5 திருமலைக்கும், சண்பகத்துக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்த ஊர் எல்லையில் முகூர்த்தநாள், நல்லநேரம் எல்லாவற்றையும் புறக்கணித்து அசல் இராகுகாலத்தில் நடைபெற்ற முதல் சுய மரியாதைத் திருமணமே அதுதான். திருமலை அதற்கு இணங்கியதைப் பற்றி யாரும் வியப்படையவில்லை. பக்தி சிரத்தை மிக்கவளாக வளர்ந்த பண்டாரத்தின் மகள் சண்பகம் நாள் நட்சத்திரம், நல்ல நேரம், தாலி, எல்லாவற்றையும் கைவிடத் துணிந்து அந்தத் திருமணத்துக்குச் சம்மதித்ததுதான் எல்லோருக்கும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. என்ன ஆனாலும் திருமலையையே மணப்பது என்று காத்திருந்த அவள் உறுதியும், பிடிவாதமும் அதில் தெரிந்தன. அது ஒரு கலப்புத் திருமணம். பொன்னுச்சாமியும், மற்றவர்களும் அரும்பாடுபட்டு ஈரோட்டிலிருந்து ஐயாவையே அழைத்து வந்து தலைமை வகிக்கச் செய்து அந்தத் திருமணத்தை நடத்தியிருந்தனர். சண்பகத்தின் சகோதரன் திருமணத்திற்கே வரவில்லை. திருமலை மட் டும் பழைய அநாதைத் திருமலையாயிருந்திருந்தால் உள்பட்டணத்துப் பெரும்புள்ளிகள் அடியாட்கள் வைத்துக் கல்யாணத்தை நடக்க விடாமல் தடுத்திருப்பார்கள். வெறும் பயல் என்று அவர்கள் எண்ணிய திருமலைராஜனுக்குப் பின்னால் இன்று வலுவான அரசியல் சமூக சீர் திருத்த சக்திகள் இருந்ததால் உள்பட்டணத்துப் பெரும் புள்ளிகளும், வெளிப்பட்டணத்து மடிசஞ்சிகளும் அந்த சு.ம. கல்யாணத்தைக் கண்டு கொள்ளாதது போல் ஒதுங்கி விட்டனர். ‘கலி முத்திப் போச்சு! இல்லாட்டி இப்பிடியெல்லாம் நடக்குமா?’ என்ற வம்புப் பேச்சோடு ஊரார் தங்கள் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. எந்தப் புதிய மாறுதலையும் ஆயிரம் சந்தேகங்களுடனும் பதினாயிரம் பயங்களுடனும் பார்க்கக் கூடிய அந்தப் பழமையான ஊருக்குத் திருமலை தன்னுடைய திருமணத்தின் மூலம் போதுமான அதிர்ச்சியை அளித்திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். “ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்! தாலிகூட இல்லாம ஒரு கல்யாணமா? உங்களுக்காகத்தான் இந்தக் கூத்துக்கெல்லாம் சம்மதிச்சேன்” - என்று சண்பகம், தனியே அவனிடம் சிணுங்கியதோடு தன் மெல்லிய எதிர்ப்பை நிறுத்திக் கொண்டாள். அதற்கு மேல். பகிரங்கமாக எதையும் அவளால் எதிர்க்க முடியாது; எதிர்க்கவும் அவள் விரும்பவில்லை. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ - என்ற பழைய கொள்கைப்படி பார்த்தாலும் கூடத் திருமலை எந்தப் பாதையைக் காட்டுகிறானோ அந்தப் பாதையில் செல்ல வேண்டியது அவள் கடமையாயிருந்தது. ஊர் நிலைமையை உத்தேசித்து இவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத் தாம் குடியிருந்த மறவர்சாவடி வீதியிலேயே ஒரு வீடு பார்த்துக் கொடுத்திருந்தார் பொன்னுச்சாமி. புதுமைகளையும் வழக்கத்துக்கு மாறான காரியங்களையும் சந்தேகத்தோடு மட்டுமன்றிக் கோபத்தோடும் பார்க்கிற ஒரு பழைய ஊரில் இப்படிப் பாதுகாப்பு அவசியமாகத்தானிருந்தது. திருமண்மாகி ஒராண்டுக் காலமும் ஒடிவிட்டது. தன்னுடைய பகுத்தறிவு நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று தோன்றியதால் வெளிப்படையாகப் பேசிக் கொள்ள நாணினான் என்றாலும் சண்பகத்தை மணந்த பிறகு தன் வாழ்வில் பல முன்னேற்றங்களும் வளர்ச்சி களும் படிப்படியாகத் தனக்கு ஏற்படுவதைத் திருமலை உணர்ந்தான். தேரடியிலேயே அநாதையாக வசித்து வந்த அவனுக்கு இப்போது வீடுவாசல் என்று ஒன்று ஏற்பட்டிருந்தது. தேரடியைத் தவிரக் குளக்கரையில் எண்ணெய், சிகைக்காய்த்தூள், தைலம், சோப்பு, சீப்பு, விற்கிற பெட்டிக் கடை ஒன்றும் புதிதாகப் போட்டிருந்தான் திருமலை. அதிலும் நல்ல வியாபாரம் ஆகியது. கையில் கொஞ்சம் பணமும் சேர ஆரம்பித்திருந்தது.
உள்ளூர்க் கோவாபரேட்டிவ் பாங்க் ஒன்றின் டைரக்டர்ஸ் போர்டுக்கு நடந்த எலெக்ஷனில் நின்று வெற்றியும் பெற்று விட்டான்.
“தம்பி! மெல்ல மெல்லப் பொது வாழ்க்கையிலே மேலே வரணும் நீங்க... அதுக்கு மேடைப்பேச்சு முக்கியம்... மேடையிலே பேசிப் பழகுங்க. நம்ம மாதிரி ஆளுங்களும் இயக்கங்களும் பேசிப்பேசித்தான் மேலே வளரணும்’ என்றார் பொன்னுச்சாமி. அதுவரை அந்த ஊரில் இராமாயணம், பாரதம், கதா காலட்சேபம் செய்கிறவர்களும், காங்கிரஸ்காரர்களும் தான் தேரடியில் கூட்டங்களை நடத்தி வந்தார்கள். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் பயிற்றுவிப்பதற்காகப் பொன்னுச்சாமியே ஒரு பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தாமே தலைமையும் வகித்தார். “தங்கத் தமிழகத்தின் சிங்கநேர் இளைஞர்கள் திராவிட இயக்கத்தின் ஆடலேறுகள் இன்று மேடையேறுகின்றன! மாற்றார் கேட்டு நடுங்க மடிசஞ்சிகள் பதை பதைக்க, சநாதனிகள் தடுமாற, வைதீர்கர்கள் வழியறியாது திகைக்க இந்த அறிவுப்படை ஆயுதத்தோடு புறப்பட்டு விட்டது” - என்று தம்முடைய முரட்டுக் குரலில் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் பொன்னுச்சாமி அண்ணன். ஐயாயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகையுள்ள அந்த ஊரில் ஐம்பது பேர்கூட இவர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. அதிலும் சரிபாதிக்கு மேலே வேடிக்கை பார்க்க வந்த கூட்டமாயிருக்கும் போலிருந்தது. ‘தென்மொழி வளர்த்த திராவிட நாட்டில் இன்று திருட்டுக் கூட்டம் பிழைக்கிறது’ - என்பது போல் குரலையும், உணர்ச்சியையும் உச்சஸ்தாயியாக உயர்த்தியபோது கூட மேடையில் சிலரும், கீழே சிலருமாக உதிரியாய்க் கைதட்டினார்களே ஒழியக் கூட்டம் முழுவதும் கை தட்டவில்லை. நிழல் யுத்தம்போல் யாரோ ஒரு எதிரியைக் கற்பனை செய்து கொண்டு சாடு, சாடு என்று திட்டித் தீர்த்தார்கள் பேச்சாளர்கள். “வைதீகக் கோட்டையாகிய உள்பட்டணம் உருக்குலையப் போகிறது. அதிகார ஆணவங்கள் அழியப் போகின்றன. பணத்திமிர் பட்டழியப் போகிறது. உடையார்கள் உடையப் போகிறார்கள். இல்லாதவர்கள் பொல் லாதவர்களாகப் போகிறார்கள்” - என்று திருமலை பேசிய - பேச்சில் அறிவு வாதத்தைவிட உள்பட்டண எதிர்ப்பே மேலோங்கியிருந்தது. 1943-ல் திருமலை சண்பகம் மணவாழ்வு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையை அளித்தது. பொன்னுச்சாமி அண்ணன் அந்தக் குழந்தைக்கு ‘மலர்க்கண்ணி’ என்று பெய்ர் சூட்டினார். மூன்றாண்டுகள் தவழ்ந்து விளையாடி விட்டு 46-ல் ஒரு குளிர்காலத்தில் அந்தக் குழந்தை கண்ணை மூடி விட்டது. மீண்டும் 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் நாளில் அவர்களுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. சண்பகம் குழந்தைக்கு ‘சுதந்திரன்’ - என்றே பெயர் வைத்து விடலாம் என்றாள். சுதந்திர தினத்தைத் துக்க தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற அபிப்பிராயத்தி லிருந்த பொன்னுச்சாமி அண்ணன் அதை மறுத்து “இராவணன்” என்று பெயர் சூட்டினார். சண்பகத்துக்கு இந்தப் பெயர் அறவே பிடிக்கவில்லை என்றாலும் சகித்துக் கொண்டாள். தன்னளவில் அவள் குழந்தையை ‘ராஜா’ என்றே கூப்பிட்டுக் கொஞ்சினாள். “என்ன தங்கச்சி! நான் ஒரு பேரு வச்சிருக்கேன். நீ பாட்டுக்கு ‘ராஜா’ன்னு வேற பெயரைச் சொல்லிக் கூப்பிடறே?” என்று எப்போதாவது பொன்னுச்சாமி அண்ணன் சண்பகத்தைக் கேட்டால், “உங்க ராவணனும் ஒரு ராஜாவாகத்தானே இருந்தான்? அதான் ‘ராஜா’ன்னு கூப்பிட்டுக்கிட்டிருக்கேன்” என்பதாகப் பதில் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தாள் அவள். ஒரு மலையருவியிலிருந்து தண்ணீர் கொட்டுகிற மாதிரி வார்த்தைகளை அள்ளிக் கொட்டியே படிப்படியாய் மக்களை மலைக்க வைக்கும் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவனாகி விட்டான் திருமலை. உள்ளூரில் யாரையோ எதிர்க்கும் முனைப்பில் ஆரம்பித்த அவனது மேடைப் பேச்சு மெல்ல வெளியூர்களிலும் அழைத்து மேடை போட்டுக் கேட்க விரும்புகிற ஒன்றாகி விட்டது. மிகக் குறைந்த அடிப்படைக் கல்விகூட இல்லை என்றாலும் வாக்குக் சாதுரியத்தால் மிகப் பெரிய பேச்சாளனாகி விட்டான். அவன் தங்கள் இயக்கத்தின் மேடை ‘ஒக்க பிலேரி’யில் அவன் பிரமாதமாகத் தேறிவிட்டான். காங்கிரஸ் கூட்டங்களில் மகாத்மாகாந்தி என்றும், நேரு என்றும் ராஜாஜி என்றும் கூறினால் தங்கள் கூட்டங்களில் காந்தியார் என்றும், நேரு பெருமகனார் என்றும் ஆச்சாரியார் என்றும் கூற வேண்டும் என்பது அவனுக்கு அத்துபடியாகியிருந்தது. மனிதர்களை ‘இன்ஸ்டண்டாக’ப் புகழுவதற்கும் தாக்குவதற்கும் தோதான தமிழ் வார்த்தைகள் அவனுக்கு இலகுவாகப் பிடிபட்டிருந்தன. முன்பெல்லாம் இயக்கத் தொண்டர்களும், வெளியூர் அன்பர்களும் பொன்னுச்சாமியை அண்ணன் என்று மரியாதையாக அழைத்ததைப் போல் அவனையும் திரு அண்ணன் என்று உரிமையோடும் மதிப்போடும் இப்போது அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். புகழும் வருமானமும் போதுமான ஆணவத்தையும் கர்வத்தையும் அவனுக்கு அளித்திருந்தன. நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிற குணம் வந்தது. தன்னால் எதுவும் செய்யமுடியும் என்ற முரட்டு நம்பிக்கையும் அடாவடித்தனமும் கூடவே வந்தன. கூட்டங்களில் பேச நிபந்தனை போட ஆரம்பித்தான் அவன். எல்லாப் பேச்சாளர்களும் பேசிய பின்பு கடைசியாக முத்தாய்ப்புப் பேச்சாகத் தன்னுடைய பேச்சே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினான். கூட்டத்திற்காக விளம்பரங்கள் செய்யும் போது சிறப்புப் பேச்சாளர், சீர்திருத்தச் சிங்கம் - பகுத்தறிவுப் பகலவன் திருமலை என்று தன் பெயருக்கு முன் அடைமொழிகளோடு முக்கியத்துவம் தந்து விளம்பரம் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்தினான். தான் பேசுவதைக் கேட்க இரவு எவ்வளவு நேரமானாலும் மக்கள் கலையாமல் உட்கார்ந்திருப்பதையும் கை தட்டுவதையும் கண்டு தன்னிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி இருப்பதாக அவனே எண்ணத் தொடங்கினான். ‘தனக்கு எல்லாமே தெரியும்’ என்று பாமரர்கள் நம்பியதைத் தானும் நம்ப ஆரம்பித்தான். வெறும் அரைக்கைச் சட்டையும் நாலு முழம் கைத்தறி வேட்டியும் கட்டிக் கொண்டு ‘அறிவியக்கத்தின் ஏழைத் தொண்டர்களில் நானும் ஒருவன்’ என்று விநயமாகச் சொல்லிக் கொண்டிருந்தவன், தோளில் நீளமாகத் துண்டு போட ஆரம்பித் தான். பெட்டிக்கடைகளின் பக்கம் அவன் போவது குறைந்தது. எனினும் விற்று முதல் லாபம் வீடு தேடி வந்தது. அவன் பெயரை வைத்து ஆட்கள் கடைகளை நடத்தினார்கள். திருமணங்களுக்குத் தலைமை, மகாநாடுகள், சிறப்புக் கூட்டங்கள். போராட்டம், மறியல், ஊர்வலம் என்று அவன் அலய ஆரம்பித்தான். சதாகாலமும் அண்ணன், அண்ணன் என்று நாலைந்து தம்பிகள் அவன் கூடவே சுற்றினர். வேடிக்கை என்னவென்றால் அவனை விட இரண்டு மூன்று வயது அதிகமானவர்கள் கூட இப்போது அவனருகே கைகட்டி, வாய் பொத்தி நின்று, “அண்ணன் மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லித் தேதி குடுங்க? நாளைக்கே கூட்டத்துக்கு ஸெட் அப் பண்ணிடலாம்” - என்று பேசத் தொடங்கினார்கள். இந்தச் சுற்றுப்புற மரி யாதைகள் உள்ளே தன்னடக்கத்தையும் பண்பாட்டையும் வளர்க்காமல் புறத்தே மட்டும் அவன் வளர்ச்சியைப் பெரிதாக்கின. பப்பாளி மரம் போல் முருங்கை மரம் போல் உள்ளே வைரம் பாயாத மேற்பார்வைக்கு மட்டும் மருட்டத்தக்க வெறும் புறவளர்ச்சியாயிருந்தது அது. சில ஆண்டுகளில் பொன்னுச்சாமி அண்ணனுக்கு ‘முதல் ஹார்ட் அட்டாக்’ - ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று அடுத்தடுத்து இரண்டு அட்டாக் வந்து டாக்டர் அறிவுரையின் பேரில் அவர் வீட்டோடு ஒடுங்கித் தங்கி ஓய்வு பெற ஆரம்பித்தார். இது திருமலையின் பிரமுகத்துவத்தைத் திடீரென்று உயர்த்தி அதிகமாக்கியது. அந்த வட்டாரத்தின் ஒரே பிரமுகராக அவன் உயர்ந்தான். உள் பட்டணத்து ஜமீன்தார் வகையறாவும், காங்கிரஸ் சட்டசபை, மந்திரி பதவி என்று வேறு வழியில் மேலே போய் முன்னேறிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனாலும் அவர்களுடைய வளர்ச்சி திருமலையின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியதாக இல்லை. ஜமீன்தார் ஒரு திறப்பு விழாவுக்கோ, அடிக்கல் நாட்டு விழாவுக்கோ வந்து பேசினால் கூடுகிற கூட்டத்தைவிடத் திருமலை தேரடியில் பேசினால், கூடுகிற கூட்டம் பல மடங்கு அதிகமாகவே இருந்தது. இணையற்ற இந்தக் கூட்டமும் இந்தப் புகழும் தந்த ஆணவ நெறியில் அந்த வருஷ நடுப்பகுதியில் ஒரு தவறான காரியத்தை முன்நின்று நடத்திக் கைதாகி முதல் தடவையாக ஜெயிலுக்கும் போனான் திருமலை. பொன்னுச்சாமி அண்ணன் சம்மதம் தெரிவித்து ஒப்பாத அந்தப் போராட்டத்தில் அரை மனத்தோடுதான் அவன் இறங்கினான். ஆனால் அது பொன்னுச்சாமி அண்ணன் எச்சரித்தது போலவே அவனைச் சிறைக்குள்ளே கொண்டுபோய்த் தள்ளிவிட்டது. |