமே துறுதுறுப்பாயிருந்தார்கள் அவர்கள். ஒரு நல்ல ஆடி வெள்ளிக்கிழமையன்று குளித்து விட்டு ஈர உடையோடு அரசமரத்தைச் சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண்களை வழி மறித்தாற் போல் அணுகி, “அரச மரத்தைச் சுற்றுவதை விட்டுவிட்டு, ஆண் பிள்ளையைச் சுற்றினாலும் பயனுண்டு” - என்றும், “அரசமரம் குழந்தையைக் கொடுக்காது - அதைச் சுற்றுவது அறிவுடமை ஆகாது” - என்றெல்லாம் கோஷம் போட்டார்கள். இதைக் கண்டு பெண்கள் பயந்து சிதறி ஓட, விஷயம் போலீஸ் வரை போய்த் தகராறு ஆகியது. ஈவ் டீஸிங், அநுமதி பெறாமல் மறியல் செய்தது ஆகிய குற்றச்சாட்டுக் களைச் சுமத்தி, திருமலை முதலிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், மறிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தியின் கணவன், ஆத்திரத்தோடு, “ஏன்ய்யா! நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிங்களோட பிறந்தவங்கதானா? உங்க அக்காவோ, தங்கையோ, சம்சாரமோ தெருவிலே இப்படி எவனாலேயாவது வழி மறிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?” - என்று திருமலை வகையறாவைப் பார்த்துக் கூப்பாடு போட்டான். பொன்னுச்சாமி அண்ணனைப் போன்றவர்கள் ஒரளவு, கெளரவத்தோடும், பண்பாடோடும் வளர்த்திருந்த இயக்கம் இந்த அரசமர மறியல் போராட்டத்தால் கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேர்ந்து விட்டது. ஊர் நடுவிலும் விவரத் தெரிந்தவர்களிடமும் இப்படித் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்தாலும், இயக்க இளைஞர்களிடையே பொன்னுச்சாமி அண்ணனை விடத் திருமலை அண்ணன் தான் மிகவும் - தீவிரமான கொள்கைப் பிடிப்பிள்ள ஆள் என்பது போல் ஒரு பெயரை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியிருந்தது. தொண்டர்கள் தன்னிடமே இப்படிச் சொல்லித் தன்னைப் புகழ்ந்தபோது திருமலைக்கு முதலில் அது பிடிக்கவில்லை என்றாலும் அவர்களை மறுக்கவும் கண்டிக்கவும் தோன்றவில்லை. பொது வாழ்வில் தான் மேலே ஏறி வரப் பயன்பட்ட விலைமதிப்பற்ற ஏணியைத் தன் கால்களாலேயே உதைக்கிறோமோ என்று கூடப் பயமாயிருந்தது. அதே சமயம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் கட்சியின் ஒரு பழைய பெரிய ஆள் தளர்ந்து விழும்போது தான் இனி அந்த இடத்தைப் பிடிக்கலாம் என்ற ஒரே ஆசையில் அந்தப் பழைய ஆளின் வீழ்ச்சியைப் பற்றித் தயங்கி இரங்கவோ, வருந்தவோ கூட நேரமில்லாத அத்தனை அவசரம் அந்த இடத்தைத் தான் உடனே கைப்பற்றுவதில் ஏற்படுவதைப் போல் திருமலைக்கும் இப்போது ஏற்பட்டிருந்தது. “என்னதான் பெரியவராயிருந்தாலும் இப்ப உங்க தீவிரம் அண்ணனுக்கு இல்லீங்க... எதுக்கெடுத்தாலும் நிதானம், நிதானம்னு பயந்து சாகறாங்க” - என்று காரியம் ஆக வேண்டாதவரைத் தாழ்த்திக் காரியம் ஆக வேண்டியவரை உயர்த்தும் அடிவருடிகளின் சகஜமான முகஸ்துதி திருமலையையும் ஈர்த்துக் கவர்ந்ததில் வியப்பு ஏதும் இல்லை. கைதானதை எதிர்த்து வழக்கு நடத்த தங்களை ஜாமீனில் வெளியே கொண்டுவர எதற்கும் பொன்னுச்சாமி அண்ணன் ஏற்பாடு செய்யாதது வேறு எரிச்சலை வளர்த்தது. கடைசியில் அபராதமும் கட்டி நாலு மாத காலம் சிறைவாசமும் அனுபவித்துவிட்டு வெளியே வருகிற போதாவது தாம் வர முடியவில்லையென்றாலும், வேறு ஆட்களை விட்டு மாலை போட்டு வரவேற்க அண்ணன் ஏற்பாடு செய்வாரென்று எதிர்பார்த்து அவர்கள் ஏமாந்தார்கள். பிடித்த காரியமோ பிடிக்காத காரியமோ, வழி யனுப்புவது, வரவேற்பது, சிறை சென்றால் வெளியே வரும்போது கொண்டாடுவது இதெல்லாம் இயக்க நடை முறைகள். ஆனால் இந்த முறை அண்ணன் அந்த நடைமுறையைக் கூடப் பொருட்படுத்தவில்லை. அவர்களை அறவே புறக்கணித்துவிட்டார். தாங்கள் சிறைவாசம் முடிந்து மீண்டதும் திருமலையும் மற்றவர்களும் அண்ணனைப் போய்ப் பார்த்து அவரது உடல் நிலையைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் இதை எல்லாம் விசாரித்த போதும் கூட, “இந்தா திரு! நான் முதல்லியே இந்த அரசமர மறியல் போராட்டம் கூடாதுன்னேன். யாராயிருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் நம்ம சமூகத்திலே திருமணமான பெண்கள் மரியாதைக்குரியவர்கள்! அவங்க முன்னாடிப்போயி, ‘அரச மரத்தை நம்பாதே! ஆம்பிளையை நம்பு!’-ன்னு வல்கரா பேசிக்கிட்டு நீங்க நின்னது சரியில்லை. அதான் நான் உங்களுக்காக வழக்காடவோ, விடுவிக்கவோ, வரவேற்கவோ எந்த ஸ்டெப்பும் எடுக்கலே” - என்று நிதானமாகவும், கறாராகவும் பதில் சொல்லி விட்டார் பொன்னுச்சாமி அண்ணன். “வரவர உங்க போக்கு நல்லா இல்லே அண்ணே! அண்ணி வெட்டுடையார் கோவிலுக்குக் கூட இரகசியமாகப் போய் வந்தாங்கன்னு கேள்விப்பட்டோம்.” “இந்த இயக்கத்திலே நான் சேர்ந்த நாளிலிருந்து என் மனைவி என் கொள்கைகளை ஒப்பவில்லை என்பதும், அப்படி ஒப்பாமலிருக்க நான் அவளுக்குச் சுதந்திரமளித்திருப்பதும் ஊரறிந்த உண்மையாச்சே தம்பீ!” “உள்ளூர் அநுமாரையும், பெருமாளையும் விட்டுப் போட்டு அண்ணி வெட்டுடையார் கோயிலைத் தேடிப் போனது மத்தவங்களுக்குத் தெரியக் கூடாதுன்னு தானே?” “அப்படி நீயாகக் கற்பனைப் பண்ணிக்கிட வேண்டியது தான். அது அவ பிறந்த வீட்டாருக்குக் குலதெய்வம்னு அவ போயிட்டு வந்திருக்கா. பெண்களுக்கு முழு சுதந்திரம் தரணும் அவர்களைத் தொழுவத்து மாடுங்க மாதிரி அடிமைப்படுத்தப்படா துங்கிறதுதான் ஐயாவோட கொள்கை. அதை நான் அப்படியே கடைப்பிடிக்கிறேன்.” “எது எப்படியோ, மத்தவங்க காண அண்ணன் எங்களை விட்டுக் கொடுத்து, ரொம்ப அவமானப்படுத்திட்டீங்க... ஜெயில்லேருந்து வெளியே வந்தப்பக்கூட வாங்கன்னு கூப்பிட நாதியில்லாமே வெளியே வந்தோம். நாங்க...” “வரவேற்கிற மாதிரிக் காரியத்தைப் பண்ணிட்டு நீங்க ஜெயிலுக்குப் போயிருந்தீங்கன்னா டாக்டர் அட்வைஸைக் கூடப் பொருட்படுத்தாம நானே எந்திரிச்சுக் கையிலே மாலையோடப் பெரிய கூட்டத்தைக் கூட்டிக்கிட்டு வரவேற்க வந்திருப்பேன்.” “வரவேற்க முடியாதபடி அப்பிடி என்ன மோசமான காரியத்தை நாங்கப் பண்ணிப்பிட்டோம் அண்ணே?” “ஊரான் வீட்டுப் பொம்பளைகளை நடுத் தெருவிலே வழிமறிக்கிறதை விடக் கேவலமான காரியம் வேறொண்ணும் இருக்க முடியாது.” “இதிலே நான் அண்ணனோட கருத்து வேறுபடுவேன்.” இதன் பிறகு அவனுக்கும், பொன்னுச்சாமி அண்ணனுக்கும் பெரிய பிளவு ஏற்பட்டது. அவர் பொது வாழ்விலிருந்து அறவே ஒதுங்கி ஒடுங்கிவிட்டார். சண்பகத்திடம் இந்தக் கருத்து வேறுபாட்டைக் கூறியபோது கூட அவள் பொன்னுச்சாமி அண்ணன் சொல்லியதுதான் சரி என்றாள். “அரசமரத்தைச் சுத்தறது அறிவீனம்னு நீங்க கூட்டம் போட்டுப் பேசலாம்! அதை விரும்பறவங்க வந்து கேட்டுத் திருந்தலாம். திருந்தாமச் சும்மா கேட்டுச் சிரிச்சுட்டுப் போகலாம். ஆனா அரசமரத்தைச் சுத்திட்டிருக்கிற பொம்பளைங்களையே நேரே போய் வழிமறிக்கிறதுங் கறது. அத்து மீறல்!” - என்று சண்பகமே அவனை எதிர்த்து வாதிட்டாள். திருமலை அவள் வாதத்தை ஏற்க வில்லை. எப்படியோ இயக்கம் முழுக்க முழுக்க இப்போது அவனது தலைமையின் கீழ் அவனுடைய முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. அவன் செய்ததையும், செய்வதையும் முழுமூச்சாகப் புகழ்கிறவர்களும், வியக்கிறவர்களுமே அவனைச் சூழ இருந்ததால், எது நல்லது, எது தவறானது என்று ஒன்றுமே புரியவில்லை. புகழப்படுவது எல்லாம் சாதனை என்று எண்ணிக் கொள்ளும் மனப்பான்மைக்கு அவன் வந்திருந்தான். அவனைச் சுற்றிச் சதா வானளாவப் புகழ்ந்து நிற்கும் ஒரு கூட்டம் அலைமோதியது. அந்த வருடக் கடைசியில் பொன்னுச்சாமி அண்ணன் காலமானார். மரணத்திற்குப் பிறகு விரோதங்கள் அர்த்தமற்றுப் போகின்றன. திருமலை ஒரு பெரிய இரங்கல் கூட்டம் போட்டுப் பொன்னுச்சாமி அண்ணனை வானளாவப் புகழ்ந்து முடிவில் தன்னுடைய தலைமையை உறுதிப்படுத்திக் கொண்டான். மறவர் சாவடித் தெருவில் ஒரு படிப்பகம் திறந்து அதற்குப் ‘பொன்னுசாமி அண்ணன் நினைவுப் படிப்பகம்’ என்று பெயரும் சூட்டினான். பிள்ளையார் சிலை உடைப்பு நடத்தித் தன்னைப் பிரமுகனாக வளர்த்துக் கொள்ளும் காரியத்தைத் திருமலை தொடர்ந்து செய்தான். இப்போது பொன்னுச்சாமி அண்ணன் இல்லாத காரணத்தால் அவனைத் தனிமைப்படுத்தித் தொலைத்து விடலாம் என்று உள்பட்டணத்தார் மறுபடியும் சில விஷமங்களை ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், முன்னை விட இயக்க ரீதியாக அவனுடைய பலம் வளர்ந்திருப்பதை அவர்கள் சரியாகக் கணிப்பதற்குத் தவறியிருந்தார்கள் என்றே கூறவேண்டும். சில இடையூறுகளைத்தான் அவனுக்கு அவர்கள் செய்ய முடிந்ததே ஒழிய, அவனை அழிக்க முடியவில்லை. சரியாகவோ, தவறாகவோ, அவன் பெரிதாக வளர்ந்திருந்தான். அழித்து விட முடியாத, உயரத்துக்கு, தகர்த்துவிட முடியாத ஆழத்துக்கு, நசுக்கி விட முடியாத கனத்துக்கு அவனுடைய அப்போதைய வளர்ச்சிகள் இருந்தன. அவனது வாழ்வையும் வளர்ச்சியையும் சகித்து ஏற்றுக் கொண்டு அவனுக்குச் சில இடையூறுகளை, மட்டுமே அவர்களால் அப்போது செய்துவிட முடிந்தது. ஊர் ஏற்கெனவே அவர்களை எல்லாம் மதித்து, ஒப்புக் கொண்டிருந்தது. இப்போது அவனை மதித்து ஒப்புக் கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. |