8 திருமலையின் வளர்ச்சியில் மாறுதலும், மாறுதலில் வளர்ச்சியும் இருந்தன. 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அவன் ஈரோட்டுப் பாதையிலிருந்து காஞ்சிப் பாதைக்கு வந்து சேர்ந்ததைப் போலவே தமிழ் நாட்டின் பெருவாரியான இளைஞர்களும் வந்திருந்தனர். சென்னை மாநகரில் ராபின்சன் பூங்காவில் புதிய கட்சி பிறந்த கூட்டத்திற்கு அவனும், நண்பர்களும் வந்து கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது மாபெரும் உற்சாகத்தோடு திரும்பியிருந்தனர். திருமலை ஊரில் இல்லாத போது அவன் பெயருக்குத் தபாலில் வந்திருந்த ஒர் அரசியல் மஞ்சள் பத்திரிகையைத் தற்செயலாகப் பிரித்துப் படிக்க நேர்ந்த சண்பகம் ஏற்கெனவே பராபரியாகக் கேள்விப்பட்டிருந்த பல வதந்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. திருமலையின் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல் மஞ்சள் பத்திரிகை திருமலைக்குப் பல ஊர்களில் பல்வேறு பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் ஐயா இதைக் கண்டித்ததால் தான் அவன் விலகியதாகவும் எழுதியிருந்தது. பத்திரிகையைப் படித்ததும் சண்பகம் இடிந்து போனாள். அவள் மனம் சுக்கல் நூறாக உடைந்து சிதறினாற் போலிருந்தது. மனத்தை விட்டு விடாமலிருக்கச் சிறுவன் ராஜாவை அணைத்து உச்சி மோந்து ஆறுதலடைய முயன்றாள். அன்று குழந்தைக்கு இராவணன் என்று பெயர் சூட்டச் செய்த திருமலை இன்று தானே இராவணாக மாறிக் காடு மேய்வது அவளை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. அவள் மனம் தடுமாறிக் குமுற ஆரம்பித்தது. திருமலை சென்னைக்குப் போய் விட்டுத் திரும்பிய தினத்தன்று காலை மற்ற தபால்களை எல்லாம் அவனிடம் அடுக்கிக் கொடுத்த சண்பகம், அந்தப் பத்திரிகையை மட்டும் கொடுக்கவில்லை. அன்றிரவு எப்படியும் அவனிடம் கண்டித்துப் பேசி அந்தப் பத்திரிகையையும் காட்டிவிட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தாள் அவள். நாள் நட்சத்திரம் பார்க்காமல், தாலி சடங்குகள் இல்லாமல் நடந்த கல்யாணமாதலால்தான் இப்படியெல்லாம் ஆகி விட் டதோ என்று கூட அவளுடைய மனத்தில் பயம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட ஒர் ஆளையா காதலித்து, உருகி உயிரை வைத்துப் பிரியம் செலுத்தி மணந்தோமென்று எண்ணியபோது அவளுக்கு வேதனை தாங்க முடியவில்லை. கோபித்துக் கொண்டு போய் விடலாமென்றால் எங்கே போவது? தாயும் இல்லை, தந்தையும் இல்லை. உடன் பிறந்தவனோ பேச்சுவார்த்தையின்றி ஒதுங்கி விட்டான். திருமலையிடம் பேசி அவனைத் திருத்த முடியுமென்று அவளுக்கு நம்பிக்கையுமில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்பு பொன்னுச்சாமி அண்ணன் உயிரோடிருந்த போது இப்படி நடந்திருந்தாலாவது அண்ணனை விட்டுக் கண்டிக்கச் சொல்லியிருக்க லாம். இப்போது அண்ணனும் இல்லை. இரவுச் சாப்பாடு முடிந்து குழந்தையைத் தூங்கச் செய்தபின் தானே அவனிடம் நைச்சியமாகப் பேச்சை ஆரம்பித்தாள் சண்பகம். மெல்ல வெற்றிலையை மடித்து நீட்டிக் கொண்டே, “முன்னெல்லாம் எங்கிட்டே ரொம்பப் பிரியமா இருப்பீங்க... இப்ப வர வர வெளியூருக்குப் போனாத் திரும்பி வர்றப்ப ஒரு முழம் பூக்கூட வாங்கி வர்றதில்லே நீங்க...” என்று கெஞ்சலாகத் தொடங்கினாள். “எங்கே முடியுது?... வரவரப் பொது வாழ்க்கையும் கட்சி வேலையுமே நேரத்தை எல்லாம் முழுங்கிடுதே.” “கட்சி மட்டும்தானா? உங்க நேரத்தை இப்ப யார் யாரோ முழுங்கறாங்க!”
“நீ என்ன சொல்றே சண்பகம்” - அவன் கை அவள் மடித்துக் கொடுத்த வெற்றிலையை வாங்கிக் கொள்ளாமல் சற்று முரட்டுத் தனமாகவே விலக்கியது.
“நான் இல்லாததை ஒண்ணும் சொல்லலே! இதோ இதைப் பாருங்க, புரியும். உங்களைப் பத்தி இப்படித் தாறுமாறா வர்றதைப் பார்த்தா நல்லாவா இருக்கு...?” என்று வினவியபடியே மறைத்து வைத்திருந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பிரித்து அவனிடம் நீட்டினாள். அதை அவளிடம் இருந்து வாங்கிப் படித்த அவன் தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் சீறினான். “உங்க பேருக்குத் தபால்லே வந்திச்சு. பிரிச்சுப் படிச்சேன்.” “எனக்கு வந்த தபாலை நீ எப்பிடிப் பிரிக்கலாம்?” “...” சுளிரென்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைகள் விழத் தொடங்கின. ஒவ்வொன்றும் ஒரு பேயறை. வலி பொறுக்க முடியாமல் அவள் கதறிய கதறலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு மருண்டு போய் அழ ஆரம்பித்தது. “சி! நீ ஒரு மனுஷனா? நீ பண்ணின தப்பைச் சொன்னா அதுக்காக இப்பிடிப் பிசாசு மாதிரி அறையிறியே...?” ஆத்திரத்தில் கூப்பாடு போட்டாள் அவள். வலியும் வேதனையும் தாளாமல் ஏக வசனத்தில் வந்துவிட்டது. “ஆம்பிளை உடம்பிலே வலு இருந்தா என்னவும் பண்ணுவான். எங்கேயும் போவான். அதைக் கேக்கறதுக்கு நீ யாருடி?” “நான் கேக்காமே வேற யாரு கேட்பாங்க?... தெருவில் போறவளா.வந்து கேப்பான்னேன்?” “எதுத்தா பேசறே...? வாயை மூடுடி.” மறுபடியும் அறை. குழந்தையையும் அவளையும் தனியே விட்டுவிட்டு வெறியோடு வெளியேறினான் திருமலை. அவளும் குழந்தையும் கதறியழுத சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பதறி ஓடி வந்த அக்கம் பக்கத்தாரிடம், “ராத்திரி முருங்கைக்காய் சாம்பாரு வைக்கச் சொல்லியிருந்தாரு. மறந்து பேச்சு... அதுக்காகக் கோவிச்சுக்கிட்டு இத்தனை கூத்தும் பண்ணிட்டுப் போறாரு” என்று பொய் சொல்லிச் சமாளித்தாள் சண்பகம். அதன்பின் அவளது இல்வாழ்க்கை நரகமாயிற்று. தினம் வீடு திரும்பினால் அடிதான். உதைதான். திருமலையைத் திருத்த அவளால் முடியவில்லை. அவன் சார்ந்திருந்த மனிதர்களில் யாரும் தனிமனித ஒழுக்கத்தையோ சமூக ஒழுக்கத்தையோ பற்றி அக்கறை ஏதுவும் காட்டவில்லை. ஒழுக்கச் சிதைவையே நியாயப்படுத்த முயன்றார்கள். குடும்பம் என்ற அமைப்பின் புனிதத்தை மதிக்கத் தயாராயில்லை. குடும்பம் என்கிற கரையை உடைத்துக் கொண்டு காட்டாறாகப் பெருகினான் அவன். தந்தை, தாய், உடன் பிறந்தான் அத்தனை பேருடைய பேச்சையும் மதிக்காமல் இந்த மனிதனைக் காதலித்து மணந்த வேதனை அவளை வாட்டியது. வாழவும் முடியவில்லை. அவனை விட்டுவிட்டு ஓட வேறு போக்கிடமும் இல்லை. சாகவும் வழியில்லை. வீட்டின் நாலு சுவர்களுக்குள்ளேயே தேய்ந்து நைந்து சண்பகம் நலிந்து கொண்டிருந்தாள், கூட்டம், இயக்கம், கட்சி வேலைகள் என்று, வீட்டுக்குச் சதா வந்து கொண்டிருந்த கும்பலுக்குப் பிரியாணி தயாரித்துப் போடும் சமையற்காரியாகக் காலந்தள்ளினாள் அவள். பார்க்க அடையாளமே தெரியாமல் எலும்பும் தோலுமாகக் களையிழந்து போனாள் சண்பகம். சண்ப கத்தை இந்த நிலையில் வைத்ததற்காகத் திருமலையைக் கண்டிப்பார் யாருமில்லை. “தலைவர் இருக்காங்களா?” - என்று கைகட்டி வாய் புதைத்துத் தேடி வருகிறவர்களிடம் அவனைவிட்டுக் கொடுத்து அவள் என்ன சொல்ல முடியும்? வீடு, வருமானம், மின் விசிறி, கட்டில், சோபா என்று வசதிகள், பெருகின. அன்பும், ஒட்டுறவும் குறைந்தது. திருமலையை இரவு நேரத்தில் யாராவது தேடி வந்தால், “அவரு இங்கே இல்லீங்க... ‘அந்த வீட்டிலே’ போய்ப் பாருங்க...” என்று இவளே பதில் சொல்லும்படி உள்ளுரிலேயே ஒரு சக்களத்தி வீடு ஏற்பட்டு விட்டது, பகலில் இங்கே, இரவில் அங்கே என்று வாழப் பழக்கிக் கொண்டு விட்டான் திருமலை. அந்தக் கொடுமையையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தாள் அவள். கொஞ்ச நாள் “கூட்டம் முடிஞ்சிதும் அண்ணன் இங்க சாப்பிட வரலேன்னு தாக்கல் சொல்லியனுப்பிச்சாரு. சாப்பாடு வெளியிலயாம்” - என்று கட்சி ஆள் ஒருத்தன் வந்து தகவல் சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் அதுவும் நின்று போய் விட்டது. அவளாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலைதான். பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு வயதான ஆச்சி சண்பகத்திடம் அடிக்கடி துணைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தாள். அறுபது வயதுக்கு மேல் ஆகி வெளேரென்று தும்பைப் பூவாகத் தலைநரைத்துப் போன அந்த ஆச்சி சிலநாள் பழக்கத்தில் சண்பகம் எதுவும் வாய் திறந்து சொல்லாமலே அவளது வேதனைகளைப் புரிந்து கொண்டாள். குழந்தை ராஜாவை எடுத்து வைத்துக் கொஞ்சும் போது அந்த ஆச்சி “உங்க அப்பன் இப்பிடிப் போயிட்டானேடா பாவி” என்று சிரித்துக்கொண்டே சொல்வாள். அப்போது சண்பகம் குறுக்கிட்டு, “ஆச்சி! இவனாவது உருப்படியா வளரட்டும்... அப்பனைப் பத்தியே இவங்கிட்டப் பேசாதீங்க...” என்பாள். ஆச்சிக்குச் சண்பகத்தினிடம் அளவு கடந்த அதுதாபமும், பிரியமும் உண்டு. அடிக்கடி சண்பகத்தைத் தேற்றுவதற்காக ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் ஆச்சி சண்பகத்திடம் பேசும்போது சொன்னாள்: “அப்பன், ஆத்தா, சாதி சனங்களையெல்லாம் விட்டுப் போட்டு ஒண்ணையும் லட்சியம் பண்ணாமே நீ இந்த மனுஷனை நம்பி வந்தே. இது பழைய ஊரா இருந்தா ஊராரே இப்ப இவன் பண்ற அக்கிரமத்தைத் தட்டிக் கேட்பாங்க. பழைய சமூகக் கட்டுப்பாட்டிலே தனி மனிதன் தப்பாவோ, தாறுமாறாகவோ நடந்துக்கிடறது. அவனோட சொந்த விஷயம்னு விட்டுட்டு ஒதுங்கிப் போயிட மாட்டாங்க. உரிமை எடுத்திட்டுக் கண்டிப்பாங்க. ஒரு தெருவிலே ஒரு வீட்டிலே தீப்பிடிச்சா பக்கத்திலேயும் பரவிடக் கூடாதுன்னு ஊர் பூரா ஒடியாந்து தீயை அணைக்கிற மாதிரித்தான் அன்னிக்கி இதுவும் இருந்திச்சு. ஒரு காட்டிலே நெருப்புப் பத்திக்கிட்டா எல்லா மரமும் தான் அழியும்கிற மனப்பான்மை அன்னிக்கி இருந்திச்சு. பெரியவங்க கண்டிப்பாங்களேங்கிற பயம் அன்னிக்குப் பெரிய அம்சமா இருந்து தப்புப் பண்றவங்களைத் தடுத்திச்சு. தப்புத் தண்டாவுக்குப் போனாப் பாவம், சாமி கண்ணை அவிச்சுப் போடும்னு நம்பிக்கை வச்சிருந்தாங்க இன்னிக்கிப் பயமும் இல்லே... நம்பிக்கையும் போச்சு. யாரும் எதுக்கும் பயப்பட வேணாம்னு ஆயிப்போயிடிச்சி, யாரும் எதையும் நம்பாத படியும் பண்ணிட்டாங்க. தனி மனுசன் ஒழுக்கங் கெட்டுப் போனா அது மொத்த சமூகத்தையும் உடனே பாதிக்கலேன்னாலும் படிப்படியாப் பாதிக்கத்தான் செய்யும். தனி மனித ஒழுக்கத்தில் பிடிக்கிற தீயாலே சமூக ஒழுக்கமும் பற்றிக்கொண்டு எரிந்து சிதைவது தவிர்க்க முடியாமப் போயிடும்! இன்னிக்கு யாருக்குமே அது புரியறதில்லே சண்பகம்! தேவைக்கு மேலே தனி மனுஷனுக்குச் சுதந்திரம் கொடுத்திட்டா அது இப்பிடித்தான் ஆகும்டி.” “யாரு குடுத்தாங்க ஆச்சி? எல்லாம் இவங்களா எடுத்துக்கிற சுதந்திரம்தானே?” “அதில்லேடி! சமூகக் கட்டுப்பாடு, பொது ஒழுக்கம்லாம் வேண்டாம்கிற அளவு அந்த சுதந்திரம் வந்திரிச்சு. கட்டுப்பாடில்லாத சுதந்திரம் இந்த மாதிரித்தான் ஆகும்.” “அதாவது முன்னெல்லாம் பெரிய பெரிய தப்புக்களைப் பண்ற ஒரு மனுஷனை அந்தத் தப்புக்களை மறந்திட்டு நல்லா மேடையிலே பேசறான், கச்சேரியிலே, அழகாப் பாடறான் டிராமாவிலே நல்லா நடிக்கிறான்னெல்லாம் மன்னிச்சுப் புகழ்ந்துட மாட்டாங்க...” “இப்ப அப்பிடிச் செய்துடறாங்கங்கிறீங்க. அது தானே ஆச்சி, நீங்க சொல்ல வந்தது?” “சரியாப் புரிஞ்சுக்கிட்டிருக்கேடி! உனக்கு இத்தினி பெரிய துரோகத்தைப் பண்ணிப்போட்டு உம் புருஷன் மேடை மேடையா ஏறி அத்தினி நீளத்துக்கு தோளிலே ஒரு துண்டையும் போட்டுக்கிட்டு இப்பிடி நெஞ்சை நிமிர்த்திப் பேச முடியுமா? பேசி கை தட்டு வாங்க முடியுமா? சீர்திருத்தச் சிங்கம், பகுத்தறிவுப் பகல்வன்னு பட்டம்லாம் போட்டுக்க முடியுமா? பெரிய குறையுள்ளவங் களைச் சிறிய குணங்களுக்காகப் புகழுகிற சமூக அமைப்பே சீரழிஞ்ச நிலைமையின் அடையாளம் தான்...” “இப்பத்தான் பணம், பதவி, எல்லாத்தையும் போலப் புகழும் நமக்குக் காரியம் சாதிச்சுக் குடுக்கிறவங்களுக்கு நாம தர்ற லஞ்சத்திலே ஒண்ணு மாதிரி ஆயிடிச்சே ஆச்சி? தகுதிக்காகவா புகழறோம்? காரியம் ஆவதற்காகத்தானே புகழறோம்? காரியம் ஆகிறதுக்காக ஒருத்தருக்குப் பணத்தை லஞ்சமாகக் கொடுக்கிற மாதிரிப் புகழையும் லஞ்சமாக் குடுக்கிறோம். அவ்வளவுதானே?” “புகழ், பணம், மரியாதை, மதிப்பு. எல்லாத்தையும் தகுதிக்காகக் குடுக்காம காரியம் ஆகிறதுக்காகக் குடுக்கப் பழகிவிட்ட காலத்திலே இதுதாண்டி நடக்கும் ஒழுக்கமா இருக்கணும்னு எவன் நினைப்பான்? எவன் இனிமே அதுக்கு ஆசைப்பட்டு அக்கறை காட்டுவான்?” |