![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
19 “பதவியிலிருக்கும்போது செய்யும் தவறு என்பது மலைமேல் நெருப்புப் பற்றுவதுபோல எல்லார் கண்ணிலும் பளிரென்று தவறாமல் தெரியக் கூடியது. அதைத் தவிர்க்க வேண்டும்” - என்றார் அன்பு அண்ணன். அதற்கு மேல் திருவை அதிகம் வற்புறுத்திக் கண்டிக்கவில்லை அவர். பிறரை முகம் சுளிக்கும்படி கடுமையான சொற்களால் கண்டிக்க அண்ணனால் முடியாது, தாட்சண்யங்களை அவரால் தவிர்க்கவே இயலாது என்பது திருவுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய அரசியல் எதிரிகள் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு காத்திருக்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் மூலம் திருவுக்கு நன்றாகத் தெரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு தவற்றையும் பிறர் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. பேச்சாளனாகவும், தலைவனாகவும், கட்சித் தொண்டனாகவும் மேடை மேல் நின்று பார்த்த அதே மக்கள் கூட்டத்தைக் கோட்டை அலுவலகங்களின் வராந்தாவிலும் வாயிற்படிகளிலும் இன்று மறுபடி பார்த்த போது பயமாயிருந்தது. இத்தனை கூட்டமும் தாங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்காவிட்டால் எப்படி உடனே எதிரியாக மாறும் என்பதை எண்ணி மிரட்சியாயிருந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த தைரியம் இப்போது பயமாக மாறியிருந்தது. திருமலையைத் தொழில் வளர்ச்சி மந்திரி என்று போட்டிருந்தார்கள். அதுவரை அவனுக்குத் தெரிந்திருந்த தொழில்கள் நாடகமும், சினிமாவும்தான். இரண்டையும் தவிர மூன்றாவதாக ஏதாவது ஒரு தொழில் அவனுக்குத் தெரியுமானால் அது வெறும் மேடைப் பேச்சுத்தான். “எப்படிச் சமாளிப்பது?” என்று தனியே அண்ணனைச் சந்தித்துக் கேட்டான் அவன். அண்ணன் மெல்லச் சிரித்தார். “இலாகாவில் படித்த அதிகாரிகள், விவரம் தெரிந்த ஐ.ஏ.எஸ். எல்லாம் இருக்கிறார்கள். நடைமுறை அவர்களுக்குத் தெரியும்.” “அதிகாரிகளை நம்பலாமா? அவர்கள் எல்லோரும் முந்திய அரசில் பல ஆண்டுகள் இருந்தவங்கதானே?” இதைக் கேட்டு அண்ணன் மேலும் சிரித்தார். “தம்பி அரசுகள் மாறலாம். ஆனால் அரசாங்கம் மாறாது. இந்திரன் மாறினால் இந்திராணியும் இந்திரலோகத்து நடன அழகிகளும் மாறிட வேண்டுமென்ற அவசியமில்லை. மாறி வந்திருக்கும் புதிய இந்திரனுக்கு ஏற்றபடி ஆடி மகிழ்விக்க அவர்களுக்குத் தெரியும்.” அண்ணனின் இந்த உவமையில் அவனுடைய சந்தேகத்துக்கு விடை இருந்தது. தன்னுடைய ஐயப்பாட்டைத் தெளிவிப்பதற்கு அண்ணன் கூறிய உவமையின் அழகில் நெடுநேரம் மெய்ம்மறந்திருந்தான் அவன். தேர்தலுக்கு முன் அவர்களுடைய இயக்கம் அறிவித்திருந்த இரண்டு கொள்கைப் பிரகடனங்களை அமுல் செய்வதில் இப்போது சிக்கல் எழுந்தது. அரசின் தலைமைச் செயலாளரும் நிதித்துறைக் காரியதரிசியும் அவை நடைமுறையில் சாத்தியமாக முடியாத கொள்கைகள் என்று பலமாகத் தடுத்து முட்டுக்கட்டை போட்டார்கள். ‘மூன்றுபடி லட்சியம் - ஒரு படி நிச்சயம்’ - என்பது சொல்ல அழகாயிருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படிச் செய்தால் பொருளாதார ரீதியாக அரசாங்கம் திவாலாகி விடும் என்றார்கள் அதிகாரிகள். இரண்டாவது சிக்கல் அமைச்சர்களின் சம்பளம் பற்றியது. தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு முந்திய ஆட்சியின் அமைச்சர்கள் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் பாதிச் சம்பளமே. போதுமானது என்று கூறியிருந்தார் அண்ணன். “மற்ற மாநிலங்கள், நாடுகளில் அமைச்சர்கள் பெறும் சம்பளங்கள் வசதிகளைவிட இங்கு அவர்கள் வாங்கும் தொகை மிகக் குறைவு, அதை மேலும் குறைத்தால் காணாது. மக்களுக்கு அமைச்சர்கள் மேல் வேறு வகையான சந்தேகங்கள் வரும். முடிவில் நீண்டநாள் கடை பிடிக்க முடியாத ஒருவகை ‘சீப் ஸ்டண்ட்’ ஆகிவிடும் இது. நடைமுறைக்கு ஒத்து வராது” என்றார்கள் அதிகாரிகள். இதை அண்ணன் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். அவனும் உடன் இருந்தான். ‘சீப் ஸ்டண்ட்’ என்று அவர்கள் பயன்படுத்திய வார்த்தை அவனுக்கு ஆத்திரமூட்டி விட்டது. “இந்தப் பதவியின் சம்பளமும் வருமானமும் எங்களுக்குப் பிச்சைக்காசுக்குச் சமம். பேசச் செல்லும் ஒவ்வோர் இயக்கக் கூட்டத்துக்கும் ஐநூறு ரூபாயென்று வைத்தோமானால் மாத மாதம் நாங்கள் ஐம்பதினாயிரம் கூடச் சம்பாதிக்கலாம்” என்று சீறினான் அவன். “அமைச்சரான பின் அரசாங்கப் பயணப்படி, அலவன்சுகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களில் பணம் கை நீட்டி வாங்குவது என்பது நாளடைவில் ஒரு வகை லஞ்சமாக மாறிவிட நேரும்” என அதிகாரிகள் மீண்டும் குறுக்கிட்டபோது முன்னைவிட ஆத்திரமடைந்த திருவை அண்ணன் சமாதானப்படுத்தினார். “கட்சியும் ஆட்சியும் ஒன்றில்லை” என்பதை அவனுக்கு விளக்கினார். முடிவில் படி அரிசித் திட்டத்தைச் சில இடங்களில் மட்டும் பரீட்சார்த்தமாக அமுல் செய்து பார்க்க அதிகாரிகள் அரை மனத்தோடு இணங்கினார்கள். காபினட் அமைச்சர்கள் பாதி சம்பள விஷயத்தில் அவர்கள் அதிகம் தலையிட்டு முழுச்சம்பளமுமே பெறுமாறு வற்புறுத்தவில்லை. புதிய ஆட்சியும், புதிய மந்திரிகளும் நாளடைவில் முழுச்சம்பளத்தின் அவசியத்தைத் தாங்களே புரிந்து கொள்வார்கள் என்று விட்டு விட்டார்கள். அதிகாரிகளிடமும் ஆட்சி அமைப்பிடமும் அண்ணனுக்கு இருந்த நிதானம் மற்றத் தம்பிகளுக்கு வியப்பூட்டியது. அண்ணனுக்குப் பயப்பட்டதை விட அதிகாரிகள் திருவுக்கு அதிகமாகப் பயப்பட்டார்கள். தாழ்வு மனப்பான்மைக் காரணமாகச் சில சாதாரண நிகழ்ச்சிகளைக் கூடத் தனக்கு இழைக்கப்பட்ட பெரிய அவமானங்களாகப் புரிந்து கொண்டான் திரு. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தொழில் வளர்ச்சித் துறையின் காரியதரிசியாக இருந்தவர் பைப் புகைப்பதை நெடுநாள் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனக்கு முன் சரிசமமாக அமர்ந்து பைப் புகைப்பதைத் திரு விரும்பவில்லை. என்னதான் சமத்துவம், பொதுமை, என்று பேசினாலும் திருவிடம் ‘ஃப்யூடல்’ அதாவது படிப்பறிவற்ற முரட்டு நிலப் பிரபுத்துவ மனப்பான்மையே விஞ்சி நின்றது. இதனால் அந்தத் தொழில் வளர்ச்சி எக்ஸ்பர்ட்டை உடனே கோழி வளர்ப்புத் துறை இயக்குநராக மாற்றித் தூக்கிப்போட்டுப் பழி வாங்கினான் அவன். தலைமைச் செயலர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்: “நஷ்டம் உங்களுக்குத்தான். அந்த அதிகாரி பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவர். தொழில் வளர்ச்சியில் இன்று நாம் அடைந்திருக்கும் சில உயரங்களுக்கு அவர்தான் காரணம். பெரிய நிபுணரை நீங்கள் இழக்கிறீர்கள்” என்று தலைமைச் செயலர் கூறியதை அவன் ஏற்கவில்லை. தொழில் வளர்ச்சி நிபுணர் கோழி வளர்க்கப் போனார். மீன் வளர்ப்புத்துறையில் மிகவும் ஜூனியர் அதிகாரியாயிருந்த இளவழகன் என்பவரைத் தன் இலாகாவின் செயலாளராகப் போடுமாறு ஏற்பாடு செய்து கொண்ட திரு, கட்சிக்கும் இயக்கத்துக்கும், கட்சி ஆட்சிகளுக்கும், இயக்க ஆட்சிகளுக்கும் ஒத்துவராத அதிகாரிகளைப் பந்தாடவும், மாற்றவும் அவன் ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. இந்த விஷயத்தில் அண்ணனிடமிருந்த நிதானமும், பொறுமையும் அவனிடம் இல்லை. இரகசியமாகக் கட்சியின் அடிமட்டத்து ஊழியர்கள் மத்தியில் அவனுடைய செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகமாகி வளர்ந்தது. - தேர்ந்தெடுத்து ஒட்டுப் போட்டவர்களுக்கு மட்டு மின்றித் தங்களைத் தேர்ந்தெடுக்காத மற்றவர் களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் சேர்த்துத்தான் தாங்கள் ஆட்சி நடத்துகின்றோம் என்று அண்ணன் புரிந்து கொண்டிருந்தார். திருவோ தங்கள் கட்சிக்காகவும் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்துவதாகப் புரிந்து கொண்டிருந்தான். ஓர் அரசாங்கம் அல்லது ஆட்சி என்பது யாரால் நடத்தப்படுகிறது என்பதை விட யாருக்காக நடத்தப்படுகிறது என்பதை ஜனநாயக ரீதியாகப் பார்ப்பதற்கு அவன் மனம் போதுமான அளவு பக்குவமோ, விசால நிலையோ பெற்றிருக்கவில்லை. ஓர் ஆட்சி என்பது அதற்கு விரும்பி வாக்களித்தவர்கள், எதிர்த்து வாக்களித்தவர்கள், இருவருடைய வரிப் பணத்திலிருந்தும் வருமானத்திலிருந்துமே நடத்தப்படுகிறது என்ற உணர்வு அண்ணனுக்கு ஒரளவு இருந்தது. தம்பிகள் பலருக்கு அந்த உணர்வு இல்லை. அந்தக் கட்சியின் தொண்டர்கள், அடிமட்டத்து ஊழியர்கள் சிறிய காரியங்களுக்காகப் பெரிய பதவிகளில் இருப்பவர்களைத் தேடிக் கோட்டைக்கு வர ஆரம்பித்தார்கள். ‘அந்த இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும். இந்த டி.இ.ஒ. வைத் தூக்க வேண்டும். அந்த ஆர்.டி.ஒ, கதர் போடுகிறார். இந்த சி.டி.ஒ. நம்ம ஆளுக சொல்றதைக் கேக்கறதில்லை’ - என்று இப்படி வந்தவர்களைத் திரு அரவணைத்து ஆவன செய்ய முற்பட்டதால் கட்சி வட்டத்தில் அவனுடைய செல்வாக்கு உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. புதுப்புது ஊர்களில் ஏற்பட்ட இண் டஸ்ட்ரியல் எஸ்டேட்கள் என்ற தொழிற் பேட்டைகளில் இடவசதி, மின்சார வசதி - கடன் வசதிகளுடன் கட்சி ஆட்களுக்கு நிறைய வாய்ப்புக்களை அளித்தான். வீட்டுக்கும், கோட்டைக்கும் கட்சி ஆட்கள் நிறைய அவனைத் தேடி வந்தார்கள். ஒர் அதிகாரியும், கட்சி ஆட்களும் ஒரே சமயத்தில் அவனது அலுவலக அறையைத் தேடி வந்தால் அதிகாரியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுக் கட்சி ஆட்களைத்தான் உடனே முதலில் சத்தித்தான் அவன். அண்ணனே கூட இப்படிச் செய்ததில்லை. பல பெரிய அதிகாரிகள் இதுபற்றித் தலைமைச் செயலாளர் மூலம் அண்ணனிடமே புகார் கூடச் செய்திருந்தார்கள். பதவி ஏற்றவுடன் எழிலிருப்புக்குப் போய் டிராவலர்ஸ் பங்களாவில் ஒரு பெண்ணுடன் தான் தங்கி அது ரசாபாச மாகி விட்டதால் அதன் பின் ஆறேழு மாதங்கள் வரை திரு அந்தப் பக்கமே போகவில்லை. பின்பு கட்சி மகாநாடு ஒன்றிற்காக அவன் அங்கே போக நேர்ந்தது. அப்போது தேர்தலில் அவனிடம் தோற்று ஜமீன்தாரான சின்ன உடையார் ஊரில் இருந்தார். மந்திரி என்ற முறையில் உள்பட்டணத்தாருக்கு அவன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டியிருந்தது. கட்சிச் சார்பற்ற முறையில் சில உள்பட்டணத்துப் பெரியவர்கள் அவனுக்கு ஒரு வரவேற்புக் கொடுக்க விரும்பித் தேடிப்போய் அழைத்தார்கள். அப்போது அவனுள்ளத்தின் ஆழத்தில் புற்றடி நாகத்தைப் போல் சுருண்டுகிடந்த பழிவாங்குகிற உணர்வு சீறிப் படமெடுத்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க விரும்பினான் அவன். ஜமீன்தாரே திருமலையைத் தேடிவந்து காலில் விழுகிறார் என்று ஊர்ப் பாமர மக்கள் பேசும்படி செய்ய வேண்டும் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. “உள்பட்டணம் என்பது உடையாருடையது. நான் அங்கே வரணும்னா உடையாரும் ராணியுமே வந்து நேரிலே என்னை முறையா அழைச்சாகணும். இல்லாட்டி வர முடியாது” - என்று அடம் பிடித்தான் திரு. இப்படி அவன் நிபந்தனை போட்டதும் உள்பட்டணத்துப் பிரமுகர்களுக்குத் தர்ம சங்கடமாகப் போயிற்று. பரம்பரைப் பெரிய மனிதரான உடையார் தேர்தலில் அவனிடம் தோற்ற அவமானம் போதாதென்று இப்போது அவனையே தேடி வந்து அழைப்பதற்கு ஒப்புவாரா என்று எண்ணித் தயங்கினார்கள். ஒரு வேளை உடையார் அவனை அழைக்க இணங்கி வந்தாலும் வந்துவிடலாம். ராணியும் உடன் வருவதென்பது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசித்துக் குழம்ப வேண்டியிருந்தது. போகாத ஊருக்கு வழி சொல்வதாக இருந்தது அமைச்சரின் நிபந்தனை. ஆனால் அமைச்சரான திருவுக்கோ ஊரறிய, உலகறியத் தன்னிடம் தோற்ற முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜமீன்தாருமான உடையார் குடும்ப சகிதம் தன்னைத் தேடி வந்து உள்பட்டணத்துக்கு அழைத்தார் என்று பாமர மக்கள் பேசிக் கொள்ளச் செய்து விட வேண்டும் என்பதில் அதிக அக்கறை இருந்தது. அதனால் ஊர் உலகத்தில் தன்னுடைய மரியாதை கூடும் என்று இரகசியமாக நம்பினான் அவன். எந்த டி.பி.யில் ஒரு பெண்ணுடன் தான் தங்கியது வெளிப்பட்டுத் தனக்குத் தற்காலிகமான அபவாதத்தை ஏற்படுத்தியதோ அந்த டீ.பி.யில் ஜமீன்தாரும், ராணியும் தேடி வந்து தன்னை அழைத்தார்கள் என்று பத்திரிக்கையில் புகைப்படத்தோடு செய்தி வரச் செய்துவிட ஆசைப்பட்டான் அவன். உள்பட்டணத்துப் பிரமுகர்களில் வயது மூத்த ஒருவர் துணிந்து உடையாரிடமே நேரில் போய் “பெரிய மனசு பண்ணி ஊர் நன்மையை உத்தேசித்து நீங்க மந்திரியை நேரிலே போய் அழைக்கனும்”-என்று வேண்டிக் கொண்டார். ஜமீன்தாரும் பரந்த மனப்பான்மையோடு அதற்கு இணங்கினார். ‘பணியுமாம் என்றும் பெருமை’- என்ற பழமொழிக்கு உடையாரும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ என்ற பழமொழிக்கு அமைச்சர் திருவும் உதாரணங்களாய் இருப்பதாக அழைக்கப் போன பெரியவருக்குத் தோன்றியது. ஜமீன்தாரும், ராணியும் திருவைத் தேடிச் சென்ற போது சுற்றியிருந்த எல்லோரும் காண ஒரு நிமிஷம் அவர்களை நிறுத்தி வைத்தே தான் உட்கார்ந்தபடி பேசினான் திரு. அடுத்த நிமிஷம் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு இன்னொரு தர்ம சங்கடமான நிபந்தனையை மெல்ல அவர்களிடம் வெளியிட்டான். ஆனால் உடையார் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். |