4 பொன்னுச்சாமியும் உடன் வந்திருந்தவரும் புறப்பட்டுப் போன பின் மறுபடி சண்பகம் திரும்ப வந்து தனிமையில் தன்னிடம் தெரிவித்த விஷயங்களைக் கேட்டு திருமலை யோசனையிலாழ்ந்தான். ஓரிரு விநாடிகள் சண்பகத்துக்கு என்ன பதில் சொல்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. “என்ன இருந்தாலும் இது உங்க குடும்ப விவகாரம்! நான் வந்து தலையிடறது நல்லா இருக்குமா? உங்க ஐயா அதை எப்பிடி எடுத்துக்குவாரோ?” “எப்பிடித் தலையிடறது யார் தலையிடறதுன்னு எனக்கொண்ணும் புரியலே... வெக்கத்தை விட்டு உங்களைத் தேடி வந்ததுக்குக் காரணம் நீங்க எதினாச்சும் பண்ணித் தடுக்க முடியும்னுதான்...” “அதெல்லாம் சரிதான் சண்பகம்! ஏற்கெனவே எம்பேருலே பண்டாரத்துக்கு நல்லபிப்ராயமில்லே. இதை வேற நான் தேடிப் போய்ச் சொன்னா என்னைப் பத்தித் தாறு மாறா நெனைக்க மாட்டாரா?” “ஐயா உடம்புக்குச் சுகமில்லாமப் படுத்து ரெண்டு வாரமாச்சு... அதைப் பார்த்து விசாரிக்க வந்த மாதிரி வாங்க... தோதுப்பட்டால் அந்த விஷயத்தைப் பேசுங்க... இல்லாட்டி சும்மா விசாரிச்சுட்டுத் திரும்பிடுங்க.” “நீ சொல்றபடியே செய்யலாம். கடையை அடைச்சுப் போட்டு நந்தவனத்துப் பக்கம் வரேன். உங்கப்பா கிட்டப் பேசாமலியே இதைத் தடுக்கமுடியுமான்னும் நான் யோசிக் கிறேன் சண்பகம்...” அவள் தயங்கித் தயங்கி நின்று விட்டுப் புறப்பட்டுப் போனாள். போகும்போது கண் கலங்கியிருந்தது தெரிந்தது. இன்னும் சிறிது நேரம் இருந்தால் அழுது கூட இருப்பாள். வெளிப் பட்டணத்திலிருந்து ஐந்தாறு மைல் தொலைவிலிருந்த மறவநத்தம் கிராமத்தில் மற்றொரு பண்டாரத்தின் குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்துப் பையன் ஒருவனுக்குச் சண்பகத்தைக் கட்டிக் கொடுப்பதென்று முத்துப்பண்டாரம் ஏற்பாடு செய்கிறாராம். பையன் குடிகாரன், பல பெண்களோடு தொடர்புள்ள விடலை என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சண்பகம் பதறினாள். அவளுக்கு அந்த இடம் பிடிக்கவில்லை. அம்மாவை, விட்டு முத்துப் பண்டாரத்திடம் மறுத்துப் பார்த்தாள். “கலியாணத்துக்கு முந்தி எல்லாப் பயல்களும் அப்படித்தான் இருப்பாங்க. சண்பகத்தைக் கட்டிக் குடுத்திட்டா எல்லாம் சரியாய்ப் போயிடும்” - என்று அம்மாவுக்குப் பதில் சொல்லி விட்டார் அப்பா. நீங்கதான் எப்படியாவது இதைத் தடுக்கணும்” என்பதாகத் திருமலையிடம் வந்து இரகசியமாகவும், அந்தரங்கமாகவும் மன்றாடியிருந்தாள் சண்பகம். திருமலைக்கே அவளிடம் அந்தரங்கமாக ஒர் ஆசை உண்டு. அவளுக்கும் அவன் மேல் அப்படி ஒர் ஆவல் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அதெல்லாம் நடை முறையில் ஒரு சிறிதும் சாத்தியமல்லாத காரியம் என்று இருவருமே பயந்தனர். பண்டாரத்தைப் போல் பழைமையில் ஊறிய ஜாதிக் கட்டுப்பாட்டில் தீவிரப் பிடிப்புள்ள ஒருவர் இதற்கெல்லாம் செவிசாய்க்கவே மாட்டார் என்று இருவருமே அறிந்திருந்தனர். நேரடியாக அப்படி வந்து சொல்லாவிட்டாலும், சண்பகம் இதைத் தன்னிடம் தேடி வந்து முறையிட்டதில் “எல்லாவற்றுக்கும் துணிந்த ஓர் இயக்கத்தில் இருக்கிறீர்களே, என்னை எங்காவது இழுத்துக் கொண்டு ஒடியாவது காப்பாற்றுங்களேன்” - என்பது போல் ஓர் உட்குறிப்பு இருக்கவே செய்தது. அவை ஒன்றும் தனக்குப் புரியாததுபோல் திருமலை பாமரனாக நடிக்க முயன்றான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்குத் தன்மேல் இருக்கும் எல்லையற்ற பிரியத்தை - ஊமைப் பிரியத்தை அவள் அறிவாள். அதேபோல் தன்மேல் அவளுக்கு இருக்கும் ஊமைப் பிரியத்தை அவனும் அறிவான். ஒருவேளை இப்படிச் சொல்லவும் தெரியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் ஊமைப் பிரியங்களைத் தான் உலகில் காதல் என்று பெரியதாகப் பெயர் சூட்டிக் கொண்டாடுகிறார்களோ என்னவோ?
நந்தவனத்தில் தலைமறைவு வாசம் செய்தபோது அணு அனுவாகப் பார்த்து ரசித்த அவளுடைய அழகுகளையும், அசைவுகளையும் பண்டாரம் யாரோ ஒரு புதியவனுக்குச் சொந்தமாக்கப் போகிறார் என்று நினைப்பதற்கே திருமலைக்கு எரிச்சலாயிருந்தது. இந்த விவகாரத்தில் தனக்கு எதுவும் இல்லை என்பதுபோல் திருமலை நடிக்கத்தான் நடித்திருந்தான். அவனுக்கு இதில் என்ன இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதை அந்தரங்கமாகப் புரியவைக்க விரும்பியவளைப் போல்தான் சண்பகம் அவனைத் தேடி வந்து வெட்கத்தை விட்டு இதைச் சொல்லியிருந்தாள். அவனோ ரொம்பவும் பெரிய மனிதத்தனமாக ஒன்றுமே தெரியாதவனைப் போல், “இது உங்க குடும்ப விவகாரம்! நான் எப்படித் தலையிட முடியும்?” என்று பதில் பேசியிருந்தான். தான் அவளை ஏமாற்றுகிறோம் என்று புரிந்து கொண்டே ஏமாற்றியிருந்தான். தனது உடம்பிலும் மனத்திலும் எண்ணற்ற அவமானப் புண்களைத் தாங்கிக் கொண்டு நந்தவனத்திற்குள் அவன் நலிந்து கிடந்த காலங்களில் சண்பகத்தின் புன்னகையும் பார்வையுமே அவனை ஆற்றிக் குணப்படுத்தியிருந்தது. ஒரு புருஷனுக்கு அவனுடைய மனைவி செய்ய முடிந்ததை விடவும் அதிக சிரத்தையோடு, அவள் அவனை உபசரித்திருந்தாள். பிரியத்தில் நனைந்து மூழ்கச் செய்திருந்தாள்.
இப்போது அவள் திருப்திக்காகவும், தன் திருப்திக்காகவும் அவளை இழுத்துக் கொண்டு ஓடிப்போய் விடலாம் தான். கதையில் பிருதிவிராஜ் சம்யுக்தையைக் கடத்திக் கொண்டு போனதை வியக்கும் ஒரு தேசத்தில் தகப்பன் பெயர் தெரியாதவன் என்று ஊரார் இழிவாகப் பேசும் திருமலைராஜன் பண்டாரத்தின் மகள் சண்பகத்தைக் கடத்திப் போவதை அத்தனை தூரம் வியந்து கொண்டாடி விட மாட்டார்கள். திட்டுவார்கள். தூற்றுவார்கள், ஆனாலும் அவன் ஒரு கோழையைப் போல அவளைக் கடத்திச் செல்ல முயலப் போவதில்லை. எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தாலும் அதை அந்த ஊரிலே அதே தேரடி யிலிருந்து கொண்டே பகிரங்கமாகத் தன் விரோதிகளும், அறியும்படியாகவே செய்ய விரும்பினான் திருமலை. ‘ஒரு சுயமரியாதைக் காரனின் முதல் எதிரி பயம். இரண்டாவது எதிரி மலைப்பு’ - என்று பொன்னுச்சாமி அடிக்கடி சொல்வதை நினைத்துக் கொண்டான் அவன். இரவு பத்து மணிக்கு மேல் கடையை மூடிய பின் ஒரு சீப்பு மலைப்பழமும், நாலைந்து ஆரஞ்சுகளும் வாங்கிக் கொண்டு திருமலை பண்டாரத்தைப் பார்க்க நந்தவனத்துக்குப் போனான். படுத்த படுக்கையாக இருந்த பண்டாரம் அவனை அத்தனை உற்சாகமாக எதிர்கொள்ளவில்லை. நோயும் ஏலாமையும் காரணமாக இருக்கலாம் என்று திருமலை அதைப் பொருட்படுத்தவில்லை. ‘சண்பகமும்’ பண் டாரத்தின் மகனும், மனைவியும் ஒர் ஒரமாக நின்று கொண்டிருந்தார்கள். பண்டாரத்தின் மனைவி, “இந்த மனுஷனை விதி இப்படிப் படுக்கையிலே தள்ளிடிச்சே தம்பி!” என்று அவனிடம் அழமாட்டாக் குறையாக ஆரம் பித்தாள். சண்பகத்தின் திருமணம் பற்றிப் பேச்சே எழவில்லை. சிறிது நேரம் அவர்களோடு இருந்து விட்டு வெளியேறினான் அவன். நந்தவனத்திலிருந்து வெளியேறித் தேரடி முக்குக்கான வாசலை நோக்கி மரஞ்செடி கொடிகளிடையே அவன் இருளில் விரைந்து கொண்டிருந்த போது பாக்கு மரப் பகுதியில் வளையொலி கேட்டுக் திரும்பினால் குறுக்குப் பாதையில் சண்பகம் ஓடி வந்து கொண்டிருந்தாள். “என்னது...? இப்படிப் பண்ணிப்பிட்டிங்க?” “எதை எப்பிடிப் பண்ணிட்டேன்...?” “ஐயாகிட்டே ஒண்ணுமே பேசலியே?” “நானா எதைப் பேசறது? எப்படிப் பேசறது? அவரு வாயைத் திறக்கலியே...? எம்மேலே ரொம்பக் கோபமா இருக்கற மாதிரியில்லே தோணுது?” “இந்தக் கலியாணம் மட்டும் நடக்கும்னா அதுக்கு முன்னாடியே நான் அரளி விதையை அரைச்சுப் போட்டுக்கிட்டோ ஊமத்தங்காயைத் தின்னோ சாகறதை தவிர வேற வழியில்லே.” இதைக் கூறும்போது அவள் குரலில் விசும்பல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. பதில் எதுவும் கூறாமல் ஓரிரு விநாடிகள் யோசித்த திருமலை அருகே நெருங்கிச் சண்பகத்தின் கைகளைப் பற்றியபடி ஆறுதலாக அவளிடம் சொன்னான்: “நீ கவலைப்படாதே சண்பகம்! உங்க ஐயாகிட்டப் பேசலேன்னாலும் மருந்துக் கடை அண்ணன் மூலமா மறவநத்தத்துக்குப் போயி எப்படியாச்சும் இந்தக் கலியாணத்தை நிறுத்திட முடியும்னு தோணுது! ஆனா இந்த விஷயம் நமக்குள்ளே பரம ரகசியமாயிருக்குணும்.” அவளுடைய விசும்பல் நின்றது. “இதை நிறுத்திடறதோட உங்க கடமை முடிஞ்சதா நீங்க நெனைக்கிறீங்களா?” “இல்லே! ஆனா முதல்லே இதை நிறுத்தலாம்! மத்தது கொஞ்சம் பொறுத்து யோசிக்கலாம்...” “எத்தனை காலம்தான் யோசிச்சுக்கிட்டே இருக்கப் போறீங்க...” “இந்த ஊரை விட்டு ஓடிப் போயிடறதா இருந்தா யோசிக்காம உடனே எதை வேணாப் பண்ணிடலாம். ஆனா நான் இந்த ஊர்ல தொடர்ந்து இருந்து என் எதிரிங்க கண் காணச் சாதிக்க வேண்டியது நெறைய இருக்கு! யோசனைக்கு அதுதான் காரணம் சண்பகம்!” “சரி! செய்யுங்க. உங்களை நம்பி இந்த நந்தவனத்துக்குள்ளே ஒரு ஜீவன் தவிச்சுக்கிட்டிருக்குங்கறது மட்டும் ஞாபகமிருக்கட்டும்.” இருளில் ஒற்றையடிப் பாதை வழியே குடிசையை நோக்கிப் போகும் அவளைக் கவனித்தபடி சிறிது நேரம் பாக்கு மரங்களின் கீழே சுகமான அந்தக் கமுகம்பாளைகள் பூத்திருக்கும் வாசனையை நுகர்ந்தபடி நின்றான் திருமலை, சண்பகத்தின் நினைவுகளும் அந்த வாசனையும் சேர்ந்தே மனசைக் கிறக்கின. அன்றிரவு நந்தவனத்திலிருந்து அவன் தேரடிக்குத் திருப்பிப் போகவில்லை. அகாலமானாலும் பரவாயில்லை என்று மறவர் சாவடி வீதியிலிருந்த மருந்துக்கடை அண்ணன் பொன்னுச்சாமியைத் தேடிச் சென்றான், பொன்னுச்சாமி அண்ணனே அவனிடம் பலமுறை சொல்லிருந்தார்: “இதப் பாரு தம்பீ! நீ எப்ப நம்ம ஆள்னு ஆயிட்டியோ அப்பவே என் குடும்பத்திலே ஒருத்தன் மாதிரித் தான். எதினாச்சும் நல்லது கெட்டதுன்னு என்னை அவசரமாப் பார்க்கணும்னா உடனே தேடி வந்து கூப்பிடு. இப்ப அண்ணனைப் பார்க்கலாமா, அப்புறம் பார்க்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு நிற்காதே. நீ சாமத்துக்கு வந்து எழுப்பினாலும் உனக்கு ஒரு கெடுதல்னா உடனே ஒடியாந்துடுவேன்.” இது அவ்வளவு அவசரமான விஷயம் இல்லையென்றாலும் அண்ணனைப் பார்த்து உடனே சொல்லிவிட வேண்டும் என்று எண்ணினான் திருமலை. நல்லவேளையாக அவன் போய்ச் சேர்ந்த போது மருந்துக்கடை அண்ணன், வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். வேறு யாரும் கூட இல்லை தனியாகத்தான் இருந்தார். “வாங்க தம்பீ! ஏது இந்த நேரத்துக்கு? ஏதாவது அவசரமா?” “ஒண்ணுமில்லே!... நீங்க இருந்தப்பவே அந்தப் பண்டாரத்துப் பொண்ணு கடைக்கித் தேடி வந்திருந்திருச்சு... அதான் அண்ணனே பார்த்தீங்களே...?’’ “ஆமா! அதுக்கென்ன?” திருமலை அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து தணிந்த குரலில் எல்லா விவரத்தையும் சொன்னான். பொன்னுச்சாமி கவனமாகக் கேட்டுக் கொண்டார். பின்பு உறுதி கூறினார்: “போயி நிம்மதியாத் தூங்குங்க தம்பி அந்த மறவநத்தத்துப் பண்டாரம் இந்த ஊர்த் திசையிலே தலைவச்சுக் கூடப் படுக்கமாட்டான். நான் பார்த்துக்கிடுதேன்...” அவர் கூறிய வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். என்ன செய்தாரோ, மறவநத்தத்துப் பையனுடன் சண்பகத்தின் திருமணம் கலைந்து போயிற்று. அதே அதிர்ச்சி யில் இரண்டு மாதத்தில் முத்துப் பண்டாரம் காலமானார். முத்துப் பண்டாரம் காலமான ஓரிரு மாதங்களில் அவர் மனைவியும் காலமானாள். சண்பகம் அநாதையானாள். ஒரு சில மாதங்களில் எழிலிருப்புக்காரர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் மற்றொரு காரியத்தையும் திருமலை. துணிந்து செய்வதற்கு முன் வந்தான். அதற்கும் பொன்னுச்சாமி அண்ணன்தான் துணை நின்றார். |