3 அந்த ஊரும், ஊர் மக்களும் மேலானவையாகவும், மேலானவர்களாகவும் மதித்த எல்லாவற்றையும், எல்லோரையும் தான் கீழானவையாகவும், கீழானவர்களாகவும் கருதித் துணிந்து எதிர்க்கப் போகிறோம், விரோதித்துக் கொள்ளப் போகிறோம் என்ற உணர்வே கள்குடித்துவிட்டு நடப்பது போன்றதொரு பெரிய தைரிய போதையை அவனுக்கு அளித்திருந்தது. எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற முறையில் தான் திருமலை, இங்கர்சால் மருந்தக உரிமையாளர் பொன்னுச்சாமியை அணுகியிருந்தான். பொன்னுச்சாமியின் உருவத்தையும், செம்மறியாட்டுக் கடாக் கொம்புகள் போன்ற அவரது மிடுக்கான மீசையையும் பார்த்தே மிரண்டவர்கள் பலர். உள் பட்டணவாசிகளையும், உடையார்களையும் அவர்களை ஆதரித்த மேட்டுக்குடி மக்களையும் பொன்னுச்சாமியும் அவருடைய சுயமரியாதை இயக்க ஆட்களும் முழு மூச்சாக எதிர்த்தனர். பொன்னுச்சாமியும் அவரது இயக்கமும் திருமலையைக் கவர்ந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான். அவன் யாரை எதிர்க்க விரும்பினானோ அவனை மேற்படியார்கள் அவனுக்கு முன்பிருந்தே எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் அந்த ஊரில் தனக்கு நிரந்தர அரணாக இருக்க முடியும் என்று திருமலை நம்பினான். நந்தவனத்துப் பண்டாரமும் அவன் மேல் இரக்கப்பட்டுச் சின்ன உடையார் அவனைத் திட்டிய மோசமான ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிய பள்ளிக்கூட ஆசிரியரும் வெறும் நல்லவர்கள் மட்டும் தான். இனி மேலும் அவன் அந்த ஊரில் காலந்தள்ள வேண்டுமானால் அதற்கு நல்லவர்கள் தயவு மட்டும் போதாது, வல்லவர்களின் பாதுகாப்பும் வேண்டும் என்பதைத் திருமலை தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த மலைப் பிரதேசத்திலும், சுற்றுப்புறத்து ஊர்களிலும் பொன்னுச்சாமியின் இனத்து மக்கள் தொகை அதிகமாயிருந்தது. உள்பட்டணத்து உடையார்கள் எப்போதுமே பொன்னுச்சாமியின் இன மக்களை விரோதித்துக் கொள்ளத் தயங்குவார்கள். ஆள் கட்டுள்ளவர்களின் விரோதத்தை எப்போதுமே தவிர்த்து விடுவது உடையார்களின் வழக்கம். தேரடியில் கடை போடுவதற்கு முன் திருமலை தானே பொன்னுச்சாமியைப் போய்ச் சந்தித்து எல்லா விவரமும் சொன்னான். உள்பட்டணத்துவாசிகள் அடியாட்கள் மூலம் தன்னைப் பழி வாங்கியதையும், பண்டாரம் தன்னைத் தூக்கிப் போய்ப் பல மாதங்கள் தலைமறைவாக வைத்துக் காப்பாற்றியதையும் கூடச் சொன்னான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “பயப்படாதீங்க தம்பீ! தனி மனிதனை அவசியமற்ற பயங்களிலிருந்து விடுவிப்பது தான் எங்க சுயமரியாதை இயக்கத்தின் தலையாய கடமை! எங்களைத் தேடி வந்திருக்கீங்க... இனிமே கவலையை விடுங்க...” - என்றார் பொன்னுச்சாமி. அந்த ஆதரவும், அரவணைப்புமே அவனை அவர்களோடு சேர்த்தன. மிகவும் இளைஞனான தன்னைக் கூட அவர் மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசியது திருமலையைக் கவர்ந்தது. “நீங்க வந்து கடையைத் தொடங்கி வைக்கணும்.” “கண்டிப்பா வாரேன் தம்பீ!”
வாக்குக் கொடுத்தபடி தம் ஆட்களோடு வந்து பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஒரே ஓர் இளநீர் மட்டும் வாங்கிக் குடித்து வியாபாரத்தை ஆரம்பித்து வைத்திருந்தார் பொன்னுச்சாமி. அவரும் அவரது ஆட்களும் வந்திருந்து கடையைத் தொடங்கியதால் திருமலைக்கு உடனேயோ, சில நாட்கள் கழித்தோ, உபத்திரவங்கள் செய்ய வேண்டுமென்று நினைத்துக் காத்திருந்த உள்பட்டணத்துக் கைக்கூலிகளுக்கு எச்சரிக்கை போல் அமைந்து விட்டது. திருமலையின் மேல் கை வைத்தால் பொன்னுச்சாமியின் வகையறாவின் விரோதத்தை உடனே விலைக்கு வாங்க வேண்டி நேரிடும் என்பது எல்லோருக்கும் அவனைப் பற்றிய ஒரு ஜாக்கிரதை உணர்வைத் தோற்றுவித்திருந்தது.
ஜமீன் பெரிய உடையார் காலமான பின் ஏழெட்டு மாத காலம் உள்பட்டணத்தில் அவன் சோதனைகளை அநுபவித்தான். கடைசியில் அவனுக்கும் சின்னக்கிருஷ்ணனுக்கும் மோதல் வந்து இரவோடிரவாகக் கடத்தி வந்து அவனை அடித்துப் போட்டார்கள். தொடர்ந்து பல மாதங்கள் பண்டாரத்தின் நந்தவனம் அவனுக்குப் புகலிடம் அளித்திருந்தது. தொடர்ந்து உயிர் வாழ வேண்டுமானால் அவன் ஊரை விட்டு வெளியேறி விடுவதுதான் நல்லது என்று பண்டாரம் அறிவுரை கூறினார். அதை அவன் ஏற்கவில்லை. விரக்தியும், ஆத்திரமும் கலந்த ஒரு வகை முரட்டுத்தனத்தை அந்த நந்தவனத்து அஞ்ஞாத வாசம் அவனுள் மூட்டிவிட்டிருந்தது. பொன்னுச்சாமியும், அவரது சுயமரியாதை இயக்கமும் அவனது இந்த முரட்டுத்தைரியத்தை ஒரு மதமாகவே ஏற்று அங்கீகரித்து அரவணைக்கத் தயாராயிருந்தது நல்லதாயிற்று. அவனுள் முறுகி வெறியேறியிருந்த பழிவாங்கும் உணர்ச்சிக்கு நாகரிகக் கலப்பற்ற ஒரு முரட்டு வீரம் உரமாகத் தேவைப்பட்டது. நாசூக்கோ, மென்மையோ, இல்லாத அத்தகைய முரட்டு அஞ்சாமையை அடையப் பொன்னுச்சாமி அவனுக்கு உதவினார். தேரோட்டத்துக்கு முதல் வடம் பிடிக்கவோ, அநுமாருக்கு மாவிளக்குப் போடவோ ஜமீன் குடும்பத்தினர் வெளிப்பட்டணத்துக்கு வந்தால், பண்டாரமும் மற்றவர்களும் இடுப்பில் மேல் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு அவர்களை விழுந்து வணங்கத் தயாராயிருந்த அதே சமயத்தில், “வடம் பிடிக்கும் உடையாரே! கடன் அடைக்க வழி உண்டா?” என்றும், “அரை வேளைச் சோற்றுக்கு வழியில்லை - திருநாளைக் கொண்டாடிப் பயன் என்ன?” என்றும் பெரிது பெரிதாகத் தேரடி மண்டபத்தின் சுவரில் எழுதும் அளவுக்குப் பொன்னுச்சாமியும் அவரது ஆட்களும் துணிந்து தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டினார்கள். நாடு சுதந்திரம் அடைந்து விட்டால் கதர், காந்தி, காங்கிரஸ் எல்லாம் தான் இனி முன்னணியில் இருக்கும் என்று கெட்டிக்காரத்தனமாக முன் கூட்டியே அனுமானித்து உள்பட்டணவாசிகள் கதர் கட்ட ஆரம்பித்தனர். அவசர அவசரமாகச் சுதேசி உணர்வைப் போற்ற ஆரம்பித்தனர். அரண்மனைச் சுவர்களில் திலகர், காந்தி படங்கள் இடம்பெறலாயின. வசதியுள்ளவர்களும் செல்வந்தர்களும் நாளைக்குச் செல்வாக்குப் பெறப் போகிறவர்களை இன்றே முந்திக் கொண்டு ஆதரிக்கும் இயல்பான முன் ஜாக்கிரதை உள்ளவர்கள் என்பதை எழிலிருப்பு ஜமீனும் நிரூபித்தது. இப்போது உள்பட்டணத்தின் போக்கிற்கு எதிரான போக்குள்ள அணி எதுவோ அதில் இருந்தே ஆக வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் திருமலைக்கு இருந்தது. எனவே அவன் சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி என்று பொன்னுசாமியின் போக்கிலேயே தானும் தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அதே பாதையில் மேலும் சென்றான் அவன். பூரணச் சுதந்திரக் கோரிக்கையை காங்கிரஸும் பாகிஸ்தான் கோரிக்கையை முஸ்லிம் லீக்கும் முன்வைத்துப் போராடிக் கொண்டிருந்த போது பொன்னுசாமி வகையறாவினர், ‘மைசூர், கொச்சி, திருவிதாங்கூர், ஹைதராபாத் ஆகிய சமஸ்தானங்களைத் தவிர எஞ்சிய ஆந்திர, கேரள, கன்னட, தமிழ்ப் பகுதிகளடங்கிய தென்னாட்டைத் திராவிட நாடாகத் தனியே பிரித்துத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பதற்குத்’ தீர்மானம் நிறைவேற்றினர். திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைய இது உதவும் என்று தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக இருந்த நீதிக் கட்சி தீர்மானம் கொண்டு வந்த 15-வது மாநில மகா நாட்டுக்குப் பொன்னுச்சாமியோடும் மற்ற ஊர் ஆட்களோடும் தானும் போய் வந்தான் திருமலை. அவனுடைய போக்கைப் பார்த்துப் பயந்த பண்டாரம் மெல்ல ஒதுங்கி விட்டார். ஆனாலும் தன்னைக் காப்பாற்றியவர் என்ற முறையில் திருமலைக்குப் பண்டாரத்தின் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் ஒருவகை மரியாதையும் அன்பும் நீடித்தன. பொன்னுச்சாமியைப் போலவே வெட்டரிவாள் மீசையும் உயரமும், பருமனுமாகத் திருமலை பார்க்கிறவர்களுடைய மிரட்சியைச் சம்பாதிக்கும் ஓர் ஆகிருதியை அடைந்திருந்தான். பொன்னுச்சாமி சொல்லித் தூண்டியதன் பேரில் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட உள்பட்டணத்துக்காரர்கள் நிறுத்தியிருந்த மலையப்பன் என்ற வேட்பாளரை எதிர்த்து திருமலை போட்டியிட்டான். தோற்றுவிட்டான். ஆனாலும் அவன் நம்பிக்கையிழந்து விடவில்லை. தேரடி மண்டபத்தை ஒட்டி ஒரு தங்குமிடம் சிறிய வாசகசாலை எல்லாம் கூட ஏற்படுத்திக் கொண்டாயிற்று. இப்போதெல்லாம் முழு நேரமும் அவனால் கடையில் இருக்க முடிவதில்லை. சாதிக்காய்ப் பெட்டியைக் குப்புறக் கவிழ்த்து எளிதாகவும், சிறியதாகவும் ஆரம்பிக்கப்பட்ட கடை மேலும் வளர்ந்து பெரிதாகிப் பெட்டிக் கடையாக மாறியிருந்தது. இரண்டு பையன்கள் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். சர்பத் கலக்க, இளநீர் வெட்டித் தர என்று உதவிக்கு ஆள் வேண்டியிருந்தது. ஒருநாள் மாலை பொன்னுச்சாமி அண்ணன் ஏதோ வேலையாக இன்னொரு தொண்டருடன் - அவரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் - மோட்டார் சைக்கிளில் திருமலையைத் தேடித் தேரடிக்கு வந்து பேசிக் கொண்டிருந்தார். மாலை வேலையாகையினால் கோயில்களுக்குப் போகும் பெண்களின் கூட்டம் அதிகமாகி இருந்தது. நல்ல வியாபார நேரம். அன்று ஏதோ விசேஷ நாள் வேறு. வழக்கத்தை விட அதிகக் கூட்டமாயிருந்தது அன்று. அப்போது கடையருகே சண்பகம் வந்து கூசினாற் போல் ஒதுங்கித் தயங்கி நிற்பதைத் திருமலைதான் முதலில் பார்த்தான். அவனோடு பேசிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியும் அவளைப் பார்த்து விட்டார். “இந்தா திரு! முதல்லே தங்கச்சிக்கு என்ன வேணும்னு கேளு! நாம் அப்புறம் பேசிக்கலாம்” - பொன்னுச்சாமி அண்ணன் செல்லமாக அவனைத் ‘திரு’ என்று மட்டுமே கூப்பிடுவது வழக்கமாகியிருந்தது. சண்பகத்துக்கு அவள் எதிர்பார்த்த தனிமை கிடைக்காததால் பொன்னுசாமியும், அவரோடு வந்திருக்கும் ஆளும் பேசிவிட்டுப் போகட்டும் என்று அவள் தயங்கினாற் போலத் தோன்றியது. திருமலை விடவில்லை. கடையிலிருந்து இறங்கி வந்து அவளை மலர்ந்த முகத்தோடு எதிர் கொண்டான். “என்ன சண்பகம்? உன்னைப் பார்த்து மாசக் கணக்கில் ஆகுதே? என்ன காரியமா வந்தே?” “உங்ககிட்டத் தனியாக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. அந்த அண்ணன் போன பெறவு மறுபடி வந்து பார்க்கிறேன்.” “அண்ணன் இருந்தா உனக்கென்னா வந்திச்சு? நீ சொல்ல வந்ததைச் சொல்லேன்...” “இல்லே! நான் கோயில் பக்கமாகப் போயிட்டு மறுபடி வரேன்” என்று வெட்கத்தோடு நழுவி ஒதுங்கி நகர்ந்து விட்டாள் சண்பகம். அவள் ஏதோ ஒரு முக்கிய வேலையாக வந்திருக்க வேண்டும் என்பது மட்டும் திருமலைக்குத் தோன்றியது. அது என்ன வேலையாக இருக்குமென்று தான் புரியவில்லை. |