9

     சண்பகத்தின் துயரமோ வேதனையோ, திருமலையின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை. அவள் தேய்ந்து துருப்பிடித்துக் கொண்டிருப்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ நேரமின்றியே அவன் வளர்ந்து கொண்டிருந்தான். சண்பகத்தின் வசதிகள், பொருளாதாரத் தேவைகள் கவனித்துக் கொள்ளப்பட்டன. திருமலையிடமிருந்து வாழ்க்கை மட்டும் கிடைக்கவில்லையே ஒழியப் பணமும் வசதிகளும் அவளுக்குக் கிடைத்தன.

     மேடை நாடகங்கள் மூலம் கொள்கைகளையும் இலட்சியங்களையும் பரப்பவேண்டுமென்ற முனைப்பு அவனது இயக்கத்தில் அதிகமாயிற்று. விதவை மறுமணம், இந்தி எதிர்ப்பு, சநாதன எதிர்ப்புக் கொள்கைகளை உள்ளடக்கி ‘வேரிற் பழுத்த பலா’ - என்ற நாடகத்தைத் திருமலை எழுதி அரங்கேற்றினான். அதில் எதுகை மோனை நயத் தோடு அவன் எழுதியிருந்த வசனங்கள் காட்சிக்குக் காட்சி கைத்தட்டலைப் பெற்றன. அவனே அதில் முக்கியப் பாகமேற்று நடிக்கவும் செய்தான். முதன்முதலாக அவனுக்குப் பழக்கமான அந்த அழகிய பெண்ணும் அதில் நடித்தாள்.

     ‘செந்தமிழ்ச் சிட்டுகள் சீர்திருத்த பனுவல் பாடும் வைத்தமிழ் நந்தவனம் - நமக்கோர் சொந்தவனம்’ - என்பதுபோல் அவன் அதற்கு எழுதியிருந்த வசனங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.

     “செந்தமிழ்ப் பூஞ்சிட்டுக்களே நீங்கள்
     திராவிடப் பூங்காவில் வந்தாடுவீர்!
     தென்னவர் எதிரியைப் பந்தாடுவீர்!”

என்பதுபோல் அவன் எழுதியிருந்த பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்று விட்டது. மேடைக்கு மேடை அதைப்பாட ஆரம்பித்து விட்டார்கள். ‘நமது இயக்க வீரர் திருமலை எழுதிய ‘செந்தமிழ்ப் பூஞ்சிட்டுக்களே’ என்ற பாடல் மிக அருமையாக, செழுமையாக, எளிமையாக - வலிமையாக - இயக்க உணர்வுகளை எடுத்தியம்புவதாய் அமைந்து விட்டது. அப்பாடல் தலை சிறந்தது - கலை சிறந்தது - நிலையுயர்ந்தது. திரு விடமெங்கும் ஒரு இடமும் விடாமல் ஒலிக்க வேண்டிய பாடல் அது என்பதை நீ உணர்ந்திட வேண்டும் தம்பீ’ - என்பதாக நூறாவது நாடகத்துக்குத் தலைமை வகித்து அது திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த போது அவன் பேரறிஞர் பெருந்தகையாய்க் கருதிய அண்ணனே புகழ்ந்த பின் அவனுடைய மதிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. அதை ரெக்கார்டு ஆகப் பதிவு செய்து இயக்கக் கூட்டங்களில் எல்லாம் ஒலிபரப்பினார்கள். அண்ணனின் அபிமானத்துக்குரிய பாடல் என்பதால் அது பெரும் புகழ் பெற்றது. பெரும் பொருள் ஈட்டியது.

     இயக்க உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வசனங்களும், பாடல்களும், நாடகங்களிலும், மேடைகளிலும், திரைப்படங்களிலும் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்த காலம் அது.

     தங்கள் இயக்கப் போராட்டங்களில் அவன் முன்னணியில் நின்றான் - ‘லால்சந்த் நகர்’ என்ற பெயரைப் ‘புளிய மரத்துப்பட்டி’ என்ற அதன் பழைய நிலைக்கு மாற்றுவதற்காக அந்த நிலையத்தில் ரயிலுக்கு முன் மறியல் செய்து தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த முன்னணி வீரர்களுள் அவனும் ஒருவனாயிருந்தான். என்றாலும் தனக்கு முறையான படிப்பில்லை என்பதை உணரும்போதும், உணர்த்தப்படும்போதும் அதை உணர்த்தியவர்கள் மீது அவன் படமெடுத்து ஆடி விஷம் கக்குவதற்குத் தயங்கியதில்லை.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.